முன்னோக்கு

தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு பகிரங்க கடிதம்: தொற்றுநோய் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும், 2022 இல் உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அன்பான சகோதர சகோதரிகளே,

இந்த ஆண்டின் இறுதியை நாம் நெருங்கும்போது, அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் கூட்டாகச் செயல்பட முடிவுசெய்து, இறுதியாக கோவிட்-19 தொற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 2022 பாரிய நோய்த்தொற்றுகள், நோய் மற்றும் இறப்புகளின் இன்னொரு பயங்கரமான ஆண்டாக இருக்கக்கூடாது!

கடந்த இரண்டு ஆண்டுகளின் சமூகப் பேரழிவானது, பெருநிறுவன இலாபங்கள் மற்றும் மில்லியனர்கள், பில்லியனர்களின் தனியார் சொத்துக்களின் இடைவிடாத குவிப்புக்காக பொது சுகாதாரத்தை குற்றம்மிக்க வகையில் கீழ்ப்படுத்தியதன் விளைவாகும்.

மனித வாழ்வில் அதன் விலையைப் பொறுத்தவரை, இந்த தொற்றுநோய் நிச்சயமாக அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய சோகங்களில் ஒன்றாகும். இந்த ஆண்டு தொடங்கியபோது, 373,356 அமெரிக்கர்கள் ஏற்கனவே வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று, அந்த எண்ணிக்கை 842,493 ஆக உள்ளது. இது 2021 இல் உயிர்காக்கும் தடுப்பூசிகள் வெளிவந்த போதிலும் 469,137 இறப்புகளாக அதிகரித்தது.

செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 21, 2021, நியூயார்க்கில் P.S. 64 Earth School இற்கு வெளியே, கோவிட்-19 பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்ற பதாகைகளுடன் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் (AP Photo/Brittainy Newman) [AP Photo/Brittainy Newman]

65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களில் 100 பேரில் ஒருவர் இறந்துள்ளார். பொது சுகாதாரத்தின் மிக முக்கியமான குறிகாட்டியான ஆயுட்காலம் இப்போது தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் குறைந்துள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது, பல இளைஞர்களின் இழப்பால் ஆயுட்காலம் வீழ்ச்சியடைந்ததைத் தவிர இது ஒருபோதும் இவ்வாறு நடந்ததில்லை.

ஆனால் தொற்றுநோயின் தாக்கம் முந்தைய போர்களை விட மோசமாக உள்ளது. நான்கு ஆண்டுகால அமெரிக்க உள்நாட்டுப் போரில் (சுமார் 700,000) அல்லது இரண்டாம் உலகப் போரில் (407,000) அமெரிக்க ஈடுபாட்டினைவிட இப்போது அதிகமான அமெரிக்கர்கள் கோவிட்-19 இனால் இறந்துள்ளனர். ஒவ்வொரு நாளும், மேலும் 1,500 அமெரிக்கர்கள் தேவையில்லாமல் நோயால் இறக்கின்றனர்.

உத்தியோகபூர்வமாக, 2021 இல் 33.3 மில்லியன் அமெரிக்கர்கள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் போதிய பரிசோதனையின்மை காரணமாக உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாகவே உள்ளது. அதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கைக்கு கூடுதலாக, மில்லியன் கணக்கான மக்கள் நீண்டகால கோவிட்டின் விளைவுகளுடன் போராடுகிறார்கள். இந்த தாக்கம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பு அமைப்பையும் பாதிப்பதுடன், பல தசாப்தங்களுக்கு நீடிக்கும். மேலும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கடுமையான உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் மற்றும் ஈய நச்சுத்தன்மையுடன் தொடர்புடையதை விட கடுமையான மூளை பாதிப்பை ஏற்படுத்தும்.

கிட்டத்தட்ட அனைவருக்கும் ஒரு நண்பர் அல்லது ஒரு குடும்ப உறுப்பினர் இந்த கொடூரமான வைரஸால் இறந்திருப்பார். இதைப் படிக்கும் உங்களில் பலர் உங்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு நீண்டகால கோவிட் நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னரும் கூட, ஓமிக்ரோனின் விரைவான பரவலானது, 2020 மற்றும் 2021 ஐ விட புதிய ஆண்டு இன்னும் மோசமாக இருக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது. புதன்கிழமை, அமெரிக்காவில் தினசரி 484,377 புதிய தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன Institute for Health Metrics and Evaluation, அடுத்த மூன்று மாதங்களில் 140 மில்லியன் அமெரிக்கர்கள் ஓமிக்ரோன் நோயால் பாதிக்கப்படலாம் என்றும், ஜனவரி இறுதிக்குள் ஒவ்வொரு நாளும் 2.8 மில்லியன் நோய்த்தொற்றுகளுடன் உச்சகட்டமாக இருக்கும் என்றும் மதிப்பிடுகிறது.

மருத்துவமனை அமைப்புகள் ஏற்கனவே முறிவு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சூழ்நிலையில், நாடு முழுவதும் மருத்துவமனையில் நோயாளிகள் சேர்க்கப்படுவது மீண்டும் அதிகரித்து வருகிறது. 84,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் தற்போது கோவிட்-19 உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஓமிக்ரோன் மாறுபாட்டால் அதிக ஆபத்தில் இருக்கும் குழந்தைகளின் அதிகளவு எண்ணிக்கையும் அடங்கும்.

இந்த முன்னோடியில்லாத நெருக்கடிக்கு மத்தியில், பங்குச் சந்தை தொடர்ந்து உயர்கிறது. ஏனெனில் பைடென் நிர்வாகமும் மாநில அரசாங்கங்களும் அவை ஜனநாயகக் கட்சியினரால் அல்லது குடியரசுக் கட்சியினரால் கட்டுப்படுத்தப்பட்டாலும், பெருநிறுவன நலன்களைக் பாதிப்பிற்கு உட்படுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க மறுக்கின்றன.

அரசாங்கத்திடமிருந்து வரும் தவறான தகவல்களும் பொய்களும் ஊக்கமின்மையை ஊட்டுகின்றன. பின்னர் இது தொற்றுநோய்க்கு எதிரான வெளிப்படையான தோல்வியை ஊக்குவிக்கப் பயன்படுகிறது. பெருநிறுவனங்களால் கட்டுப்படுத்தப்பட்ட ஊடகங்கள் இப்போது நாம் 'கோவிட்டுடன் வாழ வேண்டும்' என்று வாதிடுகின்றன. இது தவிர்க்க முடியாமல் நிரந்தர தொற்றாகிவிடும் என்று அவர்கள் கூறுகிறார்கள். இதன் அர்த்தம் என்ன? இந்தக் கொள்கையின் இறுதி இலக்கு என்ன?, மில்லியன் கணக்கான மக்களின் தேவையற்ற துன்பங்களும் மரணங்களும் எப்போது நிறுத்தப்படும்?

உண்மையில், பொருத்தமான நடவடிக்கைகளோடு, இன்னமும் வைரஸ் சில மாதங்களில் அகற்றப்படமுடியும். சீனாவில், பூச்சிய கோவிட் (Zero COVID) மூலோபாயம் ஏப்ரல் 2020க்குள் வைரஸை அகற்ற வழிவகுத்து, மே 2020 முதல் இரண்டு இறப்புகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. சீனாவில் பயன்படுத்தப்படும் முறைகள் நன்கு அறியப்பட்டவை மற்றும் தொற்று நோய்களை எதிர்த்துப் போராடும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலான அனுபவத்தில் இருந்து உருவாக்கப்பட்டவை.

விஞ்ஞானத்தினதும் மற்றும் பொது சுகாதாரத்தின் கொள்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டும் திரிபுபடுத்தப்பட்டும், வணிகங்கள் மற்றும் பொருளாதாரத்தை முழுமையாக மீண்டும் திறப்பதை நியாயப்படுத்த ஒரு கட்டுக்கதை திணிக்கப்படுகின்றது.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) புதிய வழிகாட்டுதலின்படி, தனிமைப்படுதும் மற்றும் விலக்கிவைக்கும் காலங்களை 10 இலிருந்து 5 நாட்களாக குறைப்பது, ஒருதொடர் அழிவுகரமான செயல்களில் இறுதியானதாகும். கோவிட்-19 ஐ காலவரையின்றி பரவ அனுமதிப்பதே அதன் கொள்கை என அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்துள்ளது.

தொழிற்சாலைகள் மற்றும் பிற பணியிடங்களைத் திறந்து வைப்பதற்கும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்குமான பொறுப்பற்ற வலியுறுத்தல், தொற்று நோய்களுக்கு எதிரான போராட்டத்தில் கற்றுக்கொண்ட அனைத்திற்கும் முரண்பாடாக இருக்கின்றது. பல நூற்றாண்டுகளின் விஞ்ஞான ஆய்வுகள் மனிதகுலத்திற்கு நோயை எதிர்த்துப் போராடுவதற்கான அறிவின் ஆயுதக் களஞ்சியத்தை வழங்கியுள்ளன. போலியோ, பெரியம்மை, தட்டம்மை, மலேரியா மற்றும் மஞ்சள் காய்ச்சல் உள்ளிட்ட ஒரு காலத்தில் மரணத்திற்கு முக்கிய காரணங்களாக இருந்த நோய்களை அமெரிக்கா உள்ளடங்கலாக அகற்ற 20 ஆம் நூற்றாண்டில் இந்த அறிவு பயன்படுத்தப்பட்டது.

அனைத்து அத்தியாவசியமற்ற பணியிடங்களையும் மூடுவது மற்றும் இரண்டு மாதங்களுக்கு அனைத்துப் பள்ளிகளையும் தொலைதூரக் கற்றலுக்கு மாற்றுவது வைரஸ் பரவலை விரைவாகக் கட்டுக்குள் கொண்டு வருவதோடு, கோவிட்-19 ஐ முழு அளவில் ஒழிப்பதற்கு அடிப்படையாக அமையும் என்பதை நவீன விஞ்ஞானம் காட்டுகிறது. இந்தத் தேவையான பூட்டுதல்களினால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தொழிலாளர்கள் மற்றும் சிறு-தொழில் செய்பவர்களுக்கு முழு நிதி மற்றும் சமூக ஆதரவை வழங்க வேண்டும்.

அனைத்து நாடுகளுக்கும் தடுப்பூசிகள் மற்றும் உயர்தரமான முகக்கவசங்களின் உலகளாவிய ஒருங்கிணைந்த உற்பத்தி மற்றும் விநியோகம், அத்துடன் பாரிய பரிசோதனை, தொடர்புத் தடமறிதல், பாதிக்கப்பட்ட நோயாளிகளை பாதுகாப்பாக தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை செய்தல் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு உள்கட்டமைப்பின் பாரிய விரிவாக்கம் ஆகியவற்றுடன் இரண்டு மாத பூட்டுதல்கள் இணைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு அத்தியாவசிய பணியிடத்திலும் மருத்துவமனையிலும், தொழிலாளர்கள் மிக உயர்ந்த தரமான N95 அல்லது சிறந்த முகக்கவசங்கள் மற்றும் நவீன வடிகட்டுதல் மற்றும் காற்றோட்ட அமைப்புகளைப் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் வைரஸை அகற்ற அனுமதிக்க அனைத்து அத்தியாவசிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

தொழிலாள வர்க்கம் தனது சொந்த கைகளில் விஷயங்களை எடுக்க வேண்டும். தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போராட்டம் பின்வரும் கொள்கைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும்:

  1. தற்போதைய “சமூக நோய் எதிர்ப்பு சக்தி” கொள்கை, அதாவது, மக்கள்தொகை முழுவதும் கோவிட்-19 பரவுவதை அனுமதிப்பது நிராகரிக்கப்பட வேண்டும். SARS-CoV-2 ஐ இல்லாது செய்வதற்கும், ஒழிப்பதற்கும் ஒரு புதிய மூலோபாயம் பின்பற்றப்பட வேண்டும்.
  2. வைரஸ் பரவலைத் தடுக்க செயல்படுத்தப்படும் கொள்கைகள் பொது சுகாதாரத்தின் தேவைகளால் தீர்மானிக்கப்பட வேண்டும். மனித உயிரும் பாதுகாப்பும் அனைத்து பெருநிறுவன-நிதி நலன்களை விட முழுமையான மற்றும் நிபந்தனையற்ற முன்னுரிமையை பெறவேண்டும். தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான செலவுகளான ஊதியம் மற்றும் சிறு வணிக உரிமையாளர்களுக்கான இழப்பீடு, நோய்வாய்ப்பட்டவர்களுக்கு முழு மருத்துவக் காப்பீடு, மற்றும் இழந்த குடும்பங்களுக்கான கொடுப்பனவுகள் பெருநிறுவனங்களால் ஏற்கப்பட வேண்டும். தொற்றுநோய் இலாபத்தினால் பங்குச் சந்தையில் பெருமுதலீட்டாளர்களால் பெறப்பட்ட திடீர் இலாபத்தின் மீது 100 சதவீத வரி விதிக்கப்பட வேண்டும்.
  3. தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் உலக அளவில் நடத்தப்பட வேண்டும். அனைத்து நாடுகளிலும் SARS-CoV-2 அகற்றப்படும் வரை தொற்றுநோயை நிறுத்த முடியாது. வளர்ச்சி குறைந்த நாடுகளில் உள்ள தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுக்கு தேவையான அளவு தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என அமெரிக்க தொழிலாளர்கள் கோர வேண்டும்.

ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும், பெருவணிகமும் பெருநிறுவனக் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களும் இந்தக் கொள்கைகளை, 1) நடைமுறைப்படுத்த முடியாதவை மற்றும் 2) தற்போதுள்ள முதலாளித்துவ அமைப்புடன் இணக்கமற்றவை என அறிவிப்பர்.

முதல் ஆட்சேபனைக்கான பதில், இலட்சக்கணக்கான மக்களின் நோய்த்தொற்று மற்றும் பாரிய உயிரிழப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுதான்.

இரண்டாவது ஆட்சேபனையைப் பொறுத்தவரை: பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கை மற்றும் நல்வாழ்வை அச்சுறுத்தும் ஒரு நெருக்கடிக்கு முதலாளித்துவம் எந்தத் தீர்வையும் வழங்க முடியாவிட்டால், அது அகற்றப்பட்டு இலாபத்தை விட வாழ்க்கைக்கு முன்னுரிமைகொடுக்கும் ஒரு சோசலிச அமைப்புமுறையால் மாற்றப்பட வேண்டும் என்பதே பதிலாகும்.

கோவிட்டிற்கு எதிரான போராட்டம், சாராம்சத்தில், முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமாகும். கடந்த இரண்டு ஆண்டுகளின் சோகம் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காக உலகப் பொருளாதாரம் மறுசீரமைக்கப்படுவதற்கான தேவையை உருவாக்கியுள்ளது.

இந்த அறிக்கையை அனைவருக்கும் கிடைக்கச் செய்யவும், உங்கள் பணியிடத்தில் கலந்துரையாடலை ஆரம்பிக்கவும், சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்கவும், தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க ஒரு கூட்டு நடவடிக்கைக்கான ஆதரவைப் பெற அனைத்து தொழிலாளர்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

சோசலிச சமத்துவக் கட்சியையும், சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியையும் தொடர்பு கொள்ளவும். உங்கள் பணியிடத்தின் நிலைமை பற்றி உங்களுடன் கலந்துரையாடவும், தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் உங்களுக்கு உதவவும் நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.

தோழமையுடன்,

சோசலிச சமத்துவக் கட்சி (US)

Loading