இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
டிசம்பர் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில், இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்ததாகக் கூறி 68 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்ததுடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தது. சமீபத்திய மாதங்களில் தீவிரப்படுத்தப்பட்ட கடற்படை ரோந்துகளின் ஒரு பகுதியாக இந்த கைதுகள் நடந்துள்ளன.
தென்னிந்தியாவிற்கும் வட இலங்கைக்கும் இடையிலான குறுகிய இடைவெளியான பாக்கு நீரிணையின் இருபுறமும் உள்ள முதலாளித்துவ அரசியல்வாதிகள், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் “சமூகத்தில் நோய் எதிர்ப்புச் சக்தி பெருக்கும்” தொற்றுநோய் கொள்கைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் சமூக பதட்டங்களை வெளிப்புறமாகத் திசைதிருப்பும் முயற்சியாக, இரு நாடுகளைச் சேர்ந்த மீனவர்களையும் கண்டித்து வருகின்றனர்.
அண்மைய தசாப்தங்களில், இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் பரஸ்பரம் கைது செய்யப்படுவது இரு நாடுகளிலும் உள்ள ஏழை மீனவ சமூகங்களுக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. இந்த ஆண்டு 19 வெவ்வேறு சந்தர்ப்பங்களில், இலங்கை கடற்படை, இந்திய மீனவர்களை கைது செய்துள்ளதுடன் ஐந்து இந்திய மீனவர்களைக் கொன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
1947 வரை பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் போது, இலங்கை மற்றும் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடித் தளமாக பாக்கு நீரிணை இருந்த வந்துள்ளதுடன் சுதந்திரத்திற்குப் பிறகும் 1980கள் வரை, இரு நாட்டு மீனவர்களும், தொடர்ந்ததும் அந்த கடல் வளத்தைப் பகிர்ந்து கொண்டனர். இந்த நீண்டகால நிலைப்பாடுகள், 1983ல் இலங்கையின் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டு அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்களால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட தமிழர்-விரோத இனவாதப் போரினால் சீர்குலைக்கப்பட்டன.
இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் மீதான தொடர்ச்சியான இராணுவத் துன்புறுத்தல்கள், இரு நாட்டு ஆளும் வர்க்கங்களால் பராமரிக்கப்படும் எதேச்சதிகார தேசிய எல்லைகளின் பிற்போக்கு மற்றும் பகுத்தறிவற்ற தன்மையை வெளிக்காட்டுகின்றன. இது, பேரினவாத உணர்வைத் தூண்டிவிட்டு தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
கடற்படை இணையத்தள அறிக்கைகளின் படி:
டிசம்பர் 18 அன்று, யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு அப்பால் உள்ள நெடுந்தீவின் தென்கிழக்கே ஆறு இந்திய மீன்பிடி இழுவை படகுகளையும் 43 மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்தனர்.
டிசம்பர் 19, மன்னாரின் தெற்குப் பக்கமாக இரண்டு மீன்பிடி இழுவைப் படகுகளையும் 12 மீனவர்களையும் கடற்படை கைது செய்தது.
டிசம்பர் 20 அன்று, கடற்படையினர் மேலும் இரண்டு இழுவை படகுகளையும், 13 இந்திய மீனவர்களையும் அனலத்தீவு தீவுக்கு மேற்கே கைது செய்தனர்.
தமிழ்நாட்டின் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டமை, இந்த சமூகத்தவர் மத்தியில் கோபத்தினை தூண்டிவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ANI செய்தியின்படி, கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது விசைப்படகுகளை உடனடியாக விடுவிக்க இந்திய அரசு தலையிட்டு, நடவடிக்கை எடுக்க கோரி தங்கச்சிமடம் மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் டிசம்பர் 22 அன்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.
சில தமிழக மீனவர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் டிசம்பர் 19 அன்று காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்காவிட்டால் ஜனவரி 1 முதல் ரயில் மறியலில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகவும் எகொமொமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட படகுகளை திருப்பி அனுப்பவில்லை.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், தமிழக முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலின் தெரிவித்ததாவது: “இந்த கைப்பற்றுதல் மற்றும் தாக்குதல் சம்பவங்கள், எத்தகைய அச்சமூட்டும் சம்பவங்கள் நடந்து வருகின்றன என்பதன் ஒரு ஆபத்தான அறிகுறியாகும், இது சம்பந்தமான உடனடி கவனம் தேவை. பாரம்பரியமிக்க பாக்கு நீரிணைக் கடற்பரப்பில் மீன்பிடிக்கும் எமது மீனவர்களின் உயிர்களும் வாழ்வாதாரங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.”
தமிழக மீனவர்கள் மீதான ஸ்டாலினின் அக்கறை போலியானது. அவரது திராவிட முன்னேற்றக் கழகமும் மற்றும் எதிர்கட்சியான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழகத்தை ஆட்சி செய்து வந்துள்ளன. அவர்களின் மாநில அரசாங்கங்களின் கீழ், மீனவர்கள் வறுமையில் வாடிய நிலையிலும், மீன்பிடித் தொழில் இந்தியாவின் மிகவும் இலாபகரமான துறைகளில் ஒன்றாக மாறியுள்ளது. தமிழ்நாடு மாநிலத்தில் வாழும் 200,000 மீனவக் குடும்பங்களில் சுமார் 91 சதவீதம் பேர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர்.
1980களின் இறுதியில், 'நீலப் புரட்சி' என்று அழைக்கப்படும் திட்டத்தின் கீழ் தனியார் முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம் இந்தியா தனது மீன்பிடித் தொழிலை நவீனமயமாக்கியதானல் முன்னாள் சிறிய அளவிலான படகு உரிமையாளர்கள் மீன்பிடி கூலித் தொழிலாளர்களாக மாற்றப்பட்டனர். இந்த மீனவர்களை பாட்டாளிகளாக ஆக்கி, அவர்களை ஆழ்ந்த வறுமையில் தள்ளிய இந்திய ஆளும் உயரடுக்கு, இப்போது சிடுமூஞ்சித்தனமாக அவர்களின் பாதுகாவலர்களாக காட்டிக் கொள்கின்ற அதே நேரம், இலங்கையில், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள அவர்களது சகோதர சகோதரிகளுக்கு எதிராக நிறுத்தியுள்ளது.
“வெளிநாட்டு மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன் வேட்டையில் ஈடுபடுவதால், உள்ளூர் மீனவ சமூகங்களின் வாழ்வாதாரம் மற்றும் இலங்கையின் மீன் வளங்களின் நிலையான தன்மை ஆகியவற்றின் மீதான தாக்கத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, தீவின் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்கு, கடற்படை வழக்கமான ரோந்துகளை நடத்தி வருகிறது,” எனக் கூறி, சமீபத்திய கைதுகளை, இலங்கை கடற்படை நியாயப்படுத்தியது.
உள்ளூர் மீனவ சமூகத்தை பாதுகாப்பதான இலங்கை கடற்படையின் கூற்று, தமிழ்நாட்டு முதலாளித்துவ அரசியல்வாதிகள் 'தங்கள்' மீனவர்கள் மீது காட்டிக்கொள்வது போல ஒரு பாசாங்குத்தனமானதாகும்.
உண்மையில், மூலதனம் இன்மையால், காலாவதியான மீன்பிடித் தொழில் நுட்பங்களைக் கடைப்பிடித்து வரும் இலங்கையின் வடபகுதி மீனவ மக்களின் வாழ்வாதாரம், இத்துறையில் ஊடுருவும் பெரும் வணிகர்களால் விழுங்கப்படும் அபாயத்தில் உள்ளது. வடமாகாண மீனவர்கள், வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்களினாலும் மற்றும் கடல் அட்டைப் பண்ணை திட்டங்களினாலும் ஏற்கனவே, பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளை இழந்துள்ளனர். இவை அனைத்துக்கும் கொழும்பின் ஆதரவு உள்ளது.
இலங்கை மீனவர்கள், 'கடத்தல்களுக்கு' எதிரான நடவடிக்கை மற்றும் மீன்பிடிச் சட்டங்களை அமுல்படுத்துதல் என்னும் சாக்குப்போக்கின் கீழ் இலங்கை கடற்படையின் தொடர்ச்சியான துன்புறுத்தல்களை எதிர்கொள்கின்றனர். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொழும்பின் உள்நாட்டுப் போர், 2009 மே மாதம் முடிவடைந்த போதிலும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இன்னும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளன.
அவர்களது இந்திய சகாக்களைப் போலவே, தமிழ் முதலாளித்துவக் கட்சிகளும் மற்றும் இலங்கையில் உள்ள மீனவர் சங்கங்களும் இந்திய மீனவர்களுக்கு எதிராகக் கொந்தளித்து அவர்கள் மீது கடுமையான அடக்குமுறை நடவடிக்கைகளைக் கோருகின்றன.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைவதாகக் கூறப்படும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்துவதில் கொழும்பின் 'நடவடிக்கையின்மைக்கு' எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அக்டோபர் 17 அன்று, முல்லைத்தீவில் இருந்து பருத்தித்துறை வரைக்கும் மீன்பிடி படகுகளின் அணிவகுப்புப் போராட்டத்தை நடத்தியது. இலங்கை கடற்படை, 23 இந்திய மீனவர்களை கைது செய்த உடனேயே இந்த அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
டிசெம்பர் 24, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு வெளியில் யாழ்ப்பாண கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. இந்த சம்மேளனம், 'இந்திய மீனவர்களைக் கைது செய்,' 'கைது செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டாம்' மற்றும் 'கைது செய்யப்பட்ட மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க வேண்டாம்' எனக் கோசமிட்டு, இலங்கை கடற்படையின் அடக்குமுறை எல்லைக் கட்டுப்பாடுகளை ஆதரித்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர், மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, போராட்டக்காரர்களை சந்தித்து, இந்திய மீனவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கலந்து கொண்டிருந்தார்.
ஜூலை மாதம், பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் பின்வருமாறு கூறியிருந்தார்: “இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வருகின்றனர். பெரிய இழுவை படகுகளில் வரும் இந்த மீனவர்கள், வடமாகாண மீனவர்களின் குறிப்பாக மன்னார் முதல் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு வரையிலான மீனவர்களின் மீன்பிடி சொத்துக்களை உண்மையாகவே அழிக்கின்றனர்.
இலங்கையின் தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் நிலைப்பாட்டின் வர்க்கத் தன்மையானது, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மலிவு உழைப்பைச் சுரண்டுவதற்காக வெளிநாட்டு மூலதனத்துடன் கூட்டு உறவுகளை நிறுவுவதற்கான அவர்களின் முயற்சிகளைப் பிரதிபலிக்கிறது.
சிறிய படகு உரிமையாளர்களையும் மற்றும் இயந்திரமயமாக்கப்பட்ட கப்பல்களையும் சம பிரிவில் வைக்கும் நோக்கம் கொண்ட, முன்மொழியப்பட்ட இந்திய மீன்பிடி மசோதாவுக்கு எதிராக, இந்த ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில், ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதன் மூலம் சிறிய சிறிய படகு உரிமையாளர்கள் மீது தாங்க முடியாத சுமைகள் சுமத்தப்படவுள்ளன.
இலங்கையில், குறிப்பாக வடக்கு மாகாணத்தில், பாரம்பரிய மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள், பெரு வணிக கடல் அட்டைப் பண்ணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடியின் முழுச் சுமையையும் உழைக்கும் மக்கள் மீது திணிக்க அரசாங்கங்கள் முயற்சித்து வரும் நிலையில், இரு நாடுகளிலும் மற்றும் உலகெங்கிலும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், இந்திய மற்றும் இலங்கை மீனவர்களின் போராட்டமும் நடைபெறுகிறது.
2020 ஜனவரி 8 மற்றும் நவம்பர் 26 ஆகிய தேதிகளில், இந்தியத் தொழிலாளர்கள், மோடி அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், இலங்கையும் கடந்த பன்னிரண்டு மாதங்களில் தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் எழுச்சி அலைகளைக் கண்டுள்ளது.
பாக்கு நீரிணையின் இருபுறமும் உள்ள முதலாளித்துவ அரசியல்வாதிகளால், இலங்கை மற்றும் தமிழக மீனவர்களை மாறி மாறி ஆவேசமாகக் கண்டனம் செய்வது, தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் இந்தப் போராட்டங்கள் முழு துணைக்கண்டம் முழுவதும் ஒரு ஐக்கியப்பட்ட வடிவத்தை எடுக்கும் என்ற ஆளும் உயரடுக்கின் அச்சத்தினாலேயே ஆகும்.