நிர்வாகத்தின் பழிவாங்கல் மற்றும் அரசின் அடக்குமுறையை மீறி, மகாராஷ்டிரா பொது போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் 100வது நாளைத் தாண்டியுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

75,000க்கும் மேற்பட்ட மகாராஷ்டிர மாநில சாலைப் போக்குவரத்துக் கழக (MSRTC) பேருந்து ஓட்டுநர்கள், பயணச்சீட்டு சேகரிப்பாளர்கள், பழுதுபார்ப்பவர்கள் மற்றும் பிற துணைத் தொழிலாளர்கள் நூறு நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

MSRTC தொழிலாளர்கள் தங்கள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு கோருகிறார்கள் (புகைப்படம்: MSRTC வேலைநிறுத்தக்காரர்)

கடுமையான நிர்வாக பழிவாங்கல்கள், இந்தியாவின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட மாநில அரசாங்கத்தின் கொடூரமான அச்சுறுத்தல்கள், அவர்களின் வேலைநிறுத்தத்தை தடைசெய்யும் அடுத்தடுத்த நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் அவர்களின் போராட்டத்தை முற்றிலுமாக தொழிற்சங்கங்கள் கைவிட்ட நிலை இவை அனைத்துக்கும் வேலைநிறுத்தக்காரர்கள் சவால் விடுத்து போராடுகின்றனர்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பியுள்ளனர். மாநில அரசுக்குச் சொந்தமான MSRTC சரியான நேரத்தில் அவர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கான ஒப்பந்தக் கடமையை கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் பெரும் தொற்றுநோய்களின் போது வேலை செய்யும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு அதனால் கோவிட் -19 நோயால் இறந்த 700 பேர் வரையிலான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு முறையான நிதி இழப்பீடு வழங்கப்பட வேண்டும் ஆகியவை இவற்றுள் உள்ளடங்கும், ஆனாலும் வேலைநிறுத்தக்காரர்களின் மையக் கோரிக்கை என்னவென்றால், நகரங்களுக்கு இடையேயான பேருந்து சேவையை முழுமையாக மாநில அரசுடன் இணைக்கப்பட வேண்டும், எனவே அவர்கள் சிறந்த ஊதியம், சலுகைகள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக மாநில அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படும் வேலைப் பாதுகாப்பிலிருந்து பயனடைய முடியும்.

மகாராஷ்டிராவின் சிவசேனா தலைமையிலான மாநில அரசாங்கத்துடன் நெருக்கமான ஒத்துழைப்பில் இருக்கும் MSRTC, பரந்தளவிலான வேலைநீக்கங்கள், பணி இடை நீக்கங்கள் மற்றும் வெகு தூரத்திலுள்ள MSRTC பணிமனைகளுக்கு இடமாற்றம் செய்தல் ஆகியவற்றின் மூலமாக வேலைநிறுத்தத்தை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. நவம்பர் 5 முதல் முழு அளவிலான வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கும் தறுவாயில் MSRTC தொழிலாளர்கள் மேற்கொள்ளும் எந்தவொரு வேலை தொடர்பான நடவடிக்கையும் சட்டவிரோதமானது என்று மாநில தொழிலாளர் நீதிமன்றம் பிரகடனம் செய்தது.

.இரண்டு டஜனுக்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் MSRTC தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறுகின்றன. ஆனால் ஒன்றைத் தவிர ஏனைய அனைத்தும் தொழிலாளர் நீதிமன்றத்திற்கு தலை வணங்கின. அவை நவம்பர் 4 நள்ளிரவில் தொழிலாளர்கள் வெளிநடப்பு செய்ய வேண்டாம் என உத்தரவிட்டனர், மேலும் அவர்கள் வேலைநிறுத்தத்தை நாசம் செய்ததுடன், அன்றிலிருந்து வேலைநிறுத்தத்தை எதிர்த்து வந்தனர்.

இரண்டு முக்கிய ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சிகள்-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), அல்லது CPM, மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI)-மற்றும் முறைப்படி அவற்றுடன் இணைந்த தொழிலாளர் அமைப்புகளான இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU) மற்றும் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) ஒரு குறிப்பிட்ட மோசமான பாத்திரத்தை வகிக்கிறது. இந்தியாவின் நரேந்திர மோடி தலைமையிலான தீவிர வலதுசாரி மத்திய அரசாங்கம் மற்றும் ஒட்டுமொத்த இந்திய முதலாளித்துவத்தின் தனியார்மயமாக்கல் உந்துதலை எதிர்ப்பதாக ஸ்ராலினிஸ்டுகள் கூறுகின்றனர். ஆனால் இன்னும் அவர்கள் MRSTC தொழிலாளர்களின் போராட்டம் பற்றிய தகவல்களை திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து வருகின்றனர். மஹாராஷ்டிராவிலும் இந்தியா முழுவதிலும் உள்ள தொழிலாளர்களை அவர்களின் பாதுகாப்பிற்காக அணிதிரட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

MSRTC, மாநில அரசாங்கத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்ற வேலைநிறுத்தக்காரர்களின் கோரிக்கை, மகாராஷ்டிராவின் அரசாங்கமும் MSRTC நிர்வாகமும் உழைக்கும் மக்களுக்கு எதிராக குறிப்பாக கிராமப்புறங்களுக்கு அத்தியாவசிய சேவையை வழங்கி வரும் பேருந்து சேவையை தனியார்மயமாக்க சதி செய்து வருகின்றனர் என்பதை அவர்கள் அறிந்ததன் அடிப்படையில் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக, அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் MSRTC-க்கு முறையான நிதி வழங்காமல் பட்டினி போட்டன.

ஜனவரி 17 அன்று, மும்பை புறநகர் பகுதியான பாந்த்ராவில் உள்ள தொழிலாளர் நீதிமன்றம், நவம்பர் 5 வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்று வழங்கிய தீர்ப்பை மறுபடி உறுதி செய்தது. MRSTC நிர்வாகத்தின் வேண்டுகோளின் பேரில், தொழிற்சங்கங்கள் இந்த வழக்கில் ஒரு தரப்பாக சேர்க்கப்பட்டன. அவற்றின் சார்பாக வாதிடும் வழக்கறிஞர் அந்த தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை மற்றும் அனுமதிக்கவில்லை என்று வலியுறுத்திய போதிலும் கூட அவ்வாறு வழக்கில் சேர்க்கப்பட்டன.

எதிர்பார்த்தது போலவே, நிர்வாகமும் மகாராஷ்டிர அரசாங்கமும் தொழிலாளர்களுக்கு எதிரான சமீபத்திய நீதிமன்றத் தீர்ப்பை பற்றிக்கொண்டு வேலைநிறுத்தத்தை முறியடிக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தின. .

MSRTC அதிகாரி ஒருவர், வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பு வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு எதிராக போக்குவரத்து கழகம் எடுத்த அனைத்து பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கும் உண்மையான சட்டபூர்வ அனுமதியை உருவாக்கியள்ளது என்று அறிவித்தார். 'இந்த உத்தரவு காரணமாக, இடைநீக்கம் மற்றும் பணிநீக்கம் போன்ற தொழிலாளர்கள் மீது போக்குவரத்து கழகம் எடுத்த நடவடிக்கைகள் சட்டபூர்வமாகக் கருதப்படும், “மேலும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்களின் சம்பளங்களை பிடித்தம் செய்தல் மற்றும் அபராதம் விதித்தல் ஆகிய நடவடிக்கைகளையும் கூட போக்குவரத்து கழகம் எடுக்க முடியம்.” என்று அந்த அதிகாரி வலியுறுத்தினார்.

நீதிமன்ற உத்தரவுக்கு அடுத்து உடனடியாக சில நாட்களில், நிர்வாக அதிகாரிகள் தொழிலாளர்களை அவர்களது வீடுகளுக்குச் சென்று மிரட்டி, அவர்களை மீண்டும் வேலைக்கு வரவைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த முயற்சிகள் பெருமளவில் தோல்வியடைந்தன. பழிவாங்கல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் மற்றும் தொழிற்சங்க நிதியுதவி எதுவும் இல்லாத போதிலும், கடந்த நவம்பரில் வேலையிலிருந்து வெளிநடப்பு செய்த 98,000 தொழிலாளர்களில் சுமார் 75,000 பேர் இன்னும் வேலைநிறுத்தத்தில் உள்ளனர்.

இன்றுவரை, MSRTC நிர்வாகம் குறைந்தது 8,067 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது மற்றும் 11,000 பேரை இடைநீக்கம் செய்துள்ளது. இன்னும் காட்டுமிராண்டித்தனமான பழிவாங்கல்கள் தயாராகி வருகின்றன என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டி, ஒரு மூத்த MSRTC அதிகாரி இவ்வாறு கூறினார்; “வேலைநிறுத்தம் இப்படியாக தொடர முடியாது. அனைத்து தீர்வுகளையும் வழங்கிய போதிலும், ஊழியர்கள் விட்டுக்கொடுக்காமல் இருக்கிறார்கள்.”

வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை மொத்தமாக கைது செய்ய காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கும் கொடூரமான மகாராஷ்டிரா அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தை செயல்படுத்த போவதாக மாநில அரசாங்கம் பலமுறை அச்சுறுத்தியுள்ளது. இன்றுவரை அவ்வாறு செய்யவில்லை என்றால், அத்தகைய நடவடிக்கையானது தொழிலாள வர்க்கத்தின் மற்ற பிரிவுகளை தங்கள் பாதுகாப்பிற்கு வர தூண்டுதல் அளிக்கும் என்று அஞ்சுகிறது.

அரசாங்கமும் ஆளும் வர்க்கமும் கணித்துக் கொண்டிருப்பது என்னவென்றால், தொழிற்சங்கங்களும் ஸ்ராலினிசக் கட்சிகளும் MSRTC தொழிலாளர்களின் போராட்டத்தை திட்டமிட்ட முறையில் தனிமைப்படுத்துவதைத் தொடரும், அதன் மூலமாக இறுதியில் வேலைநிறுத்தம் செய்பவர்களை பணிய வைக்கும்.

மும்பை ஜவுளித் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட தலைவிதியைப் போன்று ஏற்படும் என்று MSRTC வேலைநிறுத்தக்காரர்களை பயமுறுத்தும் முயற்சியில் ஷரத் பவார் அச்சுறுத்தினார். அவர்களின் 18 மாதங்கள் நீடித்த 1982-83 வேலைநிறுத்தம் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான தேசிய மற்றும் மாநில அரசாங்கங்கள் மற்றும் ஜவுளி முதலாளிகளுக்கு இடையிலான கூட்டு சதியின் விளைவாக அடித்து நொறுக்கப்பட்டது, இதன் விளைவாக 150,000 மில் தொழிலாளர்கள் வேலைகளை இழந்தனர். 'MSRTC ஊழியர்கள், மும்பையில் ஜவுளி ஆலைகளை அழித்த மில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் போன்ற எந்த தீவிர நடவடிக்கையும் எடுக்கக்கூடாது' என்று பவார் அறிவித்தார்.

அவரது பங்கிற்கு, பவாரின் மருமகனும், மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான அஜித் பவார், இணைப்பு விவகாரம் தொடர்பாக ஆளும் உயரடுக்கின் உண்மையான அக்கறையை வெளிநழுவ விட்டார். 'இன்று ஒரு போக்குவரத்து கழகம் இணைக்கப்பட்டால், நாளை பல கழகங்களில் இருந்து இதுபோன்ற கோரிக்கை வரும்,' என்று அவர் கூறினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், MSRTC தொழிலாளர்களின் இணைப்புக் கோரிக்கைக்கு விட்டுக்கொடுப்பது என்பது அருகிலுள்ள அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களை ஊக்குவித்து தனியார்மயமாக்கலை எதிர்க்கும் ஒரு வழிமுறையாக அதே கோரிக்கையை எழுப்புவார்கள் என்று அரசாங்கமும் பெருவணிகமும் அஞ்சுகின்றன.

MRSTC தொழிலாளர்கள், நிர்வாகத்தின் பழிவாங்கல்கள், அரசின் தாக்குதல்கள் மற்றும் முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்களின் துரோகம் மற்றும் நாசவேலைகளை எதிர்கொண்டு 100 நாட்களுக்கும் மேலாக தங்கள் வேலைநிறுத்தத்தை நிலைநிறுத்துவதில் மிகுந்த தைரியத்தையும் உறுதியையும் காட்டியுள்ளனர். எவ்வாறாயினும், வேலைநிறுத்தம் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் ஒரு சோசலிச அரசியல் மூலோபாயத்தால் உயிரூட்டப்படாத வரையில் MSRTC தொழிலாளர்களின் போராட்டம் பெரும் ஆபத்தில் உள்ளது.

தனியார்மயமாக்கல், ஆபத்தான ஒப்பந்த-தொழிலாளர் வேலை முறை மற்றும் பெரும்தொற்றுநோய் காலம் முழுவதும் இப்பிராந்தியத்தில் உயிர்களைப் பாதுகாப்பதற்கு மேலாக முதலீட்டாளர்களின் இலாபத்திற்கு குற்றவியல் ரீதியாக முன்னுரிமை அளித்தல் ஆகியவற்றுக்கு எதிராக தொழிலாளர்களின் எதிர் தாக்குதலின் ஈட்டி முனையாக MSRTC தொழிலாளர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை மகாராஷ்டிராவிலும் மற்றும் இந்தியா முழுவதிலும் மாற்றி அமைக்க வேண்டும்.

தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும், பொதுச் சேவைகளைப் பாதுகாப்பதற்குமான ஒரு கூட்டுப் போராட்டத்திற்கு MSRTC வேலைநிறுத்தக்காரர்கள் ஒரு அறைகூவல் விடுப்பார்களாயின் அதற்கு நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள், வங்கி, துறைமுகம் மற்றும் மின்சாரத் தொழிலாளர்கள் மற்றும் மோடி அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகள் தலைமையிலான மகாராஷ்டிரா உட்பட மாநில அரசாங்களின், தனியார்மயமாக்கல் நிகழ்ச்சி நிரலால் குறிவைக்கப்பட்டுள்ள மில்லியன் கணக்கான பிற தொழிலாளர்களின் பெரும் ஆதரவைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.

MRSTC தொழிலாளர்கள், ஊழல் நிறைந்த, மதிப்பிழந்த தொழிற்சங்கங்கள் தங்கள் சார்பாக பேச்சுவார்த்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற நிர்வாகம் மற்றும் அரசாங்கத்தின் கோரிக்கைகளை நிராகரித்துள்ளனர். இந்த சரியான முடிவு, தொழிலாளர்கள் உண்மையான தொழிலாளர் வர்க்கப் போராட்ட அமைப்புகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்துகிறது. அதாவது நியாயமான கோரிக்கைகளுக்கான போராட்டத்தை வடிவமைத்து வழிநடத்தும் பணியை, சாமானியக் குழுக்களின் வலையமைப்பு மேற்கோள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்களிடம் இருந்து ஆதரவைத் திரட்டவும், அவர்களுடன் ஒரு ஐக்கியப் போராட்டத்தை வளர்க்கவும் முயற்சிக்க வேண்டும்.

சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்க முயற்சிக்கும் MSRTC வேலைநிறுத்தக்காரர்களின் நடவடிக்கைகளுக்கு செயல்திட்டம் வாய்ந்த ஆலோசனைகள் வழங்கல், அரசியல் வழிகாட்டுதல் மற்றும் நமது முழு மனதுடனான ஆதரவை வழங்குவதில் உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியில் சார்ந்திருக்க முடியும்.

Loading