இலங்கை தாதியர்கள் நீதிமன்றத் தடையை மீறி ஏனைய சுகாதார ஊழியர்களுடன் இணைந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

வியாழன் மாலை, கொழும்பு மாவட்ட நீதிமன்றமானது அரசாங்க தாதி உத்தியோகத்தர்கள் சம்மேளனத்தின் (GNOA) தலைவர் சமன் ரத்னப்பிரியவிற்கு எதிராக ஒரு தடை உத்தரவை பிறப்பித்தது. பல்லாயிரக்கணக்கான சுகாதார ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் தொழிற்சங்கத்தின் ஈடுபாட்டை உடனடியாக 'இடைநிறுத்துமாறு' அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு மீதான இறுதித் தீர்ப்பை பெப்ரவரி 24 அன்று நீதித்துறை வெளியிடும். அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ரத்னப்பிரியவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 20,000 உறுப்பினர்களைக் கொண்ட அரசாங்க தாதி உத்தியோகத்தர்கள் சங்கமானது, திங்களன்று தொடங்கிய சுகாதார தொழில் வல்லுநர்களின் சம்மேளனம் அழைப்பு விடுத்த தேசிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள 18 தொழிற்சங்கங்களில் ஒன்றாகும். தாதிமார், துணை மருத்துவ சேவை உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மருந்தாளர்கள் உட்பட 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வட மாகாண சுகாதார ஊழியர்கள் 30 டிசம்பர் 2021 அன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊர்வலம் [WSWS Media]

சுகாதார தொழில் வல்லுநர்களின் சம்மேளனம் (சு.தொ.வ.ச.) சம்பளப் பற்றாக்குறை மற்றும் மோசமடைந்து வரும் நிலைமைகள் சம்பந்தமாக அதன் உறுப்பினர்களின் மத்தியில் வளர்ந்து வரும் எதிர்ப்பின் காரணமாக, இந்த நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. வேலைநிறுத்தத்தில் ஈடுபடுபவர்கள் சம்பள முரண்பாடுகளை சரிசெய்தல், போக்குவரத்து மற்றும் உடன் அழைப்பு கடமை கொடுப்பனவுகள் 3,000 ரூபாயில் இருந்து (15 அமெரிக்க டாலர்) 10,000 ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டுமென்றும் மேலதிக நேர கட்டணங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பதவி உயர்வு நடைமுறைகள் வேண்டுமென கோருகின்றனர்.

நீதிமன்றமானது தாதிமாரை தனிமைப்படுத்தியிருந்தாலும், வேலைநிறுத்தத் தடையானது அனைத்து சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்த நடவடிக்கையை உடைப்பதை நோக்கமாகக் கொண்டதாகும். எவ்வாறாயினும், சுகாதார ஊழியர்கள் நீதிமன்ற உத்தரவை மீறி, தங்கள் நீண்ட கால நிலுவையில் உள்ள கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான உறுதியை தெளிவுபடுத்துகின்றனர்.

நேற்று அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குருநாகல், மாத்தறை, பதுளை, வவுனியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் இதேபோன்ற எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலைநிறுத்த தடை உத்தரவுக்கான கோரிக்கை இலங்கை சட்டமா அதிபரால் (AG) முன்வைக்கப்பட்டது. சட்டமா அதிபர் சார்பில் வாதாடிய அரச வழக்கறிஞர்கள், 'வேலை நிறுத்தத்தால் நோயாளிகளின் கவனிப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது' என்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அரசாங்கத்தின் உயர் மட்டத்தின் உத்தரவு இல்லாமல் சட்டமா அதிபரின் தலையீடு நடந்திருக்காது. புதன்கிழமை அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு) பொதுக் கூட்டத்தில், ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ வேலைநிறுத்தத்தைக் கண்டித்ததை அடுத்தே இந்த நீதிமன்ற உத்தரவு வந்துள்ளது.

'பல்வேறு அரசியல் சக்திகளின் செல்வாக்கின் கீழ்' அரச ஊழியர்கள் வேலைநிறுத்தங்களை மேற்கொள்வதாக தெரிவித்த இராஜபக்ஷ, 'மக்களுக்கும் நாட்டுக்கும் சேவை செய்ய வேண்டிய பொறுப்பு பொது ஊழியர்களுக்கு உள்ளது,' என்று மேலும் கூறினார்.

'மக்கள்' பற்றிய இராஜபக்ஷவின் கவலைகள் போலியானவை. அவரது அரசாங்கம் கோவிட்-19 வைரஸை கட்டுப்படுத்துவதற்கான பொது சுகாதார நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதுடன் மக்களை வெகுஜன தொற்றுகள் மற்றும் மரணத்துக்குள் தள்ளும் நிலையை உருவாக்க முயற்சிக்கிறது. கோவிட்-19, உலகளாவிய தொற்றுநோயால் மோசமடைந்துள்ள நெருக்கடியின் சுமையை, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீது சுமத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவுகளையும் அரசாங்கத்தின் சமூகத் தாக்குதல்களுக்கு எதிராகப் போராடுவதற்கு ஊக்குவிக்கும் என்ற அச்சத்திலேயே, சுகாதார ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை நசுக்க கொழும்பு ஆர்வம் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு தீவு முழுவதும் சுகாதாரம், கல்வி, அரச நிர்வாகம், இரயில், மின்சாரம், துறைமுகங்கள், பெட்ரோலியம் மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட வேலைநிறுத்தங்களும் போராட்டங்களும் வெடித்தன. நேற்று சுமார் 26,000 பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி தேசிய ஒரு நாள் போராட்டத்தை நடத்தினர்.

10 பெப்ரவரி 2022 அன்று நடந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி சாரா ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் [WSWS Media]

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), வேலைநிறுத்தம் மற்றும் பிற தொழில்துறை நடவடிக்கைகளை முன்னெடுக்க சுகாதார ஊழியர்களுக்கு உள்ள உரிமை மீதான அரசாங்கத்தின் தாக்குதலைக் கண்டிக்கிறது. அரசாங்கத்தின் அடக்குமுறை சட்ட நகர்வுகளை எதிர்க்கவும், அனைத்து சுகாதார ஊழியர்களையும் பாதுகாக்க அணிதிரளவும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் நாங்கள் வலியுறுத்துகிறோம். தங்கள் வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகளைப் பாதுகாப்பதற்கான அனைத்து தொழிலாளர்களின் அடிப்படை ஜனநாயக உரிமையும் ஆபத்தில் உள்ளது.

அரசாங்க சார்பு பொதுச் சேவை தாதியர் சங்கம் (பொ.சே.தா.ச.), எதிர்க்கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) கட்டுப்பாட்டில் உள்ள அகில இலங்கை சுகாதார சேவைகள் சங்கம் (அ.இ.சு.சே.ச.) ஆகியவை வேலை நிறுத்தத்துக்கு குழிபறிக்கின்றன. இது அரசாங்கத்தின் கரத்தை பலப்படுத்தி அதன் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு வழி திறந்து விட்டுள்ளது. எவ்வாறாயினும், பல பொ.சே.தா.ச.மற்றும் அ.இ.சு.சே.ச. உறுப்பினர்கள், சமீபத்திய நாட்களில் போராட்ட நடவடிக்கையில் சேரத் தொடங்கியுள்ளதுடன் அவர்களின் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்துக்கு எதிராக கருங்காலி வேலை செய்வதை கண்டித்தனர்.

கடந்த ஆண்டு, தற்போதைய கோரிக்கைகளுக்காக சு.தொ.வ.ச. 10 மட்டுப்படுத்தப்பட்ட வேலைநிறுத்தங்களை நடத்தியது. ஜனாதிபதி இராஜபக்ஷ மற்றும் அவரது சுகாதார அமைச்சரின் வெற்று வாக்குறுதிகளைத் தொடர்ந்து, இந்தப் போராட்டங்கள் தொழிற்சங்க அமைப்பினால் நிறுத்தப்பட்டு காட்டிக் கொடுக்கப்பட்டன.

சுகாதார ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் இருக்கும் போது, சு.தொ.வ.ச., நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் வேலைநிறுத்தத்தை கைவிட காத்திருக்கிறது. அரசாங்க தாதி உத்தியோகத்தர்கள் சங்க சம்மேளனம், 'ஒன்றல்ல, 10 தடை உத்தரவைக் கொண்டு வந்தாலும், இந்தக் கூட்டணியில் உள்ள 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் இந்தப் போராட்டத்தைத் தொடருவார்கள்,” என்று நேற்று அதன் முகநூலில் வாய்ச்சவடால் விடுத்திருந்தது.

நேற்று மாலை, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரத்னப்பிரிய, தொழிற்சங்கத்தின் செயற்குழு 'தடை உத்தரவு கிடைத்தவுடன் உடனடியாக கூட்டத்தை கூட்டி, எதிர்கால நடவடிக்கை குறித்து கலந்துரையாடும்' என்றார். சு.தொ.வ.ச. தலைவர் ரவி குமுதேஷ் கூறுகையில், “எந்த உத்தரவும் பிறப்பிக்கப்பட்டதாக எங்களுக்குத் தெரியவில்லை. ஏதேனும் இருந்தால், அது தொடர்பான சட்ட ஆலோசனையைப் பெறுவோம்” என்றார்.

தங்கள் உறுப்பினர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க, தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவுகளை நோக்கி திரும்புவதற்கும் அரசாங்கத்தின் சமீபத்திய தாக்குதலுக்கு எதிரான அரசியல் போராட்டத்தை முன்னெடுப்பதற்கும் சு.தொ.வ.ச. எந்த அக்கறையும் கொண்டிருக்கவில்லை. தேசிய அரசோடு பிணைந்துள்ள அனைத்து தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களை அணிதிரட்டுவது அரசாங்கத்துடனும் முதலாளித்துவ வர்க்கத்துடனும் நேரடி மோதலை உருவாக்கும் என்று அஞ்சுகின்றன.

இந்த வாரம், சு.தொ.வ.ச. தலைவர் குமுதேஷ், தொழிற்சங்க சம்மேளனம் வேலைநிறுத்தத்தை கைவிடக் கூடியவாறு தொழிற்சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து 'வாக்குறுதியை' வழங்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

இலங்கையில் ஒரு தொழிற்சங்கம் கூட சுகாதார ஊழியர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கவில்லை அல்லது அவர்களை பாதுகாக்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மௌனத்தால் வலுப்பெற்ற அரசு தனது தாக்குதலை தீவிரப்படுத்தியது.

நேற்று, வேலைநிறுத்தக்காரர்களை கண்டனம் செய்த சுகாதார அமைச்சர் ரம்புக்வெல்ல, 'தொழிற்சங்கவாதிகள் கூர்மையாக கட்டமைக்கப்பட்ட மற்றும் சூழ்ச்சித்தனமான அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக, நன்கு நிரூபிக்கப்பட்ட காரணங்களையும் கலந்துரையாடல்களையும் நிராகரிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்' என்று அறிவித்தார்.

துறைமுகங்கள் மற்றும் கப்பல் விவகாரங்களுக்கான அமைச்சர் ரோஹித அபேவர்தன, பாராளுமன்றத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்களை தாக்கிப் பேசினார். 'அத்தியாவசிய சேவைகள் தொடர்பான துறைகளில் வேலைநிறுத்தங்களை கட்டுப்படுத்தும் சட்டங்கள் இருக்க வேண்டும். மருந்தின்றி மக்கள் செத்து மடிகின்றனர்” என அவர் அறிவித்தார். வேலைநிறுத்தத்திற்கு எதிரான சட்டங்களை அறிமுகப்படுத்துமாறு நீதி அமைச்சர் அலி சப்ரியை அவர் வலியுறுத்தினார். கடந்த மாதம் சப்ரி முக்கிய நிறுவனங்களில் வேலைநிறுத்தங்களை தடை செய்யுமாறு ஜனாதிபதி இராஜபக்ஷவிடம் அழைப்பு விடுத்தார்.

ஊடகங்கள் அரசாங்க அச்சுறுத்தல்களை ஆதரிக்கின்றன. அவை, ஒரு ஆண் மற்றும் ஒரு குழந்தை மருத்துவ கவனிப்பைப் பெற இயலாமல் மரணித்தமை மற்றும் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் புகைப்படங்களைப் பற்றிய கதைகளைக் கொண்டு, வேலைநிறுத்தம் செய்பவர்களுக்கு எதிரான நச்சுத்தனமான பிரச்சாரத்தை செய்து வருகின்றன.

சிங்கள நாளிதழான திவயின பத்திரிகையின் வெறித்தனமான ஆசிரியர் தலையங்கம், வேலைநிறுத்தம் செய்பவர்களை பொல்லுகளால் அடிக்க வேண்டும் என்று கூறிய ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சியை மேற்கோள் காட்டியது. 'இந்த நாடு பல நெருக்கடிகளை எதிர்கொள்கிறது... பொதுமக்களின் அத்தியாவசிய சேவைகளை நாசப்படுத்தும் வேலைநிறுத்தங்களை நாங்கள் எதிர்க்கிறோம்... சுகாதார ஊழியர்கள் மக்களுக்க புதைகுழிகளை தோண்டி வருகின்றனர். மக்கள் ஆத்திரமூட்டப்பட்டால், சுகாதாரப் பணியாளர்களும் அதே புதைகுழியில் தள்ளப்படுவார்கள்” என்று திவயின அறிவித்தது.

மனித உயிர்களை விட இலாபத்துக்கு முன்னுரிமை கொடுக்கும், பொது சுகாதார நடவடிக்கைகளை கீழறுத்து, பொருளாதாரத்தை மீண்டும் திறந்துவிட்டு, தொற்றுநோய் மரணங்களை இயல்பானதாக ஆக்கும் இராஜபக்ஷ அரசாங்கத்தின் “பரவித் தொலையட்டும்” என்ற கொரோனா வைரஸ் கொள்கைகளை முழுமையாக ஆதரிக்கும் இந்த ஊடகங்களின் இழிவான பிரச்சாரத்தை தொழிலாளர்கள் கண்டிக்க வேண்டும்.

சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை மீதான நீதிமன்றத் தடையானது, முழு தொழிலாள வர்க்கத்துடனும் நேரடி மோதலை நோக்கி இராஜபக்ஷ ஆட்சி நகர்வதை சுட்டிக்காட்டுகிறது. ஒரு அவநம்பிக்கையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் அரசாங்கம், உலகெங்கிலும் உள்ள அதன் சமதரப்பினரைப் போலவே, தொழிலாள வர்க்கத்தின் எந்த நடவடிக்கையையும் அதனால் பொறுத்துக்கொள்ள முடியாது.

இராஜபக்ஷ அரசாங்கத்தையும் அதன் பெருவணிகக் கொள்கைகளையும் தோற்கடிக்க தொழிலாள வர்க்கத்தின் அரசியல் மற்றும் தொழில்துறை பலத்தை சுயாதீனமாக அணிதிரட்ட வேண்டியதன் அவசியத்தை இது மீண்டும் ஒருமுறை கூர்மையாக வெளிப்படுத்துகிறது.

தொழிலாளர்கள் ஒவ்வொரு வேலைத்தளத்திலும், தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, இலங்கை மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்துடன் தங்கள் ஐக்கியத்தை கட்டியெழுப்ப வேண்டும். இந்தப் போராட்டம் சோசலிசக் கொள்கைகளுக்கான போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து இந்த வேலைத்திட்டத்திற்காகப் போராட வேண்டும்.

Loading