ஸ்பானிய லாரி ஓட்டுனர்களின் வேலைநிறுத்தம் அதிகரிக்கும்போது, மாட்ரிட் வேலைநிறுத்தக்காரரை போலீசார் சுட்டுக் கொன்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஸ்பெயின் முழுவதும் உள்ள முக்கிய துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் விநியோக மையங்களை மறித்து லாரி ஓட்டுநர்கள் நாடு தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் இரண்டாவது நாளாக நேற்று ஈடுபட்டனர். வணிகப் பொருட்களின் சாலைப் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்கான தளம் (Platform) அழைப்பு விடுத்துள்ள வேலைநிறுத்தத்தில் 75,000 லாரி ஓட்டுனர்கள் இணைகிறார்கள், இது 85 சதவீத சிறிய லாரி நிறுவனங்கள் மற்றும் சுயதொழில் செய்யும் லாரி ஓட்டுனர்களை கொண்டது. பல தசாப்தகால பரவலான சுரண்டலுக்குப் பின்னர், அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் மற்றும் மோசமான வேலை நிலைமைகளை அவர்கள் எதிர்க்கின்றனர்.

இந்த போராட்டம், ஸ்பெயினின் சோசலிஸ்ட் கட்சி-பொடேமோஸ் (PSOE-Podemos) அரசாங்கத்துடனான மோதலாக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது, இது மறியல் போராட்டங்களுக்கு எதிராக அதிக ஆயுதமேந்திய போலிஸை நிறுத்துகிறது, மேலும் ரஷ்யாவுடனான நேட்டோ போர் கொள்கை உலகளவில் எரிபொருள் விலை அதிகரிக்க காரணமாக உள்ளது.

மாட்ரிட்டில் உள்ள சான் பெர்னாண்டோ டி ஹெனாரஸில் உள்ள தொழில்துறை மண்டலத்தில் ஒரு மறியல் போராட்டத்தில், ஒரு வேலைநிறுத்தம் செய்பவர் கைது செய்யப்படுவதை எதிர்த்தபோது அவர் சுடப்பட்டதாக கூறப்படுகிறது, அவர் ஒரு இரகசிய போலீஸ்காரரை எதிர்கொள்கிறார் என்று தெரியவில்லை. 33 வயதான வேலைநிறுத்தக்காரர், வயிற்றில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் லா பிரின்சா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் மற்றொரு வேலைநிறுத்தம் செய்பவர், குறைவான காயம் அடைந்தார்.

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக இத்தாலிய லாரிகள் வேலைநிறுத்தத்தில் இணைகின்றன (Source: Twitter@MishGEA)

காடிஸில் வேலைநிறுத்தம் செய்த உலோகத் தொழிலாளர்கள் மீது இரப்பர் தோட்டாக்களை சுட, அது கவச வாகனங்களையும் போலீஸ் படைகளையும் அனுப்பிய ஒரு சில மாதங்களுக்குப் பின்னர் இது நடந்துள்ளது. இது, PSOE மற்றும் பொடேமோஸ் ஆகியவை வேலைநிறுத்தம் செய்பவர்களுக்கு எதிராக பாரிய வன்முறையைக் கட்டவிழ்த்துவிட தயாராக உள்ளன என்பதற்கான எச்சரிக்கையாகும்.

El Confidencial Digital இன் படி, PSOE-பொடேமோஸ் அரசாங்கம், பெட்ரோல் நிலையங்களுக்கு எரிபொருள் லாரி தொடரணிகளை கொண்டு செல்ல காவல்துறை மற்றும் இராணுவத்தை அனுப்புவதற்கான திட்டங்களை வரைந்துள்ளது. மருந்துகள், உணவுப் பொருட்கள், இறைச்சிக் கூடங்களுக்கு விலங்குகள், கால்நடைகளுக்கான பொருட்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்குத் தொழில்துறை உதிரிப்பாகங்கள் ஆகியவற்றைக் கொண்டு செல்வதற்கு தொடரணிகளை அழைத்துச் செல்ல உள்துறை அமைச்சகம் ஒரு சிறப்பு போலீஸ் திட்டத்தைக் கொண்டுள்ளது. நேற்று, ஸ்பெயின் போலீசார் ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட லாரிகளை அஸ்டூரியாஸில் அழைத்துச் சென்றனர்.

அரசாங்கம் மறுத்தாலும், வேலைநிறுத்தம் ஏற்கனவே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஸ்பெயினின் Logistics and Transport Business Organization விநியோக சங்கிலிகளில் 'கடுமையான சிக்கல்கள்' பற்றி எச்சரித்தது மற்றும் 'பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கவும், இதனால் சாத்தியமான பற்றாக்குறையைத் தவிர்க்கவும் அரசாங்கத்தின் உடனடி தலையீடு' தேவையெனக் கோரியது. அஸ்துரியன் முதலாளிகள் சங்கம் 'மிக உயர்ந்த தாக்கத்தை' உறுதிப்படுத்தியது. இந்த வேலைநிறுத்தம் பால் பொருட்களின் 'விநியோகத்தில் கடுமையான பிரச்சனைகளுக்கு' வழிவகுக்கும் என பால் தொழில்களின் தேசிய கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

ஸ்பெயின் முழுவதும், முக்கிய துறைமுகங்கள் முழுமையாக செயல்படவில்லை. வடக்கு ஸ்பெயினின் முக்கிய நுழைவுப் புள்ளிகளில் ஒன்றான பில்பாவோ துறைமுகம் முடங்கியுள்ளது. “சாலை வழியாக, பில்பாவோ துறைமுகத்தை விட்டு எந்தப் பொருளும் வெளியேறவில்லை, சான்டுர்ட்சியில் யாரும் வேலை செய்யவில்லை, துறைமுகம் 100 சதவீதம் நிறுத்தப்பட்டுள்ளது. எந்த லாரிகளுக்கும் ஏற்றப்படவில்லை,” என பில்பாவோ துறைமுகத்தின் சுயதொழில் செய்பவர்களின் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் EFE செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

கப்பலில் இருந்து சரக்குகளை இறக்கி ஏற்றும் மையங்களில் உலகின் பரபரப்பான ஒன்றான அல்ஹெசிராஸ் துறைமுகத்தில், 1,000 லாரிகளைக் கொண்ட Algeciras Bay Container Transport Association வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிக்கிறது.

முக்கிய விநியோக மையங்களிலும் வேலைநிறுத்தம் தாக்குகிறது. ஸ்பெயினின் மிகப்பெரிய உணவு விநியோக மையமான Mercamadrid, வழக்கமான தயாரிப்புகளில் பாதியை மட்டுமே பெற்றது. காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகம் பாதிக்கப்பட்டன: தளவாட மையத்திற்கு முந்தைய வாரத்தை விட 60 சதவீதம் விளைச்சல் கிடைத்தது. Granada மாகாணத்தை உள்ளடக்கிய MercaGranada, மறியல் காரணமாக அதன் செயல்பாடு முற்றிலுமாக நிறுத்தப்பட்டதாக அறிவித்தது.

கான்டாப்ரியாவில், மீனவர்கள் மீன்பிடிக்க மறுத்துவிட்டனர், ஏனெனில் அவர்களின் மீன் பிடிப்புகளின் விநியோகத்திற்கு உத்தரவாதம் இல்லை. காடிஸ் வளைகுடாவில், போக்குவரத்து வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக மீனவர்கள் தங்கள் கப்பல்களையும் நிறுத்தி, நஷ்டத்தில் வேலை செய்ய முடியாது என வலியுறுத்தினர்.

முக்கிய தொழிற்சாலைகளும் விநியோக பிரச்சனைகளை தெரிவிக்கின்றன. ஜராகோசாவில் உள்ள ஓப்பல் தொழிற்சாலை, போக்குவரத்து வேலைநிறுத்தத்தால் ஏற்பட்ட விநியோக பிரச்சனைகள் காரணமாக, Citroën C3 Aircross மற்றும் Opel Crossland தயாரிக்கப்படும் லைன் 1 ஐ நிறுத்துவதாக அறிவித்தது.

மெதுவாக சென்ற லாரிகள் தொடரணி, மாட்ரிட், பார்சிலோனா, விட்டோரியா, பாம்ப்லோனா, ஃபெரோல், பொன்ஃபெராடா மற்றும் முர்சியா உள்ளிட்ட நகரங்களில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தை சீர்குலைத்துள்ளன

முதலாளித்துவ ஊடகங்களும் PSOE-பொடேமோஸ் அரசாங்கமும் வேலைநிறுத்தத்தின் தாக்கத்தை குறைத்துக் காட்டுகின்றன. போக்குவரத்து அமைச்சர் Raquel Sánchez நேற்று, இது 'அதிகமான தாக்கத்தை' ஏற்படுத்தவில்லை என்றும், 'நிலைமை கட்டுக்குள் உள்ளது' என்றும் கூறினார்.

PSOE-பொடேமோஸ் அரசாங்கம், உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு மத்தியில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினைக் குற்றம் சாட்டுவதன் மூலம் பணவீக்கத்தில் அதிகரித்து வரும் கோபத்தை போக்க முயற்சிக்கிறது. பெருகிவரும் வர்க்கப் பதட்டங்களை வெளிப்புறமாக ஒரு போர்க் காய்ச்சலாக திசை திருப்பும் முற்றிலும் பொறுப்பற்ற மற்றும் இழிந்த முயற்சியில், பிரதம மந்திரி பெட்ரோ சான்செஸ் அறிவித்தார்: 'குற்றம் புட்டின் மட்டுமே.' இந்த வெறித்தனமான ரஷ்ய-எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு ஆளும் வர்க்கம் மற்றும் 'இடது ஜனரஞ்சக' பொடேமோஸ் கட்சியைச் சுற்றியுள்ள வசதியான நடுத்தர வர்க்கத்தின் குறுகிய அடுக்குகளுக்கு வெளியே சிறிய ஆதரவு கூட கிடையாது.

ஐரோப்பா முழுவதும், ரஷ்யாவுடன் போரில் ஈடுபடுவதற்கு எதிராக பரந்த தொழிலாள வர்க்க எதிர்ப்பு உள்ளது. Euroskopia கருத்துக் கணிப்பின்படி, கடந்த மாதம், 32 சதவீத ஸ்பானியர்கள் மட்டுமே ரஷ்ய-உக்ரேன் மோதலில் இராணுவ ஈடுபாட்டை ஆதரித்தனர். நெதர்லாந்தில் இந்த எண்ணிக்கை 31 சதவீதம் மட்டுமே; போலந்து, ஜேர்மனி மற்றும் பிரான்சில் 25 சதவீதம்; கிரேக்கத்தில் 21 சதவீதம்; மற்றும் இத்தாலியில் 18 சதவீதம்.

லாரி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும், சாலைப் போக்குவரத்துப் பொருட்களின் பாதுகாப்புக்கான தளத்தின் செய்தித் தொடர்பாளர் ஹோஸே பெர்னாண்டஸ், சான்சேஸின் போர்க் காய்ச்சலை விமர்சித்தார்.

அவர் El Plural தினசரிக்கு கூறினார்: 'ஸ்பெயினில் எங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளுக்கு புட்டினை அவர்கள் குற்றம் சாட்ட விரும்புகிறார்கள், ஆனால் அவர் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருக்கிறார். ஸ்பெயினில் திறமையற்ற, பயனற்ற மற்றும் ஊழல் அரசியல்வாதிகள் இருப்பது புட்டினின் தவறு அல்ல. உக்ரேனில் உள்ள தீவிர வலதுசாரி, நேட்டோ ஆதரவுடைய ஆட்சி 'நாஜி' என்றும் கிழக்கு உக்ரேனில் 'ரஷ்ய மொழி பேசியதற்காக ரஷ்யர்களைக் கொல்ல' உத்தரவிடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

பணவீக்கம் மற்றும் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக லாரி ஓட்டுநர்களின் பரந்த சர்வதேச இயக்கம் உருவாகி வருகிறது. இது முதலில் பங்குச் சந்தைகளுக்கு முட்டுக் கொடுப்பதற்காகவும், பெரும் பணக்காரர்களின் செல்வத்தைப் பாதுகாப்பதற்காகவும் வாஷிங்டன், இலண்டன் மற்றும் பிராங்ஃபேர்ட் ஆகிய இடங்களில் பணம் அச்சிடுதல் நடவடிக்கைகளால் தூண்டப்பட்டது, தொற்றுநோய்களின் போது நிதிச் சந்தைகளுக்குள் டிரில்லியன் கணக்கான டாலர்கள், பவுண்டுகள் மற்றும் யூரோக்கள் பாச்சப்பட்டது. பொறுப்பற்ற முறையில் நேட்டோ சக்திகள் ரஷ்யாவுடன் போரைத் தூண்ட அச்சுறுத்தி, உலகச் சந்தைகளில் இருந்து அதன் எண்ணெய், எரிவாயு மற்றும் தானியங்களை வெட்ட அச்சுறுத்துகையில், விலைகளை பெருமளவில் உயர்த்துவதால் பணவீக்கம் இப்போது அதிகரித்து வருகிறது.

இந்த பொறுப்பற்ற கொள்கைகள் வர்க்க மோதலின் சர்வதேச வெடிப்பை உந்துகின்றன, குறிப்பாக பொருட்களை கொண்டு செல்லும் துறையில் எரிபொருள் விலை உயர்வால் அதன் அசாதாரண பாதிப்பு காரணமாக:

  • போர்ச்சுகலில், சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்தை எரிபொருள் விலையைக் குறைக்க நிர்பந்திக்க, ANTRAM லாரி ஓட்டுநர்கள் சங்கம் அதன் 200 நிறுவனங்களின் விநியோகங்களை தடுத்து நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.
  • எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக இத்தாலிய லாரி ஓட்டுநர்களின் நாடு தழுவிய வேலைநிறுத்தம் மற்றும் மார்ச் 19 அன்று எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு திட்டமிடுகின்றனர்.
  • பிரேசிலில், பெட்ரோல் விலையை 18.8 சதவீதமும், டீசலின் விலையில் சுமார் 25 சதவீதமும் உயர்த்துவதற்கான அரசு எண்ணெய் நிறுவனமான Petrobras இன் முடிவை எதிர்த்து லாரி ஓட்டுநர்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
  • பராகுவே மற்றும் சிலியில், லாரிகள் வேலைநிறுத்தங்களைத் தடுக்கும் முயற்சியில் அரசாங்கங்கள் எரிபொருள் மானியத்தை அதிகரிக்க வேண்டியிருந்தது.

உற்பத்தியின் பூகோளமயமாக்கலும், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளின் வளர்ச்சியும் தளவாடத் தொழிலாளர்களை மிகவும் சக்திவாய்ந்த நிலையில் வைக்கிறது மற்றும் புறநிலையாக அவர்களின் சர்வதேச ஐக்கியத்தை வலுப்படுத்துகிறது.

இதற்கு தொழிற்சங்கங்களுடன் நனவான முறிவு தேவைப்படுகிறது. பெருவணிக மற்றும் முதலாளித்துவ அரசாங்கங்களின் தொழில்துறை பொலிஸ் படையாக தங்கள் நிலையைத் தக்கவைத்துக் கொள்ள ஆசைப்படும் இந்த தேசிய அளவில் ஒழுங்கமைக்கப்பட்ட அதிகாரத்துவங்கள், வேலைநிறுத்தங்களைத் தனிமைப்படுத்தவும் நசுக்கவும் உறுதியாக உள்ளன. நேற்று, ஸ்பெயினின் முக்கிய தொழிற்சங்க கூட்டமைப்புகள், காடிஸ் மாகாணத்தில் 3,000 யூரோக்கள் ஊதியம் பெறும் லாரி ஓட்டுநர்களின் சரக்கு போக்குவரத்து வேலைநிறுத்தத்தை கைவிட்டன.

தொற்றுநோய், பணவீக்கம் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்திற்கு, தொழிற்சங்கங்கள் மற்றும் PSOE-Podemos அரசாங்கத்துடனான ஒரு நனவான முறிவும் ஒரு சர்வதேச முன்னோக்கை அடித்தளமாக கொண்ட சாமானியத் தொழிலாளர் குழுக்களது சர்வதேசக் கூட்டணி (IWA—RFC) ஐ உருவாக்குவதும் தேவைப்படுகிறது. இத்தகைய குழுக்கள் மூலம், தொழில்கள் மற்றும் தேசிய எல்லைகளை கடந்து இணைக்கப்பட்டு, தொழிலாளர்கள் தங்கள் ஊதியம் மற்றும் நிபந்தனைகள் மீதான தாக்குதலை தோற்கடிப்பதற்கும் முதலாளித்துவ சக்திகளின் போருக்கான உந்துதலை எதிர்ப்பதற்கும் ஒரு ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை உருவாக்க முடியும்.

Loading