மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
உக்ரேனில் நேட்டோ பொறுப்பற்ற முறையில் போரைத் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இது ஜனாதிபதி பைடெனிடம் இரண்டு கேள்விகளைக் கேட்க வேண்டிய நேரம் ஆகும்: 1) ஜனாதிபதி பதவிக்கான உங்கள் பிரச்சாரத்தில் நீங்கள் ரஷ்யாவுடன் அணு ஆயுதப் போர் ஆபத்தை விளைவிப்பதாகக் கூறினீர்களா? 2) பென்டகன் மற்றும் CIA ஆலோசகர்கள் உங்களுக்கு வழங்கிய உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், ரஷ்யாவுடனான அணுவாயுத பரிமாற்றத்தில் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் எத்தனை நூறு மில்லியன் அல்லது பில்லியன் கணக்கான மக்கள் இறக்க நேரிடும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
ஊடகங்களிலும், முதலாளித்துவ அரசியல்வாதிகளின் விவாதங்களிலும், ஒரு அரசியல்ரீதியான மட்டுமல்ல, உளவியல்ரீதியான எல்லையும் கடந்துவிட்டதாக தெரிகிறது. நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போர், தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு வழிவகுப்பதுடன் மற்றும் அதிலிருந்து, மூலோபாய அணு ஆயுதங்களை பயன்படுத்தும் நிலைக்கு கொண்டு செல்லும் உண்மையான ஆபத்து இப்போது பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இது எப்படியும் தவிர்க்கப்பட வேண்டும் என எச்சரிப்பதற்குப் பதிலாக, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது ஒரு நியாயபூர்வமான விருப்பமாக வெளிப்படையாகவே பார்க்கப்படுகிறது.
அணு ஆயுதங்கள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டன. அதுவும் அமெரிக்காவினால் பயன்படுத்தப்பட்டது. ஆகஸ்ட் 1945 இல், ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணுகுண்டுகளை வீச அனுமதித்தார். அதன் மொத்த உயிர் இழப்பு 200,000 பேர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ட்ரூமன் பின்னர் தனது முடிவினால், ஒரு இரவு தூக்கத்தை கூட அவர் இழக்கவில்லை எனக் கூறினார். ஜப்பானின் சரணடைதலை நிர்ப்பந்திக்க, அணுகுண்டுகளை வீசுவது அவசியம் என்ற நீண்டகால மதிப்பிழந்த கூற்றுடன், இந்த கொடூரமான குற்றம் நியாயப்படுத்தப்பட்டதுடன் மற்றும் இன்று வரை அமெரிக்க அரசாங்கத்தால் நியாயப்படுத்தப்படுகிறது. ஆனால் இந்தக் கூற்று ஒருபுறம் இருக்க, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இரக்கமற்ற தன்மை மற்றும் மிருகத்தனத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்தச் செயலின் முக்கியத்துவத்தை புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் காப்ரியல் ஜாக்சன் பின்வருமாறு விளக்கினார்:
ஆகஸ்ட் 1945 இன் குறிப்பிட்ட சூழ்நிலையில், அணுகுண்டின் பயன்பாடு உளவியல்ரீதியாக மிகவும் சாதாரணமான மற்றும் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை நிர்வாகி, நாஜி சர்வாதிகாரி பயன்படுத்தியதைப் போலவே ஆயுதத்தை பயன்படுத்த முடியும் என்பதைக் காட்டுகிறது. இவ்வகையில், பல்வேறு வகையான அரசாங்கங்கள் தொடர்பான தார்மீக வேறுபாடுகளைக் கருத்தில் எடுக்கும் எவருக்கும் பாசிசத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான வேறுபாட்டை அமெரிக்கா இல்லாமல் செய்தது.
1950 இல் ஜெனரல் டக்ளஸ் மக்ஆர்தர் கொரியப் போரின் போது சீனா மீது அணுகுண்டுகளை வீச வேண்டும் என வாதிட்டார். ஆனால் அதற்குள் சோவியத் ஒன்றியம் தனது சொந்த அணுகுண்டை உருவாக்கியது. ட்ரூமன் அப்போரை ஒரு அணுஆயுத சக்தியுடன் மோதலாக வளர்த்துக்கொள்ளும் அளவுக்குத் தீவிரப்படுத்தும் அபாயத்திற்கு தயாராக இருக்கவில்லை.
வெளியுறவுச் செயலர் ஜோன் ஃபோஸ்டர் டல்லெஸால் மிகவும் இழிவான முறையில் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட வாஷிங்டன் ஆளும்பிரிவுகள், மூலோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அமெரிக்காவின் விருப்பம், வெளியுறவுக் கொள்கையின் ஒரு முக்கிய கூறுபாடு என்று வலியுறுத்தியது.
1950 கள் மற்றும் 1960 களின் முற்பகுதி முழுவதும் அணு ஆயுதப் போரின் பீதியால் உலகம் துரத்தப்பட்டுக்கொண்டிருந்தது. இது எண்ணற்ற நாவல்கள் மற்றும் திரைப்படங்களுக்கான பயங்கரமான பின்னணியை வழங்கியது. உலகையே சூழ்ந்துள்ள கொடிய கதிரியக்க வீழ்ச்சியை உருவாக்கிய ஆஸ்திரேலியாவில் அணு ஆயுதப் போருக்குப் பின்னர், வாழ்க்கையின் கடைசி வாரங்களைப் பற்றிய கதையான நாவலும் பின்னர் திரைப்படமாக வெளிவந்த, நெவில் சூடேவின் (Nevil Shute) On the Beach சர்வதேசரீதியாக மக்கள் கருத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
1962 அக்டோபரில் கியூப ஏவுகணை நெருக்கடியின் போதும் இந்த ஆபத்தின் அளவு மிகத் தெளிவாகத் தெரிந்தது. வாஷிங்டனுக்கும் மாஸ்கோவிற்கும் இடையே இரண்டு வாரங்கள் நடந்த பதட்டமான பேச்சுவார்த்தைகள் பேரழிவைத் தடுத்தன. நெருக்கடிக்குப் பின்னர் வெளியான இரண்டு முக்கியமான படங்களான Fail-Safe மற்றும் Dr. Strangelove இனாலும் பேரழிவு தவிர்க்கப்படவில்லை.
1962 கியூப ஏவுகணை நெருக்கடியின் இந்த காலகட்டத்தில் உலகம் ஒரு அணுசக்தி போருக்கு மிக அருகில் வந்தது. அதைத் தொடர்ந்து 1963 ஆம் ஆண்டில் அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தம் மற்றும் பல ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அமெரிக்கா சோவியத் ஒன்றியத்துடன் 'பதட்ட தவிர்ப்பு' ('détente') என்ற கொள்கையை பின்பற்றியது. பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இக்கோட்பாடான 'பரஸ்பர உறுதியளிக்கப்பட்ட அழிவு', அணுசக்தி யுத்தம் என்பது நினைத்துப் பார்க்க முடியாதது. ஏனெனில் அது சம்பந்தப்பட்ட அனைத்து நாடுகளின் மக்களையும் அழித்தொழிப்பதை உள்ளடக்கியது. இந்தக் கொள்கைக்கான தனித்துவமான பொருத்தமான சுருக்கெழுத்து MAD என்பதாகும்.
சமீபத்திய ஆண்டுகளில், அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் வாஷிங்டனில் உள்ள போர் திட்டமிடுபவர்களிடையே ஒரு விவாதப் பொருளாக வெளிப்பட்டுள்ளன. இந்த விவாதத்தின் மையக் கூறுபாடு, 'மூலோபாய' அணு ஆயுதங்களுக்கு எதிராக 'தந்திரோபாய' ஆயுதங்கள் என்பதாகும். 'தந்திரோபாய' ஆயுதங்கள் 'குறைந்த தாக்கங்களை' விளைவிக்கும் குண்டுகள் எனப்படுகின்றது. அதன் விளைவு புவியியல்ரீதியாக வரையறுக்கப்பட்ட (ஒரு குறிப்பிட்ட போர்க்களம் அல்லது தொழில்துறைக்கு) தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. மற்றும் அதன் பின்விளைவுகள் கட்டுப்படுத்தப்படலாம் எனக் கூறப்பட்டது.
2017 ஆம் ஆண்டில், மூலோபாய மற்றும் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளுக்கான மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அது “பனிப்போரின் போது ஒரு வல்லரசு அணுசக்தி பரிமாற்றத்தை அடுத்து கற்பனை செய்யப்பட்ட உலகளாவிய பேரழிவுக்கு மாறாக, போருக்குப் பின்னர் இயங்கக்கூடிய உலகம் ஒன்று இருப்பது மிகவும் சாத்தியம்” என்று குறிப்பிட்டது. அமைப்பின் ஒரு தனி அறிக்கை 'அர்மகெடோனை மீண்டும் சிந்தித்தில்' என்ற தலைப்பில் இருந்தது. (Armageddon - இறுதி அழிவு)
இந்த வாரம், நியூ யோர்க் டைம்ஸ் பின்வருமாறு எழுதியது, “இன்று, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளினதும் அணு ஆயுதங்கள் மிகக் குறைவான அழிவுத் திறன் கொண்டவை. அவற்றின் சக்தி, ஹிரோஷிமா வெடிகுண்டின் சக்தியை விட ஒரு பகுதியே. அவற்றினை பயன்படுத்துவது ஒருவேளை குறைந்த பயமுள்ளதும் மற்றும் சிந்திக்கக்கூடியதும்.”
இந்த ஆபத்தான அனுமானம் வெளியுறவுக் கொள்கை ஸ்தாபகம் மற்றும் இராணுவத்திற்குள்ளும் கூட சவால் செய்யப்பட்டுள்ளது. 2019 இல் வெளியிடப்பட்ட தந்திரோபாய அணு ஆயுதங்கள் பற்றிய கட்டுரையில், Bulletin of Atomic Scientists பின்வருமாறு எச்சரித்தது:
இந்த மூலோபாய மற்றும் மூலோபாயமற்ற அணு ஆயுதம் அல்லது பயன்பாடு ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு இயல்பாகவே தெளிவற்றதாக உள்ளது. மேலும் மூலோபாய அணு ஆயுதங்களை ஒரு தந்திரோபாய முறையில் பயன்படுத்தினாலும் மற்றும் அணு ஆயுதத்தின் எந்தப் பயன்பாடும், அதன் அளவு எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதன் தாக்கத்தின் பரப்பளவு சிறிதாக இருந்தாலும், அது நீண்டகால மூலோபாய விளைவுகளை ஏற்படுத்தும். இந்த உணர்வை முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஜேம்ஸ் மாட்டிஸ் 2018 பிப்ரவரியில் எதிரொலித்தார், அவர் காங்கிரஸின் ஆயுத சேவைக் குழுவின் முன் சாட்சியமளித்தபோது, “தந்திரோபாய அணு ஆயுதம் என்று எதுவும் இல்லை என்று அவர் நம்பவில்லை. எந்த நேரத்திலும் பயன்படுத்தப்படும் எந்த அணு ஆயுதமும் ஒரு மூலோபாய திருப்புமுனையாக இருக்கும்”.
எவ்வாறாயினும், ரஷ்யாவுடனான நேட்டோவால் தூண்டப்பட்ட போர் வெடிப்பு, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் மேலும் இல்லாதொழிக்கப்பட்டதைக் கண்டுள்ளது.
கடந்த வாரத்தில், அமெரிக்க மற்றும் நேட்டோ சக்திகள் பல கூட்டங்களை நடத்தியது. அது போர் ஆலோசனைக் குழுக்கள் ஆகும். மேலும் பல்லாயிரக்கணக்கான துருப்புக்களை நிலைநிறுத்துவது, உட்பட நேட்டோவின் 'கிழக்கு பிராந்தியத்தில்' ஒரு பரந்த இராணுவமயமாக்கலை ஒழுங்கமைத்துள்ளது. நேட்டோ 'அமைதிகாக்கும் படையை' உக்ரேனுக்குள் அனுப்ப போலந்தில் இருந்து ஒரு திட்டத்தையும் அவர்கள் விவாதித்தனர், இதனை புட்டினின் கூட்டாளியான பெலாருஷ்ய ஜனாதிபதி அலெக்சாண்டர் லுக்காஷென்கோ வெள்ளிக்கிழமை 'மூன்றாம் உலகப் போரைக் குறிக்கும்' என்று கூறினார்.
போரின் தர்க்கம் வெளிவருகையில், இரண்டு மிக அதிக ஆயுதம் ஏந்திய அணுசக்தி நாடுகளுக்கு இடையே ஒரு நேரடி மோதலின் சாத்தியத்தை முடிந்தவரை விரைவாக ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. போர்நிறுத்தத்தை ஒழுங்கமைப்பதற்கும், அவசரகால விவாதங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கும் எந்தவிதமான முன்மொழிவுகளும் அங்கு இல்லை.
நேட்டோ தலைவர்கள் மற்றும் குறிப்பாக பைடெனின் அறிக்கைகள் வேண்டுமென்றே ஆத்திரமூட்டும் மற்றும் தீ மூட்டும் வகையில் உள்ளன. புட்டினை ஒரு 'குண்டர்' மற்றும் 'போர் குற்றவாளி' என்று கண்டனம் செய்வது, புட்டினால் தனிப்பட்ட அச்சுறுத்தலாக மட்டுமே புரிந்து கொள்ள முடியும். பைடென் நிர்வாகத்தின் கொள்கையில் ஒரு விசித்திரமான முரண்பாடு உள்ளது. ஒருபுறம், அவர்கள் புட்டினை அடுத்த ஹிட்லர் என்று அறிவிக்கிறார்கள். மறுபுறம் அவர் இன்னும் தீவிரமான நடவடிக்கைகளை நாடாமல் 'பகுத்தறிவான' முறையில் நடந்துகொள்வார் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
அமெரிக்கா மற்றும் பிற முக்கிய நேட்டோ சக்தி அரசாங்கங்களால் உலகம் அணுஆயுதப் பேரழிவின் விளிம்பிற்குக் கொண்டு செல்லப்படுகிறது. அதன் தலைவர்கள் இதன் பின்னணியில் உள்ள தமது உண்மையான புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நலன்களை மறைத்து இரகசியமாக முடிவுகளை எடுக்கின்றனர். ரஷ்ய முதலாளித்துவ அரசாங்கம், உக்ரேனில் அதன் அவநம்பிக்கையான மற்றும் பிற்போக்குத்தனமான படையெடுப்பை ஆரம்பித்து, ஆத்திரமூட்டும் அணுசக்தி போர்முரசு கொட்டுவதில் ஈடுபட்டுள்ளது.
போரைத் தீவிரப்படுத்துவதற்கான பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கும் நியூ யோர்க் டைம்ஸ் வியாழன் அன்று ஒரு Associated Press கருத்துக்கணிப்பை ஊக்குவித்தது. ரஷ்ய படையெடுப்பிற்கு பைடெனின் பதில் 'போதுமானதாக இல்லை' என 56 சதவீத மக்கள் கருதுகின்றனர் என அது தெரிவித்தது. தமக்கு விரும்பிய பதில் கிடைப்பதை உருவாக்க, கருத்துக் கணிப்பாளரால் அவ்வாறான கேள்வி எழுப்பப்பட்டது. 'நேட்டோவில் இணைவதற்கான உக்ரேனின் உரிமை, அணுசக்தி அழிவு மற்றும் இந்த கிரகத்தில் உயிர்கள் அழிந்து போவதற்கு தகுதியானது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?' என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தால் மிகவும் வித்தியாசமான பதில் கொடுக்கப்பட்டிருக்கும்.
அதிர்ச்சியூட்டும் பொறுப்பற்ற தன்மை, ஆளும் வர்க்கம் அணுஆயுதப் போரை ஆபத்தில் ஆழ்த்தும் அலட்சியமான வழி, தொற்றுநோயால் உருவாக்கப்பட்ட சூழலுடன் தொடர்புபட்டு மட்டுமே புரிந்து கொள்ள முடியும். மனித குலத்தின் தலைவிதியை அடிப்படையாகக் கொண்டு முடிவெடுக்கும் அனைத்து அரசாங்கங்களும் கடந்த இரண்டு ஆண்டுகளில் மனித வாழ்வின் மீதான அவர்களின் மொத்த அலட்சியத்தை வெளிப்படுத்தியுள்ளன.
பிரித்தானிய பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சனின் அறிக்கையான 'இனி பூட்டுதல்கள் இல்லை, உடல்கள் ஆயிரக்கணக்கில் குவியட்டும்' என்பது ரஷ்யா உட்பட அனைத்து முக்கிய முதலாளித்துவ நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையின் மிகவும் மோசமான வடிவத்தினை மட்டுமே வெளிப்படுத்தியது. இதன் விளைவு 20 மில்லியன் மக்களின் தேவையற்ற மரணமாகும். தன்னலக்குழுவின் நலன்களை பாதுகாப்பதற்கு 20 மில்லியன் இறப்புகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய இழப்பாக இருந்தால், ஏன் ஒரு போரில் 200 மில்லியன் பேரை இழக்கக்கூடாது? என்பதே அவர்களின் கருத்தாக உள்ளது.
இந்த மிகவும் பொறுப்பற்ற தன்மை, அதன் பூகோள மூலோபாய நலன்களைப் பின்தொடர்வதில் ஏகாதிபத்தியத்தின் இரக்கமற்ற தன்மைக்கு மட்டுமல்ல, தீர்க்க முடியாத உள்நாட்டு நெருக்கடிகளை எதிர்கொள்வதில் ஆளும் உயரடுக்கின் நெருக்கடிக்கும் மற்றும் அவநம்பிக்கைக்கும் சாட்சியமளிக்கிறது.
அமெரிக்க ஆளும் வர்க்கம் ஒவ்வொரு பிரச்சனையிலிருந்தும் வெளிவர அதன் வழியை கண்டுபிடித்துக்கொள்ள முடியும் என நம்புகிறது. 1990கள் மற்றும் 2000களில், இது துல்லியமான வழிகாட்டப்பட்ட வெடிமருந்துகளின் மீதான வழிபாடாக இருந்தது. இது மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவை அமெரிக்கா கைப்பற்றுவதை உறுதி செய்யும் எனக்கருதப்பட்டது. இந்தப் போர்கள் ஒவ்வொன்றும் பேரழிவில் முடிவடைந்த நிலையில், தந்திரோபாய அணு ஆயுதங்களை நோக்கிய திருப்பம் ஏற்படுகிறது. மனிதகுலத்தை ஒரு முட்டுச்சந்தில் தள்ளுவதே ஆளும் வர்க்கத்தின் தர்க்கமாக உள்ளது.
தற்போதைய நெருக்கடியின் உடனடி விளைவு எதுவாக இருந்தாலும், ஒரு முடிவு தெளிவாக உள்ளது: அரசியல் மற்றும் சமூக கட்டுப்பாடு முதலாளித்துவ தன்னலக்குழுவின் கைகளில் இருந்து எடுக்கப்பட வேண்டும். மேலும் சமூகத்தின் எதிர்கால வளர்ச்சி சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் கைகளில் ஒப்படைக்கப்பட வேண்டும்.