மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஞாயிற்றுக்கிழமை, பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் உக்ரேன் போர் குறித்தும், அடுத்த மாதம் மீண்டும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஓய்வூதியங்கள், பல்கலைக்கழக செலவின ஒதுக்கீடுகள் மற்றும் வேலையின்மை காப்பீடு ஆகியவற்றில் வெட்டுக்கள் கொண்டு வருவது பற்றிய அவரது திட்டங்களைக் குறித்தும் கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை 'கொலைக்காரர்' (butcher) என்று கண்டனம் செய்த அடுத்த நாள் மக்ரோன் பேசி இருந்தார். புட்டின் அதிகாரத்தில் நீடிக்க முடியாது என்றும், 'தசாப்த கால' போருக்கு அமெரிக்கா தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்திய பைடென், ரஷ்யாவில் ஆட்சி மாற்றம் செய்வதற்காக நேட்டோ இந்த போரை நடத்தி வருவதைத் தெளிவுபடுத்தினார்.
இது தெளிவாக பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தை பதட்டமடையச் செய்துள்ளது, France3 ஊடகத்தின் ஊடகவியலாளர் பிரான்சிஸ் லுட்டெல்லியர் மக்ரோனிடம் வினவினார், 'இவை நிலைமையை விஷமாக்கக்கூடிய கருத்துக்கள் என்று நினைக்கிறீர்களா?'
'மொத்தத்தில் நாம் முதலில் உள்ளதை உள்ளவாறு பேச வேண்டும் என்று நினைக்கிறேன், பின்னர், நிலைமை கட்டுப்பாட்டை மீறாமல் இருக்க நம் சக்திக்குட்பட்ட அனைத்தையும் செய்ய வேண்டும். நான் ஜனாதிபதி புட்டினுடன் தொடர்ந்து விவாதித்து வருவதால், நான் அத்தகைய மொழியைப் பயன்படுத்த மாட்டேன். கூட்டாக நாம் என்ன சாதிக்க விரும்புகிறோம்? போர் நடத்தாமலேயே, தீவிரப்படுத்தாமலேயே உக்ரைனில் ரஷ்யா தொடங்கியுள்ள போரை நிறுத்த விரும்புகிறோம்” என்று கூறி, மக்ரோன் பைடெனின் கருத்துக்களில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டார்.
பைடெனின் கருத்துக்கள் பிரெஞ்சுக் கொள்கையைக் குறுக்காக வெட்டுகின்றன என்பதை மக்ரோன் தெளிவுபடுத்தினார். அவர் 'போர்நிறுத்தமும் ரஷ்ய துருப்புக்களை மொத்தமாக திரும்பப் பெறுவதுமே' பிரான்சின் இலக்குகள் என வரையறுத்த அவர், “நாம் அதை விரும்பினால், வார்த்தைகளிலோ அல்லது செயலிலோ நம்மிடம் தீவிரப்பாடு இருக்க முடியாது,” என்றார்.
அமெரிக்காவை விட ஐரோப்பிய சக்திகளுக்கு ரஷ்யாவில் அதிக பங்கு உள்ளது என்றும், ரஷ்யா சம்பந்தமான அமெரிக்க கொள்கையை ஐரோப்பிய சக்திகள் அவற்றின் சொந்த கொள்கைகளாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் மக்ரோன் வாதிட்டார். 'நேட்டோவின் பின்புலத்தில் ஐக்கிய அமெரிக்கா அரசுகள் எங்கள் நட்பு நாடுகளாகும், நாங்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறோம், அது ஒரு நல்ல விஷயம் தான்' என்று கூறிய மக்ரோன் தொடர்ந்து கூறுகையில், 'நாங்கள் பல்வேறு பொதுவான மதிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால் ரஷ்யாவுக்கு அருகில் வசிப்பவர்கள் ஐரோப்பியர்கள் தான். இதனால் தான், ஐரோப்பியர்களாகிய நாம் ஒரு பாதுகாப்புக் கொள்கையைக் கொண்டிருக்க வேண்டும் என்றும், இந்தப் பாதுகாப்புக் கட்டமைப்பை வரையறுத்துக் கொள்ள வேண்டும் என்றும், அதைப் பிரதிநிதித்துவம் செய்யக் கூடாது என்றும் நான் ஐந்தாண்டுகளாக கூறி வருவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள்,” என்றார்.
ஐரோப்பிய சக்திகள் ரஷ்யாவை நோக்கி பைடெனை விட வேறுபட்ட கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று விளக்கி அவர் பேச்சை நிறைவு செய்தார். 'நாங்கள், ஐரோப்பியர்கள், எந்த விதமான தீவிரப்படுத்தல் வடிவத்திற்கும் இடம் கொடுக்க முடியாது,' என்றவர் கூறினார். 'நாம், ஐரோப்பியர்கள், நமது புவியியல் அல்லது நமது வரலாற்றை மறந்துவிடக் கூடாது. நாம் ரஷ்ய மக்களுடன் போரில் இல்லை,” என்றார்.
பெப்ரவரி 24 இல் ரஷ்யா உக்ரேனை மீது படையெடுத்ததில் இருந்து ஒரு மாதமாக, நேட்டோ சக்திகள் பொறுப்பின்றி ரஷ்யாவுடன் ஒரு மோதலை அதிகரித்து வருகின்றன, இது அணுஆயுதமேந்திய சக்திகளுக்கு இடையே போரைத் தூண்ட அச்சுறுத்துகிறது. ரஷ்ய படையெடுப்புக்கு முன்னர், நேட்டோ ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேனுக்குப் பாரியளவில் ஆயுத உதவிகள் செய்திருந்தது. இப்போது, பிரான்ஸ் உட்பட அனைத்து முக்கிய நேட்டோ சக்திகளும் ரஷ்யா மற்றும் உக்ரைன் எல்லைகளுக்கு துருப்புக்களை அனுப்பி வருவதுடன், உலகச் சந்தைகளை ரஷ்ய வங்கிகள் அணுக முடியாதவாறு செய்ய செயல்பட்டு வருகின்றன. பைடெனின் கருத்துக்கள் ரஷ்யாவை நோக்கிய நேட்டோ கொள்கையின் ஆக்ரோஷமான, இராணுவரீதியான தன்மையை தெளிவாக்கி உள்ளன.
ஆனால் ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப் பின்னர் அல்லது போருக்குப் பின்னர், நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான மோதல்களும் மேற்புறத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. உண்மையில் சொல்லப் போனால், பைடெனின் முன்னோடியான டொனால்ட் ட்ரம்ப் இருந்த போது—இவர் நேட்டோவை நிராகரித்ததுடன், ஐரோப்பாவில் அணு ஆயுதப் போர் குறித்து எச்சரித்தார், மற்றும் அமெரிக்காவுக்கான ஐரோப்பிய ஏற்றுமதிகள் மீது பெருமளவில் வரிகளை விதித்தார்—மக்ரோன் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க கொள்கையைக் கடுமையாக விமர்சித்தார்.
'நாங்கள் என்ன அனுபவிக்கிறோமோ அதன்படி என்னைப் பொறுத்த வரையில் நேட்டோ மூளைசாவு அடைந்து விட்டது,' என்று மக்ரோன் பிரிட்டிஷ் பத்திரிகையான Economist க்கு 2019 இல் பேட்டி அளித்தார், 'அமெரிக்கா ரஷ்யாவை நோக்கி மிகவும் கடுமையாக இருப்பது நிர்வாக, அரசியல் மற்றும் வரலாற்று வெறியின் ஒரு வடிவமாகும். … ஐரோப்பாவில் நாம் அமைதியை ஏற்படுத்த விரும்பினால், ஐரோப்பிய மூலோபாய சுயாட்சியை மறுக்கட்டமைப்பு செய்து, ரஷ்யாவை நோக்கிய நம் நிலைப்பாட்டை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.
சற்றே குறைவான ஆக்ரோஷ வெளிச்சத்தில் அதனை முன்நகர்த்துவதற்கான முயற்சிகள் இருந்தாலும், பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் கொள்கையானது அடிப்படையில் வாஷிங்டனின் கொள்கையிலிருந்து வேறுபட்டதல்ல. மக்ரோன் அரசாங்கம் உட்பட எல்லா முதலாளித்துவ அரசாங்கங்களில் இருந்து சுயாதீனமாகவும் அவற்றுக்கு எதிராகவும், போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவது தான் இந்த வேகப்படுத்தப்பட்டு வரும் போர் முனைவை நிறுத்துவதற்கான ஒரே வழியாகும்.
உண்மையில், பைடென் பதவியேற்று உக்ரேனை ஆக்கிரமிக்க ரஷ்யாவைத் தூண்டிய பின்னர், மக்ரோன் 180 பாகை தலைகீழாக திரும்பினார். உண்மையில் இந்தக் கொள்கை தான் தொடர்கிறது: ஞாயிற்றுக்கிழமை, பைடெனின் கருத்துக்களை அவர் விமர்சித்த போதும், மக்ரோன் ருமேனியாவுக்கு 800 பிரெஞ்சு துருப்புக்களை விரைவாக அனுப்புவதாக அறிவித்தார்.
பாரிஸ், பேர்லின் அல்லது பிற ஐரோப்பிய ஒன்றிய (EU) சக்திகள் பெரியளவில் ஐரோப்பிய ஒன்றிய இராணுவ தன்னாட்சிக்கு அழைப்பு விடுப்பது ஓர் அமைதிக்கான கொள்கை அல்ல என்பதை இது தெளிவுபடுத்துகிறது. மாறாக, இந்த அழைப்புகள் வாஷிங்டனின் கொள்கைகளிலிருந்து வேறுபட்ட அல்லது அதற்கு முரண்படக்கூடிய இராணுவக் கொள்கைகளுக்கு ஐரோப்பிய சக்திகளை தயாரிப்பு செய்யவும் மற்றும் ஆயுதமேந்த செய்யவும் நோக்கம் கொண்டுள்ளன.
மக்ரோனின் கருத்துக்களில் வெளிப்படையாக இருந்த நோக்கம் என்னவென்றால், பிரான்சும் மற்ற நேட்டோ சக்திகளும் ரஷ்ய அரசாங்கத்தை உடனடியாக கவிழ்க்க முற்படவில்லை என புட்டினுக்கு மறுஉத்தரவாதம் அளிப்பதாகும். வெள்ளிக்கிழமை ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்குப் பின்னர், சுற்றி வளைக்கப்பட்ட உக்ரேனிய நகரமான மரியுபோலுக்கு ஒரு சாத்தியமான பிராங்கோ-கிரேக்க-துருக்கிய மனிதாபிமான திட்டத்தையும் மக்ரோன் அறிவித்தார், இது ஒரு போர்நிறுத்தத்தை ஏற்பாடு செய்வதற்கான முயற்சிகளுடன் தொடர்புடையதாகத் தெரிகிறது.
நேட்டோவிடமிருந்து பெருகி வரும் அச்சுறுத்தல்களை முகங்கொடுத்துள்ள ரஷ்ய அதிகாரிகள், ரஷ்யா ஓர் உயிர்வாழ்வு அச்சுறுத்தலை முகங்கொடுப்பதாக அவர்கள் நினைப்பதைத் தெளிவுபடுத்தி வருகின்றனர், இதன் விளைவாக அவர்கள் தங்கள் இராணுவக் கொள்கையை மீண்டும் ஒருமுகப்படுத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் கூறுகையில், “இன்று ஒரு நிஜமான பன்முகப் போர், முழுமையான ஒரு போர் எங்கள் மீது அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிட்லரின் ஜேர்மனியால் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தை [முழுமையான போர்], இப்போது பல ஐரோப்பிய அரசியல்வாதிகள் அவர்கள் ரஷ்ய கூட்டமைப்புடன் என்ன செய்ய விரும்புகிறார்களோ அதைக் குறித்து பேசும் போது அவர்களால் கூறப்படுகிறது. இலக்குகள் மறைக்கப்படவில்லை, ரஷ்ய பொருளாதாரத்தையும் மற்றும் ஒட்டுமொத்தமாக ரஷ்யாவையே, அழிக்கவும், உடைக்கவும், நிர்மூலமாக்கவும், குரல்வளையை நெரிக்கவும் அவர்கள் பகிரங்கமாக அறிவிக்கிறார்கள்.”
மார்ச் 25 இல், ரஷ்ய தலைமை தளபதி இந்த படையெடுப்பு குறித்து அதன் முதல் பொது விபரங்களை வழங்கி, கிழக்கு உக்ரைனில் டொன்பாஸின் பாதுகாப்பையும் மற்றும் மரியுபோல் வழியாக கிரிமியாவுடன் அதன் இணைப்புகளையும் வலியுறுத்தினார்.
கர்னல் ஜெனரல் செர்ஜி ருட்ஸ்காய் கூறுகையில், 'எங்கள் இராணுவத்தினருக்கு இழப்புகளைக் குறைக்கும் விதத்திலும், பொது மக்களுக்குச் சேதங்களைக் குறைக்கும் விதமாகவும் வேலைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன,” என்றார். உக்ரேனின் கரங்களில் இருந்த அல்லது நேட்டோ வழங்கி இருந்த 1,587 டாங்கிகள், 636 சிறுபீரங்கிகள், 112 போர் விமானங்கள், துருக்கியில் தயாரிக்கப்பட்ட 35 பைரக்தார் ட்ரோன்கள், 148 விமான தகர்ப்பு ஏவுகணை அமைப்புகள் மற்றும் 117 ரேடார் தளங்களை ரஷ்யப் படைகள் அழித்துள்ளன. 1,351 ரஷ்ய துருப்புகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், சண்டையில் 3,825 பேர் காயமடைந்திருப்பதாகவும் ருட்ஸ்காய் தெரிவித்தார்.
'எங்கள் படைகளும் எங்கள் தளவாடங்களும் ஒருங்குவிந்துள்ள முக்கிய புள்ளி: டொன்பாஸை முழுமையாக விடுதலை செய்வதாகும்,' என்று ருட்ஸ்காய் அறிவித்தார். கியேவ் மற்றும் கார்கொவில் உள்ள உக்ரேனிய ஆயுதப்படைகள் டொன்பாஸின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளுக்கு எதிராக நகர்வதில் இருந்து அதைத் தடுக்கவும் மற்றும் ரஷ்ய வசமுள்ள கிரிமியாவுடன் அதை இணைப்பதன் மூலம் டொன்பாஸ் மீதான கட்டுப்பாட்டைப் பலப்படுத்தவும் ரஷ்ய இராணுவம் உக்ரேனிய இராணுவத்தைச் செயலிழக்க வைக்க நோக்கம் கொண்டுள்ளதாக அந்த தளபதி கூறினார். அவ்விரு பகுதிகளையும் இணைக்க முக்கியமாக தேவைப்படும் மரியுபோல் நகருக்காக இன்னமும் சண்டை நடத்தப்பட்டு வருகிறது, அதேவேளையில் மரியுபோல் நகரில் பாதுகாப்புக்காக சண்டையிட்டு வரும் உக்ரேனியர்களை ரஷ்ய துருப்புகள் சுற்றி வளைத்துள்ளன.
போர்நிறுத்தம் மற்றும் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஐரோப்பிய ஒன்றியக் கொள்கையையும் மார்ச் 25 இல் மக்ரோன் அறிவித்தார், 'துருக்கி மற்றும் கிரீஸுடன் சேர்ந்து, மரியுபோலில் இருந்து வெளியேற விரும்பும் அனைவரையும் வெளியேற்ற நாங்கள் ஒரு மனிதாபிமான நடவடிக்கையை தொடங்குவோம். நாங்கள் சாத்தியமான சிறந்த நிலைமைகளில் விஷயங்களை ஒழுங்கமைப்போம்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார். “400,000 க்கும் அதிகமானவர்கள் வசிக்கும் ஒரு நகரில் இன்று,” “பயங்கரமான நிலைமைகளில்' “150,000 க்கும் சற்று குறைவானவர்களே வாழ்கிறார்கள்,” என்று கூறிய அவர் மரியுபோல் நகர அதிகாரிகளுடன் அவர் பணியாளர்கள் விவாதித்து வருவதாக தெரிவித்தார்.
இந்த தேவையின்றி வரையறுக்கப்பட்ட மரியுபோல் செயல்திட்டம் உண்மையில் விவாதத்தில் இருப்பதை கிரேக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
கடந்த வாரம் நேட்டோ உச்சிமாநாட்டிலிருந்து திரும்பிய துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், புட்டினுடனான பேச்சுவார்த்தைகள் இஸ்தான்புல்லில் தொடங்கவுள்ள நிலையில், அப்பிராந்தியத்தில் பரந்த இராஜாங்க அணுகுமுறைகளையும் அவர் திட்டமிட்டு வருவதைத் தெளிவுபடுத்தினார்.
சர்வதேச உறவுகளில் பரந்த மாற்றங்களை எர்டோகன் எதிர்நோக்கினார். 'துருக்கி-கிரீஸ் உறவுகளில் உள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு நாங்கள் என்ன நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்பதைப் பற்றி விவாதிக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு இருந்தது,' என்று கூறிய அவர், 'துருக்கி-இஸ்ரேல் உறவுகளில் ஒரு புதிய நிகழ்வுபோக்கை நாங்கள் தொடங்க முடியும். இங்கே, நிச்சயமாக, கிழக்கு மத்தியதரைக் கடல் சம்பந்தமாக நாங்கள் ஒன்றாக என்ன செய்ய முடியும் என்பதில் நிறைய சிக்கல் உள்ளது. இருதரப்பு உறவுகளில் நாங்கள் ஒன்றாக எடுக்கக்கூடிய மிக முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றாக, இயற்கை எரிவாயு பிரச்சினை மீண்டும் இங்கே முன்னுக்கு வரலாம் என்று நினைக்கிறேன்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
ரஷ்யாவின் இயற்கை எரிவாயு அல்லது அணுமின் நிலையங்கள் வாங்குவதை துருக்கி நிறுத்தாது என்பதில் அவர் மக்ரோனின் ஆமோதிப்பை விவாதித்து பெற்றுவிட்டதாகவும் எர்டோகன் தெரிவித்தார்.
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரேனை ஆயுதமேந்த செய்வதற்கான நேட்டோவின் முடிவு உக்ரேனிய ஜனநாயகத்தின் தன்னலமற்ற மனிதாபிமான பாதுகாப்பைக் கருத்தில் கொண்டிருப்பதாக கூறப்படும் வாதத்தை இத்தகைய கருத்துகள் இன்னும் அதிகமாகவே கீழறுக்கின்றன. இது தெளிவாக பரந்த புவிசார் அரசியல் மோதல்கள் மற்றும் மூலோபாய எரிசக்தி வளங்கள் மீது கட்டுப்பாட்டைப் பெறுவதுடன் பிணைந்துள்ளது. இந்த பின்னணியில், போர்நிறுத்தக் கொள்கைக்கு ஆதரவான செயல்திட்டங்களை ஒழுங்கமைப்பதற்கான மக்ரோனின் தற்காலிக முயற்சிகள் ஒரு வெளிப்படையான பலவீனத்தைக் கொண்டுள்ளன: அதுவாவது, அவை இராணுவத் தீவிரப்படுத்தல் கொள்கையைத் தொடர்ந்து கொண்டிருக்கும் உலகின் மேலாதிக்க இராணுவ சக்தியான வாஷிங்டனால் எதிர்க்கப்படுகின்றன.
மேலும் படிக்க
- பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல்களில் மக்ரோன் இராணுவவாத, வர்க்கப் போர் தேர்தல் திட்டத்தை முன்வைக்கிறார்
- வேர்சாயில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு ரஷ்யாவிற்கு எதிராக உக்ரேனுக்கு அதிக ஆயுதங்களை வழங்க உறுதியளிக்கிறது
- பிரெஞ்சு புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போர் உந்துதலை ஆதரிக்கிறது