மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
26 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் சீனாவின் அதிக மக்கள்தொகை கொண்ட பெருநகரப் பகுதியான ஷாங்காயின் கிழக்குப் பகுதியில் விதிக்கப்பட்டுள்ள கோவிட்-19 பூட்டுதல்களின் மூன்றாவது நாளை புதன்கிழமை குறித்தது. வெள்ளிக்கிழமை, ஷாங்காயைப் பிரிக்கும் ஹுவாங்பு நதிக்கு மேற்கில் வசிப்பவர்கள் அனைவருக்கும் நான்கு நாள் பூட்டுதல் தொடங்கும், அதே நேரத்தில் நதியின் கிழக்கே உள்ளவர்கள் பெரும்பாலும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள். மேலும், நகரின் இரு பகுதிகளிலும் தொடர்ந்து நோய்தொற்றுக்கள் அதிகமாக இருக்கும் சில சுற்றுப்புறங்கள் மேலும் நீட்டிக்கப்பட்ட பூட்டுதல்களின் கீழ் இருக்கும்.
ஷாங்காயின் இரண்டு பகுதிகளிலும் நான்கு நாள் பூட்டுதல்களின் போது, ஒவ்வொரு குடியிருப்பாளருக்கும் இரண்டு நியூக்ளிக் அமில சோதனைகள் செய்யப்படுகின்றன, மேலும் வீட்டிலேயே விரைவான ஆன்டிஜென் சோதனைகளும் செய்யப்படுகின்றன. திங்கட்கிழமை முதல், கிழக்கு ஷாங்காயில் 9.1 மில்லியன் குடியிருப்பாளர்களுக்கு நியூக்ளிக் அமில சோதனைகள் செய்யப்பட்டுள்ளன, மேலும் இரண்டாவது சுற்று பாரிய சோதனையும் புதன்கிழமை தொடங்கியது.
மொத்தத்தில், பரந்த பெருநகரம் முழுவதும் சுமார் 6,300 தற்காலிக கோவிட்-19 பரிசோதனைத் தளங்கள் கொண்ட வலையமைப்பு உருவாக்கப்பட்டு, அதற்கு சுமார் 17,000 மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவிட் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்ட அனைவருக்கும் மருத்துவ பராமரிப்பு வழங்கப்படுகிறது, மற்றும் வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க அவர்கள் மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பாக தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
புதன்கிழமை, ஷாங்காய் அதிகாரிகள் முதல் சுற்று பாரிய பரிசோதனையின் முடிவுகளை அறிவித்தனர். மொத்தம் 5,982 கோவிட்-19 நோய்தொற்றுக்கள் கண்டறியப்பட்டன, அவற்றில் 5,656 அறிகுறிகள் இல்லாமல் இருந்தன, அதே நேரத்தில் சீனா முழுவதும் 8,655 புதிய நோய்தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. ஷாங்காய்க்கு வெளியே, நோய்தொற்றுக்கள் ஒப்பீட்டளவில் குறைவாகவும், நிலையானதாகவும் உள்ளன, இருப்பினும் தற்போதைய வெடிப்பின் புவியியல் நோக்கம் பரவலாக இருப்பதால், 30 க்கும் மேற்பட்ட நகரங்களில் நோய்தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
அதிக தொற்றும் தன்மையுள்ள மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை தவிர்க்கும் திறனுள்ள ஓமிக்ரோனின் BA.2 துணைமாறுபாடானது, நாட்டிலிருந்து மீண்டும் மீண்டும் கோவிட்-19 ஐ ஒழிப்பதற்கு உதவிய சீனாவின் ‘தீவிர பூஜ்ஜிய’ கோவிட் மூலோபாயத்திற்கு இதுவரை மிகப்பெரிய சவாலாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஒழிப்பு மூலோபாயத்தை பேணுவதா வேண்டாமா என்பதில் சீன ஆளும் வர்க்கத்தில் பிளவுகள் அதிகரித்து வருகின்றன, மேலும், முதலாளித்துவ மற்றும் வசதியான நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகள், பரந்த அடிப்படையிலான பூட்டுதல்களை மட்டுப்படுத்தும் ‘தணிப்பு’ அணுகுமுறையை கடைப்பிடிக்க சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) ஆட்சிக்கு அழுத்தம் கொடுக்கின்றன. உலக முதலாளித்துவத்தின் தொழில்துறை மற்றும் நிதி மையங்களான ஷாங்காய் மற்றும் ஷென்சென் இரண்டும், மற்ற நகரங்களில் செயற்படுத்தப்பட்டதை விட அதிகமாக தற்காலிக மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட பூட்டுதல்களை விதித்து இப்போது பரிசோதித்துள்ளன.
மார்ச் 21 முதல் நகரம் முழுவதும் விதிக்கப்பட்ட ஒரு வார கால பூட்டுதலில் இருந்து வெளிவந்துள்ள ஷென்சென் இன் வழிநடத்துதலில், ஷாங்காய் அதிகாரிகள் இந்த வார பூட்டுதல்களின் போது சில தொழிற்சாலைகளை இயங்குவதற்கு அனுமதித்துள்ளனர், மேலும் அவர்கள் தொழிலாளர்களை பணியிடத்தில் தங்க வைத்து, அவர்களுக்கு வழமையான கோவிட்-19 பரிசோதனைகளை தொடர்ந்து மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.
ஷாங்காய் உலகின் மிகப்பெரிய துறைமுகத்திற்கு சொந்தமானது என்பதுடன், நீண்ட காலமாக சீனாவின் நிதிய மையமாகவும், உலகளாவிய நிதிய மூலதனத்திற்கான ஒரு இணைப்பாகவும் உள்ளது. பூட்டுதல்கள் இரண்டாக பிரிக்கப்பட்டும் தற்காலிகமாகவும் விதிக்கப்பட்டுள்ளது, மேலும் முக்கிய பணியிடங்களில் மட்டும் உற்பத்தி பராமரிக்கப்பட்டு வருகிறது என்றாலும், மேற்கத்திய ஊடகங்களிலும் மற்றும் நிதி வட்டாரங்களிலும் சீனாவின் பூஜ்ஜிய-கோவிட் கொள்கைக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.
மார்ச் முழுவதும், பெருநிறுவன ஊடகங்கள் தமது முழு கவனத்தையும் உக்ரேன் போர் மீது செலுத்தின, அதேவேளை சீனாவின் கோவிட்-19 கொள்கைகளை விமர்சிப்பதை ஒப்பீட்டளவில் கட்டுப்படுத்தியிருந்தன. இருப்பினும், பூட்டுதல்களினால் பொருளாதார விளைவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வரவிருக்கும் நாட்கள் மற்றும் வாரங்களில் தீவிரமடையும் ஒரு மாற்றம் இப்போது நடந்து வருகிறது.
முன்னணி சர்வதேச வணிக செய்தியிதழான பைனான்சியல் டைம்ஸின் (FT) ஆசிரியர் குழுவின் அறிக்கைதான் இன்னும் அதிக குரல் கொடுக்கிறது, அது “சீனாவின் பூஜ்ஜிய-கோவிட் இலக்கு இனி நிலையானது அல்ல” என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஒரு காலத்தில் ஷாங்காய் நகரத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த, மற்றும் சீனா முழுவதிலும் நவகாலனித்துவ ஆதிக்கத்தை நிறுவுவதற்கு நோக்கம் கொண்டுள்ள வோல் ஸ்ட்ரீட்டும் உலகளாவிய நிதிய தன்னலக்குழுவும், இலண்டன் நகருக்காக பேசுகையில், FT இன் அறிக்கையானது, இலாபத்திற்கான உற்பத்தியைத் தடுத்த அதேவேளை சீனாவின் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ள பூட்டுதல்களையும் ஏனைய அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளையும் கண்டனம் செய்கிறது.
இந்த அறிக்கை, “ஷாங்காய் சீனாவின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரம் என்பதுடன், அதன் நிதிய தலைநகரமாகும். அலுவலகங்களும் தொழிற்சாலைகளும் தங்கள் ஊழியர்களை வெளி உலகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட பணியிட ‘நீர்க்குமிழிகளாக,’ ஆக்கியுள்ளதால், அவர்களால் தொடர்ந்து பணியாற்ற முடியும். இருப்பினும் பொருளாதாரம் பாதிக்கப்படும். எனவே, வெற்றியோ தோல்வியோ எதுவானாலும், ஷாங்காய் பூட்டுதல்கள் சீனாவின் பூஜ்ஜிய-கோவிட் மூலோபாயத்தின் பயன்பாடு முடிவுக்கு வருவதைக் காட்டுகிறது. இது வெளியேறுவதற்கு தயாராகும் நேரமாகும்” என்று குறிப்பிடுகிறது.
இந்த கொள்கையை நியாயப்படுத்துவதில், பைனான்சியல் டைம்ஸ் ஒரு தொடர்ச்சியான தவறான மற்றும் விஞ்ஞானபூர்வமற்ற கூற்றுக்களை உருவாக்குகிறது.
முதலாவதாக, கோவிட்-19 “இப்போது உலகின் பெரும்பாலான பகுதிகளில் நிரந்தர நோயாக மாறி வருகிறது” என்று அது வலியுறுத்துகிறது. உண்மையில், ‘நிரந்தரமான’ என்ற சொல், கோவிட்-19 க்கு நேர் எதிராக, கணிக்கக்கூடிய மற்றும் நிலையாகப் பரவும் ஒரு நோயைக் குறிப்பதாகும். உலகளவில் 2 பில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்த ஓமிக்ரோனின் BA.1 துணை மாறுபாட்டின் பேரழிவுகரமான உலகளாவிய எழுச்சி நிகழ்ந்து இரண்டு மாதங்களுக்கு குறைவான காலத்திற்குள், ஓமிக்ரோனின் BA.2 துணை மாறுபாடு ஏற்கனவே ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் உலகின் பிற பகுதிகளில் மற்றொரு பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாவதாக, எந்த விஞ்ஞானபூர்வ அடிப்படையும் இல்லாமல், பூஜ்ஜிய-கோவிட் மூலோபாயத்திற்கு நிரந்தர பூட்டுதல்கள் தேவை என்று பைனான்சியல் டைம்ஸ் கூறுகிறது. அவர்கள், “ஓமிக்ரோன் மிகவும் தொற்றக்கூடியதாக இருப்பதால், கடுமையான பூட்டுதல்கள் மட்டுமே நோய்தொற்றுக்கள் உருவானவுடன் அவற்றை அகற்றுவதற்கு உதவும், மேலும் அத்தகைய கட்டுப்பாடுகள் எப்போதும் பராமரிக்கப்படாவிட்டால், மக்கள் மத்தியில் கோவிட் பரவக்கூடிய தருணத்தை அவர்கள் சற்று தாமதப்படுத்த முடியும்” என்று குறிப்பிடுகின்றனர்.
சீனா மற்றும் பிற ஆசிய-பசிபிக் நாடுகளின் அனுபவமானது, பூட்டுதல்கள் மற்றும் ஏனைய அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளின் கூட்டு பயன்பாடு வாரங்களுக்குள் நோய்தொற்றுக்களை விரைவாக பூஜ்ஜியமாக்க முடியும் என்பதை பலமுறை நிரூபித்துள்ளது. பூட்டுதல்கள் ‘என்றென்றும் பராமரிக்கப்பட வேண்டும்’ என்ற கட்டுக்கதை, பூட்டுதலுடன் இணைந்து ஒரே நேரத்தில் அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளும் எடுக்கப்படும்போது, கோவிட்-19 ஐ மிக விரைவாக அகற்ற முடியும் என்பதை பொதுமக்கள் புரிந்துகொள்வதைத் தடுக்கும் தவறான தகவலாகும்.
உண்மையில், 2020 இல் கோவிட்-19 ஐ ஒழிக்க மறுத்த அமெரிக்கா மற்றும் பிற நாடுகளைப் போலல்லாமல், மே 2020 தொடக்கத்தில் வைரஸை முற்றிலும் அகற்றிய பின்னரே சீன மக்கள் பெரும்பாலும் தொற்றுநோய்க்கு முன்னைய இயல்பு நிலைக்குத் திரும்பினர். மேலும், அப்போதிருந்து அங்கு தற்காலிக பூட்டுதல்கள் எப்போதாவது பயன்படுத்தப்படுவதற்கு ஒரே காரணம், வெளிநாடுகளில் இருந்து புதிய வகை வைரஸ்கள் நாட்டிற்குள் நுழைந்ததுதான்.
மூன்றாவதாக, ஆசிரியர் குழு இதைக் கூறி நிறைவு செய்கிறது, “உலகம் வழமை போல் மெதுவாக வணிகத்திற்கு திரும்புகையில், பூஜ்ஜிய-கோவிட் கொள்கை சீனாவுக்கு மிகுந்த விலை கொடுக்கக் கூடியதாக மாறும். ஹாங்காங் மற்றும் இப்போது ஷாங்காய் நகரின் ஓமிக்ரோன் மாறுபாட்டின் வெடிப்புகள் சீனாவில் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளன. ஆனால் வைரஸூடன் வாழ்வது மட்டுமே ஒரே வழி என்று அவர்கள் ஒருமுறை காட்டினால், தொற்றுநோயின் கடுமையான கட்டத்தின் முடிவின் தொடக்கத்தை அவர்களும் எதிர்கொள்ளக்கூடும்.”
உண்மையில், சீனா ‘வைரஸூடன் வாழ’ முடிவு செய்திருந்தால், அது 1.4 பில்லியன் மக்கள் வசிக்கும் உலகின் மிகப்பெரிய நாட்டில் முன்நிகழ்ந்திராத வகையில் நோய்தொற்று மற்றும் இறப்பின் அலைகள் உருவாவதற்கு காரணமாக இருந்திருக்கும். “தொற்றுநோயின் கடுமையான கட்டத்தின் முடிவின் தொடக்கத்தை” குறிப்பதற்கு பதிலாக, அது SARS-CoV-2 வுக்கு புதிய குத்தகை காலத்தை வழங்கும் என்பதுடன், நூற்றுக்கணக்கான மில்லியன் நோய்தொற்றுக்கு வாய்ப்பளிப்பவர்களில் வைரஸ் பிறழ்வு கண்டு, இன்னும் ஆபத்தான மாறுபாடாக உருவெடுக்கக்கூடும்.
சீனாவில் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை கைவிடுவதனால் ஏற்படும் பொது சுகாதார தாக்கம் பற்றிய எந்த மதிப்பீடும் FT அறிக்கையில் தெளிவாக இல்லை. அவர்கள் இதை மூடிமறைக்கும் நிலையில், உண்மை என்னவென்றால், சீனா முழுவதும் நூறாயிரக்கணக்கான மற்றும் கூடுமாயின் மில்லியன் கணக்கான மக்களை கொன்று குவிக்கும் கொள்கையை FT பரிந்துரைக்கிறது, அதே நேரத்தில் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களுக்கு இல்லாவிட்டாலும், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நெடுங்கோவிட் பரவுகிறது.
சீனாவில் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 65 நகரங்கள் உள்ளன, அவற்றில் பெரும்பாலானவை அடர்த்தியான மக்கள்தொகை கொண்டவையாகும். சில வாரங்களில் BA.2 துணை மாறுபாட்டை சுதந்திரமாக பரவ அனுமதிப்பதானது, பரந்த நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் நோய்தொற்று வெடித்துப் பரவுவதற்கும், சமூகங்களை அழிப்பதற்கும் மற்றும் மருத்துவமனைகள் அவற்றின் திறனைத் தாண்டி நிரம்பி வழிவதற்கும் வழிவகுக்கும்.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான சீன மையத்தின் (CDC) சமீபத்திய ஆய்வு, குவாங்டாங் மாகாணத்தில் பல்வேறு நோய்தொற்று சூழ்நிலைகள் ஏற்படுத்தும் தாக்கத்தை மாதிரியாகக் காட்டுகிறது. ‘வைரஸூடன் வாழ்வது’ என்று FT குறிப்பிடும் மிகத் தீவிரமான ‘சகவாழ்வு’ சூழ்நிலை, 2022 ஆம் ஆண்டின் எஞ்சிய காலத்தில் மட்டும் சீனாவில் சுமார் 1.35 மில்லியன் மக்களைக் கொல்லும்.
பூஜ்ஜிய-கோவிட் கொள்கையின் முடிவு எவ்வளவு பேரழிவு தரும் என்பதை FT நன்கு அறிந்திருக்கிறது, ஆயினும்கூட, CCP உம் சீன ஆளும் வர்க்கமும் இந்தப் பேரழிவுகரப் போக்கைத் தொடர அது அழுத்தம் கொடுக்க முயல்கிறது. 19 ஆம் நூற்றாண்டின் ஓபியம் போர்களைப் போலவே, என்ன விலை கொடுத்தேனும் சீனா வணிகத்திற்காக முழுமையாக மீளத்திறக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.
வைரஸின் தொடர்ச்சியான பரிணாமமும், புதிய மற்றும் மிகவும் ஆபத்தான மாறுபாடுகளின் மீள்அறிமுகமும், தொற்றுநோய்க்கு தேசிய தீர்வு சாத்தியமற்றது என்பதை நிரூபிக்கிறது. “சீன குணாதிசயங்களைக் கொண்ட முதலாளித்துவம்” வேலை செய்யாது.
சீனாவிற்குள் அனைத்து நடவடிக்கைகளும் செயல்படுத்தப்பட்டாலும், உண்மையான பிரச்சினை தொற்றுநோயின் உலகளாவிய தன்மை மற்றும் அதற்கான உலகளவில் ஒருங்கிணைந்த பதிலிறுப்புக்கான தேவை ஆகியவற்றில் தங்கியுள்ளது. வெளிநாட்டு மூலதனம் மற்றும் முதலாளித்துவ பிரிவுகளின் அழுத்தங்களை எதிர்க்கும் வகையில், இப்போது கூட பூஜ்ஜிய-கோவிட் மூலோபாயத்தை பெருமளவில் ஆதரிக்கும் சீன தொழிலாள வர்க்கம், CCP இல் இருந்து சுயாதீனமாக ஒழுங்கமைக்கப்பட வேண்டும் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியப்படுவதை நோக்கமாகக் கொள்ள வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, ஏகாதிபத்திய மையங்களில் உள்ள தொழிலாள வர்க்கம் பூஜ்ஜிய-கோவிட் கொள்கைக்கான போராட்டத்தை உலக அளவில் விரிவுபடுத்த வேண்டும். சீனாவின் அனுபவத்தை ஆய்ந்துணர்வதும், தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான ஒழிப்பு மூலோபாயத்தை பிரபல்யப்படுத்துவதும் ஒவ்வொரு வர்க்க உணர்வுள்ள தொழிலாளியின் கடமையாகும், அவர்கள் இதை ஒவ்வொரு பணியிடத்திலும் சுற்றுப்புறத்திலும் சுயாதீனமான போராட்ட அமைப்புகளை கட்டமைப்பதன் மூலம் மேற்கொள்ள வேண்டும்.
சீனாவில் நிகழ்ந்த பாரிய மரணம் குறித்த FT இன் அலட்சியம், ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள நிதிய தன்னலக்குழுவின் பிற்போக்குத்தனமான மற்றும் கொலைகார தன்மையை வெளிப்படுத்துகிறது. உலகளவில் நிகழ்ந்த 20 மில்லியன் மக்களின் இறப்பு மற்றும் நெடுங்கோவிட் நோயால் உருவான பாரிய பலவீனம் ஆகியவற்றை மேற்பார்வையிட்டதன் பின்னர், மனித நாகரிகத்தை அழிக்கக்கூடிய அணுசக்தி மூன்றாம் உலகப் போராக உருமாற்றம் அடைவதற்கு அச்சுறுத்தும் வகையில் உக்ரேனில் ஒரு போருக்கு ரஷ்யாவைத் தூண்டியுள்ளனர்.
உலகளவில், தொற்றுநோய் மற்றும் போர் வெடிப்பின் கூட்டு அழுத்ததிற்கு மத்தியில் பணவீக்கம் விண்ணைத் தொடுகையில், முதலாளித்துவ அமைப்பு நெருக்கடியிலும் எப்போதும் ஆழமடைந்துவரும் சமத்துவமின்மையிலும் சிக்கித் தவிக்கிறது. இந்நிலையில், முதலாளித்துவத்தை புரட்சிகரமாக தூக்கியெறிவதும், சர்வதேச தொழிலாள வர்க்கத்தால் கட்டுப்படுத்தப்படும் ஒரு திட்டமிடப்பட்ட சோசலிசப் பொருளாதாரத்தை கொண்டு அது பதிலீடு செய்யப்படுவதும் மட்டுமே போருக்கான உந்துதலை நிறுத்த முடியும், கோவிட்-19 க்கு எதிரான உலகளாவிய போராட்டத்தைத் தொடங்க முடியும், மேலும் சமூக சமத்துவத்தின் அடிப்படையில் சமூகத்தை மீளக் கட்டமைக்க முடியும்.