மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஒலி வடிவில் இங்கே கேட்கலாம்.
உக்ரேனில் ரஷ்யா இனப்படுகொலையில் ஈடுபட்டிருப்பதாக செவ்வாய்கிழமை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் அறிவித்தார். பைடென் சுமத்தும் இந்தக் குற்றச்சாட்டு ஒரு பொய் என்றாலும், இது அதையும் விட மோசமாக உள்ளது. இது அமெரிக்கா போரில் முழு அளவில் பகிரங்கமாக பங்கேற்பது உட்பட போரைப் பாரியளவில் தீவிரப்படுத்துவதைச் சட்டபூர்வமாக்க மக்கள் மீது விஷமப் பிரச்சாரத்தை முடுக்கி விடும் நோக்கில் நனவுபூர்வமாக செய்யப்படும் ஓர் அரசியல் ஆத்திரமூட்டல் ஆகும்.
இனப்படுகொலை என்பது ஆழ்ந்த வரலாற்று உள்ளடக்கத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தையாகும். இதற்கு நிகரான மட்டத்தில் கொடூரக் குற்றச்சாட்டு எதுவும் இருக்காது.
ஒரு போலந்து யூதரும் வழக்கறிஞருமான ரபேல் லெம்கின் —இலத்தீன் வார்த்தையான cide (கொல்லுதல்) என்பதுடன் கிரேக்க வார்த்தையான genos (இனம் அல்லது மக்கள்) என்பதை இணைத்து— 'இனப்படுகொலை' (genocide) என்ற வார்த்தையை 1944 இல் அவரின் Axis Rule in Occupied Europe என்ற நூலில் பயன்படுத்தினார். அந்த வார்த்தையும் அதையடுத்து ஐக்கிய நாடுகள் சபை சட்டபூர்வமாக அதை தொகுத்தளித்ததும் இரண்டுமே பிரிக்க முடியாதவாறு யூத இனப்படுகொலையுடன் (Holocaust) பிணைந்திருந்தது. இரண்டாம் உலகப் போரின் முடிவில் கூட்டுப்படைகள் என்ன கண்டறிந்தனவோ அவை மனித வரலாற்றிலேயே மிக மோசமான குற்றத்திற்கு ஆதாரமாக இருந்தன: அதாவது சித்திரவதை முகாம்கள், கும்பலாக புதைக்கும் சவக்குழிகள், விஷவாயு கொலை அரங்குகள், மனிதர்களை எரிக்கும் அடுப்புகள் மற்றும் முகக்கண்ணாடிகள், மனித தலைமுடிகள் மற்றும் பிடுங்கப்பட்ட தங்கப் பற்கள் என இவை குவியல்களாக கண்டறியப்பட்டன. லெம்கினின் அந்த புதிய வார்த்தை (neologism) இந்த மிகப்பெரிய விஷயத்தைக் குறைத்துக் காட்டுவதாக இருந்தது: ஐரோப்பிய யூதர்கள் நாஜிக்களால் மிகக் கவனமாக திட்டமிட்டு நிர்மூலமாக்கப்பட்டிருந்தனர், 6 மில்லியன் பேர் தொழில்துறை நடவடிக்கை போன்று கொல்லப்பட்டிருந்தனர்.
“மீண்டும் ஒருபோதும் நடக்காத' வகையில் அதிகார ஆணைக்கு சட்டப்பூர்வ பலமும் மரபார்ந்த குறிப்பையும் வழங்கும் விதத்தில், அந்த அனுபவம் ஒரு துல்லியமான சூத்திரமயப்படுத்தலைக் கோரியது. 1948 இல் ஐக்கிய நாடுகள் சபை, இனப்படுகொலை குற்றத்தைத் தடுத்தல் மற்றும் தண்டனை வழங்குதல் தொடர்பான மாநாட்டில், 'முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ, தேசிய, வம்சாவழி, இனம் அல்லது மதக் குழுவை, அது போன்றதை, அழிக்கும் நோக்கில் செய்யப்படும்' குறிப்பிட்ட குற்றங்களை இனப்படுகொலைக்கான சர்வதேச சட்ட வரையறையாக வரையறுத்தது.
யூத இனப்படுகொலை குற்றங்கள் உலகின் நனவில் பதிந்திருந்தன. இனப்படுகொலை என்பது ஒரு மக்களின் இனம், வம்சாவழி, தேசியம் அல்லது மதம் ஆகியவற்றின் காரணமாக முன்கூட்டியே திட்டமிட்டு முறையாக நிர்மூலமாக்குவதாகும். ஏகாதிபத்தியத்தின் போர் மற்றும் கொடூரமான குற்றங்கள் போன்றவை மக்கள் நனவில் இவ்வாறான நடவடிக்கையாக மதிப்பிடப்பட்டன. மேலும் இவ்வாறான காட்டுமிராண்டித்தனங்களுக்கு கிட்டத்தட்ட நெருங்கி வரும் எவரும் இனப்படுகொலை செய்யப்பட்டவர்களாக கருதப்பட்டனர். இந்த வெளிச்சத்தில் வரலாறு மறுபரிசீலனை செய்யப்பட்டது, ஹிட்லரின் குற்றங்கள் பேரரசின் குற்றங்களில் முன்கூட்டியே எதிர்பார்க்கப்பட்டது என்பது கண்டறியப்பட்டது.
அமெரிக்க முதலாளித்துவத்தின் மேற்கை நோக்கிய விரிவாக்கம், நிலக்கரி போக்குவரத்து மற்றும் இனப்படுகொலைச் செயல்களால் தூண்டப்பட்டது. அமெரிக்காவின் பழங்குடி மக்கள் இந்த முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்தனர், குதிரைப்படையினரும் மற்றும் குடியேறியவர்களும் அவர்களைத் திட்டமிட்டு முறையாக அழித்தொழித்தனர். 1830 இன் இந்தியர் வெளியேற்று சட்டம், Trail of Tears நடவடிக்கை, Sand Creek படுகொலை, குழந்தைகளை பலவந்தமாக அகற்றுதல் ஆகியவை இருந்தன — சியோக்ஸ் (Sioux) மற்றும் செயென் (Cheyenne), கோமான்சே (Comanche) மற்றும் யூகி (Yuki) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். இப்படித்தான் 'மேற்கு வெல்லப்பட்டது.'
அந்த நூற்றாண்டின் திருப்பத்தில் பிலிப்பைன்ஸைக் கைப்பற்றியதன் மூலம், அதாவது ஆசியாவில் ஒரு உத்தியோகபூர்வ காலனியைக் கைப்பற்றியதன் மூலம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எழுச்சி, இனப்படுகொலை எனும் அளவுக்கு பேராசையுடன் வெறித்தனமாக நடத்தப்பட்டது. 200,000 க்கும் அதிகமான பிலிப்பைன்ஸ் மக்கள் கொல்லப்பட்டார்கள். அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர், அவர்களது கிராமங்கள் எரிக்கப்பட்டன, மக்கள் வதை முகாம்களுக்குத் தள்ளப்பட்டனர். ஜெனரல் ஜேக்கப் ஸ்மித் அவர் சிப்பாய்களிடம், 'நீங்கள் கொல்வதையும் எரிப்பதையும் நான் விரும்புகிறேன், நீங்கள் எவ்வளவு அதிகமாகக் கொன்று எரிக்கிறீர்களோ, அவ்வளவு அது எனக்கு மகிழ்ச்சியைத் தரும்' என்று கூறிய போது, அந்த வெற்றியின் கொடூரம் உள்பொதிந்திருந்தது. வெகுஜன படுகொலைகள் காலனித்துவ வெற்றிக்கான ஒரு வழிமுறையாக இருந்தது.
ஒவ்வொரு மிகப் பெரிய காலனித்துவ சக்திகளும் அவசியமென கருதிய போதெல்லாம் தமது உடைமைகளை இனப்படுகொலை பலாத்காரத்தால் இறுக்கமாக பிடித்து வைத்திருந்தன. பெல்ஜியர்கள் காங்கோவில் இருந்து இரப்பரை கட்டாய உழைப்பு, சிதைவுகள், சித்திரவதைகள் மற்றும் பாரிய படுகொலைகளுடன் பாதுகாத்தனர். மீண்டும் மீண்டும் படுகொலைகளை செய்து இந்தியாவை ஆங்கிலேயர்கள் தக்கவைத்துக் கொண்டனர். பிரெஞ்சுக்காரர்கள் அல்ஜீரியாவை இனப்படுகொலை வன்முறை மூலம் அடக்கினர்.
ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டுகளை வீசியது இனப்படுகொலை நடவடிக்கைகளாகும். அந்த குண்டுவெடிப்புகளில் கிட்டத்தட்ட கால் மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும் பெரும்பான்மையினர் அப்பாவி பொதுமக்கள் ஆவர். இனம் ஒரு முக்கியமான காரணியாக இருந்தது என்பதை மறுக்க முடியாது. ஜப்பானிய வம்சாவழியைச் சேர்ந்த அமெரிக்க குடிமக்கள் அமெரிக்காவில் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டனர். 'Japs' (ஜப்பானியர்கள்) வேறுவிதமானவர்கள், அவர்களில் கடைசி ஒருவரை கொல்லும் வரையில் அவர்கள் சரணடைய மாட்டார்கள் என்று அடிக்கடி வாதிடப்பட்டது. மருத்துவர்கள், உயர்நிலை பள்ளி மாணவர்கள், பாட்டிமார்கள் என நூறு ஆயிரக் கணக்கானவர்கள் அணுஆயுத குண்டுவெடிப்புகளில் எரிந்து சாம்பலானார்கள்; பத்து ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கதிரியக்க நஞ்சால் தாங்கொணா மரண வேதனையில் உயிரிழந்தார்கள்.
அமெரிக்க ஆளும் வர்க்கம் உலகெங்கிலும் இரத்தக்களரிகளுக்கு, அவ்வப்போது இனப்படுகொலை பரிணாமங்களில் இருந்தவற்றுக்கும் கூட, உதவியும் மேற்பார்வை செய்தும் அதன் பனிப்போர் மேலாதிக்கத்தை நீடித்தது. இந்தோனேசிய சர்வாதிகாரி சுஹார்டோ இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாயிரக்கணக்கான உறுப்பினர்களைக் கொன்று 1965 இல் அதிகாரத்திற்கு வந்தார். அமெரிக்கா இந்த பாரிய படுகொலையை ஒருங்கிணைத்து, அதன் முன்னேற்றத்தைக் கண்காணித்து, அதைச் செயல்படுத்துவதற்கு இராணுவம் மற்றும் துணை இராணுவப் படைப்பிரிவுகளுக்கு வானொலித் தொலைத்தொடர்பு சாதனங்களை வழங்கியது. கம்யூனிஸ்டுகள் மற்றும் கம்யூனிஸ்டுகள் என்று கூறப்படுபவர்கள் அரிவாள்களால் வெட்டிக் கொல்லப்பட்டனர், அவர்களின் உருச்சிதைந்த சடலங்கள் சுமத்ரா, ஜாவா மற்றும் பாலி ஆறுகளை அடைத்துக் கொண்டிருந்தன.
1948 இல் இனப்படுகொலை சம்பந்தமான ஐ.நா. மாநாடு நிறைவடைந்த போது, அமெரிக்கா அதில் கையெழுத்திடவில்லை, அதற்கடுத்து நாற்பது ஆண்டுகள் வரை அது அவ்வாறு செய்யவில்லை. கொரியா மற்றும் வியட்நாமில் நடத்தப்பட்ட அதன் போர்களுக்காகவும், லாவோஸ் மற்றும் கம்போடியாவில் நடத்தப்பட்ட கொத்தணி (carpet) குண்டுவீச்சுக்காகவும், ஏஜென்ட் ஆரஞ்சு விஷவாயு மற்றும் நாபாம் (napalm) பயன்படுத்தியதற்காகவும் அமெரிக்காவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுப்பப்படலாம் என்ற பதட்டமான புரிதல் இருந்தது. 1988 இல், இறுதியில் வாஷிங்டன் இனப்படுகொலைக்கு எதிரான மாநாட்டில் கையெழுத்திட்ட போது, அமெரிக்க தேசிய அரசாங்கம் அங்கீகரிக்காத வரையில், இனப்படுகொலைக்காக வழக்கில் இழுக்கப்படுவதில் இருந்து அமெரிக்காவுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என்ற ஷரத்து அதில் சேர்க்கப்பட்டிருந்தது.
கடந்த முப்பது ஆண்டுகள், மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா தொடர்ச்சியான அமெரிக்க பேரரசின் குற்றங்களைக் கண்டுள்ளன. மருத்துவமனைகள் மற்றும் கிராமங்கள் வேண்டுமென்றே குண்டுவீசித் தாக்கப்பட்டன. நகரங்கள் இடிபாடுகளாக சிதைக்கப்பட்டன. பொருளாதாரத் தடைகள் நூறாயிரக்கணக்கான குழந்தைகளைப் பட்டினியில் கிடத்தி கொன்றன, அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போதே ட்ரோன் தாக்குதல்கள் அவர்களைக் கொன்றன. ஒரு காலத்தில் பெருமைமிக்க நாகரீகங்களாக இருந்தவை போர் நாய்களால் அப்பட்டமாக வேட்டையாடப்பட்டு இடிபாடுகள் ஆக்கப்பட்டன.
புஷ், ஒபாமா மற்றும் ட்ரம்ப் ஆகியோர் மீது இனப்படுகொலை குற்றஞ்சாட்டப்பட்டால், அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளக் கூறக்கூடிய ஒரே வாதமாக முன்வைக்ககூடியது என்னவென்றால், மில்லியன் கணக்கான ஈராக்கியர்கள் மற்றும் நூறாயிரக் கணக்கான ஆப்கானியர்கள் கொல்லப்பட்ட ஆக்கிரமிப்பு போர்களை தொடங்கியபோது, அவர்கள் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் மரணங்களை அவர்களின் தேவைக்கான பிரயோசனமான ஒன்றாக நோக்கினார்களே தவிர சுயதேவைக்கானதாக ஒன்றாக கருதவில்லை என்பதாகவே இருக்கும். அவர்களின் நடவடிக்கைகள் மறுக்கவியலாத இனப்படுகொலைகளாகும்.
இந்த இரத்தத்தில் ஊறிய அதிகாரத்தின் தலைவராக நிற்கும் பைடென் இனப்படுகொலைக்காக ரஷ்யாவைக் குற்றஞ்சாட்டுகிறார். இந்த குற்றச்சாட்டுக்கள் வரலாற்றுரீதியில் ஸ்தாபிக்கப்பட்ட சட்ட வரையறைகள் மற்றும் சமகால உண்மைகள் இரண்டையும் திட்டமிட்டு சிதைத்து சீரழிக்கின்றன.
மரியுபோல் வீதிகளில் கிடக்கும் சடலங்கள், ஒரு இரயில் நிலையம் மீதான குண்டுவீச்சு ஆகிய சில குறிப்பிட்ட சம்பவங்களை பைடென் சுட்டிக் காட்டுகிறார், அவை போர் குற்றங்களாக இருக்கலாம் என்றாலும் அதற்கு விசாரணை தேவைப்படுகிறது. துல்லியமான விபரங்களோ அல்லது குற்றவாளி யார் என்பதோ இதுவரை ஸ்தாபிக்கப்படவில்லை. உக்ரேனிய மக்களை ஒழிக்க புட்டின் உத்தேசம் கொண்டுள்ளார் என்பதற்கு எந்த ஆதாரமும் எடுத்துக் காட்டப்படவில்லை.
நாஜிக்கள் மற்றும் அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளால் நிறுவப்பட்ட இனப்படுகொலை மீதான அளவுகோலுக்கு நிகராக உக்ரேனில் நடந்துள்ள எதையும் அளவிட முடியாது. பைடெனின் குற்றச்சாட்டு யூத இனப்படுகொலையைக் குறைத்துக் காட்டுவதுடன், வரலாற்றையே சேதப்படுத்துகிறது.
இனப்படுகொலை மீதான பைடெனின் குற்றச்சாட்டுக்கள் தார்மீக கோபத்தின் எல்லைக்கடந்த வாய்சவுடால் அல்ல. அவை அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கான சேவையில் மோதலைத் திட்டமிட்டு பொறுப்பின்றி தீவிரப்படுத்துபவையாகும், அவை வாஷிங்டனின் எதிரிகளை இலக்கில் வைத்துள்ளன.
ரஷ்யா கியேவ் மீது குண்டுவீசுகின்ற போது வாஷிங்டன் இனப்படுகொலையைக் குறித்து கதறுகிறது, ஆனால் சவூதி அரேபியா யேமன் மீது அமெரிக்க ஆயுதங்களை வீசி, 377,000 க்கும் அதிகமான மக்களைக் கொல்லும் போது அவ்வாறு செய்வதில்லை. வீகர் இன மக்களைக் கையாள்வது குறித்து பைடென் சீனா மீது இனப்படுகொலை குற்றச்சாட்டை சுமத்துகிறார், ஆனால் பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் திட்டமிட்டு நாசமாக்குவதைக் குறித்து ஒரு வார்த்தையும் கூறுவதில்லை.
வாஷிங்டனால் கூறப்பட்ட அட்டூழியக் கதைகளும், இனப்படுகொலை பற்றிய அடிப்படை ஆதாரமின்றி மீண்டும் மீண்டும் கூறப்படும் குற்றச்சாட்டுக்களும் அவற்றைக் குறித்து மிகக் குறைவானதையே நமக்குக் கூறுகின்றன, ஆனால் ஏகாதிபத்திய சக்திக்கள் மும்முரமாக உள்ள போர் காய்ச்சலைப் பற்றியே நிறைய கூறுகின்றன. இனப்படுகொலை என்பது கையிலெடுக்கப்பட்டு விட்டால், அங்கே அதை விட வேறெந்த வாய்சவுடாலை தீவிரப்படுத்தலும் சாத்தியமில்லை.
ரஷ்யாவுடன் நேரடி இராணுவ மோதலுக்கு அமெரிக்கா தயாராகி வருகிறது. பைடென் இனப்படுகொலை குறித்து பேசுகையில் வலிமிகுந்த சட்ட, வரலாற்று மற்றும் தார்மீக வேறுபாடுகளை போர் பிரச்சார நோக்கங்களுக்காக மங்கலாக்குகிறார். அவர்களின் அரசாங்க நடவடிக்கைகளுக்கு பொறுப்பாகாத ரஷ்யர்கள் இப்போது களங்கப்பட்டுள்ளனர், சர்வதேச போட்டிகளில் இருந்து தடுக்கப்பட்டுள்ளனர், சர்வதேச அளவில் அச்சுறுத்தப்பட்டு வேட்டையாடப்பட்டு வருகின்றனர்.
சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் பைடென் ஓர் இனப்படுகொலை சிந்தனையை வளர்த்து வருகிறார். இது பகுத்தறிவின்றி பலிக்கடா ஆக்கும் முயற்சிகள் மற்றும் தேசியத்தின் அடிப்படையில் வெறுப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளால் எடுத்துக்காட்டப்படுகிறது. பைடென் இந்த வார்த்தையை தவறாக பயன்படுத்துவது, இனப்படுகொலை என்று நிரூபிக்கக்கூடிய ஒரு உலகளாவிய போரை இயக்கத்திற்குக் கொண்டு வருகிறது. இந்த இனப்படுகொலையில் மனிதகுலமே அழிக்கப்படும்.