மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க/நேட்டோ போரினால் தூண்டப்பட்ட வாழ்க்கைச் செலவில் சகிக்க முடியாத அதிகரிப்புகள் உலகம் முழுவதும் தொழிலாள வர்க்க எதிர்ப்புகளின் பாரிய அலையை உருவாக்கி வருகின்றன. இரண்டு ஆண்டுகளாக 20 மில்லியன் மக்களைக் கொன்று, இன்னும் பொங்கி எழும் ஒரு தொற்றுநோய்க்கு மத்தியில் சமையலறைகளிலும் மற்றும் விற்பனை நிலையங்களிலும் உருவாக்கிக் கொண்டிருந்த சமூகக் கோபம் இப்போது தெருக்களில் கொதித்துக் கொண்டிருக்கிறது. அனைத்து இன, தேசிய மற்றும் பல மொழிகளை பின்னணியாக கொண்ட மக்கள் வாழ்க்கையை முன்னைய வழியில் தொடர முடியாது என்ற ஒரே முடிவுக்கு வருகிறார்கள்.
உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு ஐம்பது நாட்களுக்குப் பின்னர், இப்போது ஒவ்வொரு கண்டத்திலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆர்ப்பாட்டக்காரர்கள் அவசரகால நிலைகளை மீறுவதுடன் மற்றும் பொலிஸ் அடக்குமுறைக்கு பாரியளவிலான அணிதிரட்டல்களுடனும் மற்றும் தீவிரத்துடனும் பதிலளிக்கின்றனர். பெரு, சூடான் மற்றும் இலங்கையில் ஆரம்பமான போராட்டங்கள் தொடர்வது மட்டுமல்லாமல், இப்போது மக்கள்தொகை நெருக்கமான மற்றும் நகர்ப்புற நாடுகளுக்கும் பரவி வருகின்றன. தற்போதைய போர் நெருக்கடிக்கு சதித்திட்டம் தீட்டிய பெரும் ஏகாதிபத்திய சக்திகளின் அதே அரசாங்கங்கள் இப்போது வளர்ந்து வரும் வேலைநிறுத்த இயக்கங்களை எதிர்கொள்கின்றன. இதனை தொழிற்சங்க அதிகாரத்துவம் தீவிரமாக அடக்க முனைகின்றது.
சமீபத்திய நாட்களில், ஈரானில் உள்ள நகராட்சித் தொழிலாளர்கள், அரசாங்க ஊழியர்கள், எண்ணெய் தொழிலாளர்கள், தொலைத்தொடர்புத் தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்களில் பாரிய அதிகரிப்பைக் கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பொருளாதார வல்லுனர் இப்ராஹிம் ரசாகி, Shara செய்தித்தாளில், 'ஒவ்வொரு நாளும் சமூகத்திடம் அதன் அனைத்து பிரச்சனைகளையும் சகித்துக்கொள்ளும் தன்மை குறைந்து வருகிறது' என்றும் ஈரான் 'சிக்கலான வாழ்க்கை நிலைமைகள் தொடர்பான ஒரு பரவலான சீற்றத்தை' காண்கிறது என்றும் கூறினார்.
மக்கள்தொகை அடிப்படையில் உலகின் நான்காவது பெரிய நாடான இந்தோனேசியாவில், சமையல் எண்ணெயின் விலை உயர்வு மற்றும் ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் சமீபத்திய அறிவிப்பின் காரணமாக கடந்த வாரம் பெரிய மாணவர் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. ஜகார்த்தா, தெற்கு சுலவேசி, மேற்கு ஜாவா மற்றும் பிற பகுதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மிருகத்தனமான பொலிஸ் அடக்குமுறையை எதிர்கொண்டனர். ஒரு எதிர்ப்பாளர் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு ஆளானார்.
பாக்கிஸ்தானில், விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டங்கள் குறித்து ஆளும் வர்க்கத்திற்குள் உள்ள கவலைகள், பிரதமர் இம்ரான் கான் சமீபத்திய நாடாளுமன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட்டதில் மையமாக இருந்தது. கடந்த ஆண்டை விட உணவுப் பொருட்களின் விலைகள் 15 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இலங்கை மற்றும் பெருவைப் போலவே, “பாகிஸ்தான் அரசியல் ஸ்திரமின்மையின் சமீபத்திய பலியாக உள்ளது. பொருட்கள் மற்றும் நிதிச் சந்தைகளில் நிலவும் பீதி; உலகளாவிய பணவீக்க அதிகரிப்பு, உணவுப் பொருட்களின் விலையேற்றம், மற்றும் குறிப்பாக வளர்ந்து வரும் சந்தைகளில் எழுந்துள்ள எதிர்ப்புகளின் எழுச்சி, இந்த நிகழ்ச்சிப்போக்கு பாகிஸ்தான் அல்லது இலங்கையில் மட்டும் நின்றுவிடாது என்பதைக் காட்டுகிறது” என்று The Diplomat இதழ் எழுதியுள்ளது.
இலத்தீன் அமெரிக்காவில், ரஷ்யா மற்றும் உக்ரேனிய ஏற்றுமதி சரிவிலிருந்து ஒப்பீட்டளவில் பாதுகாக்கப்பட்ட ஒரு பகுதியாக கருதப்பட்ட ஆர்ஜென்டினாவின் புவனஸ் அயர்ஸில் கடந்த வாரம் வெகுஜன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏனெனில் கனரக வாகன ஓட்டுனர்களின் வேலைநிறுத்தம் நாட்டின் தானிய ஏற்றுமதியை முடக்கியது. ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் மார்ச் மாதத்தில் இருந்து 6.7 சதவீதமாக உயர்ந்து, ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் 55 சதவீதமாக அதிகரித்துள்ளதால், 'உள்ளூர் நாணயத்தின் வாங்கும் சக்தியின் இழப்புடன் தெருவில் உள்ள மோதல்கள் அதிகரித்து வருகின்றன' என்று வியாழக்கிழமை El País குறிப்பிட்டது.
கனரக வாகன ஓட்டுனர்கள், வாடகை வாகன ஓட்டுநர்கள் மற்றும் பேருந்து ஓட்டுநர்களின் வேலைநிறுத்தத்தினால் கடந்த வாரம் ஹோண்டுராஸ் மூடப்பட்டது. இதற்கு ஸியோமாரா காஸ்ட்ரோவின் அரசாங்கம் தொழிலாள வர்க்க பயணிகளுக்கான கட்டணத்தை உயர்த்தியது.
உலக ஏகாதிபத்தியத்தின் மையங்களிலும் சமூக அதிருப்தி வளர்ந்து வருகிறது. அமெரிக்காவில், பணவீக்கம் ஆண்டுக்கு 8 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில், நியூயோர்க் நகரத்தில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளில் 30,000 காவல் பணியாளர்கள் வியாழன் வேலைநிறுத்தத்திற்கு அங்கீகாரம் அளித்துள்ளனர். முக்கியமான தொழில்களில் உள்ள நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கான ஒப்பந்தங்கள் வரவிருக்கும் வாரங்களில் காலாவதியாகவிருக்கும் நிலையில், எதிர்ப்பின் இந்த சக்திவாய்ந்த அறிகுறி வெளிவருகிறது.
பிரித்தானியாவில், கார்டியன் இதழ் கடந்த வாரம் ஒரு தலையங்கத்தில் பின்வருமாறு எச்சரித்தது. பிரித்தானியா “சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியினுள் சறுக்கி சென்றுகொண்டிருக்கிறது. இவ்வாறான ஒன்றை பல தசாப்தங்களாக மக்கள் பார்க்கவில்லை. இந்த இலையுதிர் காலத்தில் வீட்டு எரிபொருளுக்கான கட்டணங்கள் 2,400பவுண்டுகளுக்கு மேல் இருக்கும். அதே சமயம் ஒரு மளிகைக் கடைகளில் விலை ராக்கெட்டில் உயர்ந்து வருகிறது. பிரித்தானியாவில் பணவீக்கம் கடந்த மாதம் 7 சதவீதத்தை எட்டியது. இது 1992 க்குப் பின்னர் மிக உயர்ந்த விகிதமாகும்.
கார்டியன் பின்வருமாறு குறிப்பிட்டது, 'ஒரு மதிப்பீட்டின் படி, மூன்றில் ஒரு பிரித்தானியர்களான 23.5 மில்லியன் மக்களால் இந்த ஆண்டு வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாது இருக்கும்'.
ஒவ்வொரு நாட்டிலும், வேலைநிறுத்தம் செய்பவர்களும் ஆர்ப்பாட்டக்கார்களும் வாழ்க்கைக்கும் இறப்புக்கும் இடையில் போராடுகிறார்கள். கடந்த ஆண்டை விட உலக உணவுப் பொருட்களின் விலை 34 சதவீதம் உயர்ந்துள்ளது. உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு மிருகத்தனமானது மற்றும் பொறுப்பற்றது. ஆனால் நேட்டோ அரசாங்கங்கள் மற்றும் அவர்களின் பெருநிறுவன ஊடக பிரச்சாரகர்களின் முதலைக் கண்ணீரை யார் நம்ப முடியும். அவர்களின் போரை நீடிப்பதால், பில்லியன் கணக்கானவர்களை அது வேறுபட்ட மட்டங்களில் பசியை எதிர்கொள்ளத் தள்ளுகிறது?
வறிய மேற்கு மற்றும் கிழக்கு ஆபிரிக்காவில், மில்லியன் கணக்கான மக்கள் பட்டினியை எதிர்கொள்கின்றனர். மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவின் ஏற்கனவே குறைந்த உணவு இருப்புக்கள் சில வாரங்களில் வறண்டுவிடும். இவை அனைத்தும் கடந்த 30 ஆண்டுகால அமெரிக்கப் போர்களின் தாக்கத்தால் அழிக்கப்பட்ட பகுதிகளாகும். உக்ரேனில் போர் வசந்தகால அறுவடை வரை இழுத்துச் செல்லப்படும்போது, பில்லியன் கணக்கான மக்களுக்கு உணவளித்த பயிர்கள் இப்போது தரிசாகக் கிடக்கும். எதிர்வரும் மாதங்களில், ரஷ்யா மற்றும் பெலோருசியாவில் இருந்து உர ஏற்றுமதியில் வெட்டுக்கள் உலகளாவிய பிரதான பயிர் விளைச்சலை அரைவாசியாகக் குறைக்கும்.
கடந்த வாரம், ஐக்கிய நாடுகள் சபை உலகளாவிய தொழிலாள வர்க்கத்தின் எழுச்சி பற்றிய ஒரு தெளிவான எச்சரிக்கையை வெளியிட்டது. 'உக்ரேன் போரால் உணவு, எரிபொருள் மற்றும் நிதி அமைப்பின் மீதான உலகளாவிய தாக்கம்' என்று தலைப்பிடப்பட்ட ஆவணம் பின்வருமாறு கூறுகிறது. 'உக்ரேனில் நடந்த போர், அதன் அனைத்து பரிமாணங்களிலும், ஏற்கனவே கோவிட்-19 மற்றும் காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள உலகப் பொருளாதாரத்தில் ஆபத்தான தொடர்ச்சியான விளைவுகளை உருவாக்குகிறது. காலநிலை மாற்றம், குறிப்பாக வளரும் நாடுகளில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றது'.
வளரும் நாடுகளில் உள்ள 60 சதவீத அரசாங்கங்கள், விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மானியங்களை வழங்க முடியாத அளவுக்கு, உலக வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்குக் கடன்பட்டுள்ளன என்று ஐ.நா. எச்சரித்துள்ளது. சமீபத்திய எதிர்ப்புகளின் வெடிப்புத்தன்மையின் மற்றொரு முக்கிய காரணி, 'பெரும் சமூக மற்றும் பொருளாதார வடுக்களை' தொழிலாள வர்க்கத்தின் மீது உருவாக்கிய கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பேரழிவுகரமான தாக்கத்தை ஐ.நா ஒப்புக்கொண்டது”.
இப்போது எழுச்சியுறுவது, சமூக அதிருப்தியின் ஒரு 'சரியான புயல்' என்று ஐ.நா எழுதியது: 'கோவிட்-19 இன் தாக்கங்கள் காரணமாக ஏற்கனவே அதிக அளவிலான சமூகப் பொருளாதார அழுத்தத்தின் சூழலில், உணவு விலைகளின் உயர்வு சமூக அமைதியின்மையின் அழுத்தம் மிக்க விளைவுகளை அச்சுறுத்துகிறது'.
முதலாளித்துவ ஆட்சியின் முக்கிய நிறுவனங்களின் இந்த பதட்டமான அறிக்கைகள், வளர்ந்து வரும் உள்நாட்டுப் பதட்டங்களில் இருந்து திசைதிருப்ப, போரைப் பயன்படுத்தும் முயற்சியில் ஏகாதிபத்திய அரசாங்கங்கள் தோல்வியடைந்துள்ளன என்பதைக் காட்டுகின்றன. இதற்கு மாறாக, உலகப் போருக்கான உந்துதல் அதிகரித்து வருவது சமூக வெடிப்புகளை உருவாக்குகிறது.
உலகம் முழுவதிலும் தன்னெழுச்சியான எதிர்ப்புகள் வெடிப்பது, உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் பாரிய நெருக்கடியால் உருவாக்கப்பட்ட ஒரு புறநிலை நிகழ்ச்சிப்போக்காகும். இந்த புறநிலை நிகழ்ச்சிப்போக்கை சோசலிசத்திற்கான ஒரு நனவான இயக்கமாக மாற்றுவது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு என்ற புரட்சிகர தலைமையை கட்டியெழுப்புவதுடன் தொடர்புபட்ட ஒரு கேள்வியாகும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, அதனுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகள், சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பு மற்றும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி ஆகியவை சர்வதேச தொழிலாள வர்க்க ஐக்கியத்திற்கான தினமான மே 1 இல் மேதின இணையவழி பேரணியை நடத்துகின்றன.