இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
ஜனாதிபதி வீட்டுக்குப் போ! அரசாங்கமே பதவி விலகு!, பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் பொருட்களின் விலை உயர்வை நிறுத்து! போன்ற கோஷங்களை எழுப்பிக்கொண்டு இலட்சக்கணக்கான அரசாங்க ஊழியர்கள் ஏப்பிரல் 8 வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 500,000 பேர் கலந்து கொண்டதாக வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.
இதற்கிடையில், சுகாதார ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பல குழுக்கள், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட போராட்டங்களை நடத்தின.
இலங்கை முழுவதும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது. தொழிலாளர்கள், இல்லத்தரசிகள், பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்கள் தீவின் பல பகுதிகளில் தினசரி போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்களை ஏற்பாடு செய்கிறார்கள். பணவீக்கம், எரிபொருள் மற்றும் இதர பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் ஒவ்வொரு நாளும் பல மணிநேர மின்வெட்டுக்கு மத்தியில், எதிர்ப்பாளர்களின் கோபம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இராஜபக்ஷ அரசாங்கம், கோவிட்-19 தொற்று நோய் மற்றும் உக்ரேனில் நடக்கும் அமெரிக்க-நேட்டோ பினாமி யுத்தம் போன்றவற்றால் ஏற்பட்ட நெருக்கடியின் சுமையை உழைக்கும் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டதால், மில்லியன் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் சுமார் 1000 அரச ஊழியர்கள், 'மக்கள் போராட்டம் வாழ்க', 'அரசாங்கத்தை வெளியேற்று', 'ஊழல் செய்பவர்களைத் தண்டி', 'கோட்டா-மஹிந்த பசில், நாமல் வீட்டுக்குப் போ' போன்ற கோஷங்களை எழுப்பியவாறு நேற்று மாலை கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திற்கு முன்பாக பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் நான்கு டஜன் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான 'தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம்' நேற்று பொது ஊழியர்களின் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. சில தொழிற்சங்கங்கள் ஜேவிபியால் கட்டுப்படுத்தப்படுகின்றன, மற்றவை சுயாதீனமானவை என்று கூறிக்கொள்பவை.
எவ்வாறாயினும், இந்த தொழிற்சங்கங்கள் அனைத்தும் சமீபத்திய வருடங்களில் தொழிலாளர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களை காட்டிக் கொடுத்தன. தொழிற்சங்கங்கள், நாட்டின் கடுமையான பொருளாதார நெருக்கடியை அறிந்திருப்பதால், ஊதியக் கோரிக்கையை வலியுறுத்த மாட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளன. எவ்வாறாயினும், அரசாங்கத்திற்கு எதிரான உழைக்கும் மக்களின் தொடர்ச்சியான போராட்டத்தில் சேரவேண்டும் என்ற தொழிலாளர்களின் அழுத்தம், தொழிற்சங்கங்களை வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க நிர்ப்பந்தித்தது. ஆனால் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை ஒரு நாளுக்கு மட்டுப்படுத்தின.
கொழும்பில், சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) உறுப்பினர்கள், “இலங்கையில் இராஜபக்ஷ அரசாங்கத்தை தூக்கி எறி! நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழி! சிக்கன நடவடிக்கையும் பட்டினியும் வேண்டாம்! அனைவருக்கும் உணவு, எரிபொருள் மற்றும் மருந்தைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு சோசலிச நடவடிக்கைக்காகப் போராட நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கு! என்ற தலைப்பிலான அறிக்கை தொழிலாளர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது.
கண்டிக்கு அருகில் உள்ள பிலிமத்தலாவையில் சுமார் 100 அரச ஊழியர்கள் கலந்து கொண்ட போராட்டம் ஒன்று இடம்பெற்றது. 74 வருடங்களாக நாட்டை நாசப்படுத்திய திருடர்கள் வேண்டாம், மக்களை காக்கும் அரசாங்கம் வேண்டும் என்ற கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.
சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களின் குழுவும் தங்களது சொந்த கோஷங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். அரசாங்கத்தை தூக்கிவீசு!, வெளிநாட்டுக் கடனை நிராகரி!, பெருநிறுவனங்களை தேசியமயமாக்கு! தொழிலாளர்களின் நடவடிக்கை குழுக்களை உருவாக்கு! தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்காக போராடு! போன்ற கோஷங்கள் அவற்றில் இருந்தன.
ஒரு மணி நேரம் நீடித்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர், கலந்துகொண்டிருந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் பண்டாரநாயக்கா, “எங்களுக்கு மக்கள் சார்பான அரசாங்கம் வேண்டும்” எனக் கூறினார். சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் அது தொடர்பாக என்ன நினைக்கிறார்கள் என தெரிந்து கொள்ள விரும்புவதாக அவர் கூறினார்.
அதற்கு பதிலளித்த சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர் காமினி கருணாதிலக, 'அனைத்து பிரச்சாரங்களினதும் முக்கிய அம்சம் கோட்டாபய இராஜபக்ஷவை வெளியேற்றுவதாகும். இந்தக் கோரிக்கையை நாமும் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், அடுத்து என்ன நடக்கும் என்பதுதான் கேள்வி. தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கவும், உழைக்கும் மக்களுக்கு சேவை செய்யவுமான ஒரு ஆட்சி கொண்டுவரப்பட வேண்டும். அதற்கு ஒரு வேலைத் திட்டமும் அமைப்பும் தேவை,” என விளக்கினார்.
இவ்வாறானதொரு வேலைத்திட்டத்திற்காகப் போராடுவதற்கு வேலைத் தளங்களிலும் அதன் அயல்புறங்களிலும் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை கருணாதிலக வலியுறுத்தினார். 'பெரிய நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட வேண்டும் மற்றும் வெளிநாட்டு கடன்கள் நிராகரிக்கப்பட வேண்டும். இது உலக முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான போராட்டம். இந்த போராட்டத்தில், நமது வெளியீடு உலக சோசலிச வலைத் தளமாகும். தொழிலாளர்களுக்கு போராட்டத்தை வழிநடத்த ஒரு கட்சி தேவை. அதற்காகத்தான் நாங்கள் சோசலிச சமத்துவக் கட்சியை கட்டமைக்கிறோம்.”
சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர், 2011ல இல் எகிப்தில் ஒரு புரட்சிகர எழுச்சி ஏற்பட்டது, ஆனால் தொழிலாளர்களிடம் புரட்சிகர கட்சி இருக்கவில்லை. இதைப் பயன்படுத்திக் கொண்ட இராணுவம் அமெரிக்க ஆதரவுடன் எழுச்சியை தோற்கடித்து, மீண்டும் சர்வாதிகாரத்தை நிறுவியது. என்று கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்ற ஏனையவர்களும் சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினரின் பதிலைக் கவனத்துடன் கேட்டனர். சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கையின் பிரதிகளை அவர்கள் பெற்றுக்கொண்டனர் .
தாதியர்கள், சுகாதார தொழில் வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் குடும்ப சுகாதாரப் பணியாளர்கள் உட்பட சுமார் 800 சுகாதாரப் பணியாளர்கள் கண்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வைத்தியசாலையில் இருந்து கண்டிக்கு சுமார் அரை கிலோமீற்றர் தூரம் நடந்து சென்று திரும்பியுள்ளனர்.
’74 ஆண்டு கால சாபத்திற்கு முடிவு கட்டுவோம்’, ’மக்கள் விரோத அரசை தூக்கி எறிவோம்’, ’அடக்குமுறைச் சட்டங்களை ஒழிப்போம்’, ’மக்களின் பொருளாதாரச் சுமையை அதிகரிக்கும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்திக் குரல் எழுப்பினர்.
சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் கட்சியின் அறிக்கை துண்டுப் பிரசுரங்களை போராட்டக்காரர்கள் மத்தியில் விநியோகித்தனர்.
சுமார் 2,000 மாணவர்கள் நேற்று களனிப் பல்கலைக்கழகத்திலிருந்து ஐந்து மைல் தொலைவிலுள்ள பாராளுமன்றம் வரை பேரணியாகச் சென்றனர். ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். மாணவர்களின் அணிவகுப்பை தடுத்து நிறுத்திய கலகத்தடுப்பு பொலிஸார், நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்தனர்.
ஏப்ரல் 7 அன்று, சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் கொழும்பு கோட்டையில், ஜே.வி.பி-யின் கட்டுப்பாட்டில் உள்ள அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கத்தின் மாநாட்டில், துறைமுகத் தொழிலாளர்கள் மத்தியில் கட்சி அறிக்கைகளை விநியோகித்தனர்.
நாட்டில் வெளிவரும் சமூகப் பேரழிவைத் தீர்க்க சோசலிச சமத்துவக் கட்சி முன்வைக்கும் வேலைத்திட்டம் பற்றிய கலந்துரையாடலில் தொழிலாளர்கள் பங்குபற்றுவதை தடுக்கும் வகையில், தொழிற்சங்கத் தலைவர்கள், தொழிலாளர்களை அவசரமாக மாநாட்டு மண்டபத்திற்குள் அழைத்துச் சென்றனர். சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் கொழும்பில் நெரிசலான பிரிஸ்டல் தெருவில் நடந்து சென்ற தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே தங்கள் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
“நிச்சயமாக நாம் ‘கோட்டா வீட்டுக்குப் போ’ என்பதைத் தாண்டிச் செல்ல வேண்டும். சஜித் பிரேமதாசவை ஆட்சிக்கு கொண்டு வர கோட்டாவை வீட்டிற்கு செல்லுமாறு நாங்கள் கேட்கவில்லை” என தனியார் துறை ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உத்தரவின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் சிக்கன நடவடிக்கைகள் பற்றிய கலந்துரையாடல்களும் வளர்ந்தன. “சர்வதேச நாணய நிதிய உத்தரவுகளைப் பற்றி யாரும் பேசவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி அல்லது ஜேவிபியோ அவற்றைப் பற்றி பேசவில்லை. அதாவது அவர்களும் அதற்கு எதிரானவர்கள் அல்ல. அப்படித்தானே?'' என அவர் கேட்டார்.
சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய ஆணையான பொதுத்துறையை மறுசீரமைப்பது குறித்தும் அவர் பேசினார். 'மறுசீரமைப்பு என்றால் அதிகமான தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள். வேலையாட்கள் அதிகம் என்று சொல்வார்கள். ஆனால் அவை ஏன் அதிகம்? முதலாளித்துவத்தின் இலாப நோக்கத்துக்காக அப்படிச் சொல்கிறார்கள்’.
இந்தத் தாக்குதல்களைத் தோற்கடிக்க, தொழிலாளர்கள் சோசலிசக் கொள்கைகளுக்காகப் போராட தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க வேண்டும் என்பதை சோசலிச சமத்துவக் கட்சி உறுப்ப்பினர்கள் தெளிவுபடுத்தினர்.
இளைஞரான மனுஷ, “இராஜபக்ஷ அரசாங்கத்தை வீழ்த்தி என்ன செய்யப் போகிறார்கள் என்பது பற்றி யாரும் பேசுவதில்லை. உங்கள் தீர்வு என்ன?' என வர் கேட்டார். உழைக்கும் வர்க்கத்தின் போராட்டத்தில் இளைஞர்கள் இணைந்து, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்காக போராட வேண்டும் என்று பிரச்சாரகர்கள் அவரிடம் விளக்கினர்.
வியாழன் அன்று தீவின் பிரதான நகரங்களில் பல உயர்தரப் பாடசாலை மாணவர்கள் போராட்டங்களை நடத்தினர். சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பின் செயற்பாட்டாளர்களின் குழு ஒன்று, கம்பஹா பிரதான ரயில் நிலையத்திற்கு அருகில் நூற்றுக்கணக்கான பாடசாலை மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தில் தலையீடுசெய்தனர். ’கோட்டா வீட்டுக்குப் போ’, ’தவறான தலைமுறையுடன் நீங்கள் மோதியுள்ளீர்கள்’, ’திருடிய செல்வத்தை மீட்டு, நாட்டுடமையாக்கிடுங்கள்’, ’எம்மிடம் திருடிய பணத்தை மீள கொடு’ என்று அவர்கள் கோஷமிட்னர்.
எதிர்வரும் மே மாதம் 11 ஆம் தரம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள ஜயங்கா ஷிரோமி, அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்கத் தள்ளப்பட்ட நிலைமைகள் குறித்து விளக்கமளித்தார். “தேர்வு நெருங்கிவிட்டதால் கல்வி கட்டணம் அதிகம். என் தந்தை இறந்துவிட்டார். என் அம்மா குமாஸ்தாவாக வேலை செய்கிறார். அனைத்து செலவுகளும் அவளது சம்பளத்தில் ஈடுசெய்யப்படுகின்றன. கல்விக்கு செலவு செய்வது கடினம். எனவே நான் சுயதொழில் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்ப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
'மின்சார தடை காரணமாக இரவில் படிப்பது மிகவும் சிரமம். மண்ணெண்ணெய் இல்லாததால் விளக்கு எரிக்க வழியில்லை. மெழுகுவர்த்தி விலையும் உயர்ந்துள்ளது. நம் பெற்றோர் வாழ்க்கையில் கஷ்டப்பட்டனர், இப்போது நாமும் கஷ்டப்படுகிறோம். இந்த துன்பத்திற்கு முடிவே இல்லையா? இது முடிவுக்கு வர வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.
“எங்கள் எந்தப் பிரச்சினையிலும் அவர்கள் கவனம் செலுத்தாததால், எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஆதரவளிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளேன். ஆனால் உங்கள் விளக்கத்திற்குப் பிறகு, எந்தவொரு போராட்டத்தையும் முன்னெடுத்துச் செல்ல சரியான அரசியல் புரிதல் தேவை என்பதை உணர்ந்தேன். அல்லது இது ஒரு பொதுக் கூச்சலைத் தவிர வேறில்லை,” என்று அவர் கூறினார்.
சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரகர்கள் கூறிய விடயத்தை மற்றொரு மாணவரான உதார லக்ஷான் பின்வருமாறு கூறினார்: “இராஜபக்ஷவிற்குப் பிறகு அதிகாரத்திற்கு வரும் எந்த முதலாளித்துவ அரசாங்கமும் அதே கொள்கையையே பின்பற்றும். அது ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கமாக இருந்தாலும் சரி ஜேவிபி அரசாங்கமாக இருந்தாலும் சரி, அது சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த ஒப்புக் கொள்ளும். மக்கள் வேலையையும் உணவையும் இழந்து கஷ்டப்படுவார்கள்.”
இலங்கையில் தொடர்ச்சியாக வளர்ந்து வரும் உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களின் இயக்கம், அரசாங்கத்தையும் பெருவணிகத்தையும் சர்வதேச வங்கியாளர்களையும் கிலிகொள்ளச்செய்துள்ளது.
ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், சுற்றுலா, கப்பல் மற்றும் விநியோகத்தர்கள் மற்றும் பிற சேவை வழங்குநர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முப்பத்தெட்டு அமைப்புகள், உடனடியாக 'அரசியல் ஸ்திரத்தன்மையை' வலியுறுத்தி, சபாநாயகர், கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிக்கும் வியாழன் அன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன.
“பாரிய மக்கள் எழுச்சிக்கு வழிவகுத்துள்ள, வெகுஜனங்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடைமுறை இடைக்காலத் தீர்வொன்றை முன்வைக்க, நிறைவேற்று அதிகாரத்துடன் இணைந்து செயற்படுமாறு” பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.