இங்கிலாந்தில் இரயில் வேலைநிறுத்தங்கள் இந்த வாரம் தொடங்குகின்றன: தொழிலாள வர்க்கத்திற்கு அதன் சொந்த மூலோபாயம் தேவை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

திங்கட்கிழமை பிற்பகலில், இரயில், கடல்சார் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்க (RMT) பொதுச் செயலாளர் மிக் லிஞ்ச், 50,000 தொழிலாளர்களை உள்ளடக்கிய தேசிய இரயில் வேலைநிறுத்தங்கள் இந்த செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகள் முன்னெடுக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தினார். கன்சர்வேடிவ் அரசாங்கம் முதலாளிகளுடன் ஒரு தீர்வை எட்டுவதை 'தீவிரமாக தடுத்ததால்' தொழிற்சங்கத்திற்கு 'வேறு தேர்வு இல்லை' என்று அவர் புகார் கூறினார். 'இந்த டோரி அரசாங்கத்தின் கழுத்தை நெரிப்பது இந்த மோதலில் எல்லா இடங்களிலும் உள்ளது' என்றார்.

ஜூன் 18, 2022 அன்று இலண்டனில் நடைபெற்ற தொழிற்சங்க காங்கிரஸ் பேரணியில் RMT தலைவர் மிக் லிஞ்ச் பேசுகிறார் (WSWS Media)

டோரிக்கள் வேலைநிறுத்தத்தை விரும்புகின்றனர் மற்றும் இரயில் தொழிலாளர்களுக்கும் மற்றும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் மீதும் தோல்வியை ஏற்படுத்த அரசின் முழு பலத்தையும் அணிதிரட்ட வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே வெளிப்படையாகத் தெரிந்ததை லிஞ்ச் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் டோரிகள் பல வாரங்களாக போர்க்கால அடித்தளத்தில் இருக்கும்போது RMT, தொழிற்சங்க காங்கிரஸ் (TUC) மற்றும் பிற தொழிற்சங்கங்கள் ஒவ்வொரு சாத்தியமான சந்தர்ப்பத்திலும் சரணடைவதற்கான விதிமுறைகளை வழங்கியுள்ளன. அவர்கள் இறுதிவரை காணவிரும்பாத ஒரு விடயம் என்னவென்றால், பல தசாப்தங்களாக காணப்படாத அளவில் ஒரு வர்க்கப் போராட்ட அலை எழுவதையே.

ஞாயிறு இரவு, டைம்ஸ் இதழ் பின்வரும் ஊதியக் கோரிக்கைகளை பட்டியலிட்டது: 188,000 தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பொது மற்றும் வணிகச் சேவைகள் சங்கம் 10 சதவீதம்; 500,000 பேரை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய கல்விச் சங்கம் மற்றும் 300,000 பேரை பிரதிநிதித்துவப்படுத்தும் NASWUT சங்கம் 11-12 சதவீதம்; 1.4 மில்லியன் உள்ளூர் அரசாங்க ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் Unite, Unison மற்றும் GMB ஆகியவை 11 சதவீதம்; 500,000பேரை பிரதிநிதித்துவப்படுத்தும் ரோயல் தாதிமார் கல்லூரி 16 சதவீதம் மற்றும் 160,000 பேரை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரித்தானிய மருத்துவ அமைப்பு இளநிலை மருத்துவர்களுக்கு 22 சதவீதத்தையும் கோருகின்றது.

ஒரு தசாப்த கால சிக்கன நடவடிக்கை மற்றும் பல நூற்றாண்டுகளில் மிக மோசமான ஊதியத் தேக்கத்திற்கு கூட்டாக தலைமை தாங்கிய இந்த அதிகாரத்துவங்களில் ஒன்று கூட இந்த கோரிக்கைகளுக்காக தீவிரமாக போராட விரும்பவில்லை. அவர்கள் இன்னும் தங்கள் உறுப்பினர்கள் வாக்களிக்கக்கூட அழைப்புவிடவில்லை. ஆனால் சமீபகாலத்தில் நினைவுகளில் உள்ள மிக மோசமான வாழ்க்கைச் செலவு நெருக்கடியை ஈடுசெய்ய ஊதியத்தை உயர்த்துவதற்காக ஜோன்சன் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பெரும்பான்மையான உணர்வு காரணமாக அவர்கள் இத்தகைய வார்த்தைகளை பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

வாக்களிக்கப்பட்ட மற்ற தொழிலாளர்களில் தொலைத்தொடர்பு தொழிலாளர்கள் சங்கத்தின் 40,000 BT தொழிலாளர்கள் மற்றும் 100,000பேர் Royal Mailஇல் உள்ளனர்; 16,000 பிரிட்டிஷ் ஏர்வேஸ் தொழிலாளர்கள் மற்றும் 500 ஹீத்ரோ விமான நிலைய ஊழியர்கள் Unite க்கு வாக்களித்தனர்; மற்றும் யோர்க்ஷயர் Arriva பேருந்து தொழிலாளர்கள் மற்றும் கோவென்ட்ரியில் உள்ள சுத்திகரிப்பு தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தமும் உள்ளன.

கருவூலத்தின் தலைமைச் செயலர் சைமன் கிளார்க், தொழிலாளர்களின் 'எதார்த்தமற்ற எதிர்பார்ப்புகளுக்கு' வசைபாடி, வெட்டுக்களுக்குத் தயாராகுமாறு கூறினார். அரசு பொதுத்துறை ஊதியத்தை 2 முதல் 3 சதவீதமாக அதிகரிக்கின்றது. ஆனால் பணவீக்கம் தற்போது 11.1 சதவீதமாக உள்ளதுடன் மேலும் அதிகரித்து வருகிறது.

உலகம் முழுவதும் இதே போராட்டம் நடந்து வருகிறது. கிரீஸ், இத்தாலி மற்றும் பெல்ஜியத்தில் பொது வேலைநிறுத்தங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தனியார்மயமாக்கலுக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை இத்தாலியில் தேசிய போக்குவரத்து வேலைநிறுத்தம் நடைபெற்றது. Ryanair தொழிலாளர்கள் ஜூன் 24-26 வரை பெல்ஜியத்திலும், போர்ச்சுகலில் ஜூன் 25-26 வரையும் பிரான்ஸில் ஜூன் 24-26, இத்தாலியில் ஜூன் 25, ஸ்பெயினில் ஜூன் 24-26,30 மற்றும் ஜூலை 1-2 ம் தேதிகளில் வேலைநிறுத்தம் செய்யவுள்ளார்கள்.

ஏப்ரல் 6, 2022 புதன்கிழமை, கிரீஸின் மத்திய ஏதென்ஸில் நடந்த 24 மணிநேர நாடு தழுவிய வேலைநிறுத்தத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர் (AP Photo/Thanassis Stavrakis)

சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் இந்த விரிவடைந்துவரும் உலகளாவிய எதிர்த்தாக்குதலில் பிரித்தானிய இரயில் வேலைநிறுத்தங்கள் ஒரு முக்கிய முன்னணியாகும். இது வெற்றி பெற, இரயில் தொழிலாளர்கள் தாங்கள் யாருக்கு எதிராகப் போராடுகிறார்கள் மற்றும் தங்கள் கூட்டாளிகள் யார் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

ஜோன்சனின் டோரி அரசாங்கம் இந்த ஆண்டு வெடிக்க அச்சுறுத்தும் வேலைநிறுத்தங்களின் அலைக்கு எதிராக பேரழிவு தரும் முதல் அடியைத் வழங்க உத்தேசித்துள்ளது. வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்குப் பதிலாக முகவர்களினூடாக ஊழியர்களை கருங்காலிகளாகக் கொண்டு வர அனுமதிக்கும் திட்டங்களை வணிகச் செயலர் குவாசி குவார்டெங் இந்த வாரம் முன்வைத்தார். இது யூலை மத்தியில் நடைமுறைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. வேலைநிறுத்தங்களின் போது குறைந்தபட்ச சேவையை உறுதிப்படுத்துவதை கட்டாயமாக்கும் சட்டத்தை இயற்றவும் அரசாங்கம் விரும்புகிறது.

RMT மற்றும் ஏனையவற்றால் தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல்போகும் ஒரு சமூக வெடிப்பைத் தூண்டும் அபாயம் இருப்பதாக தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தை பலமுறை எச்சரித்துள்ளன. அவர்கள் அரசாங்கத்தின் தாக்குதல்களை, குறைவான ஆத்திரமூட்டும் வகையில் செயல்படுத்த, அரசாங்கத்துடனான தங்கள் பெருநிறுவன கூட்டாண்மையை ஆழப்படுத்த வலியுறுத்துகின்றனர்.

இது RMT இன் ஊதியக் கோரிக்கையான வெறும் 7.1 சதவிகிதம், தற்போதைய பணவீக்க விகிதத்தை விட நான்கு புள்ளிகள் குறைவாக இருப்பதை, டிசம்பரில் ஊதியப் பேச்சு வார்த்தைகள் தொடங்கியபோது பணவீக்க விகிதம் இவ்வாறுதான் இருந்தது என்ற போலியான அடிப்படையில் இது நியாயப்படுத்துகின்றனர். பேச்சுவார்த்தைகள் எப்போது தொடங்கினாலும், தொழிலாளர்கள் இன்று வசூலிக்கப்படும் விலையில் கட்டணங்களை செலுத்த வேண்டும் மற்றும் முந்தைய ஊதிய முடக்கத்தின் இழப்பையும் ஈடுகட்ட வேண்டும்.

இதேபோல், தொழிற்சங்கம் கட்டாய பணிநீக்கங்கள் இல்லை என்று மட்டுமே வலியுறுத்துகிறது. அதே சமயம் வயதான தொழிலாளர்களின் விரக்தியைப் பயன்படுத்தி திணிக்கப்படும் ஆயிரக்கணக்கான சுயமான பணிநீக்கங்கள் என்று அழைக்கப்படுபவற்றிற்கு ஒப்புக்கொண்ட தமது வரலாற்றை வலியுறுத்துகின்றன.

RMT ஏற்கனவே ஒரு சமரசத்திற்குத் தயாராக இருப்பதாகத் தெளிவுபடுத்தியுள்ளது. ஜூன் 15 அன்று, போக்குவரத்துச் செயலர் கிராண்ட் ஷாப்ஸ் மற்றும் நிதியமைச்சர் ரிஷி சுனக் ஆகியோருக்கு 'எந்த முன்நிபந்தனையும் இல்லாமல்' பேச்சுவார்த்தை நடத்துமாறு கேட்டு லிஞ்ச் கடிதம் அனுப்பினார்.

தாம் ஒரு போர்க்குணமிக்க மாற்றீட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது என்ற RMTயின் கூற்றுகளின் முழு அளவும், நேற்று சேர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் தொழிற் கட்சியை அரசியல்ரீதியாக புனர்வாழ்வளிக்க ஒரு செய்தியாளர் கூட்டத்தில் லிஞ்ச் மேற்கொண்ட முயற்சிகளால் வெளிப்படுகின்றது.

செப்டம்பர் 29, 2021 புதன்கிழமை, இங்கிலாந்தின் பிரைட்டனில் நடைபெறும் வருடாந்திர கட்சி மாநாட்டில் பிரிட்டிஷ் தொழிற்கட்சியின் தலைவர் சேர் கீர் ஸ்டார்மர் தனது முக்கிய உரையை நிகழ்த்துகிறார். (AP Photo/Alastair Grant)

ஸ்டார்மரும் 'அவரது குழுவும்' தொழிலாள வர்க்கத்தின் 'மத்தியில் உள்ள எதிர்ப்பின் அலையை' அகற்ற வேண்டும். தொழிற் கட்சி, 'தொழிலாளர்கள் சுரண்டப்படுவதற்கு எதிரானது, அவர்கள் இந்த டோரி அரசாங்கத்திற்கு எதிரானவர்கள்' என்று அவர் வலியுறுத்தினார்.

என்ன ஒரு மாபெரும் பொய்! ஸ்டார்மர் 24 மணி நேரத்திற்கு முன்னதாகவே இரயில் வேலைநிறுத்தங்களை பகிரங்கமாக எதிர்த்தார். இது லிஞ்ச், 'தொழிற் கட்சி எங்கே இருக்கிறது என யாராவது என்னிடம் சொன்னால், அதைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்' என்று அறிவிக்க வழிவகுத்தது. லிஞ்சின் சிடுமூஞ்சித்தனமான திருப்பத்தை தொடர்ந்து, PoliticsHome தொழிற் கட்சி நிழல் அமைச்சரவை உறுப்பினர்களுக்கு ஒரு கடிதத்தை வெளியிட்டது. அதில் 'எங்களிடம் வலுவான நிலைப்பாடுகள் உள்ளன. இந்த வேலைநிறுத்தங்கள் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் முன்னோக்கி செல்வதை நாங்கள் பார்க்க விரும்பவில்லை' மற்றும் 'அதற்காக, [பாராளுமன்ற தனிச் செயலாளர்கள்] உள்ளிட்ட முன் இருக்கை உறுப்பினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்பதை நினைவூட்டுகிறோம்' எனக் குறிப்பிட்டிருந்தது.

தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற் கட்சியின் கைகளில் விடப்பட்டால், இந்த வேலைநிறுத்தங்கள் காட்டிக்கொடுக்கப்படும். இரயில் தொழிலாளர்கள் மற்றும் தொழில்துறை நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுக்கும் மில்லியன் கணக்கான பிற தொழிலாளர்கள் சரணடைய தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ஒரு தலைமையின் கீழ் போராட்டத்தில் ஈடுபட முடியாது. வெற்றிக்கான தங்களின் சொந்த மூலோபாயத்தை அவர்கள் அவசரமாக உருவாக்க வேண்டும் மற்றும் அவற்றை அவர்களின் சொந்த முன்னணி அமைப்புகள் ஊடாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சியின் (பிரிட்டன்) அறிக்கையான, 'பிரிட்டிஷ் இரயில்வே வேலைநிறுத்தம்: ஜோன்சன் அரசாங்கத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் அணிதிரட்டுவோம்!' என்பது, அரசாங்கம் மற்றும் முதலாளிகளுக்கு எதிராகப் போராடுவதற்கான ஒரு செயல்திட்டத்தை முன்வைக்கிறது. இது பின்வருவனவற்றிற்கு அழைப்பு விடுக்கிறது:

பணவீக்கத்தைக் ஈடுசெய்ய இரயில் ஊழியர்களுக்கு 20 சதவீத ஊதிய உயர்வு! இதற்காக ஓட்டுனர்கள், நடத்துனர்கள், பராமரிப்பு மற்றும் நிலைய பணியாளர்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலமாக போராட வேண்டும். பொது போக்குவரத்து, கண்ணியமான சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களுக்கு நிதி வழங்க 'பணம் இல்லை' என்ற கூற்றுக்களுக்கு எதிராக, இரயில்வே நிறுவனங்களைத் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது உட்பட சோசலிச நடவடிக்கைகளுக்காக போராட வேண்டும்.

கிரேட் பிரிட்டிஷ் இரயில்வே திட்டத்தைத் தோற்கடிப்போம்! இரயில்வே தொழிலாளர் மீது திணிக்கப்பட்ட சம்பள உறைவு, 3 பில்லியன் பவுண்டுக்கு அதிகமான வெட்டுக்கள், ஆயிரக் கணக்கான வேலைகளை நீக்குவதற்கான அச்சுறுத்தல் மற்றும் வெறுங்கூடாக விடப்பட்ட ஓய்வூதியங்கள் ஆகிய அனைத்தும் கிரேட் பிரிட்டிஷ் இரயில்வேக்கான டோரி திட்டத்தின் பாகமாகும். இந்த திட்டத்தில் இரயில்வே மீட்புக் குழு மூலமாக RMT, ASLEF மற்றும் TSSA ஜோன்சனின் பங்காளிகளாக உள்ளன.

ஒவ்வொரு துறையிலும் நிலவும் பிரச்சினைகளை விரிவாக்கி ஒன்றாக்குவோம்! தொழிலாளர்கள் ஒரே மாதிரியான பிரச்சினைகளுக்காகவே வேலைநிறுத்த நடவடிக்கைக்கு வாக்களிக்கின்றனர், தீர்மானமாக உள்ள மிகப் பெரும் செல்வந்த முதலாளிமார்களை எதிர்கொள்கின்றனர். போராட்டங்களைப் பிளவுபடுத்தி ஒடுக்குவதற்கான தொழிற்சங்கங்களின் முயற்சிகளைக் கடந்து, ஒரு பொது வேலைநிறுத்தத்தை ஒழுங்கமைக்க தயாரிப்புகள் செய்தாக வேண்டும்.

ஜோன்சன் அரசாங்கத்தைப் பதவியிலிருந்து கீழிறக்க ஓர் அரசியல் போராட்டத்தைத் தொடுப்போம்! பெருநிறுவனங்கள் மற்றும் பெரும் செல்வந்தர்களுக்குச் சார்பாக ஒவ்வொரு துறையிலும் வரலாற்று ரீதியான தாக்குதல்களை நடைமுறைப்படுத்தும் ஜோன்சன் அரசாங்கத்திற்கு எதிராக நேரடியாக ஓர் அரசியல் சவாலை முன்வைக்காமல் ஒரு பொது வேலைநிறுத்தத்தால் அதன் இலக்கில் வெற்றி அடைய முடியாது.

தொழிலாள வர்க்கத்தின் தலைமையாக சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டி எழுப்புவோம்! ஜோன்சனின் டோரிக்களுக்கு மாற்றீடாக தொழிற்கட்சியிடம் எதுவும் இல்லை — எதேச்சதிகாரம், இராணுவவாதம், பாரிய நோய்தொற்று மற்றும் சிக்கன நடவடிக்கைகளில் அவை ஒன்றுக்கொன்று சமமான வலதுசாரி கட்சிகளாகும். தொழிலாளர்களுக்கு அவர்களின் நலன்களுக்காக போராட ஒரு சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டத்தைக் கொண்ட அவர்களின் சொந்த கட்சி வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளுக்கான போராட்டத்திற்கு, எல்லாவற்றிற்கும் மேலாக, புதிய போராட்ட அமைப்புகளை உருவாக்குவதும், தொழிலாளர்களுக்குப் பொறுப்புக்கூறும் சாமானிய தொழிலாளர் குழுக்களை அமைத்து நிறுவனங்கள், தொழிற்துறைகள் மற்றும் தேசிய எல்லைகளை கடந்து தொடர்புகளை உருவாக்குவதும் தேவைப்படுகிறது. இந்த முன்னோக்கிற்காக போராட விரும்பும் தொழிலாளர்கள் தங்கள் சக ஊழியர்களுடன் இதைப் பற்றி விவாதித்து சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை இன்றே தொடர்பு கொள்ளுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

Loading