திட்டமிடப்பட்ட ஆலை மூடலுக்கு எதிராக இந்திய ஃபோர்டு தொழிலாளர்கள் உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தைத் தொடர்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு அருகிலுள்ள ஃபோர்டு மோட்டார்ஸ் அசெம்பிளி ஆலையில் 1,500 க்கும் மேற்பட்ட வாகனத் தொழிலாளர்கள், ஒரு வாரத்திற்கும் மேலாக ஆலையை மூடுவதற்கு எதிராக வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்தனர். தொழிலாளர்கள் ஆலையை ஆக்கிரமித்து, கார் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்தியுள்ளனர்.

இந்தியாவில் உள்ள மறைமலைநகரில் உள்ள ஃபோர்டு நிறுவனத்தின் சென்னை அசெம்பிளி ஆலையை ஆக்கிரமித்துள்ள வாகனத் தொழிலாளர்கள் (Photo taken by an autoworker in India)

வேலைநிறுத்தம் பெரும்பாலான தொழிலாளர்களை உள்ளடக்கிய இளைய தொழிலாளர் குழுக்களால் தொடங்கப்பட்டது. நிர்வாகத்தின் பழிவாங்கல் காரணமாக பணி நீக்க ஊதியத் தொகையை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் சுமார் 500 வயதான தொழிலாளர்கள் உள்ளிருப்பில் சேரவில்லை என்றாலும், அவர்கள் மறியல் போராட்டத்தை கடக்க மறுத்து வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளித்துள்ளனர். இம்மாத இறுதியில் ஆலை மூடப்படுவதற்கு முன்னதாக 1,400க்கும் மேற்பட்ட கார்களை முடிக்க வேண்டும் என்ற நிறுவனத்தின் திட்டங்களை வேலைக்கான நடவடிக்கை சீர்குலைத்துள்ளது. 'நாங்கள் கார்களை உருவாக்கி முடித்துவிட்டால், நிர்வாகத்திற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை, மேலும் நாங்கள் எதையும் கோர முடியாது' என்று ஒரு அநாமதேய தொழிலாளி The Print இடம் கூறினார்.

இந்த வேலைநிறுத்தத்திற்கு முன்பாக, ஆலையை மூடுவதற்கு முன் ஊதியம் வழங்கக் கோரி தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் போராட்டங்களை நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை மிரட்டுவதற்காக ஒரு பெரும் போலீஸ் படை தொழிற்சாலைக்கு விரைந்தது. இருப்பினும், தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர், பின்னர் காவல்துறையின் மிரட்டலையும் மீறி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சென்னை ஃபோர்டு வேலைநிறுத்தம், கடுமையான சிக்கன நடவடிக்கைகளைத் திணிக்கும் அரசாங்கங்கள் மற்றும் பெருநிறுவனங்களின் முயற்சிகளுக்கு எதிராக வேலைகள், கண்ணியமான ஊதியங்கள் மற்றும் சிறந்த வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகளைப் பாதுகாப்பதில் வர்க்கப் போராட்டத்தின் உலகளாவிய எழுச்சியின் ஒரு பகுதியாக உள்ளது. ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் விண்ணைத் தொடும் விலைவாசி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக பதவி விலகக் கோரி இலங்கையில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் கடந்த இரண்டு மாதங்களாக பாரிய போராட்டங்களிலும் வேலைநிறுத்தங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மே 2021 இல், டெல்டா கோவிட்-19 மாறுபாடு இந்தியா முழுவதும் பரவியதால், சென்னை ஃபோர்டு ஆலையில் உள்ள தொழிலாளர்கள் கொரியாவை தளமாகக் கொண்ட ஹூண்டாய் மோட்டார்ஸ் மற்றும் பிரெஞ்சு ஜப்பானிய நிறுவனங்களுக்கு சொந்தமான ரெனால்ட்-நிசான் ஆகிய பிற தமிழ்நாட்டு ஆட்டோ ஆலைகளில் தங்கள் சகோதர சகோதரிகளுடன் உள்ளிருப்பு வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களை நடத்தினர். ஆலைகளில் நூற்றுக்கணக்கான நோய்த்தொற்றுகள் மற்றும் 25 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இறந்ததைத் தொடர்ந்து, அவர்கள் COVID-19 க்கு எதிராக சுகாதாரப் பாதுகாப்பைக் கோரினர். இந்தக் கிளர்ச்சியால் வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் ஆலைகளை ஐந்து நாட்களுக்கு மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இருப்பினும், தொழிற்சங்கங்களின் உதவியுடன் உற்பத்தியை மறுதொடக்கம் செய்ய அவர்கள் விரைவாக நகர்ந்தனர்.

ஃபோர்டு இந்தியா அடுத்த செப்டம்பரில், அதன் செயல்பாடுகளை முடிப்பதாக அறிவித்தது, சென்னை ஆலையையும் குஜராத்தில் உள்ள மற்றொரு ஆலையையும் மூடுவதாக அறிவித்தது. மூடல் நேரடியாக 4,000 வேலைகளை அச்சுறுத்துகிறது. இருப்பினும், சென்னை தொழிற்சாலையை மூடுவதனால் மறைமுகமாக மொத்தம் சுமார் 40,000 வேலைகள் பாதிக்கப்படும். ஃபோர்டு 1990 களின் நடுப்பகுதியில் இருந்து இந்தியாவில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் $2 பில்லியனுக்கும் அதிகமான இழப்புகள் குவிந்துள்ளது.

இந்தியாவில் இருந்து இந்நிறுவனம் வெளியேறுவது வாகனத் துறையில் தீவிரமான உலகளாவிய மறுசீரமைப்பின் ஒரு பகுதியாகும், இது பெரும் தொற்றுநோய்க்கு முன்பே நடந்து வருகிறது, ஆனால் அதன் பின்னர் அது பெரிதும் துரிதப்படுத்தப்பட்டது. மின்சார வாகனங்கள் (EV) உற்பத்தியில் பல பில்லியன் டாலர் முதலீடுகளை ஆட்டோ நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. இதற்கு பணம் செலுத்த, தொழிலாளர் செலவுகள் குறைக்கப்பட வோல் ஸ்ட்ரீட் பெரும் அழுத்தத்தை கொடுத்து வருகிறது. அடுத்த ஐந்து முதல் 10 ஆண்டுகளில் EV களுக்கு மாற்றத்தை விரைவுபடுத்த ஃபோர்டு $10–$20 பில்லியனைச் செலவழிக்கத் திட்டமிட்டுள்ளதாக ப்ளூம்பெர்க்கில் ஒரு கட்டுரை தெரிவித்தது. இந்த மாற்றத்திற்கான செலவு இன்னும் தெளிவற்ற முறையில் வரையறுக்கப்பட்ட 'மறுசீரமைப்பு' திட்டத்துடன் செலுத்தப்படும்.

பாரம்பரிய உள் எரிப்பு வாகனத்துடன் ஒப்பிடும்போது, மின்சார வாகனம் தயாரிப்பதற்கு மிகவும் குறைவான நகரும் பாகங்கள் மற்றும் ஒரு சிறிய எண்ணிக்கையில் பணியாளர் போதுமானது. நிறுவனம் அதன் புதிய EV பேட்டரி தொழிற்சாலைகளில் மிகக் குறைந்த ஊதியம் பெறும் உற்பத்தித் தொழிலாளர்களை இன்னும் குறைந்த அடுக்குடன் சேர்க்க திட்டமிட்டுள்ள அதே நேரத்தில், இப்போதைக்கு, ஃபோர்டின் குஜராத் ஆலையை டாடா மோட்டார்ஸ் எந்த வேலையும் குறைக்காமல் கையகப்படுத்தியுள்ளது. இதே பணிப் பாதுகாப்பைக் கோரி சென்னை தொழிலாளர்கள் பல மாதங்களாக அணிதிரள்கின்றனர். இந்த தொழிற்சாலையில் 2,700 நிரந்தரத் தொழிலாளர்களும், 600 ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணியாற்றினர். பல தொழிலாளர்கள் சென்னையில் குடியேற வீட்டுக் கடன் கூட வாங்கி உள்ளனர், அதனால்தான் ஆலை மூடப்படும் செய்தி அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நிர்வாகம் இழப்பீட்டுத் தொகுப்புகளை வழங்குவதன் மூலம் மூடுதலுக்கான எதிர்ப்பை அடக்க முயல்கிறது. ஒரு தொழிலாளி இந்தோ-ஆசிய செய்தி சேவையிடம் கூறினார், “ஃபோர்டு நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும் பூர்த்தி செய்யப்பட்ட சேவைக்கு 85 நாட்கள் ஊதியத்தை வழங்குகிறது. மேலும், சேவையின் ஒவ்வொரு ஆண்டுக்கும் நிலையான தொகை 42,500 ரூபாய் (US $545) வழங்கப்படும். முன்னதாக அவர்கள் 75 நாட்களுக்கான சம்பளம் மற்றும் 20,000 ரூபாய் (அமெரிக்க $258) என்ற நிலையான தொகையை ஒவ்வொரு பூர்த்தி செய்யப்பட்ட சேவைக்கும் வழங்கியிருந்தனர்.

32 வயதான நிரந்தரத் தொழிலாளியான பிரகாஷ், உலக சோசலிச வலைத் தளத்திடம், “இந்த ஆலை மூடல் காரணமாக, எங்கள் முழு குடும்பமும் நெருக்கடியான சூழ்நிலையில் உள்ளது. வீட்டுக் கடன்கள் உட்பட பல கடன்களை நாங்கள் பெற்றுள்ளோம், இப்போது அவற்றை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது என்று தெரியவில்லை. பள்ளியில் படிக்கும் எனது குழந்தைகள் உட்பட எனது முழு குடும்பமும் நிதி ஆதாரம் இல்லாததால் இப்போது எங்கள் கிராமத்திற்குத் திரும்ப வேண்டியுள்ளது. இந்தியாவில் உள்ள அரசு, மாநில மற்றும் கூட்டாட்சி ஆகிய இரண்டும், பெரும் நிறுவனங்களின் கருவிகளாகச் செயல்படுகின்றன.

ஃபோர்டு ஆலையின் வேலைநிறுத்தம்/ஆக்கிரமிப்பு இப்போது இரண்டாவது வாரமாக தொடர்கிறது (Supplied to the WSWS by a Ford worker)

வேலைநிறுத்தம் மற்றும் ஆலை ஆக்கிரமிப்பு மே 31 அன்று தொடங்கப்பட்டது, ஆனால் ஃபோர்டின் சென்னை கார் ஆலையில் உற்பத்தி வரிசை உண்மையில் முந்திய நாள் நிறுத்தப்பட்டது, தொழிலாளர்கள் எந்தப் போராட்டமும் நடத்துவதைத் தடைசெய்யும் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகக் கூறினர். 'உற்பத்தியை சீர்குலைக்கும் எந்த செயலிலும் நான் ஈடுபடமாட்டேன் (உட்கார்ந்து வேலைநிறுத்தம், மெதுவாக வேலைநிறுத்தம், ஆகியவை உள்ளிட்ட) அல்லது ஆலை வளாகத்திற்குள் அங்கீகரிக்கப்படாத கூட்டங்களில் ஒரு பகுதியாக இருக்கமாட்டேன்' என்று அந்தப் 'பணியாளர் உறுதிமொழி' யில் இருக்கிறது.

ஃபோர்டின் சென்னையில் உள்ள தொழிற்சங்கங்கள் ஆலை மூடலுக்கு எதிராக இந்தியா முழுவதும் அல்லது சர்வதேச அளவில் வாகனத் தொழிலாளர்களை பரந்த அளவில் அணிதிரட்டுவதை எதிர்க்கின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் ஆலைகள் அமைப்பதை அச்சுறுத்தும் எதையும் செய்ய அவர்கள் விரும்பவில்லை. தொழிற்சங்கங்கள் இப்போது தொழிலாளர்கள் எடுத்த வேலைநிறுத்த முன்முயற்சியை ஆதரிப்பதாகக் கூறுகின்றன. இருப்பினும், பணிப் பாதுகாப்பு தொடர்பான தொழிலாளர்களின் கோரிக்கைகளை அவர்கள் ஏற்கவில்லை. மாறாக, அவர்கள் தொழிலாளர்களுக்கான மேம்பட்ட பணிநீக்க ஊதியத் தொகை (severance compensation) குறித்து முழுமையாக கவனம் செலுத்துகின்றனர். தொழிற்சங்கங்களை எதிரொலிக்கும் முதலாளித்துவ பத்திரிகைகள் வேலைநிறுத்தம், பணிநீக்க ஊதியத் தொகை குறித்து மட்டுமே என்று அறிவிப்பு வெளியிடுகின்றன.

சென்னை ஃபோர்டு ஊழியர் சங்கம் (CFEU) அனைத்து தொழில்துறை நடவடிக்கைகளையும் மட்டுப்படுத்தப்பட்ட எதிர்ப்புக்களுக்குள் மட்டுப்படுத்தியுள்ளது, முக்கியமாக தொழிலாளர்களை தமிழ்நாடு அரசு மற்றும் நிறுவனத்தை நோக்கிப் பயனற்ற முறையீடுகளைக் கோருவதுடன் கட்டுப்படுத்துகிறது. திமுக தலைமையிலான தமிழ்நாடு மாநில அரசு, அதன் முன்னோடியான AIADMK மற்றும் கூட்டாட்சி மட்டத்திலும் ஆட்சியில் உள்ள வலதுசாரி, இந்து மேலாதிக்க பாரதீய ஜனதாக் கட்சி (BJP) ஆகியன, இந்திய தொழிலாளர்களுக்கு எதிராக, ஃபோர்டு போன்ற உலகளாவிய மாபெரும் ஆட்டோமொபைல் நிறுவனங்களையும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் இலாப நலன்களையும் பாதுகாப்பதில் முழு அர்ப்பணிப்புடன் உள்ளன.

ஆலை மூடல்கள் மற்றும் கொடிய தொற்றுநோயை எதிர்த்துப் போராட, தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் உள்ள ஃபோர்டு தொழிலாளர்கள், இந்தியா, அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் வாகனத் தொழில்து1றை முழுவதிலும் உள்ள தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளிடம் திரும்ப வேண்டும். அத்தகைய ஒரு போராட்டத்தை நடத்த, அவர்களுக்கு புதிய போராட்ட அமைப்புக்கள் தேவை, அவை தொழிலாளர்களால் மட்டுமே கட்டுப்படுத்தப்பட வேண்டும்,மேலும் முதலாளித்துவ சார்பு மற்றும் தேசியவாத தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்திருக்கும் முதலாளித்துவக் கட்சிகளிலிருந்து சுயாதீனக செயல்பட வேண்டும்.

பிரகாஷ் (WSWS Media)

'எங்கள் தொழிற்சங்கங்கள் இதுவரை அனைத்துத் தொழிலாளர்களுடனும் எந்த ஜனநாயக விவாதத்தையும் அமைக்கவில்லை' என்று ஃபோர்டு ஸ்ட்ரைக்கர் பிரகாஷ் WSWS இடம் கூறினார். 'மாறாக, ஆரம்பத்திலிருந்தே அவர்கள் இளைஞர்கள் மற்றும் போர்க்குணமிக்க தொழிலாளர்களை தங்கள் முக்கிய கோரிக்கையை, அதாவது வேலைப் பாதுகாப்புக்கான கோரிக்கையை திரும்பப் பெறுமாறு அவர்களை சமாதானப்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நிர்வாகத்தின் கோரிக்கைகளை ஏற்று தொழிற்சங்கங்கள் எங்களை தனிமைப்படுத்துவதை என்னால் தெளிவாக பார்க்க முடிகிறது.'

“இந்தப் போராட்டம், அருகில் உள்ள தொழில்துறை மண்டலங்களிலும், இந்தியாவின் பிற இடங்களிலும் உள்ள தொழிலாளர்களைத் திரட்டி விரிவாக்கப்பட வேண்டும் மற்றும் தொழிற்சங்கங்களுடன் முறித்துக் கொள்ள வேண்டும் என்ற உங்கள் முன்மொழிவுடன் நான் உடன்படுகிறேன். சுயாதீனமான தொழிலாளர் குழுக்களை அமைப்பது குறித்து உங்களுடன் மேலும் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்.'

தமிழகத்தின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராமபாண்டியன், 31, கூறியதாவது: ஃபோர்டு நிறுவனம் உலகம் முழுவதும் பல பில்லியன் டாலர்களை சம்பாதித்து, எங்களைச் சுரண்டி எல்லா இடங்களிலும் புதிய ஆலைகளை உருவாக்கியுள்ளது. இப்போதோ, சமீப வருடங்களில் அவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி எங்களைத் தூக்கி எறிகிறது.

ராம்பாண்டியன் (WSWS Media)

'வெளிப்படையாகச் சொல்வதானால், இந்தப் போராட்டம் உண்மையில் எங்கள் தொழிற்சங்கத்தால் அழைக்கப்படவில்லை. மாறாக, தொழிலாளர்படையில் பெரும்பான்மையயைக் கொண்ட போர்க்குணமிக்க இளம் தொழிலாளர்களால் இது ஏற்பாடு செய்யப்பட்டது. இளம் தொழிலாளர்கள் வேலைப் பாதுகாப்பை முக்கிய கோரிக்கையாக கோரி வருகின்றனர். ஆனால், சலுகை பெற்ற சிலரின் நலன்களுக்காகச் செயல்படும் தொழிற்சங்கங்களும், மேலும் சில வயதான தொழிலாளர்களும் ஆரம்பத்திலிருந்தே எங்களின் குரல்களை நசுக்கி, குறைந்த அளவிலான தீர்வுப் பொதியை நோக்கி எங்களைத் தள்ளுகின்றனர். எங்கள் தொழிற்சங்கத்திற்கு தெளிவான வேலைத்திட்டம் இல்லை என்பதையும், இந்த தொழிற்சங்கங்களுடன் முறித்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் நான் முழுமையாக ஒப்புக்கொள்கிறேன்.'

நிரந்தரத் தொழிலாளியான ரமேஷ் கூறுகையில், “நாங்கள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியவுடன், நிர்வாகத்தின் கோரிக்கையுடன் 100க்கும் மேற்பட்ட போலீஸார் உடனடியாக குவிக்கப்பட்டனர். வேலைநிறுத்தம் ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்வதால், எங்களை மிரட்டுவதற்கு மேலும் மேலும் அரச படைகள் குவிக்கப்படுகின்றன. நிறுவனங்களின் ஏஜெண்டுகளாகச் செயல்படும் திமுக மாநில அரசின் முழுமையான வழிகாட்டுதலுடனும், அறிவுப்பூர்வமாகவும் இந்தச் செயல்கள் செய்யப்படுகின்றன என்பதை அறிவோம்.

“ஃபோர்டு நிர்வாகம் நஷ்டமடைந்திருப்பதாகக் கோருவதால், எங்கள் தொழிற்சங்கம் சரியான நிதி ஆவணங்களைக் கேட்டிருக்க வேண்டும். தொழிலாளர் துறை அலுவலகங்களில் தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே நடந்த சமரச விவாதங்களின் குறிப்புகள் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை. தொழிற்சங்கத் தலைவர்கள் உண்மையான தகவல்களை மறைக்கவும் திரிக்கவும் முயற்சிக்கின்றனர், மேலும் தொழிற்சங்கத்தின் அணுகுமுறையால் தொழிலாளர் குழு ஊழியர்கள் நாளுக்கு நாள் கோபமடைந்து வருகின்றனர். போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ஒரு முக்கியமான படியாக தொழிலாளர்களிடையே ஜனநாயக விவாதம் தேவை என்பதை நான் புரிந்துகொள்கிறேன், மற்ற தொழில் துறைகளில் உள்ள தொழிலாளர்களுடன் ஐக்கியப்படுவதற்கு சுயாதீனமான தொழிலாளர் குழுக்களை அமைக்க வேண்டியதன் அவசியத்தை நான் புரிந்துகொள்கிறேன்.”

Loading