மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
பல்லாயிரக்கணக்கான இரயில் தொழிலாளர்களின் ஒரு வார உறுதியான நடவடிக்கைக்குப் பின்னர், இரயில், கடல்சார் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம் (RMT) திங்களன்று நெட்வேர்க் இரயில் (Network Rail) மற்றும் இரயில் இயக்க நிறுவனங்களுடன் (train operating companies) மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
நேற்று, RMT பொதுச் செயலாளர் மிக் லிஞ்ச், கட்டாய 7 நாள் வேலை, புதிய தரப்படுத்தல் கட்டமைப்புகள், சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள், குறைந்த ஊதியம் மற்றும் நீண்ட நேர வேலைஒப்பந்தங்கள் மற்றும் இரயில்வே ஓய்வூதியத் திட்டத்தில் பாரிய தாக்குதல்கள் உட்பட அனைத்து வெட்டுக்களும் தயாராக இருப்பதை உறுதிப்படுத்தினார். முதலாளிகள் 'மிகவும் கடினமான போக்கை எடுத்துள்ளனர். அவர்கள் 2 பில்லியன் பவுண்டுகள் வெட்டுக்களை நடைமுறைப்படுத்த “தொழிலாளர் சீர்திருத்தம்” என்று அழைக்கும் ஒரு நிகழ்ச்சிநிரலை நிறைவேற்றுவதற்காக அரசாங்கத்தின் விருப்பத்தை காட்டுகிறது என்று நாங்கள் நம்புகிறோம்' என்று விளக்கி அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
மேலும் RMT அதிகாரிகள், அரசாங்க அமைச்சர்கள் பேச்சுவார்த்தை 'அறையில் இருக்க வேண்டும்' என புகார் கூறி, நெட்வொர்க் இரயில் மற்றும் இரயில் இயக்க நிறுவனங்களுடன் பலனற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்கின்றனர்.
பணியிட சீர்திருத்தத்திற்கான ஜோன்சன் அரசாங்கத்தின் மிருகத்தனமான நிகழ்ச்சி நிரல் தெளிவாக உள்ளது. பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் ஞாயிற்றுக்கிழமை 'வழக்கம் போல் விவகாரங்களுக்கு' திரும்ப முடியாது என்றும் பயணச்சீட்டு வழங்கும் அலுவலகங்கள் பெருமளவில் மூடப்படும் என்றும் அறிவித்தார். போக்குவரத்து செயலர் கிராண்ட் ஷாப்ஸ், 'நீராவி [நீராவி இயந்திரங்களால் இரயில்கள் இயக்கப்பட்ட காலம்] காலகட்ட வேலை நடைமுறைகளை' தொடர்ந்தும் வைத்திருப்பதற்காக வேலைநிறுத்தம் செய்பவர்களை கண்டனம் செய்தார். பிரித்தானிய இரயில்வேக்கான தாட்சர்வாத நிகழ்ச்சி நிரல் திணிக்கப்படும் என்று வலியுறுத்தினார்.
RMT ஏற்கனவே அரசாங்கத்துடன் ஒரு இணக்கத்தை அடைவதற்கான தனது விருப்பத்தை சமிக்ஞை செய்துள்ளது. அதன் ஒரே கோரிக்கை பணவீக்கத்திற்கு குறைவாகவுள்ள 7 சதவீத ஊதிய ஒப்பந்தம் மற்றும் தன்னார்வ பணிநீக்கங்கள் இல்லாததிருக்கவேண்டும் என்பதாகும். ஆனால் தொழிற்சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட 'தன்னார்வத்துடன் நஷ்ட ஈட்டை பெற்று விலகிக்கொள்ளும் திட்டம்' மூலம் 2,900 க்கும் மேற்பட்ட இரயில்வே வேலைகள் ஏற்கனவே சமீபத்திய மாதங்களில் அழிக்கப்பட்டுள்ளன.
கடந்த வார தேசிய வேலைநிறுத்தங்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கான அரசியல் படிப்பினைகளில் இருந்து ஒரு இருப்புநிலைக் குறிப்பை வரைய வேண்டியது அவசியம்.
ஒரு தொழிலாள வர்க்கத்தின் தாக்குதலின் முன்னோடி
கடந்த வாரம் இரயில் தொழிலாளர்களின் மூன்று நாள் வேலைநிறுத்தம், அதே வாழ்க்கைச் செலவு நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கான தொழிலாளர்களிடையே ஒரு போராட்டத்தின் தொடக்கமாகவும், ஜோன்சன் அரசாங்கம் மற்றும் முதலாளிகளின் வர்க்கப் போர் தாக்குதலை தோற்கடிக்க விரும்புவோராகவும் பாரிய பொது அனுதாபத்தை வென்றது.
இந்த வாரம் 40,000 பிரித்தானிய தொலைத்தொடர்பு (BT) தொழிலாளர்கள், 115,000 அஞ்சல் ஊழியர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான இரயில் ஓட்டுநர்களிடையே வேலைநிறுத்தத்திற்கான வாக்கெடுப்புக்கள் நடந்து வருகின்றன. இரயில் தொழிலாளர்கள், சுத்திகரிப்புத் தொழிலாளர்கள், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோருடன் சேர்ந்து பிரிட்டிஷ் எயர்வேஸ் தரை ஊழியர்கள் இந்த கோடையில் வேலைநிறுத்தம் செய்வார்கள். செவிலியர்கள், இளநிலை மருத்துவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இவற்றை ஒன்றாகக் கொண்டு வரப்பட்டால், இந்த மோதல்கள் மூன்று மில்லியன் தொழிலாளர்களை உள்ளடக்கியிருப்பதுடன் மற்றும் ஜோன்சன் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு அடிப்படையாக அமையும்.
வர்க்கப் போராட்டத்தின் சர்வதேச மறுமலர்ச்சியின் ஒரு பகுதியாக தொழிலாளர்கள் மோதலில் நுழைகின்றனர். பெல்ஜியம், இத்தாலி மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில் பொது வேலைநிறுத்தங்கள் நடந்துள்ளன. துருக்கி மற்றும் ஸ்பெயினில் பாரிய வேலைநிறுத்தங்கள் வெடித்துள்ளன. அதே நேரத்தில் விமானிகள் மற்றும் பிற விமான ஊழியர்கள் ஐரோப்பா முழுவதும் வேலைநிறுத்தம் செய்துள்ளனர். ஒவ்வொரு கண்டத்திலும், தொழிலாள வர்க்கம் உயர்ந்து வரும் பணவீக்கம் மற்றும் உயிர்களை பலிவாங்கும் ஒரு தொற்றுநோய் தாக்கத்திற்கு எதிராக கூட்டு நடவடிக்கையை ஆரம்பித்து வருகிறது. மூன்றாம் உலகப் போரைத் தூண்டும் அச்சுறுத்தலைக் கொடுக்கும் ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிரான நேரடி இராணுவ ஆக்கிரமிப்புக்குத் தயாராகும் நிலையில் அரசாங்கங்கள் இராணுவ வரவு-செலவுத் திட்டங்களுக்கு பில்லியன்களை வாரி வழங்குகின்றன.
இரக்கமற்ற அரசு தாக்குதல்கள்
நேற்று இராணுவத் தலைவர்களுக்கு அவர் ஆற்றிய உரையில், பிரிட்டிஷ் இராணுவ ஜெனரல் சேர் பாட்ரிக் சான்டர்ஸ், உக்ரேனில் நேட்டோவின் போர் பிரிட்டனின் '1937 தருணம்' என்றும் ரஷ்யாவிற்கு எதிரான முழுமையான போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் அறிவித்தார். போர் முயற்சி என்பது 'தொழிற்துறை பங்குதாரர்களுடன்' இப்போது பணியாற்றுவதைக் குறிக்கும், 'இராணுவத்தை மிகவும் கொடியதாகவும் மேலும் பயனுள்ளதாகவும் மாற்றுவதற்கு, நமது படையினர்களின் கைகளில் சிறந்த ஆயுதங்களை சிறந்த வேகத்தில் கொண்டு செல்வதை அர்த்தப்படுத்துகிறது. போருக்கு முன்னதாக நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலை உலைகளை நாம் ஏற்றி வைக்க முடியாது; அந்த முயற்சி இப்போதே தொடங்கப்பட வேண்டும்” என்றார்.
ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிரான போர் உள்நாட்டில் வர்க்கப் போரைக் கோருகிறது. இரயில் வேலைநிறுத்தத்தை முறியடிக்கும் ஜோன்சன் அரசாங்கத்தின் உறுதிப்பாடு, தொழிலாள வர்க்கத்தின் மீதான முழுமையான தாக்குதலுக்கான தயாரிப்பு ஆகும். ஒரு பொங்கி எழும் பொருளாதார நெருக்கடியின் மத்தியில், ஆளும் வர்க்கம் உக்ரேனில் போருக்கு தொழிலாளர்களை விலை செலுத்த செய்வது மட்டுமல்லாமல், தொடர்ச்சியான தொற்றுநோயின் தாக்கத்தின் மத்தியிலும் பெருநிறுவனங்கள் மற்றும் பெரும் பணக்காரர்களுக்கான பல பில்லியன் பிணை எடுப்புகளுக்கான கட்டணத்தை தொழிலாளர்கள் செலுத்த வைப்பதிலும் உறுதியாக உள்ளது.
வேலைநிறுத்தங்களை முறியடிக்க, ஒரு வேலைநிறுத்தத்தை உடைக்கும் கருங்காலி அமைப்பை உருவாக்கும் சட்டத்தை அது தாக்கல் செய்துள்ளது. 'அத்தியாவசியத் தொழிற்துறைகளுக்கான' வேலைநிறுத்த எதிர்ப்புச் சட்டங்கள் வரைவு செய்யப்படுகின்றன. அவை குறைந்தபட்ச சேவை நிலைகளைப் பூர்த்தி செய்யாவிட்டால், போக்குவரத்து மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளில் வேலைநிறுத்தம் செய்வதற்கான உரிமையை திறம்பட முடிவுக்குக் கொண்டுவரும், வேலைநிறுத்த நடவடிக்கையை சட்டவிரோதமாக்கும். இதேபோன்ற சட்டம் இந்த வாரம் ஸ்பெயினில் ரையனேர் விமானிகளின் வேலைநிறுத்தங்களை தடை செய்ய பயன்படுத்தப்பட்டது. அந்நிறுவனம் ஒரு சேவை கூட நிறுத்தப்படவில்லை என்று பெருமையாகக் கூறிக்கொண்டது.
அரச அடக்குமுறை இத்துடன் முடிவடைந்து விடப்போவதில்லை. ஆளும் வட்டாரங்களில் நடந்த விவாதங்கள் பற்றிய ஒரு பார்வையை தாராளவாத ஜனநாயக கட்சி நாடாளுமன்ற அங்கத்தவர் முனிரா வில்சன் வழங்கினார். அப்பெண்மணி ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சியில் ஜோன்சன் 'வேலைநிறுத்தங்கள் தொடரும் பட்சத்தில் இட்டுநிரப்பும் திட்டங்களை செயல்படுத்த இராணுவம் மற்றும் பிறருடன் இணைந்து செயல்பட வேண்டும்' என்று கோரினார். 'விதிவிலக்கான நேரங்கள் விதிவிலக்கான நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கின்றன' என வலியுறுத்தினார்.
1926 பொது வேலைநிறுத்தத்தின் போது, ஸ்டான்லி பால்ட்வின் (Stanley Baldwin) இன் அரசாங்கம், கிளர்ச்சி வேலைநிறுத்தக்காரர்களுக்கு எதிராக முழு பிரிட்டிஷ் இராணுவத்தையும் அணிதிரட்டியது. குதிரைப்படை மற்றும் கவச வாகனங்களின் ஆதரவுடன் காவலர் பட்டாலியன்கள் கப்பல்துறைகளை ஆக்கிரமித்தன. துருப்புக்கள் பேருந்து மற்றும் போக்குவரத்து நிலையங்களை ஆக்கிரமித்தன. லிவர்பூல், போர்ட்ஸ்மவுத், ஹல், கார்டிஃப் மற்றும் பிற நகரங்களுக்கு ரோயல் கடற்படையால் போர்க்கப்பல்கள் அனுப்பப்பட்டன. 50,000 வலிமையான பொதுச்சேவை பொலிஸ் சேமப்படை, இராணுவப் பாதுகாப்புப் படையினர் மற்றும் போர் அமைச்சகத்தால் நடாத்தப்படும் முன்னாள் சிப்பாய்களிடமிருந்து பெறப்பட்ட 200,000 பேர் கொண்ட போலீஸ் சேமப்படையுடன் இணைந்து, முன்கூட்டியே தயார் செய்யப்பட்ட கருங்காலிகளின் படையை ஆதரித்தது.
1972 மற்றும் 1974 இல் ஹீத் அரசாங்கத்தை உலுக்கிய சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களின் போது, அரச குடும்பத்தின் ஆதரவுடன் இராணுவத்தின் பிரிவுகள் இராணுவ சதித்திட்டத்திற்கான திட்டங்களை வகுத்தன, இராணுவம் உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டது. 1977 இல், தேசிய தீயணைப்பு படையினர்களின் வேலைநிறுத்தத்தை முறியடிக்க 10,000 க்கும் மேற்பட்ட இராணுவம், கடற்படை மற்றும் RAF பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.
TUC மற்றும் தொழிற் கட்சிக்கு எதிரான போராட்டத்திற்கான ஒரு பொது வேலைநிறுத்தம்
கடந்த வார வேலைநிறுத்தங்களின் போது, பொது வேலைநிறுத்தத்திற்கான அழைப்புகள் உட்பட மறியல் போராட்டங்களில் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் தேவை எழுப்பப்பட்டது. தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் முக்கிய தடைகள், வெறுக்கப்பட்ட டோரிகளோ அல்லது அவர்களின் வேலைநிறுத்த எதிர்ப்பு சட்டங்கள் மட்டுமல்ல. ஆனால் தொழிற்சங்க காங்கிரஸ் மற்றும் தொழிற் கட்சி ஆகும். தொழிற்சங்க தலைவர்கள் வெடிமருந்து பீப்பாயின் மீது அமர்ந்துள்ளனர். 'பேராசை பிடித்த முதலாளிகள்' மீதான அவர்களின் தாக்குதல்கள் மற்றும் எதிர்கால வேலைநிறுத்தங்கள் பற்றிய அச்சுறுத்தல்கள் தொழிலாளர்களின் பெருகிவரும் கோபத்தைத் தணிப்பதை நோக்கமாக கொண்டுள்ளன. ஆனால் நடைமுறையில், அவர்கள் அரசாங்கத்துடன் ஒரு கூட்டுழைப்பை நாடும் அதே வேளையில் இடைக்கிடையே வேலைநிறுத்தத்திற்கான வாக்கெடுப்பை நடத்தி, நடவடிக்கையை அடக்கி, தாமதப்படுத்துகிறார்கள்.
இரயில் வேலைநிறுத்தங்களுக்கு முன்னதாக தொழிற்சங்க காங்கிரஸ் (TUC) பிரித்தானியாவின் 14 பெரிய தொழிற்சங்கங்களான Unite, GMB, Unison மற்றும் CWU போன்றவற்றின் கடிதத்தை ஒருங்கிணைத்து, 'தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகளுடன் மேசையை பகிர்ந்து கொள்ளுங்கள்' என அரசாங்கத்திடம் கெஞ்சியது. TUC தலைவர் ஃபிரான்சிஸ் ஓ'கிரேடி திங்களன்று, ஷாப்பஸ் 'எரியும் பதட்டங்களை நிறுத்த வேண்டும்' மற்றும் 'நியாயமான தீர்வுக்கு' தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். டோரிகளுக்கு அதை வழங்குவதற்கு எந்த எண்ணமும் இல்லை.
ஆளும் வர்க்கம் 'அதிருப்தியின் கோடைகாலம்' என்று பெயரிட்டுள்ள நிலையில், இந்த வாரம் ஒரு பெரிய வேலைநிறுத்தம் கூட நடைபெறவில்லை. தொழிற் கட்சி மேயர் சாதிக் கான் முழு போக்குவரத்து அமைப்புக்கும் எதிராக ஒரு அடித்து நொருக்கும் நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்தாலும், வேலைநிறுத்த ஆணைகள் அமுலில் இருக்கும் இலண்டன் நிலக்கீழ்போக்குவரத்து உட்பட இரயில் வேலைநிறுத்தங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இரயில் வேலைநிறுத்தங்கள் தொழிற் கட்சியின் தீய வலதுசாரி தன்மையை அம்பலப்படுத்தியுள்ளன. அதன் தலைவர் சேர் கெய்ர் ஸ்டார்மரின், மறியல் போராட்ட இடங்களுக்குச் செல்லும் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் எதிராக ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சுறுத்தலால் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. டோனி பிளேயர் கூட இந்த ஆணையை வெளியிடத் துணிந்திருக்க மாட்டார்.
தொழிற் கட்சியின் நிழல் வெளியுறவு செயலாளர் டேவிட் லாமி, அவர்கள் அனைவருக்குமாக பேசினார். தொற்றுநோய்களின் போது விதிக்கப்பட்ட 10 சதவீத ஊதியக் குறைப்பை மீட்டெடுக்கக் கோரி, ஹீத்ரோ விமான நிலைய குழுவினரின் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு அவர் ஆதரவளிப்பாரா என்று கேட்டதற்கு, லாமி, 'இல்லை, இல்லை, இல்லை!' என பதிலளித்தார். அவர் வேலைநிறுத்தங்களை எதிர்த்தார், 'ஏனெனில் நான் அரசாங்கத்தின் வேலைகள் பற்றி தீவிரமாக கவனமாக இருக்கிறேன்.' என்றார்.
RMT இன் பங்கு
இரயில் தொழிலாளர்களுக்கான பரவலான ஆதரவு, போர்க்குணமிக்க தொழிற்சங்கமாக கருதப்படும் RMT மற்றும் பொதுச் செயலாளர் மிக் லிஞ்சிற்கு மக்கள் ஆதரவின் அலையை உருவாக்கியுள்ளது. பியர்ஸ் மோர்கன், கேய் பார்லி மற்றும் ரிச்சர்ட் மேட்டலி உள்ளிட்ட வலதுசாரி ஊடகப் பிரமுகர்கள் மற்றும் டோரி அரசியல்வாதிகளை அவர் தாக்கியது பாராட்டப்பட்டது.
ஆனால் லிஞ்சின் அரசியல் முறையீடும், TUC யைப் போலவே, டோரி அரசாங்கத்திற்கும் முதலாளிகளுக்கும் கோரிக்கை வைப்பதாக இருக்கின்றது. 1984-85 வேலைநிறுத்தத்தின் போது தேசிய சுரங்கத் தொழிலாளர் சங்கத்தின் (National Union of Mineworkers) மீது தாட்சரின் முன்னோடித் தாக்குதலைப் பிரதிபலிக்கும் ஜோன்சனின் முயற்சிகள், சமூக ரீதியாக வெடிக்கும் மற்றும் தேவையற்றது என்பதே அவர்களின் வாதமாகும். லிஞ்சின் வேண்டுகோள் என்னவென்றால், 'கட்டமைப்புகள், பணி நடைமுறைகள் அல்லது நிபந்தனைகளில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அதுபற்றி எங்கள் தொழிற்சங்கத்துடன் உடன்பட வேண்டும், திணிக்கப்படக்கூடாது'. அதன் TUC சகாக்களைப் போலவே, RMTயும் இரயில் முதலாளிகள் மற்றும் அரசாங்கத்துடன் அதன் பெருநிறுவன கூட்டாண்மையைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறது.
மே 2021 முதல் இரயில் முதலாளிகளுடன் இணைந்து ஷாப்ஸ் இனால் தொடங்கப்பட்ட இரயில் தொழில்துறை மீட்புக் குழுவில் பங்கேற்று, இரயில் தொழிலாளர்களுக்கு எதிரான தாக்குதலைத் தயாரிக்க ஜோன்சன் அரசாங்கத்திற்கு தொழிற்சங்கம் ஒரு வருடத்திற்கும் மேலாக அவகாசம் அளித்துள்ளது. பணிநீக்கங்கள் மற்றும் விதிமுறைகள் மற்றும் வேலை நிலைமைகள், பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியங்களை நீக்குதல் மூலம் பாரிய செலவீனங்களை குறைப்பதற்காக அதிகாரங்களை கொடுக்கவுள்ள ஒரு கட்டமைப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.
சனிக்கிழமையன்று RMT இன் பேரணியில், சேர் கீர் ஸ்டார்மருக்கு லிஞ்ச் தனது ஆதரவை அறிவித்தார். “அதுதான் எங்களிடம் உள்ளது. அவர் வெற்றி பெற வேண்டும். நாங்கள் அவரைத் முன்னே தள்ளி, அவர் உங்களுடன் முன்னணியில் இருக்கும் நிலைக்கு வர நீங்கள் அனைவரும் அவரை வற்புறுத்த வேண்டும்.” டோரிகளை விட எந்த விதத்திலும் குறைவில்லாத தொழிலாள வர்க்க விரோத ஒரு போர்-சார்பு கட்சியின் பின்னால் சமூக அதிருப்தியை திருப்பிவிட அவர் முயற்சிக்கிறார்.
இந்த காரணத்திற்காகத்தான் ரூபர்ட் முர்டோக்கின் டைம்ஸ் லிஞ்சிற்கான பாராட்டுகளில் இணைந்தது, அவரது பிரபலத்தை 'புரட்சியின் மீதான நியாயமான தன்மையை தேர்ந்தெடுப்பது' என்று கூறுகிறது.
இந்த மோதலில் மீதான தனது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக தலையிட வேண்டும்.
இதன் பொருள், ஒவ்வொரு கிட்டங்கி மற்றும் பணியிடங்களிலும் சாமானிய தொழிலாளர்களின் நடவடிக்கை குழுக்களை உருவாக்குவது, தொழில்துறை நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் எதிர்ப்பது, அனைத்து இரயில் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவையும் உள்ளடக்கும் வகையில் வேலைநிறுத்தத்தை விரிவுபடுத்துவதாகும்.
ஜோன்சன் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கும், ஊதிய வெட்டுக்கள் மற்றும் ஆழமான சமூக சமத்துவமின்மைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான நிலைமைகள் உருவாகி வருகின்றன. ஆனால் டோரிகளுடன் நடைமுறையில் பங்குதாரர்களாக இருக்கும் TUC மற்றும் தொழிற் கட்சியின் நாசவேலைக்கு எதிரான அரசியல் போராட்டத்தின் தேவையை இது குறிக்கிறது.
பிரிட்டனில் ஒரு பொது வேலைநிறுத்தம் ஐரோப்பாவிலும் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களினதும் தீவிர ஆதரவை விரைவாகப் பெறும். போர், சமூக சமத்துவமின்மை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான பெருகிவரும் தாக்குதல்களுக்கு தொழிலாள வர்க்கத்தின் பதில், உலக சோசலிசத்திற்கான போராட்டமாக இருக்க வேண்டும்.
மேலும் படிக்க
- பிரிட்டன் இரயில் வேலைநிறுத்தமும் போருக்கு எதிரான போராட்டமும்: ஜோன்சன் அரசாங்கத்தைப் பதவி இறக்குவோம்!
- இங்கிலாந்து ரோயல் மெயில் தொழிலாளர்கள் 2 சதவீத ஊதிய உயர்வுக்கு எதிராக தேசிய வேலைநிறுத்த நடவடிக்கைக்கு வாக்களித்தனர்
- பிரிட்டிஷ் இரயில்வே வேலைநிறுத்தம்: ஜோன்சன் அரசாங்கத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் அணிதிரட்டுவோம்!
- இங்கிலாந்தில் இரயில் வேலைநிறுத்தங்கள் இந்த வாரம் தொடங்குகின்றன: தொழிலாள வர்க்கத்திற்கு அதன் சொந்த மூலோபாயம் தேவை