ஜேர்மன் அரசாங்கத்தின் எரிசக்தி கொள்கை, பெருநிறுவனங்களுக்கு பில்லியன் கணக்கான உதவிகளையும், நுகர்வோருக்கு தாங்கொணா செலவுகளையும் அர்த்தப்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜேர்மன் நாடாளுமன்றம், அரசு கஜானாவில் இருந்து எரிசக்தித் துறை நிறுவனங்களுக்கு பில்லியன் கணக்கில் உதவிகள் வழங்கும் வகையில் இந்த வாரம் சட்டங்களின் ஒரு தொகுப்பை நிறைவேற்ற திட்டமிட்டு வருகிறது, ஆனால் இது தொழிலாள வர்க்க குடும்பங்களுக்கு பொருளாதாரச் சீரழிவாகவும் மற்றும் வீடுகளை வெப்பமூட்ட முடியாமல் குளிரில் தவிக்க விடுவதாகவும் இருக்கும். செவ்வாய்கிழமை அரசாங்கம் அறிமுகப்படுத்திய அந்தச் சட்டம், அவ்விதத்தில் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோ தொடுத்து வரும் பினாமிப் போரின் செலவுகளை பொது மக்கள் மீது சுமத்துகிறது.

The “Bierwang” gas storage facility belonging to energy company “Uniper” in Unterreit near Munich (AP Photo/Matthias Schrader)

எரிபொருள் பாதுகாப்புச் சட்டம், உண்மையில் 1975 இல் அப்போதைய எண்ணெய் நெருக்கடிக்கு விடையிறுப்பாக நிறைவேற்றப்பட்ட இது, மே 21 இல் புதுப்பிக்கப்பட்டது. எரிபொருள் நிறுவனங்கள் நீண்ட கால ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஒரே நிலையான விலைகளுக்கு பொறுப்பேற்று இருந்தாலும் கூட, இந்தப் புதிய பதிப்பானது வினியோகச் சங்கிலியில் ஏற்படும் விலை உயர்வுகளை அந்நிறுவனங்கள் இறுதி வாடிக்ககையாளர்கள் மீது சுமத்த அனுமதிக்கிறது. அவை ஒரு வாரத்திற்கு முன்கூட்டியே விலை உயர்வை அறிவிக்க வேண்டும். மின்சாரம், எரிவாயு, தொலைத்தொடர்பு, தபால் மற்றும் இரயில்வே சந்தைகளுக்கான ஜேர்மனியின் ஒழுங்குமுறை ஆணையமான பெடரல் நெட்வொர்க் ஆணையம் அவசரக் கால எரிவாயுத் திட்டத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தை அறிவித்திருக்க வேண்டும் என்பது முன்நிபந்தனையாகும்.

இந்த புதிய சட்டங்கள் இன்னும் கூட மேலே செல்கின்றன. அவை வரிவிதிப்பை அறிமுகப்படுத்த அனுமதிக்கின்றன, இதைக் கொண்டு குறிப்பாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் அவற்றின் விலை உயர்வுகளைப் பிற எல்லா நிறுவனங்களின் எரிவாயு வாடிக்கையாளர்கள் மீதும் சுமத்த முடியும். இந்த வரிவிதிப்பு ஏற்கனவே எதிர்பார்க்கப்படும் விலை உயர்வுகளுக்குக் கூடுதலாக இருக்கும்.

இதனால் வெப்பமூட்டும் செலவுகள் மற்றும் எரிவாயு செலவுகளில் ஏற்படும் அதிகரிப்பு தாங்க முடியாததாக இருக்கும். ஜேர்மனியில் இரண்டு வீடுகளில் சுமார் ஒரு வீடாவது எரிவாயுவைப் பயன்படுத்தி வெப்பமூட்டப்படுகிறது. கடந்தாண்டு, ஜேர்மனியின் மொத்த எரிவாயுவில் சுமார் 30 சதவீதத்தைத் தனிக் குடும்பங்களே பயன்படுத்தி இருந்தன. “பல நுகர்வோர்கள் அவர்களின் எரிபொருள் வினியோகஸ்தர்களிடம் இருந்து கடிதம் பெறும் போது அதிர்ச்சி அடைவார்கள்,” என்று பெடரல் நெட்வொர்க் ஆணையத்தின் தலைவர் கிளாஸ் முல்லர் Funke-Mediengruppe பத்திரிகைக்கு கூறினார். விலைகள் மூன்று மடங்கு அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

நோர்த் ரைன்-வெஸ்ட்பாலியா நுகர்வோர் மையத்தின் Udo Sieverding உம் இந்தப் புள்ளிவிபரங்களை மேற்கோளிட்டார், அவர் கூறுகையில், “நெருக்கடிக்கு முந்தைய மட்டங்களுடன் ஒப்பிட்டால் எரிவாயு விலைகள் மூன்று மடங்கு உயருமென நாங்கள் கருதுகிறோம்,” என்றார். பல வினியோகஸ்தர்கள் ஏற்கனவே தனி நுகர்வோர்களுக்குக் கட்டணங்களை அதிகரித்து விட்டனர்: ஒரு கிலோவாட் மணி நேரத்திற்கு ஆறு அல்லது ஏழு சென்ட்கள் முதல் சராசரியாகச் சுமார் 13 சென்ட்கள் வரை, மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு 20 முதல் 25 சென்ட்கள் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. “ஏற்கனவே விலைகள் அதிகமாக உள்ளன, இன்னும் அதிகரிப்புகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்,” என்று பசுமைக் கட்சியின் பெடரல் பொருளாதார அமைச்சர் ராபர்ட் ஹேபெக் தெரிவித்தார்.

இது ஒரு குடும்பத்திற்குப் பல நூறு அல்லது ஆயிரம் யூரோக்கள் கூடுதல் வருடாந்திரச் சுமையை ஏற்படுத்தும். வெரிவோக்ஸ் நுகர்வோர் ஒப்பீட்டு வலைத் தளத் தகவல்படி, ஒரு வருடத்திற்கு 20,000 கிலோவாட் மணி நேரம் எரிவாயு நுகரும் ஒரு சராசரி குடும்பம் ஓராண்டுக்கு முன்னர் அதற்காக 1,200 யூரோவுக்கும் குறைவாகவே செலவிட்டது. விலை மூன்று மடங்கு உயர்ந்தால், ஓராண்டு சுமையாக 2,400 யூரோ கூடுதலாகச் செலவிட வேண்டியிருக்கும். இதற்கு முரண்பட்ட விதத்தில், செப்டம்பர் செலவு அதிகரிப்பை ஈடுகட்ட உதவியாக அரசாங்கம் தனித்தனிக் குடும்பங்களுக்கு எரிபொருள் செலவுக்காக வழங்க விரும்பும் 300 யூரோ ஒரு முறைப் பண உதவி என்பது கேலிக் கூத்தாக உள்ளது.

வினியோகச் சங்கிலியின் கடைசியில் உள்ள தனிப்பட்ட நுகர்வோர்கள் தான் விலை உயர்வுகளின் மொத்த சுமையையும் தாங்க வேண்டியிருக்கும் அதேவேளையில், தொந்தரவுக்கு உள்ளாகி உள்ள எரிபொருள் நிறுவனங்களுக்குப் பில்லியன் கணக்கிலான மீட்புப் பொதி கொண்டு உதவப்படும். நிதி நெருக்கடியின் போது வங்கிகளுக்கும் மற்றும் இந்தப் பெருந்தொற்றின் போது லூஃப்தான்சா போன்ற நிறுவனங்களுக்கும் செய்ததைப் போல, இந்தப் புதிய சட்டங்களின் கீழ், இந்த நிறுவனங்களுக்கும் தாராள அரசுக் கடன்கள் மற்றும் பங்கு முதலீடுகள் மூலமாக முட்டுக் கொடுக்கப்படும்.

ஜேர்மனியின் மிகப் பெரிய எரிவாயு இறக்குமதி குழுமமான டுஸ்செல்டோர்பை மையமாக கொண்ட யூனிபெர் குழுமம், ஜேர்மன் அரசாங்கத்துடன் இப்போது 9 பில்லியன் யூரோ மதிப்பிலான நிவாரணப் பொதியைப் பேரம்பேசி வருகிறது.

ரஷ்யாவில் இருந்து எரிவாயு விநியோகங்களைக் கொண்டு வர முடியாததால் யூனிபெர் சிக்கலில் உள்ளது. ஜூன் நடுப்பகுதியில் இருந்து, சாத்தியமான அளவுக்கு 40 சதவீதம் மட்டுமே பால்டிக் கடல் Nord Stream 1 குழாய் வழியாக வந்துள்ளது, ஏனென்றால் —காஸ்போரோம் தகவல்படி— கனடாவில் செப்பனிடப்பட்டு வந்த சீமென்ஸ் டர்பைன் ரஷ்ய-விரோதத் தடையாணைகளுக்குள் சிக்கி விட்டது. அடுத்த திங்கட்கிழமையில் இருந்து, 10 நாட்களுக்கு அந்தக் குழாய்வழி செப்பனிடப்பட உள்ளதால் செயல்பாடுகள் இருக்காது, அதற்குப் பின்னர் மீண்டும் அது செயல்பாடுகளைத் தொடங்குமா என்பதிலும் சந்தேகம் எழுந்துள்ளது.

அதன் விநியோக ஒப்பந்தங்களை நிறைவேற்ற, யூனிபெர் உடனடிச் சந்தைகளில் இருந்து எரிவாயு கொள்முதல் செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளது. அங்கே ஊக வணிகர்கள் செல்வம் ஈட்டுவதால், விலைகள் வெடிப்பார்ந்து உள்ளன. டச் TTF வர்த்தகப் பரிவர்த்தனையில், ஒரு மெகாவாட் மணி நேரத்திற்குத் தற்போது 170 யூரோ செலவாகிறது. முன்னர், நீண்ட கால ஒப்பந்தங்கள் 20 இல் இருந்து 30 யூரோவில் முடிக்கப்பட்டு வந்தன.

ஆனால் ஊக வணிகங்களைக் காய விடுவதற்குப் பதிலாக, ஜேர்மன் அரசாங்கம் எரிசக்தி நிறுவனங்களுக்கு மானியங்களாகப் பில்லியன்களை வழங்கி அதை எரியூட்டி வருவதுடன், செலவுகளை கடைநிலை நுகர்வோர் மீது சுமத்த புதிய சட்டங்களையும் நிறைவேற்றி வருகிறது. ஊக வணிகங்களைக் கையாள நெருக்கமான சர்வதேச ஒருங்கிணைப்பு தேவைப்படும். ஆனால் இதை ஏகாதிபத்திய சக்திகளின் அரசாங்கங்கள் கடுமையாக நிராகரிக்கின்றன. ரஷ்யாவுக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்தும் முயற்சிகள் எதையும் விட்டு வைக்காத அதேவேளையில், அவை ஊக வணிக இலாபங்களைப் புனிதப்படுத்துகின்றன.

பல தொழிலாள வர்க்கக் குடும்பங்களால் அவற்றின் எரிவாயு மற்றும் வெப்பமூட்டும் செலவுகளைச் சமாளிக்க முடியாது என்பதாலேயே, அவை இந்த வரவிருக்கும் குளிர்காலத்தில் உறைந்து போகும். ஆனால் வெப்பமூட்டுவதற்கான வினியோகங்களைக் கட்டுப்படுத்துவதற்காக பலவந்தமான நடவடிக்களையும் இந்தப் புதிய சட்டங்கள் வழங்குகின்றன. சட்ட உத்தரவாணைகள் மூலமாக நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயுவின் 'சிக்கனம் மற்றும் நுகர்வு குறைப்பை' வலியுறுத்த இந்தப் புதிய சட்டங்கள் அரசாங்கத்திற்குப் புதிய அதிகாரங்களை வழங்குகின்றன.

சாக்சோனியின் Dippoldiswalde இல் உள்ள வீட்டுக் கூட்டுறவு வசதி வாரியம் அங்கே வசிப்போருக்கு சுடுநீர் வழங்கலைக் குறைத்துப் பங்கிட அறிவித்துள்ளதாக Süddeutsche Zeitung அறிவிக்கிறது. இரவிலும், காலை மற்றும் மாலையிலும், நீர் குளிர் நீராக மட்டுமே கிடைக்கும். இது 'வரவிருக்கும் குளிர்காலத்திற்கான ஒரு சிறிய முன்னறிவு தான் — இந்த நேரத்திற்காக அரசாங்கமும் விறுவிறுப்பாகத் தயாரிப்புகளைச் செய்து வருகிறது,” என்று அப்பத்திரிகை கருத்துரைக்கிறது.

உத்தியோகபூர்வப் பிரச்சாரத்திற்கு நேரெதிர் மாறாக, தற்போதைய எரிபொருள் நெருக்கடி அரசாங்க கொள்கைகளின் விளைவாகும். இது, ரஷ்யாவுக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்தவும் மற்றும் ஜேர்மனி மீண்டுமொரு முறை ஐரோப்பாவில் முன்னணி இராணுவ சக்தியாக மாறவும் மக்கள் மீது சுமத்தப்பட்டு வரும் விலையாகும்.

பெப்ரவரி 1, 1970 இல் ஜேர்மன் பெருநிறுவனங்களும் சோவியத் ஒன்றிய அரசாங்கமும் இயற்கை எரிவாயு குழாய்வழி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் இருந்து, சோவியத் ஒன்றியம், பின்னர் ரஷ்யா, எல்லாப் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளிலும் ஒப்புக் கொள்ளப்பட்ட அளவு எரிவாயுவை எப்போதும் நம்பகத்தன்மையுடன் வழங்கியுள்ளது. ஆனால் இது சமீபத்திய ஆண்டுகளில், கிழக்கு ஐரோப்பாவில் ஜேர்மன் அதன் சொந்த இராணுவ மற்றும் பொருளாதாரச் செல்வாக்கை விரிவாக்குவதற்காக அதன் தரப்பில் மேலும் மேலும் வெளிப்படையாக நாசமாக்கப்பட்டுள்ளது.

இப்போது ரஷ்யாவில் இருந்து வரும் எரிவாயு, பேரழிவுகரமான பொருளாதார விளைவுகளுடன், முற்றிலும் ஸ்தம்பிக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. தனிநபர் குடும்பங்களும் எண்ணற்ற சிறு வணிகங்களும் இந்த எரிபொருள் விலை உயர்வை இனித் தாங்க முடியாது என்பதால் அவைப் பாதிக்கப்படும் என்பது மட்டுமல்ல, மாறாக அங்கே ஓர் ஆழ்ந்த மந்தநிலை ஏற்பட்டு வரும் அச்சுறுத்தலும் உள்ளது.

பவேரியன் தொழில் மற்றும் வர்த்தகச் சபையின் தலைவர் கிளாஸ் ஜோசப் லுட்ஸ், தற்போதைய இந்த 'பொருளாதாரப் போர்' காரணமாக ஒட்டுமொத்த தொழில் துறைகளும் மற்றும் அடிப்படை உணவுப் பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியும் ஆபத்தில் இருப்பதாகப் பார்க்கிறார். 'நம்மிடம் தேவையானளவுக்கு எரிவாயு வினியோகம் இல்லை என்றால், குறைந்த நேரம் வேலைச் செய்வதைக் குறித்து மட்டும் பேசிக் கொண்டிருக்க மாட்டோம், மாறாக வேலையின்மைக் குறித்தும் பேசிக் கொண்டிருப்போம்,” என்று எச்சரித்தார்.

பவேரிய மாநில பிரதமர் மார்கஸ் ஸ்சோடர் அவசரகால 'எரிசக்தி மற்றும் எரிவாயு நடவடிக்கைகள் எங்கள் மாநிலத்திற்கு' தேவை என்று பேசினார். ரஷ்ய எரிவாயு வினியோகங்கள் நிறுத்தப்பட்டால் ஜேர்மன் பொருளாதார உற்பத்தியில் 12.7 சதவிகிதம் இழப்பு ஏற்படும் என்று பவேரியன் வணிகச் சங்கம் கணிக்கிறது.

ஆனால் இதெல்லாம் ரஷ்யாவுக்கு எதிரான மோதல் போக்கை இன்னும் கூடுதலாகத் தீவிரப்படுத்துவதில் இருந்து இந்தச் சமூக ஜனநாயகவாதிகள் (SPD), தாராளவாத ஜனநாயகவாதிகள் (FDP) மற்றும் பசுமைக் கட்சியினரின் இந்தக் கூட்டாட்சிக் கூட்டணி அரசாங்கத்தைத் தடுத்து விடப் போவதில்லை. இவர்கள் அனைவரும் நேட்டோ திட்டமிட்டு வேண்டுமென்றே தூண்டிவிட்ட ரஷ்யாவின் பிற்போக்குத்தனமான உக்ரேன் மீதான தாக்குதலை, அவற்றின் வல்லரசு திட்டங்கள் மற்றும் இராணுவவாதத் திட்டங்களை, நீண்டகாலமாகச் சிந்தித்து வந்ததை, நடைமுறையில் முன்னெடுப்பதற்கான ஒரு வரவேற்கத்தக்க வாய்ப்பாகப் பார்க்கின்றன. இதற்காக அவை அவற்றின் சொந்த நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் மீதும் போரை அறிவித்து வருகின்றன.

Loading