இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பாரிய வேலைநிறுத்தங்களுக்கு மத்தியில் புதன்கிழமை நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய இராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இராஜினாமாவைத் தொடர்ந்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரதம நீதியரசரால் இலங்கையின் பதில் ஜனாதிபதியாக நேற்று உத்தியோகபூர்வமாக பதவி பிரமானம் செய்துவைக்கப்பட்டார்.
வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே பாராளுமன்ற உறுப்பினரான விக்கிரமசிங்க, முதலில் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவினால் மே 12 அன்று பிரதமராக நியமிக்கப்பட்டார். கோடாபயவின் மூத்த சகோதரர் மஹிந்த இராஜபக்ஷ மே 9 அன்று பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டதை அடுத்தே அவர் இந்த நியமனத்தை செய்தார். பின்னர், ஜூலை 13 அன்று, இராஜபக்ஷ புதன்கிழமை அதிகாலை இலங்கையில் இருந்து விமானத்தில் பறப்பதற்கு முன்னதாக, மூன்று நாட்களுக்கு முன்னர் பதில் ஜனாதிபதியாக விக்கிரமசிங்கவை நியமித்தார்.
1993ல் இருந்து ஆறு முறை இலங்கைப் பிரதமராக இருந்த விக்கிரமசிங்க, நீண்டகால அமெரிக்க சார்பு முதலாளித்துவ ஆட்சியைப் பாதுகாப்பவராகவும் மற்றும் சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைகளுக்கு உறுதியான ஆதரவாளராகவும் இருந்து வருகின்றார்.
பதவிப் பிரமாணம் செய்த உடனேயே, விக்கிரமசிங்க கொழும்பில் காலி முகத்திடலை மையமாகக் கொண்டு நடந்து வரும் போராட்டங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து ஒரு ஊடக அறிக்கையை வெளியிட்டார்.
'நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நான் உடனடி நடவடிக்கைகளை எடுப்பேன்,' என்று அவர் அறிவித்த அதே நேரம், 'அமைதியான போராட்டத்திற்கு தான் எதிரானவர் அல்ல' என்று கூறிக்கொண்டார். எவ்வாறாயினும், 'கிளர்ச்சியாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையிலான வேறுபாட்டை அடையாளம் காண வேண்டியது அவசியம்' என்று அவர் மேலும் கூறினார்.
விக்கிரமசிங்க, இராணுவ சிப்பாய்களுக்கும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற மோதல்களைக் சுட்டிக் காட்டினார். இதன் போது 24 இராணுவத்தினர் காயமடைந்ததுடன் இரண்டு சிப்பாய்களின் ஆயுதங்கள் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது. “இந்த கிளர்ச்சியாளர்கள் அடுத்த வாரம் அமைதியின்மையை உருவாக்க முயற்சிக்கின்றனர். அதை அனுமதிக்க முடியாது,'' என அவர் குறிப்பிட்டார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் முதலாளித்துவ ஆட்சிக்கு சவால் விடும் பட்சத்தில் அவர்களை ஒடுக்குவதற்கு இராணுவம் மற்றும் பொலிசுக்கு அதிகாரங்களை வழங்குவதற்கான தனது முந்தைய நகர்வைக் குறிப்பிட்ட விக்கிரமசிங்க, “படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் அடங்கிய ஒரு குழுவை நான் நியமித்துள்ளேன், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு அவர்களிடமே உள்ளது,” என்றார்.
விக்கிரமசிங்க பின்னர், கபடத்தனமான முறையில் 'சட்டம் மற்றும் ஒழுங்கு' நிலைமையை பேரழிவுகரமான பொருளாதார நெருக்கடி மற்றும் மில்லியன் கணக்கான இலங்கையர்கள் எதிர்கொள்ளும் அவநம்பிக்கையான சூழ்நிலையுடன் தொடர்புபடுத்தினார். “சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தால் பொருளாதாரம் பாதிக்கப்படும். எரிபொருள், மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் மற்றும் உணவு வழங்கல் சிதைந்துவிடும்,” என்று அவர் அறிவித்தார்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உணவு, எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் இதர அரிதான அத்தியாவசியப் பொருட்களின் விண்ணை முட்டும் விலை அதிகரிப்பால் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற மக்களால் நடத்தப்பட்டு வரும் போராட்டங்கள் நெருக்கடியை மோசமாக்குகிறது மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கும் 'ஒழுங்கை மீட்டெடுப்பதற்கும்' போராட்டங்கள் மீதான அரசின் அடக்குமுறை தேவைப்படுகிறது.
அன்றைய தினம், விக்கிரமசிங்க, ஊடகவியலாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் தொலைக்காட்சி குழுவினருடன் சென்று காயமடைந்த 24 இராணுவத்தினரை மருத்துவமனையில் பார்வையிட்டார். இந்த வாரம் பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளால் தாக்கப்பட்ட 84 எதிர்ப்பாளர்கள் மற்றும் இப்போது மருத்துவமனையில் உள்ளவர்கள் அல்லது இந்த மோதல்களின் போது கொல்லப்பட்ட இளம் ஆர்ப்பாட்டக்காரர் பற்றி அவர் எதுவும் பேசவில்லை.
கூட்டுத்தாபன துறை, சிவில் சமூக அமைப்புகள் மற்றும் மத ஸ்தாபனங்கள், அமெரிக்கா மற்றும் பிற தூதரகங்களுடன் சேர்ந்து, அரசியலமைப்பு மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பை -முதலாளித்துவ ஆட்சிக்கான குறியீட்டு வார்த்தைகள்- பராமரிக்க வேண்டும் என்று கூறியுள்ளன.
இலங்கை அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையும் உள்ளடக்கப்பட்டுள்ளது, இது அத்தியாவசிய சேவைகள் சட்டம், பயங்கரவாத தடைச் சட்டம், பொது பாதுகாப்பு கட்டளை மற்றும் பிற ஜனநாயக விரோத நடவடிக்கைகள் உட்பட பல அடக்குமுறை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு விக்கிரமசிங்கவை அனுமதிக்கிறது.
வியாழனன்று, அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், 'இலங்கையின் ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் அமைதியான அதிகார பரிமாற்றம் அவசியம்,' என்று ட்வீட் செய்தார்.
இலங்கையின் தீவிர அரசியல் ஸ்திரமின்மை குறித்த அவரது பதட்டத்தின் பிரதிபலிப்பாக, இந்த 'கவலைகளை' வெளிப்படுத்தும் அதேவேளையில், சுங் மற்றும் பல்வேறு 'அமைதியான அமெரிக்கர்களும்' திரைக்குப் பின்னால் சதிசெய்து, நடந்து கொண்டிருக்கும் வெகுஜன எதிர்ப்பு இயக்கத்தை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி, அரசியல் எதிர்க்கட்சிகள், இராணுவம் மற்றும் பொலிஸாருடன் பேசி ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.
ஒரு பரந்த ஒடுக்குமுறையை முன்னெடுக்க இராணுவம் மற்றும் பொலிஸை பயன்படுத்தக் கூடிய அச்சுறுத்தல்களையும் மீறி, தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களும் தங்கள் போராட்டங்களைத் தொடர்கின்றனர். புதனன்று தலைக்கு மேல் பறக்கும் ஹெலிகாப்டர்கள் எதிர்ப்பாளர்களை அச்சுறுத்திய அதேவேளை, வியாழன் அன்று காலி முகத்திடலில் உள்ள போராட்ட தளத்திற்கு அருகில் பொலிஸ் மற்றும் இராணுவத்தின் பெரும் குழுக்கள் குவிக்கப்பட்டதை ஊடகங்கள் காட்டுகின்றன.
நேற்று ஆங்கில மொழி ஐலண்ட் பத்திரிகையின் ஒரு கட்டுரை, 'கொடிய சக்தியைப் பயன்படுத்துவதற்கு ஒப்புதல்' என்ற தலைப்பில் வெளிவந்திருந்தது. 'பொது சொத்துக்கள், பிரதான நிறுவனங்கள், பாதிக்கப்படக்கூடிய புள்ளிகள் மற்றும் மனித உயிர்களைப் பாதுகாப்பதற்கு அவசியமானால், மரண சக்தியைப் பயன்படுத்த வேண்டும்' என்று ஆயுதப் படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,” என அது செய்தி வெளியிட்டிருந்தது.
தீவிரமடைந்து வரும் அரசியல் கொந்தளிப்பு, கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க தலைமையிலான நேட்டோ பினாமி போரினாலும் உக்கிரமடைந்து வரும் மோசமான சமூக-பொருளாதார நெருக்கடியால் உந்தப்படுகிறது.
இலட்சக் கணக்கான மக்கள் தொடர்ந்து பல நாட்களாக எரிபொருள் வரிசையில் காத்திருக்கின்றனர். இந்த வரிசைகளில் நிகழ்ந்த இறப்புகளின் எண்ணிக்கை வியாழக்கிழமை மொத்தம் 19 ஆக உயர்ந்தது.
மருந்துகள், உபகரணங்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையால் மற்றும் மருத்துவர்கள் உட்பட சுகாதார ஊழியர்கள் எரிபொருள் வரிசையில் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் சுகாதார சேவைகள் மற்றும் பொது மருத்துவமனைகள் செயலிழந்து வருகின்றன. பாடசாலைகள் மூடப்படுவது தொடர்வதுடன் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொது போக்குவரத்து முடங்கியுள்ளது. ஏறக்குறைய 75 சதவீத மக்கள் உணவுப் பொருட்களின் விலை உயர்வால் உணவைத் தவிர்த்து பட்டினியால் வாடுகின்றனர். கடந்த மாதம், உத்தியோகபூர்வ வருடாந்திர உணவு பற்றாக்குறை 80 சதவீதத்தை எட்டியது.
ஜூலை 20 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார் என்றும் ஆனால் 2024 ஆம் ஆண்டு இறுதி வரை மட்டுமே அந்த பதவியில் இருப்பார் என்றும் பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று தெரிவித்தார்.
அரசியல் ஸ்தாபனத்திற்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிக்கான முன்னணிப் போட்டியாளர்களுக்கும் இடையில் மூடி கதவுகளுக்குள் கொடுக்கல் வாங்கல்கள் சுத்துமாத்துகளின் சலசலப்பு காணப்படுகின்றது.
இராஜபக்ஷவின் பிளவுபட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) பொதுச் செயலாளர் சாகர காரியவசம், அதிக எண்ணிக்கையிலான பாராளுமன்ற ஆசனங்களைக் கொண்டுள்ள ஸ்ரீ.ல.பொ.ஜ.மு., ஜனாதிபதி பதவிக்கு விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் என்று அறிவித்தார். எவ்வாறாயினும், ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. தனது சொந்த வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. தலைவர் ஜி.எல். பீரிஸ் அறிவித்தார். ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
மற்ற ஜனாதிபதி வேட்பாளர்களில், விக்கிரமசிங்கவின் தேய்ந்து போன ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து உருவான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் (ஐ.ம.ச.) தலைவர் சஜித் பிரேமதாசவும் அடங்குவார். பிரேமதாசவிற்கும், அழகப்பெருமவிற்கும் இடையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளை பகிர்ந்து கொள்ளுமாறும் ஆலோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற ஏனைய பாராளுமன்றக் கட்சிகள், ஜனாதிபதித் தேர்தல் குறித்து இன்னும் அறிக்கை வெளியிடவில்லை.
பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் தேர்தலைத் தொடர்ந்து, ஒரு இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது, இலங்கையின் ஆளும் உயரடுக்கிற்கு, இன்னும் பேச்சுவார்த்தையில் இருக்கும் சர்வதேச நாணய நிதிய சிக்கன திட்ட நிரலை அமுல்படுத்த தொடங்குவதற்கு முக்கியமானது. அதன் நடவடிக்கைகள், மானிய வெட்டுக்கள், தனியார்மயமாக்கல் மற்றும் அதிகரித்த மற்றும் பரந்த அடிப்படையிலான வரிகள் உட்பட, உழைக்கும் மக்கள் மீது புதிய சுமைகளை மட்டுமே சுமத்தும்.
ஆளும் வர்க்கத்தினுள் ஏற்பட்டுள்ள பதற்றத்திற்கு குரல் கொடுக்கும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, இலங்கையில் ஸ்திரமான அரசாங்கம் விரைவில் அமையாவிட்டால் நாடு ஸ்தம்பித்துவிடும் என சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கங்கள் தொடர்ந்து முற்றிலும் பிற்போக்கு பாத்திரத்தை வகிக்கின்றன. இலங்கை வரலாற்றில் ஜூலை 9 அன்று நாடளாவிய ரீதியில் நடைபெற்ற மிகப் பெரிய அரசாங்க எதிர்ப்புப் போராட்டத்திற்கும், அதைத் தொடர்ந்து ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வீடுகளுக்குள் பாரியளவில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கும், தொழிற்சங்கங்கள் காட்டிய பிரதிபலிப்பு, தொழிலாள வர்க்கத்தின் அனைத்து சுயாதீன நடவடிக்கைகளையும் தடுப்பதாகவே இருந்தது.
இராஜபக்ஷவும் விக்கிரமசிங்கவும் ஜூலை 13க்குள் வெளியேறவில்லை என்றால், ஜூலை 14 அன்று ஹர்த்தாலுடன் (முழு அடைப்பு) பொது வேலைநிறுத்தத்தை நடத்தப் போவதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் மற்றும் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்தன. இது நடக்காதபோது, அவர்கள் ஜூலை 18 அன்று நடவடிக்கையை ஏற்பாடு செய்வதாக அறிவித்தன.
இது நடந்தாலும், ஏப்ரல் 28, மே 6 மற்றும் மே 10 ஆகிய தேதிகளில் நடந்தவை உட்பட வேலை நிறுத்தங்களைப் போலவே, இடைக்கால அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான அழைப்புகளுக்குப் பின்னால் திசை திருப்பிவிட்டு கலைத்து விடுவதற்கே அது பயன்படுத்தப்படும்.
இந்த முதலாளித்துவ-சார்பு நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக, சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கத்தை இந்த அரசியல் சூழ்நிலையில் சுயாதீனமாக தலையிட்டு, சோசலிச கொள்கைகளின் அடிப்படையில், தங்கள் சொந்த புரட்சிகர தீர்வுக்காக போராடுவதன் மூலம், இளைஞர்களையும் கிராமப்புற ஏழைகளையும் தங்கள் எரியும் தேவைகளை பூர்த்தி செய்ய அணிதிரட்ட வேண்டும்.
அதற்காக, அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அவற்றின் தொழிற்சங்க அமைப்புகளைச் சாராமல், ஒவ்வொரு வேலைத் தளங்களிலும், தொழிற்சாலைகளிலும், தோட்டங்களிலும், சுற்றுப்புறங்களிலும் மற்றும் கிராமப்புறங்களிலும் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் நடவடிக்கைக் குழுக்களை அவசரமாக அமைக்க வேண்டும். இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல, இந்தப் போராட்டத்தை முன்கொண்டு செல்வதற்கு, நடவடிக்கைக் குழுக்களின் வலையமைப்பு உருவாக்கப்பட்டு, தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியுடன் இணைக்கப்பட வேண்டும்.
மேலும் படிக்க
- சிங்கப்பூருக்கு தப்பிச் சென்ற பின்னர் இலங்கை ஜனாதிபதி இராஜபக்ஷ பதவியை உத்தியோகபூர்வமாக இராஜினாமா செய்தார்
- இலங்கையில் ஜூலை 9 ஆர்ப்பாட்டம்: தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு சோசலிச வேலைத்திட்டம்
- ஜனாதிபதி இராஜபக்ஷ, அமெரிக்கா மற்றும் IMF இன் சிக்கன கட்டளைகளை அமுல்படுத்த ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்துள்ளார்