ஐரோப்பிய ஒன்றியம் போரை நடத்த இயற்கை எரிவாயுவை பங்கீடு செய்து வழங்க கோருகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஐரோப்பிய ஒன்றியம் அதன் அங்கத்துவ நாடுகளின் இயற்கை எரிவாயு பயன்பாட்டை அடுத்த மாதம் முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை 15 சதவிகிதம் குறைக்க உறுதியளித்துள்ளது. 27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எரிசக்தி மந்திரிகள் செவ்வாயன்று ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் முன்மொழிவை ஏற்றுக்கொண்டனர்.

ஜேர்மனியின் பேர்லினில் உள்ள வட்டன்ஃபால் வெப்பமூட்டும் மின் நிலையத்தின் புகைபோக்கியில் இருந்து புகை வெளியேறுகிறது [AP Plant/Michael Sohn] [AP Photo/Michael Sohn]

வெட்டுக்கள் செயற்படுத்தப்படும் விதம் தனிப்பட்ட நாடுகளை பொறுத்தது என்பதுடன், சேமிப்பு இலக்குகள் சுயவிருப்பத்தின்படி இருக்கும். இருப்பினும், கடுமையான அவசரநிலை ஏற்பட்டால், 65 சதவிகித மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குறைந்தபட்சம் 15 அங்கத்துவ நாடுகள் ஒப்புக்கொண்டால், கட்டாய சேமிப்பு இலக்குகளையும் ஏற்றுக்கொள்ள முடியும். முதலில், ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் எரிசக்தி அவசரநிலையை அறிவிக்கும் உரிமையை தக்கவைத்துக் கொள்ள விரும்பியது, என்றாலும் இந்த நிலையை திணிக்க முடியவில்லை.

இந்த சிக்கன முடிவு, 'ஒற்றுமையை' காட்டும் நடவடிக்கையாக காட்டப்படுகின்றது. ஏனெனில் அனைத்து நாடுகளும், சாத்தியமான விநியோக பற்றாக்குறையால் எவ்வளவு பாதிக்கப்பட்டாலும், அதே அளவு சேமிப்புகளைச் செய்ய வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் முழுவதுமான தேவைக் குறைப்பு என்பது ‘ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தில் பொதிந்துள்ள ஒற்றுமைக் கொள்கையின்’ வெளிப்பாடாகும் என்று ஆணைக்குழுவின் அறிக்கை கூறுகிறது.

உண்மையில், இது ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் மற்றும் ஜேர்மன் அரசாங்கத்தால் மிருகத்தனமான சக்தியுடன் செயல்படுத்தப்பட்ட ஒரு போர் நடவடிக்கையாகும். அதாவது, ரஷ்யா இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்படும் வரை, உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான பினாமிப் போரை மாதங்கள் மற்றும் வருடங்கள் தொடர ஐரோப்பாவை இயலுமானதாக வைத்திருப்பதே இதன் நோக்கமாகும்.

எரிசக்தி பற்றாக்குறை, பணவீக்கம் மற்றும் பயங்கரமான மறுஆயுதமயமாக்கல் செலவுகள் ஆகியவை ஒரு எதிர்ப்பிற்கு வழிவகுக்கும் என்றும், அரசாங்கங்கள் மீதான சமூக அழுத்தம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமையைப் பாதிக்கலாம் என்றும் புரூஸ்ஸெல்ஸூம் பேர்லினும் அஞ்சுகின்றன. எனவே, ஐரோப்பிய ஒன்றிய எந்திரத்தின் ஒருங்கிணைந்த சக்தியானது, சிக்கன நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுத்து அனைத்து அங்கத்துவ நாடுகளையும் ஒரே வரிசையில் கொண்டு வர பயன்படுத்தப்படுகிறது.

எந்தவொரு போரையும் போலவே, பல பில்லியன் டாலர் செலவில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகளால் உந்தப்பட்ட ரஷ்யாவிற்கு எதிரான போருக்கும், ஒற்றுமை, ஒழுக்கம், பொருளாதாய தியாகம் மற்றும் எந்தவொரு உள் எதிர்ப்பையும் அடக்குதல் ஆகியவை தேவைப்படுகின்றன. எரிவாயு மற்றும் பெட்ரோலின் விலைகளை அதிரடியாக உயர்த்தியுள்ள மற்றும் வரவிருக்கும் குளிர்காலத்தில் பாரிய எரிசக்தி பற்றாக்குறைக்கு இட்டுச் செல்ல அச்சுறுத்துகின்ற இந்த பாரிய எரிசக்தி நெருக்கடியானது உக்ரேனில் நடக்கும் போரின் நேரடி விளைவாகும்.

உக்ரேன் மீதான பிற்போக்குத்தனமான ரஷ்ய தாக்குதலுக்கு முன்பே, ஒட்டுமொத்த ஐரோப்பிய தேவையில் 15 சதவிகிதத்தை பூர்த்தி செய்யக்கூடிய 55 பில்லியன் கன மீட்டர் வருடாந்த விநியோகத் திறன் கொண்ட முடிக்கப்பட்ட நோர்ட் ஸ்ட்ரீம் 2 குழாய் வழி எரிவாயு விநியோகத்தை இயக்குவது நிரந்தரமாக இரத்து செய்யப்பட்டுவிட்டது. பல தசாப்தங்களாக உக்ரேன் அல்லது பெலாரூஸ் வழியாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ரஷ்ய எரிவாயுவை வழங்கி வரும் பிற குழாய்களும், போரின் காரணமாக செயல்படுவதை நிறுத்திவிட்டன.

நோர்ட் ஸ்ட்ரீம் 2 ஐ ஒத்த திறன் கொண்ட நோர்ட் ஸ்ட்ரீம் 1 உம் தற்போது அதன் வழமையான திறனில் 40 சதவிகிதத்தை விநியோகித்து வருகிறது. மேலும் வியாழன் முதல் அது 20 சதவிகிதத்தை மட்டுமே வழங்கும். விசையாழிகளை தேவையான அளவு பராமரிக்க முடியாததை கூறி, விநியோகத்தை குறைப்பதை மாஸ்கோ நியாயப்படுத்தியுள்ளது. அவற்றில் சில மேற்கத்திய தடைகளால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் செயல்பாடுகளை முற்றிலும் நிறுத்த விரும்பும் நோக்கத்தை மாஸ்கோ மறுத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா இதை ஒரு போலிக்காரணமாக கூறுவதாக நிராகரித்து, ‘எரிவாயுவை ஒரு அரசியல் ஆயுதமாக பயன்படுத்த’ ரஷ்யா வேண்டுமென்றே முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஒரு ‘நம்பிக்கை துரோக விளையாட்டை’ விளையாடுவதாகவும், உக்ரேனுக்கான பெரும் ஆதரவை அவர் பலவீனப்படுத்த முயன்றதுடன், ஜேர்மன் சமூகத்தில் ஒரு பிளவை ஏற்படுத்துவதாகவும் ரோபேர்ட் ஹாபெக் குற்றம் சாட்டினார்.

மேற்கத்திய பிரச்சாரத்திற்கு எப்போதும் நம்பகமான ஆதரவாளராக இருக்கும் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியும், நோர்ட் ஸ்ட்ரீம் 1 ஐக் கட்டுப்படுத்துவதன் மூலம் மேற்கை ‘அச்சறுத்துவதாகவும்’ மற்றும் ‘ஐக்கியப்பட்ட ஐரோப்பாவிற்கு எதிராக ஒரு பகிரங்க எரிவாயு போரை’ தூண்டுவதாகவும் மாஸ்கோவை குற்றம் சாட்டினார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் அபத்தமானவை. பொலிஸை திசைதிருப்ப ‘திருடனை நிறுத்து!’ என்று கத்தும் திருடனையே இவை நினைவுபடுத்துகின்றன. உண்மையில், பொருளாதாரத் தடைகள் மூலம் ரஷ்யாவை அழிவுக்குள் தள்ளும் குறிக்கோளை ஐரோப்பிய ஒன்றியம்தான் பின்பற்றுகிறது. உத்தியோகபூர்வ முடிவின்படி, ஐரோப்பிய ஒன்றியம் 2027 க்குள் ரஷ்யாவிலிருந்து புதைபடிவ எரிபொருட்களை இறக்குமதி செய்ய இனி விரும்பாது. குற்றச்சாட்டுக்களின் இராணுவத் தொனி, ஐரோப்பிய ஒன்றியம் எரிசக்தி பாதுகாப்பு பற்றி அக்கறை கொள்ளவில்லை, மாறாக எரிசக்தி கொள்கையை ஒரு போர் ஆயுதமாக கருவியாக்குவதில் தான் அக்கறை கொண்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.

ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் ஊர்சுலா வொன் டெயர் லெயென் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களையும் எரிவாயு நுகர்வை குறைக்க தனது அதிகாரத்தை பயன்படுத்தினார். ஜேர்மன் இராணுவவாதத்திற்கு புத்துயிர் கொடுப்பதில் ஜேர்மன் பாதுகாப்பு மந்திரியாக இருந்த இந்த கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றிய அரசியல்வாதி ஏற்கனவே ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். 2014 இல், வொன் டெயர் லெயென் உறுப்பினராக இருந்த அரசாங்கம், இன்றைய போருக்கு வித்திட்ட கியேவில் நடந்த வலதுசாரி சதியை ஆதரித்தது.

வொன் டெயர் லெயெனின் எரிவாயு சேமிப்புத் திட்டம் ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தின் சர்ச்சைக்குரிய பிரிவு 122 ஐ அடிப்படையாகக் கொண்டது. இப்பிரிவு அவசர காலங்களில் அங்கத்துவ நாடுகளின் தேசிய இறையாண்மையில் வழக்கத்தை விட ஆழமாக தலையிட ஐரோப்பிய ஒன்றியத்தை அனுமதிக்கிறது.

ஏற்கனவே யூரோ நெருக்கடியின்போது, நெருக்கடியில் இருந்து வங்கிகள் மீள அவற்றிற்கு பில்லியன் கணக்கில் ஐரோப்பிய ஒன்றியம் உதவியபோது கிரீஸ், போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளை மிருகத்தனமான சமூக வெட்டுக்களைத் திணிக்க நிர்ப்பந்திக்க இந்த சட்டப்பிரிவு பயன்படுத்தப்பட்டது. அதேபோல், கொரோனா வைரஸ் நோய்தொற்று தொடங்கியதன் பின்னர், வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக ‘புனரமைப்பு நிதிக்காக’ மீண்டும் நூற்றுக்கணக்கான பில்லியன்களை வாரி வழங்கியபோதும் பயன்படுத்தப்பட்டது.

இருப்பினும், இந்த நேரத்தில், வொன் டெயர் லயன் கணிசமான எதிர்ப்பைச் சந்தித்தார். தற்போது வட ஆபிரிக்காவிலிருந்து தங்கள் எரிவாயு தேவையை பூர்த்தி செய்துகொள்ளும் தெற்கு ஐரோப்பிய நாடுகள், குறிப்பாக ரஷ்ய எரிவாயு விநியோகத்தை நம்பியிருக்கும் ஜேர்மனிக்கு முதன்மையாக பயனளிக்கும் திட்டத்திற்கு உடன்படுவதற்கு தயக்கம் காட்டுகின்றன.

ஸ்பெயினின் சுற்றுச்சூழல் மந்திரி தெரேசா ரிபெரா ஆரம்பத்தில் திட்டத்தை முற்றிலும் நிராகரித்தார். அவரது நாடு எந்த ‘விகிதாச்சார தியாகங்களையும்’ செய்யாது. குளிர்காலத்தில் எரிவாயு விநியோக வெட்டுக்களுக்கு எந்த ஸ்பானிய குடும்பமும் பயப்பட வேண்டியதில்லை என்று அவர் கூறி, ஸ்பெயின் தனது உள்நாட்டு கடமைகளைச் செய்வதாலும், அதன் சக்திக்கு மீறி வாழாததாலும் இதை நம்பலாம் என விளக்கினார்.

ஜேர்மன் அரசாங்கத்தைப் போலவே, ஸ்பானிய அரசாங்கமும் ரஷ்யாவிற்கு எதிரான பினாமி போரை முழுமையாக ஆதரிக்கிறது. ஆனால், யூரோ நெருக்கடியின்போது மிகக்கடுமையாக கடன்பட்ட நாடுகளை ஜேர்மன் அரசாங்கம் எதிர்கொண்ட திமிர்த்தனமும் மற்றும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை எடுக்குமாறு அவற்றை கட்டாயப்படுத்தியதும் மறக்கப்படவில்லை.

திங்களன்று, 27 ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளின் இராஜதந்திரிகள், இறுதியில் பல சிறப்பு ஏற்பாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் பெரும்பான்மை உடன்பாட்டை எட்டும் வரையிலுமாக அவர்கள் இரவு முழுவதும் பேச்சுவார்த்தை நடத்தினர். உதாரணமாக, பிற அங்கத்துவ நாடுகளின் எரிவாயு வலையமைப்புடன் இணைக்கப்படாத சைப்ரஸ், மால்டா மற்றும் அயர்லாந்து ஆகிய பல நாடுகள் இந்த சிக்கன இலக்குகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளன.

இறுதியில், ஹங்கேரி மட்டுமே எரிவாயு நுகர்வை குறைக்கும் முடிவுக்கு எதிராக வாக்களித்தது. ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன் நல்லுறவைப் பேணும் விக்டர் ஓர்பானின் அரசாங்கம், இப்போது ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளையும் நிராகரிக்கிறது.

ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் மையவிலக்கு போக்குகள் மிகப்பெரியளவில் உள்ளன. இத்தாலியில், மரியோ திராஹியின் ‘தேசிய ஐக்கிய’ அரசாங்கமும் போர் பற்றிய பிரச்சினையில் இருந்து முறித்துக் கொண்டது. திராஹி நேட்டோவின் போர் போக்கை தடையின்றி ஆதரித்தாலும், சில்வியோ பெர்லுஸ்கோனியின் வலதுசாரி ஃபோர்ஸா இத்தாலியா மற்றும் லேகா கட்சிகள் உக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்க மறுத்துவிட்டன. செப்டம்பர் இறுதியில் நடைபெறவுள்ள தேர்தலுக்குப் பின்னர் அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

தொழிலாள வர்க்க எழுச்சிகள் பற்றிய அச்சம் தான் ஐரோப்பாவின் ஆளும் வர்க்கத்தை ஒன்றிணைக்கிறது. ஜேர்மன் வெளியுறவு மந்திரி அன்னலெனா பெயபொக், ரஷ்யாவிலிருந்து நமக்கு எரிவாயு வரவில்லை என்றால், “ஜேர்மனியாகிய நம்மால் இனி உக்ரேனுக்கு எந்த ஆதரவையும் வழங்க முடியாது. ஏனென்றால் நாங்கள் இங்கு மக்கள் எழுச்சிகள் தொடர்பாக கவனம் செலுத்திக்கொண்டு இருப்போம்” என்று சமீபத்தில் அறிவித்தார்.

பெயபொக் போன்ற பசுமைக் கட்சி உறுப்பினரும் பாடன்-வூட்டெம்பேர்க் பிரதம மந்திரி வின்பிரைட் கிரெட்ச்மானும் (Winfried Kretschmann) சமூகத்தில் பிளவு ஏற்படுவதற்கு எதிராக எச்சரித்து, “நாம் எரிவாயு அவசரநிலைக்குள் நுழைந்தால், கொரோனா வைரஸ் விவகாரத்தை விட மிகப்பெரிய அளவினதாக மையவிலக்கு சக்திகள் இருக்கும்” என்று கருத்து தெரிவித்தனர்.

உக்ரேனில் போரின் தீவிரம், இத்தகைய உள்நாட்டு பதட்டங்களை குறைந்தபட்சம் வெளிநோக்கி திருப்புவதுடன், மூன்றாவது, அணுசக்தி உலகப் போருக்குக் கூட அது இட்டுச் செல்லக்கூடும்.

Loading