மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஆகஸ்ட் 21 அன்று, Molodaia Gvardia Bolshevikov-Leninitsev (போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர், YGBL), செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் மற்றும் மேற்கு சைபீரிய நகரமான செல்யாபின்ஸ்க் இல் கூட்டங்களை நடத்தி, 1917 ரஷ்ய புரட்சியின் இணைத் தலைவரான லியோன் ட்ரொட்ஸ்கியை படுகொலை செய்த 82 வது ஆண்டு நிறைவை நினைவுகூர்ந்தது. ட்ரொட்ஸ்கி ஆகஸ்ட் 20, 1940 அன்று மெக்சிகோவின் கொயோகானில் உள்ள அவரது இல்லத்தில் ஒரு ஸ்ராலினிச முகவரால் தாக்கப்பட்டார். அதன் மறுநாள் அவர் இறந்தார்.
அவர்கள் செயிண்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் (முன்னர் லெனின்கிராட்), புரட்சியின் நூற்றுக்கணக்கான தியாகிகள் அடக்கம் செய்யப்பட்ட இடமான மார்ஸ் ஃபீல்டில் (Mars Field) கூடினர். செல்யாபின்ஸ்கில், YGBL உறுப்பினர்கள் பிற்பகலில் சந்தித்தனர். அங்கு அவர்கள் லியோன் ட்ரொட்ஸ்கியின் புகைப்படத்திற்கு முன் பூக்களை வைத்தனர், இது ஸ்கார்லட் ஃபீல்டில் (Scarlet Field) அமைந்துள்ள விளாடிமிர் லெனினின் மார்பளவு சிலையின் கீழ் வைக்கப்பட்டது. 'லெனினுடனான ட்ரொட்ஸ்கியின் தொடர்பை அவரது கருத்துக்களிலும் அவரது செயல்களிலும் வலியுறுத்தும்' வெளிப்படையான நோக்கத்துடன் அவர்கள் அவ்வாறு செய்தனர். ட்ரொட்ஸ்கிசத்திற்கான அதன் அர்ப்பணிப்பையும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கான அதன் ஆதரவையும் YGBL உறுதிப்படுத்தும் நினைவேந்தலில் கீழேயுள்ள உரை வாசிக்கப்பட்டது.
கிரெம்ளினில் பெரு மன்னர்கள் (super-Borgia) என்று முடிசூட்டிக்கொண்ட தேர்மிடோரியன் அதிகாரத்துவத்தால் இயக்கப்பட்ட இந்த மரணதண்டனை செய்பவரின் சதி, தொழிலாள வர்க்கத்தின் மார்க்சிச புரட்சிகர முன்னணிக்கு எதிரான அரசியல் இனப்படுகொலையின் கொடூரமான உச்சக்கட்டமாகும்.
சோவியத் ஒன்றியத்தினதும், உலக சோசலிசத்தினதும் தலைவிதியில் ஸ்ராலினின் பயங்கரத்தின் (terror) தாக்கம் பேரழிவைத் தவிர வேறில்லை. ஸ்ராலினின் எதிர்ப்புரட்சியின் விளைவுகளுடன் தொழிலாள வர்க்கம் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறது.
ட்ரொட்ஸ்கியின் படுகொலை, அவர் ஸ்தாபித்த உலக இயக்கத்தின் அரசியல் பணிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட முடியவில்லை. பின்னர் எடுத்துக்காட்டப்பட்டதுபோல, நான்காம் அகிலம், ஸ்ராலினின் ஆட்சியின் சரிவைக் காண வாழ்ந்தது. நிச்சயமாக இந்தப் படுகொலை, ட்ரொட்ஸ்கியை வரலாற்றில் இருந்து அழிக்கமுடியவில்லை என்பதை நிரூபித்துக் காட்டுகிறது. வரலாற்றாசிரியர்கள் 20 ஆம் நூற்றாண்டை ஆய்வு செய்து விளக்குகையில், லியோன் ட்ரொட்ஸ்கியின் உருவம் பெரிதாக வளர்கிறது. கடந்த நூற்றாண்டின் போராட்டங்கள், அபிலாஷைகள் மற்றும் சோகங்களை ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கையைப் போல் இன்னும் சில வாழ்க்கைகளே ஆழமாகவும் உன்னதமாகவும் பிரதிபலித்தன.
அவர் இறப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு ஐயுறவுவாத அமெரிக்க பத்திரிகையாளருடனான உரையாடலில், ட்ரொட்ஸ்கி தனது வாழ்க்கையை திகைப்பூட்டுவதும், இறுதியில் சோகமான அத்தியாயங்களின் தொடராக அல்லாது புரட்சிகர இயக்கத்தின் வரலாற்றுப் பாதையில் வெவ்வேறு கட்டங்களாகப் பார்த்ததாக விளக்கினார். 1917 இல் அவர் ஆட்சிக்கு வந்தது தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர எழுச்சியின் விளைபொருளாகும். ஆறு ஆண்டுகளாக, அவரது அதிகாரம் இந்த போராட்டத்தால் உருவாக்கப்பட்ட சமூக மற்றும் அரசியல் உறவுகளில் தங்கியிருந்தது. ட்ரொட்ஸ்கியின் தனிப்பட்ட அரசியல் அதிர்ஷ்டங்களின் வீழ்ச்சியானது புரட்சிகர அலையின் வீழ்ச்சியிலிருந்து எழுகின்றது.
ட்ரொட்ஸ்கி அதிகாரத்தை இழந்தது அவர் ஸ்ராலினை விட குறைந்த அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி என்பதால் அல்ல, மாறாக அவரது அதிகாரம் அடிப்படையாகக் கொண்ட சமூக சக்தியான ரஷ்ய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் அரசியல் பின்வாங்கலில் இருந்தது. உள்நாட்டுப் போருக்குப் பின்னரான ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் தீவிர சோர்வுநிலை, சோவியத் அதிகாரத்துவத்தின் வளர்ந்து வரும் அரசியல் பலம் மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கம், குறிப்பாக ஜேர்மனியில் சந்தித்த தோல்விகள், இறுதியில் ட்ரொட்ஸ்கி அதிகாரத்தில் இருந்து அகற்றப்படுவதில் தீர்க்கமான காரணிகளாக இருந்தன.
ட்ரொட்ஸ்கியின் மரணம், பாசிச மற்றும் ஸ்ராலினிச எதிர்ப்புரட்சியின் உச்சக்கட்டத்தில் நிகழ்ந்தது. 1940 களில், ட்ரொட்ஸ்கியின் பழைய தோழர்கள் அனைவரும் சோவியத் ஒன்றியத்தில் வன்முறை மூலம் கொன்றொழிக்கப்பட்டனர். ட்ரொட்ஸ்கியின் நான்கு குழந்தைகளும் இறந்துவிட்டனர். தந்தைக்கு ஏற்பட்ட துன்புறுத்தலின் கஷ்டங்களின் விளைவாக அவரது இரண்டு மூத்த மகள்கள் அகால மரணமடைந்தனர். இரண்டு மகன்களான சேர்ஜி உம் லெவ் உம் ஸ்ராலினின் ஆட்சியால் கொலை செய்யப்பட்டனர்.
வரலாறு, அடிக்கடி குறிப்பிட்டுள்ளது போல, அனைத்து நகைமுரண்பாடுகளிலும் மிகப் பெரியதாகும். பல தசாப்தங்களாக, ஸ்ராலினிஸ்டுகள் ட்ரொட்ஸ்கி சோவியத் ஒன்றியத்தை அழிக்க முயன்றார் என்றும், சோவியத் ஒன்றியத்தை துண்டாட அவர் ஏகாதிபத்தியவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்தார் என்றும் கூறி வந்தனர். இந்த குற்றங்கள் என்று கூறப்பட்டவற்றிற்காக, ட்ரொட்ஸ்கிக்கு சோவியத் ஆட்சியில் இல்லாத நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இறுதியில், ட்ரொட்ஸ்கி நுணுக்கமாக எச்சரித்தபடி சோவியத் அதிகாரத்துவமே சோவியத் ஒன்றியத்தை கலைத்தது.
ட்ரொட்ஸ்கியின் படுகொலை பற்றிய அனைத்துலகக் குழுவின் விசாரணையானது, நான்காம் அகிலத்திற்கு எதிரான ஸ்ராலினிச சதியின் முழு அளவை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சிப்போக்கில், ஸ்ராலினிசத்திலிருந்து பிரிக்க முடியாத எதிர்புரட்சிகர தன்மையை தொழிலாள வர்க்கத்தின் அம்பலப்படுத்துவதும் நோக்கமாக இருந்தது.
இந்த விசாரணை அனைத்து பப்லோவாத அமைப்புகளிடமிருந்தும் வெறித்தனமான எதிர்ப்பை எதிர்கொண்டு நடத்தப்பட்டது. ஸ்ராலினிசத்தின் குற்றங்களை அம்பலப்படுத்துவதானது, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை அழித்தொழிப்பதற்கும், ஸ்ராலினிச அமைப்புகளுடன் அரசியல் ரீதியாக சமரசம் செய்து கொள்வதற்கும் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு அரசியல்ரீதியாக ஆபத்தான பின்னடைவாகக் கண்டனர்.
1975ல் 'பாதுகாப்பும் நான்காம் அகிலமும்' என்ற விசாரணை தொடங்கியபோது, ஸ்ராலினிச முகவர்கள் அம்பலப்படுத்தப்பட்டதன் மூலம் பப்லோவாதிகள் குறிப்பாக சீற்றமடைந்தனர். அவர்களில் பலர் அப்போது இன்னும் வாழ்ந்துகொண்டிருந்தனர், சில சமயங்களில் பப்லோவாத அமைப்புகளுக்குள் சுறுசுறுப்பாக செயற்பட்டுக்கொண்டு இருந்தனர்.
பெரும் பயங்கரம் என அழைக்கப்படும் முன்கூட்டிய எதிர்ப்புரட்சிகர உள்நாட்டுப் போரின் அலையின் கீழ், சோவியத் ஒன்றியத்தில் தொழிலாளர் அரசின் கழுத்தை நெரித்த ஸ்ராலினும் அதிகாரத்துவ சாதியும் கம்யூனிஸ்டுகளின் தலைமுறைகளை கொன்றொழித்தனர். இடது எதிர்ப்பினதும் நான்காம் அகிலத்தினதும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கொல்லப்பட்டனர். GPU இன் செயல்பாடுகள் சோவியத் ஒன்றியத்தின் எல்லைகளுக்கு அப்பாலும் நீண்டது.
இந்த மாபெரும் குற்றத்தால் ஏற்பட்ட பாதிப்பு, கொலைக்கும் இன்றைக்கும் இடைப்பட்ட காலப்பகுதியின் ஏறக்குறைய பாதி காலமான 35 ஆண்டுகளாக ட்ரொட்ஸ்கியின் கொலையை GPU எவ்வாறு நடத்தியது என்பது பற்றி எதுவும் அறியப்படவில்லை என்ற உண்மையால் மேலும் அதிகரித்தது. மெக்சிகன் குற்றவியல் நிபுணர் அல்போன்சோ கீய்ரோஸ் குவாரோனின் விசாரணையின் விளைவாக 1949 அல்லது 1950 ல் கொலைகாரனின் உண்மையான பெயர் பகிரங்கப்படுத்தப்பட்டது.
மே 1975 இல், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) 'பாதுகாப்பும் நான்காம் அகிலமும்' என்ற முன்முயற்சியைத் தொடங்கியது. இது நான்காம் அகிலத்தில் உள்ள கடந்த கால மற்றும் நிகழ்கால முகவர்கள் மீது வெளிச்சம் போடுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
விசாரணையில் அளவானது திகைப்பூட்டும் வகையில் இருந்தது: அது பல கண்டங்களை உள்ளடக்கிய ஒரு பாரிய அளவிலான புலனாய்வுப் பணிகள், நூற்றுக்கணக்கான மணிநேர நேர்காணல்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களின் ஆயிரக்கணக்கான பக்கங்களை கொண்டிருந்தது. முதன்முறையாக, GPU மற்றும் அமெரிக்க அரசாங்கத்தின் முகவர்களால் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தினுள் ஊடுருவல் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது திருத்தல்வாதிகளின் அழுகைகளாலும் கூச்சல்களாலும் பயமுறுத்தப்படப் போவதில்லை. அவர்கள் அனைத்துலகக் குழுவை 'குறுங்குழுவாதிகள்' மற்றும் 'சித்தப்பிரமைகள்' என்று அவர்கள் வெட்கப்படும் வரை அழைக்கலாம். இந்த வகையில் முத்திரை குத்தல்களைப் பயன்படுத்தி, உண்மையில் அவர்கள் புரட்சிகரக் கொள்கைகளுக்கான ICFI இன் போராட்டம், கட்டுப்பாடு, விழிப்புணர்வு மற்றும் அதன் அணிகளில் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதை தாக்கினர்.
பாதுகாப்பும் நான்காம் அகிலமும் ஸ்ராலினிச எதிர்ப்புரட்சி மற்றும் பொய்மைப்படுத்தலின் தீய பிடியில் இருந்து நான்காம் அகிலத்தின் மூலமும், அனைத்துலகக் குழு மூலமும் போல்ஷிவிசத்தின் முழு வரலாற்று தொடர்ச்சியையும் மீட்டெடுப்பதை விட குறைவான எதையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.
இதன் மூலம் அக்டோபர் உலகத்திற்கான போராட்டத்தின் அரசியல் உருவகத்திற்கு எதிராக, ட்ரொட்ஸ்கிசத்திற்கு எதிராக ஸ்ராலினிசத்தால் செய்யப்பட்ட அனைத்து பொய்கள், சிதைவுகள் மற்றும் குற்றங்கள்; அக்டோபர் புரட்சியின் உண்மையான வரலாறு மற்றும் ட்ரொட்ஸ்கியின் பங்கு பற்றி தொழிலாளர்களின் தலைமுறையினரை குழப்புவதற்கும், திசைதிருப்புவதற்கும் செய்யப்பட்ட அனைத்து கொடூரமான செயல்களும் - இவை அனைத்தும் ஸ்ராலினிசமும் ஏகாதிபத்திய எதிர்ப்புரட்சியின் அனைத்து அமைப்புகளும் ஒருபோதும் மீளாமுடியாத ஒரு அடியால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.
அதனால்தான் போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர், ஸ்ராலினிசத்தின் குற்றங்கள் பற்றிய உண்மையை அடக்குவதையும், பொய்களின் திரிபுகளையும் நிரந்தரமாக்குவதையும், அதாவது ஸ்ராலினிச சதித்திட்டத்தின் அளவை மறைக்கும் அனைத்தையும் முறியடிக்க உழைக்க வேண்டும். வரலாற்று உண்மைக்கான போராட்டம் இல்லாமல், ஒரு கட்டுப்பாடான அமைப்பை உருவாக்குவது சாத்தியமற்றது, அதன் குறிக்கோள்களையும் பணிகளையும் அறிந்து, சோசலிசப் புரட்சியை நடத்துவது மட்டுமல்லாமல், அதை சர்வதேச அரங்கில் விரிவடையச் செய்யவும் முடியும்.
இந்த வகையில், ட்ரொட்ஸ்கியின் ஆளுமை, அவரது செயல்பாடுகள் மற்றும் நான்காம் அகிலத்தின் செயல்பாடுகள் ஆகியவற்றின் பகுப்பாய்வு மற்றும் தன்மை பற்றிய உண்மைக்காக நாங்கள் நிற்கிறோம், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பு ICFI நடத்திய விசாரணைக்கு எங்கள் உண்மையான ஐக்கியத்தை வெளிப்படுத்துகிறோம், பாதுகாக்கிறோம். ஆனால், அதன் இன்றைய பொருத்தத்தை பாதுகாக்க ஒவ்வொரு நனவான ட்ரொட்ஸ்கிஸ்டுக்கும் தொழிலாளிக்கும் தீவிர படிப்பு தேவைப்படுகிறது.
கடந்த 40 ஆண்டுகள் நான்காம் அகிலத்தின் வரலாற்றில் மைல்கற்கள், பிரிட்டனில் தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) உடனான பிளவு, சோசலிச சமத்துவக் கட்சிகளின் ஸ்தாபிதம், உலக சோசலிச வலைத் தளத்தின் தொடக்கம் மற்றும் உலக ஏகாதிபத்திய அமைப்பின் நெருக்கடி பற்றிய பகுப்பாய்வு குறிப்பாக, உருக்குறுதி வாய்ந்த தலைமையால் நடத்தப்பட்ட பாதுகாப்பும் நான்காம் அகிலமும் என்பதால்உருவாக்கப்பட்ட அனுபவத்திற்கு நன்றி.
எங்கள் அமைப்பு அனைத்துலகக் குழுவைப் பின்பற்றும், அதன் மேம்பட்ட அனுபவத்தை அடிப்படையாகக் கொள்ளும், அதன் மூலம் தொழிலாள வர்க்கம் இறுதியில் நமது காலத்தின் மிகப்பெரிய நெருக்கடியான புரட்சிகரத் தலைமையின் நெருக்கடியைத் தீர்க்க முடியும்.
போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் ரஷ்யாவிலும், ஒருவேளை முன்னாள் சோவியத் ஒன்றியம் முழுவதும் அனைத்துலகக் குழுவின் ஒரு பகுதியை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட அதன் நடவடிக்கைகளின் மூலம் இந்த நெருக்கடியைத் தீர்க்க உதவ முயல்கிறது.
ஸ்ராலினின் மரணதண்டனையின் அடியோ, பொய்கள் மற்றும் பொய்மைப்படுத்தல்களின் வெள்ளமோ, ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை மற்றும் எரியும் மரபின் மறுபரிசீலனையோ, அவரது பெரிய பாதையை கல்லறைக்கு தள்ளவோ அல்லது அவரைப் பின்பற்றுபவர்களைக் குறைக்கவோ இல்லை.
லெவ் டேவிடோவிச் ட்ரொட்ஸ்கியின் நேர்மையான பெயரின் மீது எத்தனை முடிவற்ற பொய்கள் மற்றும் பொய்மைப்படுத்தல்கள் கொட்டப்பட்டாலும், அவர்களால் தனது இதயத்தின் கடைசி துடிப்பு வரை தன்னலமின்றி வாழ்ந்த ஒரு மனிதனைப் பற்றிய உண்மையை குறைக்கவோ அழிக்கவோ முடியவில்லை. அதற்காக அவர் தனது முழு நனவான வாழ்க்கையையும் இறுதிவரை அர்ப்பணித்தார்.
நவீன தலைமுறையினர் லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் படைப்புகளை ஸ்ராலினின் முப்பட்டை கண்ணாடி மூலம் எவ்வளவு படித்தாலும், ஸ்ராலினிச பொய்களை எவ்வளவு நம்பினாலும், உண்மைக்கு மேல் ஸ்ராலினிச கலவையை வைத்தாலும், லீட்டர் மையில் தொடங்கி புனித இரத்தத்துடன் முடிவடைந்த உண்மையை அணைக்க முடியாது. உண்மை ஒரு மாக்னீசிய வெளிச்சத்தை விட வெப்பமாகவும் பிரகாசமாகவும் மாறும், மேலும் அது கம்யூனிசத்தின் வெற்றிக்காகவும், உண்மையான சுதந்திரம் மற்றும் சத்தியத்தின் வெற்றிக்காகவும், தைரியமாகச் செல்லவும், அதன் கீழ் போராடவும் விரும்புவோருக்கு பூமியின் வான்வெளிக்கு மேலே ஒரு வழிகாட்டும் நட்சத்திரமாக மாறும். அந்த இலக்கை நோக்கி மேலும் மேலும் பெரும் புரட்சியாளரும், பாட்டாளி வர்க்கத்தின் தலைவரும் அவரது நோக்கத்திற்காக தியாகியான ட்ரொட்ஸ்கி போராடி இறந்தார்!