மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
டிசம்பர் 19 அன்று, UAW ஜனாதிபதி வேட்பாளர் வில் லெஹ்மன் 2022 தொழிற்சங்கத் தலைமைத் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக 'முழுமையாக' ஒரு முறையான எதிர்ப்பைத் தாக்கல் செய்தார்.
வாக்குச்சீட்டை மேற்பார்வையிடும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பாளருக்கு எதிரான லெஹ்மனின் எழுத்துபூர்வ எதிர்ப்பானது, தேர்தல் பற்றி தகவல் அடிப்படையிலான விரிவான வரலாற்றுப் பதிவாகும், அதாவது வாக்குகளை நசுக்குவதன் மூலம் அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் அதிகாரத்துவத்தின் ஜனநாயக விரோத சதியின் ஒவ்வொரு அம்சத்தையும் இது விரிவாக விவரிக்கிறது.
லெஹ்மனின் பிரச்சாரத்தின் போது நிறுவப்பட்ட சாமானிய தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்களின் உறுப்பினர்களின் வளர்ந்து வரும் வலையமைப்புகள் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களின் தொகுப்பான 50 பக்க எதிர்ப்பு அறிக்கையும் டஜன் கணக்கான பக்க இணைப்புக்களும், அதிகாரத்துவம் மீண்டும் மீண்டும் அமெரிக்க தொழிலாளர் சட்டத்தை மீறியுள்ளதையும், தேர்தல் சட்டவிரோதமானது என்பதையும் நிரூபிக்கிறது.
தேர்தலில் போட்டியிட்ட ஒரே சோசலிச வேட்பாளரான லெஹ்மன், நாடு முழுவதிலும் இருந்து வாகனம் மற்றும் கல்வித் துறையைச் சேர்ந்த சாமானிய தொழிலாளர்கள் மத்தியில் கிட்டத்தட்ட 5,000 வாக்குகளைப் பெற்றுள்ளார். ஆனால் அவரது எதிர்ப்பு ஏற்கப்படாவிட்டால், அடுத்த மாதம் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட தேர்தலில் அவரது பெயர் நீக்கப்படும், இது தொழிற்சங்கத்தின் அதிகாரத்துவ எந்திரத்தின் முன்னணி வேட்பாளர்களான ரே கர்ரி மற்றும் ஷான் ஃபைன் ஆகியோருடன் மட்டுப்படுத்தப்படும், இவர்கள் ஒவ்வொருவரும் பாரிய வாக்காளர் அடக்குமுறைக்கு மத்தியில் மொத்த தகுதியான வாக்குகளில் 4 சதவீதத்திற்கு குறைவாகவே பெற்றுள்ளனர்.
வாக்களிக்க தகுதியான 1.1 மில்லியன் உறுப்பினர்களில் ஒரு மில்லியன் பேர் இந்தத் தேர்தலில் வாக்களிக்கவில்லை, ஏனெனில் UAW தலைமை அவர்களை வேண்டுமென்றே இருட்டில் வைத்திருந்தது. இது ஒரு கருத்து அல்ல, ஆனால் நிரூபிக்கப்பட்ட உண்மை. உதாரணமாக, லெஹ்மனின் எதிர்ப்பு அறிக்கை, பல உள்ளூர் தொழிற்சங்க வலைத் தளங்களுடன் இணைக்கப்பட்டுள்ள UAW தேசிய ‘உறுப்பினர் செய்திகள்’ இணைய பக்கம், ஜூலை 29 மற்றும் நவம்பர் 29 தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தேர்தல் பற்றி எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்பது பற்றி விவரிக்கிறது.
அதிகாரத்துவம், தொழிற்சங்கத்தின் உள் தேர்தல்களைச் சுற்றி மௌனமாக சதி செய்த அதேவேளை, தேசிய இடைக்கால தேர்தல்களில் ஜனநாயக கட்சிக்காக பிரச்சாரம் செய்ய பரந்த வளங்களை அர்ப்பணித்தது. தொழிற்சங்கத் தேர்தல் நடந்த அதே நேரத்தில் நடந்ததான அந்தத் தேர்தல்களில், அதிகாரத்துவம் மேம்பட்ட நுட்பங்களைப் பயன்படுத்தியது, பொது நிகழ்வுகளை ஒழுங்கமைத்தது, மற்றும் தொழிலாளர்களுக்கு வாக்களிப்பதற்கான காலக்கெடுவை நினைவூட்டுவதன் மூலம் வாக்கு எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் தொழிற்சங்க உறுப்பினர்களை விளம்பரப்படுத்தியது.
இந்த மாறுபாட்டிற்கு அப்பாவித்தனமான விளக்கம் எதுவும் இல்லை. இடைக்காலத் தேர்தல்களில் ஜனநாயகக் கட்சியினருக்கு ஆதரவளித்தது போலவே தொழிற்சங்கம் அதன் சொந்தத் தேர்தலுக்கு அதே வளங்களைச் செலவிட்டிருந்தால், வாக்குப்பதிவு சந்தேகத்திற்கிடமின்றி மிக அதிகமாக இருந்திருக்கும்.
போதுமான அறிவிப்பு என்பது ஒரு தேர்தலை ஜனநாயகமாகக் கருதுவதற்கான அடிப்படை நிபந்தனையாகும். தேர்தல் பற்றி எதுவும் தெரியாத தொழிலாளர்களால் தேர்தலில் வாக்களிக்க முடியாது.
UAW அதிகாரத்துவம் வாக்குகளை நசுக்குவதற்கு ஒரு முறையற்ற நோக்கத்தைக் கொண்டிருந்தது. தகவலறிந்த உறுப்பினர்கள் தங்களை வெளியேற்றிவிடுவார்கள் என்றும், தங்களின் கொழுத்த ஆறு இலக்க சம்பளம், தொழிலாளர்களின் சந்தா பணத்தில் கட்டப்பட்ட 1.5 பில்லியன் டாலர் சொத்துக்களுக்கான அணுகல் மற்றும் தங்களின் நேரடி மற்றும் மறைமுக சலுகைகள் அனைத்தையும் இழக்க நேரிடும் என்றும் அதிகாரத்துவத்தினர் அஞ்சினர்.
தொழிற்சங்கம் வழங்கிய சிறிய அறிவிப்பு பெரும்பாலும் ஒரு தகவல் தொடர்பு அமைப்பு மூலம் இருந்தது என்ற உண்மையை லெஹ்மனின் எதிர்ப்பு ஆவணப்படுத்துகிறது, LUIS என அழைக்கப்படும் இந்த உள்ளூர் தொழிற்சங்க தகவல் அமைப்பு (Local Union Information System) அதிகாரத்துவத்தினர் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதற்காக அமைக்கப்பட்டது, மேலும் நவம்பர் மாதம் லெஹ்மன் எதிர்UAW விசாரணையின் போது, அமெரிக்க மாவட்ட நீதிபதி டேவிட் லோசனின் வார்த்தைகளில், 'உறுப்பினர்களை விலக்கியது' என்ற உண்மையையும் ஆவணப்படுத்துகிறது.
முடிவு இவ்வாறு உள்ளது: தொழிற்சங்க அதிகாரிகளும் அவர்களின் கூட்டாளிகளும் பொதுவாக தேர்தல் பற்றி அறிந்து வாக்களித்தனர், ஆனால் சாமானிய தொழிலாளர்களைப் பொறுத்தவரை பொதுவாக அவ்வாறு நடக்கவில்லை. இதனால் அதிகாரத்துவத்தின் ஆதரவு பெற்ற வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குகள் கிடைத்தன, அதேவேளை சாமானிய தொழிலாளர்களின் நலன்களையும் அபிலாஷைகளையும் பிரதிபலித்த லெஹ்மனுக்கான வாக்குகள் நசுக்கப்பட்டன.
தொழிற்சங்கத்தின் அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் பட்டியல்களில் உள்ள பரவலான குறைபாடுகளால் அறிவிப்பு இன்னும் குறைவாக செய்யப்பட்டிருந்தது, தொழிற்சங்கம் இப்பட்டியல்களை சரியாக பராமரிக்க பிடிவாதமாக மறுக்கிறது, இது உண்மையில் பதிவான வாக்குகளை விட அதிகமான வாக்குச் சீட்டுகள் தபாலில் அனுப்ப முடியாதவையாக திரும்புவதற்கு வழிவகுக்கிறது. பெரும்பாலும் லெஹ்மனின் பிரச்சாரத்தின் மூலம் மட்டுமே தேர்தலைப் பற்றி அறிந்த பல தொழிலாளர்களுக்கு சரியான நேரத்தில் வாக்குச் சீட்டுகள் கிடைக்காததால் அவர்களால் இன்னும் வாக்களிக்க முடியவில்லை.
நவம்பரில், லெஹ்மன் ஒரு வழக்கைத் தொடுத்து, தொழிலாளர்கள் வாக்குச் சீட்டுகளைக் கோருவதற்கும் அவற்றை அஞ்சல் செய்வதற்குமான காலக்கெடுவை 30 நாட்கள் நீட்டிக்கக் கோரினார். பைடென் நிர்வாகத்தின் தொழிலாளர் செயலாளர் மார்டி வால்ஷ், UAW எந்திரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்றம் நியமித்த கண்காணிப்பாளர் ஆகியோர் ஆட்சேபித்ததை அடுத்து இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
“நவம்பர் 28 காலக்கெடு வரை ஒவ்வொரு நாளும் இந்த விகிதத்தில் வாக்குச் சீட்டுகள் தொடர்ந்து அனுப்பப்பட்டால், மொத்த வாக்குப்பதிவு சுமார் 104,000 ஆக இருக்கும்” என்று விசாரணையின் போது லெஹ்மன் எச்சரித்தார். லெஹ்மனின் எச்சரிக்கை மிகத் துல்லியமாக இருந்தது. அதாவது, மொத்தம் 104,776 வாக்குகள் எண்ணப்பட்டன.
வெறும் 9 சதவீதம் வாக்குப்பதிவு என்பது, அமெரிக்க வரலாற்றில் எந்தவொரு நேரடி தொழிற்சங்கத் தேர்தலிலும் நிகழ்ந்த மிகக் குறைந்த வாக்குப் பதிவுகளில் ஒன்றாகும். ஆனால் மேற்கு கடற்கரை கல்வித் தொழிலாளர்களிடையே வாக்குப்பதிவு விகிதம் இன்னும் குறைவாக இருந்தது, மேலும் இந்த புதிய உறுப்பினர்களுக்கு எதிராக வேண்டுமென்றே பாகுபாடு காட்டப்படுவதைக் குறிக்கிறது.
உதாரணமாக, லோக்கல் 4123, அதன் இணையதளத்தின் படி ‘11,000 க்கும் அதிகமான உறுப்பினர்களை’ கொண்டுள்ள, இது 2,296 வாக்குச் சீட்டுகளை மட்டுமே பெற்றுள்ளது, அதில் 29 பேர் மட்டுமே வாக்களிக்க அனுப்பப்பட்டனர்.
கல்வி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் முதுகலை பட்டதாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் UAW லோக்கல் 5810, தேசிய அதிகாரிகளுக்கான தேர்தலில் 328 வாக்குகளை மட்டுமே பதிவு செய்தது, சில வாரங்களுக்குப் பின்னர் ஒப்பந்த அங்கீகாரத்தின் பேரில் மேலும் 4,756 வாக்குகளை அளித்தது. குறைவான வாக்குப்பதிவுக்கு காரணம் சரியான அறிவிப்பு இல்லாததுதான் என்பதை இது மறுக்கமுடியாமல் நிரூபிக்கிறது, இது அலட்சியம் அல்ல, ஆனால் அதிகாரத்துவமும் அதன் கூட்டாளிகளும் இப்போது பரப்பும் அவமானகரமான பொய்.
லெஹ்மனின் எதிர்ப்பு அறிக்கை, நாடு முழுவதும் பணியிடங்களில் பிரச்சார தன்னார்வலர்களுக்கு எதிராக விடுக்கப்பட்ட திட்டமிட்ட மிரட்டல்களையும் ஆவணப்படுத்தியுள்ளது, இதில் டிசம்பர் 17 அன்று UAW பிராந்தியம் 4 இயக்குநர் பிராண்டன் காம்ப்பெல் மூலம் சரீரரீதியான வன்முறைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதும் அடங்கும்.
கூடுதலாக, லெஹ்மனின் எதிர்ப்பு அறிக்கை, வாக்களிப்பை அடக்குவதற்கான முயற்சியில் வாக்களிக்கும் காலக்கெடு மற்றும் தகுதி குறித்து, அதாவது தற்காலிக பகுதிநேர (Temporary Part-Time - TPT) தொழிலாளர்களுக்கு வாக்குச்சீட்டு கிடைத்தாலும் அவர்கள் வாக்களிக்க முடியாது என்பது போன்ற தவறான தகவலை தொழிற்சங்கம் வேண்டுமென்றே எவ்வாறு உறுப்பினர்களுக்கு அளித்தது என்பது பற்றியும், மற்றும் டெக்சாஸ் மற்றும் பிற இடங்களில் உள்ள GM Arlington இல் உள்ள தொழிலாளர்களிடம் வாக்குப்பதிவுக்கான காலக்கெடு முடிவடையும் முன்னரே முடிந்துவிட்டதாக தொழிற்சங்கம் கூறியுள்ளது பற்றியும் ஆவணப்படுத்தியுள்ளது.
காலக்கெடுவிற்கு முன்னதாகவே வில் லெஹ்மன் தனது வாக்குச்சீட்டை தபாலில் அனுப்பிவிட்ட போதிலும், அவரது சொந்த வாக்கு கூட கணக்கிடப்படவில்லை என்பதே இந்த தவறான பல நடவடிக்கைகளில் உச்சகட்டமானது.
‘UAW என்பது ஒரு நாடாக இருந்திருந்தால், அது ஜனநாயகம் என்று அழைக்கப்படுமா?’ என்று லெஹ்மன் தனது எதிர்ப்பு அறிக்கையில் கேட்டுள்ளார். வாக்களிப்பு விகிதம், தேசிய தேர்தல்களில் உலகிலேயே மிகக் குறைவாக வாக்களிக்கப்பட்ட ஹைட்டி தேர்தலை விட பாதிக்கும் குறைவாக 9 சதவீத அளவிற்கு இருந்தது. இது, எக்னாமிஸ்டின் ஜனநாயகக் குறியீடு ‘சர்வாதிகார ஆட்சிகள்’ என்று வகைப்படுத்தும் நாடுகளை விட குறைவான வாக்குப் பதிவு விகிதமாகும்.
உறுப்பினர்களுக்கு எதிராக குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட அல்லது குற்றகரமான சதித்திட்டங்கள் குறித்து குற்றத்தை ஒப்புக்கொண்ட இரண்டு முன்னாள் தலைவர்கள் உட்பட, தொழிற்சங்கத்தின் நிர்வாகக் குழுவில் உள்ள பல உறுப்பினர்களின் பல ஆண்டு கால ஊழல்களால் UAW இன் வரலாற்றில் முதன்முறையாக இந்த ஆண்டு நேரடித் தேர்தலை நடத்த நிர்ப்பந்திக்கப்பட்டது. ‘தொழிலாளர் தலைவர்கள்’ என்று கூறப்படுபவர்களிடையே நிலவும் ‘ஊழல் கலாச்சாரம்’ பற்றி அமெரிக்க நீதித்துறை விவரித்துள்ளது, இவர்கள் தங்கள் உறுப்பினர்களை சாதகமற்ற ஒப்பந்தங்களில் கட்டுப்படுத்த நிர்வாகத்திடமிருந்து இலஞ்சம் பெறுகின்ற அதேவேளை மில்லியன் கணக்கான டாலர்கள் தொழிலாளர்களின் சந்தா தொகையை கேவலமாக ஆடம்பரமான தனிப்பட்ட வாழ்க்கை வசதிகளுக்காக செலவழித்துள்ளனர்.
அமெரிக்க அரசாங்கம் நீதிமன்றம் நியமித்த கண்காணிப்பாளரையும், நேரடித் தேர்தலுக்கான வாய்ப்பையும் UAW இன் வசம் ஒப்படைத்ததானது, தொழிலாளர் ஜனநாயகத்தின் மீதான அதீத அன்பினால் அல்ல, மாறாக தொழிற்சங்க அதிகாரத்துவம் தொடர்ந்து பிழைப்பு நடத்த வழி ஏற்படுத்துவதற்கே. பல தசாப்தங்களாக தொழிலாளர்களின் பொருளாதாரக் கோரிக்கைகளை கட்டுக்குள் வைத்திருப்பதற்கும், தொழிலாளர்களை அரசியல் ரீதியாக ஜனநாயகக் கட்சியின் கட்டைவிரலின் கீழ் அடக்கி வைத்திருப்பதற்கும், மற்றும் வெளிநாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களை மேம்படுத்துவதற்கும் முக்கிய கருவியாக செயல்பட்ட தொழிற்சங்கத்திற்கு மறுவாழ்வு அளிப்பதற்குமான ஒரு வழியாகவே தேர்தல் பார்க்கப்பட்டது.
வில் லெஹ்மனின் முறையான எதிர்ப்பு, இப்போது தொழிற்சங்கம், பைடென் நிர்வாகம், மற்றும் நீதிமன்றம் நியமித்த கண்காணிப்பாளர் ஆகியோருரை தர்மசங்கடத்தில் ஆழ்த்துகிறது: 1) அங்கே சோசலிச வேட்பாளர் சரியானவர் என்பதை அவர்கள் அங்கீகரித்து மீண்டும் தேர்தலை நடத்துவார்களா?, அல்லது (2) தேர்தல் முடிவுகளை முன்னெடுத்துச் செல்கையில், சாமானிய தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கை பெரிதும் அதிகரிப்பதை ஒருபோதும் முறையானது என்று அங்கீகரிக்க மாட்டார்கள்.
பைடென் நிர்வாகம், ஒட்டுமொத்த UAW தொழிற்சங்க எந்திரம் மற்றும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கட்டுப்பாட்டாளர்களுக்கு எதிராக, இந்தத் தேர்தல் முழுவதும், உழைக்கும் மக்களின் நலன்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தில் முன்னணியில் இருந்தவர்கள் வில் லெஹ்மனும் அவருடைய பிரச்சாரத்தை ஆதரித்தவர்களும்தான் என்பதில் சந்தேகமில்லை.
ஒரு புதிய புரட்சிகர சுழற்சி திறக்கப்பட்டு, உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு தொழில் துறையிலும் பாரிய சமூக சக்திகள் பெருகிய முறையில் முன்னேறி வரும் நிலையில் இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. நேரடியாகவும் மறைமுகமாகவும், பல்வேறு வடிவங்களில், தொழிலாளர்கள் இலாப அமைப்பு மற்றும் அதன் பாதுகாப்புகள் மற்றும் பாதுகாவலர்களுக்கு எதிராக எழுச்சி பெற்று வருகின்றனர்.
தொழிற்சங்கங்களில், இது ஊழல் நிறைந்த தேசியவாத அதிகாரத்துவங்களுக்கு எதிராக சாமானிய தொழிலாளர்களின் கிளர்ச்சியாக வெளிப்படுகிறது, இதற்கு ஜனநாயக விரோத மற்றும் சர்வாதிகார முறைகள் மூலம் அதிகாரத்துவம் பதிலளிக்கிறது. இந்தச் சூழலில், லெஹ்மனின் பிரச்சாரம், புறநிலையாக ஒட்டுமொத்த இயக்கவியலுக்குள் ஒரு வர்க்க-நனவான கூறாக கூர்மையான வெளிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
UAW தேர்தலில் லெஹ்மன் வேட்பாளராக இருந்திருக்கவில்லை என்றால், இந்தளவிற்கு மோசமாக இல்லாவிட்டாலும், பாரிய வாக்காளர் அடக்குமுறை இன்னும் நடந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால் தேர்தலில் ஒரு சோசலிச வேட்பாளரின் தீவிர பங்கு இல்லாமல், உறுப்பினர்களுக்கு எதிரான அதிகாரத்துவத்தின் ஜனநாயக விரோத சதிகளின் முழு அளவையும் நூறாயிரக்கணக்கான சாமானிய தொழிலாளர் உறுப்பினர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களின் பார்வையில், இவ்வளவு முழுமையாக பார்க்க முடியாது.
லெஹ்மன் மற்றும் அவரை ஒத்த எண்ணம் கொண்ட தொழிலாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் –தன்னார்வத் தொண்டர்களின் அழைப்புகளுக்கு பதிலளித்தவர்கள், துண்டுப் பிரசுரங்களுடன் தொழிற்சாலை திருப்ப வாயில்களின் முன் நின்றவர்கள், மிரட்டலையும் பழிவாங்குதலையும் எதிர்த்து பின்வாங்க மறுத்தவர்கள்- இவையனைத்தையும் சாத்தியமாக்கியுள்ளனர். ஒரு உண்மையான சோசலிச பிரச்சாரம், எதையும் மிகைப்படுத்தாமல், தேர்தலின் அரசியல் இயக்கத்தை முழுமையாக மாற்றியது.
UAW எந்திரம் இப்போது தேர்தலை மறந்துவிட்டு வழமை போல் வேலையைத் தொடர விரும்புகிறது. ஆனால் அதிகாரத்துவம் தேர்தல் சட்டப்பூர்வமானது என்று பெரிதும் பாசாங்கு செய்தாலும், சட்ட ரீதியிலான பார்வையிலோ அல்லது அதிகரித்து வரும் உறுப்பினர்களின் பார்வையிலோ அது அப்படி இல்லை. லெஹ்மனின் முறையான எதிர்ப்பு, தேர்தலை மீண்டும் நடத்துவதற்கான பிரச்சாரத்தின் முதல் படியாகும், அதில் உறுப்பினர்கள் தங்கள் ஜனநாயக ரீதியான விருப்பத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்கள்.
“ஒரு உறுப்பினர் மற்றும் வேட்பாளராக எனக்காகவும், அத்துடன் இந்த தேர்தலில் வாக்களிக்காத எனது ஒரு மில்லியன் தொழிற்சங்க சார்பு சகோதர சகோதரிகளின் சார்பாகவும் நான் இந்த எதிர்ப்பை தெரிவிக்கிறேன்” என்று லெஹ்மன் தனது எதிர்ப்பு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். “அவர்கள் எனக்கு அல்லது வேறொரு வேட்பாளர் யாருக்கு வாக்களித்திருந்தாலும் சரி, நாம் அனைவரும் அர்த்தமுள்ள ஜனநாயகத் தேர்தலில் பங்கேற்க உரிமை கொண்டுள்ளோம் – இந்தத் தேர்தல் அப்படி நடக்கவில்லை” என்றும் கூறுகிறார்.
லெஹ்மனின் பிரச்சாரம் வெறுமனே வாக்கு சேகரிப்பதுடன் மட்டும் நின்றுவிடவில்லை. மாறாக, சாமானிய தொழிலாளர் சக்தியின் அடித்தளத்தை கட்டமைப்பது, தொழிலாள வர்க்கத்தின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் அபிலாஷைகளை வலியுறுத்துவது, மற்றும் ஊழல் நிறைந்த தொழிலாளர் விரோத அதிகாரத்துவத்தின் செல்வாக்கிற்கு சவால் விடுவது ஆகியவை பற்றியதாக இருந்தது.
தேர்தல் முடிவுகளுக்கு எதிரான லெஹ்மனின் முறையான எதிர்ப்புடன், இந்தப் பிரச்சாரம் இப்போது ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைகிறது, மேலும் எதிர்ப்பின் உள்ளடக்கங்களை முடிந்தவரை பரந்தளவிற்கு பிரபல்யப்படுத்தி அவை பற்றி விவாதிப்பது மிகவும் முக்கியமானது.