இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
விரிவடைந்து வரும் பணவீக்கம், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி மற்றும் ஏனைய பிரதான மத்திய வங்கிகளின் வட்டி விகித உயர்வு மற்றும் கடந்தாண்டு பூராவும் அமெரிக்க டொலரின் மதிப்பின் எழுச்சியினதும் விளைவாக, வளர்ந்து வரும் ஏழை நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் சந்தைகள் எனப்படுவதிலும் பொருளாதார பேரழிவு அலைகள் அடித்துச் சென்றுகொண்டிருக்கின்றன.
இதில் இலங்கை மிகவும் பரவலாக அறியப்பட்ட விடயமாகும். அங்கு கடந்த ஆண்டு ஒரு வெகுஜன எழுச்சி இராஜபக்ஷ அரசாங்கத்தை வெளியேற்றியதுடன் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு எதிராக ஒரு புதிய எழுச்சி இப்போது உருவாகி வருகிறது. தொழிலாள வர்க்கம் மற்றும் உழைக்கும் வெகுஜனங்களை வறுமையில் ஆழ்த்துவதன் மூலம் சர்வதேச நிதி மூலதனத்திற்கு நாட்டின் கடன்களை திருப்பி செலுத்துவதற்காக விக்கிரமசிங்க அரசாங்கம் சர்வதேச நாணய நிதிய சிக்கன திட்டத்தை திணிப்பதற்கு முயல்கின்றது.
ஆனால் இலங்கையைப் போன்று அடிப்படை சமூக சேவைகள் மேலும் மேலும் அழிக்கப்பட்டு வரும் நிலைமை, ஏனைய பல நாடுகளிலும் பிரதிபலித்து வருகின்றது.
நைஜீரியாவில் சர்வதேச விமான சேவைகள் இடை நிறுத்தப்படுமளவுக்கு, பாகிஸ்தானில் கார் தொழிற்சாலைகள் மூடப்படுமளவுக்கு டொலர் பற்றாக்குறை காணப்படுவதாக சமீபத்தில் ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
பங்களாதேஷில், எரிபொருளை வாங்குவதற்கு டொலரைப் பெறாவிட்டால், மின் உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்த வேண்டியிருக்கும். மின்சக்தி இல்லாவிட்டால், நாட்டின் பிரதான உணவான நெல் வயலுக்கான நீர்ப்பாசனத்தை வறட்சிக் காலத்தில் தொடர முடியாது போகும்.
ப்ளூம்பெர்க் அறிக்கை குறிப்பிட்டது போல்: “உலகின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய வளரும் நாடுகளில் அடிமட்ட நிலைமைகள் மோசமாக உள்ளன. டொலர்கள் பற்றாக்குறையுடன் மூலப்பொருட்கள் முதல் மருந்து வரை எல்லாவற்றையும் பெறும் வாய்ப்பு குறைந்து வருகின்றது. இதற்கிடையில், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து மீட்புப் பொதிகளை பின்னால் சென்று பெற்றுக்கொள்வதில் அரசாங்கங்கள் தங்கள் கடன்களுடன் போராடுகின்றன.”
அந்த 'போராட்டமானது', இலங்கையைப் போலவே, நகர்ப்புற மற்றும் கிராமப்புற தொழில்களுடன் சேர்த்து, மத்தியதர வர்க்க தொழில்களாகக் கருதப்படும் வேலைகளை செய்பவர்கள் உட்பட, தொழிலாள வர்க்கத்தின் மீது முன்னெப்போதும் இல்லாத பெரும் கஷ்டங்களை சுமத்துவதன் மூலம், நிதி மூலதனத்தின் பேராசை கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்கான வழிமுறைகளை வகுப்பதில் உள்ளடக்கியதாகும்.
நிலைமை இன்னும் மோசமாவது மட்டுமே நடக்கும் என்று நிதி ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
ஹொங்கொங்கில் உள்ள பொருளாதார புலனாய்வு பிரிவின் சிரேஷ்ட பொருளாதார நிபுணரான ஜோன் மாரெட், ப்ளூம்பெர்க்கிற்குத் தெரிவித்ததாவது: “இந்த நாடுகள் பொருளாதாரச் சரிவில் சிக்கித் தவிப்பதுடன், பாகிஸ்தான் போன்ற சில நாடுகள் மற்றொரு பொருளாதார வீழ்ச்சியின் விளிம்பில் தத்தளிக்கின்றன. அவற்றின் பொருளாதாரத்தின் பிரதான பகுதிகள் போராடிக்கொண்டிருக்கின்றன. நாணயங்களின் மதிப்பும் மிகக் குறைவாக உள்ளன.'
வட்டிவிகித அதிகரிப்பு தொடரும் என்று அமெரிக்க பெடரல் மற்றும் பிற பிரதான மத்திய வங்கிகளின் தெளிவான சமிக்ஞையுடன் அந்த நிலைமை மோசமடைவது மட்டுமே இடம்பெறும்.
பாக்கிஸ்தானில் சில தொழிற்சாலைகள் மூலப்பொருட்களின் இறக்குமதிக்கு செலுத்த வேண்டிய வெளிநாட்டு நாணயம், பிரதானமாக அமெரிக்க டாலர்கள் இல்லாததால் உற்பத்தியை நிறுத்திவிட்டன.
ஜூன் மாதத்தில் பாக்கிஸ்தான் சுமார் 7 பில்லியன் டொலர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருப்பதோடு ஒரு பொருளாதார வீழ்ச்சிக்கான வாய்ப்புகள் தொடர்ந்தும் இருக்கின்றன. வெளிநாட்டு நாணய இருப்புக்கள் வீழ்ச்சியடைந்து வருவதுடன் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளைப் போலவே பாகிஸ்தானும் பல தசாப்தங்களில் மிக உயர்ந்த பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
மூடிஸ் நிறுவனம், கடந்த வாரம் நாட்டின் கடன் மதிப்பீட்டைக் குறைத்தபோது, 'தற்போதைய மிகவும் பலவீனமான அந்நிய செலாவனி நிலைமையில், ஒரு வீழ்ச்சியைத் தவிர்க்க சரியான நேரத்தில் பணம் செலுத்தப்படாமல் போகலாம்,' என்று கூறியது,
டொலர் பற்றாக்குறையின் விளைவாக, பெரிய முதலாளித்துவ அரசாங்கங்கள் கோவிட்-19 தொற்றை உலகத்தில் இருந்தே ஒழித்துகட்டும் கொள்கையை பின்பற்ற மறுத்ததால் பாதிக்கப்பட்ட சுகாதார நிலைமை, மருத்துவப் பொருட்கள் பற்றாக்குறையுடன் எல்லா இடங்களிலும் மோசமாகி வருகிறது.
20க்கும் மேற்பட்ட நாடுகள் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோருவதுடன் பாகிஸ்தான் போன்ற நாடுகள் தங்கள் நாணயங்களின் மதிப்பு சரிவதைக் காண்கின்றன.
கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் கானாவின் நாணயமான சீடியின் மதிப்பில் 55 சதவீத மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்பட்டது. உலக உணவு மற்றும் எரிசக்தி பெருநிறுவனங்களின் இலாபம் உயர்ந்ததன் காரணமாக மேற்கொள்ளப்பட்ட விலை உயர்வுக்கும் மேலாக, உள்நாட்டு நாணயத்தின் பெறுமதிபடி இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து பொருட்களின் விலையையும் இது வியத்தகு முறையில் அதிகரிக்கச் செய்தது.
பல ஏழ்மையான நாடுகள் பிடிமானத்தில் தொங்கிக்கொண்டிருப்பதை, தொற்றுநோயின் விளைவாக அதிகரித்த ஒட்டுமொத்த கடன் அளவுகள் வெளிப்படுத்துகின்றன.
2019 ஆம் ஆண்டில், தொற்றுநோய் தாக்குவதற்கு முன்பு, சர்வதேச நிதிக்கான நிறுவனம் (IIF), சுமார் 30 பெரிய குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளின் மொத்த கடன் சுமை 75 டிரில்லியன் டொலர்கள் என கணக்கிட்டது. இது கடந்த ஆண்டு டிசம்பரில் 98 டிரில்லியன் டொலர்கள் ஆக உயர்ந்தது. இது பெரும்பாலான அதிகரிப்பு 2020 மற்றும் 2021 இல் ஏற்பட்டதாகும்.
அதே நேரத்தில், அரசாங்க கடனில் பெரும் அதிகரிப்பு ஏற்பட்டு, அது சமூக செலவினங்களின் இன்றியமையாத பகுதிகளில் கட்டுப்பாடுகளுக்கு வழிவகுத்துள்ளது. சர்வதேச நிதிக்கான நிறுவனத்தின் கூற்றுப்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட 30 நாடுகளுக்கான மொத்த அரசாங்கக் கடன் 2022 இன் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 65 சதவீதத்தை எட்டியது. இது தொற்றுநோய்க்கு முந்தைய நிலைமைகளில் இருந்து 10 சதவீத புள்ளிகள் அதிகரிப்பும் இதுவரை இல்லாத ஆக உயர்ந்த மொத்த எண்ணிக்கையுமாகும்.
கோவிட் தொற்று தொடங்கியதை அடுத்து, மத்திய வங்கிகள் டிரில்லியன் கணக்கான டொலர்களை நிதி அமைப்பிற்குள் பாய்ச்சியதால், 2020–2021 இல் வட்டி விகிதங்கள் மிகக் குறைவாக இருந்தன. ஆனால் கடந்த ஆண்டு, பணவீக்கத்தின் விரைவான உயர்வு மற்றும் அது தொழிலாள வர்க்கத்துக்குள் தூண்டிவிடக் கூடிய இயக்கம் பற்றிய அச்சத்தினதும் பிரதிபலிப்பாக, அவர்கள் நான்கு தசாப்தங்களில் இல்லாத வேகத்தில் வட்டி விகித உயர்த்தலைத் தொடங்கினர்.
அமெரிக்க டொலரின் மதிப்பை அதிகரிப்பதன் விளைவுகளில் ஒன்று, பணவீக்கத்தின் எழுச்சிக்கு வழிவகுத்ததாகும், ஏனெனில் பல சர்வதேச பொருட்களின் விலை டொலரிலேயே உள்ளது. நாணயச் சந்தைகளில் ஏற்படும் அசைவுகள், சில பொருட்களின் டொலர் விலை, டொலர் மதிப்பின்படி வீழ்ச்சியடையத் தொடங்கிய போதும், பல நாடுகளில் பணவீக்க உயர்வு தொடர்ந்தது. இதற்கு காரணம், பல நாடுகளில் டொலருக்கு எதிரான அந்த நாட்டு நாணயங்களின் மதிப்பு வீழ்ச்சியடைந்தமை ஆகும்.
இம்மாதம் காலாண்டு மதிப்பாய்வின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்ட பேங்க் ஃபோர் இன்டர்னஷனல் செடில்மண்ட்ஸ் இன் சமீபத்திய கற்கை, உலகளாவிய நிதி அமைப்பின் செயல்பாட்டில் ஒரு முக்கியமான மாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. இது ஒரு பெரிய சர்வதேச தாக்கத்தை, குறிப்பாக ஏழை நாடுகளில் ஏற்படுத்துகிறது.
கடந்த காலங்களில் பொருட்களின் விலையில் ஈடுசெய்யும் இயக்கங்கள் இருந்ததை அது கண்டறிந்தது. அதாவது, விலைகள் உயரும் போது, டொலரின் மதிப்பு குறைய முனைந்தது, அதனால் இறக்குமதியாளர்கள் பொருட்களின் விலை அதிகரிப்பின் விளைவுகளிலிருந்து ஓரளவு பாதுகாக்கப்பட்டனர்.
ஆனால் இந்த உறவு மாறிவிட்டது. 2021 வரை பொருட்களின் விலைகளும் டொலரின் மதிப்பும் நேர்மாறாக நகர்ந்தன. இப்போது அவை ஒன்றாக நகர்கின்றன.
'இதனால், உற்பத்தி தேக்கத்தின் மீது பொருட்களின் விலை மற்றும் டொலர் சுழல்களின் மொத்த பாதிப்பும் ஒன்றையொன்று ஈடுசெய்யப் பயன்படுகின்றன, அவை 2012-2022 இல் ஒன்றோடொன்று இணைந்தன' என்று பேங்க் ஃபோர் இன்டர்னஷனல் செடில்மண்ட்ஸ் ஆய்வு கூறியது.
இந்த ஆண்டின் முதல் வாரங்களில், வட்டி விகிதங்கள் குறையத் தொடங்கலாம் என்றும், ஏழை நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் சந்தைகள் என்று அழைக்கப்படும் நாடுகள் மீதான அழுத்தம் குறையலாம் என்றும் ஊகங்கள் எழுந்தன. ஆனால் சமீப காலத்தில், பிரதான பொருளாதாரங்களில் 'இறுக்கமான தொழிலாளர் சந்தைகள்' என்று மத்திய வங்கிகள் குறிப்பிடுவது தொடர்வதால், ஒரு திருப்பம் ஏற்படப் போவதில்லை.
வட்டி விகித உயர்வுகளின் வேகம், சில சந்தர்ப்பங்களில் குறையலாம், ஆனால் அவை தொடரும். அவை உலக மக்கள் தொகையில் பெரும்பகுதியை உள்ளடக்கிய ஏழை நாடுகளில் தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களுக்கு ஏற்கனவே சகிக்க முடியாத வாழ்க்கை நிலைமைகளை தீவிரப்படுத்துகிறது.
முன்னேறிய மற்றும் குறைந்த வளர்ச்சியடைந்த பொருளாதாரங்கள் என்று அழைக்கப்படுபவைகளை உள்ளடக்கிய ஒட்டுமொத்த இலாப அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டம் அவசியம் என்பதை தினசரி யதார்த்தத்தில் எடுத்துக்காட்டப்படுகிறது.
சிலிக்கன் வெலி வங்கியின் பிணையெடுப்பும், முதலாளித்துவத்தின் வரலாற்று நெருக்கடியும்