மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஆகஸ்ட் 20, ஞாயிற்றுக்கிழமை “உலக வரலாற்றின் மையத்தில் ஒரு தீவு: ட்ரொட்ஸ்கி பிரின்கிபோவில்” என்ற தலைப்பில் உலாஸ் அடேசி ஆற்றிய உரை பின்வருமாறு. இந்நிகழ்வு துருக்கியின் இஸ்தான்புல் கடற்கரையில் மர்மாரா கடலில் உள்ள பிரிங்கிபோ என்ற தீவில் நடைபெற்றது. இது 1929 முதல் 1933 வரையில் ட்ரொட்ஸ்கி நான்கு ஆண்டுகாலமாக நாடுகடத்தப்பட்டிருந்த நிலையை கௌரவித்தது.
உலாஸ் அடேசி மேரிங் வெளியீட்டின் ஆசிரியர் மற்றும் துருக்கியில் உள்ள சோசலிச சமத்துவக் குழுவின் [Sosyalist Eşitlik Grubu] முன்னணி உறுப்பினர் ஆவார். WSWS சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் மற்றும் அதன் ஆசிரியர் குழு உறுப்பினர் எரிக் லண்டன் ஆகியோரின் உரைகளை WSWS முன்பு வெளியிட்டது. முழுப் பதிவையும் Trotsky.com இல் பார்க்கலாம்.
லியோன் ட்ரொட்ஸ்கி, ஒரு ஸ்ராலினிச முகவரால் படுகொலை செய்யப்பட்ட 83 வது ஆண்டு நினைவு நாளில், அந்த மாபெரும் புரட்சியாளர் 1929 மற்றும் 1932 இற்கு இடையில் இங்கு வாழ்ந்த முக்கியம் மிகுந்த ஆண்டுகளின் நினைவேந்தலில், இன்று பேசுவது ஒரு பெரிய கெளரவமாக இருக்கிறது.
1929 இல் சோவியத் யூனியனில் இருந்து துருக்கிக்கு லியோன் ட்ரொட்ஸ்கி நாடுகடத்தப்பட்டது ஒரு முக்கிய அரசியல் பிரமுகரின் தனிப்பட்ட விதியை விட மேலும் அதிகமான விஷயங்கள் சம்பந்தப்பட்டதாக இருந்தது. ட்ரொட்ஸ்கி, விளாடிமிர் லெனினுடன் சேர்ந்து, 1917 அக்டோபர் புரட்சியின் முதன்மைத் தலைவராக இருந்தார். லெனினுடன் சேர்ந்து, சோவியத் குடியரசுகளிலும் உலகம் முழுவதிலும் அவரது பெயர் புரட்சியுடன் ஒன்றாக அடையாளம் காணப்பட்டது.
இளம் தொழிலாளர் அரசை அழிக்கும் நோக்கத்தில் வெண் படைகள் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் முழு தலையீட்டிற்கு எதிராக சோவியத் குடியரசைப் பாதுகாத்த செம்படையை நிறுவி அதை வழிநடத்தியவர் ட்ரொட்ஸ்கி.
1917க்கு முந்தைய ஆண்டுகளில், தனது நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் மூலம், ரஷ்யப் புரட்சியின் புறநிலை வளர்ச்சியை தெளிவாக முன்னறிவித்து, ஒரு ஒத்திசைவான சர்வதேச சோசலிச மூலோபாயத்தை உருவாக்கியவர் ட்ரொட்ஸ்கி.
1938 இல் நான்காம் அகிலத்தை நிறுவுவதில் வெற்றி பெற்றதன் மூலம், மார்க்சிச இயக்கத்தின் தொடர்ச்சியை இன்றுவரை உறுதி செய்வதில் ஈடுசெய்ய முடியாத பங்கை அவர் ஆற்றியுள்ளார். நான்காம் அகிலத்தை ஸ்தாபிப்பதற்கான முதல் அறைகூவலை அவர் 1933 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி பிரிங்கிபோவிலிருந்தே விடுத்தார்.
1923ல் பல முக்கிய போல்ஷிவிக் தலைவர்களை உள்ளடக்கிய இடது எதிர்ப்பு என்ற அமைப்பை ட்ரொட்ஸ்கி வழிநடத்தியது தற்செயலான விடயம் அல்ல. லெனின் இறப்பதற்கு முன்னரே தொடங்கிய அதிகாரத்துவ ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு, ட்ரொட்ஸ்கியின் ஆதரவை லெனின் நாடினார். அந்தப் போராட்டத்தை இடது எதிர்ப்பு தொடர்ந்தது.
1917 அக்டோபர் புரட்சியின் அரசியல் கோட்பாடுகள் மற்றும் உலக சோசலிசப் புரட்சியின் மூலோபாயத்தின் பாதுகாவலராக இடது எதிர்ப்பு இருந்தது. இது சோவியத் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தியது.
புரட்சியைத் தொடர்ந்து வந்த உள்நாட்டுப் போரினால் ஏற்பட்ட பொருளாதார மற்றும் சமூகப் பேரழிவு மற்றும் ஐரோப்பா முழுவதும் புரட்சிகளின் தற்காலிகத் தோல்வி ஆகியவை கட்சி மற்றும் அரசு எந்திரத்திற்குள் அதிகாரத்துவம் பலமடைவதை அனுமதிக்கும் நிலைமைகளை உருவாக்கியது.
அதிகாரத்துவ சாதியின் தேசியவாத சமூக நலன்களின் முக்கிய பிரதிநிதியாக இருந்த கட்சியின் பொதுச் செயலாளரான ஸ்ராலின், 1924 இல் ஒரு தத்துவம் என்று பிரகடனப்படுத்திய “தனி ஒரு நாட்டில் சோசலிசம்” என்பதில் வெளிப்படுத்தப்பட்டது.
1929க்கு முன் சோவியத் யூனியனில் ட்ரொட்ஸ்கி எதிர்கொண்ட நிலைமைகளை டேவிட் நோர்த் விவரித்தார். ட்ரொட்ஸ்கி துருக்கிக்கு நாடுகடத்தப்பட்டது ஸ்டாலினாலும் இரகசிய உளவுத்துறையான GPU ஆல் முற்றிலும் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டது. அக்டோபர் புரட்சி மற்றும் அதன் இணைத் தலைவர் மீதான இந்தத் தாக்குதலுக்கு சோவியத் தொழிலாள வர்க்கத்தின் எதிர்வினை குறித்து ஸ்ராலினிச அதிகாரத்துவம் அஞ்சியது.
ட்ரொட்ஸ்கி, அவரது மனைவி நடாலியா மற்றும் அவரது மகன் லெவ் செடோவ் ஆகியோர் பிப்ரவரி 12 அன்று இலிச் கப்பலில் இஸ்தான்புல்லுக்கு வந்தனர். அவர் ஜூலை 17, 1933 இல் பிரான்சுக்குப் புறப்படும் வரை, அடுத்த நான்கரை ஆண்டுகளின் பெரும்பகுதியை பிரிங்கிபோவில் கழித்தார். அவரது இருப்பு மற்றும் அயராத உழைப்பு உலக வரலாற்றின் மையமாக இந்த தீவை உருவாக்கியது.
சர்வதேச மார்க்சிச இயக்கத்தின் உத்தியோகபூர்வ தலைமை மாஸ்கோவில் அமைந்திருந்தாலும், அதன் உண்மையான அரசியல் மையம் பிரிங்கிபோ ஆகும். அமெரிக்கா, ஜேர்மனி, பிரான்ஸ், சீனா உட்பட உலகம் முழுவதிலுமிருந்து பார்வையாளர்கள் இங்கு வந்தனர். மேலும் எல்லா இடங்களிலிருந்தும் கடிதங்கள் வந்தன. ஒரு கணக்கின்படி, அந்தக் காலகட்டத்தில் சுமார் 30 நாடுகளில் ட்ரொட்ஸ்கிசக் குழுக்கள் இருந்தன, இதனால் ட்ரொட்ஸ்கி அவர்களின் கடிதங்களுக்குப் பதிலளிப்பதில் மிகவும் மும்மரமாக இருந்தார்.[1]
ட்ரொட்ஸ்கி இஸ்தான்புல்லுக்கு வந்தபோது, முதலில் சோவியத் துணைத் தூதரகத்தில் சிறிது காலம் தங்கினார். விரைவில் அவர் பியோக்லுவில் உள்ள டோகட்லியான் ஹோட்டலுக்கும், பின்னர் ஷிஸ்லியின் போமோண்டியில் உள்ள வீட்டிற்கும் சென்றார். பின்னர் ட்ரொட்ஸ்கி குடும்பம் பிரிங்கிபோவிற்கு குடிபெயர்ந்தது, அங்கு அவர்கள் துருக்கியில் தங்கள் பெரும்பாலான ஆண்டுகளை கழித்தனர்.
அவர்களின் முதல் முகவரி இசெட் பாஷா மாளிகை. அங்கு தீ விபத்து ஏற்பட்ட பிறகு, அவர்கள் சிறிது காலம் தீவில் உள்ள சவோய் ஹோட்டலில் தங்கினர். மார்ச் 1931 மற்றும் ஜனவரி 1932 க்கு இடைப்பட்ட காலத்தில், அவர்கள் மோடா, காடிகோய்க்கு குடிபெயர்ந்தனர். பின்னர் அவர்கள் பிரிங்கிபோவில் உள்ள யனாரோஸ் மாளிகைக்கு குடிபெயர்ந்தனர், அது அவர்களின் கடைசி முகவரியாக மாறியது.
ட்ரொட்ஸ்கி இந்த முக்கியமான ஆண்டுகளை பிரிங்கிபோவில் தீவிரமாகச் செலவிட்டார், தலைசிறந்த படைப்புகளை எழுதினார் மற்றும் உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட் அகிலத்தில் இடது எதிர்ப்பை ஒழுங்கமைத்தார். இங்கிருந்து அவர் சோவியத் யூனியனில் இடது எதிர்ப்பின் புல்லட்டின் வெளியீட்டை ஏற்பாடு செய்தார்.
இருப்பினும், பதிவுகளின்படி, அவர் இஸ்தான்புல்லில் உள்ள பியோக்லு, சுல்தானஹ்மெட், காகலோக்லு, எமினோனு, பெயாசிட் மற்றும் அர்னாவுட்கோய் மாவட்டங்கள் உட்பட பல்வேறு இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றதாக நாம் அறிந்தோம்.
பிரிங்கிபோவில், அவர் “மர்மாரா கடலுடன் மிகவும் நெருக்கமாக” ஆனார். சிறிது ஓய்வுக்காக, அவர் சரோலம்போஸ் என்ற தனது “விலைமதிப்பற்ற ஆசிரியருடன்” மீன்பிடிக்கச் சென்றார். அவருடைய “தந்தை மற்றும் தாத்தா மற்றும் கொல்லுத் தாத்தா மற்றும் அவரது தாத்தா எல்லோருமே மீனவர்கள்.”[2]
ட்ரொட்ஸ்கியும் இந்த இளம் கிரேக்க மீனவரும் ஒரு புதிய மொழியைப் பேசினர், இது துருக்கிய, கிரேக்க, ரஷ்ய மற்றும் பிரெஞ்சு வார்த்தைகளின் கலவையாகும். ட்ரொட்ஸ்கி “துருக்கியில் மிகவும் பொதுவான செயல்பாடுகளின் பெயர்களை” தான் பேசியதாகவும் அதனை கேட்கும் வாய்ப்பு பெற்ற பார்வையாளர்கள் “நான் எளிதாக துருக்கிய மொழியை பேசுகிறேன் என்ற முடிவுக்கு வந்தனர்” என்றும் குறிப்பிட்டார்.[3]
டேவிட் நோர்த் குறிப்பிட்டது போல், ட்ரொட்ஸ்கி இஸ்தான்புல்லில் காலடி வைப்பதற்கு முன் துருக்கிய ஜனாதிபதி முஸ்தபா கெமாலுக்கு (அட்டாடர்க்) ஒரு கடிதம் அனுப்பினார். அவர் விரைவில் இஸ்தான்புல் கவர்னர் முஹிடின் பே கையெழுத்திட்ட பதிலைப் பெற்றார், அவருக்கு நாட்டை விட்டு வெளியேற சுதந்திரம் உண்டு என்றும், அவர் தனது குடியிருப்பை மாற்றலாம் என்றும், அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவருக்குத் தெரிவித்தார். ட்ரொட்ஸ்கி, ஸ்ராலினிச உளவுப்படையான GPU விடமிருந்து மட்டுமல்ல, உள்நாட்டுப் போரில் அவரது செம்படை தோற்கடித்த வெண்படையிலிருந்த ரஷ்ய புலம்பெயர்ந்தோரிடமிருந்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளானார்.
தனக்கு அளிக்கப்பட்ட உத்தியோகபூர்வ வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதைக் கண்ட ட்ரொட்ஸ்கி, துருக்கியில் தனக்குக் கிடைத்த விருந்தோம்பலில் திருப்தியை வெளிப்படுத்தினார். இங்கே ஒரு நேர்காணலில், தினசரி மில்லியட்டின் தலைமை ஆசிரியர் அஹ்மத் Şükrü Esmer கருத்துப்படி, ட்ரொட்ஸ்கி துருக்கிய அரசியலில் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார் மற்றும் 1908 புரட்சிக்கு முந்தைய துருக்கியைப் பற்றிய தனது எழுத்துக்களைக் காட்டினார்.[4]
1909 இல் துருக்கி மற்றும் பால்கனில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை ஒன்றாகக் கையாளும் ஒரு கட்டுரையில், ட்ரொட்ஸ்கி எழுதினார், “புரட்சிக்கான வெற்றி துருக்கியில் ஜனநாயகத்தின் வெற்றியைக் குறிக்கும். ஜனநாயக துருக்கி, பால்கன் கூட்டமைப்பில் ஒரு அடித்தளமாக இருக்கும்...”[5]
1910 ஆம் ஆண்டில், பால்கன் தீபகற்பத்தின் ஒற்றுமையை அடைவதற்கான ஒரே முற்போக்கான வழி, “கீழிருந்து, மக்கள் தாங்களாகவே ஒன்றிணைவதுதான் - இது புரட்சியின் பாதை, பால்கன் ராஜ வம்சங்களை தூக்கி எறிந்துவிட்டு, ஒரு பால்கன் ஃபெடரல் குடியரசுக்கான பதாகையை பறக்க விட வேண்டும்.” 6] மேலும் இந்த பாதையை தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட புரட்சிகரப் போராட்டங்கள் மூலம் மட்டுமே அடையப்பட முடியும், பால்கன் முதலாளித்துவத்தால் அல்ல.
பால்கன் போர்களின் போது இந்த பிராந்தியத்தில் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய ஒரு நிருபராக, ட்ரொட்ஸ்கி இந்தப் போர்கள் ஐரோப்பா முழுவதும் பேரழிவு தரும் போருக்கு ஒரு முன்னோடியாக மட்டுமே இருக்க முடியும் என்று எச்சரித்தார். இந்த எச்சரிக்கையின் துல்லியம் 1914 இல் முதல் உலகப் போர் வெடித்ததன் மூலம் நிரூபிக்கப்பட்டது.
தினசரி Milliyet உடனான அதே நேர்காணலில், ட்ரொட்ஸ்கி, செம்படையின் பிரதிநிதியாக ஜெனரல் ஃப்ருன்ஸை அங்காராவுக்கு அனுப்பியபோது, துருக்கிய தேசிய சுதந்திரப் போருக்கான தனது ஆதரவை நேர்காணல் செய்தவருக்கு நினைவூட்டினார். “துருக்கியின் சுதந்திரப் போராட்டத்தை மிகுந்த ஆர்வத்துடன் பின்பற்றியதாகவும், அதன் முடிவு குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும்” அவர் கூறினார்.[7]
இஸ்தான்புல்லுக்கு வந்த பிறகு, ட்ரொட்ஸ்கி ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் உட்பட பல ஐரோப்பிய நாடுகளுக்கு விசாவிற்கு விண்ணப்பித்தார், ஆனால் அவை மறுக்கப்பட்டன. ஐரோப்பிய சக்திகள் ட்ரொட்ஸ்கியை ஏற்றுக்கொள்ளாததற்குக் காரணம், புரட்சியின் பூதாகரமான உருவகத்தை அவரிடம் கண்டதுதான்.
1939 இல் ஹிட்லரும் இந்த அச்சத்தை வெளிப்படுத்திய காரணம் இல்லாமல் இல்லை. உலக சோசலிசப் புரட்சியின் முக்கிய மூலோபாயவாதியாக ட்ரொட்ஸ்கி இருந்தார். அந்த உத்தி அவருடைய நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்தது. ட்ரொட்ஸ்கி பிரின்கிபோவில் தனது நிரந்தரப் புரட்சி படைப்பின் “முதல் (ரஷ்ய) பதிப்பிற்கான அறிமுகத்தை” எழுதினார். “நிரந்தரப் புரட்சி என்றால் என்ன?” என்ற தலைப்பில், 1917 அக்டோபர் புரட்சிக்கு வழிகாட்டிய, உலக சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டத்தை இன்னும் வழிநடத்த வேண்டிய இந்தக் கோட்பாட்டின் அடிப்படை ஆய்வறிக்கைகளை அவர் சுருக்கமாகக் தொகுத்துரைத்துள்ளார்.
அவரது முதல் ஆய்வறிக்கையில், அவர் இன்றும் செல்லுபடியாகும் ஒரு வாதத்தை முன்வைத்தார்:
நிரந்தரப் புரட்சிக் கோட்பாடு இப்போது ஒவ்வொரு மார்க்சிஸ்ட்டுக்களிடமிருந்தும் மிகுந்த கவனத்தைக் கோருகிறது, ஏனெனில் வர்க்கம் மற்றும் கருத்தியல் போராட்டத்தின் போக்கை முழுமையாகவும் இறுதியாகவும், ரஷ்ய மார்க்சிஸ்டுகளிடையே பழைய கருத்து வேறுபாடுகள் பற்றிய நினைவுகளின் மண்டலத்தில் இருந்து இந்தக் கேள்வியை முழுமையாக எழுப்பி, அதை மாற்றியமைத்துள்ளது. பொதுவாக சர்வதேசப் புரட்சியின் பாத்திரம், உள் இணைப்புகள் மற்றும் வழிமுறைகள் பற்றிய கேள்வியாகும்.[8]
நாம் இன்னும் வாழும் சகாப்தம், ஏகாதிபத்திய போர் மற்றும் சோசலிசப் புரட்சியின் சகாப்தம் பற்றிய பூகோளரீதியான கோட்பாட்டை அவர் விவரித்தார். ட்ரொட்ஸ்கியின் கூற்றுப்படி:
காலனித்துவ மற்றும் அரைக்-காலனித்துவ நாடுகளின் தாமதமான முதலாளித்துவ வளர்ச்சியைக் கொண்ட நாடுகளைப் பொறுத்தவரை, நிரந்தரப் புரட்சியின் கோட்பாடு ஜனநாயகம் மற்றும் தேசிய விடுதலையை அடைவதற்கான அவர்களின் பணிகளுக்கு முழுமையான மற்றும் உண்மையான தீர்வு, அடிமைப்படுத்தப்பட்ட தேசத்தின் மற்றும் அனைத்துக்கும் மேலாக விவசாயிகளின் தலைவனாக பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும் என்பதைக் குறிக்கிறது..[9]
இன்று, மத்திய கிழக்கு முதல் ஆசியா வரை, ஆப்பிரிக்கா முதல் லத்தீன் அமெரிக்கா வரை, காலதாமதமான முதலாளித்துவ வளர்ச்சியைக் கொண்ட நாடுகளின் நிலைமையை பார்த்தால், இந்தப் பணிகள் இன்னும் முழுமையான மற்றும் உண்மையான தீர்வுக்காகக் காத்திருப்பதைக் காணலாம்.
நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடித்தளங்களில் ஒன்று சோசலிசப் புரட்சியின் சர்வதேசத் தன்மையாகும். ட்ரொட்ஸ்கி, “சர்வதேசவாதம் என்பது சாரமற்ற கொள்கை அல்ல, மாறாக உலகப் பொருளாதாரத்தின் தன்மை, உற்பத்தி சக்திகளின் உலக வளர்ச்சி மற்றும் உலக அளவிலான வர்க்கப் போராட்டம் ஆகியவற்றின் தத்துவார்த்த மற்றும் அரசியல் பிரதிபலிப்பாகும்” என்று வலியுறுத்தினார்.[10]
கிழக்கில் அல்லது காலதாமதமான முதலாளித்துவ வளர்ச்சியைக் கொண்ட நாடுகளில் ஏற்பட்ட புரட்சியும் மேற்குலகின் புரட்சியும் உலகப் புரட்சியின் பிரிக்க முடியாத பகுதிகளாக இருக்கின்றன. சோவியத் யூனியனும் விதிவிலக்கல்ல. ட்ரொட்ஸ்கி எழுதியது போல்:
சோசலிசப் புரட்சி தேசிய அடித்தளத்தில் தொடங்குகிறது - ஆனால் இந்த அடித்தளங்களுக்குள் அதை முடிக்க முடியாது. ஒரு தேசிய கட்டமைப்பிற்குள் பாட்டாளி வர்க்கப் புரட்சியை பராமரிப்பது என்பது ஒரு தற்காலிக நிலையாக மட்டுமே இருக்க முடியும், இருப்பினும், சோவியத் யூனியனின் அனுபவம் காட்டுவது போல், நீண்ட காலம் நீடித்திருக்கிறது. தனிமைப்படுத்தப்பட்ட பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில், அடையப்பட்ட வெற்றிகளுடன் சேர்ந்து உள் மற்றும் வெளிப்புற முரண்பாடுகள் தவிர்க்க முடியாமல் வளர்ச்சி அடைகின்றன. அது தொடரந்து தனிமைப்படுத்தப் பட்டிருக்குமாயின் பாட்டாளி வர்க்க அரசு இறுதியாக இந்த முரண்பாடுகளுக்கு பலியாக நேரிடும். முன்னேறிய நாடுகளின் பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியில் மட்டுமே அதற்கான வழி உள்ளது.[11]
1991ல் ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோவியத் யூனியனை கலைத்தபோது இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் உறுதி செய்யப்பட்டன. ஆனால், ஸ்ராலினிசம் அக்டோபர் புரட்சியை இவ்வாறாக இறுதியாக காட்டிக்கொடுத்தது என்பது மார்க்சிசத்தை தவறு என்று நிராகரிக்கவோ அல்லது சகாப்தத்தின் தன்மையை மாற்றவோ இல்லை. முதலாளித்துவ வெற்றிவாதத்துடன் சேர்ந்து கொண்ட “அமைதி, ஜனநாயகம் மற்றும் செழுமை” என்ற சகாப்தம் குறித்த கூற்றுக்களின் பொய்யானது விரைவாக அம்பலமானது. நாம் இன்னும் போர் மற்றும் புரட்சியின் அதே சகாப்தத்தில் வாழ்கிறோம். “பாட்டாளி வர்க்கப் புரட்சி இல்லையெனில், ஒரு புதிய உலகப் போர் தவிர்க்க முடியாதது,”[12] என்று இரண்டாம் உலகப் போருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 1934 இல் ட்ரொட்ஸ்கி எழுதினார்.
ட்ரொட்ஸ்கியால் 1938ல் ஸ்தாபிக்கப்பட்ட நான்காம் அகிலம், 1953ல் இருந்து நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் வழிநடத்தப்படுகிறது. அது 2014 இல் இவ்வாறு பிரகடனம் செய்தது: “மற்றொரு ஏகாதிபத்திய இரத்தக்களரி சாத்தியம் மட்டுமல்ல; ஒரு மார்க்சிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சர்வதேச தொழிலாள வர்க்கம் தலையிடாவிட்டால் அது தவிர்க்க முடியாதது.”[13]
இங்கிருந்து சில நூறு கிலோமீட்டர்கள் தொலைவில் கருங்கடலுக்கு வடக்கே உக்ரேனில் நடக்கும் போர், நமது சகாப்தம் பற்றிய ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வின் துல்லியமான மற்றும் எச்சரிக்கும் உதாரணம் ஆகும். முதலாளித்துவத்தின் அதே பூகோள முரண்பாடுகளிலிருந்தும் சோவியத் யூனியனின் கலைப்பின் பேரழிவு விளைவுகளில் ஒன்றிலிருந்தும் பிறந்த ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போர் ஏற்கனவே நூறாயிரக்கணக்கான இறப்புகளையும் மாபெரும் அழிவையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது பூகோளரீதியான மோதலின் பேரழிவுடன் முழு மனித நாகரிகத்தையும் அச்சுறுத்துகிறது.
இந்த ஆபத்தான சுழலிலிருந்து வெளியேற ஒரே ஒரு வழிதான் உள்ளது: போர் மற்றும் அதை உருவாக்கும் ஏகாதிபத்திய-முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரான ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களை ஒன்றிணைக்க போராட வேண்டும். மனிதகுலத்தின் தலைவிதியின் மீதான இந்தப் போராட்டத்தின் தீர்க்கமான பாத்திரம், இந்த அடிப்படைக் கேள்வியைத் தீர்ப்பதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த லியோன் ட்ரொட்ஸ்கியை, நம் காலத்தின் உயிர் வாழும் அரசியல் பிரமுகராக ஆக்குகிறது.
[1]
Jean van Heijenoort, With Trotsky in Exile.
[2]
Leon Trotsky, Writings of Leon Trotsky [1932-1933] (New York: Pathfinder Press, 1972), p. 313.
[3]
Ibid., p. 316.
[4]
Ömer Sami Coşar, Troçki İstanbul’da (İstanbul: Türkiye İş Bankası Kültür Yayınları, 2019), pp. 45-46.
[5]
Leon Trotsky, “The Young Turks,” URL: https://www.marxists.org/archive/trotsky/1909/01/1909-turks.htm
[6]
Leon Trotsky, “The Balkan Question and Social Democracy”
[7]
Troçki İstanbul’da , p. 46.
[8]
Leon Trotsky, The Permanent Revolution, URL: https://www.marxists.org/archive/trotsky/1931/tpr/pr10.htm
[9]
Ibid.
[10]
Leon Trotsky, The Permanent Revolution, URL: https://www.marxists.org/archive/trotsky/1931/tpr/prre.htm
[11]
Ibid.
[12]
Leon Trotsky, “War and the Fourth International,” URL: https://www.marxists.org/archive/trotsky/1934/06/warfi.htm
[13]
International Committee of the Fourth International, “Socialism and the Fight Against Imperialist War,” URL: https://www.wsws.org/en/articles/2014/07/03/icfi-j03.html