இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்
செவ்வாயன்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனின் உரை அரசியல் பிற்போக்குத்தனத்தின் ஆழத்தை வெளிக்கொணர்ந்தது. இஸ்ரேலிய இராணுவம் காஸா முழுவதிலும் குடியிருப்பு கட்டிடங்களை திட்டமிட்டு தரைமட்டமாக்கிக் கொண்டிருக்கின்ற நிலையில், நெதன்யாகு அரசாங்கத்திற்கு வெகுஜன படுகொலைகளை நடத்த பைடென் பச்சை கொடி காட்டினார்.
பொதுக் கருத்தைத் தூண்டிவிடுவதும், பாலஸ்தீனியர்களுக்கு எதிராக முடிந்தவரை வெறுப்பை உருவாக்குவதும், இஸ்ரேல் எந்தக் குற்றங்களைச் செய்தாலும் அதை நியாயப்படுத்துவதுமே பைடெனின் அடாவடித்தனத்தின் ஒரே நோக்கம் ஆகும்.
இந்த உரைக்குப் பிறகு, இஸ்ரேலிய அரசாங்கம் செய்த அல்லது செய்யப்போகும் எதனிலிருந்தும் அவரது அரசாங்கம் தன்னைத் துண்டித்துக் கொள்ள இயலாது. உண்மையாகவே, பைடெனுக்குப் பின்னால் ஆவியுறுவைப் போல நின்ற வெளியுறவுச் செயலாளர் அண்டனி பிளிங்கன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும் உள்ளடக்கப்பட்டமை, இது அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கை என்ற செய்தியை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகும்.
பைடெனின் கருத்துக்கள், யூகிக்கக்கூடிய வகையில், இஸ்ரேலிய போர்க் குற்றங்களைத் தூண்டின. உரையைத் தொடர்ந்து, இஸ்ரேல் வெள்ளை பாஸ்பரஸைப் பயன்படுத்தி பொதுமக்கள் வாழும் பகுதிகளில் நெருப்புப் புயல்களை உருவாக்கத் தொடங்கியது - இது சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு போர்குற்றம் ஆகும். இஸ்ரேல் செவ்வாயன்று அருகிலுள்ள கிழக்கில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் வேலை முகமை அமைப்பின் தலைமையகத்தின் மீதும், எண்ணற்ற பல அடுக்குமாடி கட்டிடங்கள் மீதும் குண்டு வீசியது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்க்கும் எந்தப் பகுதியும் 'சுக்குநூறாக்கப்படும்' என்ற பிரதமர் நெதன்யாகுவின் சபதத்துக்கு இணங்க, பாலஸ்தீனியர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரம் போன்றவற்றை இஸ்ரேல் தொடர்ந்து கொடுக்க மறுத்து வருகிறது.
பைடெனின் மொழி, கிட்டத்தட்ட இனப்படுகொலையை ஊக்குவிப்பது மற்றும் அதனை சட்டப்பூர்வமாக்குவதாகும். பாலஸ்தீனியர்களின் எதிர்ப்பானது, 'தெளிவான கலப்படமற்ற கொடுமையின்' வெளிப்பாடாக இருந்தது என்று பைடென் தனது உரையை தொடங்கினார். இந்த வார்த்தைகள் பாலஸ்தீனியர்களை 'விலங்குகள்' என்று அழைத்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நேற்றைய கூற்றுகளை எதிரொலித்தது. நெதன்யாகுவின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலண்ட், 'நாங்கள் மனித விலங்குகளுடன் போராடுகிறோம், அதன்படி செயல்படுகிறோம்' என்று கூறினார்.
ஒருவர் 'தெளிவான கொடூரத்தை' கையாள்வதாக வலியுறுத்துவது, சம்பவங்களை எந்தவொரு பகுத்தறிவு பகுப்பாய்விலிருந்தும் அகற்றுவதாகும். விடயங்களை நன்மை தீமைக்குள் மட்டுமே அடக்கிப் பார்க்கும் இந்த மனிதனின் உலகக் கண்ணோட்டத்தில், 'கொடூரம்' என்பதை துடைத்துக்கட்டல் மற்றும் கொலை மூலம் மட்டுமே தீர்க்கப்பட முடியும்.
பைடென் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை. அவர் சமாதானப் பேச்சு வார்த்தைக்கு அழைக்கவில்லை. அவர் மத்தியஸ்தம் அல்லது நடுவர் மன்றத்திற்கு அழைக்கவில்லை. கட்டுப்பாட்டை கடைபிடிக்க இஸ்ரேலை அவர் அழைக்கவில்லை. காஸா மீதான இஸ்ரேலிய படையெடுப்பின் விளைவாக ஏற்படும் கணக்கிட முடியாத இரத்தக்களரி பற்றி அவர் எச்சரிக்கவில்லை.
இஸ்ரேலால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில், பாலஸ்தீனிய ஊடுருவலால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலியர்கள் பற்றி வெளிப்படுத்திய எண்ணெய்வார்க்கும் கருத்துக்களில், பைடென், இஸ்ரேலிய வன்முறையால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனியர்களைப் பற்றி எதுவும் பேசவில்லை.
கடந்த 75 ஆண்டுகளில், எண்ணற்ற பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய துருப்புக்களாலும், இப்போது இஸ்ரேலிய அரசாங்கத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் பாசிச சக்திகளாலும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இஸ்ரேலியர்கள் 'கொடுமையின்' உருவகம் என்று ஒரு பிரகடனம் ஒருபுறம் இருக்க, இந்தக் கொலைகள் எதுவும் அமெரிக்காவின் கண்டனத்தைத் தூண்டவில்லை.
பைடெனின் கருத்துக்கள் அமெரிக்க ஊடகங்களிலான பிரச்சார வெள்ளத்துடன் சேர்ந்து, மோதலின் எந்தவொரு விமர்சனப் பரிசோதனையையும் தடுக்கும் நோக்கத்துடன், பொதுமக்களுக்கு எதிராக ஹமாஸ் நடத்தும் வன்முறையில் மட்டுமே கவனம் செலுத்துகின்ற அதே நேரம், பாலஸ்தீனியர்கள் மீதான பிரமாண்டளவிலான இஸ்ரேலிய வன்முறையைப் புறக்கணிக்கிறது.
'நாங்கள் இஸ்ரேலுடன் நிற்கிறோம்', 'பயங்கரவாதத்திற்கு எந்த நியாயமும் இல்லை' என்று பைடென் அறிவித்தார். பாலஸ்தீனியர்களின் வன்முறைக்கு மன்னிப்பு இல்லை. ஆனால், இஸ்ரேலின் வன்முறைக்கு எப்போதும் ஒரு மன்னிப்பு உள்ளது. 2008 முதல், மோதலில் இஸ்ரேலியர்களை விட -6,400 உடன் 300 ஒப்பிடும் போது- 20 மடங்கு அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 'உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டையும் போலவே, இஸ்ரேலுக்கும் பதிலளிக்க உரிமை உண்டு, உண்மையில் இந்த கொடூரமான தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கடமை உண்டு,' என்று பைடென் பிரகடனம் செய்தார். அதாவது பாலஸ்தீனியர்களைத் தவிர எல்லா நாடுகளும்.
பைடென் தற்போதைய மோதலின் அனைத்து முன்னோடி வரலாற்றையும் புறக்கணித்தார். சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசத்தில் இஸ்ரேல் மக்களைக் குடியமர்த்துவதையும், பாலஸ்தீனியர்கள் சுதந்திரமாகப் பயணிப்பதைத் தடுப்பதையும், கொலை, சித்திரவதை மற்றும் காலவரையற்ற தடுப்புக்காவலை அரச கொள்கையாக திட்டமிட்டுப் பயன்படுத்துவதையும் ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் செய்துள்ளது.
பாலஸ்தீனியர்களின் பக்கம் தலையிடத் துணியும் எந்த அரசாங்கத்திற்கும் எதிராக அமெரிக்க இராணுவப் படையை கட்டவிழ்த்து விடுவேன் என்று பைடென் அச்சுறுத்தினார்: 'எந்த நாட்டிற்கும், எந்த அமைப்பிற்கும், இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் எவருக்கும், எனக்கு கூறுவதற்கு ஒரு வார்த்தை உள்ளது: வேண்டாம்.' அமெரிக்க பதில், 'விரைவான, தீர்க்கமான மற்றும் மிகப்பெரியதாக' இருக்கும் என்று பைடென் கூறினார்.
இந்த மொழி மிரட்டாது; அது கோபத்தை மட்டுமே ஏற்படுத்தும். பலர் காலனித்துவத்தின் கசப்பான நினைவுகளுடன் தொடர்ந்து வாழும் உலகின் பெரும்பான்மையான மக்கள் மத்தியில், அது வெறுப்பையே தூண்டும்.
'பணயக் கைதிகளாக இருக்கும் அமெரிக்கர்களின் பாதுகாப்பை விட எனக்கு அதிக முன்னுரிமை வேறு இல்லை,'என்று பைடென் அறிவித்தார். ஆனால், அவர் இஸ்ரேலிய நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடற்ற அனுமதி வழங்கியது பணயக் கைதிகளின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
பைடெனின் கருத்துக்களில், இஸ்ரேலிய இனவெறி ஆட்சிக்கு எதிரான பாலஸ்தீனியர்களின் எதிர்ப்பை, மாபெரும் சமூகப் படுகொலைகளின் போது ஐரோப்பாவின் யூதர்களின் இனப்படுகொலையுடன் தொடர்புபடுத்தும் அவரது முயற்சி மிகவும் வெட்கக்கேடானது. 'இஸ்ரேல் மீதான இந்தத் தாக்குதல், பல்லாயிரம் ஆண்டுகால யூத எதிர்ப்பு மற்றும் இனப்படுகொலையும் விட்டுச் சென்ற வலிமிகுந்த நினைவுகள் மற்றும் வடுக்களை மேற்பரப்பிற்கு கொண்டு வந்துள்ளது' என்று பைடென் கூறினார்.
இது வரலாறு பற்றிய மொத்த புரட்டு ஆகும். ஐரோப்பிய வரலாற்றின் முக்கியமான பகுதியாக இருக்கும் கொலைகார யூத-எதிர்ப்பு இனப்படுகொலைகள் மற்றும் யூத-விரோதத்துடன் பாலஸ்தீனியர்களுக்கு எந்த வரலாற்று தொடர்பும் கிடையாது. அவர்கள் இனப்படுகொலையில் எந்தப் பங்கையும் வகிக்கவில்லை.
இரண்டாம் உலகப் போரின்போது, மில்லியன் கணக்கான யூதர்கள் அழிக்கப்பட்டபோது, அமெரிக்கா தனது எல்லைகளை மூடியிருந்தது. 1939 ஆம் ஆண்டில், 900க்கும் மேற்பட்ட யூத அகதிகளை ஏற்றிச் சென்ற எஸ்.எஸ். சென் லூயிஸ் என்ற கப்பல், அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டு, ஐரோப்பாவிற்குத் திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டது. இது ஐரோப்பாவின் யூதர்களை துன்புறுத்துவது சம்பந்தமான அமெரிக்காவின் அலட்சியத்தின் அடையாளமாக இருந்தது.
மூன்று வாரங்களுக்கு முன்னர், முழு கனேடிய பாராளுமன்றமும், அனைத்து நேட்டோ நாடுகளின் தூதர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன், நாஜி ஜேர்மனியின் வழிகாட்டுதலின் கீழ் யூத படுகொலைக்கு காரணமான உக்ரேனிய வாஃபென்-எஸ்.எஸ்.இன் மூத்த உறுப்பினரான யாரோஸ்லாவ் ஹுன்காவை எழுந்து நின்று பாராட்டியது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
பைடென் தனது கருத்துக்களை முடிக்கையில், 'யூத மற்றும் ஜனநாயக இஸ்ரேல் அரசுக்கு' அழைப்பு விடுத்தார். ஒரு யூத மற்றும் ஜனநாயக அரசு என்பது ஒரு முரண்பாடானதாகும். இன அடையாளத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் ஒரு அரசு இயல்பாகவே ஜனநாயகமற்றது. எல்லாவற்றுக்கும் மேலாக, நெதன்யாகு மற்றும் இஸ்ரேலிய அரசியல் ஸ்தாபனம் 'யூத மக்களை' பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் என்ற நிலைப்பாட்டை முழுமையாக ஏற்றுக்கொள்வதானது, முன்னெடுக்கப்படும் குற்றங்களுக்கு முழு இஸ்ரேலிய மக்கள் மீதும் குற்றம் சுமத்துவதாக அமையும்.
“பயங்கரவாதிகள் வேண்டுமென்றே பொதுமக்களை குறிவைத்து அவர்களைக் கொன்றனர். நாங்கள் போர்ச் சட்டங்களை ஆதரிக்கிறோம்,” என பைடென் கூறி முடித்தார். பைடென் எதைப் பற்றி பேசுகிறார்? தடையற்ற ஏகாதிபத்திய வன்முறை மற்றும் சூறையாடல் சட்டம் மட்டுமே அமெரிக்காவால் ஆதரிக்கப்படும் சட்டம் ஆகும்.
பாலஸ்தீனியர்களுக்கு எதிரான அவரது அதிருப்தி ஒரு திட்டவட்டமான வடிவத்துடன் ஒத்துப்போகிறது. ரஷ்யாவில் முழுமையான வெற்றிக்காக ஆட்சி மாற்றம் மற்றும் போரைக் கோரினாலும், அல்லது மத்திய கிழக்கில் முழு அளவிலான போரைத் தூண்டினாலும், அமெரிக்க ஆளும் வர்க்கம் முழுமையான அலட்சியத்துடனும் கொடூரத்தனத்துடனும் செயல்படுகிறது.
பைடெனின் பேச்சு முழு உலகிற்கும் ஒரு எச்சரிக்கை ஆகும். அமெரிக்க ஏகாதிபத்தியம் கட்டுப்பாடற்ற இராணுவ வன்முறை மற்றும் பொதுமக்களுக்கு எதிரான கூட்டுத் தண்டனையின் கொள்கைகளை அரவனைத்துக்கொண்டுள்ளது. அது நிறுத்தப்படாவிட்டால், இப்போது காஸா மீது நடத்தப்படும் கொலைவெறி தாக்குதல், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்களின் தலைவிதியாக இருக்கும்.
ஒவ்வொரு ஏகாதிபத்திய அரசாங்கத்தாலும் ஒவ்வொரு பிரதான ஊடகங்களாலும் உந்தப்பட்ட பிரச்சாரத்தின் மழையால் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை பயமுறுத்த முடியாது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒவ்வொரு இனம், மதம் மற்றும் தேசிய இனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை ஒருங்கிணைத்து, உலகளாவிய வெகுஜன போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவது அவசரமான அவசியம் ஆகும்.