காஸா இன அழிப்புக்கு மத்தியில் செங்கடலில் அமெரிக்க கூட்டணியுடன் இலங்கை இணைந்து கொள்கின்றது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது அரசாங்கம், யேமனில் ஈரானுடன் இணைந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களில் இருந்து வணிகக் கப்பல்களைப் பாதுகாப்பதற்காக, கடற்படைக் கப்பல்களை செங்கடலுக்கு அனுப்பும் என்று, ஜனவரி 3 அன்று அறிவித்தார்.

கொழும்பில், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (வலதில் இருந்து இரண்டாவது) இராணுவம் மற்றும் பொலிஸ் தளபதிகளுடன் காணப்படுகின்றார். [AP Photo/Eranga Jayawardena]


கொழும்பில், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த டிசம்பர் 31 முதல்,  25 தாக்குதல்களை கப்பல்கள் மீது நடத்தியதாகக் கூறப்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை எதிர்த்துப் போரிடுவதற்காக, ஆபரேஷன் ப்ராஸ்பெரிட்டி கார்டியன் என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட, அமெரிக்கத் தலைமையிலான கூட்டணி ஒன்றுக்கான பைடென் நிர்வாகத்தின் அழைப்புகளுக்கு பதிலளிக்கும் விதமாகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

யேமனின் மேற்குப் பகுதியில் உள்ள செங்கடலின் பெரும்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹவுதிகள், இனப்படுகொலையைத் தடுப்பதற்காக  வடிவமைக்கப்பட்ட சர்வதேச தீர்மானங்களைப் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் தாக்குதல்களை நியாயப்படுத்துகின்றார்கள். காஸாவில்,  பாலஸ்தீனியர்களை படுகொலை செய்வதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.

கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களின் காரணமாக, செங்கடல் வழியாகப் பயணிக்கும் சரக்குக் கப்பல்கள் வழக்கமான பாதையில் இருந்து திசைதிரும்ப வேண்டிய கட்டாயத்தினால் ஏற்பட்டுள்ள, பொருளாதார விளைவுகளை மேற்கோள் காட்டி, விக்கிரமசிங்க தனது முடிவை இழிந்த முறையில் நியாயப்படுத்தினார்.

விக்கிரமசிங்க அரசாங்கம், செங்கடலுக்கு கடற்படைக் கப்பல்களை அனுப்புவதன் மூலம், பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுமாக ஏற்கனவே 25,000க்கும் அதிகமான மக்களைக் கொன்றுள்ள, காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போருக்கு ஆதரவாக, அமெரிக்கத் தலைமையிலான ஏகாதிபத்தியக் கூட்டணியில் விளைபயனுடன் இணைகிறது.

அக்டோபர் தொடக்கத்தில் இருந்து இஸ்ரேலின் இனப்படுகொலையை ஆதரித்த விக்கிரமசிங்க அரசாங்கம், இந்த கொடூரமான போரிலும் மற்றும் தெஹ்ரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு முன்னோடியாக, ஈரானுடன் பதட்டங்களைத் தூண்டும் வாஷிங்டனின் முயற்சிகளிலும் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொள்கிறது. கொழும்பின் அறிவிப்பு அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணியும் ஒரு அப்பட்டமான செயலாகும். 

செங்கடலுக்கு, இலங்கை கடற்படை கப்பல் ஒன்றை அனுப்புவதற்கு பதினைந்து வாரங்களுக்குரிய மதிப்பிடப்பட்ட செலவு 250 மில்லியன் ரூபாய்கள் ($775,043) ஆகும். இலங்கை அரசாங்கமானது,  அதன் ஈவிரக்கமற்ற சிக்கன நடவடிக்கைகளைச் சுமத்துவதனால்,  பாரிய தொழிலாள வர்க்க எதிர்ப்பை எதிர்கொள்ளும் அதே வேளை, செங்கடல் நடவடிக்கையிலும் ஏனைய இராணுவச் செலவினங்களிலும் பங்கேற்பதை அமெரிக்காவிற்கும் அதன் உலகளாவிய புவி மூலோபாய நோக்கங்களுக்கும் தனது அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு தேவையான அணிசேர்வாக விக்கிரமசிங்க கருதுகிறார்.

டிசம்பரில், விக்கிரமசிங்க அரசாங்கம், இலங்கைக்கு அந்நியச் செலாவணி வருகை அதிகரிக்கும் என வலியுறுத்தி இஸ்ரேலில் விவசாயம் மற்றும் கட்டுமானத் தொழில்களில் வேலை செய்வதற்காக இலங்கையர்களை அனுப்பத் தொடங்கியுள்ளது. இந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை, 20,000 ஆக அதிகரிக்கும் என, அரசாங்கம் கூறியுள்ளது. கொழும்பின் முடிவானது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் காஸா போரினால், தொழிலாளர் பற்றாக்குறைக்கு முகம்கொடுக்கும் இஸ்ரேலின் பொருளாதாரத்துக்கு, தீர்க்கமான உதவியை வழங்குகின்றது.

தாங்கள், சாத்தியக்கூறு பற்றி ஆராய்வதாகவும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும், செங்கடலுக்கு கடற்படையை அனுப்புவது சம்பந்தமான விக்கிரமசிங்கவின் அறிவிப்புக்கு இலங்கை கடற்படை எச்சரிக்கையுடன் பிரதிபலித்துள்ளது. 

“படைகளை அனுப்புவதற்கு முன், நாங்கள் தளபாட விநியோகத்தினை ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த வகையான படை நகர்தலுக்கு, எங்களுக்கு ஒரு வலுவான ஆயுத அணிகலன்கள் தேவைப்படுகிறன,” என்று கடற்படையின் செய்தித் தொடர்பாளர் ஜனவரி 5 அன்று  டெய்லி மிரர் பத்திரிகைக்கு  தெரிவித்தார்.

“செங்கடல் பகுதியில் உள்ள அச்சுறுத்தல்களை பகுப்பாய்வு செய்வது மிகவும் முக்கியமானது” மற்றும் “எங்கள் கப்பலின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு அவசியமாகும்” என அவர் தொடர்ந்தார். ஒரு கப்பலை நிலைநிறுத்துவதற்கு முன்னர், “குறிப்பிட்ட ரோந்து வலயங்களை அடையாளம் காணுதல், எரிபொருள் விநியோகங்களைப் பாதுகாத்தல் மற்றும் வெளிநாட்டு கடற்படைகளுடன் ஒத்துழைப்பை நிறுவுதலும் இன்றியமையாத கூறுகளாகும்,” என அவர் மேலும் கூறினார். 

இந்தப் பிரச்சினைகள் இருக்கின்றபோதிலும் கூட, விக்கிரமசிங்க அரசாங்கம் முன்னோக்கிச் செல்வதில் உறுதியாக உள்ளது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், சண்டே டைம்ஸ் பத்திரிகையிடம் பேசும்போது, “செங்கடலில் நடக்கும் எதுவும் நமது பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தின் மீது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது... நாங்கள் கடற்பயணத்தின் சுதந்திரத்திற்காக இருக்கிறோம், எங்களுக்கு உலகளாவிய ரீதியில் பொறுப்பு உள்ளது” எனத் தெரிவித்தார்.

கடற்படையால் எழுப்பப்பட்ட கவலைகள் பற்றிய வெளிப்படையான குறிப்பில், தென்னகோன் மேலும் பின்வருமாறு கூறினார்: “அபாயங்கள் உள்ளன, ஆனாலும் நாம் பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியும் என்பது அதன் அர்த்தமல்ல. ஆயுதப்படைகள் அதைப் புரிந்துகொண்டு அபாயங்களைக் கணக்கிடுகின்றன.”

எந்த நாட்டிலிருந்தும், இலங்கைத் துறைமுகங்களுக்கு வருகை தரும்  ஆராய்ச்சிக் கப்பல்கள் மீதான தடை விதிப்புகள், வாஷிங்டனின் புவிசார் மூலோபாய நோக்கங்களுடன் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் நெருக்கமான ஒருங்கிணைவை மேலும் சுட்டிக்காட்டுகின்றது.  இந்த தடைகள், இம் மாதத்தில் இருந்து தொடங்கி 12 மாதங்கள் நடைமுறைப்படுத்தப்படும். அண்மையில், சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல்களில் ஒன்றான Xiang Yang Hong 3ஐ இலங்கைத் துறைமுகத்தில் நிறுத்துவதற்கு விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி,  இந்த தடை அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும் என்று கூறியுள்ள அதே வேளை, கொழும்பில் இருந்து பெய்ஜிங்கிற்கு அதன் ஆராய்ச்சிக் கப்பல்கள் இனி வரவேற்கப்படாது என்பதற்கான ஒரு தெளிவான சமிக்ஞையாகும்.

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், சீன ஆராய்ச்சிக் கப்பல்களின் முந்தைய வருகைகள் தொடர்பாக அமெரிக்க மற்றும் இந்திய இராஜதந்திர அழுத்தத்தைத் தொடர்ந்தே இந்தப் புதிய தடை விதிக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங்கிற்கு எதிரான அமெரிக்க-இந்திய இராணுவக் கட்டமைப்பிற்கு இலங்கை அரசாங்கத்தின் ஆதரவையும் மற்றும் சீனாவுடனான பேரழிவுகரமான அணுவாயுத மோதலின் அபாயத்தையும் இந்த முடிவு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயினும் காஸா மீதான இஸ்ரேலின் கொடூரமான தாக்குதல்களுக்கு தடையின்றி ஒப்புதல் அளித்துள்ள அதே நேரம், இந்த நாடுகள் வாஷிங்டனின் கட்டளையின் கீழ் செங்கடலுக்கு போர்க்கப்பல்களை அனுப்ப இதுவரை மறுத்துள்ளன.

தங்கள் சொந்த புவிசார்-அரசியல் நலன்களை அமெரிக்காவிற்கு அடிபணியச் செய்ய விரும்பாத அவர்கள், செங்கடலில் கடற்படை நடவடிக்கைகளுக்கு ஐ.நா, நேட்டோ அல்லது ஐரோப்பிய ஒன்றியம் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர்.

இலங்கையானது முன்னர் அமெரிக்காவுடன் இரண்டு குறிப்பிடத்தக்க இராணுவ உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டது. கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவை ஒப்பந்தம் (ACSA) மற்றும் படைகளின் தரநிலை ஒப்பந்தம் (SOFA), என்பவையே அவையாகும்.

2017 இல் மேலும் நீட்டிக்கப்பட்ட, 2007இல் ஏற்படுத்தப்பட்ட கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவை ஒப்பந்தம், இரு நாடுகளும் மனிதாபிமான நடவடிக்கைகள், கூட்டுப் பயிற்சிகள் மற்றும் அமைதி காக்கும் பணிகளின் போது தளவாடங்கள், பொருட்கள் மற்றும் சேவைகளை பரிமாறிக்கொள்ள அனுமதிக்கிறது.

1995 இல் முதன்முதலில் கையொப்பமிடப்பட்ட SOFA இன் புதிய பதிப்பு தற்போது பேச்சுவார்த்தையில் உள்ளது. இது இலங்கையில் உத்தியோகபூர்வ வியாபாரத்தில் நிலைகொண்டுள்ள அமெரிக்க ஒப்பந்தக்காரர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட உரிமைகள் மற்றும் விலக்களிப்புகளை வழங்குகிறது.

எதிர்கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) செங்கடலுக்கு படைகளை அனுப்புத் உத்தேசம் குறித்து முற்றிலும் மௌனமாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அடுத்த பொதுத் தேர்தலில் அதிகாரத்தை வெல்லும் நம்பிக்கையில், ஜே.வி.பி. தனது முந்தைய ஏகாதிபத்திய-எதிர்ப்பு வாய்வீச்சைக் கைவிட்டு வாஷிங்டனுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொண்டுள்ளது. ஜே.வி.பி. தலைவர்கள் கடந்த இரண்டு வருடங்களாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கை மூன்று முறை பகிரங்கமாக சந்தித்துள்ளனர். இறுதிக்கட்ட சந்திப்பின்போது,  இஸ்ரேல் அரசு பாலஸ்தீனியர்கள் மீது காஸாவில் கொலைவெறி தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டிருந்தது.

கடந்த சனிக்கிழமை, பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) தலைவருமான சஜித் பிரேமதாச, அமெரிக்கா தலைமையிலான செங்கடல் நடவடிக்கையில் இலங்கை கடற்படை இணையும் என்ற விக்ரமசிங்கவின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்தார்.

“எமது சொந்தக் குடிமக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில், இலங்கை ஏன் இத்தகைய செலவு கூடிய இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்,” என்று அவர் கேட்டார். ஆத்திரமூட்டும் செங்கடல் நடவடிக்கை அல்லது அமெரிக்காவிற்கு விக்கிரமசிங்கவின் உறுதியான ஆதரவு பற்றி எந்தவொரு விமர்சனமும் செய்வதை பிரேமதாச கவனமாகத் தவிர்த்தார்.

அடுத்த தேர்தல்களில் ஆட்சியைப் பிடிப்பதை இலக்காகக் கொண்டுள்ள ஐ.ம.ச.க்கு, அமெரிக்கத் தலைமையிலான கூட்டணியில் சேருவதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை. இலங்கை கடற்படையின் பங்கேற்புக்கான செலவை வாஷிங்டன் செலுத்தினால், அது ஆர்வத்துடன் ஆதரிக்கும்.

செங்கடல் ஆத்திரமூட்டலில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் பங்கேற்பையும், காஸாவில் இனப்படுகொலை மற்றும் பிராந்தியத்தில் வாஷிங்டனின் இராணுவ மூலோபாயத் தாக்குதலையும் அங்கீகரிப்பதை இலங்கை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்க்க வேண்டும். இந்த பிற்போக்கு முயற்சிகளை அது தழுவிக்கொள்வதானது இலங்கையில் மட்டுமல்லாது மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களுக்கு பெரும் ஆபத்துக்களை முன்வைக்கிறது.

சர்வதேச சோசலிச வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கில், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் ஒரு ஐக்கியப்பட்ட போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதே இராணுவவாதத்தையும் ஏகாதிபத்தியப் போரை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரே வழி ஆகும்.

Loading