முன்னோக்கு

கோடீஸ்வரர்களுக்கு ஒரு தேர்தல்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இடதுபுறம் மற்றும் ஜனாதிபதி ஜோ பைடன் புதன்கிழமை, மார்ச் 13, 2024 [AP Photo/Associated Press]

2024ல் அமெரிக்காவில் இரண்டு அதிபர் தேர்தல்கள் நடைபெற உள்ளது. நவம்பர் 5ம் தேதி தேர்தல் நாளன்று உச்சக்கட்டமாக இருக்கும் அமெரிக்க மக்களின் வாக்குகள் செய்தி ஊடகத்தின் பெரும்பான்மையான கவனத்தை பெறும். 

எவ்வாறிருப்பினும், இப்போது நடந்து கொண்டிருக்கும் இரண்டாவது தேர்தல் மிகவும் தீர்க்கமானது. இதில், ஒரு சில பில்லியனர்கள் மற்றும் வணிக தன்னலக்குழுக்கள் தங்களின் வர்க்க நலன்களுக்கு சிறப்பாக சேவையாற்றுவதற்காக, இரண்டு நிறுவனமயப்பட்ட முதலாளித்துவக் கட்சிகளின் வேட்பாளர்களான ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி ஜோ பைடென் மற்றும் குடியரசுக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோரில் யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறார்கள்.

மார்ச் 31 நிலவரப்படி பைடனின் பிரச்சாரத்துக்கு, டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினரின் கையில் இருந்த பணத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது. இது $93.1 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடும்போது $192 மில்லியன் டொலர்களாகும்.  அமெரிக்க வரலாற்றில் ஒரு ஜனநாயகக் கட்சி வேட்பாளர் குவித்த மிக உயர்ந்த மொத்த தொகை அதன் போர் பெட்டகம் (war chest -- ஒரு போருக்குப் பயன்படுத்தப்படும் நிதி இருப்பு) என்ற உண்மையை பைடென் பிரச்சாரம் பெருமைப்படுத்துகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் மன்ஹாட்டனில் வசூலிக்கப்பட்ட 26 மில்லியன் டொலர்களும் இதில் உள்ளடங்கும், அங்கு மூன்று ஜனநாயகக் கட்சி ஜனாதிபதிகள் —பைடென், ஒபாமா மற்றும் கிளிண்டன்— மற்றும் ஹாலிவுட் மற்றும் பிராட்வே கலைஞர்களின் ஒரு வரிசை பார்வையாளர்கள் முன் தோன்றினர், நுழைவுச் சீட்டு விலைகள் 500,000 டொலரை எட்டின.  

ட்ரம்பின் சொந்த மார்-அ-லாகோ வளாகத்தில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள பாம் பீச்சில் உள்ள தனியார் முதலீட்டு நிதி பில்லியனர் ஜோன் போல்சனின் தோட்டத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற சாதனையளவிலான நிதி திரட்டும் நிகழ்ச்சியில் ட்ரம்பின் முயற்சிகளுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. நுழைவுக்கான விலை $800,000 வரை இருந்தது, மேலும் 117 விருந்தினர்கள் மொத்தம் $50.3 மில்லியன் பிரச்சார வாக்குறுதி நிதிகளைப் பெற்றனர், இது ரேடியோ சிட்டி மியூசிக் ஹாலில் பைடெனுக்கு கிடைத்த மொத்தத்தை விட, கிட்டத்தட்ட இரு மடங்காகும். 

'இன்றிரவு, ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக நாங்கள் வரலாற்று சிறப்புமிக்க 50.5 மில்லியன் டொலர்களை திரட்டியுள்ளோம்' என்று பால்சன் சனிக்கிழமை மாலை ஊடகங்களுக்கு விடுத்த ஒரு அறிக்கையில், 'இந்த விற்றுத்தள்ளப்பட்ட நிகழ்வு வரலாற்றில் ஒரு அரசியல் நிதி சேகரிப்பில் அதிகம் வசூலித்துள்ளது. இந்த அமோக ஆதரவு ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அவரது கொள்கைகளுக்கான உற்சாகத்தை வெளிப்படுத்துகிறது' என்று எழுதினார்.

இந்த நிகழ்ச்சியில் கூடியிருந்த பில்லியனர்களின் உற்சாகமானது, செல்வந்தர்களுக்கான ட்ரம்பின் 2017 வரி வெட்டு மற்றும் தனியார் பங்கு நிறுவனங்கள் மற்றும் பிற ஊக வணிகங்களுக்கு 700 பில்லியன் டொலர் மதிப்புள்ள 'கடந்துசெல்லும்' பெருநிறுவனங்களுக்கான வரிவிலக்குடன், புதிய ஜனாதிபதி பதவியின் முதல் ஆண்டான 2025 இல் காலாவதியாகிவிடும் என்ற உண்மையால் தூண்டப்பட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பாசிசவாத வன்முறையை ட்ரம்ப் பகிரங்கமாக தழுவுவதானது, ஆளும் உயரடுக்கின் வளர்ந்து வரும் பிரிவினரால், அவரது சிக்கன நடவடிக்கை மற்றும் போர்க் கொள்கைகளுக்கு எதிரான சமூக எதிர்ப்பை நசுக்குவதற்கு அவசியமானதாகக் கருதப்படுகிறது.

எவ்வாறிருப்பினும் பணம் ஏதேனும் அறிகுறியாக இருக்குமானால், ரஷ்யாவிற்கு எதிரான போர் அமெரிக்க ஆளும் உயரடுக்கின் உலகளாவிய நலன்களுக்கு முக்கியமானதாகக் கருதப்படும் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடெனுக்கு பில்லியனர்கள் மத்தியில் இன்னும் அதிக உற்சாகம் உள்ளதை குறிக்கிறது. முதலாளித்துவ வர்க்கத்தின் மேலாதிக்கப் பிரிவுகள், வெளியுறவுக் கொள்கையில் ட்ரம்பை மிகவும் ஒழுங்கற்றவராகக் கருதுகின்றனர் மற்றும் பைடெனின் அவ்வப்போது பெருநிறுவன எதிர்ப்பு வாய்வீச்சு என்பது மக்களை ஏமாற்றுவதற்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர்க் கொள்கைகளுக்கு எதிரான மக்கள் எதிர்ப்பைத் தணிப்பதற்கும் ஒரு வழிமுறையாகும்.

எவ்வாறாயினும் துரதிர்ஷ்டவசமாக அவரது தேர்தல் வாய்ப்புகளுக்காக, தன்னை ஒரு 'மக்களின் மனிதனாக' காட்டிக்கொள்ளும் பைடெனின் முயற்சிகள் பெருகிய முறையில் சிரமப்பட்டு வருகின்றன. பொது நனவில், 'நடுத்தர வர்க்க ஜோ' 'இனப்படுகொலையாளர் ஜோ' ஆல் மாற்றப்பட்டார். ஏனெனில், அவர் காசாவில் இஸ்ரேல் செய்த போர்க்குற்றங்களுடன் அழிக்கமுடியாத வகையில் தொடர்புபடுத்தப்பட்டுள்ளார். இஸ்ரேலின் போர்க்குற்றங்களுக்கு பைடென் நிர்வாகம் ஆயுதம் மற்றும் நிதியுதவி வழங்கி வருகிறது.

கிட்டத்தட்ட ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரத்தின் போதும் பணக்கார ஆதரவாளர்களுடன் மூடிய கதவு சந்திப்புகளில் மில்லியன் கணக்கான டாலர்களை பைடன் தொடர்ந்து சேகரித்து வருகிறார். எடுத்துக்காட்டாக, திங்களன்று அவர் விஸ்கான்சினுக்கு பயணித்து, அவருடைய சமீபத்திய அரசியல் மோசடியான கல்லூரி மாணவர் கடனை திருப்பிச் செலுத்துவதில் முன்மொழியப்பட்ட குறைப்பை வெளிப்படுத்தினார். இது சிறிதளவு உண்மையான ஆதாயத்தையே கொடுக்கும். ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம், பின்னர் சிகாகோவில் உள்ள ஓ'ஹேர் விமான நிலையத்தில் தரையிறங்கியது. பைடன் அங்கு சுமார் 20 தனிநபர்களிடமிருந்து 2.5 மில்லியன் டாலர் (ஒவ்வொருவருக்கும் தலா 100,000 டாலர்) திரட்டிய நிதி சேகரிப்பில் கலந்து கொண்டார்.

GCM க்ரோஸ்வெனரை (GCM Grosvenor) நடத்தும் மைக்கேல் பிராட், 77 பில்லியன் டாலர் முதலீட்டு நிதி 'மாற்று' - அதாவது சமூக 'முற்போக்கான' - முதலீடுகளில் நிபுணத்துவம் பெற்றவர் மற்றும் சிகாகோ கப்ஸின் இணை உரிமையாளரும் டிடி அமெரிட்ரேடின் (TD Ameritrade) பில்லியனர் நிறுவனரின் மகளுமான லாரா ரிக்கெட்ஸ் ஆகியோர் இந்த விவகாரத்தின் இணை தொகுப்பாளர்களாக இருந்தனர்.

வார இறுதியில், பொலிடிகோ பத்திரிகையானது 2024 தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு வெளிப்படையான கணக்கை வெளியிட்டது. 'பெரிய -பட்ஜெட் நிதி திரட்டுபவர்கள் மீண்டும் வந்துள்ளனர்,' என்ற தலைப்பில், இரண்டு கட்சிகளும் ட்ரம்ப் மற்றும் பைடென் அவர்களின் பிரச்சாரங்களுக்கு தேவையான பணத்தின் பெரும்பகுதியை திரட்ட பெரும் செல்வந்தர்களை அறிந்து கொள்ளும் சிறிய ஒப்பந்தங்களை நம்பியுள்ளன என்பதை சுட்டிக்காட்டியது. இது ஜனநாயகக் கட்சியினருக்கு குறிப்பாக முக்கியமானது என்று ஒபாமாவின் முன்னாள் நிதி திரட்டுபவர் அமி கோப்லாண்டின் கருத்துக்களை மேற்கோள் காட்டி இணையதளம் தெரிவித்துள்ளது:

பைடெனைப் பொறுத்தவரை, டிரம்பை பணத்தால் புதைப்பது பொதுத் தேர்தலுக்கான அவரது மூலோபாயத்தின் மையத்தில் உள்ளது. அவர் முன்னாள் ஜனாதிபதியை விட கணிசமான நிதி நன்மையுடன் தொடங்கினார். மேலும் கண்கவர் மற்றும் அதிக இலாபகரமான நிதி திரட்டல்களை நடத்துவது அந்த நன்மையை அதிகரிக்க உதவுகிறது. 'பணத்தைப் பொறுத்தவரை அவரது அனுகூலம் இருத்தலியல் சார்ந்தது,' என்று கோப்லாண்ட் கூறினார். ஏனென்றால் 'அதுதான் இப்போது பிரச்சாரத்தில் சிறப்பாக செயல்படுகிறது.'

இரண்டு பிரச்சாரங்களுக்குமான நிதி திரட்டல் அவர்களின் உண்மையான ஆதரவுடன் எதிர்மறையாக தொடர்புடையதாகத் தெரிகிறது, கருத்துக்கணிப்புகள் மற்றும் ஊடக கணக்குகள் பொதுவாக பைடென் மற்றும் டிரம்ப் அமெரிக்காவில் மிகவும் செல்வாக்கற்ற இரண்டு அரசியல் நபர்கள் என்பதை ஒப்புக்கொள்கின்றன. ஆரம்பத்தில், தன்னைத் தானே சுயமாக பிரகடனம் செய்த சோசலிஸ்ட் பேர்ணி சாண்டர்ஸுக்கான ஆதரவினாலும், பின்னர் ட்ரம்பின் பாசிசவாத வாய்வீச்சுக்கான (அல்லது ஆதரவு) ஆதரவினாலும் உந்தப்பட்டு, 2016 மற்றும் 2020 இல் கணிசமாக அதிகரித்திருந்த சிறிய-நன்கொடையாளர்களுக்கான நிதி திரட்டல், இந்தாண்டு கணிசமாக குறைந்துள்ளது. 

பாரியளவில் பணம் மேலாதிக்கம் செலுத்துவது என்பது முற்றிலும் ஜனநாயக விரோதமானதும், முதலாளித்துவ இருகட்சி முறைக்கு எந்த எதிர்ப்பையும் ஒதுக்கி வைப்பதையும் நோக்கமாகக் கொண்ட தேர்தல் வழிவகையின் ஒரு கூறுபாடு மட்டுமேயாகும். குறிப்பாக ஜனநாயகக் கட்சி மூன்றாம் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் மீது 'முழுவீச்சிலான போரை' தொடுப்பதில் முன்னிலை வகிக்கிறது, அவை பாரிய கையெழுத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான அவர்களின் முயற்சிகளை சவால் செய்வதில் கவனம் செலுத்தும். 

இதுதான் 2024 இல் அமெரிக்க ஜனநாயகத்தின் நிலை: இரண்டு பிரதான கட்சிகளில் ஒன்று 2020 தேர்தலை மாற்றியமைக்க பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியை மேற்கொண்டவரால் கட்டுப்படுத்தப்படுகிறது. அதேவேளையில் மற்றொரு கட்சி அணு ஆயுதமேந்திய ரஷ்யாவுக்கு எதிராக நடந்து வரும் போருக்கும் 21 ஆம் நூற்றாண்டின் முதல் இனப்படுகொலைக்கும் பொறுப்பான ஜனாதிபதியை மீண்டும் நியமிக்கிறது. 

தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு உண்மையான தேர்வை வழங்கவே சோசலிச சமத்துவக் கட்சி 2024 தேர்தல்களில் பங்கேற்கிறது. ஜனாதிபதி பதவிக்கு ஜோ கிஷோரும், துணை ஜனாதிபதி பதவிக்கு ஜெர்ரி வைட்டும் சோசலிச மற்றும் போர் எதிர்ப்பு வேலைத்திட்டத்தில் போட்டியிடுகின்றனர்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

தேர்தலில் பணத்தின் பாரிய ஆதிக்கம் குறித்து பதிலளிக்கும் விதமாக திங்களன்று எக்ஸ் / ட்விட்டரில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், கிஷோர் எழுதினார்:

மார்க்சிஸ்டுகள் நீண்டகாலமாக விளக்கியதைப் போல, அரசு என்பது ஒரு நடுநிலையான நடுவர் அல்ல, மாறாக வர்க்க ஆட்சியின் ஒரு கருவி. அது #Gaza இனப்படுகொலையையும்,  தீவிரமடைந்து வரும் உலகளாவிய போரையும் ஆதரிக்கும் அதேவேளையில், உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது ஒரு போரை நடத்தும் ஒரு ஆளும் வர்க்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. 

சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம் தொழிலாள வர்க்கத்தில் ஒரு இயக்கத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அமெரிக்காவிலும் உலகெங்கிலுமான தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் உயிர்பிழைப்பியல் பிரச்சினைகளை, இப்போதைய அரசியல் கட்டமைப்பிற்குள் 'மாற்றத்தை' எதிர்பார்ப்பதன் மூலமாகவோ, விளிம்புகளைச் சுற்றி பழுதுபார்ப்பதன் மூலமாகவோ தீர்க்கப்பட முடியாது. முதலாளித்துவத்தின் ஒட்டுமொத்த சமூக மற்றும் பொருளாதார அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்தை தொழிலாள வர்க்கம் முன்னெடுக்க வேண்டும். உலகப் போர், சர்வாதிகாரம் மற்றும் முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்தை நோக்கிய ஆளும் வர்க்கத்தின் உந்துதலை எதிர்ப்பதற்கான இன்றியமையாத கேள்வியும், ஒரே வழியும் இதுவேயாகும். 

வேலைகள், வாழ்க்கைத் தரங்கள், சமூக நலன்கள், ஜனநாயக உரிமைகள் மற்றும் போர் குறித்த வர்க்கப் பிரச்சினைகளை சாத்தியமானளவுக்கு பரந்த பார்வையாளர்களின் முன்னால் கொண்டு வருவதும், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் அரசியல்ரீதியாக மிகவும் முன்னேறிய பிரிவுகளை புரட்சிகர மார்க்சிச வேலைத்திட்டத்திற்கு வென்றெடுப்பதுமே 2024 தேர்தல்களில் மத்திய பிரச்சினையாக உள்ளது. 

Loading