பிரான்ஸ்: தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு போர் அரசாங்கத்தை உருவாக்க பார்னியே தயாரிப்பு செய்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

புதிய பிரதம மந்திரி மிஷேல் பார்னியே (Michel Barnier), எந்தவொரு முந்தைய அரசாங்கத்தையும் விட மிகவும் வலதுசாரி ஒரு அரசாங்கத்தை உருவாக்க மக்ரோனால் நியமிக்கப்பட்டார், இது முஸ்லீம்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீது ஒரு போலிஸ் ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டதுடன், இன்னும் பரந்தளவில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு வர்க்கப் போரையும் மற்றும் ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்து நேட்டோ இராணுவத் தீவிரப்பாட்டையும் கட்டவிழ்த்து விடுகிறது.

அதிவலதின் பாதையைத் தடுக்க பெருந்திரளான இளைஞர்களும் தொழிலாளர்களும் புதிய மக்கள் முன்னணி (New Popular Front - NFP) அல்லது ஜனாதிபதி கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்ததைக் கண்ட நாடாளுமன்ற தேர்தல்களின் முடிவை, பார்னியே பிரதம மந்திரியாக உயர்த்தியிருப்பதன் மூலம் அதை காலில் போட்டு மிதிக்கிறது. அடுத்த அரசாங்கத்திற்கான நவ-பாசிசவாத ஆதரவு இல்லாமல் முந்தைய அரசாங்கத்தின் பிற்போக்குத்தனமான திட்டநிரலை முன்னெடுக்க முடியாது என்று ஆளும் வர்க்கம் கருதுகிறது. விச்சி ஆட்சிக்குப் பின்னர் பிரான்சில் அத்தகைய ஆதரவைப் பெறும் முதல் தேசிய அரசாங்கம் இதுவாகும்.

அரசாங்கமானது ஜனாதிபதி முகாமில் உள்ள அமைச்சர்களையும், அதேபோல் LR (குடியரசுக் கட்சியினர் - Les Républicains) ஐயும் கொண்டிருக்க வேண்டும். தேசிய நாடாளுமன்றத்தில் குடியரசுக் கட்சியின் குழுவின் தலைவரும், 2027 இல் தேர்தல் இலட்சியங்களைக் கொண்டவருமான லோரன்ட் வோக்கியே (Laurent Wauquiez), உள்துறை அமைச்சகத்திற்கான போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார். LR செனட்டர்களின் தலைவரான Bruno Retailleau, நிதி (Bercy) அல்லது நீதி அமைச்சருக்காக குறிப்பிடப்படுகிறார். 2021 இல் புலம்பெயர்வு மீதான தடைக்கு வாதிட்ட பார்னியே, சார்க்கோசியின் ஜனாதிபதி பதவியின் கீழ் 2007 இல் உருவாக்கப்பட்டு 2010 இல் அகற்றப்பட்ட ஒரு குடிவரவு அமைச்சகத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்த விவாதத்தை புதுப்பித்துள்ளார்.

ஐரோப்பிய ஆணைக்குழுவானது பிரான்சை அதன் மிக அதிகமான பொதுப் பற்றாக்குறையால் (public deficit) பொருளாதாரத் தடைகள் வரக்கூடும் என்று எச்சரித்துள்ளது. சமீபத்திய கணிப்புக்கள் பொதுப் பற்றாக்குறை அடுத்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.1 சதவிகிதத்தில் இருந்து 6.2 சதவிகிதம் என்று விரிவடையும் என்று சுட்டிக்காட்டுகின்றன. 2023 ஆம் ஆண்டிற்கான அரசாங்கப் பற்றாக்குறை 154.0 பில்லியன் யூரோ அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.5 சதவீதமாக உள்ளது, இது 2022 இல் 4.8 சதவீதமாகவும், 2021 இல் 6.6 சதவீதமாகவும் இருந்தது. 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பொது அரசாங்கக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 110.7 சதவீதத்தை எட்டியது, 2023 இல் 109.9 சதவீதம்; இது 2019 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 97.9 சதவீதமாக இருந்தது.

“ இது ஒரு விபத்து. நான் அதை உடனடியாக ஒப்புக்கொள்கிறேன். 2023 இல், நாங்கள் பலரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டோம்.” என்று இராஜினாமா செய்த பொருளாதார அமைச்சர் புருனோ லு மேர் (Bruno Le Maire) கூறினார்.  பெருந்தொற்று நோயால் நிதிச் சறுக்கல், பின்னர் 2022 முதல் உக்ரேன் போரை அடுத்து பணவீக்கம் ஆகியவற்றை அவர் நியாயப்படுத்தினார்: “கோவிட் நெருக்கடியின் போதும் பணவீக்கத்தின் போதும் நாங்கள் பிரெஞ்சு பொருளாதாரத்தை நிறைய பாதுகாத்துள்ளோம், மேலும் பிரெஞ்சு குடும்பங்களை நிறைய பாதுகாத்துள்ளோம். இதன் விளைவாக, யூரோ பகுதியில் அதன் நெருக்கடிக்கு முந்தைய மட்டத்திற்குத் திரும்பிய முதல் நாடு நாங்களாக இருக்கிறோம்,” என்றார்.

புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் முஸ்லீம் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு கூடுதலாக, பார்னியே, தொழிலாளர்கள் மீதான முன்னொருபோதும் இல்லாத தாக்குதல்களை உள்ளடக்கிய 2025 நிதி மசோதாவை அக்டோபர் 1 வாக்கில் முன்வைக்க உள்ளார். ஓய்வூதிய வயதை 65 ஆக உயர்த்துவதற்கு ஆதரவாக இருப்பதாகக் கூறிய பார்னியே, 2023 ஓய்வூதிய சீர்திருத்தத்தை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளார். ஆரம்பத்தில் ஜூலை இறுதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த வேலை தேடுவோரின் உரிமைகள் மீண்டும் புதிய அரசாங்கத்தால் தாக்கப்படலாம். பற்றாக்குறைகளைக் குறைக்கும் வகையில், பார்னியே சமூகப் பாதுகாப்பை பாதிக்கின்றவகையில் வரவுசெலவுத் திட்ட வெட்டுக்களையும் பரிசீலிக்கலாம்.

மக்ரோனும் அவரது ஐரோப்பிய சகாக்களும் டிரில்லியன் கணக்கான பொதுப் பணத்தை நிதிச் சந்தைகளுக்குள் பாய்ச்சுவதன் மூலம் ஐரோப்பிய பொருளாதாரத்தின் மறுசீரமைப்பை துரிதப்படுத்த கோவிட் பெருந்தொற்று நோயைப் பயன்படுத்தியுள்ளனர். இந்தத் தொகைகள் தொழிலாளர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உயிர்களைக் காப்பாற்ற பயன்படுத்தப்படவில்லை, மாறாக பங்குச் சந்தை ஊகவணிகத்திற்கும் மற்றும் அரசுகளின் கடன்சுமை மூலமாக நிதியியல் பிரபுத்துவத்தை செழிப்பாக்குவதற்கும் ஆதாயமளிக்கும் ஒரு மரணகதியிலான கொள்கையை தொழிலாளர்கள் மீது திணிக்க பயன்படுத்தப்பட்டன.

நிதியச் சந்தைகளில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்களுக்கான ஒரு ஆலோசகரான நிக்கோலா செரோனின் கருத்துப்படி, நிதியியல் சந்தைகளுக்குள் பணப்புழக்கம் பெருக்கெடுத்து வருவது செல்வந்தர்களுக்கு ஆதாயமளித்துள்ளது. பிரான்ஸ்இன்ஃபோ தெரிவிக்கிறது, “’இது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கொள்ளை!’ அமெரிக்காவில் 84 சதவீத பங்குகள் 10 சதவீத பணக்காரர்களிடம் உள்ளன என்ற உண்மையை கருத்தில் கொண்டு செரோன் வியப்புடன் கூறுகிறார்.

பிரான்சில், அரசு சாரா நிறுவனமான ஆக்ஸ்பாம் 2023 இல் பணக்கார 1 சதவீதத்தினர் உற்பத்தி செய்த செல்வத்தில் 63 சதவீதத்தை கைப்பற்றியதாக அறிவித்தது. பேர்னார்ட் அர்னோவின் செல்வவளம் மார்ச் 2020 இல் 60 பில்லியனில் இருந்து 2024 இல் 172.9 பில்லியனாக உயர்ந்துள்ளது. பிரான்சில் 2779 பில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவைக் கொண்டதில், 500 பெரும் செல்வந்தர்களின் ஒட்டுமொத்த செல்வவளமானது 1.228 பில்லியன் டாலர்களாகும்.

தொழிலாள வர்க்கத்தால் உருவாக்கப்பட்ட செல்வவளத்தைக் கொள்ளையடிப்பதையும் இராணுவ வரவு-செலவு திட்டக்கணக்கை அதிகரிப்பதையும் ரஷ்யாவுக்கு எதிரான ஒரு பகிரங்க போருக்குத் தயாரிப்பு செய்ய பயன்படுத்த வேண்டுமென இப்போது நிதியியல் பிரபுத்துவம் கோரி வருகிறது. அது தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை கடுமையாக தாக்கும் அதேவேளை, ஜனநாயக உரிமைகளை சூறையாடுவதன் மூலம் உள்நாட்டில் வர்க்கப் போராட்டத்தை நெரிக்க விரும்புகிறது.

பிரான்சின் இந்த அரசியல் சூழ்நிலை தனிமைப்படுத்தப்பட்டதல்ல, மாறாக பல்வேறு அரசாங்கங்களில் பங்கேற்கும் அரசியல் நிறுவனக் கட்சிகள் எதுவாக இருந்தாலும் சரி, ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் ஆளும் வர்க்கங்களின் பாகத்தில் அதிவலது கொள்கைகளை நோக்கிய திசையின் பாகமாக உள்ளது.

தொழிற்கட்சி பிரதம மந்திரி ஸ்டார்மர் கூறுகையில், “ நாங்கள் வித்தியாசமாக செயல்பட வேண்டும், விஷயங்களைச் செய்ய வேண்டும். மக்களுடன் நேர்மையாக இருப்பது, நாம் எதிர்கொள்ளும் தேர்வுகள் மற்றும் பணி எவ்வளவு கடினமானது என்பது ஆகியவை இதில் அடங்கும். நேர்மையாகச் சொல்வதானால், விஷயங்கள் மேம்படுவதற்கு முன்பு மோசமாகிவிடும்.” பிரிட்டனை ஒரு போர் பொருளாதாரத்திற்கு மாற்றுவதற்கு, “பிரிட்டனை வழிநடத்தும் திறன் கொண்ட ஒரு வலுவான பாதுகாப்பு மையத்தை உருவாக்க தொழிற்கட்சி ஒரு முழுமையான செயல்பாட்டு இராணுவ மூலோபாய தலைமையகத்தையும் ஆயுத தளவாடங்களின் தேசிய இயக்குநரையும் அமைக்கும்”.

மே 27ம் தேதி CGT 132 பணிநீக்கத் திட்டங்கள் பற்றி ஒரு எச்சரிக்கை தரும் தன்னுடைய அறிக்கையை வெளியிட்டது. இத்திட்டங்கள் 60,000 முதல் 90,000 வேலைகளை ஆபத்திற்கு உட்படுத்தக்கூடும். இது 2008ல் இருந்து மிக உயர்ந்த எண்ணிக்கையாகும். காசினோ மற்றும் மோனோபிரி நிறுவனங்களில் வேலை செய்யும் 6000 ஊழியர்கள் பணிநீக்க திட்டங்களால் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. பிரெஞ்சு விளம்பர சிற்றேடு விநியோக பெருநிறுவனமான Milee, முன்னர் Adrexo, நீதிமன்ற கலைப்பில் வைக்கப்பட்டுள்ளது மற்றும் அதை வாங்குபவர்கள் எவருமில்லை. 2024 ஆம் ஆண்டில் பல அலைகள் பணிநீக்கத்திற்குப் பிறகு, மீதமுள்ள 5,000 ஊழியர்களும் தங்கள் வேலைகளை இழக்க நேரிடும்.

பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை வாகனத் தொழில்துறையால் ஆதிக்கம் செலுத்தப்படும் உலோகவியல் துறையைச் சேர்ந்தவைகளாகும். இந்நிறுவனங்கள் தொழிற்சங்கம் எச்சரித்துள்ள வேலைநீக்க அலையின் முன்னணியில் இருப்பதாகத் தெரிகிறது. இது 2040-ஆம் ஆண்டளவில் ஐரோப்பா முழுவதும் 5 இலட்சம் வேலைவாய்ப்புகளை அச்சுறுத்தக்கூடும். பெரும் நிறுவனமான ஸ்டெலாண்டிஸின் (Stellantis) துணை ஒப்பந்தக்காரர் MA France இன் Poissy தொழிற்சாலை தொழிலாளர்கள், தங்கள் ஆலை இடமாற்றத்தை எதிர்த்து வேலைநிறுத்தம் செய்கின்றனர். இந்த இடமாற்றம் 400 தொழிலாளர்களை வேலையிழக்கச் செய்யும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியில் சமூக ஜனநாயகக் கட்சியின் அதிபர் ஓலாவ் ஷொல்ஸ் (Olaf Scholz) கூறுகையில், தூரிங்கியா மற்றும் சாக்சோனியில் பிராந்திய தேர்தல்களில் அதிதீவிர வலதுசாரி ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சியின் உந்துதலுக்குப் பிறகு ஷெங்கன் பகுதிக்கு எதிரான ஜேர்மனியின் அனைத்து நில எல்லைகளிலும் கட்டுப்பாட்டை மீட்டெடுக்க விரும்புவதாகக் கூறினார். ஜேர்மனியிலும் ஜேர்மனிய இரயில் நிறுவனமான Deustche Bahn 30,000 வேலைகளை அகற்றுவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில், Stellantis அக்டோபர் 8 அன்று டெட்ராய்ட் பகுதியில் உள்ள வாரன் டிரக் ஒருங்கிணைப்பு ஆலையில் 2,450 தொழிலாளர்களை பாரிய பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

அதிதீவிர வலதுசாரி அரசியல் ஐரோப்பாவில் உள்ள அனைத்து அரசாங்கங்களின் நிலையான கொள்கையாக உள்ளது. அதாவது, உள்நாட்டில் வர்க்கப் போரும், வெளிநாட்டில் போரும் என்பதாக உள்ளது. இதனை ஒரு புதிய மக்கள் முன்னணி (NFP) அரசாங்கத்தை ஆதரிப்பதன் மூலம், தேசிய அளவில் எதிர்த்துப் போராட முடியாது. மாறாக, வர்க்கப் போராட்ட அடிப்படையில் ஒரு சர்வதேச எதிர்வினை தேவைப்படுகிறது. இதற்கு, தொழிலாளர் அதிகாரம் மற்றும் சோசலிசத்திற்கான ஒரு சர்வதேசப் போராட்டத்தின் அடிப்படையில், பாசிசம், ஏகாதிபத்தியப் போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தில் சாமானிய தொழிலாளர் போராட்ட அமைப்புகளைக் கட்டமைப்பது அவசியமாகிறது.

Loading