அமெரிக்க, இஸ்ரேலிய அதிகாரிகள் ஈரானிய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு தெஹ்ரான் மீது பெரும் தாக்குதல் நடத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஈரான் மீது ஒரு பெரிய அளவிலான தாக்குதலுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தனர். இது அதே நாளில் ஈரான் இஸ்ரேல் மீது 185 பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்டு நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இது நிகழ்ந்தது.

ஜெருசலேமில், செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 1, 2024 [AP Photo/Mahmoud Illean] இல் இஸ்ரேலை நோக்கி ஈரானில் இருந்து ஏவப்பட்ட உள்வரும் ஏவுகணைகளின் எச்சரிக்கையை சைரன் ஒலிக்கும்போது ஜெருசலேம் மீது வானத்தில் எறிகணைகள் செல்லுகின்றன [AP Photo/Mahmoud Illean]

முன்னாள் இஸ்ரேலிய பிரதம மந்திரி நஃப்டாலி பென்னட் ஈரானின் அணுசக்தி திட்ட நிலைகளின் மீது தாக்குதல்களுக்கு அழைப்பு விடுத்தார், இந்த நடவடிக்கை பல தசாப்தங்களாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் திட்டமிடப்பட்டுள்ளது.

“ஈரானின் அணுசக்தி திட்டத்தையும், அதன் மத்திய எரிசக்தி வசதிகளையும் அழிக்கவும், மற்றும் இந்த பயங்கரவாத ஆட்சியை மரணகரமாக முடமாக்கவும் நாம் *இப்போதே* செயல்பட வேண்டும்,” என்று அறிவித்த பென்னட், இஸ்ரேல் “பயங்கரவாத ஆக்டோபஸின் தலையைத் தாக்க வேண்டும்” என்று கோரினார்.

அவருடன் குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாமும் இணைந்திருந்தார், அவர் கூறுகையில், “எண்ணெயைச் சுத்திகரிக்கும் ஈரானின் திறனில் தொடங்கி, இஸ்ரேலுடன் ஒரு பெரும் விடையிறுப்பை ஒருங்கிணைக்குமாறு பைடென் நிர்வாகத்தை நான் வலியுறுத்துவேன்,” இது ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான சேதப்படுத்தும் அமெரிக்க தாக்குதலை மறைமுகமாக குறிக்கிறது.

அவருடன் புளோரிடாவின் குடியரசுக் கட்சி செனட்டர் மார்கோ ரூபியோ உம் இணைந்திருந்தார், “ஈரானுக்கு எதிராக அதிகபட்ச அழுத்த நடவடிக்கையை மீண்டும் திணிக்க நான் வலியுறுத்துவதுடன், இந்த அச்சுறுத்தலை நிறுத்த அளவுக்கு மீறிய வகையில் விடையிறுப்பதற்கான இஸ்ரேலின் உரிமையை முழுமையாக ஆதரிக்கிறேன்” என்று அறிவித்தார்.

போர்வெறி கருத்துக்கள் இருகட்சி சார்புடையவையாக இருந்தன. பென்சில்வேனியாவின் ஜனநாயகக் கட்சி செனட்டர் ஜோன் ஃபெட்டர்மேன் ஓர் அறிக்கையில், “பயங்கரவாதத்தை வெல்ல இஸ்ரேலுக்கு அவசியமான இராணுவம், நிதி அல்லது உளவுத்துறை எதுவாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு என்னென்ன ஆதாரவளங்கள் கிடைக்கிறதோ அதை உறுதிப்படுத்த எனது குரலும் வாக்கும் இஸ்ரேலைப் பின்தொடர்கின்றன,” என்றார்.

இஸ்ரேலிய இராணுவம் மற்றும் உளவுத்துறை சேவைகள் வேண்டுமென்றே திட்டமிட்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாலும், காஸாவில் இனப்படுகொலை தொடங்கியதாலும் வழிவகுக்கப்பட்ட, ஹமாஸால் அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஏறக்குறைய ஓராண்டிற்குப் பிறகு, அமெரிக்காவும் இஸ்ரேலும் மத்திய கிழக்கு முழுவதும் நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட பிராந்திய போரை நடத்துவதற்கு அந்நாளின் நிகழ்வுகளை ஒரு போர்வையாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளன என்பது தெளிவாகியுள்ளது, இதில் ஈரான் முக்கிய இலக்காக உள்ளது.

லெபனானில் இஸ்ரேல் தரைவழித் தாக்குதலைத் தொடங்கிய ஒரே நாளுக்குப் பின்னர், இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் நடந்துள்ளது.

சனிக்கிழமையன்று, இஸ்ரேல் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை 85 பாரிய குண்டுகளைப் பயன்படுத்தி படுகொலை செய்தது, அவை உயரமான குடியிருப்பு கட்டிடங்களை முற்றிலுமாக தரைமட்டமாக்கின, நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்றன.

ஈரானின் வெளியுறவு மந்திரி ஒரு அறிக்கையை வெளியிட்டார், இந்தத் தாக்குதல் “ஈரானிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ விருந்தினராக இருந்த தெஹ்ரானில் உள்ள ஹமாஸ் அரசியல் அலுவலகத்தின் தலைவர் படுகொலை செய்யப்பட்டதற்கும், அத்துடன் லெபனானில் ஹிஸ்புல்லா செயலாளர் நாயகம் மற்றும் பெய்ரூட்டில் ஒரு மூத்த ஈரானிய இராணுவ ஆலோசகர் ஜெனரல் நில்போரோஷான் படுகொலை செய்யப்பட்டதற்கும்” ஒரு பதிலிறுப்பாகும் என்று கூறினார்.

அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் இராணுவப் படைகள் இரண்டுமே தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தும் முயற்சிகளில் பங்கேற்றன. இந்தத் தாக்குதல், ஏப்ரலில் ஈரானால் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட முந்தைய தாக்குதலை விட பெரியதாகவும், மிகவும் நுட்பமானதாகவும், குறைவான முன்னறிவிப்புடனும் இருந்தது. சமூக ஊடகங்களில் ஏவுகணைகள் இஸ்ரேலிய இராணுவ தளங்களைத் தாக்குவதைக் காட்டும் பரவலான காணொளிகள் இருந்தபோதிலும், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் தாக்குதல் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று காட்ட முயன்றனர்.

இஸ்ரேல் மீது ஏவப்பட்ட ஏவுகணைகள் நெவாடிம், ஹட்செரிம் மற்றும் டெல் நோஃப் ஆகிய மூன்று இராணுவ தளங்களையும், அத்துடன் இஸ்ரேலின் உளவுத்துறை அமைப்பான மொசாட்டின் தலைமையகத்தையும் இலக்காகக் கொண்டிருந்ததாக ஈரானின் உயர்மட்ட இராணுவ அதிகாரி முகமது பகேரி அரசு தொலைக்காட்சியில் தெரிவித்தார். பொதுமக்கள் பகுதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வேண்டுமென்றே குறிவைக்கப்படவில்லை என்று அவர் வலியுறுத்தினார்.

அமெரிக்க அரசியல் நிறுவனத்தின் அனைத்துப் பிரிவுகளும் காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கும் மத்திய கிழக்கு முழுவதும் அதன் விரிவான தாக்குதலுக்கும் தங்கள் ஆதரவை மீண்டும் வெளிப்படுத்தின. “தவறாக புரிந்து கொள்ள வேண்டாம், அமெரிக்கா இஸ்ரேலுக்கு முழுமையாக, முற்றிலும், முழுவதுமாக ஆதரவளிக்கிறது” என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் கூறினார். அவர் மேலும், “இந்தத் தாக்குதல் முறியடிக்கப்பட்டு செயலிழந்துவிட்டதாகத் தெரிகிறது, இது இஸ்ரேலிய இராணுவத்தின் திறனுக்கும் அமெரிக்க இராணுவத்திற்கும் ஒரு சான்றாகும்” என்று கூறினார்.

ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்கு விடையிறுக்கையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் பின்வருமாறு அறிவித்தார், “இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிற பங்காளிகளின் செயலூக்கமான ஆதரவுடன், இந்த தாக்குதலை நடைமுறையளவில் தோற்கடித்தது,” என்பதையும் சேர்த்துக் கொண்டார், “இஸ்ரேலின் பாதுகாப்புக்கான எங்களது உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளோம்.”

நவம்பர் தேர்தலில் ஜனாதிபதிக்கான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், அமெரிக்கா “ஈரான் மற்றும் ஈரான் ஆதரவிலான பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க படைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்க அவசியமான எந்த நடவடிக்கையையும் எடுக்க ஒருபோதும் தயங்காது” என்பதையும் சேர்த்துக் கொண்டார். அவர் மேலும் கூறுகையில், “எனக்கு தெளிவான பார்வை உள்ளது. ... மத்திய கிழக்கில் ஈரான் ஒரு ஸ்திரமின்மையாக்கும், அபாயகரமான சக்தியாக உள்ளது, இஸ்ரேல் மீதான இன்றைய தாக்குதல் அந்த உண்மையை மேலும் எடுத்துக்காட்ட மட்டுமே செய்கிறது.”

ஜனநாயகக் கட்சியின் செனட் பெரும்பான்மைத் தலைவர் சக் சூமர் கூறுகையில், “இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமைக்கு ஆதரவாக அமெரிக்கா தொடர்ந்து எங்கள் நட்பு நாடான இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கும். ... ஈரானும் அதன் பினாமிகளும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்” என்றார்.

இதற்கிடையில், லெபனான் மீது இஸ்ரேலின் குண்டுவீச்சு மற்றும் தரைவழிப் படையெடுப்பு தொடர்கிறது; குறைந்தது ஐந்து இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளை புதனன்று தாக்கின. கடந்த 12 மாதங்களில் லெபனானில் இஸ்ரேலால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,000 ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது; 2006ல் லெபனான் மீதான இஸ்ரேலிய படையெடுப்பில் கொல்லப்பட்ட 1,200 பேருடன் இது ஒப்பிடத்தக்கது.

கடந்த அக்டோபரில் இருந்து உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை 41,000 ஐத் தாண்டியுள்ளது, ஆனால் 186,000 க்கும் அதிகமாக இருக்கக்கூடும் என்ற நிலையில், காஸாவில், இடம்பெயர்ந்த குடும்பங்கள் தஞ்சம் புகுந்திருந்த நுசைராட் அகதிகள் முகாம் மற்றும் காஸா நகரத்தின் ஒரு பள்ளி மீதான இரண்டு தனித்தனி இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தபட்சம் 37 பேர் கொல்லப்பட்டனர்.

லெபனான் மீது பாரிய தாக்குதல்களுக்கான அழைப்புக்கள் பெருகியுள்ள நிலையில், லெபனான் மீது இஸ்ரேலின் தரைவழித் தாக்குதலுக்கு அமெரிக்க அதிகாரிகள் ஒப்புதல் கொடுத்துள்ளனர் என்று பொலிடிகோ பத்திரிகையின் தகவல் வந்துள்ளது.

பொலிடிகோ இவ்வாறு அறிவித்தது, “ஹிஸ்புல்லாவிற்கு எதிராக இராணுவ அழுத்தத்தை அதிகரிப்பதற்கான அதன் முடிவை அமெரிக்கா ஆதரிக்கும் என்று வெள்ளை மாளிகையின் மூத்த பிரமுகர்கள் தனிப்பட்ட முறையில் இஸ்ரேலிடம் தெரிவித்தனர்—பைடென் நிர்வாகம் சமீபத்திய வாரங்களில் இஸ்ரேலிய அரசாங்கத்தை அதன் தாக்குதல்களைக் குறைக்க பகிரங்கமாக வலியுறுத்தி வந்துள்ளது.”

அந்த அறிக்கையானது தொடர்ந்து பின்வருமாறு குறிப்பிட்டது, “ஹிஸ்புல்லாவிற்கு எதிராக இஸ்ரேலின் இராணுவக் கவனத்தை வடக்கே திருப்புவதற்கான இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவின் பரந்த மூலோபாயத்துடன் அமெரிக்கா உடன்படுவதாக சமீபத்திய வாரங்களில் உயர்மட்ட இஸ்ரேலிய அதிகாரிகளிடம் ஜனாதிபதி ஆலோசகர் அமோஸ் ஹோச்ரைன் மற்றும் மத்திய கிழக்கிற்கான வெள்ளை மாளிகை ஒருங்கிணைப்பாளர் பிரெட் மெக்கர்க் ஆகியோர் தெரிவித்தனர். ... திரைக்குப் பின்னால், ஹோச்ஸ்டீன், மெக்கர்க் மற்றும் ஏனைய உயர்மட்ட அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் இஸ்ரேலின் லெபனான் நடவடிக்கைகளை ஒரு வரலாற்றை வரையறுக்கும் தருணமாக —வரவிருக்கும் ஆண்டுகளில் மத்திய கிழக்கை சிறப்பாக மறுவடிவமைக்கும் ஒரு தருணமாக— விவரித்து வருகின்றனர்.”

Loading