பார்னியே இராணுவ விரிவாக்கத்திற்கு நிதியளிக்க கடுமையான சிக்கன வரவு-செலவு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நிதிச் சந்தைகளானது பார்னியே அரசாங்கத்தின் மீது கடுமையான சிக்கனச் திட்டத்தை செயல்படுத்த அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், பார்னியே வியாழக்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் 2025-ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்தார். இதில் 60 பில்லியன் யூரோ சேமிப்பு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கில் போர்களை தீவிரப்படுத்துவதற்கான இராணுவ செலவினங்களுக்கு நிதி திரட்டும் நோக்கில், அதிகரித்து வரும் கடன் சுமையை தொழிலாளர்கள் மீது சுமத்தும் வகையில் இந்த வரவு-செலவுத் திட்டம் அமைந்துள்ளது

இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.1 சதவீதம் வரை எதிர்பார்க்கப்படும் நிதிப்பற்றாக்குறைக்குப் பின்னர், 2025க்குள் பொதுப் பற்றாக்குறையை 5 சதவீதமாகக் குறைப்பதும், 2029ல் புரூசெல்ஸ் ஏற்றுக்கொள்ளும் 3 சதவீத வரம்புக்குள் கொண்டுவருவதுமே இலக்காகும். இதற்காக, அரசாங்கம் செலவினங்களை 40 பில்லியன் யூரோக்கள் குறைக்கவும், வரி உயர்வு மூலம் 20 பில்லியன் யூரோக்கள் வருவாயை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் பல வார விவாதங்களுக்குப் பின், வரவு-செலவுத் திட்டமானது டிசம்பர் 21 அன்று வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும்.

அரசாங்கம் இதுவரை அளித்த முழுமையற்ற தகவல்களுக்கு வருத்தம் தெரிவித்த பொது நிதி உயர் ஆலோசனைக் குழுவின் (HCFP) தலைவர் பியர் மொஸ்கோவிச்சி, “2024 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் பேரளவு பொருளாதாரத் திட்டம் (macroeconomy) இப்போது பொதுவாக நடைமுறைக்கு ஏற்றதாக உள்ளது எனறும், 2025 ஆம் ஆண்டிற்கான முன்கணிப்பு இன்னும் உறுதியற்றதாகத் தெரிவதுடன், குறிப்பாக 1.1 சதவீத வளர்ச்சி எதிர்பார்ப்பு சற்று அதிக ‘நம்பிக்கை’ கொண்டதாக உள்ளது” என்றார்.

40 பில்லியன் யூரோவைச் சேமிப்பதற்காக, வழமையாக ஜனவரியில் நடைபெறும் பணவீக்கத்திற்கு ஏற்ப ஓய்வூதிய உயர்வை, அரசாங்கம் ஆறு மாதங்கள் ஒத்திவைப்பதுடன், 2025 ஜூலை 1 அன்று இதைச் செயல்படுத்தும். அரசின் மிகப்பெரிய செலவினமான தேசிய கல்விக்கான 2025 நிதிநிலை அறிக்கையானது, 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4,000 ஆசிரியர் பணியிடங்களைக் குறைக்கிறது. இது முக்கியமாக குழந்தைகள் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளிகளில் என அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. அரசுப் பணிகளில் மட்டும் 1,196 பணியிடங்கள் நீக்கப்படும்.

பெரிய பொதுத்துறை நிறுவனங்கள் போன்ற அரசு அமைப்புகளில், 1,005 பணியிடங்கள் குறைக்கப்படும்.

அரசாங்கமானது பிரெஞ்சு விமானப் போக்குவரத்துத் துறையில் வரிவிதிப்பை ஒரு பில்லியன் யூரோக்கள் அதிகரிக்கவும், மின்சாரத் துறையில் வரியை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. இது நடுத்தர அல்லது குறைந்த வருமானங்கள் உடைய மக்களின் வாழ்க்கைச் செலவைப் பாதிக்கும்.

மருத்துவக் காப்பீட்டுச் செலவின இலக்கின் உயர்வு 2024-ல் 3.3 சதவீதமாக இருந்ததை அடுத்து, இது 2.8 சதவீதமாகக் கட்டுப்படுத்தப்படும். தனியார் மருத்துவர் தொழிற்சங்கங்களுடன் அண்மையில் பேச்சுவார்த்தை மூலம் முடிவு செய்யப்பட்ட கட்டண உயர்வானது 4 பில்லியன் யூரோக்கள் சேமிப்புக்கு வழிவகுக்கும். மேலும், மருத்துவர் ஆலோசனைகளுக்கான திருப்பிச் செலுத்தலில் (remboursement) மருத்துவக் காப்பீட்டின் பங்கைக் குறைக்கவும், பிரெஞ்சு மக்களின் நோய்விடுப்புக்கான அதிகபட்ச திருப்பிச் செலுத்தல் (remboursement) தொகையைக் குறைக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

மாறாக, வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட சட்ட முன்வரைவின்படி, பொதுப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான முயற்சிகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு, இராணுவத் திட்டமிடல் சட்டத்திற்கு (LPM) இணங்க, பாதுகாப்பு அமைச்சகத்திற்கு மீண்டும் உயர்த்தப்பட்ட 2025 நிதிநிலை அறிக்கையை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் முன்மொழிகிறது. சென்ற ஆண்டைப் போலவே, பாதுகாப்புத் துறை நிதியானது 3.3 பில்லியன் யூரோக்கள் உயர்ந்துள்ளதுடன், ஓய்வூதியம் நீங்கலாக 50.5 பில்லியன் யூரோக்களை இது எட்டும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாகும்.

பொது நிதிகளை மீட்டெடுப்பதில் பங்கேற்க, சுமார் 400 பெரு நிறுவனங்களை இரண்டு ஆண்டுகளுக்கு, 2024 மற்றும் 2025-ல் பிரான்சில் ஈட்டிய இலாபங்களுக்கு “சிறப்புப் பங்களிப்பு” செய்ய அரசாங்கம் கோரும். 2025-ல் 2 பில்லியன் யூரோக்களை மீட்டெடுக்க மூன்று ஆண்டுகளுக்கு முயற்சி செய்யுமாறு 65,000 மிகப் பெரிய செல்வந்தக் குடும்பங்களை அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்வாறு, பற்றாக்குறையைக் குறைக்கும் முயற்சிகளில் மூன்றில் இரண்டு பங்கு சிக்கன நடவடிக்கைகளாக அமைகின்றன. இவை முக்கியமாக தொழிலாளர்களையும் சாதாரண மக்களையும் பாதிக்கும். பெரு நிறுவனங்கள் மற்றும் அதீத செல்வந்தர்கள் மீதான வரி உயர்வு, வரி விலக்குகள் மற்றும் வரி கணக்கீட்டுக்கான தொகைகளைத் திசைதிருப்பும் ஏனைய நடைமுறைகள் மூலம் தவிர்க்கப்படலாம். இறுதியில், இந்த வரவு-செலவுத் திட்டமானது தொழிலாளர்களுக்கு எதிரான வர்க்கப் போரின் அறிவிப்பே என்ற உண்மையை மறைக்கவே அரசாங்கம் இந்த அறிவிப்பைச் செய்துள்ளது.

எக்ஸ் தளத்தில் மெலோன்சோன், “வறுமையைப் பரப்பிய பிறகு, இப்போது அறியாமையை நிறுவனமயமாக்குகிறார்கள்” என்று பதிவிட்டார். அடிபாணிய பிரான்ஸ் (LFI) கட்சியின் எம்.பி. ஓரேலியன் லு கொக், மிஷேல் பார்னியே முன்மொழிந்த வரவு-செலவுத் திட்டம் “சமூகப் போருக்கான வரவு-செலவுத் திட்டம்” மற்றும் “பிரெஞ்சு மக்களை தொடர்ந்து இரத்தம் சிந்தச் செய்யும் கொலைக்களம்” என்றும் கருதுகிறார்.

பார்னியே அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நீடித்திருக்க நம்பியிருக்கும் முக்கிய சக்தியான தேசிய பேரணிக் (RN) கட்சி, பார்னியே முன்வைத்த 2025 வரவு-செலவுத் திட்டத்தை விமர்சித்துள்ளது. ஜோன்-பிலிப் டாங்குய், LCI-தொலைக்காட்சியில் இந்த வரைவு வரவுசெலவுத் திட்டத்திற்கு தனது எதிர்ப்பை தெரிவித்தார். “நடுத்தர மற்றும் சாமானியர்கள் மீது குறைந்தது 7 பில்லியன் யூரோக்களும், சலுகை பெற்றவர்கள் மீது வெறும் 2 பில்லியன் யூரோக்களும் மட்டுமே சுமத்தப்படுவதால், இந்த முயற்சியானது மிக மோசமாக பகிரப்பட்டுள்ளது, இது எங்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றார் அவர்.

தரமதிப்பீட்டு நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை மாலை, 2025 வரவு-செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதற்கு பிரான்சின் தரமதிப்பீட்டை மாற்றாமல் வைத்திருப்பதன் மூலம் பதிலளித்தன. எனினும், பிரான்ஸ் எதிர்மறையான எதிர்காலக் கண்ணோட்டத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஐரோப்பிய ஆணையமானது பிரான்சை இலக்காகக் கொண்டு அதிகப்படியான பற்றாக்குறை நடைமுறையைத் தொடங்கியுள்ளது.

நாடாளுமன்ற விவாதங்கள் மற்றும் பிரான்சின் அரசியல் சூழ்நிலையின் மாற்றங்களைப் பொறுத்து தரமதிப்பீட்டு நிறுவனங்கள் பிரான்சின் தரத்தைக் குறைக்கக்கூடும். இவ்வாறாக, தரமதிப்பீட்டு நிறுவனங்களும் நிதிச் சந்தைகளும் வரவு-செலவுத் திட்டத்திற்கு வாக்களிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது அழுத்தம் கொடுக்கின்றன. மேலும், 2025 வரவு-செலவுத் திட்டத்தை கட்டாயப்படுத்த பார்னியே 49-3 சட்டப்பிரிவைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க முயல்கின்றார்.

நிதிச் சந்தைகள் அஞ்சுவது என்னவெனில், RN கட்சியின் ஆதரவில் தங்கியிருக்கும் மக்கள் ஆதரவற்ற அரசாங்கத்திற்கும், வெறுக்கப்படும் மக்ரோனின் ஜனாதிபதி ஆட்சிக்கும் எதிராக கொதித்துக் கொண்டிருக்கும் சமூக எழுச்சியாகும். உண்மையில், 2023-ல் மக்களால் பெரிதும் எதிர்க்கப்பட்ட ஓய்வூதிய சீர்திருத்தத்தை வலுக்கட்டாயமாக திணிக்க அரசாங்கம் முயன்றது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது மே 68 ஆண்டுப் பொது வேலைநிறுத்தத்திற்குப் பிறகு பிரான்சில் மிகப்பெரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களை உருவாக்கியது.

பிரான்சின் பெரும் கடனைச் சுற்றி, தொழிலாளர்களுக்கும் சர்வதேச நிதிச் சந்தைகளுக்கும் இடையே மீண்டும் ஒரு வலிமையான மோதல் உருவாகி வருகிறது. கடந்த சில பத்தாண்டுகளில், ஐரோப்பிய அரசுகள் ஆயிரக்கணக்கான பில்லியன் பொதுப் பணத்தை நிதிச் சந்தைகளில் செலுத்தியுள்ளன. இவை அரசுகளைக் கடன்படுத்தி, நிதி உயரடுக்கினரை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குச் செல்வந்தர்களாக்கியுள்ளன. உக்ரேன் நிலப்பரப்பில் ரஷ்யாவுக்கு எதிரான இராணுவ விரிவாக்கத்திற்கும் இது நிதியளித்துள்ளது. இப்போது, ஆளும் வர்க்கமானது இந்த மக்கள் விரோத கொள்கைகள் அனைத்தையும் தொடர தொழிலாள வர்க்கம் விலை கொடுக்க வேண்டும் என விரும்புகிறது.

2023-ல், மக்ரோனின் ஓய்வூதியச் சீர்திருத்தமானது போர்ப் பொருளாதாரத்திற்கு நிதியளிக்க பத்தாயிரக்கணக்கான மில்லியன் யூரோக்களை திரட்டியது. தொழிலாளர்கள் இதை எதிர்த்தனர், சீர்திருத்தத்தைத் தடுக்கவும் மக்ரோனைத் தூக்கியெறியவும் பெரும்பாலும் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் தொழிற்சங்கத் தலைமைகளும் மெலோன்சோன் போன்ற அவற்றின் போலி-இடது கூட்டாளிகளும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, மக்ரோனைத் தூக்கியெறியும் ஒரு அரசியல் போராட்டத்தைத் தடுத்தனர். ஏனெனில் இந்த அமைப்புகள் ரஷ்யாவுக்கு எதிரான போரை ஆதரிக்கின்றன, எனவே அவை மக்ரோனுடன் பேரம்பேசிய சமூக வெட்டுக்களுக்கும் ஆதரவாக உள்ளன.

தொழிலாளர்கள் வெளிநாட்டுப் போருக்கும், பார்னியேயின் வர்க்கப் போருக்கும் எதிராகப் போராட வேண்டும். அவர்கள் தங்கள் போராட்டங்களின் மீது தொழிற்சங்கத் தலைமைகளும் புதிய மக்கள் முன்னணியும் திணிக்கும் ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டும். சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக நீண்டகால அணிதிரட்டலுக்குத் தயாராக வேண்டும். அதேசமயம், முதலாளித்துவம் பொதுப்பணத்தைத் திசைதிருப்பும் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்குப் போர்களுக்கும், சொத்துடைமையாளர் வர்க்கத்தின் நலனுக்காக பொது நிதியை வறண்டு போகச் செய்த மீட்புத் திட்டங்களுக்கும் எதிராகவும் போராட வேண்டும். இந்த வளங்களைக் கைப்பற்றி, மக்களின் சமூகத் தேவைகளுக்கு நிதியளிக்கப் பயன்படுத்த வேண்டும்.

சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த நிதிப் பிரபுத்துவத்தை எதிர்கொள்ள, தொழிலாளர்கள் சோசலிசம் மற்றும் சர்வதேசியவாதத்தின் பதாகையின் கீழ் சர்வதேசப் போராட்டத்தில் தங்கள் வர்க்கச் சகோதர சகோதரிகளுடன் ஒன்றிணைய வேண்டும்.

Loading