முன்னோக்கு

பிற்போக்குத்தனத்தின் திருவிழா: ரியோவில் ஜி20 உச்சி மாநாடு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

உலகின் 20 மிகப்பெரிய பொருளாதார சக்திகளின் அரசு தலைவர்கள் இந்தாண்டின் ஜி20 உச்சிமாநாட்டிற்கு வந்திருந்தபோது, ரியோ டி ஜெனிரோ நேற்று ஊரடங்கில் இருந்தது. பிரேசிலின் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா ரியோ குடியிருப்பாளர்களை நகரிலிருந்து வெளியேற ஊக்குவிப்பதற்காக இரண்டு நாள் பொது விடுமுறையை அறிவித்து, 25,000 துருப்புக்களை நகரத்திற்குள் அனுப்பிய பின்னர் தெருக்கள் வெறிச்சோடிக் கிடந்தன. போர்க்கப்பல்கள் கோபகபானா மற்றும் இபனேமா கடற்கரைகளில் ரோந்து சென்றன, மேலும் கவச வாகனங்கள் உச்சி மாநாடு நடைபெற்ற இடமான ரியோவின் நவீன கலை அருங்காட்சியகத்தை சுற்றித் திரிந்தன.

G20 உச்சிமாநாட்டின் தலைவர்கள், ரியோ டி ஜெனிரோவில் ஒரு குழு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கின்றனர். நவம்பர் 18, 2024 திங்கட்கிழமை

தென்கிழக்கு ஆசிய நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர், 1999 இல் ஸ்தாபிக்கப்பட்ட ஜி20 உச்சிமாநாடு, 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுடன், சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பு மூலமாக உலகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு ஆணையுடன் ஆண்டுதோறும் கூடத் தொடங்கியது. ஆனால் இன்று, இராணுவ விரிவாக்கம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களைத் தவிர வேறெந்த ஒத்துழைப்பும் இதில் இல்லை.

காஸா இனப்படுகொலை மற்றும் பாசிச பில்லியனர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மத்தியில், ஜி20 உச்சிமாநாட்டிற்குள் முற்றுமுழுதான அவநம்பிக்கை மற்றும் நோக்குநிலை பிறழ்வு மேலோங்கி இருக்கிறது. உலகின் உழைக்கும் மக்களின் சமூகத் தேவைகளை போருக்கு அர்ப்பணித்துக் கொண்ட முதலாளித்துவ அரசாங்கங்களால் நிவர்த்தி செய்ய முடியும் என்ற பாசாங்குத்தனம் மற்றும் நிதியியல் செல்வந்த தட்டுக்களின் இலாபங்கள் பொறிந்து வருகின்ற நிலையில், முதலாளித்துவ அமைப்புமுறையின் உலகளாவிய நிலைமுறிவு கட்டவிழ்ந்து வருகிறது.

“உலகம் இன்னும் மோசமாக இருப்பதை நான் வருத்தத்துடன் கவனிக்கிறேன். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான ஆயுத மோதல்கள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான கட்டாய இடப்பெயர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், உலகில் 120 மில்லியன் அகதிகள் உருவாகியுள்ளனர்” என்று லூலா சுட்டிக்காட்டி உச்சிமாநாட்டைத் தொடக்கிவைத்து தனது கருத்துக்களைக் கூறினார். ஆனால், உச்சிமாநாட்டிற்கான லூலாவின் நிகழ்ச்சி நிரலில் (பட்டினிக்கு எதிரான போராட்டம், உலகளாவிய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பசுமை மேம்பாடு) போர்கள், இனப்படுகொலை அல்லது அகதிகள் நெருக்கடிகளை நிறுத்துவதற்கான எந்தப் புள்ளியும் இல்லை.

லூலாவின் நிகழ்ச்சி நிரலை நிராகரித்த ஐரோப்பிய அதிகாரிகள், பாரிஸ் காலநிலை ஒப்பந்தங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து வெளியேறுவதாக ட்ரம்ப் அச்சுறுத்தியவுடன் அது உயிர்வாழாது என்று கூறினர். “நாம் அனைவரும் அங்கே உட்கார்ந்து உலகளாவிய கூட்டுறவின் எதிர்காலம் குறித்து பேச வேண்டும். அதேசமயம், அக்கறை காட்டாத [ட்ரம்ப்] அவர் வழியில் இல்லை என்று பாசாங்கு செய்ய வேண்டும். மேலும், [ரியோவில்] எடுக்கப்படும் எந்த முடிவும் எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்பது கடினம்” என்று ஒருவர் பைனான்சியல் டைம்ஸ் க்கு தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும், தேர்தலில் ட்ரம்பின் மறுதேர்வானது, போர், இனப்படுகொலை, பொலிஸ்-அரசு, பிற்போக்குத்தனம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதான சுரண்டலை இடைவிடாது தீவிரப்படுத்துதல் ஆகியவற்றைப் பயன்படுத்தி, நிதியியல் செல்வந்த தட்டுக்களின் நலன்களுக்காக, உலக முதலாளித்துவத்தை ஏகாதிபத்தியம் மூர்க்கமாக மறுசீரமைப்பதன் மிக அருவருப்பான வெளிப்பாடு மட்டுமே ஆகும்.

ரியோ உச்சி மாநாட்டில் ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்தின் முன்னணி பிரதிநிதியாக அமெரிக்காவின் முதிர்ந்த ஜனாதிபதியும், தேர்தலில் நிராகரிக்கப்பட்டவருமான ஜோ பைடென் இருந்தார். ஒரு சில வாரங்களுக்கு முன்னர்தான், பைடெனும் ஜனநாயகக் கட்சியும் ட்ரம்ப் ஒரு சர்வாதிகாரத்தைத் திணிக்க திட்டமிடும் ஒரு பாசிசவாதி என்று எச்சரித்து வந்தனர்.

உச்சி மாநாட்டில் அவர் ஆற்றிய உரையில், பைடென், அமெரிக்கா தலைமையிலான உலகெங்கிலுமான அரசாங்கங்கள், கோவிட்-19 தொற்றுநோயை சரிபார்க்காமல் பரவ அனுமதித்துள்ள நிலைமைகளின் கீழ், எதிர்கால தொற்றுநோய்களைத் தடுப்பதற்கான திட்டங்களை குழிதோண்டிப் புதைத்து, காலநிலை மாற்ற கடமைப்பாடுகளைக் கைவிட்டுள்ள நிலைமைகளின் கீழ், “தொற்றுநோய்கள் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள” ஆதார வளங்களைப் பெறுவதில் “நாம் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளோம்” என்று முணுமுணுத்தார்.

தனது அரசாங்கம் காஸாவிலுள்ள மக்களை வேண்டுமென்றே பட்டினி போட்டுவரும் சூழ்நிலைமைகளின் கீழ், அமெரிக்க ஜனாதிபதி “உணவுப் பாதுகாப்பின்மையை” நிவர்த்தி செய்வதற்கு சூளுரைத்தார். இஸ்ரேலுக்கு “தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் உரிமை” உண்டு என்று அறிவித்ததன் மூலம் பைடென் இனப்படுகொலைக்கு தன் ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார்.

ரஷ்யாவுடனான போரில் உக்ரேனை “கடுமையாக ஆதரிப்பதாகவும்” ஜி20 இதைச் செய்ய வேண்டும் என்றும் பைடென் கூறினார். அதற்கு முந்தைய நாள், ரஷ்யாவிற்குள் நீண்ட தூர தாக்குதல்களுக்கு அமெரிக்காவின் ஏவுகணைகளைப் பயன்படுத்தவும், அமெரிக்க இராணுவத்தால் வழங்கப்பட்ட தரவுகளை இலக்கு வைக்கவும் பைடென் உக்ரேனுக்கு ஒப்புதல் அளித்திருந்தார். இது, ரஷ்யாவுடன் நேட்டோ போருக்குச் செல்வதையும், ஓர் அணுஆயுத மோதலைத் தூண்டக்கூடும் என்பதையும் அர்த்தப்படுத்தும் என்று ரஷ்ய அதிகாரிகளிடம் இருந்து வந்த முந்தைய எச்சரிக்கைகளையும், அத்துடன் வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவில் 10 இல் 9 பேர் ரஷ்யாவுக்கு எதிரான இராணுவ விவாக்கத்தை எதிர்ப்பதாக எடுத்துக்காட்டிய கருத்துக்கணிப்புகளையும் பைடென் மீறியுள்ளார்.

ட்ரம்ப் என்ன கொள்கைகளை பின்பற்றக்கூடும் என்பதை யூகிக்க, ரியோவுக்கு வருவதற்கு முன்பு அவரது மார்-அ-லாகோ வில்லாவில் சந்தித்த அதிதீவிர வலதுசாரியான ஆர்ஜென்டினா ஜனாதிபதி ஜேவியர் மிலேயையும் இராஜதந்திரிகள் கவனித்தனர். பில்லியனர் எலோன் மஸ்க் தனது நிர்வாகத்தின் கீழ் திணிக்கவிருக்கும் 2 டிரில்லியன் டாலர் பட்ஜெட் வெட்டுக்களுக்கு மிலேயின் காட்டுமிராண்டித்தனமான சிக்கனக் கொள்கைகள் ஒரு முன்மாதிரி என்று ட்ரம்ப் கூறியுள்ளார். உக்ரேனில் நேட்டோ-ஆதரவு ஆட்சியின் ஆதரவாளரான மிலேய், பட்டினியைக் குறைக்கும் கொள்கைகளை தான் எதிர்ப்பதாக ஆத்திரமூட்டும் வகையில் நேற்று அறிவித்தார்.

பைடெனைப் போலவே, ஐரோப்பிய அரசாங்கங்களும், ஒரு சர்வாதிகாரத்தை அமைப்பதற்கான ட்ரம்பின் அச்சுறுத்தல்கள் குறித்தும், இந்த ஜனாதிபதி தேர்தல் அமெரிக்காவின் கடைசி தேர்தலாக இருக்கலாம் என்ற அவரது கருத்துக்கள் குறித்தும் மௌனம் சாதித்து வருகின்றன. ஒரு “யுத்தப் பொருளாதாரத்திற்கு” நிதிகளைத் திசைதிருப்புவதற்காக மக்கள் விரோத சமூக வெட்டுக்களில் பத்து பில்லியன் கணக்கான யூரோக்களைத் திணிக்க அவர்களுக்கு உதவுவதற்காக வலதை நோக்கிய பாரிய திருப்பத்தை அவை பயன்படுத்தி வருகின்றன. பிரான்சின் “செல்வந்தர்களின் ஜனாதிபதி” இமானுவேல் மக்ரோன் பேச்சுவார்த்தைகளுக்காக மிலேயை சந்தித்த அதேவேளையில், இங்கிலாந்து பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மர் உக்ரேனுக்கு ஆதரவாக ஜி20 “இரட்டிப்பாக்க” வேண்டும் என்று கோரினார். அதே நேரத்தில், ஜேர்மன் சான்சிலர் ஓலாவ் ஷொல்ஸ் “உக்ரேன் எங்களை நம்பலாம்” என்று கூறினார்:

வாஷிங்டனைப் போலவே, ஐரோப்பாவின் செல்வாக்கிழந்த அரசாங்கங்களும் தொழிலாள வர்க்கத்தின் கருத்துக்கு எதிராக முற்றிலும் அவமதிப்புடன் போரை விரிவாக்கி வருகின்றன. ஜேர்மன் மக்களில் வெறும் 3 சதவீதத்தினர் மட்டுமே ஷொல்ஸ் இன் கூட்டணி அரசாங்கத்தை ஆதரிப்பதாகவும், பிரெஞ்சு மக்களில் வெறும் 5 சதவீதத்தினர் மட்டுமே மக்ரோனை ஆதரிப்பதாகவும் கருத்துக்கணிப்புகள் கண்டறிந்துள்ளன. ஸ்டார்மரை பொறுத்தவரை, இந்தக் கோடையில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து கருத்துக் கணிப்புக்களில் அதிர்ச்சியூட்டும் வகையில் 49 சதவிகிதச் சரிவைக் கண்டுள்ளார்.

ஏகாதிபத்திய மையங்களுக்கு வெளியில் இருந்து வந்திருந்த அரசு தலைவர்கள் எந்த மாற்றீட்டையும் முன்வைக்கவில்லை. ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறையின் மரண நெருக்கடிக்கு மத்தியில், வர்த்தகப் போர் மற்றும் இராணுவ மோதலைத் தீவிரப்படுத்துவதற்கான ஏகாதிபத்திய சக்திகளின் அச்சுறுத்தல்களை முகங்கொடுக்கின்ற நிலையில், ஒரு “பல-துருவ உலகத்திற்கு” வக்காலத்து வாங்குபவர்கள், அவர்களின் சொந்த தேசிய, முதலாளித்துவ நலன்களுக்கு மூச்சுவிடுவதற்கு சற்று அதிக காலத்தை விரும்புகின்றனர். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உக்ரேன் மீது படையெடுத்ததால் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் மாநாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால், கிரெம்ளின் வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் மாநாட்டில் ஒரு பிரதிநிதியாக கலந்து கொண்டார்.

சீன பொருளாதாரத்தின் குரல்வளையை நெரிக்கவும், பாரிய சுங்க வரிகளைக் கொண்டு அமெரிக்க சந்தைகளுக்கான அணுகலை வெட்டுவதன் மூலமாக, அமெரிக்க பொருளாதாரத்தை முந்துவதில் இருந்து அதைத் தடுக்க ட்ரம்ப் அச்சுறுத்தி வருகின்ற நிலையில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ரியோ வந்தடைந்தார். “பரஸ்பர மரியாதை, சமமான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நன்மை மற்றும் உலகளாவிய தெற்கு நாடுகளுக்கு ஆதரவு” கொள்கைகளை மதிக்க ஜி 20 க்கு அழைப்பு விடுத்து, ஜி ஜின்பிங் எதிர்வினையாற்றினார். சீன பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்திற்கும் குறைவாக வீழ்ச்சி அடைந்துள்ள நிலையிலும் கூட, சீனாவின் 1 ட்ரில்லியன் டாலர் உலகளாவிய உள்கட்டமைப்பு முதலீட்டு திட்டமான ஒரே இணைப்பு மற்றும் சாலை முன்முயற்சி பற்றியும் அவர் புகழ்ந்தார்.

எவ்வாறாக இருப்பினும் ஜி ஜின்பிங், முதலாளித்துவ ஆட்சியின் நலன்களைப் பின்பற்றுகிறாரே அன்றி, சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மத்தியில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான வெகுஜன எதிர்ப்பைக் கோரும் காலனித்துவ எதிர்ப்புப் போராட்டத்தை அல்ல. ஐரோப்பிய அதிகாரிகள், அமெரிக்க சந்தைகளை அணுகுவதில் தங்களின் சொந்த அணுகலை நாசகரமாக வெட்டிவிடும் என்ற ட்ரம்பின் அச்சுறுத்தல்களைக் கண்டு அஞ்சி, ஜி உடன் பேச்சுவார்த்தைகளை நாடியபோது இது வெளிப்பட்டது. ஸ்டார்மர் “யூகிக்கக்கூடியதாகவும் வலுவான இங்கிலாந்து-சீனா உறவை உருவாக்குவதாகவும்” சூளுரைத்த போது, பிரிட்டனில் “பொருளாதாரத்தின் அடித்தளங்களை சரிசெய்ய வேலை செய்வதாக” கூறப்படும் ஸ்டார்மரின் தொழிலாளர்-விரோத சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போர் சதித்திட்டங்களை ஜி பாராட்டினார்.

இந்தியாவின் இந்து பேரினவாத பிரதம மந்திரி நரேந்திர மோடி ட்ரம்ப் உடன் நெருக்கமான உறவுகளுக்கு நம்பிக்கை கொண்டிருக்கும் செய்திகளுக்கு மத்தியில், மோடி இத்தாலியின் பாசிசவாத பிரதமர் ஜோர்ஜியா மெலோனியை சந்தித்தார். பொருளாதார திட்டங்கள் மற்றும் உலகளாவிய இராஜதந்திர மன்றங்களில் நெருக்கமான ஒத்துழைப்புக்கு உறுதியளித்து, எலன் மஸ்க்குடன் உறவுகளை வளர்த்து வரும் மெலோனியுடன் மோடி ஒரு கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டார்.

ரியோவுக்கு வந்த துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், காஸாவில் இஸ்ரேல் ஒரு இனப்படுகொலையை நடத்தி வருகிறது என்ற லூலாவின் அறிக்கையைக் குறிப்பிட்டு, “இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிரான லூலாவின் நிலைப்பாட்டை” பாராட்டினார். ஆனால், இது எர்டோகனின் சொந்த பாத்திரத்தை மூடிமறைப்பதற்கான ஒரு சிடுமூஞ்சித்தனமான முயற்சியாகும். உண்மையில், இனப்படுகொலை முழுவதிலும் இஸ்ரேலுக்கு எண்ணெய், எரிவாயுவை தொடர்ந்து கொடுத்து வந்துகொண்டிருக்கும் அவர், நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள் பல்லாயிரக்கணக்கான பாதுகாப்பற்ற குடிமக்களை படுகொலை செய்துவரும் இஸ்ரேலிய படைகளுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கு உதவி புரிந்து வருகிறார்.

இந்த பிற்போக்கு அலைகளுக்கு இடையே, லூலா ஒரு நகைச்சுவைக்குரிய முன்மொழிவை முன்வைத்திருந்தார்: G20 நாடுகளில் உள்ள பில்லியனர்கள் மீது 2 சதவீத சொத்து வரி விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையே அந்த நகைச்சுவைக்குரிய விடயமாகும். இந்த ஆர்-ஆர்-ஆர்-புரட்சிகரக் கோரிக்கையானது, உலகையே அவரது துணிச்சலால் வியப்பில் ஆழ்த்தும் என்றும் எலோன் மஸ்க்கை சுவாசக் காற்றுக்காக மூச்சுத் திணறச் செய்யும் என்றும் இடதுசாரி வாய்வீச்சின் பிரேசிலிய மேஸ்ட்ரோ கற்பனை செய்திருக்கலாம்! ஆனால், இத்திட்டம் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகள், தமது தடுப்பதிகாரத்தைப் பயன்படுத்தியதால், அது நிராகரிக்கப்பட்டு கைவிடப்பட்டது. இந்த பரிதாபகரமான நிகழ்வு முதலாளித்துவ அமைப்புமுறையை எந்த வழியிலும் சீர்திருத்த முடியாது என்பதை மிகச் சாதாரணமாக வெளிப்படுத்திக் காட்டியுள்ளது.

ரியோவில் உள்ள பல்வேறு பெருநிறுவன-கட்டுப்பாட்டிலான அரசியல்வாதிகளின் பிற்போக்குத்தனமான, முற்றிலும் மக்கள் விரோத சூழ்ச்சிகள் முதலாளித்துவ அமைப்புமுறையின் முட்டுச்சந்தை அம்பலப்படுத்துகின்றன. 20 ஆம் நூற்றாண்டில் உலகப் போருக்கு இட்டுச் சென்றதாக மாபெரும் மார்க்சிஸ்டுகள் அடையாளம் கண்ட முரண்பாடுகள் —உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான, மற்றும் சமூகமயப்பட்ட உற்பத்திக்கும் இலாபத்தை தனியார் கையகப்படுத்திக் கொள்வதற்கும் இடையிலான— மீண்டும் அதை ஒரு மரணகரமான நெருக்கடிக்குள் இட்டுச் சென்று கொண்டிருக்கின்றன. உலகப் பொருளாதாரத்தின் மீதான கட்டுப்பாட்டிற்கான ஒரு கடுமையான போராட்டத்தின் மத்தியில், அது உலகப் போர், இனப்படுகொலை மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான பாசிசவாத பிற்போக்குத்தனத்திற்குள் முன்பினும் ஆழமாக முதலாளித்துவம் மூழ்கி வருகிறது.

முதலாளித்துவ அரசாங்கங்களுக்கும், பல தசாப்த கால பொருளாதார பூகோளமயமாக்கத்தின் விளைவாக உருவாக்கப்பட்ட பில்லியன் கணக்கான பலமான சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே ஒரு ஆழ்ந்த வர்க்க மோதல் தவிர்க்க முடியாததாகும். ஆனால், இந்த ஒட்டுமொத்த அமைப்புமுறையையும் புரட்சிகரமாக தூக்கிவீசுவதற்கு வெளியே, ஆழமடைந்து வரும் உலகளாவிய போர், இனப்படுகொலை, பாசிசம், காலநிலை மாற்றம் மற்றும் சமூக உருக்குலைவை நிறுத்துவதற்கு தொழிலாளர்களுக்கு எந்த வழியும் கிடைக்கப் போவதில்லை. அவசர சமூக தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான அவசியமான பொருளாதார ஆதாரவளங்கள் முதலாளித்துவ செல்வந்த தட்டுக்கள் மற்றும் சட்டவிரோத முதலாளித்துவ அரசாங்கங்களின் கரங்களில் இருந்து எடுக்கப்பட்டு, சோசலிசத்திற்கான ஒரு போராட்டத்தில் சர்வதேச அளவில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.