முன்னோக்கு

இலங்கையில் ஜே.வி.பி./தே.ம.ச. அரசின் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம், சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்கு எதிராகப் போராட, அரசியல் ரீதியாக ஒன்றுதிரளுமாறு இலங்கையில் உள்ள தொழிலாளர் வர்க்கத்துக்கு சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) அழைப்பு விடுக்கின்றது.

பெப்ரவரி 17 அன்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட 2025 வரவு-செலவுத் திட்டம், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் சமூக நிலைமைகளுக்கும் வாழ்க்கை நிலைமைகளுக்கும் எதிரான போரை மேலும் தீவிரப்படுத்துகிறது. இந்த வரவு-செலவுத் திட்டம், சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ இயக்குநர்களின் கண்காணிப்பின் கீழ் தயாரிக்கப்பட்டதாகும்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தனது வரவு செலவுத் திட்ட உரையை ஆற்றியபோது [Photo: X/Anura Kumara Dissanayake] [Photo: X/Anura Kumara Dissanayake]

திசாநாயக்க, சர்வதேச மூலதனத்துக்கும் பெருவணிகத்துக்கும், சிக்கன திட்டத்திற்கும் தனது முழுமையான அர்ப்பணிப்பை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தினார். நிவாரணம் கிடைக்கும் வகையில் சிக்கன திட்டத்தை பற்றி மீண்டும் பேச்சுவார்தை நடத்துவதாக, அவர் உழைக்கும் மக்களுக்கு பொய் கூறினார். அவர் சர்வதேச நாணய நிதியம் மற்றும் பெரும் வர்த்தகர்களின் திட்ட நிரலை நிறைவேற்றத் தொடங்கியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம், பிரதானமாக, 2022 இல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் போது, கொழும்பு அரசாங்கத்தினால் செலுத்தாமல் விட்ட வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்காக மக்களிடமிருந்து பணத்தை கறந்தெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

புதிய தாக்குதல்கள் என்ன?

* வரவு-செலவுத் திட்டத்தில், அரச ஊழியர்களுக்கு ஒரு சிறிய ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ள அதேவேளை, அவர்களுக்கான கொடுப்பனவுகள் வெட்டித் தள்ளப்பட்டுள்ளன. உண்மையான ஊதியங்கள் சரிந்து வரும் நிலையில், கடந்த கால போராட்டங்களில் வென்றெடுக்கப்பட்ட இந்த கொடுப்பனவுகள், வாழ்க்கை நிலைமைகளை பராமரிப்பதற்கான வருமான உதவியாக இருந்து வந்துள்ளன. சொத்து மீதான வரி விதிப்புகள் போன்ற பிற நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு அமுல்படுத்தப்படும்.

* அரசக்கு சொந்தமான நிறுவனங்கள் உட்பட, அரசதுறையை மறுசீரமைப்பதற்காக, ஒரு அரச உரிமை நிறுவனம் (State Holding Company) நிறுவப்படும். இது அரச-தனியார் உரிமை நிறுவனங்களை உருவாக்கவும் தனியார்மயமாக்கலுக்கும் வழிவகுக்கும். சர்வதேச முதலீட்டாளர்கள் தொழிலாளர்கைளயும் ஏனைய வளங்களையும் சுரண்டி இலாபம் ஈட்டுவதன் பேரில் அரசதுறையை கலைக்க வேண்டும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் பிரதான கோரிக்கையாகும். இந்த திட்டம், அரை மில்லியனுக்கும் அதிகமான தொழில்களை அழித்து, ஊதியங்களை வெட்டி, சுரண்டலை தீவிரப்படுத்தி, தொழிலாளர்களை மேலும் வறுமைக்குள் தள்ளும்.

* மலிவு ஊதியத் தொழிலாளர் தளங்களை விரிவுபடுத்தும் வகையில் தொழில்துறை வலயங்கள் நிறுவப்படும். முதலீட்டாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக ஒரு 'முதலீட்டாளர் பாதுகாப்பு மசோதா' நிறைவேற்றப்படும்.

தொழிலாளர்கள் போராட்டங்களுக்கு முன்வரும் நிலையில், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் போராட்டங்களை நாசம்செய்யத் தொடங்கியுள்ளன

வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் அறிவித்த தாக்குதல்களுக்கு எதிராக அரசாங்கத் துறையின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் தொடங்கியுள்ளன.

27 பெப்ரவரி 2025 அன்று வரவு=செலவுத் திட்ட வெட்டுக்களுக்கு எதிராக மாத்தறை பொது மருத்துவமனையில் தாதிமார் போராட்டம் நடத்திய போது

கடந்த வாரம், சுமார் 13,000 பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் மதிய உணவு நேரத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் துணை மருத்துவ குழுவினர் உட்பட சுமார் 100,000 சுகாதார ஊழியர்கள், தங்கள் கொடுப்பனவுகளை வெட்டுவதற்கு எதிராகப் போராட்டங்களுக்கு வர முயன்றனர். அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) மற்றும் சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பும் (HUTA) ஒரு நாள் மட்டுப்படுத்தப்பட்ட வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்த போதிலும், ஒரு வாரம் காத்திருக்குமாறு அரசாங்கம் விடுத்த வேண்டுகோளை ஏற்று நடவடிக்கைகளை கைவிட்டன.

நாட்டின் 'பொருளாதார மீட்சிக்குத்' 'தொழிலாளர் அமைதியின்மை' தடையாக இருக்குமென சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுத் தலைவர் பீட்டர் ப்ரூவரின் எச்சரிக்கைக்கு அவர்கள் தலைவணங்கினர். தொழிலாளர்களின் நடவடிக்கைகளை துரோகத்தனமாக கைவிடப்பட்ட பின்னர், இந்த தொழிற்சங்கத் தலைவர்கள் இப்போது அரசாங்கம் எதுவுமே வழங்கவில்லை என்று புலம்புகின்றனர்!

தபால் தொழிற்சங்கத் தலைவர்களும், இதேபோன்ற வெட்டுக்கள் மற்றும் ஊதிய முரண்பாடுகளை சரிசெய்யக் கோரி, மார்ச் 17, 18 ஆகிய திகதிகளில் ஆர்ப்பாட்டங்களுக்கும் இரண்டு நாள் அடையாள வேலைநிறுத்தத்துக்கும் அழைப்புவிடுத்துள்ளனர். ஆனால், இந்த நடவடிக்கைகள், அரசாங்கத்துக்கு வீணான வேண்டுகோள்களை மட்டுமே முன்வைப்பதாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக ஊழியர்களின் சம்பளம் மற்றும் உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக, 4 மார்ச் 2025 அன்று மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் முன் கல்விசாரா ஊழியர்கள் மறியல் போராட்டம் நடத்தியபோது

தொழிலாளர்கள் மத்தியில் கோபம் அதிகரித்து வரும் நிலையில், தொழிற்சங்க தலைவர்கள் இந்த நடவடிக்கைகளை அறிவிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். அவர்கள், அரசாங்கத்துக்கு பயனற்ற வேண்டுகோள்களை முன்வைத்து, வெகுஜன எதிர்ப்பை கட்டுப்படுத்தவும் தடம்புரட்டவும் முயற்சிக்கின்றனர். ஜே.வி.பி. தொழிற்சங்க அதிகாரிகள், எந்த போராட்ட நடவடிக்கையையும் எதிர்ப்பதாக வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.

தொழிலாளர்கள் இத்தகைய தொழிற்சங்க அமைப்புகளை நம்பியிருக்காமல், தங்கள் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கான போராட்டத்தை முன்னெடுப்பது அவசியம், என சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) வலியுறுத்துகிறது. ஒவ்வொரு வேலைத் தளத்திலும், பெருந்தோட்டங்களிலும் மற்றும் ஏனைய பிரதான பொருளாதார மையங்களிலும் தொழிலாளர்களால் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதன் மூலம் மட்டுமே இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க முடியும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் தொழிற்சங்க அதிகாரத்துவம் என்ன செய்தது?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியம் பரிந்துரைத்த கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தத் தொடங்கியபோது, இலட்சக் கணக்கான தொழிலாளர்கள், ஊதிய உயர்வும் ஓய்வூதியமும் கோரியும், அதிக வேலைச் சுமையைக் குறைக்க கோரியும், அவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பல்வேறு வரிகளையும் தனியார்மயமாக்கும் முயற்சிகளையும் எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட்டனர். 2022 ஆம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சியின் போது தொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கொடூரமான நிலைமைகளுக்கு மேலதிகமாகவே இந்தக் கடுமையான தாக்குதல்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.

சுகாதாரத் தொழிற்சங்க கூட்டமைப்பு, தபால் மற்றும் தொலைத்தொடர்பு சங்கங்கள், துறைமுக தொழிற்சங்கங்கள், புகையிரத தொழிற்சங்கங்கள், இலங்கை மின்சார சபை தொழிற்சங்க கூட்டமைப்பு போன்றவை உட்பட தொழிற்சங்க எந்திரங்கள், அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதன் பக்கம் போராட்டங்களை தடம்புரளச் செய்தன. அரசாங்கம் கோரிக்கைகளை நிராகரித்ததுடன் கொடூரமான அத்தியாவசிய சேவைகள் சட்டங்களைப் பயன்படுத்தியதுடன் போராட்டங்களை அடக்க பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படைகளை அணிதிரட்டியது.

கடந்த ஆண்டின் நடுப்பகுதியில், ஜனாதிபதி தேர்தலும் பொதுத் தேர்தலும் அறிவிக்கப்பட்ட போது, தொழிற்சங்கங்கள் அவை சார்ந்திருக்கும் ஜே.வி.பி./தே.ம.ச. மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) உட்பட முதலாளித்துவ கட்சிகளின் பக்கம் அணிசேர்ந்து கொண்டு, தொழிலாளர்களின் அனைத்து போராட்ட நடவடிக்கைகளையும் நிறுத்தி, இந்தக் கட்சிகளின் அரசாங்கத்தின் கீழ் சிறந்த எதிர்காலம் கிடைக்கும் என்று கூறின. ஜே.வி.பி./தே.ம.ச. தொழிலாளர் போராட்டங்கள் தங்கள் ஆட்சிக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறி போராட்டங்கள் நடத்துவதை பகிரங்கமாக எதிர்த்தன.

தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் துரோக வகிபாகத்தின் பின்னணியில் இருப்பது என்னவெனில், அவற்றின் முதலாளித்துவ அரசியலும் சர்வதேச நாணய நிதிய கொள்கைகளுக்கான அவற்றின் நேரடி மற்றும் மறைமுக ஆதரவும் ஆகும்.

தொழிலாளர்களின் எந்தவொரு சுயாதீனமான, ஒருங்கிணைந்த போராட்டத்தின் வளர்ச்சியையும் அரசாங்கத்துடனும் சர்வதேச நாணய நிதிய திட்டத்துடனும் மோதலுக்கு வழிவகுக்கும் என்று அஞ்சி அதற்கு எதிராக நின்ற தொழிற்சங்கத் தலைவர்கள், போராட்டங்களை நசுக்க செயல்பட்டனர். அத்தகைய போராட்டத்திலிருந்து வெளிப்படுவது, முதலாளித்துவ வர்க்க ஆட்சியைத் தூக்கியெறியும் அரசியல் பிரச்சினையாகும்.

அவ்வாறு செயற்பட்டதன் மூலம் இந்த தொழிற்சங்கத் தலைவர்கள், விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி, இராஜபக்ஷக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) மற்றும் மைத்திரிபால சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மீதான வெகுஜன அதிருப்தியை சுரண்டிக்கொண்டு ஜே.வி.பி./தே.ம.ச. ஆட்சிக்கு வருவதற்கு உதவினர்.

பெப்ரவரி 27 அன்று, வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்புக்கான வாக்கெடுப்பு நடந்தபோது, ஐக்கிய மக்கள் சக்தி அதை எதிர்த்தது. சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்தக் கட்சி, “பொருளாதாரத்தைக் காப்பாற்றுவதற்காக” சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுமாறு முன்னாள் ஆட்சியை வலியுறுத்தியது. கடந்த இரண்டு ஆண்டுகளில், ஐக்கிய மக்கள் சக்தி, தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்குவதற்காக ஏனைய சங்கங்களுடன் இணைந்து செயல்படுமாறு தனது தொழிற்சங்கத் தலைவர்களுக்கு அறிவுறுத்தியது.

இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய தமிழ் தேசியவாத கட்சிகள், வரவு-செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தன. அதற்குக் காரணம் அவை கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக இருப்பதால் அல்ல. மாறாக, அரசாங்கம் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்குக்கு அதிகாரப் பரவலாக்கல் வேண்டும் என்ற அவற்றின் கோரிக்கைகளை அரசாங்கம் ஆதரிக்காமைக்கான அடையாள எதிர்ப்பாகவே அவ்வாறு செய்தன.

அரசியல் கட்சிகளாகவும் இயங்கும் பெருந்தோட்ட மாவட்டங்களில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியில் உள்ள தொழிற்சங்கங்களும் வேறுபாடின்றி செயற்பட்டு, சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை வெளிப்படையாக ஆதரிக்கின்றன.

அடிப்படையில், பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் முதலாளித்துவத்தைப் பாதுகாப்பதற்கும் வெளிநாட்டு மூலதனத்தை ஆதரிப்பதற்குமான ஒரு வழிமுறையாக, சர்வதேச நாணய நிதியத் திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளன.

உழைக்கும் மக்கள் 2022 ஆம் ஆண்டு வெகுஜன எழுச்சியிலிருந்து முக்கியமான படிப்பினைகளை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்

கோவிட்-19 தொற்றுநோயால் தீவிரமடைந்த உலகளாவிய பொருளாதார நெருக்கடியாலும், உக்ரைனில் நடந்த அமெரிக்க-நேட்டோ போராலும் 2022 ஆம் ஆண்டில் இலங்கையில் ஆழமான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது.

உணவு, மருந்து மற்றும் எரிபொருள் பற்றாக்குறை, மின்சாரம் மற்றும் போக்குவரத்து இன்மை போன்ற தாங்கமுடியாத நிலைமைகளை எதிர்கொண்டு வெகுஜனங்கள் வீதிக்கு இறங்கினர். தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மரண அமைதியைக் கடைப்பிடித்தனர்.

தொழிலாளர்கள் மத்தியில் கோபம் அதிகரித்தபோது, ஏப்ரல் 28, மே 6 ஆகிய திகதிகளில் மட்டுப்படுத்தப்பட்ட போராட்டங்களுக்கு அவை அழைப்பு விடுத்தன. பல மில்லியன் பேர் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். ஜே.வி.பி/தே.ம.ச. மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியுடனும் சேர்ந்து சூட்சுமத்தைக் கையாண்ட அதிகாரத்துவம், தற்காலிக முதலாளித்துவ ஆட்சிக்கான இந்தக் கட்சிகளின் கோரிக்கைக்கு தொழிலாளர்களை அடிபணிய வைத்தது. போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சி, தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் ஜே.வி.பி./தே.ம.ச. மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் உடந்தையாக இருந்தது. இதன் விளைவாக தொழிலாளர் வர்க்கமும், முழு வெகுஜன எழுச்சியும் காட்டிக்கொடுக்கப்பட்டன. ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ வெட்கமின்றி நாட்டை விட்டு வெளியேறிய போதிலும், அவரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் அமெரிக்க-சார்பு விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்ததுடன் அவர் உடனடியாக சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கனத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

கடந்த வாரம் சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுத் தலைவர் பீட்டர் ப்ரூவர், “அடியில் இன்னும் பாரதூரமான விடயங்கள் அடங்கியுள்ள அதன் கொடூரமான திட்டங்களுக்கு எதிராக இலங்கையில் “தொழிலாளர் அமைதியின்மை ஏற்படும் சாத்தியம்” பற்றி எச்சரித்தார். திசாநாயக்க ஆட்சி, தனக்கு எளிதான பாதை இல்லை என்பதையும், தொழிலாளர்களின் பெரும் எதிர்ப்பை முகம் கொடுக்க வேண்டிவரும் என்பதையும் உணரும். ஜே.வி.பி./தே.ம.ச. விரைவில் ஜனநாயக உரிமைகள் மீது கொடூரமான தாக்குதல்களை நடத்தி, சர்வாதிகார நடவடிக்கைகளை அமல்படுத்துவதை நாடும்.

தொழிலாளர் வர்க்கத்திற்கான வேலைத் திட்டம் என்ன?

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகள், சமூக நிலைமைகள், தொழில்கள் மற்றும் ஓய்வூதியங்களையும் பாதுகாப்பதற்காக பின்வரும் வேலைத் திட்டத்தை முன்மொழிகிறது:

  • தனியார் மற்றும் அரச துறைகளில் உள்ள அனைத்து தொழிலாளர்களும், உண்மையான ஊதியத்தின் சரிவை ஈடுசெய்ய, வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ப அதிகரிக்கும் ஊதிய உயர்வு வேண்டும்! ஓய்வு பெற்றவர்களுக்கும் இதே போன்ற ஓய்வூதிய உயர்வு வேண்டும்!
  • தேயிலைத் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை மற்றும் ஓய்வூதியத்துடன், வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப மாத ஊதியம் வழங்கப்பட வேண்டும்!
  • அரச நிறுவனங்களில் சந்தை-சார்பு மறுசீரமைப்பு வேண்டாம்! அது தவிர்க்க முடியாமல் தொழில்களையும் மற்றும் ஊதியங்களையும் அழித்துவிடும்! அதற்குப் பதிலாக, தொழிலாளர்கள் அனைத்து அரச நிறுவனங்களையும் தொழிலாளர் வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர போராட வேண்டும்!
  • அளவுக்கு மீறிய பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் ஏனைய வரிகளையும் நீக்கி, உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை உடனடியாகக் குறைக்க வேண்டும்!
  • சுமார் 40,000 வேலையில்லா பட்டதாரிகளுக்கும் ஏனைய தொழிலற்றவர்களுக்கும் சிறந்த ஊதியத்துடன் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும்!
  • அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் தள்ளுபடி செய்! இந்த நிதிகளை சமூக நலத்திட்டங்களை மேம்படுத்தவும், இலவசக் கல்வி மற்றும் சுகாதார சேவைகளை விரிவுபடுத்தவும் பயன்படுத்த வேண்டும்!
  • உற்பத்தி மற்றும் விநியோகத்தை தொழிலாளர்களுக்கும் ஏழைகளுக்கும் பயனளிக்கக் கூடியவாறு மறுசீரமைக்க, அனைத்து வங்கிகள், பெரிய நிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்டங்களை தொழிலாளர்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் வைக்குமாறு தொழிலாளர்கள் அழைப்பு விடுக்க வேண்டும்! தற்போது பொருளாதாரம் ஒரு சிலரின் இலாபத்திற்காகவே இயங்குகிறது.
  • சமூகத் திட்டங்களை மேம்படுத்துவதற்கு, சிறு எண்ணிக்கையிலான செல்வந்தர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்!
  • கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டம் (PTA), அவசரகாலச் சட்டம், அத்தியாவசிய சேவைகள் சட்டம் போன்ற அனைத்து அடக்குமுறை சட்டங்களையும் ஒழிக்க வேண்டும்!

தொழிற்சங்க அதிகாரத்துவம், முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அவற்றின் ஆதரவாளர்களை அனுமதிக்காமல், தொழிலாளர்கள் தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புவதன் மூலம் போராடுவதற்கு தங்கள் தொழில்துறை மற்றும் அரசியல் பலத்தை அணிதிரட்ட முடியும்.

முதலாளித்துவ அமைப்புக்குள் அல்லது தேசிய எல்லைகளுக்குள் தொழிலாள வர்க்கத்தினருக்கும் கிராமப்புற ஏழைகளுக்கும் எந்தத் தீர்வும் கிடையாது.

சோசலிச சமத்துவக் கட்சி, வேலைத் தளங்கள் கிராமப்புறங்களில் கட்டியெழுப்பப்பட்ட நடவடிக்கைக் குழுக்களிலிருந்து ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை ஒன்று திரட்டி, தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டைக் கூட்டுவதற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த மாநாட்டில் சோசலிசக் கொள்கைகளுக்கான மற்றும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகப் போராடுவதற்கான ஒரு வேலைத்திட்டத்தைப் பற்றி கலந்துரையாட முடியும், கலந்துரையாட வேண்டும்.

இலங்கை தொழிலாள வர்க்கம் வெறுமனே ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்திற்கும் நாட்டில் உள்ள முதலாளித்துவ வர்க்கத்திற்கும் எதிராக மட்டும் போராடவில்லை. அவர்கள் சர்வதேச நிதி மூலதனத்திற்கும் அதன் நிறுவனங்களுக்கும் எதிராகப் போராடுகிறார்கள். இலங்கை உயரடுக்கு இந்த நிறுவனங்களின் கைக்கூலிகள் ஆகும்.

கென்யா மற்றும் ஸிம்பாப்வே போன்ற பல நாடுகளில், தொழிலாளர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். அமெரிக்கா மற்றும் ஏனைய ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் தங்கள் சமூக உரிமைகள் மீதான தாக்குதல்களை எதிர்கொள்வதோடு போராட்டங்களுக்கும் முன்வந்துள்ளனர்.

உலக முதலாளித்துவ சக்திகள் சமூக சமத்துவமின்மையையும் தொற்றுநோய்களையும் பரவவிட்டு, சர்வாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கியும் உலகப் போரை நோக்கியும் மனிதகுலத்தை இழுத்துச் செல்கின்றன. இலங்கைத் தொழிலாளர்கள் தங்கள் சர்வதேச வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஒரு பொதுவான போராட்டத்தில் ஐக்கியப்பட வேண்டும்.

தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் சர்வதேச கூட்டணியில் இணைந்து, அதை சர்வதேச போராட்டங்களுக்கான ஒருங்கிணைப்பு மையமாகக் கட்டியெழுப்ப வேண்டியது, இந்தப் பேரழிவுகளை எதிர்த்துப் போராடுவதற்கான வழியாகும். இந்தப் போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு இலங்கைத் தொழிலாளர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.

மேலும் படிக்க