மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
வெள்ளை மாளிகைக்கு வெளியே ஒரு பேரணியின் பின்னர் அவரது அழைப்பின்படி செயல்பட்ட ஆயிரக்கணக்கான ட்ரம்ப் ஆதரவாளர்கள், புதன்கிழமை பிற்பகல் கேபிடல் கட்டிடத்தை முற்றுகையிட்டு, 2020 ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப்பின் தோல்வியை உறுதிப்படுத்தும் காங்கிரஸ் கூட்டத்தொடரை நிறுத்தினர்.
இது ஒரு ஒருங்கிணைந்த, திட்டமிடப்பட்ட பாசிச கிளர்ச்சியாகும். ட்ரம்ப் ஆதரவாளர்கள் கேபிட்டலுக்கு வெளியே பொலிஸ் தடுப்புக்காவலை கடந்து, கடுமையான எதிர்ப்பு எதுவும் இல்லாமல் கட்டிடத்திற்குள் நுழைந்தனர். காங்கிரஸைக் கைப்பற்றும் முயற்சியை எதிர்கொள்ளும் போது காவல்துறையின் செயலற்ற தன்மையை கடந்த ஜூன் மாதம் பொலிஸ் மற்றும் தேசிய பாதுகாப்புப் படைகள் பொலிஸ் எதிர்ப்பு வன்முறை எதிர்ப்பாளர்கள் மீது நடத்திய பாரிய தாக்குதலுடன் கட்டாயம் ஒப்பிட்டுபார்க்க வேண்டும்.
இதற்கு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோசப் பைடென் மற்றும் ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்சி காட்டிய பிரதிபலிப்பு அரசியல் ரீதியாக முதுகெலும்பற்றதாகும். ட்ரம்ப்பை உடனடியாக பதவியில் இருந்து நீக்குவதற்கும், அவரை கைது செய்வதற்கும், குடியரசுக் கட்சி செனட்டர்கள் மற்றும் அவரது அரசியல் சதித்திட்டத்திற்கு உதவிய அனைத்து காங்கிரஸ்காரர்களையும் தடுப்புக்காவலில் வைக்க வேண்டும் என்று அழைப்பதற்கு பதிலாக, பைடென் ட்ரம்பை "எழுந்து" தேசிய தொலைக்காட்சியில் தோன்றுமாறு அழைத்தார்.
ஒரு சதித்திட்டத்தை தீவிரமாக நிறுத்துவதற்கு விரும்பும் எவரும் அதன் தலைமை சதிகாரரை நாடு தழுவிய நூற்றுக்கணக்கான மில்லியன் பார்வையாளர்களுக்கு உரையாற்றுமாறு வற்புறுத்தமாட்டார்கள்.
இந்த பிரதிபலிப்பு பரிதாபத்தை விட மோசமானது. இது குற்றவியல் தன்மையுடன் பொறுப்பற்றதுமாகும். தேர்தல் முடிவுகளை உறுதிப்படுத்துவதை அடக்குவதற்கான ஒரு பாசிச முயற்சியின் மத்தியில், பைடென் அதன் முடிவை தலைமை சதிகாரனின் கைகளில் விட்டுவிடுகிறார்.
எந்தவொரு முன்னணி ஜனநாயகக் கட்சியினரும் பாசிச கிளர்ச்சியாளர்களைத் தடுக்குமாறு பொதுமக்களிடம் ஒரு பகிரங்க அறிக்கையை வெளியிடாமல் மணிநேரங்கள் கடந்துவிட்டன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பைடெனிடம் 7 மில்லியன் வாக்குகள் வித்தியாசத்திலும், தேர்தல் கல்லூரியில் 306-232 என்ற வித்தியாசத்திலும் தோல்வியடைந்த நவம்பர் 3 தேர்தலின் சட்டபூர்வத்தன்மை மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் மூலம் இந்த பாசிச சதித்திட்டத்திற்கு ட்ரம்ப் தயாராகிக்கொண்டிருந்தார். இன்று ஒரு கூட்டு அமர்வில் பைடெனின் வெற்றியை உறுதிப்படுத்தவதை தடுக்கும் முயற்சியாக அவர் காங்கிரசில் குடியரசுக் கட்சியினரிடையே ஆதரவைத் திரட்டினார். பின்னர் புதன்கிழமை கூடியிருந்தோரின் முன் கேபிடல் மீதான தாக்குதலை நேரடியாக ஊக்குவித்தார்.
நேரடியாக வன்முறை தூண்டுவதற்கு நிகரான கருத்துக்களுடன், ட்ரம்ப் கூறுகையில், வாஷிங்டனில் அரசியல் நெருக்கடி இப்போது வெறுமனே [குற்றஞ்சாட்டப்படும்] தேர்தல் மோசடி விசயம் அல்ல, மாறாக "தேசிய பாதுகாப்பு, மற்றும் பொருத்தமான வெவ்வேறு சட்டவிதிகள்" சம்பந்தப்பட்டதாகும் என்றார். அவரது அட்டார்னி ரூடி கிலானியின் கருத்தை அவர் எதிரொலிக்கிறார், அதாவது இந்த அரசியல் மோதலானது ஒரு "மோதல் வழிமுறைகளில்" தான் தீர்க்கப்படும் என்று அதே கூட்டத்தில் கிலானி கூறியிருந்தார்.
இந்த தாக்குதல் அதன் உடனடி நோக்கத்தை நிறைவேற்றி உள்ளது, அதாவது ஜனாதிபதி தேர்தல் முடிவுகளைச் சான்றளிப்பதை நிறுத்தி உள்ளது. அந்த நோக்கத்திற்காக கூட்டப்பட்ட காங்கிரஸ் சபையின் கூட்டு அமர்வு, பெயர் வரிசை கிரமமாக மாநிலங்கள் மாற்றி மாற்றி சென்று கொண்டிருந்த போது, பைடெனுக்கான அரிசோனாவின் 11 தேர்வுக் குழு வாக்குகளுக்குச் சான்றளிக்க குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர்களும் செனட்டர்களும் மறுத்த போது அம்மாநிலத்தோடு நிறுத்தப்பட்டது.
வாஷிங்டன் சம்பவங்கள், சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தளம் மீண்டும் மீண்டும் அறிவித்த எச்சரிக்கைகளை முற்றிலுமாக உறுதிப்படுத்தி உள்ளன. தேர்தல் ட்ரம்புக்கு எதிராக சென்றால் ட்ரம்பும் அவர் சக-சதிகாரர்களும் அதை செல்லாததாக்க வன்முறையில் தஞ்சம் அடைவார்கள் என்பது பல மாதங்களாகவே வெளிப்படையாக இருந்துள்ளது.
கடந்த செப்டம்பரில் முதல் தேர்தல் விவாதத்தைத் தொடர்ந்து, உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு கூறியது:
அரசியல் யதார்த்தம் பெருநிறுவன-நிதியியல் செல்வந்த தட்டுக்களின் அடுக்கடுக்கான எண்ணற்ற வஞ்சக பிரச்சாரத்தினால் வெடித்து சிதறி, ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்கவும் அரசியலைப்புரீதியில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஜனநாயக உரிமைகளை நசுக்கவும், மிகவும் முன்னேறிய சூழ்ச்சியினது அரசியல் நரம்பு மண்டலத்தின் மையமாக வெள்ளை மாளிகை உள்ளது என்ற மறுக்க முடியாத உண்மையை அம்பலப்படுத்தி உள்ளது.
புதன்கிழமை காலை வெளியிடப்பட்ட அறிக்கையில், உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு எச்சரித்தது:
அமெரிக்க காங்கிரஸ் சபை உத்தியோகபூர்வமாக 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்களின் தேர்வுக்குழு வாக்குகளை எண்ணுவதற்காக இன்று ஒன்றுகூடுகிறது. வழமையான நிலைமைகளில், இந்த நிகழ்முறை ஒரு சம்பிரதாயமாக இருக்கும். ஆனால் இன்றைய வாக்கு எண்ணிக்கையோ, தேர்தல் முடிவுகளை ஒன்றுமில்லாததாக ஆக்கி ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்க ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை நடத்துவதற்கான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் செயலூக்கமான தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் முயற்சியின் நிலைமைகளின் கீழ் நடக்கிறது.
இப்போது இந்த எச்சரிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அனைத்து உழைக்கும் மக்களும் இளைஞர்களும் உரிய அரசியல் தீர்மானங்களை எடுக்க வேண்டியது தவிர்க்க முடியாத கட்டாயமாகி உள்ளது.
தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியில் அணித்திரட்டுவதன் மூலமாக மட்டுமே ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு சாத்தியமாகும். வேலைநிறுத்த நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க ஆலைகளிலும், வேலையிடங்களிலும் மற்றும் அண்டை பகுதிகளிலும் சாமானிய தொழிலாளர் குழுக்களையும் மற்றும் ஒரு வலதுசாரி சர்வாதிகாரம் அமைப்பதற்கான முயற்சிகளை எதிர்க்கும் மக்களின் ஏனைய எதிர்ப்பு வடிவங்களையும் உருவாக்குவதன் மூலமாக இந்த பாசிசவாத குண்டர்களின் சூழ்ச்சிகள் எதிர்க்கப்பட வேண்டும்.