இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
“அதிதீவிரவாதக் கருத்துக்களைக் கொண்ட கவிதை புத்தகத்தை எழுதியமை”' மற்றும் “சிறுவர்களுக்கு தீவிரவாதக் கருத்துக்களைக் கற்பித்தமை” போன்ற பொய்யான குற்றச்சாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளம் கவிஞர் அஹ்னப் ஜஸீம், பொலிசாரால் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. அவர் கடந்த ஆண்டு மே 16ல் கைது செய்யப்பட்டார்.
கவிஞர், வேட்டையாடப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அன்றைய தினம் போலி-இடது முன்னிலை சோசலிஸ்ட் கட்சி (மு.சோ.க.) தலைமையில் ஒரு இணையவழி கூட்டம் நடைபெற்றது. இதில் பின் நவீனத்துவவாதிகள் மற்றும் முதலாளித்துவ சார்பு அமைப்புகளின் பேச்சாளர்களும் பங்குபற்றி இருந்தனர்.
அஹ்னப்பின் விடுதலையில் ஆர்வமுள்ள அவரது தந்தை உட்பட குடும்ப உறுப்பினர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இளைஞர்களுமாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த கலந்துரையாடலில் இணைந்திருந்தனர். எனினும், பேச்சாளர்களின் உரைகளின் வெளிப்பாடுகள், “சமுதாயத்தில்” வேரூன்றியுள்ளதாக அவர்களால் கூறப்படும் “முஸ்லீம்-விரோத உணர்வு” காரணமாக, கவிஞர் அஹ்னப்பை விடுவிக்க தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களை வழிநடத்தி ஒரு போராட்டத்தை நடத்த முடியாதுள்ளது என்ற போலி வாதங்களை பின்னுவதாகவே இருந்தது.
முன்னாள் மு.சோ.க. தலைவரான சந்தன சிரிமல்வத்த, கூட்டத்திற்கு தலைமை தாங்கியதோடு, மு.சோ.க. கல்விச் செயலாளர் புபுது ஜயகொட, அத்த செய்தித்தாள் எழுத்தாளர் சந்துன் பிரியங்கர விதானகே, சமூக ஊடக ஆர்வலர் ரம்சி ரசிக் மற்றும் பின் நவீனத்துவ ப்ரக்ஸிஸ் குழுவின் விதர்ஷன கன்னங்கர ஆகியோர் உரையாற்றினர்.
அஹ்னப்பை தடுத்து வைத்திருப்பதானது இராஜபக்ஷ அரசாங்கம் இனவாதத்தை கிளறிவிடுவதற்கும் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக முன்னெடுக்கும் தொடர்ச்சியான தாக்குதலின் ஒரு பகுதியாகும். இது, கொவிட்-19 தொற்றுநோயால் ஆழப்படுத்தப்பட்டுள்ள நெருக்கடியின் சுமையை வெகுஜனங்கள் மீது சுமத்துவதற்கு எதிராக வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டங்களை, இன ரீதியாகப் பிரித்து, நசுக்குவதன் மூலம், ஒரு எதேச்சதிகார ஆட்சியை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை, மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
கூட்டத்தில் உரையாற்றியவர்கள், இந்த தாக்குதலின் உண்மையான வர்க்க வேர்களை மூடி மறைத்தனர். நாட்டில், சிங்கள-பௌத்த இனவாதத்தை தூண்டிவிட்டு முன்னெடுக்கப்படுகின்ற கொடூரமான, அடக்குமுறை ஆட்சிக்கு நேரடியாகப் பொறுப்புக் கூற வேண்டிய இலங்கையின் ஆளும் வர்க்கத்தை பொறுப்பில் இருந்து விடுவித்துவிடுவதற்கும் மற்றும் இனவாதத்தை தூண்டும் பொறுப்பை பொது மக்கள் மீது சுமத்துவதற்கும் பல்வேறு வாதங்களை முன்வைத்தனர்.
'அஹ்னப் புதிய கலைஞராக இருப்பதாலும் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பதாலும்' அவரின் கைதக்கு எதிரான வலுவான ஆட்சேபனையை கட்டியெழுப்ப முடியாமால் போனது, என அத்த செய்தித்தாளின் விதானகே கூறினார்.
தற்போதைய அரசாங்கத்தின் பங்காளியாக இருந்து அதன் அடக்குமுறைக்கு உடந்தையாக இருக்கும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் அத்த பத்திரிகையில் கிறுக்குபவர்கள், அவ்வாறு கூறிக்கொண்டு, அஹ்னப்பின் விடுதலை பிரச்சாரத்தை நாசப்படுத்த முன்வந்ததில் ஆச்சரியமில்லை. இந்தக் கட்சி, தமிழ் மற்றும் முஸ்லீம் விரோத ஆத்திரமூட்டல்களுக்கு முண்டு கொடுத்து, சிங்கள இனவாதத்தை தூண்டிவிட்டு, 26 ஆண்டுகால தமிழர்-விரோத போருக்கு ஆதரவளித்த வரலாற்றை கொண்டுள்ளது.
இந்த தாக்குதல்களைத் தோற்கடிக்க வேண்டுமெனில், 'பேச்சு சுதந்திரம் தொடர்பாக, சட்டத்தில் இருக்கின்ற நியாயம் கிடைக்க வேண்டும்' என்ற அடிப்படையில் அனைவரும் ஒன்றுபடுவது அவசியம்” என்று கன்னங்கரா கூறினார். சட்டத்தின்படி நியாயத்தை தேடும் வரையறைக்குள் பிரச்சாரத்தை மட்டுப்படுத்துவதே அவரது முன்மொழிவு ஆகும்.
இந்த கருத்துக்களை ஏற்றுக்கொண்ட புபுது ஜயகொட, முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தையும் அதன் அரசாங்கங்களையும் பாதுகாப்பதற்காக கபடத்தனமான வாதங்களை முன்வைத்தார். 'பல்வேறு அரசாங்கங்கள் செய்கின்றவற்றை விட பாரதூரமான இனவாத சாத்தியக்கூறுகள் சமூகத்தில் வளர்ந்து முற்றி வருகின்றது, இது மிகவும் அழிவுகரமானது' என்று அவர் கூறினார்.
“அரசாங்கங்களுக்கு கூட, தேவையான போது தூக்கிப் பிடிக்கக் கூடிய [இனவாதம் என்ற] விஷப் பாம்பு சமுதாயத்தில் இருக்கின்றது, இது நீண்ட காலமாக சமூகத்தில் வேரூன்றியுள்ளது... அஹ்னப் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் போது, அதற்கு எதிர்ப்பு காட்ட முடியாதளவு ஒரு சமூக ஒருமைப்பாடு உள்ளது,' என்று அவர் கூறினார்.
அவர் கூறுவதைப் போல், இனவாதத்தில் இறுகிப் போயுள்ள 'ஒன்றிணைவைக்' கொண்ட ஒரு சமூகமே இருக்கின்றது என்றால், அஹ்னப்பை விடுவிக்குமாறு ஆட்சியாளர்களிடம் மன்றாடுவதைத் தவிர வேறு எந்தப் போராட்டத்தையும் நடத்துவதற்கு அடித்தளமே கிடையாது. ஜயகொடவின் கூற்றுப்படி, ஆளும் வர்க்கமும் அதன் அரசாங்கங்களும், அவை வளர்த்துவிடும் பேரினவாத பாசிச கும்பல்களும், இனவாதத்தை ஈவிரக்கமின்றி பரப்புவதற்கு பொறுப்புச் சொல்ல வேண்டியதில்லை. இனவாத்ததை கிளறிவிட்டு அரசாங்கமும் ஆளும் வர்க்கமும் முன்னெடுக்கும் தாக்குதல்களுக்கு 'சமூகமே' பொறுப்புச் சொல்ல வேண்டும். மற்றும்
சமூகத்தில் இனவாதம் இயல்பாகவே வேரூன்றி 'பாம்புபோல' தலை தூக்குகின்றது.... என்ற வாதத்தை முன்வைப்பதன் மூலம், முதலாளித்துவ அரசாங்கங்கத்தினால் இலங்கையிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தை இன ரீதியில் பிளவுபடுத்தி அவர்களின் வர்க்க சக்தியை பலவீனப்படுத்துவதற்கும் வரலாறு முழுவதும் நடைமுறைப்படுத்தியுள்ள முடிவில்லாத பிற்போக்கு தாக்குதல்களை, அவர் வேண்டுமென்றே மூடி மறைக்கிறார்.
'அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கு அப்பால், அத்தகைய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கத்திற்கு தைரியம் தரும் சமூக தளத்தை தோற்கடிப்பதற்கே செயற்பட வேண்டும்,' என்பதே ஜயகொடவின் இறுதி முடிவு ஆகும்.
அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக போராட்டத்துக்கு வரும் உழைக்கும் மக்களைப் பார்த்து, 'ஜனநாயக விரோத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாக' கூறுவது போன்ற இழிவான அவதூறு வேறெதுவும் உண்டா? முன்நிலை சோசலிச கட்சியின் தலைவர்களின் கருத்துக்களை கவனமாக வாசியுங்கள்: அவர்கள் இலங்கையின் கடந்த அரசாங்கங்களினதும் தற்போதைய கோட்டாபய அரசாங்கத்தினதும் ரத்தத் கறைகளை கழுவி பாதுகாக்க முன்வந்துள்ளனர்.
இவ்வாறு பொதுமக்களை குற்றம் சாட்டும் நடவடிக்கையை மு.சோ.க. தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது. கோடாபய இராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததும், அதற்கு வழி வகுத்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), மு.சோ.க. உட்பட இடதுகளும் சில கல்வியாளர்களும் சிங்கள இனவெறியில் மூழ்கியிருந்த மக்களே அவரை தேர்ந்தெடுத்ததாக கூச்சலிட்டனர்.
இலங்கை முதலாளித்துவ வர்க்கத்தின் இனவதா வரலாற்றில் இருந்து
சோசலிஸ்டுகள், முதலாளித்துவத்துக்கு சேவை செய்யும் இந்த குதர்க்கவாதம் அனைத்தையும் நிராகரிக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட வரலாற்று சூழலிலும், ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினதும், அதாவது முதலாளித்துவத்தின் தேவைகளுக்காகவே இலங்கையில் சிங்கள பேரினவாதம் முன்னிலைக்கு கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டது.
இலங்கை முதலாளித்துவ வர்க்கம், அதன் ஆரம்பத்திலிருந்தே, சிங்கள-பௌத்த இனவாதத்தை தோளில் சுமந்துகொண்டது. அன்று முதல் இன்று வரை அவர்கள் தமது பிரதான அரசியல் ஆயுதமாக அதைப் பயன்டுத்தி வந்துள்ளனர். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களுக்கு ஒத்தாசை புரிந்து, தலை தூக்கி வந்த சிங்கள நில உரிமையாளர்கள், வணிகர்கள் உட்பட்ட பகுதியினர், தாம் இழந்துவிட்ட சலுகைகள் குறித்து வருந்திக்கொண்டிருந்தனர். அவர்கள், பௌத்த ஸ்தாபனத்தின் மூலவர்களுடன் இணைந்து, ஒரு 'பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்திற்கு' அனுசரணை வழங்கினார்கள். அவர்களின் முன்னணி கருத்தியல் ஆசிரியராக இருந்த அனகாரிக தர்மபால, சிங்களவர்கள் ஒரு 'தனித்துவமான இனம்' என்ற கட்டுக்கதையை அவிழ்த்துவிட்டார்.
பிரிட்டன் காலனித்துவ ஆட்சியாளர்களை விமர்சித்த போதிலும், வளர்ந்து வரும் முதலாளி வர்க்கத்தினதும் அவர்களின் கருத்தியல் குருக்களினதும் முதன்மை இலக்காக, இந்திய மற்றும் முஸ்லிம் வணிகர்களுமே இருந்தனர்.
தர்மபாலவினால் நடத்தப்பட்டு வந்த சிங்கள-பௌத்தர் பத்திரிகையில், 1912 இல் வெளியிடப்பட்ட இதழில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பின்வருமாறு கட்டவிழ்த்துவிடப்பட்டு இருந்தது. 'இந்த நாட்டில், வெளிநாட்டு வெள்ளையர்கள் காலடி வைத்த நாளிலிருந்தே, சிங்களவர்களின் தொழில்துறை மற்றும் பழக்கவழக்கங்கள் அழிந்து போனதோடு, இப்போது சிங்களவர்களுக்கு கடலோர துலுக்கர் (முஸ்லிம்களுக்கும்) மற்றும் தமிழர்களுக்கு முன்பாக மண்டியிட வேண்டியுள்ளது.' இந்த இனப் பதட்டங்களைத் தூண்டுவதன் விளைவுகளில் ஒன்று, 1915 இல் செல்வந்த சிங்களவர்களால் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட் இரத்தக்களரி குண்டர் தாக்குதல் இயக்கமாகும்.
1919 இல் நிறுவப்பட்ட, இலங்கை முதலாளிகளின் இயக்கமான, இலங்கை தேசிய காங்கிரஸ், தீவின் தமிழ் மற்றும் முஸ்லீம் சிறுபான்மையினருக்கு விரோதமான சிங்கள உயரடுக்கின் பௌத்த மறுமலர்ச்சியையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. இந்த விரோதங்களின் விளைவாக, தமிழ் மற்றும் முஸ்லீம் உயரடுக்கினர் தங்கள் சொந்த ஏகாதிபத்திய சார்பு கொள்கைகளுடன் இலங்கை தேசிய காங்கிரசிலிருந்து பிரிந்து சென்றனர்.
இலங்கை முதலாளித்துவவாதிகளின் எதிர்ப்பானது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அல்ல, மாறாக, தங்களுக்கு முனால் வளர்ந்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் உட்பட தொழிலாள வர்க்கத்திற்கு விரோதமானதாகவே இருந்தது. சிதைந்து போன ஏ.இ குணசிங்க தலைமையிலான இலங்கை தொழிலாளர் கட்சி, 1930களில் இந்தியத் தொழிலாளர்களுக்கு எதிராக இனவெறியைத் தூண்டுவதும், சிங்கள உயரடுக்கின் முன்னணி நபராக தலைதூக்கிய S.W..R.D. பண்டாரநாயக்க, சிங்கள பெரும்பான்மை மக்களை, ஒரு தெளிவான இனவாத மற்றும் மத அடிப்படையில் ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்ட. சிங்கள மகா சபையை 1936 ஆம் ஆண்டில் ஸ்தாபித்தார், இது, முதலாளித்துவத்தின் இனவாத விரிவாக்கத்தை முன்னேற்றுவதற்கான மற்றொரு படியாகும்.
பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்கள், தங்கள் மேலாதிக்கத்தை பாதுகாத்துக்கொள்வதற்காக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் முதலாளித்துவ குழுக்களுடன் சேர்ந்து, சூழ்ச்சிகளைச் செய்து, மக்கள் மத்தியில் இனப் பிளவுகளை ஆழப்படுத்தவும், தொழிலாளர்களை பிளவுபடுத்துவதை தீவிரப்படுத்தவும் அதைப் பயன்படுத்தினர்.
1948 ஆம் ஆண்டின் சம்பிரதாய சுதந்திரத்திற்குப் பின்னர், காலனித்துவ ஆட்சியாளர்களிடம் இருந்து அதிகாரம் தமது கைகளுக்கு மாற்றப்பட்ட பின்னர், இலங்கையின் பலவீனமான ஆளும் வர்க்கம், தொழிலாள வர்க்கத்தை பலவீனப்படுத்தவும் திசைதிருப்பவும் இனவாத பிரிவினையை வெளிப்படையாகச் செயல்படுத்தும் தீய ஆயுதத்தை கையில் எடுத்துக் கொண்டது.
முதலாவது ஐ.தே.க. அரசாங்கம் இந்த இனவெறி பிளவுகளை புதுப்பித்து, தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் பிரஜா உரிமைகளை ஒழித்தது மற்றும் இனவாத பிளவுகளை புதிய மட்டத்தில் முன்னெடுத்தது. அப்போதிருந்து ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும், அரசியல் நெருக்கடி ஆழமடையும் போதெல்லாம் இனவாத பிளவுபடுத்தலை தீவிரப்படுத்தியதோடு 1983 இல் உள்நாட்டுப் போரின் தீப்பிழம்புகளுள் இலங்கையை மூழ்கடித்தனர்.
கோட்டாபய இராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்த, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் நிர்வாகம், போரை இரத்தக்களரி முடிவுக்கு கொண்டு வந்தது. ஆயினும், ஆளும் வர்க்கம் இனவாத தீயை ஆழப்படுத்துவதையே தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது. இது, பொது பல சேனா போன்ற பாசிச சக்திகளை போசித்து வளர்த்துவிட்டுள்ளது.
2019 ஏப்ரல் 21, ஐ..எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் உதவியுடன் முஸ்லீம் அதிதீவிரவாதிகள் குழு நடத்திய கொலைகார தாக்குதல், ஆளும் வர்க்கத்திற்கு தமது பேரினவாத தீயை மூட்டிவிடுவதற்கு வாய்ப்பாக அமைந்தது. நெருக்கடியில் மூழ்கியிருந்த சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கம் உட்பட ஆளும் வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவினரும் முஸ்லிம்-விரோதத்தை கிளறிவிட்டன. பயங்கரவாத தாக்குதலை சுரண்டிக்கொள்வதன் மூலம் ஆட்சிக்கு வந்த கோடாபய இராஜபக்ஷ, முதலாளித்துவத்தால் கோரப்பட்ட அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காகவும், சர்வாதிகார திட்டங்களை கூர்மைப்படுத்தவும் முஸ்லிம்-விரோத மற்றும் தமிழர்-விரோத பிரச்சாரத்தை பயன்படுத்தினர்.
அஹ்னப் போலவே பல முஸ்லிம் வழக்கறிஞர்கள், ஊடகவியலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கலைஞர்கள் பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பது இந்த பரந்த ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாகும்.
இனவாத தாக்கத்தை பரப்புவதற்கு யார் பொறுப்பு?
தொழிலாளர்கள் உட்பட வெகுஜனங்கள் மத்தியில் இனவாத தாக்கம் இல்லை என்று சோசலிச சமத்துவக் கட்சி கூறவில்லை. ஆனால், அதற்கு யார் பொறுப்பு? முதலாளித்துவம் தனது வர்க்க நலன்களைப் பாதுகாப்பதற்காக, இந்த தீய சித்தாந்தத்தை பரப்புவது மட்டுமல்லாமல், இலங்கையில் போலி-இடது உட்பட பல்வேறு சந்தர்ப்பவாதிகளும் சில தீவிரவாதிகள் மற்றும் தொழிற்சங்கங்களும் இதற்கு உடந்தையாக உள்ளன.
இலங்கையில் ஒரு ட்ரொட்ஸ்கிச கட்சியாக, 1942 இல் ஸ்தாபிக்கப்பட்ட போல்ஷிவிக் லெனினிசக் கட்சியும், 1964 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் அரசாங்கத்தில் நுழைந்துகொண்டு பெரும் காட்டிக்கொடுப்பைச் செய்யும் வரை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என்று கூறிக்கொண்ட லங்கா சம சமாஜ கட்சியும் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காப் போராடி வந்தன. இது தொழிலாள வர்க்கத்தின் வலிமையை பிரமாண்டமான அளவில் மேம்படுத்தியது.
சிங்கள முதலாளித்துவத்தின் நீண்டகால பாகுபாடுகளுக்கு பிரிதிபலித்த தமிழ் மற்றும் முஸ்லீம் முதலாளித்துவம், தங்கள் வர்க்க சலுகைகளை பாதுகாக்க தங்களுடைய இன ரீதியிலான கட்சிகளை உருவாக்கின. கொழும்பு முதலாளித்துவத்தின் தாக்குதல்களை, சிங்கள மக்களுடன் அடையாளம் காட்டி, தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களை சிங்கள தொழிலாளர்களிடமிருந்து பிரிக்க, தமிழ் தேசியவாத கட்சிகள் மேற்கொண்ட நடவடிக்கை, நாட்டில் இனவாத தீயை மேலும் தூண்டிவிட்ட மற்றொரு காரணியாகும்.
ல.ச.ச.க. காட்டிக் கொடுத்ததன் விளைவாக விடுதலைப் புலிகள் உட்பட பிரிவினைவாத இயக்கங்கள் தமிழ் மக்கள் மத்தியில் தோன்றின. அதே வேளை சிங்கள தேசபக்தியைத் தழுவிக்கொண்டு தீவிரவாதத்தினை கலந்து தெற்கில் ஜே.வி.பி. தலை தூக்கியது.
மு.சோ.க. ஆரம்பிக்கபட்ட தினத்திலிருந்தே தொழிலாள வர்க்கத்தையும் பிற மக்களையும் ஆளும் வர்க்கத்தின் பிடியில் சிக்க வைக்க உதவிய பின்னரே, 'சமூகம்' இனவெறியில் மூழ்கியுள்ளது என்று மு.சோ.க. வெட்கமின்றி கூறுகின்றது. இந்த கட்சியின் தலைவர்களின் கடந்தகால குரு ஜே.வி.பி. ஆகும். 1987-1990 ஆம் ஆண்டில், ஜே.வி.பி. “இந்திய விஸ்தரிப்புவாதத்துக்கு எதிராக” என்ற பெயரில் இனவாதத்தை கிளறிவிட்ட ஒரு கட்சியாகும். அந்த இனவெறி கிளர்ச்சியை மு.சோ.க. எப்போதும் புகழ்கின்றது.
இலங்கையில் பரந்தளவில் வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டங்களின் இயல்பு அம்சம் என்னவெனில், இனவாத பிரச்சாரம் தீவிரப்படுத்தப்பட்ட சூழலிலும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களை போராட்டங்களில் ஒன்றிணைப்பதாகும். 2018 முதல் வெடித்த போராட்டங்களிலும், இராஜபக்ஷ அரசாங்கத்தின் தாக்குதல்கள் தீவிரமடைவதற்கு எதிராக இப்போது உருவாகி வரும் போராட்டங்களிலும் புறநிலை ஒற்றுமைக்கான முயற்சி தனித்து வெளிப்படுகிறது. சமுதாயம் இனவெறியில் மூழ்கியுள்ளது என்ற ஜயகொடவினதும் மு.சோ.க.வினதும் கூற்றுக்கள் இந்த தொழிலாளர்களை அவமதிப்பதாகும்.
சோ.ச.க.வின் அனுசரணையிலும் வழிகாட்டுதலிலும் ஸ்தாபிக்ப்பட்டுள்ள கலை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைக் குழுவால் முன்னெடுக்கப்பட்டுள்ள, பிரச்சாரத்திற்கு தொழிலாளர்கள், கலைஞர்கள் மற்றும் இளைஞர்களிடமிருந்து பரவலான ஆதரவு கிடைத்து வருகிறது. இது தொழிலாள வர்க்கத்திற்குள் இன பிளவுகளை கடந்து ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு உள்ள புறநிலை வாய்ப்பை குறிக்கிறது. இந்த புரட்சிகர தளத்தின் அடிப்படையிலேயே அஹ்னப் மற்றும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிப்பதற்கு தொழிலாள வர்க்கத் தலைமையிலான இயக்கம் கட்டமைக்க முடியும்.
தற்போதைய முதலாளித்துவ அமைப்பில் முதன்மையான புரட்சிகர வர்க்கமான தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர திறனை மு.சோ.க. நிராகரிக்கிறது. அவர்கள் முதலாளித்துவ குழுக்கள் மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்துடன் பொருந்துகிறார்கள். இந்த கட்சி, ஏனைய சந்தர்ப்பவாதிகளுடன் சேர்ந்து, தொழிலாள வர்க்கத்தின் வர்க்க சுயாதீனத்துக்கு குழி பறித்து, முதலாளித்துவ குழுக்களுடன் அதை முடிச்சுப் போட்டுவிட செயற்படும் ஒரு மத்தியதர வர்க்கத்தின் அமைப்பாகும்.
தொழிலாள வர்க்க ஐக்கியதிற்கு எதிராக இனவாத குழப்பதினை உருவாக்குவதற்காக உலகெங்கிலும் நடவடிக்கையில் இறங்கியுள்ள முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்கு துணை போகும் போலி-இடது கும்பல்களுடன் மு.சோ.க. தொப்புள்கொடி உறவினை கொண்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம், ஆபிரிக்க-அமெரிக்கரான ஜோர் புளோயிட் பொலிஸ் அதிகாரியினால் படுகொலை செய்யப்பட்ட பின்னர், பொலிஸ் வன்முறைக்கு விரோதமாக கிளர்ந்து எழுந்த இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கண்டு பீதியடைந்த ஜனநாயகக் கட்சியின் இனரீதியான பிரச்சாரம் பேர்போனதாகும்.
ஜனநாயகக் கட்சியின் பிரிவுகள் உட்பட அமெரிக்காவில் ஆளும் வர்க்கத்தால் ஆதரிக்கப்படும், பிளாக் லைவ்ஸ் மேட்டர் (கறுப்பினத்தவரின் பிரச்சினை) இயக்கம் ஜோர்ஜ் புளோயிட்டை அமெரிக்க சமுதாயத்தில் காணப்படும் 'வெள்ளை இனவெறிக்கு பலியானவராக' தூக்கிப் பிடித்து, அவரது படுகொலைக்கு எதிராக அணிதிரண்ட தொழிலாள வர்க்கத்தின் பொது வர்க்க நலன்களின் அவசியத்தை சிதைத்து, கறுப்பு வெள்ளை இன வேறுப்பாட்டினை மிகைப்படுத்திக் காட்டுவதற்கு செயற்பட்டது.
இத்தகைய தவறான மற்றும் மோசடியான கட்டுக் கதைகள், அமெரிக்க வரலாற்றை சிதைக்கும் அளவிற்கு முன்சென்றுள்ளன. அமெரிக்காவின் நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையின் 1619 திட்டமானது அமெரிக்க வரலாற்றை கறுப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் இடையிலான மோதலின் வரலாறாக சித்தரிக்கும் ஒரு இழிவான முயற்சியாகும். உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் அடையாள அரசியலின் முன்னணி பாத்திரம் வகிக்கும் மு.சோ.க. பிளாக் லைவ்ஸ் மேட்டர் பிரச்சாரத்தை ஆதரித்தது.
இலங்கை சமசமாஜ கட்சியின் பாரிய கட்டிக்கொடுப்புக்கு எதிராக, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் போராட்டத்தில் இணைந்து 1968 இல் ஸ்தாபிக்கப்பட்ட புரட்சிகம் கம்யூனிஸ்ட் கழகம் மற்றும் அதன் வாரிசான சோசலிச சமத்துவக் கட்சியும், சிங்கள பேரினவாததிற்கும் சகலவிதமான இனவாத பிரிவினைகளுக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தை அனைத்துலக சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் அணிதிரட்டுவதை அதன் அரசியல் மற்றும் தத்துவார்த்த போராட்டத்தின் மிக பிரதான விடயமாக கொண்டிருக்கிறது.
இன்று, சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கையில் தொழிலாளர் போராட்டங்கள் வளர்ந்து வருகின்றன. இனப் பிரிவினை உட்பட ஆளும் வர்க்கத்தின் கட்டுப்பாட்டுக்கு அடிபணியச்செய்யும் அனைத்து வகையான சித்தாந்தங்களில் இலிருந்தும் மற்றும் அரசியலில் இலிருந்தும் விடுபடுவதற்காக மேற்கொள்ளும் போராட்டத்தை தொழிலாளர்கள் தீவிரப்படுத்த வேண்டும். இந்த போராட்டத்தில் சோ.ச.க. உடன் இணைந்துகொள்ளுமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் படிக்க
- இலங்கை: கவிஞர் அஹ்னப் ஜஸீமை உடன் விடுதலை செய்!
- இலங்கை அரசாங்கம் போலி குற்றச்சாட்டில் இளம் முஸ்லிம் கவிஞரை தடுத்து வைத்திருக்கிறது
- இணையவழி கூட்டம்: பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையின் இளம் கவிஞர் அஹ்னப் ஜஸீமை விடுதலை செய்!
- இலங்கை: இராஜபக்ஷ அரசாங்கம் வலைத்தளங்களை தணிக்கை செய்ய தயாராகிறது