மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
மிகவும் தொற்றக்கூடிய கோவிட்-19 இன் ஓமிக்ரோன் வகை இப்போது உலகெங்கிலும் 49 நாடுகளுக்குப் பரவி உள்ளது, இவற்றில் பல நாடுகள் ஏற்கனவே இந்த புதிய வகையின் சமூகப் பரவலை அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. சமூகத்தில் வைரஸைப் பரவ அனுமதித்து 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்' மூலோபாயத்தால் மரபணு தொடர்வரிசை ஆய்வு நுட்பத்தில் (DNA sequencing) அதிக விகிதங்களை ஏற்றுள்ள பிரிட்டனில், இப்போது ஓமிக்ரோன் வகையின் 246 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர், இது ஒரே நாளில் ஏற்பட்ட 54 சதவீத அதிகரிப்பாகும்.
தெற்கு ஆபிரிக்காவில் நிலைமை அதிபயங்கரமாக உள்ளது, இங்கே நாளாந்த நோய்தொற்றுக்கள் மற்றும் மருத்துவமனை அனுமதிப்புகளின் எண்ணிக்கை முந்தைய எந்தவொரு அலையை விடவும் அதிவேகமாக அதிகரித்துள்ளது. மாறிக் கொண்டிருக்கும் நாளாந்த புதிய நோயாளிகளின் ஏழு-நாள் சராசரி இப்போது 10,628 ஆக உள்ளது, அதேவேளையில் நோய்தொற்று உறுதிப்படும் விகிதம் 26.4 சதவீதத்தில் உள்ளது, அதாவது நாளாந்த புதிய நோயாளிகளின் நிஜமான எண்ணிக்கை உத்தியோகபூர்வ எண்ணிக்கையை விட மிகவும் அதிகமாக இருக்கலாம் என்பதை இது சுட்டிக் காட்டுகிறது.
மருத்துவமனை அனுமதிப்புகளும் இறப்புக்களும் ஒரு தாமதமான குறிகாட்டியாகும், மருத்துவமனைகள் மற்றும் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் புதிதாக அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை இந்த வாரயிறுதியில் 10 சதவீதத்திற்குச் சற்று நெருக்கத்தில் அதிகரித்திருந்தது, இந்த வாரயிறுதியில் இன்னும் ஒன்பது தென்னாபிரிக்கர்கள் இந்த வைரஸிற்குப் பலியானார்கள்.
ஐந்து வயதிற்குட்பட்ட மழலைகள் மற்றும் கைக்குழந்தைகள் மீது இந்த வைரஸ் விகிதாசாரமின்றி பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதே தென்னாபிரிக்காவில் ஓமிக்ரோன் அதிகரிப்பின் ஆரம்ப போக்குகளில் ஒன்றாக உள்ளது. பரவும் நோய்களுக்கான தேசிய ஆணையத்தின் டாக்டர் வாசிலா ஜஸ்சத் வெள்ளிக்கிழமை ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் கூறுகையில், “எல்லா வயது பிரிவுகளிலும் [மருத்துவமனை அனுமதிப்புகள்] கூர்மையாக அதிகரிப்பதை நாம் பார்க்கிறோம் என்றாலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே இது அதிகமாக உள்ளது,” என்றார். “5 வயதுக்குட்பட்டவர்களில் ஏற்படும் நோய்தொற்று, 60 வயதுக்கு மேற்பட்டவர்களை அடுத்து, இப்போது இரண்டாவது அதிகபட்ச அளவாக உள்ளது,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
ஷ்வானே நகரில், நவம்பர் 14-27 க்கு மத்தியில் ஐந்து வயதுக்குக் குறைந்த 100 க்கும் அதிகமான குழந்தைகள் கோவிட்-19 உடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர், இது இந்த பெருந்தொற்றின் முந்தைய எந்தவொரு அலையை விடவும் மிகவும் அதிகம். ஷ்வானே நகர மருத்துவமனைகளில் மொத்தம் அனுமதிக்கப்பட்டவர்களில் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் சுமார் 10 சதவீதம் என்பதை NICD சுட்டிக் காட்டியது.
ஜோஹான்னஸ்பேர்க்கின் கிறிஸ் ஹானி பாரக்வாநாத் மருத்துவமனை பேராசிரியர் ருடோ மதிவா (Rudo Mathivha) SABC News க்கு அளித்த பேட்டியில் கூறுகையில், 'குழந்தைகள், மழலைகள், கணிசமாக நோய் தீவிரத்துடன், அதிக எண்ணிக்கையில் வருவார்களேயானால், அது நமக்கு ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும். நம் மருத்துவமனைகள் நிறைய குழந்தைகளை அனுமதிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டதில்லை, ஏனென்றால் இயற்கையாகவே இந்தளவுக்ககு குழந்தைகள் கடுமையாக நோய்வாய்ப்படுவதில்லை. அவர்களை நம்மால் கையாள முடியாமல் போகலாம்,” என்றார்.
மழலைகளும் கைக்குழந்தைகளும் தடுப்பூசிக்கு செலுத்த தகுதியாகவில்லை என்பதால் அவர்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர், மேலும் பலமாக உருமாறியுள்ள இந்த வைரஸ் முந்தைய வகைகளை விட வேறுபட்ட விதத்தில் குழந்தைகளைப் பாதிக்கும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்தனர். ஏற்கனவே டெல்டா வகையால் உலகளவில் ஆயிரக் கணக்கானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் டெல்டா வகை குழந்தைகளைக் கடுமையாக பாதித்துள்ளது.
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவைத் தற்போதைய குவிமையமாக கொண்டு, டெல்டா வகை இந்த பெருந்தொற்றின் ஆறாவது உலகளாவிய அதிகரிப்புக்கு எரியூட்டி வருகின்ற நிலைமைகளின் கீழ் ஓமிக்ரோன் வகை பரவிக் கொண்டிருக்கிறது. சராசரியாக சுமார் 600,000 பேர் உத்தியோகபூர்வமாக பாதிக்கப்பட்டும் தினந்தோறும் 7,000 பேர் கோவிட்-19 ஆல் இறந்து கொண்டிருக்கும் இந்த பேரழிவுகரமான எழுச்சிக்கு விடையிறுப்பதில், முதலாளித்துவ அரசாங்கங்களோ விடாப்பிடியாக குழந்தைகள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் சமூகங்களைக் காப்பாற்ற பள்ளிகளைக் கூட மூட மறுக்கின்றன.
பிரிட்டனில், ஒவ்வொரு நாளும் சராசரியாக 45,000 க்கும் அதிகமானவர்கள் இப்போது உத்தியோகபூர்வமாக நோய்தொற்றுக்கு ஆளாகிறார்கள். ஓமிக்ரோன் வகை வேகமாக பரவி வரும் வேளையில் பள்ளிகளைத் திறந்து வைக்க நிர்பந்தித்துள்ள ஜோன்சன் நிர்வாகம், தங்கள் குழந்தைகளைத் தியாகம் செய்ய முடியாதென பெற்றோர்களிடையே அதிகரித்து வரும் எதிர்ப்பை அடக்கும் முயற்சியாக, பிரிட்டிஷ் பெற்றோரும் கோவிட்-எதிர்ப்பு நடவடிக்கையாளருமான லிசா டியஸைச் சட்ட நடவடிக்கைகளால் இலக்கு வைக்கிறது.
ஜேர்மனியில், ஒவ்வொரு நாளும் சராசரியாக 55,000 க்கும் அதிகமானவர்கள் உத்தியோகபூர்வமாக பாதிக்கப்படுகிறார்கள். ஒரு வாரமாக 5 இல் இருந்து 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே ஏற்பட்டு வரும் நோய்தொற்று விகிதம், வேறெந்த வயது பிரிவினரிடம் ஏற்படுவதை விட மிகவும் அதிகமாக உள்ளது. கடந்த மாதத்தில், நாடெங்கிலும் அங்கே உத்தியோகபூர்வமாக 1,540 க்கும் அதிகமான பள்ளிகளில் வெடிப்புகள் இருந்தன. இந்த நெருக்கடிக்கு விடையிறுத்து, பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பள்ளிகளை மூடுவதற்காக அதிகரித்து வரும் அழைப்பை எந்த அதிகாரிகளும் ஆதரிக்கவில்லை.
பிரான்சில், கடந்த மாதம் தினசரி புதிய நோயாளிகள் எண்ணிக்கை நான்கு மடங்குக்கும் அதிகமாக அதிகரித்து, தற்போதைய சராசரியாக 40,000 க்கும் அதிகமாக ஆகி உள்ளது. மிக அதிக அதிகரிப்பு 6 இல் இருந்து 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே ஏற்படுகிறது, பிரதானமாக இது பள்ளிகளில் ஏற்பட்ட வெடிப்புகளால் உந்தப்பட்டுள்ளது. விடையிறுப்பாக, அதிகாரிகளோ கட்டுப்பாடுகளைக் கூடுதலாக நீக்கி வருவதுடன், ஒரு வெடிப்பு சம்பவத்தில் பள்ளிகளை மூடும் திறனையும் மட்டுப்படுத்துகின்றனர்.
அமெரிக்காவில், ஒவ்வொரு நாளும் அண்மித்து சராசரியாக 110,000 பேருக்குச் கோவிட்-19 நோய்தொற்று ஏற்படுகிற வேளையில், 18 மாநிலங்களில் ஓமிக்ரோன் வகைக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஒட்டுமொத்த இலையுதிர் காலகட்டமும் குழந்தைகளிடையே நீடித்த பாரிய நோய்தொற்றைக் கண்டுள்ளது. குழந்தைகள் பற்றிய கோவிட்-19 புள்ளிவிபரங்களை மாநில அரசாங்கங்கள் மூடிமறைக்க முயலுவதால், அமெரிக்க குழந்தைகள் நல ஆணையத்தின் பெரிதும் மட்டுப்படுத்தப்பட்ட இவ்வார அறிக்கையின்படி, 100,000 க்கும் அதிகமான நோய்தொற்றுகளுடன் கடந்த வாரம், தொடர்ந்து 17 வது வாரமாக, அமெரிக்காவில் கோவிட்-19 இன்னும் அதிகரித்து 133,022 குழந்தைகள் உத்தியோகபூர்வமாக பாதிக்கப்பட்டிருந்தனர்.
கடந்த வாரம் கோவிட்-19 ஆல் இன்னும் எட்டு குழந்தைகள் இறந்ததால், இது மொத்த எண்ணிக்கையை 651 க்குக் கொண்டு வருவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. ஆனால் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) தரவுகளோ அசாதாரணமான ரீதியில் ஐந்து வயதுக்குட்பட்ட 306 குழந்தைகள் உட்பட 18 வயதுக்குட்பட்ட 974 குழந்தைகள் இந்த வைரஸிற்கு இறந்திருப்பதாக குறிப்பிடுகின்றன.
குழந்தைகள் மத்தியில் ஏற்பட்டு வரும் நோய்தொற்றுக்கள், மருத்துவமனை அனுமதிப்புகள் மற்றும் இறப்புக்களின் இந்த பேரழிவு ஆழமடைந்து வருவதற்கு மத்தியில், இதை ஓமிக்ரோன் இன்னும் கூடுதலாக தீவிரப்படுத்த அச்சுறுத்துகின்ற நிலையில், ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும், பெருநிறுவன ஊடகங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களும் பள்ளிகளைத் திறந்து வைக்க வலியுறுத்துகின்றன.
வெள்ளிக்கிழமை ஓமிக்ரோன் வகை குறித்து ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் 'கல்வியைத் தொடர்வதற்கான பரிசோதனை' (Test to Stay) என்றவொரு புதிய திட்டத்தை விவரித்தார், அதாவது இதன்படி ஒரு மாணவருக்குக் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டால், அவருடன் உடனிருந்தவர்கள் இனிமேல் பாதுகாப்பான தனிமைப்படலுக்கு அனுப்பப்பட மாட்டார்கள். அதற்குப் பதிலாக, அவர்களுக்கு நோய்தொற்று இல்லை என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டால், அவர்கள் தொடர்ந்து நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம்.
இலாபங்களை உருவாக்குவதற்காக பெற்றோர்களை வேலையில் ஈடுபடுத்துவதற்காக குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வடிவமைக்கப்பட்ட இந்த திட்டத்தை அமெரிக்கா ஆசிரியர்கள் கூட்டமைப்பின் (AFT) தலைவர் ராண்டி வெய்ன்கார்டன் உடனடியாக ஆமோதித்தார். அமெரிக்காவில் உத்தியோகப்பூர்வமாக அண்மித்து 20,000 குழந்தைகள் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்ட ஒரு நாளில், அப்பெண்மணி எரிச்சலூட்டும் விதத்தில் எழுதுகையில், “இந்த பெருந்தொற்றின் போது நம் பொது சுகாதார பரப்பின் துல்லியமான சித்திரத்தைப் பெறுவதற்கு பரிசோதனையும் தடம் அறிதலும் எப்போதும் நமக்கான சிறந்த வழியாக இருந்துள்ளது,” என்றார்.
பைடென் நிர்வாகத்துடன் சேர்ந்து, வெய்ன்கார்டனின் நிலைப்பாடு, “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கத்திற்கு' வக்காலத்து வாங்கும் அதிவலதின் நிலைப்பாட்டுடன் முன்பினும் அதிக நெருக்கமாக ஒத்துப் போகிறது. செப்டம்பரில், AFT டவுன் ஹால் கூட்டத்திற்கு வெய்ன்கார்டன் தலைமை தாங்கினார், அதில் கிரேட் பாரிங்டன் பிரகடனத்தை எழுதிய ஜே பட்டாச்சாரியா சிறப்பு 'விஞ்ஞானியாக' கலந்து கொண்டிருந்தார்.
குழந்தைகள் அவர்களின் பெரியோர்களைப் பாதுகாக்கும் 'மனித கேடயமாக' சேவையாற்ற அவர்களுக்கு வேண்டுமென்றே கோவிட்-19 நோய்தொற்று ஏற்பட செய்ய வேண்டும் என்ற போலி-விஞ்ஞான கருத்தே கிரேட் பாரிங்டன் பிரகடனத்தின் மைய சாராம்சமாகும். யதார்த்தத்தில் இந்த குற்றகரமான கொள்கை அண்மித்து 1,000 அமெரிக்க குழந்தைகளின் இறப்புகளுக்கு வழிவகுத்துள்ளதுடன் மில்லியன் கணக்கானவர்கள் நீண்டகால பாதிப்புகளுக்கும், இன்னமும் முழுமையாக அறியப்படாத 'நீண்டகால கோவிட்' விளைவுகளுக்கும் ஆளாகி இருக்கலாம். இப்போது தொடர்ந்து கொண்டிருக்கும் டெல்டா அதிகரிப்புக்கு முன்னர், ஏற்கனவே 140,000 க்கும் அதிகமான குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களில் ஒருவரையோ அல்லது கவனித்துக் கொண்ட தாத்தா பாட்டியையோ கோவிட்-19 இல் இழந்திருந்தனர், இந்த எண்ணிக்கை அனேகமாக இப்போது 200,000 ஐ கடந்திருக்கும்.
பெருநிறுவன ஊடகங்கள் வகிக்கும் பங்கும் அதேயளவுக்குக் குற்றகரமாக உள்ளது. ஏறக்குறைய அச்சு பத்திரிகைகள் மற்றும் ஒளிபரப்பு செய்தி அனைத்திலும், மக்களை நிராயுதபாணியாக்கவும் மற்றும் இந்த ஓமிக்ரோன் வகை முந்தைய வைரஸ் வகையை விட 'மிதமானதே' என்று காலத்திற்கு முன்கூட்டியே அறிவிக்கவும் ஓர் ஒருமித்த முயற்சி நடக்கிறது. இந்த சமீபத்திய பிரங்கன்ஸ்ரைன் அசுரனின் துல்லியமான வீரியம் மற்றும் அபாயம் காலப்போக்கில் தீர்மானிக்கப்படும் என்றாலும், தென் ஆபிரிக்காவை மையமாக வைத்து விஞ்ஞானிகளிடம் இருந்து வரும் எச்சரிக்கைகளும் மருத்துவமனை அனுமதிப்புகளின் வேகமாக அதிகரிப்பும், ஓமிக்ரோன் அதன் அதிக பரவல் காரணமாக இல்லையென்றாலும் முந்தைய வகைகளைப் போலவே அதேயளவுக்குக் கடுமையானதாக இருக்கலாம் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன.
இந்த சாத்தியமான ஆபத்துக்கள் பற்றி எச்சரித்து, பொது சுகாதாரத்தின் இதயதானத்தில் முன்னெச்சரிக்கை கொள்கையை முன்னெடுப்பதற்கு பதிலாக, நியூ யோர்க் டைம்ஸ் பொது முடக்கங்களை எதிர்ப்பதுடன், சீனா மீதான அதன் குறைகூறல்களை அதிகரிக்கிறது. டைம்ஸ், திங்கட்கிழமை ஒரு கட்டுரையில், “இந்த வைரஸ் மக்களிடையே பரவ முடியாதளவுக்கு மக்களிடையே போதுமான நோயெதிர்ப்புச் சக்தி வரும் வரையில் [சீனா] இடைவிடாது நோயெதிர்ப்புச் சக்தி பெருக்கத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது,” என்று கண்டிக்கிறது. “உலகில் இறுதி வரையில் பூஜ்ஜிய-கோவிட் மேற்கொள்வதற்காக' அவை சீனாவைக் கண்டிப்பதுடன், தனியார் நிறுவனங்களுக்கு நியூயோர்க் நகரம் கட்டாய தடுப்பூசி அறிவித்த அதே நாளில், 3 இல் இருந்து 11 வரையிலான குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தும் சீனாவின் முயற்சிகளை அபத்தமாக 'எதேச்சதிகாரம்' என்று சித்தரிக்கின்றன.
உண்மை என்னவென்றால், பரந்த பெரும்பான்மை உழைக்கும் நடுத்தர வர்க்க குடும்பங்களுக்குத் தொலைதூர கல்வி வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற நிலையில், அமெரிக்காவிலும் ஒவ்வொரு முன்னேறிய முதலாளித்துவ நாட்டிலும் பத்து மில்லியன் கணக்கான பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளைப் பாதுகாப்பற்ற பள்ளிகளுக்கு அனுப்ப பலவந்தப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பெருந்திரளான இளைஞர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களில் வேண்டுமென்றே நோய்தொற்று ஏற்படுவதை நோக்கமாக கொண்ட ஒரு குற்றகரமான கொள்கை உலகெங்கிலும் மில்லியன் கணக்கானவர்களைக் கொன்றுள்ளது, அத்துடன் இளைஞர்கள் இப்போது ஓமிக்ரோன் வகை வைரஸால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர், இவை அனைத்தையும் டைம்ஸ் தொடர்ந்து ஆதரித்தது.
உலக சோசலிச வலைத் தளம் தொடங்கி உள்ளதும் மற்றும் இந்த பெருந்தொற்றின் போது ஒவ்வொரு தொழில்துறை தொழிலாளர்களின் அனுபவங்களை முன்னுக்குக் கொண்டு வருவதையும் உள்ளடக்கிய, கோவிட்-19 பெருந்தொற்று மீது உலகளாவிய தொழிலாளர்களின் விசாரணை தொடர்ந்து நடந்து வரும் இத்தகைய குற்றங்களை விரிவாக அம்பலப்படுத்தும்.
இந்த விசாரணையானது, இழைக்கப்பட்ட குற்றங்களையும் மற்றும் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து கொண்டிருக்கும் குற்றங்களையும் பற்றிய ஓர் ஊக்கமான பகுப்பாய்வைக் கொண்டிருக்கும். இது, பரிணமித்து வரும் புதிய மற்றும் இன்னும் ஆபத்தான வைரஸ் வகைகளைத் தடுக்க ஒரே வழியான, கோவிட்-19 ஐ உலகளவில் அகற்றுவதற்கும் மற்றும் முற்றிலும் ஒழிப்பதற்குமான போராட்டத்துடன் இணைக்கப்படும்.
டெல்டா மற்றும் ஓமிக்ரோன் வகைகளின் பரவலைத் தடுக்க, இந்த பெருந்தொற்று தொடங்கிய போது சீனாவிலும் பிற ஆசிய-பசிபிக் நாடுகளிலும் எடுக்கப்பட்ட அவசரகால நடவடிக்கைகளைச் சர்வதேச தொழிலாள வர்க்கம் இன்று முன்னெடுக்க வேண்டும். பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற வேலையிடங்களைத் தற்காலிகமாக மூடல், அதில் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு முழுமையான வருமான பாதுகாப்பு, அத்துடன் சேர்ந்து விரிவான பரிசோதனை, நோயின் தடம் அறிதல், பாதிக்கப்பட்ட நோயாளிகளைத் தனிமைப்படுத்தல், முகக்கவசம் அணிதல் மற்றும் இன்னும் பல முறைமைகள் இதில் உள்ளடங்கும்.
ஒவ்வொரு தொழில்துறையின் மற்றும் ஒவ்வொரு நாட்டின் தொழிலாளர்களும், பெருநிறுவன தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவ அரசியல் கட்சிகளுக்கு எதிராக, சுயாதீனமான சாமானிய தொழிலாளர் குழுக்களைக் கட்டமைப்பதன் மூலமாக இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த போராட வேண்டும். கோவிட்-19 ஐ உலகளவில் அகற்றுவது மட்டுமே, தேவையில்லாமல் மேற்கொண்டு நோய்தொற்றுகள் மற்றும் இறப்புகளில் இருந்து குழந்தைகளையும் சமூகம் மொத்தத்தையும் பாதுகாக்கும்.