தினசரி நோய்த்தொற்றுகள் ஒரு இலட்சத்தை தாண்டியுள்ள நிலையில் இந்தியாவில் முதலாவது ஓமிக்ரோன் மரணம் பதிவாகியுள்ளது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

கோவிட்-19 தொற்று நோய் சமீபத்தில் அதிவேகமாக வளரத் தொடங்கியுள்ள இந்தியாவில், புதன்கிழமை தீவிரமாக தொற்றும் ஓமிக்ரோன் மாறுபாட்டினால் ஏற்பட்ட முதல் மரணம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒடிசாவின் பலங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை இரண்டாவதாக மரணமடைந்தார்.

இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில், திங்கள்கிழமை, டிசம்பர் 6, 2021 அன்று, கொரோனா வைரஸ் ஓமிக்ரோன் மாறுபாட்டிற்காக தயாரிக்கப்பட்ட வார்டுக்குள் சுகாதார ஊழியர்கள் படுக்கைகளை அமைக்கின்றனர். [Credit: AP Photo/Ajit Solanki]

இந்த செய்திகள், புதிய மாறுபாடு 'பாரதூரமானதல்ல' மற்றும் 'அச்சம் கொள்ளத் தேவையில்லை' என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் மற்றும் முதலாளித்துவ ஆளும் உயரடுக்கும் பரப்பும் போலியான கூற்றுகளை உடைத்தெறிகிறது. இது இப்போது இந்தியாவின் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 27க்கு பரவியுள்ளது.

ராஜஸ்தானின் உதய்பூர் மாவட்டத்தில் முதலில் மரணமடைந்தவர், 73 வயதான ஓய்வு பெற்றவராவார். டிசம்பரில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு நோயிலிருந்து மீண்ட போதிலும், டிசம்பர் 31 அன்று இறந்தார்.

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நபர் அதே நாளில் சோதனையில் தொற்றுக்கு உள்ளாகி இருப்பது அறியப்பட்ட பின்னர் டிசம்பர் 15 அன்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டிசம்பர் 21 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இந்த நபருக்கு செய்யப்பட்ட சோதனைகள் எதிர்மறையாக வந்தன. இருப்பினும், டிசம்பர் 25 அன்று, அவரது மரபணு வரிசைமுறை அறிக்கை அவருக்கு ஓமிக்ரோன் மாறுபாடு இருப்பதை உறுதிப்படுத்தியது. உதய்பூரில் உள்ள தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி தினேஷ் காரடி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: “நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஹைப்போ தைராய்டிசம் ஆகியவற்றுடன் கூடிய கோவிட்டுக்கு பின்னரான நிமோனியாவால் மரணம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.”

சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால், ஓமிக்ரோனை 'பாரதூரமற்றதாக' சித்தரிக்கும் முயற்சிகளில் முன்னணியில் உள்ளவராவார். இந்த மரணத்தில் ஒமிகோரனின் பங்கை மூடி மறைத்த அவர், 'மரணமடைந்தர் நீரிழிவு மற்றும் கூட்டு நோய் நிலைமைகளைக் கொண்ட ஒரு வயதானவர்,” என்றார். ஓமிக்ரோன் மாறுபாடு பரவுவதால், உலகம் முழுவதும் உருவாகும் பேரழிவுகரமான அவசரகாலச் சூழ்நிலையைப் பற்றி பொதுமக்களை எச்சரிப்பதற்குப் பதிலாக, அகர்வால், இவை வேண்டுமென்றே முன்னெடுக்கப்படும் கொள்கைகளின் விளைவு அல்ல, மாறாக முதுமை மற்றும் உடல்நலக்குறைவு ஆகியவற்றின் விளைவு, என்று அலட்சியம் செய்வதற்குப் பொதுமக்களை ஊக்குவித்தார்.

முதலாளித்துவ அரசியல்வாதிகள் மனித உயிர் மீது அப்பட்டமான அலட்சியத்துடன் செல்படுகின்றனர். மே 2020 இல், இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 400,000 பேர் நோய்வாய்ப்பட்டு 4,000 பேர் இறந்ததால், மோடி அரசாங்கத்தின் சுகாதார ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் முலியில், “கணிசமான முடக்கம் திறக்கப்பட்டதன் மூலம், இந்தியா குறைந்தது இரண்டு மில்லியன் இறப்புகளைக் காணக்கூடும்” என்று எச்சரித்தார். வைரஸ் பரவல் முடிவடைவதற்கும் தொடர்புத் தடமறிதல் அவசியம் முடிவடைவதற்கும் முன்னரும், இந்தியாவில் கோவிட்-19 இல் குறைந்தது 6 மில்லியன் மக்கள் இறந்துள்ளதாக தொற்றுநோயியல் நிபுணர்கள் மதிப்பிட்டுள்ள நிலையிலும், மோடி முடக்த்தைத் திறந்து விட்டார். இந்த சூழ்நிலையில், மோசமாக குறைத்து மதிப்பிடப்படும் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை இப்போது 483,178 ஆக உள்ளது.

இந்தியாவின் இரண்டாவது அலையை ஏற்படுத்திய டெல்டா மாறுபாட்டின் மீது அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஓமிக்ரோன் மாறுபாட்டிலிருந்து இரட்டிப்பு தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் கூட கணிசமானளவு குறைவான பாதுகாப்பையே கொண்டுள்ளார்கள் என்பதை முன்னணி விஞ்ஞானிகள் மீண்டும் மீண்டும் காட்டியுள்ளனர். இது, இந்தியாவின் தடுப்பூசி போடப்பட்ட ஒரு நபரின் முதல் ஓமிக்ரோன் மரணத்தின் மூலம் துன்பகரமான முறையில் இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. 183 ஓமிக்ரான் நோய்த்தொற்றுகள் பற்றிய ஒரு ஆய்வில், 87 பேர் அல்லது கிட்டத்தட்ட 50 சதவிகிதமானோர் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் என சுகாதார அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இதை மேற்கோள் காட்டி, தடுப்பூசிகள் மட்டுமே தொற்றுநோயைத் தடுக்காது என்பதையும், முடக்கம் மற்றும் கடுமையான பொது சுகாதார நடவடிக்கைகள் அவசரமாக அவசியம் என்பதையும் வலியுறுத்துவதற்குப் பதிலாக, இந்திய அதிகாரிகள் 'முகக்கவசங்களின் பயன்பாடு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையும் தொற்று பரவுவதை நிறுத்த முக்கியமானது' என்று அறிவித்துள்ளனர். இருப்பினும், முகக்கவசம் அணிதல் போன்ற அடிப்படை நடவடிக்கைகள், முழுமையாக செயல்படுத்தப்பட்டாலும் கூட, மிகவும் தீவரமாகவும் வேகமாகவும் தொற்றும் ஒமிக்ரோன் மாறுபாட்டின் அலைகளை உடைக்க போதுமானதாக இல்லை.

மே மாதம், மோடி அரசாங்கம், 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவின் மொத்த வயது வந்த 940 மில்லியன் மக்கள் 'முழுமையாக தடுப்பூசி பெறுவார்கள்' என்று கூறியது. இருப்பினும், டிசம்பர் 31 வரை, இந்தியாவின் வயது வந்தோரில் 64 சதவிகிதத்தினர் மட்டுமே 'முழுமையாக தடுப்பூசி' பெற்றுள்ளனர் மற்றும் சுமார் 90 சதவிகிதத்தினர் முதல் டோஸ் பெற்றுள்ளனர். சராசரி மாதாந்திர தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் முறையே 8.1 மில்லியன், 5.4 மில்லியன் மற்றும் 5.7 என்ற விகிதத்தில் குறைந்து வருகின்றன.

இந்தியா, தொற்றுநோயின் மூன்றாவது அலை உருவாகத் தொடங்கிய நிலையிலேயே, 2022 ஜனவரி தொடக்கத்திலேயே, 15 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கு (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 120 மில்லியன் மக்கள்) தடுப்பூசி போடத் தொடங்கியது. மக்கள்தொகையில் 80 சதவிகிதம் பெரியவர்கள் இருக்கும் ஐரோப்பா போன்ற உலகின் பல நாடுகளைப் போலல்லாமல், இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் பெரியவர்கள் 63 சதவிகிதம் மட்டுமே உள்ளனர். இதன் பொருள், பெரியவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டாலும், இந்தியாவின் மிகப்பெரிய 1.38 பில்லியன் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் தடுப்பூசி ஊடான பாதுகாப்பு இல்லாமல் இருப்பார்கள்.

மோடியின் கொலைகாரக் கொள்கையின் விளைவுகள் வெளிப்படுகின்றன. 'தடுப்பூசி இயக்கத்தில் இன்னும் சேர்க்கப்படாத ஆறு வயதிற்குட்பட்ட கடந்த ஐந்து நாட்களாக கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள், அடிக்கடி சுவாசக் கோளாறு, கடுமையான பலவீனம் மற்றும் அதிக காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்' என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா ஜனவரி 6 அன்று தெரிவித்துள்ளது., 'பாதிக்கப்பட்டவர்களில் கணிசமான எண்ணிக்கையிலான மூன்று வயதுக்குட்பட்ட சிறுவர்கள் உள்ளனர்' என அது மேலும் கூறியது.

மோடியும், ஒட்டுமொத்த இந்திய ஆளும் வர்க்கமும், அவர்களின் சர்வதேச சகாக்கள் போன்று, பரிசோதிக்கப்படாத மில்லியன் கணக்கான பாதுகாப்பற்ற மக்களை கோவிட்-19 தொற்று பாதிக்க அனுமதிக்கின்ற, சமூகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கம் என்ற தங்களின் கொலைகார கொள்கையின் பேரழிவு விளைவுகளைப் பற்றி அறிந்தே இருக்கிறார்கள்.

வெள்ளியன்று, இந்தியா 200 நாட்களில் மிக அதிகளவான தினசரி தொற்றாளர்களின் எண்ணிக்கையைப் பதிவு செய்தது. அதன் தினசரி கோவிட்-19 தொற்றாளர்கள் எண்ணிக்கை 100,000 (117,100) என்ற துன்பகரமான மைல்கல்லைத் தாண்டியது. இந்த எண்ணிக்கை முந்தைய நாளில் இருந்த 90,928 என்ற தொகையை விட 28 சதவீதம் அதிகமும் மற்றும் ஒரு வாரத்தை விட கிட்டத்தட்ட ஏழு மடங்கு அதிகமுமாகும். இருப்பினும், இந்திய தேசிய சுகாதார அதிகாரி ஆர்த்தி அஹுஜா, 'போதுமான பரிசோதனை இல்லாத நிலையில், சமூகத்தில் பரவும் நோய்த்தொற்றின் உண்மையான நிலை வெளிப்படாது' என்று ஒப்புக்கொண்டார். வெள்ளிக்கிழமை, இந்தியாவில் 302 பேர் கோவிட்-19 வைரஸால் இறந்தனர்.

20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இந்தியாவின் நிதித் தலைநகரான மும்பையில், 2020 இல் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து மிக அதிகமான 20,181 தொற்றாளர்கள் வெள்ளிக்கிழமை பதிவாகியுள்ளதுடன், வியாழன் அன்று கண்டறியப்பட்ட 15,666 நோய் தொற்றாளர்களை விட இது 33 சதவீதம் அதிகம் ஆகும். அதேபோல், இந்தியாவின் தலைநகர் டெல்லியில் மே 6 முதல் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையான 15,000 தினசரி கோவிட்-19 தொற்றாளர்கள் வெள்ளிக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர். மும்பை நகர அதிகாரிகள், “பாதிக்கப்பட்டவர்களில் 8 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தினசரி சுகாதார சஞ்சிகை ஒன்றில் கூறியுள்ளனர். தொற்றுநோயின் முந்தைய அலைகளைப் போலவே, இந்த 8 சதவிகிதத்தினர் மருத்துவமனைகளை நிரப்பக்கூடும் என்று அர்த்தம்.

ஏற்கனவே, மும்பையின் மிகப் பெரிய மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான மருத்துவப் பணியாளர்கள் சமீபத்திய நாட்களில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று என்டிடிவி ஜனவரி 6 அன்று தெரிவித்தது. தொற்றுநோய் பாரியளவில் அதிகரித்த போதிலும், மாநில அரசாங்கமோ “பொது முடக்கத்துக்கு வாய்ப்பு இல்லை,” என்று வியாழன் அன்று கூறியது. இதுவரை, பெப்ரவரி 15 வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூடுவது உள்ளிட்ட வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அது அமல்படுத்தியுள்ளது.

'டெல்டாவை விட ஓமிக்ரோன் பாதிப்பு குறைவானது' என்ற இந்திய அதிகாரிகளின் தொடர்ச்சியான அறிக்கைகள், மில்லியன் கணக்கான இந்தியர்களின் உயிர் வாழ்வு சம்பந்தமாக மோடி மற்றும் ஒட்டுமொத்த ஆளும் உயரடுக்கினதும் குற்றவியல்தனமான அலட்சியம் மற்றும் புறக்கணிப்புக்கு சாட்சியமளிக்கின்றன. ஒரு சிறிய சதவீத மக்கள் தடுப்பூசி வழங்கப்பட்டு, பல கோடி மக்கள் மிகவும் வேகமாக பரவக்கூடிய ஓமிக்ரோன் மாறுபாட்டினால் பதிக்கக்கூடிய நிலையில் திறந்து விடப்பட்டிருப்பதால், மருத்துவ நிபுணர்கள் வரும் நாட்களில் தொற்றுநோயின் ஆக்கிரமிப்பையும் நோயாளர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படும் விகிதங்களின் அதிகரிப்பையும் எதிர்பார்க்கிறார்கள்.

'ஓமிக்ரோன் குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் உருவாவதற்கு வழிவகுத்து, ஏற்கனவே அதிக சுமையுடன் உள்ள நமது சுகாதார அமைப்பை சிதைக்க வழிவகுக்கும்' என்று தக்ஷஷிலா இன்ஸ்டிடியூட் (TI) இன் உதவி திட்ட மேலாளர் மஹக் நங்கனி மற்றும் TI இன் ஒரு ஆராய்ச்சியாளரான டாக்டர் ஹர்ஷித் குக்ரேஜாவும் டிசம்பர் 30 அன்று டெக்கான் ஹெரால் ஊடகத்தில் எச்சரித்திருந்தனர். இது நாள்பட்ட நீரிழிவு போன்ற தொற்றாத நோய்களால் பாதிக்கப்பட்ட மற்ற நோயாளிகளைக் கவனிக்க முடியாத நிலைக்குள் மருத்துவமனைகளை தள்ளிவிடும் என்று அவர்கள் சுட்டிக் காட்டினர்.

ஒரு சிறிய முதலாளித்துவ உயரடுக்கின் இலாப நலன்களுக்காக அர்ப்பணித்துக்கொண்டுள்ள இந்திய அரசியல் ஸ்தாபகம், ஏற்கனவே ஒரு பாரிய மனிதாபிமான நெருக்கடிக்கு இட்டுச் சென்ற தொற்றுநோயின் இந்த அதிர்ச்சியூட்டும் அம்சத்தை முற்றிலும் புறக்கணித்துள்ளது. உலகெங்கிலும், குறிப்பாக அமெரிக்கா, பிரேசில் மற்றும் ஐரோப்பாவில் உள்ள அவரது சமதரப்பினரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்குத் தேவையான பாரிய வளங்களை மோடி ஒதுக்கவில்லை. மாறாக, அவர் இந்திய பல்பில்லியனர்களின் ஒரு சிறிய அடுக்கின் கருவூலங்களுக்குத் பில்லியன் கணக்கான டாலர்களை தொடர்ந்து திருப்பிவிட்டார்.

Loading