எரிபொருள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள வட இலங்கை மீனவர்கள் WSWS உடன் பேசினர்

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் ஆகஸ்ட் 21 அன்று இரவு 87 ரூபாயாக இருந்த மண்ணெண்ணெய் விலைலைய 341 ரூபா வரை 290 ரூபாவால் அதிகரித்தது. இது கடந்த நான்கு மாதங்களாக எரிபொருள் தட்டுப்பாட்டால் மீன்பிடியில் ஈடுபட முடியாமல் இருந்த நாடுமுழுவதும் உள்ள கடற்றொழிலாளர்களுக்கு பெரும் அடியாகும். இந்த விலை அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாட்டுக்கு எதிராக தெற்கு முதல் வடக்கு வரை பல பிரதேசங்களிலும் கடல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

சிலாபம் நகரில் கடந்த மாத இறுதியில் மீனவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் [WSWS media]

கோவிட்–19 தொற்று நோய் மற்றும் உக்ரேனில் நடக்கும் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க–நேட்டோ பினாமி போரின் காரணமாக தீவிரமடைந்த உலகப் பொருளாதார நெருக்கடியால், ஏற்கனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த இலங்கை பொருளாதாரம் மோசமான அந்நியச் செலாவணிப் பற்றாக்குறையை எதிர்கொண்டதால், எரிபொருள் உட்பட இன்னும் பல பொருட்களின் இறக்குமதியை இலங்கை அரசாங்கம் மட்டுப்படுத்தியுள்ளது.

அண்மைய விலையதிகரிப்பானது, பிணையெடுப்பு கடனுக்காக சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளை சமூகத்தின் அடிமட்ட தட்டினர் வரைக்கும் அமுல்படுத்துவதன் ஒரு பாகமாகும்.

பல மாதங்களுக்குப் பின்னர் தற்போது வடக்கில் பதிவு செய்யப்பட்ட படகு உரிமையாளர்களுக்கு பங்கீட்டு முறையில் மண்ணெண்ணை வழங்கப்படுகிறது. கடந்தவாரம், யாழ்ப்பாணத்தில் 20 லீட்டரும் பூநகரியில் 11 லீட்டரும் புதிய விலைக்கு மண்ணெண்ணை வழங்கப்பட்ட போதிலும், மாகாணத்தின் சில இடங்களில் முற்றாக மண்ணெண்ணை வழங்கப்படவில்லை.

முன்னர் 10,000 ரூபா செலவு செய்து தொழிலில் ஈடுபட்ட டீசல் இயந்திரப் படகில் தொழில் செய்யும் தொழிலாளர்கள், தற்போது, 40,000 ரூபா செலவழிக்க வேண்டியுள்ளதோடு, தங்களுக்கு கிடைக்கும் பங்கு வருமானம் போதாமையால் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும் சேமித்து வைத்திருந்த பணத்தை செலவிட்டு அல்லது நகைகளை அடகு வைத்தே வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில், படகின் வெளியிணைப்பு இயந்திரங்களை கழற்றி வைத்துவிட்டு, தடிகளை துடுப்பாகப் பாவித்து படகுகளைச் செலுத்தி குறுகிய தூரங்களுக்கு மாத்திரம் சென்று மீன் பிடியில் ஈடுபடுகின்றார்கள். ஒரு சிறிய பிரதேசத்தில் கூடுதலான படகுகள் மீன்பிடியில் ஈடுபடுவதால், மீன்பிடி குறைந்து, வருமானமும் குறைவடைந்துள்ளது. படகை செலுத்த சிரமப்படுவதால் விரைவில் நோய்வாய்படுவதாகவும், கைகள் புண்ணாவதாகவும் கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் உலக சோசலிச வலைத் தள நிருபர்களுடன் உரையாடும் மீனவர்கள் [WSWS media]

உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசிய, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எஸ். நிலானி, ஆறு மாதங்களுக்கு மேல் எனது கணவர் கடலுக்குச் செல்லவில்லை என்றும், முன்னைய சேமிப்பு மற்றும் நகைகளை அடகு வைத்தே சீவியத்தை ஓட்டுவதாகவும் கூறினார். “எமக்கு மண்ணெண்ணை கிடைக்கவில்லை. சில தனிநபர்களிடம் 600 அல்லது 700 ரூபாவுக்கு பெற்றோல் வாங்கிக் கொண்டு சிறிது தூரம் கடலுக்கு சென்று மீன்பிடியில் ஈடுபடுகின்றார்கள். ஆனால் குறைந்தளவே மீன்பிடிபடுகின்றது. இரண்டு பேர் செல்வதால் வருமானத்தை பங்கீடு செய்ய வேண்டும். அது எமது சீவியத்துக்கு போதாது. எமது கறித் தேவைக்காக கூட மீன் வாங்க முடியாதுள்ளது” என நிலானி கூறினார்.

பூநகரி, கிராஞ்சி என்னும் கிராமத்தைச் சேர்ந்த, பறிக்கூடு வைத்து மீன்பிடிக்கும் இ. நந்தகுமார், ஒவ்வொரு தடவை தொழிலுக்காக கடலுக்கு செல்லும்போதும் 55 லீட்டர் மண்ணெண்ணை கட்டாயம் தேவைப்படுவதாக கூறினார். “நான்கு மாதங்களாக தொழிலுக்கு செல்லவில்லை. எனக்கு முதல் வாரத்தில் 9 லீட்டரும் அடுத்த வாரத்தில் 6 லீட்டரும் தந்தார்கள். அதை வாங்கி அப்படியே வைத்திருக்கின்றேன். 55 லீட்டர் சேர்ந்தவுடன் தான் தொழிலுக்கு செல்ல முடியும். எனது கிராமத்தில் எரிபொருள் நிலையம் இல்லை. பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாச்சிக்குடா கிராமத்துக்கு, போக்குவரத்துக்கு 1,500 ரூபா செலவிட்டு சென்று, மண்ணெண்ணை வாங்கவேண்டும்” என அவர் விளக்கினார்.

யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்த எஸ். அஜந்தன் (32), புதிய அரசாங்கம் வந்தவுடன் விலைகள் குறையும் என்று பிர்சாரம் செய்தார்கள். ஆனால், விலைகள் இன்னமும் கூடிக்கொண்டே போகின்றன என்றார். “அவசரத்துக்காக ஒரு இறாத்தல் பாண் கூட வாங்க முடியாதுள்ளது. நாங்கள் தொழிலுக்கு சென்றால் மூன்று நாட்கள் தங்கி இருக்க வேண்டும். அதற்காக, 100 லீட்டர் மண்ணெண்ணை தேவைப்படும். ஆனால், 15 நாட்களுக்கு முன்னர் 6 லீட்டர் மண்ணெண்ணை தந்தார்கள், அதைக் கொண்டு எதுவும் செய்ய முடியாது. இப்போது, எங்காவது கூலி வேலை கிடைக்கின்றதா என தேடிப் போகின்றேன். அதுவும் தினமும் கிடைக்காது,“ என அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கு மீனவர்களைப் பொறுத்தவரை, ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்கள் கடந்த மூன்று தசாப்தங்க்ளாக பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுத்த இனவாத யுத்தத்தின் விளைவாக தொடர்ச்சியாக வாழ்வாதாதரம் பாதிக்கப்பட்டவர்களாவர். போர் முடிவடைந்து 13 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், இன்னமும் அவர்கள் இராணுவ ஆக்கிரமிப்பு, கடற்படை கெடுபிடிகள் மற்றும் பாஸ் நடைமுறை போன்றவற்றை எதிர்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டம் பூநகரியில் இருந்து மன்னார் மாவட்டம் வரையான கடற்பகுதியில் பாஸ் நடைமுறை அமுல்படுத்தப்படுகின்றது. கடலுக்கு செல்லும்போதும் கரைக்கு திரும்பி வரும்போதும் அந்தப் பகுதி மீனவர்கள் அருகில் உள்ள கடற்படை முகாமில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்யத் தவறிய மீனவர்கள் கடற்படையினரால் தாக்கப்படுவார்கள் அல்லது தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளைக் கையாண்டார்கள் என பொய்யான வழக்குகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் இருந்து வழக்கமாக மன்னார் கடலுக்கு செல்லும் மீனவர்கள், பாஸ் நடைமுறையால் அந்தப் பிரதேச கடற்கரைகளில் தங்கி நின்று தொழிலில் ஈடுபட முடியாதுள்ளனர்.

யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்த ஆர். அன்டனிராஜ், கடந்த வருடம் நவம்பர் 16 அன்று, தடைசெய்யப்பட்ட வலை பாவித்ததாக கூறி, வன்னி கடலில் வைத்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 9 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டதாகக் கூறினார். “24 மணித்தியாலத்துக்கு மேல், உணவு மற்றும் தண்ணீர் இன்றி தடுத்து வைக்கப்பட்ட பின்னர், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மூலம் கிளிநொச்சி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு பிணையில் விடுதலையானோம். எம்மீதான வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது. நாங்கள் பாவிக்கும் வலைகள் தடை செய்யப்பட்டவை அல்ல. வெளிப்படையாக கடைகளில் விற்பனைக்கு உள்ளன. 6 மாதங்களுக்குப் பின்னரே எமது வலைகள் மற்றும் வள்ளங்களை திருப்பித் தந்தனர். அவையும் சேதமடைந்திருந்தன. எமக்கு நீதிமன்றச் செலவு கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாவாகும்,” என அவர் விளக்கினார்.

ஆர். அன்டனிராஜ்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களில், அரசாங்கத்தின் அனுசரணயுடன் தனியார் முதலாளிகளால் அமைக்கப்பட்டு வரும் கடல் அட்டைப் பண்ணைகளால், பாரம்பரிய மற்றும் சிறு மீன்பிடியில் ஈடுபட்டுவரும் மீனவர்கள் தங்கள் தொழிலை இழக்கும் நிலைக்கு முகம் கொடுக்கின்றனர். இந்தப் அட்டைப் பண்ணைகளுக்கு பல ஏக்கர் கடல் பரப்புக்கள் ஒதுக்கப்படுவதால் ஏனைய மீனவர்களுக்கு மீன்பிடிப்பதற்கு கடல் பரப்புக்கள் இல்லாமல் போவதுடன், மீனவர்களின் படகுகள் நடமாடுவதற்கும் அல்லது வேறு கடற்பகுதிகளுக்கு செல்வதற்கும் பாதைகள் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த அட்டைப் பண்ணைகளுக்கு அருகில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களை, கடற்படையின் உதவியுடன் துரத்தியடிப்பதாகவும், தங்களை திருடர்கள் போல நோக்குவதால் தாங்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். அட்டைப் பண்ணையை மீனவர்கள் எதிர்க்கின்ற அதேவேளை, அந்நியச் செலாவணியை ஈட்டும் நோக்கத்துடன் கடற்றொழில் அமைச்சு இதனை விடாப்பிடியாக அமுல்படுத்தி வருகின்றது.

மீனவர்கள் கடலுக்குச் சென்று பாரம்பரியமாக மேற்கொண்டுவரும் சுழியோடி கடல் அட்டை பிடிக்கும் தொழிலுக்கு அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. விசேட அனுமதி பெற்றவர்கள் மாத்திரமே கடல் அட்டை பிடிக்க முடியும். மீனவ முதலாளிகளே இவ்வாறான அனுமதியைப் பெற்று, தொழிலாளர்களை கூலிக்கு அமர்த்தி குஞ்சு அட்டைகளைப் பிடித்து பண்ணை வளர்ப்பில் ஈடுபடுகின்றார்கள்.

கௌதாரிமுனையில் அமைக்கப்பட்டுள்ள கடல் அட்டை பண்ணைகளில் ஒன்று (Photo: WSWS media)

தடையை மீறி சாதாரண மீனவர்கள் அட்டை பிடிப்பில் ஈடுபட்டால், அவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு தண்டப்பணம் அறவிடப்படுகின்றது. பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள மீனவர்கள் மீது மேற்கொள்ளப்படும் இவ்வாறான ஒடுக்குமுறைகள், அவர்களை மேலும் மேலும் துன்பத்துக்குள் தள்ளுகின்றன.

கணபதிப்பிள்ளை ஜெகதீசன் (46), அரசாங்கம் கடல் அட்டை வளர்ப்பு பண்ணைத் திட்டத்துக்கு அனுமதியளிப்பதால், தாம் பெரும் பிரச்சினைக்கு முகம் கொடுத்து வருவதாக விளக்கினார். “அவர்கள் பாரிய கடற் பிரதேசத்தினைப் பிடித்து வைத்திருப்பதால் சாதாரண மீன்பிடியில் ஈடுபட்டிருக்கும் எமக்கு கடல் இல்லாமல் போகின்றது. இதனால், ஒரு சில தனியார் முதலாளிகளே வருமானம் ஈட்டுகின்றார்கள். சாதாரண தொழிலாளிகள் தமது தொழிலில் இருந்து வெளியேற்றப்படுகின்றார்கள். 6 பேர் கொண்ட எனது குடும்பம் மிகவும் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளது. நாங்கள் இரண்டு வேளை மாத்திரமே சாப்பிடுகிறோம்” என அவர் குறிப்பிட்டார்.

வடக்கில் பல மீனவ குடும்பங்கள் அறைகுறை குடிசைகளிலேயே வாழ்கின்றன. யாழ்ப்பாணம் மாநகரில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் நாவாந்துறையில், நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் கடற்கரையோரத்தில் உறுதி பத்திரங்கள் அற்ற காணியில் 20 வருடங்களுக்கு மேல் வாழ்கின்றன. இவர்களுக்கு சொந்தக் காணி இல்லை எனக் கூறி, அரசாங்க உதவிகள் எதுவும் வழங்கப்படுவதில்லை. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வந்த வீட்டுத்திட்டம் கூட இவர்களுக்கு வழங்கப்படவில்லை. இந்தக் காணிகளுக்கு உறுதி பத்திரம் பெற்றுத் தருமாறு, ஈழமக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற கட்சிகளிடம் விண்ணப்பித்த போதிலும, எதுவிதமான பிரயோசனமும் இல்லை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Loading