மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பு (IYSSE) ஏற்பாடு செய்திருந்த ‘உக்ரேனில் போரை நிறுத்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பாரிய இயக்கத்திற்காக!’ என்ற டிசம்பர் 10 பேரணியில் இவான் பிளேக் பின்வரும் கருத்துக்களை வழங்கியுள்ளார்.
பிளேக், கோவிட்-19 தொற்றுநோய்க்கான உலகளாவிய தொழிலாளர் விசாரணையின் (Global Workers’ Inquest) ஒருங்கிணைப்பாளரும், அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னணி உறுப்பினரும் ஆவார். IYSSE இல் சேர்வது பற்றிய கூடுதல் தகவல் அறிய, iysse.com வலைத் தளத்தைப் பார்வையிடவும்.
2020 முற்பகுதியில், உலக சோசலிச வலைத் தளம் (WSWS) உலக வரலாற்றில் தொற்றுநோய் ஒரு ‘தூண்டுதல் நிகழ்வு’ என்பதை அடையாளம் காட்டியது. இது முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடியையும் முரண்பாடுகளையும் மேலும் ஆழப்படுத்தும் மற்றும் ஏகாதிபத்திய போர் மற்றும் சோசலிச புரட்சிக்கான உந்துதலை துரிதப்படுத்தும்.
உக்ரேனில் போர் நீண்ட காலமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் திட்டமிடப்பட்டது, ஆனால் தொற்றுநோய் புவிசார் பதட்டங்களை கடுமையாக அதிகரிக்கச் செய்தது மற்றும் போர் வெடிப்பதற்கு களம் அமைத்தது.
கடந்த மூன்று ஆண்டுகளில், தொற்றுநோய் முதலாளித்துவ ஆளும் உயரடுக்குகளின் வெகுஜன மரணம் பற்றிய அதிர்ச்சியூட்டும் அலட்சியத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் மனிதகுலத்தை மூழ்கடித்த முதலாளித்துவ வர்க்கத்தை விட இன்றைய முதலாளித்துவ வர்க்கம் அதிக இரக்கமற்றது மற்றும் குற்றகரமானது என்பதை இது நிரூபித்துள்ளது. இலாப நோக்கத்திற்காக கோடிக்கணக்கான உயிர்களை தியாகம் செய்ய தயாராக இருப்பதை அவர்கள் மீண்டும் ஒருமுறை காட்டியுள்ளனர்.
தொற்றுநோய் என்பது, ஒவ்வொரு ஆளும் வர்க்கமும் அதன் மக்களுக்கு எதிராக தொடுத்துள்ள மற்றொரு போராகும். தொற்றுநோயின் போது முதலாளிகள் டிரில்லியன் கணக்கான டாலர்களை குவித்துள்ள அதேவேளை, உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும் கடந்த மூன்று ஆண்டுகளாக பேரழிவுகர நிலைமையை எதிர்கொண்டுள்ளனர்.
எக்னாமிஸ்ட் பத்திரிகையின் கூற்றுப்படி, கோவிட்-19 நோயின் காரணமாக தற்போது 20 மில்லியனுக்கும் அதிகமாக அதிகப்படியான இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. தொற்றுநோயின் முதல் இரண்டு ஆண்டுகளில் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதன்முறையாக உலகளவில் ஆயுட்காலம் குறைந்துள்ளது.
உலகம் முழுவதுமாக 10 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் கோவிட் நோயால் தங்கள் பெற்றோர் அல்லது முதன்மை பராமரிப்பாளரின் மரணத்தை எதிர்கொண்டனர். தங்கள் அன்புக்குரியவர்களின் இழப்பால் இந்த இளையவர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியும் துயரமும் அளவிட முடியாததாகும்.
கோவிட் நோய் குழந்தைகளை பாதிக்காது என்ற பொய்கள் இருந்தாலும், உலகளவில் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் அதனால் இறந்துள்ளனர் என்பதுதான் உண்மை, மேலும் இப்போது குழந்தை இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகவும் அது உள்ளது.
கூடுதலாக, கிட்டத்தட்ட உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் பாதிக்கும் நெடுங்கோவிட் நோயின் பெரும் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தொற்றுநோய் ‘வெகுஜன முடக்க நிகழ்வு’ என பொருத்தமாக விவரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மட்டும் இப்போது 20 மில்லியன் மக்கள் நெடுங்கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் இனி வேலை செய்ய முடியாத அளவிற்கு கடுமையாக ஊனமுற்ற 4 மல்லியன் மக்கள் அடங்குவர். உலகெங்கிலும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாம் இப்போது தொற்றுநோயின் மூன்றாவது குளிர்காலத்தில் நுழைகிறோம், ஜோ பைடென் மற்றும் பிற அரசியல்வாதிகளின் பொய்களுக்கு மாறாக, அது எந்தப் பகுதியிலும் முடிவை நெருங்கவில்லை. வடக்கு அரைக்கோளம் முழுவதும், நோய்தொற்றுக்களும் மருத்துவமனை அனுமதிப்புக்களும் மீண்டும் ஒருமுறை அதிகரித்து வருகின்றன.
நவம்பர் 11 ஆம் தேதி சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அதன் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை நீக்கத் தொடங்கி ஒரு மாதத்திற்குப் பின்னர், சீனாவில் நோய்தொற்றுக்கள் கட்டுப்பாட்டை மீறி பரவி வருவதால் இன்றைய பேரணி நடத்தப்படுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, பாரிய பரிசோதனை, தொடர்புத் தடமறிதல், தற்காலிக பூட்டுதல்கள், முகக்கவச கட்டுப்பாடு மற்றும் பிற பொது சுகாதார நடவடிக்கைகளை பயன்படுத்துவதன் மூலம் வைரஸ் பரவலை சீனா கட்டுப்படுத்தியது.
அவர்களின் தனிநபர் இறப்பு விகிதம் உலகின் எந்த பெரிய நாட்டினதையும் விட மிகக் குறைவாகும், அதாவது 1.1 மில்லியனுக்கும் அதிகமான மக்களை கோவிட் நோய்க்கு பலி கொடுத்த அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் சீனாவின் இறப்பு விகிதம் வெறும் 0.1 சதவீதமாக இருந்தது.
தொற்றுநோய் காலம் முழுவதும், ஏகாதிபத்திய சக்திகளும் அவற்றிற்கு கீழ்ப்படிந்த ஊடகங்களும் சீனாவில் பூஜ்ஜிய-கோவிட் கொள்கைக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றன. இரண்டு முக்கிய காரணங்களுக்காக அவர்கள் அவ்வாறு செய்துள்ளனர்.
முதலாவதாக, அவர்கள் சீனாவில் முதலாளித்துவ உற்பத்தியை முழுமையாக மீட்டெடுக்க முற்படுவதுடன், அவர்களின் இலாபங்களுக்கு இடையூறாகவுள்ள விநியோகச் சங்கிலி நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க சீனாவின் எல்லைகளை மீளத்திறக்க வைக்க அவர்கள் முயல்கின்றனர்.
இரண்டாவதாக, மேற்கத்திய சக்திகள் தங்கள் சொந்த குற்றவியல் கொள்கைகளுக்கு அரசியல் மூடிமறைப்பை வழங்க முயல்கின்றன. சீனாவில் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையின் முடிவு என்பது, மில்லியன் கணக்கான மக்களை பலி கொள்ளக்கூடும் என்பது அவர்களுக்குத் தெரியும், இது அமெரிக்காவும் ஐரோப்பிய சக்திகளும் தங்கள் நாடுகளில் நிகழ்ந்த மில்லியன் கணக்கான தேவையற்ற மரணங்கள் தவிர்க்க முடியாதவை என்று கூறிக்கொள்ள உதவும்.
தொற்றுநோயின் ஆரம்பத்தில், சீனா, நியூசிலாந்து மற்றும் பிற நாடுகளால் கொரோனா வைரஸை முற்றிலும் அகற்ற முடியும் என்பது நிரூபிக்கப்பட்டது. பூஜ்ஜிய-கோவிட் கொள்கை நீக்கப்பட்டதன் பின்னர், ஒவ்வொரு நாடும் பேரழிவை எதிர்கொண்டுள்ளன.
இந்த அனுபவத்தின் முக்கியப் பாடம் என்னவென்றால், தொற்றுநோயை நிறுத்தியிருக்கலாம், மேலும் இன்னும் கூட அதை நிறுத்த முடியும் என்பதே, ஆனால் அதற்கு உலகளவில் ஒருங்கிணைந்த மூலோபாயம் தேவை. நீண்ட காலத்திற்கு, ஒரு நாட்டில் மட்டும் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையைச் செயல்படுத்தப்படுவது சாத்தியமற்றதே.
கடந்த மாதம், மனிதகுலம் இன்றளவில் உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகை எட்டு பில்லியனைக் கடப்பதை கண்டது. நாம் ஆழமாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகளாவிய சமூகத்தில் வாழ்கிறோம், மேலும் தொற்றுநோய் என்பது முதலாளித்துவத்தின் கீழ் நாம் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினையாகும்.
சமூக முன்னணியில், முதலாளித்துவ தனியார் உடைமையின் கீழான தொழில்துறை வளர்ச்சியானது எப்போதும் ஆழமடைந்து வரும் சமூக சமத்துவமின்மைக்கு வழிவகுக்கிறது.
புவிசார் அரசியல் முன்னணியில், உலகின் முதலாளித்துவ பிளவு போட்டி தேசிய அரசுகளை உருவாக்குவதானது போர் வெடிப்பதற்கும் ஏகாதிபத்திய சூறையாடலுக்கும் இட்டுச் செல்கிறது.
இயற்கையுடனான மனிதகுலத்தின் தொடர்பிலும் மற்றும் நமது உயிர்வாழ்வுக்குத் தேவையான வளங்களைப் பிரித்தெடுப்பதிலும், முதலாளித்துவ வளர்ச்சி காலநிலை மாற்றம் மற்றும் தொற்றுநோய்களின் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது, இவை ஆழமாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன.
காலநிலை மாற்றம் இந்த தலைமுறை எதிர்கொள்ளும் மிகப்பெரிய ஆபத்துகளில் ஒன்றாகும். இந்த நூற்றாண்டில் மட்டும், புவி வெப்பமடைதலின் விளைவுகளால் ஏற்கனவே பல கோடி மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இதே நிலை தொடர்ந்தால், வரும் தசாப்தங்களில் உலகம் முழுவதிலும் உள்ள கடலோரப் பகுதிகள் வாழத் தகுதியற்றதாகிவிடும் என்ற நிலையில், இன்னும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் இடம்பெயர்வார்கள்.
வெள்ளம், காட்டுத்தீ, வறட்சி, புயல்கள், வெப்ப அலைகள் மற்றும் முக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகளின் சீர்குலைவு ஆகியவற்றால் பல மில்லியன் மக்கள் இறக்கக்கூடும்.
ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, கோவிட்-19, எச்ஐவி, எபோலா மற்றும் பிற நோய்கள் விஷயத்தில் நடந்ததைப் போல, காலநிலை மாற்றம் விலங்குகளிடையே ஏற்கனவே உள்ள வைரஸ்கள் மனிதர்களிடம் பரவுவதற்கான சாத்தியக்கூறுகளை வியத்தகு முறையில் அதிகரிக்கும் என்பதைக் கண்டறிந்துள்ளது.
இடைவிடாத பிரச்சாரத்தின் மூலம் கோவிட்-19 இன் தற்போதைய ஆபத்துகள் மூடிமறைக்கப்பட்ட கடந்த ஆண்டு அனுபவம், அடுத்த தொற்றுநோய் முழு அலட்சியத்துடன் எதிர்கொள்ளப்படும் என்பதைக் காட்டுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் காலநிலை நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலையில், மில்லியன் கணக்கான இளைஞர்கள் இந்த ஆபத்துக்களைப் பற்றி அறிந்துகொண்டு, பெருகிவரும் பேரழிவைத் தடுப்பதற்கான வழிகளைத் தேடுகின்றனர். 150 நாடுகளில் 4,500 இடங்களில் 6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதன் மூலம், 2019 ஆம் ஆண்டு காலநிலை மாற்றத்திற்கு எதிரான வரலாற்றில் மிகப்பெரிய போராட்டங்களை எதிர்கொண்டது.
இந்த சக்திவாய்ந்த ஆர்ப்பாட்டங்களுக்கு அதிகாரத்தில் இருந்தவர்களிடமிருந்து வெற்று வாக்குறுதிகள் மட்டுமே கிடைத்தன. காலநிலை மாற்றத்தைத் தடுக்க முதலாளிகள் இதுவரை எதையும் செய்யவில்லை, இன்னும் தொடர்ந்து எதையும் செய்யப்போவதுமில்லை. அவர்களின் முன்வைக்கப்பட்ட அனைத்து முறையீடுகளும் செவிடன் காதில் ஊதப்பட்ட சங்காகின.
தொற்றுநோய் காலம் முழுவதும், முதலாளித்துவ அரசாங்கங்கள் இந்த நூற்றாண்டில் நிகழ்ந்துள்ள மிகப்பெரிய பொது சுகாதார நெருக்கடிக்கு ஒரு பகுத்தறிவார்ந்த விஞ்ஞான பதிலை ஒழுங்கமைக்க அவை திறனற்றவை என்பதை நிரூபித்துள்ளன. இந்நிலையில், அவர்கள் போக்கை மாற்றுவார்கள் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு தீர்வு காண்பார்கள் அல்லது எதிர்கால தொற்றுநோய்களை எதிர்கொள்ள தயாராவார்கள் என்று நம்புவது வெறும் மாயையே.
மாறாக, இளைஞர்கள் முதலாளித்துவ சமூகத்தில் உள்ள புரட்சிகர சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்ப வேண்டும். ஏனென்றால், முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் உலகளாவிய இயக்கம் இல்லாமல் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எதையும் தீர்க்க முடியாது.
IYSSE மட்டும் தான், விஞ்ஞானத்தை நிலைநாட்டக்கூடிய, மற்றும் நாம் எதிர்கொள்ளும் புறநிலை யதார்த்தத்திலிருந்து தேவையான அரசியல் முடிவுகளை எடுக்கக்கூடிய உலகின் ஒரே இளைஞர் இயக்கமாகும். தொற்றுநோய் காலம் முழுவதும், உலகம் முழுவதும் வைரஸ் பரவுவதைத் தடுக்கத் தேவையான அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளையும் ஒழுங்கமைக்க உலகளவில் ஒருங்கிணைந்த பூஜ்ஜிய-கோவிட் மூலோபாயத்திற்கு நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம்.
உலகளாவிய சோசலிச பொது சுகாதாரத் திட்டம் என்பது, கோவிட் நோயை மட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்களைக் கொல்லும் பல நோய்களையும் அகற்ற முடியும்.
பருவநிலை மாற்றத்திற்கு விடையிறுக்கும் வகையில், கிரீன்ஹவுஸ் வாயுக்களை தீவிரமாக குறைக்க சர்வதேச அளவில் எரிசக்தி, போக்குவரத்து மற்றும் விவசாய உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் முழுமையான மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். இதை அடைவதற்கு, பெருநிறுவனங்களையும் வங்கிகளையும் சர்வதேசமயமாக்கவும், மேலும் கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதற்கும், மற்றும் காற்று மற்றும் சூரிய சக்தி, கார்பன் சேகரிப்பு, மற்றும் பல தொழில்களில் முதலீடு செய்வதற்கும் பெரியளவிலான இராணுவ வரவு செலவுத் திட்டங்களை மறு ஒதுக்கீடு செய்யவும் நாங்கள் கோருகிறோம்.
நாங்கள் தேசியவாதத்திற்கு எதிராக சர்வதேசவாதத்தை ஆதரிக்கிறோம். ஏகாதிபத்திய போர் திட்டமிடலுக்கு எதிராக, ஒவ்வொரு நாட்டிலும் சமத்துவமின்மை, பாசிசத்தின் அச்சுறுத்தல், தொற்றுநோய், காலநிலை மாற்றம் மற்றும் வறுமை ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு போரை நாங்கள் முன்மொழிகிறோம். எனவே, சோசலிசத்திற்கான இந்த போராட்டத்தில் எங்களுடன் இணையுங்கள்.
மேலும் படிக்க
- சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும், போருக்கு எதிரான போராட்டமும்
- உலக முதலாளித்துவத்தின் விருப்பத்திற்கிணங்க, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சீனாவைக் கோவிட்-19 க்கு திறந்து விடுகிறது
- ஓமிக்ரோன் இலேசானது என்ற பொய்யின் அடிப்படையில் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையிலிருந்து மாறுவதாக சீன துணைப் பிரதமர் சமிக்ஞை செய்கிறார்