மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) அதன் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையைக் கைவிட்டதன் விளைவாக சீனா முழுவதும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மிகப்பெரிய சமூகக் குற்றத்தின் மீது அதிகரித்தளவில் கவனம் குவிகிறது. கடந்த புதன்கிழமை மூடிய அறையில் நடந்த சுகாதாரம் குறித்த சுருக்கச் செய்தியாளர் கூட்டத்தில், சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் துணை இயக்குநர் சன் யாங் வெளியிட்ட ஒரு கசிந்த அறிக்கையின்படி, டிசம்பர் மாதம் முதல் 20 நாட்களுக்குள் சீனா முழுவதும் சுமார் 250 மில்லியன் மக்கள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பாரியளவிலான நோய்தொற்று எண்ணிக்கையானது சீனாவின் 1.4 பில்லியன் மக்கள்தொகையில் 18 சதவீதத்தைக் குறிக்கிறது, மற்றும் தேசிய சுகாதார ஆணையத்தின் (NHC) உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களுக்கு முற்றிலும் வேறுபட்டு உள்ளது, அதாவது அதே நாட்களில் வெறும் 62,592 அறிகுறியுள்ள நோய்தொற்றுக்கள் மட்டும் பதிவாகியுள்ளதாக அது தெரிவித்துள்ளது. டிசம்பர் 20, செவ்வாயன்று ஒரே நாளில் மட்டும் சுமார் 37 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சன் மதிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் கிங்டாவோ (Qingdao) மற்றும் டோங்குவான் (Dongguan) ஆகிய இரண்டு நகரங்களால் நடத்தப்பட்ட பொது தோராய மதிப்பீட்டுடன் சன் இன் தனிப்பட்ட மதிப்பீடுகள் ஒத்துப்போகின்றன. கிங்டாவோவின் சுகாதார ஆணையத்தின் தலைவரான போ தாவோ, வெள்ளிக்கிழமை நிலவரப்படி, நகரத்தில் ஒவ்வொரு நாளும் சுமார் 490,000-530,000 புதிய நோய்தொற்றுக்கள் பரவி இருப்பதாக மதிப்பிட்டுள்ளார், மேலும் மாதிரி தரவுகளின் அடிப்படையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த எண்ணிக்கையில் மேலும் 10 சதவீதம் அதிகரிக்கும் என அவர் எதிர்பார்த்தார்.
டோங்குவானில், நகர ஆணையத்தின் கணினி மாதிரி தரவுகளும் நிபுணர்களும் வெள்ளிக்கிழமை அன்று, தற்போது நகரம் முழுவதும் ஒரு நாளைக்கு தோராயமாக 250,000-300,000 புதிய நோய்தொற்றுக்கள் பரவுவதாக மதிப்பிட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையும், அத்துடன் நாடு முழுவதும் உள்ள நோய்தொற்றுக்களின் அளவுகளும், சந்திர புத்தாண்டு விடுமுறை காலத்தின் காரணமாக அடுத்த மாதத்தில் பாரியளவில் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழமையான பரிசோதனைகள் கைவிடப்பட்டு, தேசிய சுகாதார ஆணையமே (NHC) நோய்தொற்றுக்களை பதிவு செய்தாலும் கூட நோய்தொற்றுக்களும் இறப்புக்களும் பெரிதும் குறைத்து மதிப்பிடப்படுகின்றன, இது தொற்றுநோய் காலம் முழுவதும் பாரிய தொற்றுநோய் கொள்கைகளை மேற்பார்வையிட்ட ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் பிற நாடுகளிடமிருந்து ஒரு பாசாங்குத்தனமான பதிலைத் தூண்டுகிறது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கென் மற்றும் சீன வெளியுறவு மந்திரி வாங் யீ இடையேயான சமீபத்திய தொலைபேசி உரையாடலில், கோவிட்-19 நோய் தொடர்பான ‘வெளிப்படைத்தன்மையின்’ அவசியத்தை பிளிங்கென் வலியுறுத்தினார். உலக சுகாதார அமைப்பும் (WHO) மற்றும் இந்தியாவில் உள்ள அதிகாரிகளும் கூட பெய்ஜிங் துல்லியமாக நோய்தொற்றுக்களின் விபரத்தை அறிக்கை செய்யாதது குறித்து கவலை தெரவித்துள்ளனர்.
மனித வாழ்வின் மீதான அக்கறையினால் உருவாக்கப்படுவதாகக் கூறப்படும் இந்த புள்ளிவிபரங்களின் பாசாங்குத்தனத்தை அங்கீகரிக்க, கடந்த பிப்ரவரியில், முகக்கவச பயன்பாட்டை அவசியமற்றதாக்க, அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) நோய்தொற்று தரவுகளை அப்பட்டமாக சிதைத்ததை, அல்லது கடந்த ஆண்டு டெல்டா மாறுபாட்டின் பேரழிவுகர வெடிப்பின் போது இந்தியாவில் நடத்தப்பட்ட பெரும் எண்ணிக்கைகளிலான இறுதிச் சடங்குகளை ஒருவர் நினைவுகூர வேண்டும்.
சாராம்சமாக, சீன கம்யூனிஸ்ட் கட்சியானது, அமெரிக்கா, இந்தியா மற்றும் பிற நாடுகள் முன்னோடியாக வழிகாட்டிய அதே செயல்முறைகளை அப்படியே பின்பற்றுகிறது, அதாவது கோவிட்-19 நோயின் விளைவுகளைக் குறைத்துக் காட்டுதல், இறப்புக்கான காரணங்களின் அளவுகோல்களைக் கையாளுதல், நோய்தொற்றுக்களைக் குறைத்துக் காட்டுதல் மற்றும் ஊடகங்கள் மூலம் தவறான பிரச்சாரத்தைத் தூண்டுதல் போன்றவை இதில் அடங்கும்.
மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகளால் விவரிக்கப்பட்ட சீன மருத்துவமனைகளின் காட்சிகளானது, 60 வயதுக்கு மேற்பட்ட சீனாவின் 267 மில்லியன் குடிமக்களில் பெரும்பாலோர் வாழும் முக்கிய நகரங்களில் நோய்தொற்றுக்கள் எந்தளவிற்கு உள்ளன என்பதற்கு சாட்சியமளிக்கின்றன. கையடக்க படுக்கைகள், ஆக்சிஜன் இணைப்புக்கள் மற்றும் நோய்தொற்றாளர்களை படுக்க வைப்பதற்கான இடங்கள் இல்லாமல் நெருக்கடியில் சிக்கியிருக்கும் மருத்துவமனைகள் வயதான நோயாளிகளின் வெள்ளத்தில் மூழ்கி வருகின்றன. பல மருத்துவர்கள் பணியைத் தொடர முடியாத அளவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனர், மற்றவர்கள் நோய்தொற்று பாதிப்புடன் கூட வேலை செய்கிறார்கள்.
Beijing Friendship மருத்துவமனையில் உள்ள ஒரு நரம்பியல் நிபுணர் சமீபத்திய பேட்டியில் பைனான்சியல் டைம்ஸிடம் இவ்வாறு தெரிவித்தார், “அனைத்து மருத்துவர்களும் சோர்ந்துவிட்டனர், மற்ற துறைகளிலும் போதுமான மருத்துவர்கள் இல்லாத நிலையில், நோயாளிகளை வேறு எங்கும் அனுப்ப முடியவில்லை, ER உம் நோயாளிகளால் நிரம்பியுள்ளது. அவற்றை முன்னோக்கி நகர்த்துவதற்கு எங்களுக்கு அதிக காலம் பிடிக்கும்.” பேட்டி எடுக்கப்பட்ட நரம்பியல் நிபுணர் கூட கோவிட்-19 நோயிலிருந்து மீண்டு வந்தவர்தான் என்பதுடன், முகக்கவசம் அணிந்தவாறே அவர் இருமிக் கொண்டிருந்தார்.
ஆம்புலன்ஸ்களும் நெருக்கடியில் இருந்ததால், நோயாளிகளை தூக்குப் படுக்கைகளில் வைத்து இறக்க முடியவில்லை. ஹேங்ஜோவு (Hangzhou) நகரில் அவசரகால ஆம்புலன்ஸ் சேவைக்கு தன்னார்வமுள்ள ஓட்டுநர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். அரசு நடத்தும் ஈமச்சடங்கு சேவைகள் பெருமளவு சடலங்களின் வருகையினால் அடக்கம் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கின்றன. பெய்ஜிங் சாவோயாங் ஒருங்கிணைந்த மருத்துவம் (Beijing Chaoyang Integrative Medicine) போன்ற பிரத்யேகமாக கட்டப்பட்ட அவசர வசதிகள், தற்காலிக பிணவறைகளாக மாற்றப்பட்டுள்ள அறைகளைக் கொண்டுள்ளன.
மக்கள் அதிக எண்ணிக்கையில் வீட்டில் இறந்து கொண்டிருப்பதை மற்ற அறிகுறிகள் காட்டுகின்றன. வீட்டில் பயன்படுத்த ஆக்சிஜன் எந்திரங்களின் தேவை அதிகரித்து வருகிறது. இருமல் மற்றும் இதர மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. யுனானில் (Yunnan), அதிகாரிகள் ibuprofen மருந்தை வாங்குபவர் ஒருவருக்கு ஒரு பெட்டி வீதம் மட்டுப்படுத்தி விற்கின்றனர், ஆன்டிஜென் சோதனைகளின் விற்பனையை வாரத்திற்கு ஆறு என மட்டுப்படுத்தியுள்ளனர். நாடித்துடிப்பு விகிதங்களையும் ஆக்சிஜன் செறிவூட்டலையும் அளவிடும் சாதனமான ஆக்சிமீட்டர்களின் விற்பனை கடுமையாக உயர்ந்துள்ளது. இதயம் மற்றும் நுரையீரல் ஆரோக்கியத்தைக் கண்டறியப் பயன்படும் இந்தக் கருவிகளின் உற்பத்தி தேவைக்கேற்ப அதிகரிக்கப்படுகிறது.
சன் இன் மதிப்பீடுகள் கசிந்த சில நாட்களுக்குப் பின்னர், ஞாயிற்றுக்கிழமை, NHS, கோவிட்-19 நோய்தொற்றுக்கள் பற்றி இனி அறிக்கை செய்யாது என ஒரு அறிக்கை வெளியிட்டது. ஆத்திரமூட்டும் வகையில், சுகாதார அமைப்பு கோவிட்-19 இறப்புக்கான வரையறையை மற்ற தொடர்புடைய உடல்நலக் கோளாறுகளைத் தவிர்த்து ‘சுவாசக் கோளாறு’ என்று மட்டுமே சுருக்கியுள்ளது, இது நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களின் உத்தியோகபூர்வ எண்ணிக்கைகள் இப்போது முற்றிலும் நம்பமுடியாதவை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
பெய்ஜிங்கில் குறைந்தபட்சம் மூன்று உயர்மட்ட இறப்புக்கள் கோவிட்-19 காரணமாக ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது. 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் சின்னத்தின் முன்னணி வடிவமைப்பாளரான 67 வயதான வூ குவான்யிங் ‘கடுமையான ஜலதோஷத்தினால்’ இறந்தார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டது சமூக ஊடகங்களில் எதிர்ப்பைத் தூண்டியது. ஷென்யாங் ஜிண்டே அணியின் கால்பந்து ஆட்டக்காரர் வாங் ருவோஜி, 37 வயதில் ‘நீரிழிவு சிக்கல்களால்’ இறந்ததற்கு கோவிட்-19 நோய் தான் காரணம் என நம்பப்படுகிறது. மேலும், ஓபேரா பாடகர் சூ லான்லன், வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு சிறிது காலத்திலேயே இறந்தார்.
சீனாவின் தற்போதைய ஆதிக்க மாறுபாடாகவுள்ள ஓமிக்ரோனின் BF.7 துணை மாறுபாட்டின் மிகுந்த தொற்றும் தன்மையானது, பெரும்பாலும் இதுவரை வைரஸ் தொற்றுக்கு ஆளாகாதவர்களுக்கு குறிப்பாக ஆபத்தானது. ஒட்டுமொத்த தடுப்பூசி விகிதம் 90 சதவீதத்திற்கு மேல் உள்ளது, ஆனால் பெரியவர்களில் 57.9 சதவீதம் பேர் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி பெற்றுள்ளனர், மேலும் 80 வயதுக்கு மேற்பட்டவர்களின் பூஸ்டர் தடுப்பூசி விகிதம் வெறும் 42.3 சதவீதமாகும்.
எவ்வாறாயினும், தடுப்பூசி விகிதங்கள் மட்டும் இந்த கட்டுக்கடங்காத பேரழிவிற்கு காரணம் அல்ல. ஏகாதிபத்திய சக்திகளின் தொடர்ச்சியான அழுத்தத்தின் கீழ், சீன கம்யூனிஸ்ட் கட்சி பூஜ்ஜிய-கோவிட் ஒழிப்பு மூலோபாயத்தை அகற்றுவதுதான், ஏராளமான சீன குடிமக்களை ஆபத்தில் ஆழ்த்துவதுடன், கொன்று குவிக்கிறது.
நவம்பரில், விநியோகச் சங்கிலி மற்றும் தொழிலாளர் தொடர்பான பற்றாக்குறைகள் தொடர்ந்தால், தங்கள் வணிகங்களை வேறு இடங்களுக்கு நகர்த்தப் போவதாக அச்சுறுத்தி Nike மற்றும் Apple போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் கொடுத்த நேரடி அழுத்தமானது பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை விரைவாக நீக்கத் தூண்டியது. சீனா மிகச் சிறந்த மலிவு உழைப்பு களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் சீன கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாள வர்க்கத்தை நோய், குறைபாடு மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும் ஆபத்தான நிலைமைகளில் ஆழ்த்த கட்டாயப்படுத்துகிறது.
சந்திர புத்தாண்டு கொண்டாட்டங்கள் நெருங்கிக் கொண்டிருக்கையில், பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதானது வரும் வாரங்களில் நூற்றுக்கணக்கான மில்லியன் தொழிலாளர்கள் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படும் கிராமப்புற மாகாணங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. ‘என்றென்றும் கோவிட்’ கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி, எல்லைகள் அல்லது பொதுக் கூட்டங்களுக்கு எந்தத் தடையுமின்றி மக்கள் பயணிப்பதற்கு நாட்டைத் திறக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது.
சனிக்கிழமையன்று, கல்வி அமைச்சகம், 4.74 மில்லியன் மாணவர்கள் தேசிய முதுகலை கல்வி சேர்க்கைக்கான தேர்வுகளில் நேரில் கலந்து கொண்டதை உறுதி செய்தது. இதில் கோவிட்-19 நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் கூட நோய்தொற்று இல்லாதவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு தனி அறையில் தேர்வு எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்தக் கொள்கைகள் கோவிட்-19 நோய்க்கு ஒரு புதிய வாழ்க்கையைத் தருகின்றன. மக்களைத் தனிமைப்படுத்த அல்லது அடிப்படைத் தணிப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்த எந்தவித உண்மையான முயற்சியும் மேற்கொள்ளாமல் திடீரென, இவ்வளவு பெரிய மக்கள்தொகையில் இந்த அதிக தொற்றும் தன்மையுள்ள நோயைக் கட்டவிழ்த்துவிடுவது, புதிய மற்றும் மிகவும் ஆபத்தான மாறுபாடுகளை உருவாக்கக்கூடிய பரிணாமப் பாதைக்கு பெரியளவில் துரிதப்படுத்துகிறது.
Nature பத்திரிகையில் வெளியான சமீபத்திய கட்டுரை இவ்வாறு எச்சரித்துள்ளது, “கடந்த ஆண்டில் வைரஸுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வெளிப்பாட்டை கொண்டிருந்த நாடுகள் என்ன கண்டுபிடித்தன என்பதை சீனா கண்டறிய வாய்ப்புள்ளது: தொற்றுநோய் கட்டுப்பாடுகளின் நீக்கத்தைக் குறிப்பதாக ஒரு ‘வெளியேறும்’ அலை கூட இருக்காது. அதாவது, நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களின் மேலதிக அலைகள், மக்கள்தொகையில் உருவெடுக்கும் புதிய மாறுபாடுகள் அல்லது நாடு அதன் எல்லைகளை பார்வையாளர்களுக்குத் திறக்கும் போது இறக்குமதியாகும் மாறுபாடுகள் ஆகியவற்றிலிருந்து தொடர்ந்து எழுச்சி பெற வாய்ப்புள்ளது.”
உலகளாவிய நிதி மூலதனத்தின் அழுத்தங்களின் கீழ் சீனாவின் தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் வர்க்க நலன்களால் தூண்டப்பட்ட பூஜ்ஜிய-கோவிட் நடவடிக்கைகளை அகற்றுவது குற்றமானது போலவே குறுகிய பார்வை கொண்டது. மக்களுக்கு என்ன நடக்கும் என்பதற்கு உலகம் முழுவதும் ஏராளமான உதாரணங்கள் உள்ளன, ஆனால் அவை சீன ஆளும் வர்க்கத்தால் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகின்றன. Airfinity என்ற சுகாதாரத் தரவு நிறுவனத்தின் மதிப்பீடானது, தற்போதைய நோய்தொற்று எழுச்சியால் மட்டும் சீனாவில் 1.3-2.1 மில்லியன் மக்கள் இறக்கக்கூடும் என்று கூறுகிறது.
ஏகாதிபத்திய சக்திகளின் மற்றும் சீனாவின் முதலாளித்துவ வர்க்கமானது, முதலாளித்துவ உற்பத்தியை முழுமையாக மீளத்தொடங்குவதற்கும், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளுக்கு ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்குமான ஒரு நடைமுறை முயற்சியில் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை நீக்கியுள்ளது என்றாலும், உண்மையில், இந்த பொறுப்பற்ற கொள்கை ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தையும் மேலும் சீர்குலைக்கும்.
குறுகிய காலத்தில், உலக உற்பத்தி மையம் தற்போது நோய் மற்றும் மரணத்தின் ஒரு பாரிய சமூக நெருக்கடியில் மூழ்கியுள்ளது. நீண்ட காலத்திற்கு, நெடுங்கோவிட் நோயால் ஊனமுற்றவர்களின் வரிசையில் பல மில்லியன் சீனத் தொழிலாளர்கள் இணைவதற்கு சாத்தியம் உள்ளது. அமெரிக்காவில் மட்டும், 4 மில்லியன் மக்கள் நெடுங்கோவிட் நோயால் முடக்கப்பட்டுள்ளனர், அவர்கள் பணிகளிலிருந்து வெளியேறிவிட்டனர்.
இந்நிலையில், நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்கள் குறித்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொய்களும் மூடிமறைப்புகளும் அம்பலப்படுத்தப்படும் என்பதுடன், சீன தொழிலாள வர்க்கத்தின் மீதான உலக முதலாளித்துவத்தின் குற்றவியல் தன்மை மேலும் வெளிப்படும். இந்த சமூக குற்றத்திற்கு சீன மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் எதிர்வினை பெரியளவினதாக இருக்கும், ஆனால் அது நனவாக ஒழுங்கமைக்கப்பட வேண்டும். சர்வதேச அளவில் உள்ள தொழிலாளர்கள், தடுக்கக்கூடிய நோய்கள் வேண்டுமென்றே பரவவிடப்பட்டுள்ளதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளை செயல்படுத்தி மனித இனத்தைப் பாதுகாப்பதற்கும் சோசலிசக் கொள்கைகளைச் செயல்படுத்துவதற்கான தங்கள் போராட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டும்.