மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
சமீபத்திய வாரங்களில் இங்கிலாந்தில் 19 குழந்தைகள் தொண்டை நோய் (Strep A) நோய்க்கிருமியால் இறந்துள்ளனர், இது கடைசி பெரிய நோய்தொற்று வெடிப்பின் போது 2017-2018 ஒட்டுமொத்த காலத்தில் பதிவான 27 குழந்தை இறப்புக்களை நெருங்குகிறது. பெரும்பாலான நோய்தொற்றுக்கள் பொதுவாக பிப்ரவரி மற்றும் ஏப்ரல் தொடக்கத்தில் நிகழ்கின்றன.
இந்த காலத்தில் இதுவரை, Strep A நோய்தொற்றால் ஏற்படும் ஸ்கார்லட் (scarlet) காய்ச்சலால் 7,750 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், மருத்துவர்களின் கவலையுடன், இது 2017-2018 இல் இதே காலத்தில் நிகழ்ந்த நோய்தொற்றுக்களை விட மும்மடங்கு அதிகமாகும், இந்த எண்ணிக்கை இன்னும் உச்சத்தை எட்டவில்லை.
அரிதான சந்தர்ப்பங்களில், பாக்டீரியா இரத்த ஓட்டத்தில் கலந்து உடலை ஆக்கிரமிக்கும் Group A Strep (iGAS) நோயை ஏற்படுத்தும். டிசம்பர் 2 அன்று வெளியிடப்பட்ட இங்கிலாந்து சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பின் (UK Health Security Agency-UKHSA) தரவுகளின்படி, தொற்றுநோய்க்கு முந்தைய காலங்களில் (2017 முதல் 2019 வரை) ஒன்று முதல் நான்கு வயதான குழந்தைகளில் ஒவ்வொரு 100,000 பேரில் சராசரியாக 0.5 பேர் பாதிக்கப்பட்டதுடன் ஒப்பிடுகையில், இந்த வயது பிரிவினரின் தற்போதைய நோய்தொற்று விகிதம் 2.3 ஆக உயர்ந்துள்ளது, அதேபோல் ஐந்து முதல் ஒன்பது வயது குழந்தைகளில் ஒவ்வொரு 100,000 பேரில் சராசரியாக 0.3 பேர் பாதிக்கப்பட்டதுடன் ஒப்பிடுகையில், இந்த வயது பிரிவினரின் தற்போதைய நோய்தொற்று விகிதம் 1.1 ஆக உயர்ந்துள்ளது
எளிதில் சிகிச்சையளிக்கக்கூடிய நோயால் ஏற்பட்டுள்ள இந்த குழந்தைகளின் மரணம் பெரியளவில் நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால், தொண்டை நோய் மீது பிரத்யேக கவனம் செலுத்துவது போல் காட்டி, இந்த குளிர்காலத்தில் நிகழ்ந்த பரந்த பொது சுகாதார பேரழிவை புதைகுழியிலிட்டு மறைக்க இந்த துயரங்களைப் பயன்படுத்திய பெருநிறுவன ஊடகங்களின் மறைமுக நோக்கங்களிலிருந்து உண்மையான மக்களின் அனுதாபத்தையும் அக்கறையையும் பிரித்துப் பார்ப்பது முக்கியம்.
ஆண்டின் தொடக்கத்தில், சுவாச ஒத்திசைவு வைரஸ் (RSV), இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கோவிட்-19 ஆகிய மூன்று நோய் பாதிப்புகளைக் குறிக்கும் ‘மூன்று வகை நோய்தொற்றுக்கள்’ (‘tripledemic’) பொதுவானதாக இருந்தன. முன்கணிக்கப்பட்ட நோய்தொற்று எழுச்சி தொடங்கிய நிலையில், செய்தி இதழ்கள் மற்றும் ஒளிபரப்பு வலையமைப்புகளில் இது பற்றிய செய்திகள் குறைந்துள்ளன.
RSV நோய்தொற்று பரவலின் நேர்மறை விகிதங்கள் டிசம்பர் 5-11 தேதிகளுக்கு இடையில் 7.7 சதவீதமாகவும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 20 சதவீதமாகவும் இருந்தன. இந்த இளம் குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் விகிதம் ஒவ்வொரு 100,000 பேருக்கு 18.5 பேர் என்ற வீதத்தில் உள்ளது.
வயோதிபர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் நோய்களும் அதிகரித்து வருகின்றன. கடந்த வாரத்தில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 966 இல் இருந்து 1,377 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய விகிதத்தின்படி, மருத்துவமனை அனுமதிப்புக்களானது, 30,000 இறப்புக்களை ஏற்படுத்திய 2017-18 காய்ச்சல் வெடிப்பின் போதான உச்சபட்ச எண்ணிக்கையை அடுத்த வாரத்தில் விஞ்சக்கூடும்.
கோவிட் நோய்தொற்றுக்களும் அதிகரித்து வருகின்றன, டிசம்பர் 6-13 தேதிகளில் மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெறும் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை 17 சதவீதம் அதிகரித்து, 5,982 ஆக உயர்ந்தது. டிசம்பர் 3 ஆம் தேதி வரையிலான வாரத்தில் 50 பேருக்கு ஒருவர் வீதம் கோவிட் நோய் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டது, இது முந்தைய வாரத்தில் 60 பேருக்கு ஒருவர் வீதம் பாதிக்கப்பட்ட விகிதத்திலிருந்து அதிகரித்திருந்தது. இந்த ஆண்டு வைரஸால் ஏற்கனவே 37,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர், அதன் கொடிய கட்டம் பொதுவாக டிசம்பர் பிற்பகுதியில் தொடங்குகிறது.
நோய்தொற்றுக்கள் அதிகரிப்பதற்கான காரணங்கள்
கோவிட் அல்லாத நோய்களின் இந்த முன்னோடியில்லாத அதிகரிப்புக்கான காரணங்களின் துல்லியமான சமநிலை பற்றி விஞ்ஞான சமூகத்தில் விவாதிக்கப்படுகிறது. இரண்டு விஷயங்கள் நிச்சயம். கோவிட் நோயைப் போல, நோய்தொற்றுக்களின் நெருக்கடி உருவாக அனுமதிக்கப்படுவதற்கு அரசாங்கம் தான் பொறுப்பாகும். மேலும், பொது சுகாதார விரோத வலதுசாரிகள் குழப்பத்தை விதைப்பதற்கும், நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்வதற்கும் மக்களின் துன்பத்தைப் பயன்படுத்துகின்றனர்.
டெய்லி டெலிகிராப் போன்ற பத்திரிகைகளில் ஒரு தளம் வழங்கப்பட்ட இந்த பிற்போக்குவாதிகள், பூட்டுதல்களால் ஏற்படும் “நோயெதிர்ப்புக் கடன்” என்ற கருத்தை ஊக்குவித்துள்ளனர், அதாவது மக்கள் நோய்தன்மைக்கு தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாததால் ஒவ்வொரு நபரின் நோயெதிர்ப்பு மண்டலத்தில் உருவாகும் மந்தநிலையானது நோய்தொற்றின் மூலம் ஈடுசெய்யப்பட வேண்டும் என்கிறார்கள். இது போலி விஞ்ஞான “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கையின் புதிய விளக்கமாகும், கடந்த இரண்டு ஆண்டுகளில் பொது சுகாதார நடவடிக்கைகள் எதுவும் செயல்படுத்தப்படாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்ற கூற்றை நியாயப்படுத்த இது பயன்படுத்தப்பட்டது.
உண்மையில், நோயெதிர்ப்புவியலின் கோவிட் பணிக்குழுவிற்கான பிரிட்டிஷ் சங்கத்தின் தலைவரான பேராசிரியர் தெபோரா டுன்-வால்டர்ஸ் பைனான்சியல் டைம்ஸிடம் கூறியது போல், “நோயெதிர்ப்புக் கடன் என்பது ஒரு தனிப்பட்ட கருத்தாக நோயெதிர்ப்புவியலில் அங்கீகரிக்கப்படவில்லை. நோயெதிர்ப்பு அமைப்பு என்பது, எப்போதும் பயன்படுத்தக்கூடிய வடிவத்தில் இருக்கக்கூடிய தசைகளாக மட்டும் பார்க்கப்படுவதில்லை, மற்றும், வேறு ஏதாவது இருந்தால், எதிர்மாறாக இருக்கும்.”
இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் உள்ள பேராசிரியர் பீட்டர் ஓபன்ஷா அதே விளக்கத்தை அப்பட்டமாக இவ்வாறு கூறினார், “பொது சுகாதாரத்திற்கு இது ஒரு நல்ல செய்தியாக இருக்காது: இந்த யோசனை அதன் தர்க்க ரீதியான முடிவின் அடிப்படையில் பின்பற்றப்பட்டால், நாம் இன்னும் திறந்த சாக்கடைகளை வைத்திருப்போம் மற்றும் காலராவால் மாசுபட்ட தண்ணீரைக் குடிப்போம்.”
பேராசிரியர் டுன்-வால்டர்ஸ் தனிநபர் மற்றும் மக்கள்தொகை நோயெதிர்ப்பு சக்திக்கு இடையிலான முக்கியமான வேறுபாட்டை விளக்கினார். சாத்தியம் என்னவென்றால், கடந்த இரண்டு ஆண்டுகளில் இயல்புக்கு மாறாக ஒரு சிறிய குழுவினர் தொற்று நோய்களுக்கு ஆளாகியுள்ளனர், சரீர ரீதியான இடைவெளி மற்றும் முகக்கவசப் பயன்பாட்டிற்கு நன்றி, இப்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, வழக்கத்தை விட அதிகமான நோய்தொற்று விகிதங்களுக்கு வழிவகுக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்படக்கூடிய நபர்களின் சராசரி எண்ணிக்கையை விட மிக அதிக அளவில் தொற்றுக்கள் ஏற்படுகின்றன.
லான்செட் மருத்துவ இதழில் ஜூலை மாதம் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரை இதை, “நோயெதிர்ப்பு சக்தி இடைவெளி எனக் குறிப்பிடுகிறது – அதாவது எளிதில் பாதிக்கப்படக்கூடிய நபர்களின் ஒரு குழு நோய்தொற்றைத் தவிர்த்து, அதனால் எதிர்கால நோய்தொற்றுக்களுக்கு எதிராக தம்மைப் பாதுகாப்பதற்கான குறிப்பிட்ட நோய்க்கிருமிக்கான நோயெதிர்ப்பு சக்தியை அக்குழு இழக்கிறது” என்கிறது.
இலண்டன் இம்பீரியல் கல்லூரியின் தொற்றுநோய்கள் துறை பேராசிரியர் ஷிரானி ஸ்ரீஸ்கந்தன் இந்த மாதம், “2020-2021 காலகட்டத்தில் ஸ்கார்லட் காய்ச்சல் விகிதம் சரிந்துள்ளது என்பதை நாம் அறிவோம்… எனவே தொண்டைநோய் பரவி நோய்தொற்றை ஏற்படுத்தக்கூடிய நோயெதிர்ப்பு சக்தி இல்லாத குழந்தைகளின் மிகப்பெரிய குழுவை நாம் இப்போது கொண்டுள்ளோம்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
பல மீளெழுச்சி பெறும் நோய்க்கிருமிகளின் தொடர்புகளாலும் இந்த தாக்கங்கள் மோசமடையக்கூடும்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் வெப்பமண்டலம் சார்ந்த மருத்துவத்தின் லிவர்பூல் பள்ளி ஆகியவற்றில் சளி சார்ந்த நோய்தொற்றுப் பிரிவின் பேராசிரியர் டேனீலா ஃபெரீரா, “தொண்டைநோய் நோய்தொற்றுக்களின் எண்ணிக்கைகள் இந்த ஆண்டின் இந்த நேரத்தில் பரவி வருவது வழமைக்கு மாறானதாகும், ஏனென்றால் அவை பொதுவாக வசந்த காலத்தின் பிற்பகுதியில் அல்லது கோடையின் தொடக்கத்தில் தான் பரவும்” என்று கார்டியன் இதழிடம் தெரிவித்தார்.
“தொற்றுநோயைத் தொடர்ந்து சில நோய்களின் பருவகாலம் மாற்றம்” கண்டுள்ளது என்றும், “தொண்டைநோய், RSV, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கோவிட்-19 போன்ற நுண்ணுயிரிகள் ஒரு கட்டத்தில் நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும் என்ற நிலையில், அது இந்த நுண்ணுயிரிகள் அல்லது பிற நுண்ணுயிரிகளால் நிமோனியாவை உருவாக்கலாம்” என்றும் அவர் விளக்கினார்.
உலக சுகாதார அமைப்பும் இந்த மாதம் இதேபோல் எச்சரித்துள்ளது, “GAS [தொண்டைநோய்] உடன் வைரஸ்கள் இணைவது iGAS நோயின் அபாயத்தை அதிகரிக்கலாம் என்ற நிலையில், குழந்தைகளில் iGAS நோய்தொற்றுக்களின் அதிகரிப்பானது, பருவகால காய்ச்சல் மற்றும் சுவாச ஒத்திசைவு வைரஸ் (RVS) உள்ளிட்ட சுவாசம் தொடர்பான வைரஸ்களின் சமீபத்திய அதிகரித்தளவிலான நோய்தொற்று பரவலுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.”
முந்தைய கோவிட் நோய்தொற்றால் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு ஏற்பட்ட சேதம் மக்களை மிகவும் பாதிக்கப்படக்கூடியதாக ஆக்கியுள்ளது என்று மற்றவர்கள் கூறியுள்ளனர்.
பேராசிரியர் டுன்-வால்டர்ஸ், சமீபத்திய ஆராய்ச்சியின் சாராம்சத்தை சுருக்கி, “கோவிட்-19 நோயெதிர்ப்பு மண்டலத்தை கடுமையாக பாதிப்பதாக தோன்றுகிறது, அதாவது மற்ற தொற்றுநோய்களுக்கும் மக்களால் எதிர்வினையாற்ற முடியாமல் போகிறது” என்று கார்டியனிடம் தெரிவித்தார்.
இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் நோயெதிர்ப்புவியல் பேராசிரியராக உள்ள டேனி ஆல்ட்மன், “நோயெதிர்ப்பு சக்தியை அழிப்பதற்கு அனைத்து வகையான மோசமான தந்திரங்களைக் கொண்ட ஏராளமான பல வைரஸ்கள் இருப்பது நமக்குத் தெரியும்… go என்ற வார்த்தையிலிருந்து SARS-CoV-2 வைரஸை நாம் குறைத்து மதிப்பிட்டுவிட்டோம்” என்று டைம்ஸ் இதழுக்கு தெரிவித்தார்.
இந்த அனுமானம் உறுதிப்படுத்தப்பட்டால், தனிப்பட்ட நோயெதிர்ப்பு அமைப்புகளுக்கு நிரந்தர சேதம் ஏற்பட்டால், அதற்கு பொது சுகாதார நடவடிக்கைகள் காரணம் அல்ல, மாறாக அரசாங்கங்கள் காட்டுத்தீயைப் போல பரவ அனுமதித்த நோய் தான் அதற்கு காரணமாகும்.
கூடுதல் சிக்கலான காரணி என்னவென்றால், தொண்டைநோய் (மற்றும் பிற நோய்க்கிருமிகளின்) விகாரங்களில் உள்ள இயற்கையான மாறுபாடுகளின் தாக்கமாகும். ஆல்ட்மன் மேலும், “நாம் ஆய்வுகளை மேற்கொள்ளும் வரை, நோயெதிர்ப்பு சக்தி குறைந்துவிட்டதா, இந்த வெளிப்படையான உச்சத்திற்கு அது தான் காரணமா என்பது பற்றி நமக்குத் தெரியாது” என்று டைம்ஸூக்கு தெரிவித்தார்.
வைரஸ்களும் பாக்டீரியாக்களும் ‘நோய்தொற்றுக்களின் கணிக்க முடியாத சுழற்சி உச்சங்களுக்கும் வீழ்ச்சிகளுக்கும்’, மற்றும் தொண்டைநோயின் மரபணுவில் உள்ள ‘பெரியளவிலான மாறுபாட்டிற்கும்’ காரணமாக இருந்தன என்று அவர் குறிப்பிட்டுக் காட்டியதுடன், இந்த ஆண்டின் விகாரங்கள் மிகுந்த ஆக்கிரோஷமான மாறுபாடாக எளிதில் பிறழ்வடைவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
பொது சுகாதாரம் அரசாங்கத்தால் கைவிடப்பட்டுள்ளது
விஞ்ஞான விளக்கம் எதுவாக இருந்தாலும், இந்த சாத்தியமுள்ள காரணங்கள் அனைத்தும் அறியப்பட்டவையே மற்றும் தணிக்கக்கூடிய அபாயங்கள், அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் மோசமாகிவிட்டன.
முந்தைய கோவிட் நோய்தொற்றுக்கள் முடிந்தளவிற்கு நோயெதிர்ப்பு மண்டலங்களை பலவீனப்படுத்தியுள்ளன, அதனைத் தொடர்ந்து Strep, RSV மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களின் கூடுதல் எழுச்சிகள் ‘என்றென்றும் கோவிட்’ கொள்கையின் நேரடி விளைவாக உள்ளன.
உடல் கலவை மீதான கட்டுப்பாடுகள் முடிந்தளவிற்கு பின் விளைவுகளை ஏற்படுத்தின, இதற்கு முன்கூட்டியே தயார் செய்திருக்கலாம். முதலாவதாக, கோவிட் பிரச்சாரகர் டாக்டர் தீப்தி குர்தாசானி ட்விட்டரில் வாதிட்டது போல், தொற்றநோய்க்கு முந்தைய நிலைக்குத் திரும்ப வேண்டிய அவசியமில்லை. “நாம் கற்றுக்கொண்டது என்னவென்றால், குழந்தைகளின் சுமையை நாம் பெரிதும் குறைக்க முடியும்,” அதற்கு காற்று வடிகட்டுதல் மற்றும் காற்றோட்ட வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற மிகவும் தடையற்ற நடவடிக்கைகளைப் பயன்படுத்துவதே போதுமானது.
இரண்டாவதாக, தொண்டைநோய், RSV மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களை விரிவாக கண்காணித்து, ஆரம்பகால சிகிச்சை வழங்கும் நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் எந்தவொரு நோய்தொற்று எழுச்சியையும் நிர்வகிக்க முடியும்.
எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய பொது சுகாதாரத் தலைவரான தேவி ஸ்ரீதர் கார்டியனில் எழுதிய கட்டுரையில் தொண்டைநோய் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார், “பென்சிலின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் ஆரம்பகால பயன்பாடு 24 மணிநேரத்திற்குள் பெரும்பாலான நோய்தொற்றுக்களுக்கு எதிராக செயல்படுகிறது, மேலும் சிறந்த பலன்களுக்கு ஆரம்ப சிகிச்சை மிகவும் முக்கியம்… முதன்மை பராமரிப்புக்கான விரைவான தொண்டைநோய் சோதனைகள், உடல்நிலை சரியில்லாத குழந்தைகளை பரிசோதிக்க செவிலியர்கள் மற்றும் துணை ஊழியர்களை அனுமதிக்கும் அதிக சுமை கொண்ட அமைப்புக்கு உதவும், மேலும் மிகவும் பொருத்தமான மருத்துவ நிர்வாகமாக அது விரைவில் மாறலாம்.”
மாறாக, சுகாதார அமைப்பு கடுமையான நெருக்கடியில் உள்ளது, பரிசோதனை வசதிகள் பரவலாக கிடைக்கவில்லை, மற்றும் மருந்து விநியோகமும் சீரற்று உள்ளது.
மருந்தகங்கள் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பற்றாக்குறை பற்றி புகாரளிக்கின்றன, அத்துடன் இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு அமைப்பின் (UKHSA) தலைமை மருத்துவ ஆலோசகர் பேராசிரியர் சூசன் ஹாப்கின்ஸ் இந்த வாரம் Royal Society of Medicine நிறுவனத்திடம், “மூன்று வாரங்களுக்கு முன்னர் நாம் பயன்படுத்தியதை விட ஐந்து மடங்கு அதிகமாக இப்போது நாம் பென்சிலினை பயன்படுத்துகிறோம் என்று கடந்த சில நாட்களில் எனக்குத் தெரிவிக்கப்பட்டது,” என்று கூறியதுடன், “கதவுகளுக்குப் பின்னால் ஏதோ ஒரு சிலர் இதனால் இலாபமீட்டலாம்” என்பதையும் ஒப்புக்கொண்டார். மேலும், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுக்கு மாற்று நுண்ணுயிர் எதிர்ப்பிகளை வழங்கலாம் என்று மருந்தாளுனர்களுக்கு அரசாங்கத்தால் கூறப்படுகிறது.
வீட்டில் பரிசோதிக்கும் தொண்டைநோய் கருவிகள் கடந்த வாரம் தீர்ந்துவிட்ட நிலையில், இணையத்தில் 100 பவுண்டுகளுக்கு அவை விற்கப்பட்டன.
குழந்தைகள் துறைகளும், குடும்ப மருத்துவர்களும் உறுதிசெய்யப்பட்ட அல்லது சந்தேகத்திற்கிடமான நோய்தொற்றுக்களால் அவை கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இந்த நெருக்கடி தவறான நிர்வாகத்தின் விளைவு மட்டுமல்ல, மாறாக ஆளும் வர்க்கம் பொது சுகாதாரத்தில் முன்னேற்றங்களைக் கைவிட வேண்டும் என்ற நனவானக் கொள்கையைத் தொடரும் நிலையில், இப்போது இலாபம் மற்றும் பொதுச் செலவினங்களின் அடிப்படையில் அது கட்டுபடியாகாத வடிகால் எனக் கருதப்படுகிறது.