இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் சென்னையின் புறநகரில் உள்ள நாடுகடந்த வாகனத் தயாரிப்பாளரின் கார் பொருத்தும் ஆலையில், மொத்தமாக 3,500 பேர் கொண்ட பலம்வாய்ந்த நிரந்தர தொழிலாளர்களால், ஊதியத்தை குறைக்கும் 'நீண்ட கால ஒப்பந்தங்கள்' ஏற்றுக்கொள்ளப்பட்டதாக, ரெனோல்ட் நிசான் இந்தியா தொழிலாளர் சங்கம் (RNITS) அறிவித்துள்ளது.
2019 ஏப்ரல் முதல் 2025 மார்ச் வரையிலான ஆறு ஆண்டு காலத்தை உள்ளடக்கிய, இரண்டு அடுத்தடுத்த மூன்று வருட ஒப்பந்தங்களுக்கு, ஆதரவாக 2,333 தொழிலாளர்கள் வாக்களித்ததாகவும் எதிராக 781 பேர் வாக்களித்ததாகவும் தொழிற்சங்கம் கூறிக்கொள்கின்றது.
இத்தகைய எண்ணிக்கைகள் குறித்த உண்மை எதுவாக இருந்தாலும், ஒப்புதல் வாக்கெடுப்பு என்பது ஒரு ஜனநாயக விரோத ஏமாற்று வேலையாகும். அதே நேரம் RNITS மற்றும் அதன் தாய் அமைப்பான ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பும் (ULF), நிர்வாகத்துடன் நடத்திய 'பேச்சுவார்த்தைகள்' முற்றிலும் மோசடியானவை ஆகும்.
பல தொழிலாளர்கள் வற்புறுத்தலின் கீழ் வாக்களித்ததுடன் பலர் இந்த செயல்முறை சட்டவிரோதமானது என்று கருதியதால் 400பேர் வாக்களிக்கவில்லை.
சமீபத்தில் உருவாக்கப்பட்ட சென்னை ரெனோல்ட்-நிசான் வாகன தொழிலாளர்கள் நடவடிக்கைக் குழுவானது, ஒரு அறிக்கையில் விளக்கியது போல், “RNITS மற்றும் ULF, நான்கு ஆண்டுகள் பேச்சுவார்த்தைகளை இழுத்தடிக்க நிறுவனத்தை அனுமதித்தன.… நமக்கு தரப்பட்ட ஒப்பந்தத்தின் விவரங்கள் குறித்து நாங்களாகவே புரிந்து கொள்வதற்கும் மற்றும் மதிப்பீடு செய்வதற்குமாக வெறும் 24மணிநேரங்கள் மட்டுமே, பெரும்பாலான நிலைமைகளில் அதற்கும் குறைவான நேரமே தரப்பட்ட நிலையில், முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தின் மீது வாக்களிக்குமாறும் கூட எங்கள் மீது தொழிற்சங்க அதிகாரிகள் அழுத்தம் கொடுக்க முயன்றனர்.
'உத்தேச ஒப்பந்தம் மற்றும் அதன் பிரதிவிளைவுகள் குறித்து தொழிலாளர்களாகிய நாங்கள் எமது தொழிற்சங்கப் பிரதிநிதிகள் என கருதப்படுவர்களிடம் கேள்விகளைக் கேட்கும் வகையில் எந்தக் கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்படவில்லை.
'அது மட்டுமன்றி முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தைப் பற்றி நமக்குள்ளேயே கலந்துரையாடுவதற்கு கூட நமக்கு நேரம் தரப்படவில்லை.'
நிர்வாகத்துடன் நெருக்கமாக செல்பட்டு வரும் RNITS மற்றும் ULF, தொழிலாளர்கள் மீது பாதகமாக பாய்ந்தன. 31 மார்ச் 2018 அன்று காலாவதியான ஒப்பந்தத்தின் வாரிசு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளின் நிலை குறித்து, பல ஆண்டுகளாக தொழிலாளர்கள் இருட்டில் வைக்கப்பட்டனர். அதன்பின் டிசம்பர் மாத இறுதியில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, ஆலையை ஒரு வாரத்திற்கும் மேலாக தற்காலிகமாக மூடுவதற்கு சற்று முன், தொழிற்சங்கம் இரண்டு அடுத்தடுத்த, மூன்று ஆண்டு கால ஒப்பந்தங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தியதாக அறிவித்ததுடன் உடனடியாக 'ஒப்புதல்' வாக்கெடுப்புக்கு சென்றது.
அனைத்து தொழிலாளர்களுக்கும் இரண்டு ஒப்பந்தங்கள் பற்றிய தகவல்கள் ஒரே ஒரு தாள் மூலமாக மட்டுமே வழங்கப்பட்டது. மேலும், வழங்கப்பட்ட விவரங்கள் புரிந்து கொள்ளுவதற்கு சிரமமான முறையில் இருந்தன. அது எந்தளவு கடினமானதாக இருந்தது என்றால், உலக சோசலிச வலைத் தளத்துடன்தொடர்பில் இருந்த தொழிலாளர்கள், தங்களது ஊதியத்தில் ஒப்பந்தத்தின் ஒட்டுமொத்த தாக்கம் பற்றி குறிப்பிடத்தக்களவு வேறுபட்ட விளக்கங்களை வழங்கினர்.
தொழிற்சங்கம் வழங்கிய கையேட்டின் அடிப்பகுதியில், தொழிலாளர்கள் அதை ஏற்றுக்கொண்டார்களா இல்லையா என்பதைச் குறியிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். அதாவது ஒப்புதல் வாக்குகளை பெறுவதற்கான வாக்குச் சீட்டாகவும் அது இருந்தது.
தொழிலாளர்கள் அடுத்தடுத்த இரண்டு ஒப்பந்தங்களுக்கு வாக்களிக்கிறார்கள் என்று தொழிற்சங்கம் கூறிக்கொண்டாலும், அவை ஒன்று தான் என்பது போல அவற்றின் மீது ஒன்றாக ஒரே நேரத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
முந்தைய ஒப்பந்தம் 2018 மார்ச் இறுதியில் காலாவதியான போதிலும், இரண்டு ஒப்பந்தங்களில் முதலாவது ஒப்பந்தம் 1 ஏப்ரல் 2019அன்று தொடங்குவதாக திகதியிடப்பட்டிருப்பது இன்னும் திகைப்பூட்டுவதாகும். ஒரு வருடத்திற்கான ஊதிய அதிகரிப்பு மற்றும் நலன்கள் அதிகரிப்பு சம்பந்தமாக தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவதைக் குறிக்கின்ற இந்த முரண்பாடு பற்றி தொழிலாளர்களுக்கு சரியான விளக்கம் எதுவும் வழங்கப்படவில்லை.
இருப்பினும், மூன்று புள்ளிகள் வெளிப்படையாகத் தெரிகிறது.
முதலாவதாக, 31 மார்ச் 2018முதல் 31 மார்ச் 2025 வரையிலான ஏழு ஆண்டுகளில், பணவீக்கத்தின் காரணமாக தொழிலாளர்கள் கனிசமானளவு ஊதிய வெட்டைச் சந்திக்க நேரிடும்.
இரண்டாவதாக, தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய இழப்பீட்டின் பெரும்பகுதி,'ஊக்குவிப்புகள்,' 'போனஸ்' மற்றும் 'பரிசுகள்' என்ற வடிவில் வழங்கப்படக் கூடியவாறு ஒப்பந்தங்கள் மிகவும் கட்டமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நிறுவனம் அவற்றை மிக எளிதாகக் குறைக்கலாம், அகற்றக் கூட செய்யலாம். அத்துடன் அவை ஓய்வூதியங்களுடன் கணக்கிடப்படுவதில்லை.
மூன்றாவதாக, இந்த காட்டிக்கொடுப்பு ஒப்பந்தத்தை திணித்ததற்காக RNITS அதிகாரிகள் தாங்களாகவே வெகுவாக சன்மானங்களை அள்ளிக் கொள்கிறார்கள். தொழிற்சங்க கையேட்டின் அடிப்பகுதியில் மெல்லியதாக அச்சிடப்பட்டுள்ள விடயம், அந்தத் தொழிற்சங்கம் கிட்டத்தட்ட மூன்றாண்டு காலமாக நடுவர் மன்றச் செயல்பாட்டின் போது தொழிலாளர்களை வலையில் சிக்க வைத்தமைக்கு ஏற்பட்ட செலவாக, 3,520 நிரந்தரத் தொழிலாளர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் 15,000 ரூபாய் 'சட்டக் கட்டணங்களுக்காக' பெறப்படும் என்று குறிப்பிடுகிறது. இது மொத்தமாக ரூ. 52.8 மில்லியன் (644,000 டொலர்) என்ற ஒரு பிரமாண்டமான தொகையாகும். இந்த தொகை ULF 'தொழிலாளர் கூட்டமைப்பு' தலைவரான பிரகாஷ் என்ற வழக்கறிஞரால் நீதிமன்றச் செலவுகள் மற்றும் வழக்கறிஞர் கட்டணம் என்ற பெயரில் தொழிலாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட முந்தைய தொகைகளுக்கு மேலதிகமானதாகும்.
நகல்கள் ஒருபுறம் இருக்க, அது நிர்வாகத்துடன் சேர்ந்து தீட்டிய ஒப்பந்தம் குறித்த முழு விவரங்களையும் தொழிலாளர்களுக்கு வழங்க மறுத்ததைப் போலவே, செலவு செய்யப்பட்ட 52.8மில்லியன் ரூபா தொடர்பான எந்தவொரு விவரத்தையும் வெளிப்படுத்தவில்லை.
தொழிற்சங்கங்கள் நிர்வாகத்துடன் கைகோர்த்து செயல்பட்டு வருவதை அவர்கள் அறிந்து கொண்டதால் தான், தொழிலாளர்கள் சென்னை ரெனால்ட் நிசான் தொழிலாளர் நடவடிக்கை குழுவை உருவாக்கினார்கள். நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்தும் நிறுவனத்தின் முயற்சிகளை எதிர்த்து தொழிலாளர்களை போராட்டத்திற்கு அணிதிரட்டுவதோடு, சென்னை பிரதேசம், இந்தியா முழுவதும் மற்றும் சர்வதேச அளவிலும் ஏனைய வாகனத் தொழிலாளர்களுடன் வர்க்க ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்குப் பதிலாக, RNITS மற்றும் ULF மீண்டும் மீண்டும் ரெனால்ட்-நிசான் தொழிலாளர்களை மிரட்டுகின்றன. நிர்வாகக் கையாட்களைப் போலச் செயல்படும் அவை, தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் அல்லது ஏதேனும் வேலை சம்பந்தமான போராட்ட நடவடிக்கையில் ஈடுபட்டால், ரெனால்ட்-நிசானின் தாக்குதல்களுக்கும் பழிவாங்கலுக்கும் ஆளாக நேரிடும் என்று கூறுகின்றன.
தொழிலாளர்களை முதுகில் குத்தும் செயலின் ஒரு பகுதியாக, மூன்று போர்க்குணமிக்க தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு முன்வர RNITS மற்றும் ULF மறுத்துவிட்டதுடன் அவர்கள் 'வெளியே உள்ள' நிறுவனங்களுக்கு பேச்சுவார்த்தைகள் பற்றிய தகவல்களை கசியவிட்டதாக கருதப்பட்டு நிர்வாகத்தால் தனிமைப்படுத்தப்பட்டனர். குறிவைக்கப்பட்ட தொழிலாளர்களின் பெயர்களோ அல்லது அவர்கள் பெற்ற எச்சரிக்கை கடிதங்களின் உள்ளடக்கமோ மற்ற தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கத்தால் தெரியப்படுத்தப்படவில்லை. இருப்பினும், ரெனால்ட்-நிசான் தொழிலாளி ஒருவர் WSWS க்கு கொடுத்த தகவல்படி,அவர்களில் இருவரின் பெயர்கள் ராஜசேகர் மற்றும் சிவா.
RNITS மற்றும் ULF தலைவர்கள் தங்கள் காட்டிக்கொடுப்பு உடன்படிக்கையை நிறைவேற்றுவதற்கு இவ்வளவு அப்பட்டமான ஜனநாயக விரோத மற்றும் முறைகேடான முறையில் முழுமையாக செயல்பட்டனர் என்றால், அதற்குக் காரணம், சாமானிய தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் எதிர்ப்பை கண்டு அவர்கள் பீதியடைந்துள்ளனர்.
தொழிற்சங்கங்கள் தங்கள் சார்பாக எந்தப் போராட்டத்தையும் நடத்த மறுத்ததால் அல்லது போலியான நடுவர்மன்ற செயல்முறை குறித்த எந்தத் தகவலையும் அவர்களுக்கு வழங்க மறுப்பதால் கோபமடைந்த பல எண்ணிக்கையிலான தொழிலாளர்கள், அக்டோபரில் ULF அலுவலகத்திற்கு அணிவகுத்துச் சென்று, தொழிற்சங்க அதிகாரிகளை வெளியேற்றி, தொழிற்சங்கம் நிரந்தரமாக மூடப்பட்டது என்று அலுவலகத்தில் அறிவிப்பு ஒன்றை ஒட்டினர்.
தமது வஞ்சகம் மற்றும் தகாவழிச்சூழ்ச்சி மூலம் தொழிற்சங்கங்கள் ரெனால்ட்-நிசான் தொழிலாளர்களை மிகவும் கடினமான நிலையில் வைத்துள்ளன. இப்போது ஒரு பிணைப்பு ஒப்பந்தத்தைக் கொண்டிருப்பதால், தொழிலாளர்களின் எந்தவொரு வேலை குறித்த போராட்ட நடவடிக்கையும் சட்டவிரோதமானது என்று அறிவிப்பதில் நிர்வாகத்துடனும் அரசாங்கத்துடனும் மற்றும் பிற சட்ட அதிகாரிகளுடனும் தொழிற்சங்கங்களும் இணைந்துகொள்ளும்.
ஆனால் இது கடைசி வார்த்தையாக இருக்காதுது மற்றும் இருக்கவும் மாட்டாது. தொழிலாள வர்க்கமானது சமுதாயத்தின் அனைத்து செல்வங்களையும் உற்பத்தி செய்வதுடன் பெரும்பான்மையாகவும் இருப்பதால், அது ஒழுங்கமைக்கப்பட்டு அணிதிரட்டப்படுமாயின் அது மகத்தான சக்தியைக் கொண்டதாக இருக்கும். சென்னை ரெனால்ட்-நிசான் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவின் உருவாக்கம், நிர்வாகத்திற்கு ஆதரவான தொழிற்சங்க அமைப்புகளில் இருந்து தொழிலாளர்கள் விடுபடுவதற்கும், போராட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதற்கும் மற்றும் ஏனைய தொழிலாளர்களுடன் ஐக்கியப்படுவதற்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வர்க்க சக்தியை அணிதிரட்டுவதற்குமான ஒரு புதிய போராட்ட அமைப்பை வளர்ப்பதற்கும் ஒரு முக்கியமான முதல் படியை பிரதிநிதித்துவம் செய்கிறது.
https://www.wsws.org/ta/articles/2022/12/29/rnsn-d29.html
புத்தாண்டு அறிக்கை
2023: உலக முதலாளித்துவ நெருக்கடியும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்துவரும் தாக்குதலும்