மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische gleichheitspartei-ஜேர்மனி), அகதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள், புகலிட உரிமைகள் மீதான ஒடுக்குமுறைக்கான அழைப்புக்கள் மற்றும் ஜேர்மனியில் சாக்சோனி மற்றும் துரிங்கியா மாநிலங்களின் தேர்தல்களுக்கு முந்தைய வாரத்தில், பொது வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் பாதுகாப்பு அதிகாரிகளின் அதிகாரங்களை உயர்த்துதல் ஆகியவற்றை திட்டவட்டமாக நிராகரிக்கிறது. மேலும், தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் இனவாதம் மற்றும் பாசிசத்தை நிராகரிக்கும் அனைவருக்கும் நாங்கள் பின்வருமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்: இந்த வளர்ச்சியை எதிர்ப்போம்! அகதிகளையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்போம்!
சமூக ஜனநாயகவாதிகள் (SPD), பசுமைவாதிகள் மற்றும் தாராளவாத ஜனநாயகவாதிகளை (FDP) உள்ளடக்கிய மத்தியிலுள்ள கூட்டணியின் கோரிக்கையானது, எல்லைகளை மூடுவது, அகதிகளுக்கான வளங்களைக் குறைப்பது, ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியாவிற்கு அவர்களை நாடு கடத்துவது, மேலும் புதிய அதிகாரங்களுடன் அரசு கண்காணிப்பு கருவியை வழங்குவது போன்ற நடவடிக்கைகள், பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக மக்களைப் பாதுகாக்க உதவுகிறது என்பது ஒரு வெளிப்படையான பொய்யாகும்.
அகதிகள் மீதான அவர்களின் தாக்குதல்களால், அரசாங்கம், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்கள் முற்றிலும் வேறுபட்ட இலக்குகளைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றன:
- அவர்கள், முன்பை விட இப்போது அதிகமாகவும் சர்வதேச ரீதியாகவும், மேலும் உலகம் முழுவதிலும் உள்ள அதே பெருநிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களால் சுரண்டப்பட்டு வருகின்ற தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர்.
- அவர்கள், சமூகத்தின் மிகவும் பலவீனமான மற்றும் மிகவும் உரிமையற்ற உறுப்பினர்களாக இருக்கும் அகதிகளையும் புலம்பெயர்ந்தோரையும், சமூக நோய்களுக்கான (விலையுயர்ந்த வீடுகள், நாளாந்தம் வாழ்வதற்கான வசதியின்மை, ஆசிரியர் பற்றாக்குறை, குறைந்த ஊதியம்) பலிகடாக்களாக ஆக்குகிறார்கள். உண்மையில், போர், மறுஆயுதமாக்கலுக்கான பிரமாண்டமான செலவுகளும், பில்லியனர்களும் தான் சமூக நோய்களுக்கான பொறுப்பாகும். நாஜிக்களின் கீழ், யூதர்கள் சமூக சீற்றத்திற்கு இடிதாங்கியாக ஆக்கப்பட்டனர். தற்போது, அகதிகள் மற்றும் முஸ்லிம்கள், இதற்கு ஆக்கப்பட்டுள்ளனர்.
- ஆளும் தட்டுக்கள், போர், சமூக வெட்டுக்கள் மற்றும் பணிநீக்கங்களுக்கு எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்புக்களை நசுக்குவதற்காக ஒரு பொலிஸ் அரசை கட்டியெழுப்பி, அடிப்படை ஜனநாயக உரிமைகளை அழித்து வருகின்றன. பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எதிரான போராட்டம் என்ற போலிக்காரணத்தின் கீழ் வெளிப்பட்டுவரும் புதிய கெஸ்டபோ (நாஜிக்களின் கொடூரமான பொலிஸ்படை), வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள், போரை எதிர்ப்பவர்கள் மற்றும் சோசலிஸ்டுகளுக்கு எதிராக இயக்கப்படுகிறது.
- அவர்கள் வேண்டுமென்றே அதிதீவிர வலதுசாரி ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சியை பலப்படுத்தி வருகின்றனர். அனைத்து பிரதான கட்சிகளும் (கிறிஸ்தவ ஜனநாயகவாதிகள் (CDU) முதல் SPD, FDP மற்றும் பசுமைவாதிகள், இடது கட்சி மற்றும் அதன் பிளவுபட்ட சஹ்ரா வேகன்நெக்ட் கூட்டணி வரை) புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ஒன்றாக கோரஸ் பாடுவதற்கு ஒன்றிணைந்துள்ளன. ஒரு பாசிசக் கட்சியான AfD, ஆரோக்கியமான சமூகத்தில் ஏற்பட்ட புற்றுநோய் அல்ல, மாறாக ஒரு அடிப்படை சமூக பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடு என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. சமூக குரோதங்களும் சர்வதேச பதட்டங்களும் ஜனநாயகத்துடனும் அமைதியுடனும் இனி சமரசம் செய்து கொள்ள முடியாத அளவுக்கு தீவிரத்தை எட்டியுள்ளன. இப்போது சர்வாதிகாரமும், போரும் முதலாளித்துவ ஆட்சியை பராமரிப்பதற்கு தேவைப்படுகின்றன. அரசியல் ஸ்தாபனத்தின் அனைத்துப் பிரிவுகளிலுமிருந்து வரும் இந்த வலதுசாரி வெறித்தனமானது, AfD கட்சியானது துரிங்கியா மாநில வாக்கெடுப்புகளில் முன்னணியிலும், சாக்சோனி மாநிலத்தில் இரண்டாவது இடத்திலும் இருக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.
கடந்த வாரம் வெள்ளியன்று, சிரிய அகதி ஒருவர் மூன்று பேரை கத்தியால் குத்திக் கொன்று எட்டு பேரைக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் சோலிங்கனில் நடந்த தாக்குதல், ஸ்தாபனக் கட்சிகளுக்கு சரியான நேரத்தில் வந்துள்ளது. அப்போதிருந்து, அவர்கள் தங்களது வலதுசாரி கோரிக்கைகளை ஒருவருக்கொருவர் போட்டியிட்டு அவற்றை விரைவாக செயல்படுத்த தொடங்கியுள்ளனர். ஊடகங்களில், தேர்தல் பிரச்சாரங்களில் அல்லது அரசியல் விவாதங்களில் இந்த சம்பவத்தைவிட வேறு எந்த விஷயமும் இல்லை.
CDU கட்சியின் தலைவர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் அகதிகளை அனுமதிப்பதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்றும், அங்கு அனுப்பப்பட்டவர்கள் உயிராபத்தான இந்த நாடுகளுக்கு மீண்டும் நாடு கடத்தப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். இதற்கு SPD க்கு நெருங்கிய ஒத்துழைப்பை வழங்கிய அவர், 2021 இல் பதவியில் இருந்து வெளியேறிய வெறுக்கப்பட்ட மகா கூட்டணிக்கு மீண்டும் திரும்பினார்.
ஆனால், மத்தியிலுள்ள கூட்டாட்சி அரசு அவரது அழைப்பை முன் கூட்டியே எடுத்துக் கொண்டது. புகலிடச் சட்டத்தை மேலும் கடுமையாக்குவதற்கும் பொலிஸ் மற்றும் இரகசிய சேவைகளுக்கு புதிய அதிகாரங்களை வழங்குவதற்கும் இதர கட்சிகளும் விரைவில் ஒப்புக்கொண்டன. கடந்த வியாழன் அன்று, SPD, பசுமைவாதிகள் மற்றும் FDP ஆகியவை, தஞ்சம் கோரிக்கைக்கு கடுமையான மற்றும் பாதுகாப்புச் சட்டங்களின் முழு நடவடிக்கைகளுக்கும் உடன்பட்டன.
புகலிடக் கோரிக்கையாளர்கள், அவர்கள் நுழைந்த ஐரோப்பிய நாட்டிற்குத் திரும்பாதவர்கள் தங்கள் அனைத்து நன்மைகளையும் இழப்பார்கள். தங்கள் சொந்த நாட்டிற்குச் செல்லும் அங்கீகரிக்கப்பட்ட அகதிகள் மீண்டும் திரும்புவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். கத்தி அல்லது பிற ஆயுதங்களைப் பயன்படுத்தும் சிறார்கள் உட்பட்ட அகதிகள் மிகவும் எளிதாக நாடு கடத்தப்படுவார்கள். மேலும், பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கூடுதல் தரவுத்தளங்களுக்கான அணுகலை வழங்குவதுடன், உயிரியல் தரவைச் சேகரிக்கவும், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அவற்றை ஒப்பிடவும் அனுமதிக்கப்படும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, முன்பு கூட்டணியில் ஒரு ஜனநாயக அத்தி இலையை வழங்கும் பாத்திரத்தை வகித்துவந்த பசுமைவாதிகள், தற்போது அனைத்து கட்டுப்பாடுகளையும் இழந்துள்ளனர். பசுமைக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஐரீன் மிஹாலிக் மற்றும் கான்ஸ்டான்டின் வான் நோட்ஸ் ஆகியோர் வெளியிட்ட ஆவணம், நாடாளுமன்றக் குழுவால் விநியோகிக்கப்பட்டதுடன், உள்நாட்டுக் கொள்கையில் “முழுமையான திருப்பத்துடன்”, “உள்நாட்டு பாதுகாப்புக்கான சிறப்பு நிதியை” ஆதரிக்கிறது. (Bundeswehr- ஜேர்மன் ஆயுதப் படைகளுக்கான €100 பில்லியன் யூரோக்களுக்கான சிறப்பு நிதியை எதிரொலிக்கிறது). “அச்சுறுத்தலை ஏற்படுத்துபவர்களிடம் சகிப்புத்தன்மை இல்லை” என்று பரிந்துரைக்கும் இந்த ஆவணம், இதுவரை பின்பற்றப்பட்ட கொள்கையில், “புரிந்துகொள்ளக்கூடிய ஆனால் அப்பாவியாக விருப்பமான சிந்தனையால் வகைப்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறுகிறது.
கடந்த வெள்ளியன்று, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்துக்கு திரும்பிய பிறகு முதல் முறையாக லீப்ஷிக்கில் இருந்து காபூலுக்கு ஒரு வாடகை விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில், பல்வேறு குற்றங்களுக்காக சிறை தண்டனை விதிக்கப்பட்ட 28 அகதிகள் இருந்தனர். அவர்கள் தலிபான்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டனர். ஜேர்மன் அரசாங்கம் காபூலில் உள்ள ஆட்சியுடன் நேரடித் தொடர்பை நிராகரிப்பதால், கத்தார் எமிரேட்டுடன் நாடு கடத்தல் ஒப்பந்தத்தை அது ஏற்பாடு செய்துள்ளது.
அரசாங்கம், ஸ்தாபன அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்கள் சோலிங்கனில் நடந்த தாக்குதலுக்கு எதிர்வினையாற்றிய வெறித்தனம், அவர்கள் கட்டுப்பாட்டை இழந்துள்ளார்கள் என்பதைக் காட்டுகிறது.
35 ஆண்டுகளுக்கும் மேலாக, மத்திய கிழக்கில் அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் நடத்தி வரும் கொடூரமான போர்களின் விளைவாக உருவான பாதுகாப்பற்ற அகதிகளைத் தாக்குவதானது, பயங்கரவாதத் தாக்குதல்களின் அபாயத்தைக் குறைக்காது என்பதை அவர்கள் அறிவார்கள்.
சோலிங்கனில் நடந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள அல்-கொய்தா அல்லது இஸ்லாமிய அரசு (IS) போன்ற பல இஸ்லாமிய குழுக்கள் முதலில் மேற்கத்திய உளவுத்துறை சேவைகளால் தங்கள் சொந்த நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டன அல்லது பயன்படுத்தப்பட்டன. அவர்கள் தொடர்ந்து அவர்களால் கையாளப்படுகிறார்கள் அல்லது பிராந்திய ஆட்சிகளால் தங்கள் ஏகாதிபத்திய எஜமானர்களையோ அல்லது அவர்களின் உள்ளூர் போட்டியாளர்களையோ அழுத்தத்திற்கு உட்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். காஸாவில் இனப்படுகொலை எவ்வளவு அதிகமாக நடத்தப்படுகிறதோ, அந்த யுத்தம் லெபனான் மற்றும் ஈரானுக்கு நீட்டிக்கப்படுகிறதோ, அந்தளவுக்கு இத்தகைய தாக்குதல்களுக்கான வளமான நிலம் உருவாக்கப்படுகிறது.
சொலிங்கன் தாக்குதல் எவ்வளவு கொடூரமானதும் கண்டிக்கத்தக்கதுமான தாக்குதலாக இருந்தபோதிலும், ஜேர்மன் அரசாங்கத்தின் முழு ஆதரவுடன் ஓராண்டிற்குள் இஸ்ரேலிய இராணுவத்தால் கொல்லப்பட்ட 40,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களுடன் ஒப்பிடுகையில் இது சிறியதாகும். இந்த கொடூரமான குற்றத்திற்கான எதிர்ப்பு தீவிரமடைந்து வருகிறது. இது உக்ரேனிய போருக்கான எதிர்ப்பிற்கும் பொருந்தும், அங்கு ஜெலென்ஸ்கியின் இராணுவம், ஜேர்மனி மற்றும் நேட்டோவின் ஆதரவுடன், ரஷ்ய பிராந்தியத்தை நோக்கி முன்னேறி வருகிறது என்பதுடன், ஜேர்மனியையும் பாதிக்கும் ஒரு அணுஆயுத தீவிரப்பாட்டு அபாயம் உள்ளது.
போருக்கு எதிரான இந்த எதிர்ப்புதான் அதிகாரத்தில் இருப்பவர்களின் வெறிக்கு உண்மையான காரணமாக இருக்கிறது. அமெரிக்க அரசாங்கம் செப்டம்பர் 11, 2001 அன்று உலக வர்த்தக மையத்தின் மீதான தாக்குதலை அதன் கொடூரமான போர்களை நியாயப்படுத்த சுரண்டிக் கொண்டது போல், சோலிங்கனில் நடந்த மிக சிறிய தாக்குதல் பொதுமக்களின் கருத்துக்களை அச்சுறுத்த பயன்படுத்தப்படுகிறது.
அனைத்து ஏகாதிபத்திய நாடுகளிலும், அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான நடவடிக்கைகள், ஆளும் வர்க்கத்தின் உள்நாட்டு அரசியல் பிற்போக்குத்தனத்தின் மைய நெம்புகோலாக இருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் மற்றும் ஜேர்மனியில், பொலிஸ் மற்றும் இரகசிய சேவை அதிகாரங்களின் பாரிய விரிவாக்கத்தை நியாயப்படுத்த இது பயன்படுத்தப்படுகிறது.
வெளிப்படையாக வலதுசாரி அரசியல்வாதிகள் - ட்ரம்ப், சுனக், மெலோனி - அல்லது மிகவும் மிதமான அரசியல்வாதிகள் - பைடென் / ஹாரிஸ், ஸ்டார்மர், ஷோல்ஸ் - ஆட்சியில் இருக்கிறார்களா இல்லையா என்பது குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை ஏற்படுத்தாது. ஸ்பெயின் மற்றும் கிரேக்கத்தில், போலி-இடது கட்சிகளான பொடோமோஸ் மற்றும் சிரிசா அகதிகளுக்கு எதிராக இதேபோன்ற மிருகத்தனமான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. துரிங்கியா மாநிலத்திலுள்ள SPD மற்றும் பசுமைவாதிகள் உட்பட இடது கட்சி தலைமையிலான கூட்டணி அரசாங்கம், அதிதீவிர வலதுசாரி நிகழ்ச்சி நிரலை செயல்படுத்தி வருகிறது.
அகதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள், பாசிசம் மற்றும் போரை நோக்கிய ஆளும் வர்க்கத்தின் திருப்பங்கள் என்பன, ஆழ்ந்த புறநிலை காரணங்களைக் கொண்டுள்ளது என்பதை இவை காட்டுகின்றன. பில்லியன் கணக்கான தொழிலாளர்களின் உலகளாவிய வலையமைப்பை நம்பியிருக்கும் உலகப் பொருளாதாரம், தனியார் சொத்துடமை மற்றும் போட்டி தேசிய அரசுகளை நம்பியிருக்கும் காலவதியாகிப் போயுள்ள முதலாளித்துவ சமூக அமைப்புடன் ஒத்துப்போகவில்லை.
முதலாளித்துவவாதிகள் இந்த முரண்பாட்டை தொழிலாள வர்க்கத்தின் சுரண்டலை தீவிரப்படுத்துவதன் மூலமும், உலகை வலுக்கட்டாயமாக மறுபங்கீடு செய்வதன் மூலமும் தீர்க்க முயற்சிக்கின்றனர். இதுவே பாசிசத்திற்கும் போருக்குமான மூல காரணமாகும்.
தொழிலாள வர்க்கம் அனைத்து தேசிய, இன மற்றும் மொழி எல்லைகளுக்கு அப்பால் ஒன்றிணைந்து, பெருவணிகங்கள் மற்றும் வங்கிகளை கையகப்படுத்தி, பொருளாதாரத்தை ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, செல்வந்தர்களின் இலாப நலன்களைக் காட்டிலும் சமூகத்தின் தேவைகளுக்கு சோசலிச அடிப்படையில் சமுதாயத்தை மறுசீரமைப்பதன் மூலம் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியும்.
அகதிகளையும், ஜனநாயக உரிமைகளையும், ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கின் கட்டமைப்பிற்குள் மட்டுமே பாதுகாக்கப்பட முடியும். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மனிதநேய மற்றும் தார்மீக அழைப்புக்களை விடுவதும், அவர்களை நம்புவதும் ஆபத்தானது மற்றும் அப்பாவித்தனமாக இருக்கும்.
சோசலிச சமத்துவக் கட்சி அனைத்து தொழிலாளர்களின் சமூக மற்றும் ஜனநாயக நலன்களைப் பாதுகாக்கும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்துடன் அகதிகள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதை ஒருங்கிணைக்கிறது.
ஜேர்மனியில் இருந்து வரும் தொழிலாளர்கள் மற்றும் குடியேறியவர்கள், பற்றாக்குறையான வீடுகளுக்கும், வேலைகளுக்கும் மற்றும் வருமானத்திற்குமான போட்டியாளர்கள் அல்ல. சில டசின் தனிநபர்களின் கைகளில் பில்லியன்களை குவித்துள்ள, பல தசாப்த கால நீடித்த பின்னடைவு அடைந்துள்ள மறுவிநியோகத்தை, தலைகீழாக மாற்ற அவர்கள் ஒன்றுபட வேண்டும்.
போர், ஆயுதங்கள், வங்கி மற்றும் பெருநிறுவன உதவிகள் மற்றும் பங்கு விலைகள் உயர்வு ஆகியவற்றில் பாயும் பிரமாண்டமான தொகைகள் கல்வி, சுகாதாரம், காலநிலை பாதுகாப்பு, பாதுகாப்பான மற்றும் நல்ல ஊதியம் பெறும் வேலைகள் மற்றும் மலிவு விலையிலான வீடுகளுக்கு நிதியளிக்க பயன்படுத்தப்பட வேண்டும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதியாக உள்ள சோசலிச சமத்துவக் கட்சியும் (SGP ஜேர்மனி) அதன் சர்வதேச சகோதர அமைப்புகளும் இந்த முன்னோக்கிற்காகப் போராடி வருகின்றன.