லெபனானில் இஸ்ரேலிய பயங்கரவாத தாக்குதலில் ஒன்பது பேர் உயிரிழப்பு, ஆயிரக்கணக்கானோர் காயம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

இஸ்ரேல் கடந்த செவ்வாயன்று, லெபனான் முழுவதும் ஒரு ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இத்தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான பேஜர்களில் (எண்ணெழுத்து அல்லது குரல் செய்திகளை வழங்கும் வயர்லெஸ் தொலைத்தொடர்பு சாதனம்) மறைத்து வைத்திருந்த சிறிய குண்டுகள் ஒரே நேரத்தில் வெடித்ததில், ஒன்பது பேர் கொல்லப்பட்டதோடு, 2,750 பேர் காயமடைந்தனர்.

லெபனான் தலைநகர், பெய்ரூட்டில் உள்ள அல்-சஹ்ரா மருத்துவமனையில் கையடக்க தொலைத் தொடர்பு சாதனம் பேஜர் வெடித்துச் சிதறியதில் காயமடைந்த ஒருவரை, சிவில் பாதுகாப்பு முதல் உதவியாளர் எடுத்துச் செல்கிறார். செவ்வாய், செப்டம்பர் 17, 2024 [AP Photo/Hussein Malla]

இந்த பேஜர்கள் ஹிஸ்புல்லா, லெபனான் அரசியல் கட்சி மற்றும் இராணுவக் குழுவின் உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்பட்டன என்று அமெரிக்க அதிகாரிகள் நியூயோர்க் டைம்ஸிடம் தெரிவித்தனர். வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் கடைகளில் கண்மூடித்தனமாக வெடித்துச் சிதறிய ஆயிரக்கணக்கான பேஜர்கள் பாவனையாளர்களைக் கொன்று காயப்படுத்தின. இந்த தாக்குதலில் காயமடைந்தவர்களில் லெபனானுக்கான ஈரான் தூதர் மொஜ்தபா அமானியும் அடங்குவர்.

“இன்று பிற்பகல் 3:30 மணியளவில், பேஜர் தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருந்த ஏராளமான காயமடைந்தவர்கள் பின்வரும் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அவசரப் பிரிவு அறைகளுக்கு வரத் தொடங்கினர்: புறநகர்ப் பகுதிகள், பெய்ரூட், தெற்கு லெபனான், குறிப்பாக டயர் மற்றும் பேக்கா” பகுதிகள் என்று லெபனானின் பொது சுகாதார அமைச்சர் டாக்டர் ஃபிராஸ் அல்-அபியாட் கூறினார்.

“இதுவரை, பொது சுகாதார அமைச்சினுடைய சுகாதார அவசர அறையில் சுமார் 2,800 பேர் காயமடைந்தவர்கள் உள்ளனர். அவர்களில் 200 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதோடு, அறுவை சிகிச்சை அல்லது தீவிர சிகிச்சை பிரிவுகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு 150க்கும் மேற்பட்ட யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது. முதற்கட்ட எண்ணிக்கையில் எட்டு வயது சிறுமி உட்பட ஒன்பது பேர்கள் கொல்லப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

“பதிவு செய்யப்பட்டவர்களுக்கு எற்பட்ட பெரும்பாலான காயங்கள் முகம், வயிறு, கைகள் மற்றும் கண்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ளன” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

படுகொலை தொடர்பான போர்ச் சட்டங்களை மீறியது உட்பட துரோகம் மற்றும் தடை செய்யப்பட்ட கண்மூடித்தனமான குண்டுவெடிப்புகள் ஆகிய பல போர்க்குற்றங்களுடன், இந்த இஸ்ரேலிய தாக்குதலும் அடங்கும்.

இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த NSA யில் தகவல் வழங்குபவராக இருந்த எட்வேர்ட் ஸ்னோடென், “இஸ்ரேல் இப்போது செய்தது, *எந்தவொரு* முறையிலும் பொறுப்பற்றது. வாகனம் ஓட்டுபவர்கள் (அதாவது கார்கள் கட்டுப்பாட்டை மீறுகின்றன), ஷாப்பிங் செய்தவர்கள் (செக்அவுட் வரிசையில் உங்கள் பிள்ளைகள் பொருட்களை வைக்கும் வண்டிக்குப் பின்னால் நிற்கிறார்கள்) மேலும் பலவாறு, அவர்கள் எண்ணற்ற எண்ணிக்கையிலான மக்களை வெடித்துச் சிதறச் செய்தனர். இந்த நடவடிக்கையானது பயங்கரவாதத்தில் இருந்து பிரித்தறிய முடியாது” என்று எழுதினார்.

இந்த பாரிய படுகொலைகள் பற்றிய உலகளாவிய வெறுப்புக்கு விடையிறுக்கும் வகையில், முன்னாள் இஸ்ரேலிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் எய்லோன் லெவி, இந்த பாரிய குண்டுத் தாக்குதலை பாதுகாத்து, “இது ஒரு பயங்கரவாத அமைப்பின் செயல்பாட்டாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட தனிப்பட்ட சாதனங்கள் மீதான தாக்குதல் ஆகும். இலக்கு வைக்கப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் வரையறை இதுதான்” என்று அறிவித்தார்.

ட்விட்டர் Xல் ஒரு இடுகையில் எழுதிய ஜனநாயகக் கட்சியின் அமெரிக்க செனட்டர் ஜோன் பெட்டர்மேன் இந்த குண்டுத் தாக்குதல் அலைக்கு ஒப்புதல் அளித்தார்: “இந்த தாக்குதலின் செய்தி அறிக்கையின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்த பிறகு, ஹிஸ்புல்லா போன்ற எந்தவொரு இருத்தலியல் அச்சுறுத்தலையும் குறிவைத்து, இல்லாதொழிக்கும் முயற்சிகளை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

நியூயோர்க் டைம்ஸ், அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி, “தைவானில் தயாரிக்கப்பட்டு லெபனானுக்கு கப்பலில் இறக்குமதி செய்யப்பட்ட பேஜர்களில், வெடிக்கும் பொருட்களை இஸ்ரேல் மறைத்து வைத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

“ஒவ்வொரு பேஜரிலும் பேட்டரிக்கு அடுத்ததாக ஒன்று அல்லது இரண்டு அவுன்ஸ் அளவுக்கு வெடிபொருள் செருகப்பட்டிருந்ததாக இரு அதிகாரிகள் தெரிவித்தனர். தைவானில் உள்ள கோல்ட் அப்பல்லோ நிறுவனத்திடம் இருந்து ஹஸ்புல்லா ஆர்டர் செய்த பேஜர்கள், லெபனானை அடைவதற்கு முன்பே சிதைக்கப்பட்டதாக அதிகாரிகள் சிலர் தெரிவித்ததாக” டைம்ஸ் மேலும் தெரிவித்தது.

அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு, ஹமாஸை குறிவைத்து போரின் நோக்கங்களை புதுப்பித்துள்ளதாக, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை கூடி அறிவித்த 24 மணி நேரத்தில், இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன. இது இஸ்ரேலிய குடியிருப்பாளர்களை வடக்கு காஸாவிற்கு திரும்பச் செய்வதை உள்ளடக்கியதோடு, லெபனான் மீதான இஸ்ரேலின் போரை தீவிரப்படுத்தியதற்காக ஒரு சொற்பொழிவு ஆகும்.

ஆகஸ்ட் மாதம், 2006 ஆம் ஆண்டு முதல் தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் தனது மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட விமானப்படை போர் விமானங்கள் ஈடுபட்டன. 40 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) கூறியுள்ளது.

கடந்த ஏப்ரலில், இஸ்ரேல் மேற்கொண்ட ஒரு தாக்குதலில், டமாஸ்கஸில் கூடியிருந்த ஈரானிய இராணுவ அதிகாரிகள் குழுவினர் கொல்லப்பட்டனர். அதற்கு ஈரான் 300 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கொண்டு இஸ்ரேலைத் தாக்கியதன் மூலம் பதிலடி கொடுத்த போதிலும், அவை அனைத்தும் இடைமறிக்கப்பட்டன.

ஜூலை மாதம், பெய்ரூட்டில் மேற்கொண்ட தாக்குதலில், மூத்த ஹிஸ்புல்லா அதிகாரி ஃபுவாட் ஷுக்ரை இஸ்ரேல் படுகொலை செய்தது. அதைத் தொடர்ந்து ஈரானில் உள்ள இராணுவ விருந்தினர் மாளிகையில் ஹமாஸ்சின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டார்.

இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு வாஷிங்டனுக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அங்கு அவர் காஸாவில் மேற்கொண்டுவரும் இனப்படுகொலையை லெபனான் மற்றும் ஈரானைக் குறிவைக்கும் போராக விரிவுபடுத்துவதாக உறுதியளித்தார்.

நெதன்யாகு அமெரிக்க காங்கிரஸில் உரையாற்றியதைத் தொடர்ந்து, அவர் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை சந்தித்தார். ஹாரிஸ், “ஈரான் மற்றும் ஈரான் ஆதரவு போராளிகளான ஹமாஸ் மற்றும் ஹெஸ்புல்லா போன்றவற்றிலிருந்து இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள முடியும் என்பதை நான் எப்போதும் உறுதி செய்வேன்” என்று உறுதியளித்தார்.

இந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான விவாதங்களில், ஹாரிஸ் மற்றும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகிய இருவரும் காஸா இனப்படுகொலைக்கு தங்கள் தெளிவான ஆதரவை வெளிப்படுத்தியதுடன், ஈரான் மற்றும் லெபனான் ஆகிய இரண்டு நாட்டையும் அச்சுறுத்தினர்.

லெபனானை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் பேரை விரிவுபடுத்திவரும் நிலையில், காஸா மக்கள் மீதான அதன் தொடர்ச்சியான படுகொலைகள், பட்டினி மற்றும் இனச் சுத்திகரிப்பு தொடர்வதுடன், அது மேலும் தீவிரமடைந்து வருகிறது.

திங்களன்று, காஸாவின் சுகாதார அமைச்சகம், இனப்படுகொலை தொடங்கியதில் இருந்து இஸ்ரேலிய படுகொலைகளால் கொல்லப்பட்ட 34,344 பாலஸ்தீனியர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. இதில், காணாமல் போனவர்கள் அல்லது பட்டினி மற்றும் நோயால் இறந்தவர்களின் பெயர்கள் உள்ளடங்கவில்லை.

இந்த ஆவணத்தின் முதல் 14 பக்கங்களில் ஒரு வயதுக்குட்பட்ட 710 குழந்தைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. மொத்தம், 18 வயதுக்குட்பட்ட 11,355 குழந்தைகள் இந்த பட்டியலில் உள்ளனர்.

2023 அக்டோபரில், UN சிறுவர்கள் நிறுவனமான UNICEF இன் செய்தித் தொடர்பாளர் ஜேம்ஸ் எல்டர், காஸா சிறுவர்களுக்கான கல்லறையாக” மாறி வருவதாக எச்சரித்தார்.

மேலும், “கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையானது டசின் கணக்கானவர்களாகவும், பின்னர் நூற்றுக்கணக்கானவர்களாகவும், இறுதியில் ஆயிரக்கணக்கானவர்களாகவும் மாறுவது பற்றிய எங்கள் கடுமையான அச்சம் பதினைந்து நாட்களில் உணரப்பட்டது. இந்த எண்ணிக்கை பயங்கரமானவை. காஸா ஆயிரக்கணக்கான சிறுவர்களின் மயானமாக மாறியுள்ளது. இது அனைவருக்குமான வாழும் நரகமாக உள்ளது“ என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இஸ்ரேலிய இராணுவத்தால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான சிறுவர்களின் பட்டியலை வெளியிடுவதன் மூலம், இந்த எச்சரிக்கைகள் திகிலூட்டும் வகையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

Loading