இலங்கை தபால் ஊழியர்களின் கோரிக்கைகளை வெல்வதற்கான போராட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்புவது அவசியம்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

மார்ச் 16 நள்ளிரவு முதல் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால் ஊழியர்கள் தங்கள் உரிமைகளை வெல்வதற்காக 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இந்த வேலைநிறுத்தத்துக்கு தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியைப் பிரதிநித்துவம் செய்யும் தொழிற்சங்கங்களும் அழைப்புவிடுத்துள்ளன.

வேலைநிறுத்தத்தின் நோக்கத்தை விளக்குவதற்கு, மார்ச் 7 அன்று தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினதும் தலைவர்களின் கையொப்பத்துடன் தபால் அமைச்சருக்கு அனுப்பப்பட்ட மற்றும் உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்பட்ட கடிதத்தில் பல பிரச்சினைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அனைத்து பகுதிகளிலும் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கான நியமனங்கள், நிரந்தரமாக்குதல் மற்றும் பதவி உயர்வுகள் வழங்கப்படாமை; தபால் திணைக்களத்தின் புதிய சேவை விதிமுறைகளை அங்கீகரித்து செயல்படுத்தாமை; முதல் நிலை அதிகாரிகளுக்கு உரித்தான 3வது ஊதிய உயர்வை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்காமை; கணினி பற்றாக்குறை, சைக்கிள் கொடுப்பனவு, சீருடை மற்றும் உடை தைப்பதற்கான கூலி, போக்குவரத்துப் பிரிவுக்கு வாகனங்கள் மற்றும் சாரதிகள் போன்ற, சிறந்த சேவையை வழங்குவதற்குத் தேவையான அடிப்படை வசதிகள் இட்டு நிரப்பப்படாமை, தபால் பொருட்களை விநியோகிப்பதற்கான திணைக்கள வாகனங்கள் மற்றும் புகையிரதம் மற்றும் இலங்கை போக்குவரத்து சேவை போன்ற பிரிவுகள் உகந்த மட்டத்தில் செயல்படாமை ஆகிய பிரச்சினைகளே குறிப்பிடப்பட்டுள்ளன. திணைக்களத்தில் 7,231க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அஞ்சல் துறையில் உள்ள அனைத்து வெற்றிடங்களையும் நிரப்புமாறு கோரி மத்திய தபால் பரிமாற்ற நிலையத்தின் முன் மார்ச் 14 அன்று தபால் ஊழியர்கள் போராட்டம் நடத்திய போது (Facebook)

மார்ச் 17 ஆம் திகதிக்கு முன்பாக இந்தப் பிரச்சினைகள் குறித்து அமைச்சரிடமிருந்து பதில் கிடைக்காவிட்டால் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குச் செல்ல உள்ளதாக அறிவித்து இந்தக் கடிதம் முடிவடைகின்றது. இதன் சரளமான அர்த்தம் என்னவென்றால், பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று அமைச்சரிடமிருந்து செய்தி வந்தால், முன்பு நடந்தது போல், எதிர்ப்பை தவிர்த்துக்கொள்வதற்கான சமிக்ஞை அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதே ஆகும்.

இந்தக் கடிதத்தில் வெளிப்படையாகத் தெரியும் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தனியார்மயமாக்கல் வரை செல்லும் மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ள 400 அரச நிறுவனங்களில் தபால் திணைக்களமும் ஒன்றாகும் என்ற விடயம் உறுப்பினர்களுக்கு மூடி மறைக்கப்ட்டுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின்படி 2025 வரவு-செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ள நிலையிலேயே இந்த அடையாள வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டத்தில், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு முண்டு கொடுக்க கூட போதாத சிறிய ஊதிய உயர்வை தபால் ஊழியர்கள் உட்பட அரசு ஊழியர்களுக்கு அறிவித்துவிட்டு, மறுபக்கம் அவர்களின் கொடுப்பனவுகளை ஈவிரக்கமின்றி வெட்டித் தள்ளியுள்ளது. ஏனைய வெட்டு நடவடிக்கைகளுக்கு இடையில், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பதற்காக ஒரு அரசு உரிமை நிறுவனம் (ஹோல்டிங் கம்பனி) ஸ்தாபிக்கப்படும். இந்த நடவடிக்கை மூலம் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட தொழில்கள் அழிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், தபால் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்குப் பதிலாக, தற்போதுள்ள தொழில்களும் பெருமளவில் வெட்டப்படுவதற்கான வாய்ப்பே அதிகமாக உள்ளது.

தபால் திணைக்களத்தை மூடுவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாகவே, கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைகள் கடந்த கால அரசாங்கங்களால் பல தசாப்தங்களாக வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளன.

ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன அரசாங்கத்தின் கீழ் முகவர் தபால் அலுவலகங்களைத் திறப்பதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டதுடன் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவின் ஆட்சியின் கீழ், தபால் மற்றும் தொலைத்தொடர்பு திணைக்களம் இரண்டாக பிரிக்கப்பட்டது. 1997 முதல் அதிகாரத்தில் இருந்து வந்த ஒவ்வொரு அரசாங்கமும் இந்த திணைக்களத்தை தனியார்மயமாக்குவதற்கான நிலைமைகளை உருவாக்கி வந்துள்ளன. தபால் திணைக்களத்தை ஒரு காப்பாளர் குழுவின் கீழ் கொண்டு வந்து, பின்னர் ஒரு கூட்டுத்தாபனமாக மாற்றுவதற்கான திட்டங்கள் இதன் ஒரு பகுதியாகும். ஊழியர்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக மட்டுமே இவை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்தக் கோரிக்கைகளுக்காக தொழிலாளர்கள் போராடுவது முற்றிலும் நியாயமானதே. ஆனாலும் கடந்த 27 ஆண்டுகளில் பல்வேறு வடிவங்களில் நடத்தப்பட்ட வேலைநிறுத்தங்கள் மூலம் முதலாளித்துவ அரசாங்கத்தின் சிக்கன வெட்டு நடவடிக்கைகளில் எதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை தொழிலாளர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

2018 ஜூன் மாதத்தில் மேற்கூறிய பிரச்சினைகள் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்தது 16 நாட்கள் நடந்த தொடர்ச்சியான வேலைநிறுத்தம் சிறந்த உதாரணம் ஆகும். இது எவ்வளவு உறுதியான போராட்டமாக இருந்தாலும், வேலைநிறுத்தத்தின் பிரதான கோரிக்கையான, ஊதியம் மற்றும் பதவி உயர்வுகளுக்கு பாதிப்பு விளைவிக்கும் 2006 சுற்றுநிரூபத்தை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிலாளர்களின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்தது.

2018 ஜூன் போராட்டத்தின் போது, தங்கள் உரிமைகளுக்காகப் போராடிய தபால் தொழிலாளர்கள் காட்டிய போராளிக் குணாம்சத்தால் அச்சமடைந்த தபால் தொழிற்சங்கத் தலைவர்கள், ஆரம்பத்திலிருந்தே ஒரு புறம் தர வேறுபாடுகளை தூண்டிவிட்டு தபால் தொழிலாளர்களை பிளவுபடுத்துவதற்கும், மறுபுறம் ஏனைய தொழிலாளர்களிடமிருந்து இந்தப் போராட்டத்தை தனிமைப்படுத்தி காட்டிக் கொடுப்பதற்கும் செயல்பட்டனர். காட்டிக் கொடுப்பதை நியாயப்படுத்துவதற்காக, ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குள் கோரிக்கைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படும் என்று தேசிய சம்பளங்கள், பதவிநிலை ஆணைக்குழுவிடம் இருந்து தங்கள் சங்கத்திற்கு 'ஒரு எழுத்துப்பூர்வ வாக்குறுதி' வழங்கப்பட்டதாக, தபால் மற்றும் தொலைத்தொடர்பு தொழிற்சங்கத் தலைவர்கள் தங்கள் உறுப்பினர்களுக்கு பொய்யான வாக்குறுதியளித்தனர். அந்த வாக்குறுதி குப்பைத் தொட்டியில் வீசப்பட்டது.

உண்மையான விடயம் என்னவென்றால், இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை நடத்தப்படும் ஒரு போராட்டம், தபால் திணைக்களத்தை மூடுவதற்காக வெளிப்படையாக செயல்படும் முதலாளித்துவ அரசாங்கத்துடன் மோதிக்கொள்ளும் ஒரு அரசியல் போராட்டமாக மாறுவதால், அதைத் தடுக்க தொழிற்சங்க அதிகாரிகள் தேவைப்படுகிறார்கள். இந்தத் தொழிற்சங்கத் தலைவர்கள், 'சுயாதீனமானவர்களாக' காட்டிக்கொண்டாலும், முதலாளித்துவ வர்க்க ஆட்சியுடன் பிணைந்திருக்கும் நபர்களே ஆவர். முன்பு போலவே, தற்போதைய அரசாங்கத்தின் கீழும், தபால் திணைக்களத்தில் முன்னெடுக்கப்படும் சிக்கன நடவடிக்கைகள், முதலாளித்துவ வர்க்கத்தின் இலாபத் தேவைகளின் அடிப்படையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின்படி மேற்கொள்ளப்படுவதை மூடி மறைக்கவே தொழிற்சங்கத் தலைவர்கள் செயல்படுகிறார்கள்.

வேலைநிறுத்தம், அரசாங்கத்தின் வேலைத் திட்டத்துக்கு எந்த சவாலும் விடுக்காது என்பதை வலியுறுத்தி, அடையாள வேலைநிறுத்தத்தை அறிவித்த ஒரு ஊடக சந்திப்பில் பேசிய, தபால் மற்றும் தொலைத் தொடர்பு தொழிற்சங்க செயலாளர் மஞ்சுள பண்டார, “இந்தப் போராட்டங்களில் எந்த அரசியல் முகமும் இல்லை என்பதை வலியுறுத்துகிறேன்” என நேரடியாகக் கூறினார்.

அதே ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அதே தொழிற்சங்கத்தின் தலைவர் ஜி.ஜி.சி. நிரோஷன், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தை 'மக்கள் சார்பான அரசாங்கம்' என்று அழைத்தார். இதில் தற்போதைய அரசாங்கத்துடனான அவர்களின் அணிசேர்வு வெளிப்படையாகி உள்ளது. தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் திட்ட நிரலை அமுல்படுத்த அர்ப்பணித்துக்கொண்டுள்ளதை வெளிப்படையாகவே அறிவித்து, அதை இப்போது செயல்படுத்தி வருகின்ற நிலையிலேயே அவர் அதற்கு 'மக்கள் சார்பு' மாலையை சூட்டியுள்ளார். நிரோஷனும் தபால் மற்றும் தொலைத் தொடர்பு சங்கத் தலைவர்களும், தாம் முதலாளித்துவ அரசாங்கத்தினதும் சர்வதேச நாணய நிதியத்தினதும் கைக்கூலிகள் என்பதை தாங்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.

தபால் திணைக்களத்தை 'அழித்தொழிக்கும் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக' 'தற்போதைய தபால் நிர்வாகத்தை' பற்றி வசைபாடிய இந்த தொழிற்சங்கத் தலைவர், அந்த 'திட்டமிட்ட செயற்பாட்டை' அரசாங்கத்திற்கு எடுத்துக் காட்டுவதே தங்களது தொழிற்சங்க நடவடிக்கைகளின் நோக்கம் எனக் கூறினார்.

தபால் திணைக்களம் உட்பட அரச நிறுவனங்களை 'அழிக்கவேண்டிய' அல்லது தனியார் துறையின் இலாப நோக்கத்திற்காக வணிகமயப்படுத்த வேண்டிய அடிப்படைத் தேவை இருப்பது, சர்வதேச நாணய நிதியத்துக்கும் அதன் வேலைத் திட்டத்தை துல்லியமாக நடைமுறைப்படுத்தி வரும் கொழும்பு அரசாங்கத்திற்குமே ஆகும். அதன் தற்போதைய நிர்வாகம் திசாநாயக்கவின் அரசாங்கமாகும். அந்த அரசாங்கத்தின் முடிவுகளையே அதிகாரிகள் நடைமுறைப்படுத்துகின்றனர்.

அவர்கள் அழைக்கும் தொழிற்சங்க நடவடிக்கைகளை, அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எந்த சவாலும் விடுக்காத வகையில் வரம்புக்குள் வைப்பதன் மூலம், தொழிற்சங்கத் தலைவர்கள் அந்த சிக்கன வேலைத் திட்டத்துக்கு உடந்தையாக இருக்கின்றனர். தபால் திணைக்களத்தில் உள்ள பிரச்சினைகளை 'நிர்வாகத்தின்' பிரச்சினையாக சித்தரித்து, முதலாளித்துவ அரசாங்கத்தை பொறுப்பிலிருந்து விடுவிக்கும் மோசடி முயற்சியிலேயே தபால் மற்றும் தொலைத் தொடர்பு தொழிற்சங்கத்தின் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் மட்டுமன்றி, உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் ஒரே மாதிரியான தாக்குதல்களையே எதிர்கொள்கின்றனர். பாசிச ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஆயிரக்கணக்கான தொழில்களை அழித்து, அமெரிக்காவில் அரச சேவையை முழுமையாக ஒழித்துகட்டும் நடவடிக்கையை விரைவாக செயல்படுத்தியுள்ளார். கடந்த ஆண்டு நவம்பரில், கனடாவில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால் தொழிலாளர்கள் ஊதிய வெட்டுக்கள், தபால் அலுவலகங்களை மூடுதல் மற்றும் தனியார்மயமாக்கல் அச்சுறுத்தலுக்கு எதிராக வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்தின், முன்னணி தபால் சேவையான ரோயல் மெயில், 2013 இல் தனியார்மயமாக்கப்பட்ட பின்னர், 115,000 தபால் தொழிலாளர்கள் 2022-2023 ஆம் ஆண்டுகளில் ஊதிய வெட்டுக்கள் உட்பட தாக்குதல்களுக்கு எதிராக பிரம்மாண்டமான போராட்டங்களை நடத்தினர்.

பல தசாப்தங்களுக்கு முன்பு ஒரு அரச சேவையாக இருந்த தபால் சேவை, இன்று எல்லா நாடுகளிலும் முதலாளித்துவ நிறுவனங்களின் இலாபம் கறக்கும் வணிகமாக மாற்றப்பட்டுள்ளது. இலங்கையிலும் இதே செயல்முறை நடந்து வருகிறது.

இந்த நாட்டின் தபால் தொழிலாளர்களின் 27 ஆண்டுகால போராட்டங்கள் போலவே, ஏனைய நாடுகளில் உள்ள தபால் தொழிலாளர்களின் போராட்டங்கள் அனைத்திலும், ஸதாபனத் தொழிற்சங்கங்கள், முதலாளித்துவ அரசாங்கங்களின் வேலைத் திட்டங்களை செயல்படுத்தும் பங்காளி அமைப்புகளாக அவற்றின் தலைமைகளால் வெளிப்படையாகவே பயன்படுத்தப்படுவதைக் காட்டுகின்றன.

தபால் தொழிலாளர்களுக்கு அவர்களின் கோரிக்கைகளை வெல்வதற்காக பலம்வாய்ந்த சக்தியை விடுவிப்பதற்கான முக்கியமான தடையாக இந்த தொழிற்சங்க தலைமை உள்ளது. தபால் ஊழியர்கள் இப்போது முடிவுகளை எடுக்க வேண்டும். அவற்றில் முக்கியமானது, தனியார்மயமாக்கல் உட்பட தாக்குதல்களுக்கு எதிரான போராட்டம், இனி மேலும் அதிகாரத்துவத்தின் கைகளில் விடப்படக்கூடாது; இந்தப் போராட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதற்கு, அவர்கள் தங்கள் சொந்த சுயாதீன நடவடிக்கை குழுக்களை ஸ்தாபித்துக்கொள்ள வேண்டும்.

தபால் தொழிலாளர்களின் ஒவ்வொரு கடந்த கால போராட்டத்திலும், அவற்றுக்கு அரசியல் ஆதரவை வழங்கியும் அவர்களின் உரிமைகளை வெல்வதற்கான ஒரு சாத்தியமான மாற்று வேலைத் திட்டத்தை முன்வைத்தும் சோசலிச சமத்துவக் கட்சியானது (சோ.ச.க.) உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) மூலமும் மற்றும் தபால் நிலையங்களில் உள்ள அதன் உறுப்பினர்கள் ஊடாகவும் தலையிட்டுள்ளது.

அனைத்து முதலாளித்துவ கட்சிகளில் இருந்தும் சுயாதீனமாக, தொழிற்சங்க அதிகாரிகளுக்கு அவற்றில் இடம் கொடுக்காமல், இந்த நடவடிக்கை குழுக்களை அமைப்பதன் மூலம், தங்களின் உரிமைகளுக்கான போராட்டத்தின் வழிமுறைகளை ஜனநாயக ரீதியாக கலந்துரையாடி முடிவுகளை எடுக்க முடியும். பிரதான கோரிக்கைகளாக பின்வருவனவற்றை நாங்கள் முன்வைக்கிறோம்:

  • அடிப்படை ஊதிய வீழ்ச்சியை சரிசெய்யும், வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு ஏற்ப அதிகரிக்கும் சம்பள உயர்வு வேண்டும்! ஓய்வூதியங்களும் அதற்கேற்ப உயர்த்தப்பட வேண்டும்.
  • தபால் சேவையை மூடுவதையும், இலாபம் கறக்கும் வணிகமாக ஆக்குவதையும் நிறுத்து! வேலை வெட்டுக்களை எதிர்த்திடு! சிறந்த சேவை நிலைமைகளை உறுதி செய்!

தபால் சேவையை தொழிலாளர்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதன் மூலம் மட்டுமே இதை இட்டு நிரப்ப முடியும்.

தபால் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் சவால்களும் ஏனையத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் ஒரு பகுதியாகும். ஐக்கியப்பட்ட போராட்டத்தை ஒழுங்கமைப்பது அவசியமாகும். அரச மற்றும் தனியார் துறையில் உள்ள ஒவ்வொரு வேலைத் தளத்திலும், பெருந்தோட்டங்கள் உட்பட அனைத்து பிரதான பொருளாதார மையங்களிலும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவதே இந்த ஐக்கியத்தை உறுதிப்படுத்துவதற்கான வழிமுறையாகும்.

அதே போல், இதே போன்ற தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ள ஏனைய நாடுகளில் உள்ள தங்கள் சர்வதேச தொழிலாள சகாக்களின் ஆதரவைப் பெறுவதற்காக, ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டமைப்பில் இணைந்துகொள்ளுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

இந்தப் முன்நடவடிக்கைகளை எடுப்பதற்கு நாங்கள் உங்களுடன் இணைந்து செயல்படத் தயாராக உள்ளோம். இந்த தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் எங்களைத் தொடர்பு கொள்ளவும்:

0773562327 wswscmb@sltnet.lk