சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) உரிமைகள் பறிக்கப்படுவதற்கும் சர்வாதிகாரத்துக்கும் போருக்கும் எதிராக, சோசலிசத்திற்காக உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுகின்றது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), மே 6 அன்று நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றது.

போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள காரைநகர் பிரதேச சபைக்கு 13 வேட்பாளர்களையும், கொழும்பின் புறநகர் பகுதியில் உள்ள கொலன்னாவ நகர சபைக்கு 21 வேட்பாளர்களையும் சோ.ச.க. நிறுத்தியுள்ளது. கட்சியின் சிரேஷ்ட தலைவர்களான பரமு திருஞானசம்பந்தர், விலானி பீரிஸ் ஆகியோர் இந்த வேட்பாளர்களுக்கு தலைமை தாங்குகின்றனர்.

திருஞான சம்பந்தர்

தங்கள் மதிப்பிழந்த கட்சிகளின் தோல்விக்கு அஞ்சிய, இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளான, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) கோட்டாபய இராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர், முறையே 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இந்த தேர்தலை ஜனநாயக விரோதமாக ஒத்திவைத்த பின்னர், இப்போது இந்தத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

தேர்தலை அறிவித்த புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம் இது ஒரு ஜனநாயக நடவடிக்கை என்று அறிவித்துள்ளது. ஆளும் கட்சியை வலுப்படுத்தி, அதன் 'பொருளாதார மீட்பு திட்டத்தை' முன்னெடுத்துச் செல்வதற்காக அதன் தலைவர்கள் இந்தத் தேர்தலி 'பெரும் வெற்றியைக்' கோரியுள்ளனர்.

சோ.ச.க. இந்த இழிவான வேண்டுகோளை நிராகரிக்குமாறு தொழிலாளர்களுக்கும் ஏழைகளுக்கும் அழைப்பு விடுக்கின்றது. ஜே.வி.பி./தே.ம.ச.யின் பொருளாதார மீட்புத் திட்டம் என்பது, விக்கிரமசிங்கவால் தொடங்கப்பட்டு ஏற்கனவே உழைக்கும் மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துவதைத் தவிர வேறில்லை. 2022 இல் கொழும்பு ஆளும் வர்க்கம் திருப்பிச் செலுத்தத் தவறிய வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்துவதும், பெரும் மூலதனத்தின் இலாபத்தை அதிகரிப்பதுமே இதன் உண்மையான நோக்கமாகும்.

2025 ஆம் ஆண்டிற்கான சமீபத்திய வரவு-செலவுத் திட்டம், சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை செயல்படுத்துவதாகும். 1.5 மில்லியன் அரச ஊழியர்களுக்கு அற்ப ஊதிய உயர்வை அறிவித்துள்ள அதேவேளையில், கொடுப்பனவுகள் கடுமையாகக் வெட்டப்பட்டுள்ளன.

சில மாதங்களுக்குள், 400 அல்லது அதற்கு மேற்பட்ட அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் பல, அரச-தனியார் கூட்டாண்மை அல்லது தனியார்மயமாக்கலுக்கான தயாரிப்பில், ஒரு அரசு உரிமை நிறுவனத்தின் (ஹோல்டிங் கம்பனி) கீழ் வைக்கப்படும். ஆயிரக்கணக்கான தொழில்கள் அழிக்கப்பட்டு ஊதியங்கள் குறைக்கப்படுவதோடு வேலைச் சுமைகள் அதிகரிக்கப்படும். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் ஆலோசகரின் கூற்றுப்படி, அரச துறை முழுவதிலும், அரை மில்லியனுக்கும் அதிகமான தொழில்கள் அழிக்கப்படும்.

அதன் சிக்கன நடவடிக்கைகள் தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகள் மற்றும் இளைஞர்களின் வெகுஜன போராட்டங்களுக்கு வழிவகுக்கும் என்பதை நன்கு அறிந்து வைத்துள்ள அரசாங்கம், சர்வாதிகார ஆட்சி வடிவங்களைத் தயாரித்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாடசாலை அபவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு எதிரான அதன் பொலிஸ் தாக்குதலும் பழிவாங்கலும் அதன் கொள்கைகளை எதிர்க்கும் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களுக்கு எதிரான தொடர்ச்சியான அச்சுறுத்தல்களும் திட்டமிடப்பட்டுள்ள கொடூரமான அடக்குமுறைகள் குறித்து உழைக்கும் மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாகும்.

விலானி பீரிஸ்

கடந்த ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் ஜே.வி.பி./தே.ம.ச.யின் வலதுசாரி, ஏகாதிபத்திய சார்பு குணாம்சம் குறித்து தொழிலாள வர்க்கத்தை எச்சரித்த ஒரே கட்சி சோ.ச.க. மட்டுமே. 'மார்க்சிஸ்ட்' என்பதற்குப் பதிலாக, அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொண்ட ஜே.வி.பி.யை, இலங்கை ஆளும் வர்க்கத்தின் கணிசமான பிரிவுகள் ஆதரித்ததுடன் சர்வதேச நாணய நிதியத்தின் திட்ட நிரலை ஈவிரக்கமின்றி திணிப்பதில் உறுதியாக இருந்தது.

முதலாளித்துவம் அல்லது தேசிய அரச கட்டமைப்பிற்குள் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு எரியும் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடையாது என சோ.ச.க. வலியுறுத்துகிறது.

கிராமப்புற ஏழைகளை ஒன்றிணைக்கவும், அரசாங்கத்தின் சிக்கனத் திட்டத்தை எதிர்த்துப் போராடவும் தொழிலாளர்களை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்காக சோ.ச.க. பிரச்சாரம் செய்து வருகிறது. அனைத்து முதலாளித்துவக் கட்சிகளில் இருந்தும் பிரிந்து, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான ஒரு தொழில்துறை மற்றும் அரசியல் போராட்டத்தில் அதன் பிரமாண்டமான பலத்தை அணிதிரட்டுமாறு தொழிலாள வர்க்கத்துக்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.

பூகோள முதலாளித்துவத்துக்கும் போருக்கும் எதிராக சர்வதேச அளவில் வர்க்கப் போராட்டங்களை ஒன்றிணைத்திடு!

இந்த நாட்டில், தொழிலாள வர்க்கம் ஜே.வி.பி./தே.ம.ச. ஆட்சியையும் முதலாளித்துவ வர்க்கத்தையும் மட்டுமன்றி, சர்வதேச நிதி மூலதனத்தையும் ஏகாதிபத்தியத்தின் அனைத்து முகவரமைப்புகளையும் எதிர்கொள்கிறது.

இந்தத் தேர்தல்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை மையமாகக் கொண்ட வேகமாக ஆழமடைந்து வரும் உலக முதலாளித்துவ நெருக்கடியின் மத்தியில் நடத்தப்படுகின்றன. புதிதாகப் பதவியேற்ற அமெரிக்க ஜனாதிபதி பாசிச டொனால்ட் டிரம்ப், 1930களில் ஹிட்லர் மற்றும் ஜெர்மன் நாஸி சர்வாதிகாரத்தின் வழிமுறைகளை நேரடியாகப் பயன்படுத்துகிறார். மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தவர்களை வெளியேற்றவும், அத்தியாவசிய சமூக சேவைகளை இரத்து செய்யவும், இலட்சக்கணக்கான அரச ஊழியர்களை வேலைநீக்கம் செய்யவும், போருக்குச் செல்லவும் தயாராகும் நிலையில், ​​அவர் நாட்டின் சட்டங்களையும் அரசியலமைப்பையும் அப்பட்டமாக மீறுகிறார்.

உலக அரங்கில், டிரம்ப் நிர்வாகம் தனது கூட்டாளிகள் மீதும் எதிரிகள் மீதும் பொருளாதாரப் போரை நடத்தி வருவதுடன் கனடா, கிரீன்லாந்து மற்றும் பனாமா கால்வாய் உட்பட உலகின் முழுப் பகுதிகளையும் இணைத்துக்கொள்ள முயல்வதுடன் காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரை ஆதரிக்கின்றது. உக்ரேன் போரில் அவரது 'சமாதான' நடவடிக்கைகள், அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் உலகளாவிய ஆதிக்கத்திற்கு பிரதான அச்சுறுத்தலாகக் கருதுகின்ற சீனாவுடனான போருக்கான அவரது தயாரிப்புகளின் ஒரு பகுதியாகும்.

உலகம், ஒரு பேரழிவு தரும் பூகோள மோதலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள அனைத்து பெரும் வல்லரசுகளும் தீவிர வலதுசாரி கொள்கையின் பக்கம் கூர்மையாகத் திரும்பி, போருக்காக விரைவாக மறு ஆயுதபாணியாவதோடு, தொழிலாள வர்க்கத்தின் மீது புதிய சுமைகளைச் சுமத்தி, ஜனநாயக உரிமைகளுக்கு குழி பறிக்கின்றன.

சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர் திட்டங்களில் இலங்கையும் ஒரு பகுதியாகும். அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளையகத்தின் உயர் அதிகாரிகள் கொழும்புக்கு வருகை தந்து இராணுவ உறவுகளை வலுப்படுத்தி வருகின்றனர். அக்டோபரில் அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர் மற்றும் கடந்த வாரம் அட்மிரல் சாமுவேல் ஜே. பாப்பரோவும் வந்தனர். நீண்ட காலத்திற்கு முன்பே தங்களது போலியான ஏகாதிபத்திய எதிர்ப்பு வாய்ச்சவடாலைக் கைவிட்டுவிட்ட ஜே.வி.பி./தே.ம.ச. இருவரையும் வரவேற்றது.

தொழிலாளர்களும் இளைஞர்களும் ஏற்கனவே உலகெங்கிலும் உள்ள ஆளும் வர்க்கங்களின் யுத்தம் மற்றும் வர்க்கப் போர் திட்ட நிரலுக்கு, வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் மூலம் பிரதிபலித்து வருகின்றனர். சமீபத்திய மாதங்களில், சம்பளம் மற்றும் வேலை வெட்டுக்களுக்கு எதிராக அமெரிக்காவிலும், தெற்காசிய நாடுகள் உட்பட பல நாடுகளிலும் தொழிலாளர்களின் போராட்டங்கள் வெடித்துள்ளன. காசாவில் அமெரிக்க ஆதரவு இஸ்ரேலிய போர்க்குற்றங்கள் மற்றும் அட்டூழியங்களுக்கு எதிராக மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

  • உலகப் போரை நோக்கிய நகர்வை தடுக்கக்கூடிய ஒரே சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும். முதலாளித்துவத்தையும் அதன் பிற்போக்கு தேசிய-அரச அமைப்பையும் ஒழிப்பதற்காக, சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதில் இலங்கை தொழிலாளர்களும் இளைஞர்களும் இணைய வேண்டும்.
  • சர்வதேச அளவில் வர்க்கப் போராட்டங்களை ஒருங்கிணைக்க நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஸ்தாபித்துள்ள தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியை கட்டியெழுப்புவதற்கு இலங்கையில் உள்ள தொழிலாளர்கள் முன்முயற்சி எடுப்பது கட்டாயமாகும்.

2022 வெகுஜன எழுச்சியின் அரசியல் படிப்பினைகளைக் கற்றுக்கொள்ளுங்கள்

2022 ஏப்ரல்-ஜூலை மாதங்களில் இலங்கையில் நடந்த வெகுஜன எழுச்சியின் அரசியல் படிப்பினைகளைக் கற்றுக்கொள்வது அவசியமாகும். துரிதமடைந்துவரும் பூகோளப் பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்ட இராஜபக்ஷ அரசாங்கம், அதன் வெளிநாட்டுக் கடனை செலுத்தத் தவறியதுடன் உழைக்கும் மக்கள் மீது சுமையைத் திணித்தது. சகிக்க முடியாத விலை உயர்வு மற்றும் பற்றாக்குறைக்கு எதிராக மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் வீதிக்கு இறங்கி வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களை நடத்தினர்.

ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறி இராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட போதிலும் அது ஒரு வெற்றி அல்ல. போலி இடது முன்னிலை சோசலிசக் கட்சியின் உதவியுடன், தொழிற்சங்கங்களும் எதிர்க்கட்சிகளாக இருந்த ஜே.வி.பி. மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியும் (ஐ.ம.ச.) வெகுஜன இயக்கத்தை பாராளுமன்ற முட்டுச்சந்திற்கு இட்டுச் சென்றன. வலதுசாரி, அமெரிக்க சார்பு விக்ரமசிங்க ஜனநாயக விரோதமாக ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதுடன் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு ஒப்பந்தத்தை செய்துகொண்டார். இப்போது, ​​சிக்கன நடவடிக்கை திட்ட நிரலை திணிப்பதற்கு, மிகவும் செல்வாக்கற்றுப் போன விக்ரமசிங்விடம் இருந்து ஜே.வி.பி. ஆட்சியைப் பொறுப்பேற்றுள்ளது.

கோட்டாபய இராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, 9 ஜூலை 2022 அன்று, இலங்கை ஜனாதிபதியின் இல்லத்திற்கு செல்லும் தெருவில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள். [AP Photo/Amitha Thennakoon]

எழுச்சியின் தொடக்கத்திலிருந்தே, சோ.ச.க. அதில் செயலூக்கத்துடன் பங்கேற்று, அந்த போராட்ட இயக்கத்தில் இல்லாமல் இருந்த இன்றியமையாத சோசலிச வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கிற்காகப் போராடியது.

சோ.ச.க. 7 ஏப்ரல் 2022 அன்று வெளியிட்ட அறிக்கையில் எச்சரித்ததாவது: “இலங்கையில் ஒரு சோசலிசப் புரட்சி தேவைப்படுவதோடு அதற்கு ஒரு புரட்சிகரத் தலைமை அவசியம்… கடந்த நூற்றாண்டின் முழு வரலாறும், ஒரு புரட்சிகரக் கட்சி இல்லாமல் தொழிலாள வர்க்கத்தின் மிகவும் போர்க்குணமிக்க உறுதியான போராட்டங்கள் கூட தவிர்க்க முடியாமல் தோற்கடிக்கப்பட்டு, எதிர் புரட்சிக்கும் மிலேச்சத்தனமான அடக்குமுறைக்கும் கதவை திறந்து விட்டது.”

அந்த தீர்க்கமான அரசியல் படிப்பினையை, உடனடி எதிர்காலத்தில் தவிர்க்க முடியாமல் தலைதூக்கும் போராட்டங்களில் தொழிலாள வர்க்கம் புரிந்து கொள்ள வேண்டும். சோ.ச.க.யும் அதன் வேட்பாளர்களும் தேவையான புரட்சிகரத் தலைமையாக கட்சியைக் கட்டியெழுப்புவதற்கு இந்தத் தேர்தலில் பிரச்சாரம் செய்வார்கள்.

சர்வதேச நாணய நிதிய-சார்பு எதிர்க் கட்சிகள்

2022 இல், வெகுஜன எழுச்சியால் பாதிக்கப்பட்டு அம்பலப்படுத்தப்பட்ட கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தின் பாரம்பரிய கட்சிகள், கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் அவமதிப்புக்கு உள்ளாகின. ஜே.வி.பி./தே.ம.ச. போலவே, அவை அனைத்தும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தை ஆதரிக்கின்றன. 'மக்கள் மீது சுமைகளை ஏற்ற வேண்டாம்' என்ற அவற்றின் போலி விமர்சனங்களும் அழைப்புகளும் உழைக்கும் மக்களை ஏமாற்றுவதற்காக கூறப்படுபவை ஆகும்.

விக்ரமசிங்கவின் ஐ.தே.க.யில் இருந்து பிரிந்த ஐ.ம.ச., அரசாங்கத்திற்கு எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்பை சுரண்டிக்கொள்ளும் நோக்கில் சமீபத்திய வரவு-செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தது. இருப்பினும், ஐ.ம.ச. 'பொருளாதாரத்தைக் காப்பாற்ற' சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கேட்குமாறு இராஜபக்ஷவை வலியுறுத்தியதுடன் அது எப்போதாவது பதவிக்கு வந்தால், திசாநாயக்கவைப் போலவே இரக்கமற்ற முறையில் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தும்.

போலி இடது முன்னிலை சோசலிசக் கட்சி, கடந்த ஆண்டு ஏனைய போலி இடது குழுக்கள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்ட கூட்டணியான மக்கள் போராட்ட முன்னணியின் கீழ் தேர்தலில் போட்டியிடுகிறது. அதன் தொழிலாள வர்க்க விரோத பண்பு குறித்து எச்சரிப்பதற்குப் பதிலாக, மக்கள் போராட்ட முன்னணி ஜே.வி.பி./தே.ம.ச.யின் தேர்தல் வெற்றியை உற்சாகமாக வரவேற்று, அது 'மக்களின் அபிலாஷைகளை' பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் அறிவித்தது.

திசாநாயக்க அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்ட நிரலை அமுல்படுத்திவருகின்ற போதிலும், அதற்கு 'மக்களின் ஆணையை' செயல்படுத்துமாறு அழுத்தம் கொடுக்க முடியும் என்ற மாயையை மக்கள் போராட்ட முன்னணி தொடர்ந்து பரப்பி வருகின்றது. ஜே.வி.பி./தே.ம.ச., அதன் தேர்தல் வாக்குறுதிகளை மீறிவிட்டதாக புலம்புகின்ற மக்கள் போராட்ட முன்னணி அதை ஆதரிப்பதாகவும் 'பழைய ஊழல்' கட்சிகளிடமிருந்து பாதுகாப்பதாகவும் உறுதியளித்துள்ளது.

முன்னிலை சோசலிசக் கட்சித் தலைவர் புபுது ஜயகொட ஊடகங்களுக்கு கூறியதாவது: '[வாக்குறுதிகளை செயல்படுத்தாமைக்காக] அரசாங்கத்திற்கு, மக்களின் எச்சரிக்கையாக சிவப்பு விளக்கினைக் காட்ட வேண்டும், ஆனால் பழைய ஊழல் நிறைந்த [கட்சிகள்] ஆட்சிக்கு வர அனுமதிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்.' என்றார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் முதலாளித்துவக் கட்சிகளும் பெரும் தோல்வியடைந்தன. உள்ளுராட்சித் தேர்தல்களில், மீண்டும் ஒரு கூட்டணியை உருவாக்க அவர்கள் போராடி வருகின்றனர். சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கை திட்ட நிரலுக்கான தமிழ் கட்சிகளின் ஆதரவு, வரவு-செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பில் நிரூபிக்கப்பட்டது - ஒரு கட்சி அதற்கு ஆதரவாக வாக்களித்த அதேவேளை, மற்றவை அதற்கு தங்கள் ஆதரவை மூடிமறைக்கும் முயற்சியில் புறக்கணித்துவிட்டன.

சுயாதீன நடவடிக்கை குழுக்களை உருவாக்குங்கள்!

தொழிலாளர்கள் பிரச்சினைகளை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு, முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடன் உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என்று சோ.ச.க. பிரச்சாரம் செய்து வருகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, வாழ்க்கை நிலைமைகளைப் பாதுகாக்க தொழிலாளர்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களையும் தொழிற்சங்கங்கள் மீண்டும் மீண்டும் மட்டுப்படுத்தி காட்டிக் கொடுத்துள்ளன.

வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களுக்கு எதிராக 27 பெப்பிரவரி 2025 அன்று, கண்டி போதனா வைத்தியசாலைக்கு வெளியே தாதிமார் மறியல் போராட்டம் செய்த போது

இப்போது, ​​ ஜே.வி.பி./தே.ம.ச.  சிக்கன நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ள நிலையில், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் சுகாதார தொழிற்சங்க கூட்டணியினதும் தலைவர்கள், தங்கள் திட்டமிட்ட போராட்டங்களை கைவிட்டுள்ளனர். எந்த தொழிற்சங்கமும், சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை எதிர்க்காததோடு, 'தலைதூக்கும் தொழிலாளர் அமைதியின்மை' அதன் திட்டத்தை நாசமாக்கும் என்ற நிதியத்தின் எச்சரிக்கையையே அனைவரும் கவனத்தில் கொண்டுள்ளனர்.

தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் சமூக, ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தைப் பற்றி கலந்துரையாடி முன்னெடுக்க ஒவ்வொரு வேலைத் தளத்திலும் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். அவ்வாறு செய்ய விரும்புவோருக்கு எங்கள் அரசியல் உதவியை வழங்க நாங்கள் உறுதியளிக்கிறோம்.

சோ.ச.க. பின்வரும் சோசலிச மற்றும் அனைத்துலகவாத வேலைத் திட்டத்தை முன்வைக்கிறது:

  • அனைத்து வகையான தேசியவாதம் மற்றும் வகுப்புவாதத்தை எதிர்த்திடு! தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்துக்காகப் போராடு!
    தொழிலாளர்களைப் பிளவுபடுத்த தமிழர்-விரோத மற்றும் முஸ்லிம்-விரோத பேரினவாதத்தை நாடும் பிற்போக்கு வரலாற்றை இலங்கை ஆளும் வர்க்கம் கொண்டுள்ளது. இதன் விளைவு, ஜே.வி.பி. பூரணமாக ஆதரித்த மூன்று தசாப்த கால பேரழிவுகர தமிழர்-விரோத யுத்தமாகும்.
    வடக்கு மற்றும் கிழக்கில் அரசாங்கம் இராணுவ ஆக்கிரமிப்பை தொடர்ச்சியாக பேணுவதோடு, அங்கு அது பௌத்த விகாரைகளை நிறுவும் வகுப்புவாத பிரச்சாரத்திற்கு உடந்தையாக உள்ளது. தேசிய ஐக்கியத்தை அறிவிக்கும் அதே வேளை, ஜே.வி.பி. சிங்கள-பௌத்த மேலாதிக்கத்தை உள்ளடக்கிய நாட்டின் இனவாத அரசியலமைப்பை முழுமையாக ஆதரிக்கிறது.
    அதே வழியில் பிரதிபலிக்கும் தமிழ் முதலாளித்துவக் கட்சிகள், தீவின் ஏனைய இடங்களில் உள்ள தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளிடம் இருந்து தமிழ் உழைக்கும் மக்களைப் பிரிக்க தமிழ் தேசியவாதத்தை ஊக்குவிக்கின்றன.
  • தொழிலாளர்கள் தங்களைப் பிளவுபடுத்த அனுமதித்தால் தங்கள் வர்க்க நலன்களுக்காகப் போராட முடியாது.
  • இனவாதத்தை எதிர்த்திடு! சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களின் ஐக்கியத்துக்காகப் போராடு! அனைவரினதும் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாத்திடு!

கிராமப்புற ஏழைகளையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் அணிதிரட்டு!

அதிகாரத்துக்கு வர, விவசாயிகளதும் கிராமப்புற ஏழைகளினதும் கோபத்தையும் விரோதத்தையும் சுரண்டிக் கொண்ட ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம், அதன் அனைத்து வாக்குறுதிகளையும் கைவிட்டுள்ளது. நெல் விலையில் ஏற்பட்ட அற்ப அதிகரிப்பு முற்றிலும் போதுமானதாக இல்லை. ஏழை விவசாயிகள் கடன் வாங்கியவர்களுக்கு வட்டி கொடுக்கவும் விதைகள், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் மற்றும் உரங்களுக்கான அதிகப்படியான விலைகளால் நசுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களது உற்பத்திச் செலவுகளைக் கூட பெற முடிவதில்லை.

வங்கிகள், நுண் கடன் நிறுவனங்கள் மற்றும் தனியார் பணக் கடன் வழங்குனர்கள் உட்பட பணக் கடன் வழங்குபவர்களுக்கு செலுத்த வேண்டிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்! விவசாயிகளுக்கு நிதி உதவியும், அதே போல் உரங்கள், வேளாண் இரசாயனங்கள் மற்றும் விவசாய உபகரணங்களுக்கு விலை குறைப்பும் வேண்டும்! அரிசி உட்பட பயிர்களுக்கு நியாயமான விலையை உறுதி செய்ய வேண்டும்! என சோ.ச.க. கோருகிறது.

ஏழை விவசாயிகள் தங்கள் சொந்த சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கிக்கொண்டு தொழிலாள வர்க்கத்துடன் இணைய வேண்டும். நிலம் மற்றும் மலிவான விவசாய உள்ளீடுகளை வழங்குவதற்கு விவசாய வணிகங்களையும் பெரிய நிறுவனங்களையும் தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதன் மூலம் தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே விவசாயிகள் எதிர்கொள்ளும் எரியும் பிரச்சினைகளை தீர்க்க முடியும்.

அனைத்து சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாத்திடு!

அரசாங்கத்தின் சிக்கனத் திட்டத்திற்கு எதிராக, சோ.ச.க. பரிந்துரைப்பதாவது:

  • சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உட்பட அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் தள்ளுபடி செய்! பேரழிவு தரும் இனவாதப் போரை நடத்துவதற்கும் பெருநிறுவன இலாபத்தை அதிகரிப்பதற்கும் முதலாளித்துவ அரசாங்கங்கள் எடுத்த கடன்களுக்கு நாமும் எதிர்கால சந்ததியினரும் ஏன் பணம் செலுத்த வேண்டும்? அனைத்து நிதிகளும் உழைக்கும் மக்களின் அவசர சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பயன்படுத்தப்பட வேண்டும்!
  • தனியார் மற்றும் அரசுத் துறைகளில் உள்ள அனைத்து தொழிலாளர்களும், உண்மையான ஊதியங்களின் குறைப்பினை ஈடுசெய்யக்கூடிய வகையில் ஊதிய உயர்வைப் பெற வேண்டும்! பின்னர் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப ஊதிய உயர்வு திட்டமிடப்பட வேண்டும்! ஓய்வூதியதாரர்களுக்கும் இதேபோன்ற அதிகரிப்பு கிடைக்க வேண்டும்!
  • பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப சிறந்த மாத ஊதியம், சம்பளத்துடன் கூடிய விடுமுறை மற்றும் ஓய்வூதியமும் வழங்கப்பட வேண்டும்!
  • போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து அனைத்து ஆயுதப் படைகளையும் விலக்கிக்கொள்! இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட நிலங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் திருப்பிக் கொடு!
  • அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை சந்தை-சார்பு மறுசீரமைப்பு செய்ய வேண்டாம்! அனைத்து தொழில்கள் மற்றும் வேலை நிலைமைகளைப் பாதுகாத்திடு! அனைத்து அரச நிறுவனங்களையும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திடு!
  • உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை உடனடியாகக் குறைத்திடு. அத்தகைய பொருட்களின் மீதான வட் வரி மற்றும் ஏனைய வரிகளுக்கு முடிவுகட்டு!
  • 40,000 வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் ஏனைய வேலையற்றோருக்கு கண்ணியமான ஊதியத்துடன் கூடிய தொழில்களை வழங்கு!
  • அனைத்து வங்கிகள், பெரிய நிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்டங்களை தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதோடு தனியார் இலாபங்களுக்காக அன்றி, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் நலனுக்காக உற்பத்தியையும் விநியோகத்தையும் மறுசீரமைத்திடு!
  • சிறு எண்ணிக்கையில் உள்ள செல்வந்தர்களின் சொத்துக்களைக் கைப்பற்றி, பெரும்பான்மையினரின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அந்த நிதியைப் பயன்படுத்து!
  • நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்திடு!
  • கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டம், அவசரகால மற்றும் அத்தியாவசிய சேவை சட்டங்கள் உட்பட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் ஒழித்திடு!

தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டிற்காக!

வேலைத் தளங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள நடவடிக்கைக் குழுக்களிலிருந்து ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டை ஸ்தாபிக்க சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது. அத்தகைய மாநாடில், சோசலிசக் கொள்கை வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்கான போராட்டத்தை முன்னெடுப்பதைப் பற்றி கலந்துரையாட முடியும், கலந்துரையாட வேண்டும்.

இந்தத் தேர்தலில், தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களும் காரைநகர் மற்றும் கொலன்னாவையில் போட்டியிடும் எங்கள் வேட்பாளர்களுக்கு வாக்களித்து, சோசலிச வேலைத்திட்டத்திற்கு தங்கள் ஆதரவைப் பதிவு செய்யுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். ஏனைய பகுதிகளில் போட்டியிடும் எந்த வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க நாங்கள் பரிந்துரைக்கவில்லை.

சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை சோசலிச எதிர்காலத்திற்காகப் போராடுவதற்கு ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்துடனும், தேவையான வரலாற்றுப் பாடங்களுடனும் ஆயுதபாணியாக்கும் ஒரே அமைப்பான உலக சோசலிச வலைத் தளத்தை (WSWS) வாசியுங்கள்.

பல்கலைக்கழக வளாகங்களிலும், ஏனைய கல்வி நிறுவனங்களிலும், இளம் தொழிலாளர்கள் மத்தியிலும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பை (IYSSE) கட்டியெழுப்புங்கள்.

எங்கள் கட்சியின் 500,000 ரூபாய் கட்சி அபிவிருத்தி நிதிக்கு நன்கொடை அளித்திடுங்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, வரவிருக்கும் பிரமாண்டமான போராட்டங்களுக்குத் தேவையான புரட்சிகரத் தலைமையாக சோசலிச சமத்துவக் கட்சியை (சோ.ச.க.) கட்டியெழுப்ப அதில் இணையுமாறு தொழிலாளர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.