மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கடந்த ஆறு வாரங்களில், நாடு முழுவதும் பல நகரங்கள் மற்றும் சுற்றுலாத் தளங்களில் கோவிட்-19 நோய்தொற்றின் குறிப்பிடத்தக்க வெடிப்பை சீனா எதிர்கொண்டுள்ளது. புதன்கிழமை, சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் (NHC), நாடு முழுவதும் 114 புதிய உள்நாட்டு அறிகுறியுள்ள நோய்தொற்றுக்களும் மற்றும் 512 அறிகுறியற்ற நோய்தொற்றுக்களும் இருப்பதாக கூறியது, இந்த இரண்டு எண்ணிக்கைகளும் சில வாரங்களுக்கு முன்பு இருந்ததை விட கணிசமாகக் குறைந்துள்ளன.
ஜூலை தொடக்கத்தில் இருந்து, கோவிட்-19 நோய் பரவலைத் தடுக்கும் கட்டுப்பாடுகளை ஷாங்காய் தளர்த்தத் தொடங்கியதும், அந்த நகரத்திலும் பிற பெருநகரங்களிலும் மிகுந்த தொற்றும் தன்மை கொண்ட ஓமிக்ரோனின் BA.5.2 துணைமாறுபாட்டால் ஏராளமான நோய்தொற்றுக்கள் உருவாகின.
ஜூலை நடுப்பகுதியில், பூஜ்ஜிய கோவிட் மூலோபாயம் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்துவிட்டதாக NHC அறிவித்தது, அதாவது படிப்படியாக அதன் கடுமையை குறைத்துக் கொண்டது. அதிக ஆபத்துள்ள பகுதிகளிலிருந்து வருபவர்கள் மற்றும் சர்வதேச வருகையாளர்களுக்கான தனிமைப்படுத்தல் காலம் 14 நாட்களில் இருந்து 7 நாட்களாக குறைக்கப்பட்டது மிக முக்கியமான கொள்கை மாற்றமாக இருந்தது. வணிகங்களை விரைவாக மீளத்திறக்கவும் மற்றும் பூட்டுதல்களை குறைக்கவும் அனுமதிக்கும் வகையில் நடுத்தர மற்றும் அதிக ஆபத்துள்ள பகுதிகள் குறித்த வரையறைகள் மாற்றபட்டன.
மிகவும் தளர்த்தப்பட்ட திட்டம் என்பது, நோய்தொற்றுக்களை முடிந்தவரை பூஜ்ஜியத்திற்கு நெருக்கமாக வைத்திருப்பதாகும், அதேவேளை பொதுமக்கள் மற்றும் பொருளாதாரத்திற்கு ஏற்படும் இடையூறுகளை குறைப்பதாகும் என்று NHC அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முந்தைய மாறுபாடுகளை விட குறைவான நோயரும்பல் காலத்தைக் கொண்ட ஓமிக்ரோன் மாறுபாட்டின் தன்மையைப் பொறுத்து குறைந்த தனிமைப்படுத்தல் காலம் நிர்ணயிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 31 அன்று, சுங்கவரி பொது நிர்வாகம், பார்வையாளர்கள் தங்கள் நியூக்ளிக் அமில பரிசோதனை முடிவுகள், நோய்தொற்று நிலை மற்றும் தடுப்பூசி பதிவுகள் போன்றவற்றை காண்பிக்க வேண்டிய தேவையை நீக்கியது. முன்கணிக்கத்தக்க வகையில், இந்த புதிய குறைவான கடுமையுள்ள நெறிமுறைகளை செயல்படுத்தத் தொடங்கியதன் பின்னர், சீனாவின் ஒவ்வொரு மாகாணமும் குறிப்பிட்ட அளவிலான நோய்தொற்று வெடிப்பை எதிர்கொண்டுள்ளது.
ஜூலை 6 அன்று, ஷான்சி மாகாணத்தின் ஷியான் (Xi’an) நகரில், குறைந்த எண்ணிக்கையிலான BA.5.2 நோய்தொற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன, அது நகரம் முழுவதுமாக முழு பூட்டுதல் செயல்படுத்தப்படுவதற்குப் பதிலாக ஏழு நாள் ‘அமைதி காலத்திற்கு’ வழிவகுத்தது. அதாவது, நெரிசல் மிக்க உட்புற பொழுதுபோக்கு இடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன, உணவங்களில் மக்கள் நேரடியாகச் சென்று சாப்பிடுவது நிறுத்தப்பட்டது, பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முன்கூட்டியே தொடங்கப்பட்டது, மற்றும் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன. மேலும், கன்சு மாகாணத்தில் உள்ள வடமேற்கு நகரம் லான்சூவில் (Lanzhou) புதிய நோய்தொற்றுக்கள் பதிவானதன் பின்னர் ஜூலை 11 அன்று இதே மூலோபாயம் பின்பற்றப்பட்டது.
ஹைனான் தீவு மாகாணம் போன்ற சுற்றுலாத் தளங்களில் நோய்தொற்று வெடிப்புக்கள் காணப்பட்டதால், பெரும்பாலான பகுதிகள் அங்கு மூடப்பட்டன. ஆகஸ்ட் 8 அன்று, மாகாணம், அந்த மாத தொடக்கத்தில் இருந்து 1,400 உள்நாட்டில் பரவும் நோய்தொற்றுக்கள் அங்கு இருப்பதாகக் கூறியது. இதற்கு நேர்மாறாக, 2021 ஆம் ஆண்டு முழுவதும் அங்கு இரண்டு நோய்தொற்றுக்கள் மட்டுமே பதிவாகியிருந்தன. திபெத்திலும் கூட ஆகஸ்ட் மாதத்தில் நோய்தொற்றுக்கள் அதிகரித்தன, இது பாரிய பரிசோதனைகளுக்கும், புகழ்பெற்ற பொட்டாலா அரண்மனை மற்றும் பிற மத மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் மூடப்படுவதற்கும் வழிவகுத்தது. யிவூ (Yiwu), உரும்கி (Urumqi), டுன்ஹூவாங் (Dunhuang) ஆகிய சீன நகரங்கள் மற்றும் திபெத்தின் பல நகரங்கள் மற்றும் உள் மங்கோலியாவில் ஆகஸ்ட் மாதத்தில் நோய்தொற்றுக்கள் அதிகரித்தன.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பார்வையாளர்கள் இடத்தை விட்டு வெளியேற 24 மணிநேர இடைவெளியில் இரண்டு எதிர்மறையான பரிசோதனை முடிவுகளை வழங்க வேண்டும். சில சந்தர்ப்பங்களில், ‘நிலையான மேலாண்மை’ என அழைக்கப்படும் வரையறுக்கப்பட்ட பூட்டுதல்கள் 24 மணிநேரம் முதல் 5 நாட்கள் வரை நீடித்தன.
செப்டம்பர் 1 அன்று, 21 மில்லியன் மக்கள்தொகை கொண்ட செங்டு பெருநகரத்தில் நோய்தொற்று வெடிப்பு கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அங்கு முழு பூட்டுதல் விதிக்கப்பட்டது. ஆகஸ்ட் 11 முதல் செப்டம்பர் 6 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 1,175 அறிகுறியுள்ள நோய்தொற்றுக்களும் மற்றும் 508 அறிகுறியற்ற நோய்தொற்றுக்களும் நகரில் கண்டறியப்பட்டது.
திங்களன்று முடிவடைந்த செங்டு நகரப் பூட்டுதல், இந்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கிய இரண்டு மாத கால ஷாங்காய் நகரப் பூட்டுதலுக்கு அடுத்த பெரிய அளவினதாகும். அன்றாட வாழ்வில் சில கட்டுப்பாடுகள் மட்டும் அங்கு இன்னும் செயலில் உள்ளன. செங்டு நகரவாசிகள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த அல்லது பொது இடங்களுக்குள் நுழைய அதற்கு முந்தைய 72 மணிநேரத்திற்குள் பெறப்பட்ட எதிர்மறையான நியூக்ளிக் அமில பரிசோதனை முடிவுகளை வழங்க வேண்டும். பரிசோதனை தேவையை சமாளிக்க, நாளொன்றுக்கு 250,000 பரிசோதனைகளை செய்யும் திறன் கொண்ட ஐந்து தனித்தனி காற்று-ஊதப்பட்ட (air-inflated) பரிசோதனை வசதிகள் நகரத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.
பூட்டுதல், கடுமையான தொடர்புத் தடமறிதல், நோய்தொற்றாளர்களை பாதுகாப்பாக தனிமைப்படுத்துதல், பாரிய பரிசோதனை மற்றும் உலகளாவிய முகக்கவச பயன்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய, பூஜ்ஜிய கோவிட் ஒழிப்பு மூலோபாயத்தின் தொடர்ச்சியின் மூலம் சமீபத்திய வெடிப்புகள் ஒவ்வொன்றும் பெருமளவில் அடக்கப்பட்டுள்ளன.
பூஜ்ஜிய கோவிட் ஒழிப்பு மூலோபாயத்தை சீனா கடைபிடிப்பதானது, மக்களைப் பாதுகாப்பதில் தொடர்ந்து சாதகமான முடிவுகளைக் கொண்டிருக்கிறது. எவ்வாறாயினும், உலகளவில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒழிப்பு மூலோபாயம் இல்லாத நிலையில், நோய்தொற்றுக்களும் வெடிப்புகளும் பரவி பொது சுகாதாரத்தை அச்சுறுத்தும் வகையில் நாட்டிற்குள் அவை தொடர்ந்து இறக்குமதி செய்யப்படும், மேலும் பூஜ்ஜிய கோவிட் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவர சீனாவுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும்.
பாரிய பரிசோதனை, உள்ளூர்மயமாக்கப்பட்ட பூட்டுதல்கள், நிலையான மேலாண்மை மற்றும் அமைதிக் காலங்களை நம்பியிருப்பதைத் தவிர, சிகிச்சை மற்றும் தடுப்பூசி முக்கியத்துவத்தில் புதிய முன்னேற்றங்கள் அங்கு உள்ளன. ஜூலை 25 அன்று, தேசிய மருத்துவப் பொருட்கள் நிர்வாகம் (NMPA) கோவிட்-19 அறிகுறிகளின் சிகிச்சைக்கு அஸ்வுடைன் (Azvudine) மருந்தைப் பயன்படுத்த ஒப்புதல் அளித்தது.
அஸ்வுடைன் மருந்து 2021 இல் எச்.ஐ.வி-1 நோய்தொற்றுக்கு சிகிச்சையளிக்க உருவாக்கப்பட்டது, மற்றும் இப்போது கோவிட்-19 நோயாளிகளுக்கு மொத்தம் இரண்டே வாரங்களில் வேகமாக கண்காணிக்கப்பட்ட சிகிச்சைக்கு பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது பாக்ஸ்லோவிட் வைரஸ் எதிர்ப்பியை விட குறைவான செயல்திறன் கொண்டது, இதுவும் கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அங்கீகரிக்கப்பட்ட மருந்துதான், ஆனால் மிக மிக மலிவானது. மேலும், பாக்ஸ்லோவிட் மருந்தை இன்னும் பரவலாகக் கிடைக்கச் செய்யும் முயற்சியில், சீன மருந்து நிறுவனமான Zhejiang Huahai, ஃபைசர் நிறுவனத்துடன் கூட்டுசேர்ந்து சீனாவில் வைரஸ் தடுப்பு மருந்தை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது. இந்த பிரத்தியேகமற்ற கூட்டு அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாத்திரைகளை உற்பத்தி செய்யும்.
மிக சமீபத்தில் சீனாவில் உருவாக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்க அங்கீகரிக்கப்பட்ட ஒரு நம்பிக்கைக்குரிய புதிய மியூகோசல் தடுப்பூசியும் அங்கு உள்ளது. மூச்சுவழி உள்ளிழுக்கும் சிகிச்சையான இது ஓமிக்ரோன் மாறுபாடுகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும். செப்டம்பர் 4, ஞாயிற்றுக்கிழமை அன்று, CanSino Biologics மருந்து தயாரிப்பு நிறுவனத்தால் அதன் வெளியீடு பற்றி அறிவிக்கப்பட்டது.
சமீபத்திய பூட்டுதல்களின் போது, Weibo மற்றும் WeChat போன்ற சீன சமூக ஊடக தளங்களில் பூஜ்ஜிய கோவிட் கொள்கை குறித்த பொது விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) ஆட்சியானது, நோய்தொற்று வெடிப்புக்கள் இல்லாவிட்டாலும் வழமையான பாரிய பரிசோதைனைகள் தேவைப்படுவதான பூஜ்ஜிய கோவிட் கொள்கையை நிரந்தர மற்றும் எங்கும் நிறைந்த அரசாங்கக் கொள்கையாக மாற்றும் என்ற வீணான வதந்திகளை NHC அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
அக்டோபர் 16 அன்று, CCP அதன் 20வது தேசிய காங்கிரஸைத் தொடங்கும், இது ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும். பூஜ்ஜிய கோவிட் கொள்கையை தொடர்வது குறித்து காங்கிரஸில் என்ன முடிவுகள் எடுக்கப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், ஆனால் அவசரத் தேவை சிகிச்சைக்காக அஸ்வுடைன் மருந்து அங்கீகரிக்கப்பட்டுள்ளது, மற்றும் சில கொள்கைகள் தளர்த்தப்பட்டுள்ளதானது, பூட்டுதல்களைத் தொடர்வது மற்றும் புதிய சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகளை நம்புவதற்கு முற்படுவது பற்றிய பதட்டங்களைக் குறிக்கிறது. பொருளாதாரம் மற்றும் சுற்றுலா மீதான கடுமையான பூட்டுதல்களும், மற்றும் ‘கோவிட் உடன் வாழ’ வலியுறுத்தும் மற்ற ஒவ்வொரு முதலாளித்துவ அரசாங்கத்தின் அழுத்தமும் காங்கிரஸூக்கு முந்தைய கடைசி மாதத்தில் தெளிவாகத் தெரிகிறது.
1.4 பில்லியன் மக்கள் வசிக்கும் சீனாவில் உள்ள நோய்தொற்றுக்கள், கடுமையான நோய்தொற்றுக்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறப்புக்களின் எண்ணிக்கைகளை உலகின் வேறெந்த பகுதியுடனும் ஒப்பிடும்போது அவை மிகக் குறைவானவையே. மே 27 முதல் சீனாவில் ஒரு கோவிட்-19 இறப்பு கூட பதிவாகவில்லை, அதே நேரத்தில் நாட்டில் பதிவான மொத்த கோவிட் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து வெறும் 5,226 ஆக நீடிக்கிறது.
ஒப்பிடுகையில், News Nodes இன் கூற்றுப்படி, அமெரிக்காவில் 1,056,962 உத்தியோகபூர்வ கோவிட்-19 இறப்புக்கள் உள்ளன, அதே நேரத்தில் அதிகப்படியான இறப்புக்களின் மதிப்பீடுகள் உண்மையான எண்ணிக்கையை 1.2 மில்லியனுக்கும் அதிகமாக்குகிறது. தினசரி புதிய இறப்புக்களின் தற்போதைய ஏழு நாள் சராசரி அங்கு 407 ஆக உள்ளது, மேலும் இந்த இலையுதிர் மற்றும் குளிர் காலங்களில் மற்றொரு நோய்தொற்று எழுச்சி நிகழவிருப்பதற்கான எச்சரிக்கைகளும் அதிகரித்து வருகின்றன. ஐரோப்பா முழுவதும், உத்தியோகபூர்வமாக கிட்டத்தட்ட 2 மில்லியன் கோவிட்-19 இறப்புக்கள் பதிவாகியுள்ளன. எக்னாமிஸ்ட் பத்திரிகையின் கூற்றுப்படி, சீனாவுக்கு வெளியே உலகளாவிய அதிகப்படியான இறப்புக்களின் மதிப்பீடுகள் சுமார் 22 மில்லியனாக உள்ளன.
பூஜ்ஜிய கோவிட் மூலோபாயம் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை இந்தப் புள்ளிவிபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன, மேலும் உலகின் எல்லாப் பகுதிகளிலும் இது செயல்படுத்தப்பட வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகிறது. மேற்கத்திய ஊடகங்கள் இடைவிடாமல் வாதிட்டபடி, சீனா தனது தணிப்பு நடவடிக்கைகளை கைவிட்டு, தடுப்பூசி மற்றும் சிகிச்சை மட்டுமே அணுகுமுறையை பின்பற்றியிருந்தால், அது மில்லியன் கணக்கான மக்களின் மரணத்திற்கு வழிவகுக்கும்.
அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது சீனாவில் தடுப்பூசி விகிதங்கள் ஒப்பீட்டளவில் அதிகமாக இருந்தாலும் (அமெரிக்காவில் 66.8 சதவிகித மக்கள் மட்டுமே தடுப்பூசி பெற்றுள்ளதுடன் ஒப்பிடுகையில், சீனாவில் 89.7 சதவிகித மக்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர்) சீனாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் நோய்தொற்றுக்கள் தடுப்பூசி-மட்டுமே மூலோபாயம் போதாது என்பதை நிரூபிக்கின்றன. மறுபுறம், சீனாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட அதே கடுமையான நடவடிக்கைகள் உலகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டால், மனித இனத்தால் SARS-CoV-2 வைரஸை உலகளவில் சில மாதங்களில் முற்றிலும் ஒழிக்க முடியும்.