முன்னோக்கு

பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை சீனா அகற்றுவதும், தொடர்ந்து கொண்டிருக்கும் பெருந்தொற்று அபாயங்களும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

2022 ஆம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், கொரோனா வைரஸ் பரவலை மெதுவாக்கும் எல்லா நடவடிக்கைகளும் உலகளவில் நீக்கப்பட்டு வருவதுடன் சேர்ந்து கோவிட்-19 பெருந்தொற்றின் ஓர் அபாயகரமான புதிய கட்டம் திறந்து விடப்பட்டுள்ளது. பில்லியன் கணக்கான மக்களுக்கு நோய்தொற்றோ அல்லது மறுதொற்றோ ஏற்படும் வகையில், கோவிட்-19 முற்றிலும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் பரவுவதை அனுமதிப்பதென உலகெங்கிலுமான அரசாங்கங்கள் முடிவெடுத்துள்ளன. இந்த வைரஸ் உருமாறுவதற்கும் மற்றும் மிகவும் ஆபத்தான புதிய வகைகள் உருவாவதற்குமான சாத்தியக்கூறை இந்தக் கொள்கை அனுமதிக்கிறது.

சீனா இப்போது இந்த பெருந்தொற்றின் உலகளாவிய குவிமையமாக ஆகி உள்ளது, சீனாவில் தனிநபருக்கான நோய்தொற்று மற்றும் இறப்பு விகிதங்களை வேறெந்த மிகப் பெரிய நாட்டையும் விட மிகக் குறைவாக வைத்திருந்த பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை அங்கே ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி (CCP) அகற்றியுள்ளது. சமூக அடைப்புகள், வெகுஜன பரிசோதனைகள், நோயின் தடம் அறிதல், தனிமைப்படுத்தும் மற்றும் விலகி இருக்க வைக்கும் நெறிமுறைகள் மற்றும் ஏனைய ஒவ்வொரு பொது சுகாதார நடவடிக்கையையும் நவம்பர் 11 இல் இருந்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுத்தி விட்டது.

சீனாவுக்கு உள்ளே வரும் பயணியர்களுக்கு அவசியமாகும் எல்லா விதமான தனிமைப்படுத்தும் நடைமுறைகளையும் அகற்றும் வகையில், கோவிட்-19, ஜனவரி 8 இல் இருந்து, A ரக தொற்றுநோய் என்பதில் இருந்து B ரக தொற்றுநோய்க்கு மாற்றப்படுவதாக திங்கட்கிழமை சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் (NHC) மறுவகைப்படுத்தியது. இது கோவிட்-19 நோய்தொற்றுகள் பற்றிய விபரங்களை இனி வெளியிடப் போவதில்லை என்று தேசிய சுகாதார ஆணையத்தின் ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பைத் தொடர்ந்து வந்தது, மேலும் இந்தப் பெருந்தொற்று பரவல் பற்றிய எல்லா புள்ளிவிபரங்களையும் சீர்கெடுக்கும் ஒரு வெளிப்படையான முயற்சியாக, கோவிட்-19 இறப்புகள் பற்றிய அவர்களின் வரையறை கடந்த வாரம் மாற்றியமைக்கப்பட்டது.

சீனாவில் பூஜ்ஜிய-கோவிட் கொள்கை தலைகீழாக மாற்றப்பட்டு இருப்பது ஒரு வெகுஜன நோய்தொற்று அலையை உருவாக்கி உள்ளது. டிசம்பரின் முதல் 20 நாட்களில் சீனா முழுவதும் 248 மில்லியன் பேருக்கு கோவிட்-19 நோய்தொற்று ஏற்பட்டிருப்பதாக சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் துணை இயக்குனர் சன் யாங்கின் ஓர் அறிக்கை (கசிய விடப்பட்ட அறிக்கை) மதிப்பிட்டது. சந்திர புத்தாண்டு பயண காலத்திற்கு (Lunar New Year season) மத்தியில், சீனாவின் 1.4 பில்லியன் மக்களில் பெரும்பான்மையினருக்கு அடுத்த இரண்டு மாதங்களில் நோய்தொற்று ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

பெய்ஜிங், ஷாங்காய் மற்றும் பிற முக்கிய நகரங்களின் மருத்துவமனைகள், அதிகளவிலான நோயாளிகள் வருகையால் நிலைகுலைந்து வருகின்றன, பிணவறைகள் அடக்கம் செய்யும் சேவைகளை இடைநிறுத்தி வருகின்றன, ஆயிரக் கணக்கில் இல்லையென்றாலும் நூற்றுக்கணக்கானவர்கள் ஒவ்வொரு நாளும் வீட்டிலேயே இறந்து வருவதாக நம்பப்படுகிறது. நீண்டகால கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பதிவிடும் சமூக ஊடகப் பதிவுகள் நீண்டகால அறிகுறிகளை விவரிக்கின்றன, அதீத சோர்வு, ஆழ்ந்த இருமல், மூச்சுத் திணறல், கவனம் செலுத்துவதில் சிரமங்கள், இன்னும் பல பாதிப்புகள் இதில் உள்ளடங்கும்.

சீனா எங்கிலும் அழிவுகரமான கோவிட் பரவல் குறித்து மாதக்கணக்கில் கடைபிடித்த மவுனத்தை உடைத்து, அதிபர் ஜி ஜின்பிங் திங்கட்கிழமை ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் ஓர்வெல்லியன் பாணியில் இரட்டை-பேச்சைப் பயன்படுத்தினார், “தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தலுக்கான சமூக பாதுகாப்பு நிலைப்பாட்டைப் பலப்படுத்தவும், திறம்பட மக்களின் உயிர்கள், பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தைக் காக்கவும் … இன்னும் அதிகமாக இலக்கு வைத்து தேசத்தின் சுகாதார நடவடிக்கைகளை நாம் தொடங்க வேண்டும்,” என்றார்.

பூஜ்ஜிய-கோவிட் கைவிடப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளும் சீன அரசு ஊடகங்களும், உலகம் முழுவதிலும், குறிப்பாக அமெரிக்காவில், கடந்தாண்டு உருவாக்கப்பட்ட எல்லா பொய்கள் மற்றும் பிரச்சாரங்களை மீண்டும் தொகுத்தளிக்கின்றன. அவர்கள் ஓமிக்ரோன் மாறுபாட்டை 'மிதமானது' என்று குறிப்பிடுவதன் மூலம், தற்போதைய இந்த நோய்தொற்று அதிகரிப்பை அவர்களின் 'கோவிட் வெளியேறும் அலை' என்று தவறாக வாதிடுகிறார்கள். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவிட் கொள்கைக்கான மருத்துவரும் செய்தித் தொடர்பாளருமான Zhong Nanshan இன் வார்த்தைகளில் கூறினால், 2023 இன் நடுபகுதியில் சீனா 'தொற்றுநோய்க்கு முந்தைய நிலைமைகளுக்கு' திரும்புமாம்.

பாரியளவில் வேகமான நோய்தொற்று மூலம் சீனா 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கத்திற்கு' பாடுபடுவதாக தெரிகிறது என்று நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் பைனான்சியல் டைம்ஸில் வெளியிடப்பட்ட மூன்று சமீபத்திய கட்டுரைகள் குறிப்பிட்டுள்ளன. ஆனால் யதார்த்தம் என்னவென்றால், 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கை' என்பது 2020 இல் அதிவலது அரசியல்வாதிகள் மற்றும் மோசடி விஞ்ஞானிகள் உருவாக்கிய ஒரு மாயத்தோற்றமாகும், இதற்கு எந்த விஞ்ஞானபூர்வ அடித்தளமும் இல்லை. தொடர்ந்து கொண்டிருக்கும் வெகுஜன கோவிட் நோய்தொற்றுக்கள் மற்றும் மறுதொற்றுக்களின் ஒரு கொடூர சுழற்சியில் உலகின் ஏனைய பகுதி மக்களுடன் சீன மக்களும் இணைய நிர்பந்திக்கப்பட்டு வருகின்றனர், இது உலகளவிலான பின்விளைவுகளுடன், சமூகத்தில் உடல் ரீதியான மற்றும் பொருளாதார ரீதியான நலனுக்கு ஒன்றோடொன்று சேர்த்து பாதிப்புகளை ஏற்படுத்தும்.

சீன சமூகம் எதிர்கொண்டு வரும் எதிர்காலத்தை, அமெரிக்காவிலும் மற்றும் வடக்கு அரைக்கோளம் முழுவதிலும் காணலாம், இங்கே வெகுஜன நோய்த்தொற்றின் மூன்றாவது குளிர்காலம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் கடந்தாண்டு புள்ளிவிபரங்களில் தில்லுமுல்லு செய்யப்பட்டு இருந்தாலும், டிசம்பர் முழுவதும் உத்தியோகபூர்வ கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை, மருத்துவமனை அனுமதிப்புகள் மற்றும் மரணங்கள் ஒரே சீராக உயர்ந்துள்ளன. மிகவும் துல்லியமான வேஸ்ட்பேப்பர் சாம்ப்ளிங் முறைப்படி, இந்த ஒட்டுமொத்த பெருந்தொற்று காலத்தில் தற்போது மூன்றாவது அதிகபட்ச விகிதத்தில் கோவிட்-19 பரவி வருவதுடன், இது கடந்த குளிர்காலம் மற்றும் வசந்த காலத்தில் இருந்த ஓமிக்ரோன் துணைவகைகளின் முந்தைய அதிகரிப்பையே கடந்து சென்றுவிட்டது.

மருத்துவமனை அனுமதிப்புகள் மற்றும் இறப்புகள் அதிகரித்தளவில் முதியவர்களைப் பாதிக்கின்றன, 70 வயது மற்றும் அதற்கு அதிகமான வயதுடையவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விகிதம் கடந்த குளிர்காலத்திற்குப் பின்னர் இப்போது மிகவும் அதிகபட்சமாக உள்ளது. தினசரி புதிய இறப்புகளின் ஏழு நாள் சராசரி, இப்போது 426 ஆக உள்ளது, அதாவது ஒவ்வொரு வாரமும் கோவிட்-19 இல் இறக்கும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை இப்போது செப்டம்பர் 11, 2001 பயங்கரவாத தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கைக்கு சமமாக உள்ளது. இந்த இறப்புகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

2021 இல் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக அமெரிக்காவில் ஆயுட்காலம் சுமார் 0.6 ஆண்டுகள் குறைந்து, 1996 க்குப் பிந்தைய மிகக் குறைந்த மட்டமாக, 76.4 ஆண்டுகளாக ஆகி இருப்பதை நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள் (CDC) கடந்த வாரம் உறுதிப்படுத்தியது. அவ்விதத்தில் இந்தப் பெருந்தொற்று சுமார் ஒரு கால் நூற்றாண்டின் சமூக பின்னடைவுக்கு நிகராக உள்ளது. இது ஓர் உலகளாவிய போக்கின் பாகமாகும், இதில் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதல்முறையாக 2020 மற்றும் 2021 இல் உலகெங்கிலும் ஆயுட்காலம் குறைந்தது. குறிப்பிடத்தக்க வகையில், இந்தப் பெருந்தொற்றின் முதல் இரண்டு ஆண்டுகளில் சீனாவில் ஆயுட்காலம் அதிகரித்ததுடன், 2021 இல் அமெரிக்காவையே மிஞ்சியது, ஆனால் இந்த செயல்முறை இப்போது தலைகீழாக மாற்றப்படுகிறது.

2020 இல் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகவும், 2021 இல் உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகவும் கோவிட்-19 இருந்தது, 2021 இறுதியில் மொத்தத்தில் 14.83 மில்லியன் போர் கொல்லப்பட்டு இருந்ததாக கூடுதல் மரணங்கள் பற்றிய மற்றொரு சமீபத்திய ஆய்வு கண்டறிந்தது.

கோவிட்-19 பரவலுடன் சேர்ந்து அதன் பக்கவாட்டில், 'ட்ரிபிள்டெமிக்' (tripledemic) என்று குறிப்பிடப்படும் சளிக்காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் ஏற்படுத்தும் வைரஸ் (RSV) காரணமாக முன்னொருபோதும் இல்லாத எண்ணிக்கையில் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, வடக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பிற நாடுகள் எங்கிலும், குழந்தைகள் நல மருத்துவமனைகள் அவற்றின் கொள்ளளவில் நிரம்பி விட்டன அல்லது அதற்கு அதிகமாக உள்ளன, இத்தகைய தடுக்கக்கூடிய நோய்களால் குழந்தைகள் இறந்து வருகின்றனர்.

வளரும் T-செல்களைக் குறைப்பதன் மூலம், கோவிட்-19 ஒரு நோயாளியின் நோயெதிர்ப்பு மண்டலத்தைக் கணிசமானளவில் பாதிக்கும், இதனால் அவர்கள் மற்ற வைரஸ் மற்றும் பாக்டீரியா நோய்தொற்றுகளில் இருந்து இன்னும் தீவிர நோய்க்கு உள்ளாகலாம் என்பதை ஒரு வளர்ந்து வரும் ஆராய்ச்சி அமைப்பு சுட்டிக் காட்டுகிறது. சமூகத்தில் குழந்தைகள் மீதும் மற்றும் அனைவர் மீதும் வெகுஜன நோய்த்தொற்று மற்றும் மறுதொற்று ஏற்படுவது தான், பிற சுவாசக் கோளாறு வைரஸ்கள் காரணமாக தற்போது மருத்துவமனை அனுமதிப்புகள் அதிகரித்து வருவதற்குப் பின்னால் உள்ள முக்கிய காரணி என்று விஞ்ஞானிகளும்இயற்பியலாளர்களும் எச்சரித்துள்ளனர்.

இறுதியாக, நீண்டகால கோவிட்டின் அளப்பரிய சமூக பாதிப்பு அதிகரித்தளவில் முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறது. CDC இன் சமீபத்திய தரவுகளின்படி, சுமார் 17.7 மில்லியன் அமெரிக்கர்கள் தற்போது நீண்டகால கோவிட் நோயை அனுபவித்து வருகின்றனர், அவர்களில் 23.1 சதவீதம் பேர் இந்த பாதிப்பு 'குறிப்பிடத்தக்களவில் செயல்பாடுகளை மட்டுப்படுத்துவதாக' தெரிவிக்கின்றனர். அக்டோபரில் வெளியிடப்பட்ட கோவிட்-19 மறுதொற்றுகள் பற்றிய மிகவும் குறிப்பிடத்தக்க ஆய்வு, ஒவ்வொரு மறுதொற்றும் ஒருவருக்கு நீண்டகால கோவிட் ஏற்படும் அபாயத்தைப் பெருமளவில் அதிகரிக்கிறது, இந்த அபாயம் தடுப்பூசிகளால் மிகக் குறைந்தளவில் மட்டுமே குறைகிறது என்பதைக் கண்டறிந்தது.

கோவிட்-19 இன் தொடர்ந்து கொண்டிருக்கும் மற்றும் எச்சரிக்கையூட்டும் அபாயங்களைத் தொடர்ந்து பொய்கள் மற்றும் பிரச்சாரம் மூலமாக மட்டுமே மூடிமறைத்து ஒடுக்க முடியும் என்பதை அதிகரித்து வரும் விஞ்ஞானப்பூர்வ புள்ளிவிபரங்களின் தொகுப்புகள் நிரூபிக்கின்றன. அமெரிக்காவில், வெள்ளை மாளிகை, பெருநிறுவன ஊடகங்கள் மற்றும் அனைத்து உத்தியோகபூர்வ அமைப்புகளும் முடிவின்றி மகிழ்ச்சியான பேச்சுக்களை நடத்துகின்றன, இந்தப் பெருந்தொற்றைக் குறித்து இறந்தகாலத்தில் பேசுகின்றன, மிகவும் அடிப்படை பொது சுகாதார நடவடிக்கைகளைக் கூட இழிவுபடுத்துகின்றன.

கடந்த வாரம், வெள்ளை மாளிகையின் கோவிட் விடையிறுப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர். ஆஷிஷ் ஜா அபத்தமாக கூறுகையில், 'முகக்கவசங்கள் நன்கு பயன்படுகின்றன என்பதைக் காட்டும் எந்த ஆய்வும் உலகில் இல்லை,” என்றார். ஊடகங்களில் பேசும் தலைவர்கள் வழக்கமாக கோவிட்-19 ஐ சாதாரண சளிக் காய்ச்சலுடன் ஒப்பிட்டு, விடுமுறை கால வியாபாரம் மற்றும் பயணங்களை ஊக்குவிக்கின்றனர். 'இந்தப் பெருந்தொற்று முடிந்து விட்டது' என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் ஆகஸ்டில் அறிவித்தார். இந்த பிரச்சாரம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது, 30 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே இன்னமும் சில நேரங்களிலாவது முகக்கவசங்கள் அணிகின்றனர், இது டிசம்பர் 2020 இல் 90 சதவீதமாகவும் ஓராண்டு முன்னர் 69 சதவீதமாகவும் இருந்ததை விட குறைவு என்பதை சமீபத்திய Ipsos கருத்துக்கணிப்புக் கண்டறிந்தது.

இந்தப் பெருந்தொற்று அபாயங்களுக்கு உலகளாவிய மக்களை வேண்டுமென்றே நிராயுதபாணிக்குவதும் — சீனாவில் இருந்து அமெரிக்கா வரையில் மற்றும் அதற்கிடையே ஒவ்வொரு இடத்திலும் — முடிவின்றி வெகுஜன நோய்தொற்றை ஊக்குவிப்பதும், எதிர்கால வகைகளுக்கு முன்னால் சமூகத்தை மிகப் பெரும் ஆபத்தில் வைக்கிறது.

இந்த வைரஸ் பரிணாமத்தின் விதிகள், புறநிலை ரீதியானது என்பதோடு, கோவிட்-19 படிப்படியாக அபாயம் குறைந்து வருவதாக அரசாங்கங்களின் ஆதாரமற்ற வாதங்களில் இருந்து பிரிந்து நிற்கின்றன. அதிகளவில் நோயெதிர்ப்பு சக்தியைத் தாக்கும் திறனுடன், அதிகளவில் பரவக்கூடிய, வீரியமான ஒரு புதிய வகை எந்தவொரு தருணத்திலும் பரிணமித்து, இதை விட மிகப் பெரியளவில் நோய்தொற்றுகள் மற்றும் மரண அலையைக் கூட உருவாக்கலாம்.

2023 இல், சர்வதேச தொழிலாள வர்க்கம், இந்தப் பெருந்தொற்றின் முதல் மூன்று ஆண்டுகளில் இருந்து அரசியல் மற்றும் விஞ்ஞானப் படிப்பினைகளைப் பெற வேண்டும், முதலாளித்துவ ஆளும் உயரடுக்கு மற்றும் அவர்களுக்கு இணக்கமான ஊடகங்களின் பொய்களை நிராகரிக்க வேண்டும், மற்றும் கோவிட்-19 பரவலைத் தடுக்க ஓர் உலகளாவிய போராட்டத்தை முன்னெடுத்து, ஒவ்வொரு நாட்டிலும் பொது சுகாதாரத்தைப் பாரியளவில் விரிவாக்க வேண்டும். மனித வாழ்க்கையை இலாபத்திற்காகவும், செல்வ குவிப்புக்காகவும் முதலாளித்துவம் அடிபணிய வைப்பது முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.