மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
விஞ்ஞானிகளும் தொற்றுநோயியல் நிபுணர்களும் கிடைக்கக்கூடிய தரவுகளை ஆராய்வதுடன், தரவு கிடைக்காத இடங்களில் அனுமானங்களை உருவாக்கும் நிலையில், கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்படும் மனித பேரழிவின் அளவு இன்னும் தெளிவாக வெளிவருகிறது. கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு முக்கிய ஆய்வு, கோவிட்-19 தொற்றுநோய் 2020 இல் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது, மேலும் 2021 இல் உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணமாக அது இருந்தது என்ற நிலையில், 2019 இல் 8.9 மில்லியன் மக்களை பலி கொண்ட இஸ்கிமிக் இதய நோயையும் மற்றும் 2018 இல் 9.5 மில்லியன் மக்களை பலி கொண்ட புற்றுநோயையும் அது முந்தியுள்ளதைக் கண்டறிந்துள்ளது.
கோவிட்-19 உடன் தொடர்புடைய அதிகப்படியான இறப்புக்கள் குறித்த உலக சுகாதார அமைப்பின் (WHO) தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் மே 2022 அறிக்கையின் தொடர்ச்சியாக இந்த ஆய்வு இருந்தது. 2021 ஆம் ஆண்டின் இறுதியில் உலகளாவிய அதிகப்படியான இறப்புக்கள் 14.83 மில்லியனை எட்டியிருந்ததாக அவர்கள் மதிப்பிட்டுள்ளனர், இது அந்த நேரத்தில் கோவிட்-19 காரணமாக பதிவான 5.42 மில்லியன் இறப்புக்களை விட 2.74 மடங்கு அதிகமாகும்.
அதிகப்படியான இறப்பு என்பது, நெருக்கடியின் போது ஏற்படும் மொத்த இறப்புகளுக்கும் சாதாரண நிலைமைகளின் கீழ் எதிர்பார்க்கப்படும் இறப்புகளுக்கும் உள்ள வித்தியாசம் என வரையறுக்கப்படுகிறது. ஆசிரியர்கள் குறிப்பிடுவது போல்:
அதிகப்படியான இறப்புக்கள் என்பது, வைரஸூடன் நேரடி தொடர்புடைய மொத்த இறப்புக்கள், மற்றும் அத்தியாவசிய சுகாதார சேவைகள் அல்லது பயண இடையூறுகள் போன்ற மறைமுக தாக்கத்தின் விளைவாக ஏற்படும் இறப்புக்கள் இரண்டையும் குறிக்கும். அதிகப்படியான இறப்புக்கள் என்பது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நன்கு உருவாக்கப்பட்ட கருத்தாகும், மேலும் இது கடந்தகால சுகாதார நெருக்கடிகளின் அளவையும் மற்றும் 1918 ‘ஸ்பானிஷ் காய்ச்சல்’ போன்ற தொற்றுநோய்களின் எண்ணிக்கையையும் மதிப்பிடுவதற்கு விரிவாகப் பயன்படுத்தப்பட்டது.
2020 மற்றும் 2021 இரண்டு ஆண்டுகளையும் ஒன்றோடொன்று ஒப்பிடுகையில், பல நாடுகளில் பாரிய தடுப்பூசி பிரச்சாரங்கள் தொடங்கப்பட்டிருந்த போதிலும், முதல் வருட இறப்புக்கள் இரண்டாம் வருட இறப்புக்களை விட குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி தேசியவாதத்தின் ஊக்குவிப்பு, இலாப உந்துதல் உலகளாவிய தடுப்பூசிகளின் பரந்த அளவில் சமமற்ற விநியோகத்திற்கு வழிவகுத்தது, இது முக்கிய குறைந்த வருமான நாடுகளில் மில்லியன் கணக்கான தேவையற்ற இறப்புக்களை ஏற்படுத்தியது. 2020 ஆம் ஆண்டில் தோராயமாக 4.47 மில்லியன் அதிகப்படியான இறப்புக்கள் நிகழ்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்ட நிலையில், 2021 இல் இந்த எண்ணிக்கை 10.36 மில்லியனாக கடுமையாக உயர்ந்துள்ளது.
உலக இறப்பு தரவுத்தொகுப்பை (World Mortality Dataset) உருவாக்கி பராமரிப்பவரான ஆய்வின் ஆசிரியர்களில் ஒருவரான ஏரியல் கார்லின்ஸ்கி, தற்போதைய ஆய்வானது அனைத்து காரண-இறப்பு தரவுகளை வழங்காத நாடுகளில் அதிகப்படியான இறப்புக்களை மதிப்பிடுவதற்கான மாதிரிகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் முயற்சிக்கிறது என்று உலக சோசலிச வலைத் தளத்திடம் (WSWS) தெரிவித்தார். மேலும், தற்போதைய ஆய்வு, தொற்றுநோய் காலத்தில் அதிகமான காலகட்டங்களில் பல நாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட அதிகமான தரவுகளை உள்ளடக்கியது என்றும் அவர் கூறினார். மேலும் இது, பல்வேறு காரணங்களுக்காக அறிக்கையிடல் பின்தங்கிய அல்லது கிடைக்காத நாடுகளில் இருந்து தேசிய அளவிலான இறப்புக்களை மதிப்பிடுவதற்கு துணை தேசிய தரவுகளை சேகரிப்பதையும் உள்ளடக்கியது.
SARS-CoV-2 வைரஸை உலகளவில் கட்டுப்படுத்தாமல் பரவ அனுமதித்த கொள்கைகளால் ஏற்பட்ட மரணத்தின் அளவை உணர, ஒருவர் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களுக்குத் திரும்ப வேண்டும். உண்மையில், நேரடியாகக் காணப்பட்ட பாரிய இறப்பு எண்ணிக்கையானது, கொரோனா வைரஸின் குறிப்பிட்ட வைரஸ் தன்மைகளின் துணை விளைபொருள் மட்டுமல்ல, மாறாக நிதி மூலதனத்தின் சர்வதேச கொள்கையின் துணை விளைபொருளாகும். அவர்களின் நிதிக் கணக்கீடுகளின்படி வைரஸை அகற்றுவதற்கான செலவு மிக அதிகம் என்றும், அதனால் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றுவது மதிப்புக்குரியது அல்ல என்றும் அவர்கள் முடிவு செய்தனர்.
கொரோனா வைரஸை எவ்வாறு விரைவாக அழிப்பது மற்றும் தொற்றுநோயை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது என்பது பற்றிய தொழில்நுட்ப திறன்களும் விஞ்ஞான புரிதலும், வரலாற்றில் எந்த நேரத்திலும் இல்லாத வகையில், உலகெங்கிலும் உள்ள அரசியல் தலைவர்களுக்கு எட்டக்கூடியதாக இருந்தது. உலக சோசலிச வலைத் தளமானது ஆளும் வர்க்கங்களின் முடிவுகளை, 'தீங்கு மிக்க அலட்சியம்' என்று, வழிநடத்தும் கோட்பாட்டை பொருத்தமாக வரையறுத்துள்ளது, இது தொற்றுநோய்களின் மூன்றாவது குளிர்காலத்திலும் தொடர்கிறது.
ஆசிரியர்கள் குறிப்பிடுவது போல, கோவிட்-19 இறப்புக்களின் துல்லியமான தரப்படுத்தப்பட்ட வரையறைகள் இல்லாதது மற்றும், சிவில் பதிவு மற்றும் முக்கிய புள்ளியியல் அமைப்புகள் மூலம் தேவையான அனைத்து காரணங்களின் இறப்பு தரவுகளை அணுகுவது ஆகியவை ஒவ்வொரு நாட்டிலும், WHO உலகப் பகுதிகளிலும் இந்த மதிப்பீடுகளை அளவிடுவதில் மிகப்பெரிய சவால்களை முன்வைத்தன. 100 நாடுகள் (52 சதவீதம்) மட்டுமே அதிகப்படியான இறப்புகள் குறித்த மாதாந்திர தேசிய தரவை வழங்க முடிந்தது. ஆய்வு பின்வருமாறு குறிப்பிடுகிறது:
கோவிட்-19 தொற்றுநோய் மனிதகுலத்தை கடுமையாகப் பாதித்துள்ள இரண்டு ஆண்டுகளில் கிடைத்த முக்கியமான பாடங்கள் முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டு, உலகளாவிய பொது சுகாதார கண்காணிப்புத் திறனின் ஒரு பகுதியாக அது ஒரு கட்டுப்படுத்தல் கருவியாக பயன்படுத்தப்பட வேண்டும். முதலாவதாக, தரவு மற்றும் சுகாதாரத் தகவல் அமைப்புகளை மேம்படுத்துவதற்கான அவசரத் தேவை உள்ளது, மற்றும் சேகரிக்கப்பட்ட தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு, பகிரப்பட வேண்டும் மற்றும் அறிக்கை செய்யப்பட வேண்டும். இரண்டாவதாக, சுகாதார தகவல் அமைப்புகளின் தொடர்ச்சியான வலுவூட்டலுடன் கூட தொற்றுநோய் கண்காணிப்பிற்குத் தேவையான சீரமைப்புகள், மற்றும் ஏற்கனவே உள்ள பிற வழமையான கண்காணிப்பு அமைப்புகளுடனான அவற்றின் ஒருங்கிணைப்பு, மற்றும் மக்கள்தொகை மற்றும் புவியியல் கண்காணிப்பு அமைப்புகளுடன் சேர்ந்து சரியான நேரத்தில் இலக்கு வைக்கப்பட்ட தலையீடுகளை எளிதாக்குதல் ஆகியவை மேற்கொள்ளப்பட வேண்டும். கோவிட்-19 கண்காணிப்பானது, உலகளாவிய சுகாதார பாதுகாப்பு மற்றும் சர்வதேச சுகாதார ஒழுங்குமுறை கண்காணிப்பு, மற்றும் தடுப்பூசி பாதுகாப்பு, மற்றும் தண்ணீர், சுகாதாரம், மற்றும் சுகாதார சேவைகள் உள்ளிட்ட சுகாதார அமைப்பு தயார்நிலைக்கு தொடர்புடைய குறிகாட்டிகள் ஆகியவற்றுடன் இணைக்கப்பட வேண்டும்.
சந்தேகத்திற்கு இடமின்றி, உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் ஒவ்வொரு நாட்டின் முழு நிதி நிலைமையைப் பற்றி முழுமையாக அறிந்திருக்கின்றன, மேலும் கிட்டத்தட்ட எப்போதோ மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு பரிவர்த்தனை மற்றும் பணம் செலுத்துதல் பற்றிய விரிவான மற்றும் துல்லியமான வரலாற்றுத் தரவுகளையும் அவை கொண்டுள்ளன. ஆனால் எத்தனை பேர் இறந்துள்ளனர் மற்றும் அந்த இறப்புகளுக்கான காரணம் என்ன என்று கேட்டால், அது உலகின் பெரும்பாலான பகுதிகளில் ஊகங்களாகவே உள்ளது.
தற்போதைய தொற்றுநோய் மற்றும் எதிர்காலத்தில் நிகழவிருக்கும் நோய்தொற்று வெடிப்புகள் மற்றும் தொற்றுநோய்களுக்கு பகுத்தறிவார்ந்த தடுப்பு நடவடிக்கை எடுக்க சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த தரவுத்தளங்கள் மற்றும் நெருக்கடி நேரத்தில் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய உள்கட்டமைப்பு, வளங்களையும் மனிதவளத்தையும் திறமையாகவும் திறம்படவும் ஒதுக்கீடு செய்தல் ஆகியவை தேவைப்படுகிறது.
தொற்றுநோயால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில், அதிகப்படியான இறப்புக்கள், மற்றும் அவற்றின் மக்கள்தொகை அளவு மற்றும் வயது கட்டமைப்பு ஆகிய இரண்டின் அடிப்படையில் அறிக்கை முக்கியமான பகுப்பாய்வுகளை வழங்குகிறது. அது இவ்வாறு குறிப்பிடுகிறது:
அதிகப்படியான இறப்புக்களின் மதிப்பீடுகளைக் கொண்ட 20 நாடுகள் உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன மற்றும் மதிப்பிடப்பட்ட உலகளாவிய அதிகப்படியான இறப்புக்களில் 80 சதவீதத்திற்கு அதிகமானதை அவை கொண்டுள்ளன… இதில் பங்களாதேஷ், பிரேசில், கொலம்பியா, எகிப்து, இந்தியா, இந்தோனேசியா, ஈரான், இத்தாலி, மெக்சிகோ, நைஜீரியா, பாகிஸ்தான், பெரு, பிலிப்பைன்ஸ், போலந்து, ரஷ்ய கூட்டமைப்பு, தென்னாபிரிக்கா, ஐக்கிய இராச்சியம், துருக்கி, உக்ரேன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அடங்கும்.
ஒவ்வொரு நாட்டின் மக்கள்தொகை மற்றும் வயது கட்டமைப்பை அடிப்படையாக வைத்து அதிகப்படியான இறப்புகளை பகுப்பாய்வு செய்தபோது, வறிய நாடுகள் தொற்றுநோயின் சுமையை முழுமையாக எதிர்கொண்டது தெளிவாகியது, அதாவது ஒட்டுமொத்த இறப்புக்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை கீழ்-நடுத்தர பொருளாதார நாடுகளில் நிகழ்கின்றன.
இந்தியா, ரஷ்ய கூட்டமைப்பு, இந்தோனேசியா, அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள்தான் இறங்கு வரிசையில் நிகழ்ந்த அதிகளவு மதிப்பிடப்பட்ட அதிகப்படியான இறப்புக்களை எதிர்கொண்டன என்றாலும், ஒரு நாட்டின் மக்கள்தொகை அளவு மற்றும் வயது கட்டமைப்பைக் கருத்தில் கொண்டு எதிர்பார்க்கப்படும் இறப்புகளுக்கு இவை சரிசெய்யப்பட்டபோது, குறைந்த வருமான நாடுகளில் தொற்றுநோய்களின் கொடிய எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் காணப்பட்டது. குறிப்பாக, பெரு, ஈக்வடோர், பொலிவியா, மெக்சிகோ மற்றும் ஆர்மீனியா ஆகிய நாடுகள் எதிர்பார்த்த இறப்புகளுடன் தொடர்புடைய அதிகளவு அதிகப்படியான இறப்புக்களைக் கொண்ட முதல் ஐந்து நாடுகளாக உள்ளன.
தொற்றுநோயின் முதல் ஆறு மாதங்களின் நிகழ்வுகளை அறிக்கை நேரடியாக கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும், கார்லின்ஸ்கி உடனான முந்தைய கலந்துரையாடலில், குறிப்பாக தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் வைரஸைக் கட்டுப்படுத்தவும், மக்களைப் பாதுகாக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், எதிர்பார்த்த இறப்புக்களுடன் தொடர்புடைய அதிகப்படியான இறப்புக்கள் (கீழே காண்க) எதிர்மறையாகச் சென்றதைக் கண்டன என்று அவர் குறிப்பிட்டார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன. எதிர்பார்க்கப்படும் இறப்புக்கள் ஏன் அப்படியே உள்ளன என்ற முக்கியமான கேள்வியையும் இது எழுப்புகிறது. தொற்றுநோய்க்கு முந்தைய ‘இயல்பு’ என்று கருதப்படுவதைத் தாண்டி உயிர்களைப் பாதுகாக்க என்ன தலையீடுகள் அல்லது சமூக மாற்றங்களைச் செய்யலாம்?
எக்னாமிஸ்ட் பத்திரிகையின் மதிப்பீடுகளானது, உலக சுகாதார அமைப்பின் (WHO) கோவிட்-19 இறப்பு மதிப்பீட்டு தொழில்நுட்பக் குழுவால் முன்வைக்கப்பட்ட எண்ணிக்கைகளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தன, அதாவது அவர்களின் முக்கிய மதிப்பீட்டின்படி அதிகப்படியான இறப்புக்கள் டிசம்பர் 2021 ஆம் ஆண்டு இறுதியில் சுமார் 15.9 மில்லியன் என்பதுடன் ஒப்பிடுகையில், WHO இன் எண்ணிக்கை சுமார் 1 மில்லியன் வித்தியாசத்துடன் 14.83 மில்லியனாக உள்ளது.
2022 ஆண்டு முடிவடையும் நிலையில், அதிகப்படியான இறப்புக்கள் குறித்த எக்னாமிஸ்ட் பத்திரிகையின் முக்கிய மதிப்பீடு 20.9 மில்லியனாக உயர்ந்துள்ளது, அதாவது ஓமிக்ரோன் ‘இலேசானது’ என்று முதலாளித்துவ உயரடுக்குகளும் அவர்களின் ஊடகங்களும் அறம்பாடிய அனைத்துப் பொய்களையும் புறம்தள்ளும் வகையில், தொற்றுநோயின் ஓமிக்ரோன் காலப்பகுதி தோராயமாக ஐந்து மில்லியன் இறப்புக்களை ஏற்படுத்தியுள்ளதை இது குறிக்கிறது. உண்மையில், 2022 இல் கோவிட்-19 உடன் தொடர்புடைய இறப்பு எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டைப் போலவே இருக்கும், அதாவது வைரஸ் மீண்டும் உலகின் முதல் மூன்று இறப்புக் காரணிகளில் ஒன்றாக இருக்கும்.
தொற்றுநோய் அதன் நான்காவது ஆண்டில் நுழையும் நிலையில், சீனாவை பொறுப்பற்ற முறையில் பாரிய வெகுஜன தொற்றுக்கு திறந்து வைத்திருப்பது, உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பகுதியினர் முதல் முறையாக கோவிட்-19 தொற்றுநோய்க்கு ஆளாகும் நிலையை உருவாக்குகிறது. இதன் விளைவாக, வைரஸ் பரிணாமம் வரவிருக்கும் மாதங்களில் கவலைக்குரிய ஒரு புதிய மாறுபாட்டை உருவாக்கக்கூடும், இது அதிக தொற்றும் தன்மை, தடுப்பூசி எதிர்ப்புத் தன்மை, நோய் உண்டாக்கும் தன்மை, அல்லது மூன்றின் ஏதேனும் ஒரு கலவையைக் கொண்டிருக்கும்.
சர்வதேச தொழிலாள வர்க்கம் கடந்த மூன்று ஆண்டுகளின் அரசியல் படிப்பினைகளை உட்கிரகிக்க வேண்டும், இந்த காலகட்டத்தில் உலகளவில் முதலாளித்துவ ஆளும் உயரடுக்குகள் ஒரு புதிய நூதனமான வைரஸை சமூகத்தில் வெடித்துப் பரவ அனுமதித்துள்ளது, மற்றும் உலகளவில் மரணத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக அது வேகமாக மாறியுள்ளது. இந்த சமூக அமைப்பு பகுத்தறிவற்றது மற்றும் காலாவதியானது, எனவே மனிதகுலத்தின் சமூகத் தேவைகளுக்கு உத்தரவாதமளிக்கப்பட்டு பொது சுகாதாரம் மேம்பட அனுமதிக்கக்கூடிய திட்டமிட்ட உலக சோசலிச சமுதாயத்தைக் கொண்டு இது மாற்றியமைக்கப்பட வேண்டும்.