முன்னோக்கு

ஓமிக்ரோன் XBB.1.5 பற்றிய CDC இன் மூடிமறைப்பும், அதிகரித்து வரும் குளிர்கால கோவிட் அதிகரிப்பும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஓமிக்ரோன் XBB.1.5 துணைமாறுபாடு என்று அறியப்படும் ஓர் அபாயகரமான புதிய கொரோனா வைரஸ் வகை அமெரிக்கா எங்கிலும் வேகமாக பரவி வந்துள்ள உண்மையை அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) கடந்த மாதம் மூடிமறைத்து விட்டன என்பது கடந்த வாரம் வெளியானது.

XBB.1.5 ஏற்கனவே அமெரிக்காவில் மேலோங்கி இருப்பதைக் காட்டும் CDC தரவை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் எரிக் ஃபீகல்-டிங் டிசம்பர் 29 இல் கசியவிட்டார். இந்த ட்வீட்டர் பதிவு பரபரப்பாக பரவியதும், அதற்கடுத்த நாள் CDC அதன் கோவிட்-19 வகை விபரப் பதிவுகளை, டாக்டர் டாக்டர் ஃபீகல்-டிங் கசிய விட்ட அதே சரியான தரவுகளுடன் புதுப்பித்தது. இதே போன்றவொரு செயல்பாடு அக்டோபர் 13-14, 2022 க்கு இடையிலும் நடந்தது, அப்போது ஓமிக்ரோன் BQ.1 மற்றும் BQ.1.1 துணை வகைகள் மேலோங்கி வருவதைக் காட்டும் CDC தரவுகளை டாக்டர் ஃபீகல்-டிங் கசியவிட்டார், பின்னர் அதிகரித்து வந்த பொது அழுத்தத்தின் கீழ் அதற்கடுத்த நாள் CDC அதை உறுதிப்படுத்தியது.

இவ்விரு தகவல் கசிவுகளுக்குப் பின்னர், CDC எந்த ஒரு பொது அறிக்கையையும் வெளியிடவில்லை, பெருநிறுவன ஊடகங்களோ அங்கே ஒரு மூடிமறைப்பு நடந்ததைக் குறித்த உண்மையை கடமை தவறாமல் தவிர்த்து விட்டன, உலக சோசலிச வலைத் தளம் மட்டுந்தான் ஒரே அமைப்பு இதைத் தெளிவுபடுத்தி உள்ளது.

அடுத்தடுத்த அனைத்து கோவிட்-19 நோய்தொற்றுகளில் இப்போது அமெரிக்காவில் 40.5 சதவீதத்தைக் கணக்கில் கொண்டுள்ள இந்தப் புதிய XBB.1.5 வகை, நவம்பர் 2021 இல் உலகளவில் முதன்முதலில் ஓமிக்ரோன் பரவியதற்குப் பின்னர் வேறெந்த வகையையும் விட மிகவும் வேகமாக மேலோங்கி அதிகரித்து வருகிறது. அக்டோபரிலேயே நியூ யோர்க்கில் பரிணமித்திருக்கலாம் என்று நம்பப்படும் இந்த XBB.1.5 வகை, வடகிழக்கு பகுதி முழுவதும் நோய்தொற்றுக்கள் மற்றும் மருத்துவமனை அனுமதிப்புகளின் ஓர் அலைக்கு எரியூட்டி வருவதுடன், 70 வயது மற்றும் அதை விட வயதானவர்கள் மத்தியில் மருத்துவமனை அனுமதி விகிதம் சில மாநிலங்களில் பெருந்தொற்றின் உச்சங்களை நெருங்கி வருகிறது. ஏற்கனவே இந்த வயதினர் தான், அமெரிக்காவில் மொத்த கோவிட்-19 இறப்புகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர்.

PCR பரிசோதனையை அகற்றியதாலும் மற்றும் அரசாங்கத்தின் கணக்கில் வராத வீட்டுமுறை விரைவு பரிசோதனைகளை ஊக்குவித்ததாலும், அமெரிக்காவில் நோய்தொற்றுகள் பற்றிய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் இப்போது முற்றிலும் தவறாக உள்ளன. ஆனால், இந்த ஒட்டுமொத்த பெருந்தொற்று காலத்தில் நோய்தொற்றுக்களின் இரண்டாவது மிக மோசமான அதிகரிப்பில் இப்போது அமெரிக்கா சிக்கி உள்ளதாகவும், இது வடகிழக்கு பிராந்தியத்தில் XBB.1.5 ஆல் உந்தப்பட்டு வருவதாகவும் வேஸ்ட்வாட்டர் முறையிலான புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

XBB.1.5 வகை கடல்வாழ் அசுர விலங்கான 'கிராகன்' (Kraken) என்ற புனைப்பெயர் பெற்று வருகின்ற நிலையில், பல விஞ்ஞானிகள் டிசம்பர் நெடுகிலும் மற்றும் அதற்கு முன்னரும் கூட XBB.1.5 பற்றி எச்சரிக்கை மணிகளை எழுப்பி இருந்தனர். விஞ்ஞானி டாக்டர் எரிக் டோபோல் எழுதிய ஒரு சமீபத்திய வலைப்பதிவு, XBB.1.5 இன் உயிரியல் பண்புகளையும் மற்றும் விஞ்ஞானிகள் இதுவரை செய்துள்ள ஆராய்ச்சிகளையும் விவரிக்கிறது.

சுருக்கமாக கூறினால், XBB.1.5 என்பது நோயெதிர்ப்பு சக்தியை மீறும் இன்று வரை இல்லாத மிகவும் வீரியம் மிக்க வகையாக நம்பப்படுகிறது, இதன் அர்த்தம் என்னவென்றால் தடுப்பூசிகளும் மற்றும் முன்னர் நோய்தொற்று ஏற்பட்டிருந்தாலும் அவை இந்தப் புதிய நோய்தொற்று அல்லது மறுதொற்றுக்கு எதிராக நடைமுறையளவில் எந்த பாதுகாப்பும் கொடுக்காது. இது உயிர்களில் உருவாகும் hACE2 நொதிப்பொருளுடன் மிகவும் இறுக்கமாக பிணைந்திருப்பதும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது, இதனால் முந்தைய வேறெந்த வகையை விடவும் மிகவும் வேகமாக பரவுவதற்கு இது காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

நெடுங் கோவிட் (Long COVID) பற்றி முன்னோடி ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கி உள்ள உலகின் தலைசிறந்த நோயெதிர்ப்பு நிபுணர்களில் ஒருவரான டாக்டர் அகிகோ இவாசாகி XBB.1.5 குறித்து அவர் கவலையை வெளிப்படுத்தி திங்கட்கிழமை ட்வீட் செய்கையில், “தயவுசெய்து N95 முகக்கவசங்கள் அணிந்து, உங்களையும் மற்றவர்களையும் பாதுகாத்துக் கொள்ளவும். இந்த நோய்த்தொற்றைத் தொடர்ந்து ஏற்படும் #நெடுங்_கோவிட் (#longCOVID) அலை குறித்து நான் உண்மையிலேயே கவலை கொண்டுள்ளேன்,” என்று குறிப்பிட்டார்.

ஒரு பின்னூட்ட ட்வீட் ஒன்றில், டாக்டர் இவாசாகி விவரிக்கையில், XBB.1.5 இன் அம்சங்கள் 'உடலின் எல்லா பாகங்களுக்கும் அதிகமாக பரவும், அனேகமாக நீண்டகாலம் உயிர்வாழும் செல் வகைகளில் நிலைத்திருக்க வாய்ப்புள்ளது,” என்று குறிப்பிட்டார், இதன் அர்த்தம் என்னவென்றால் XBB.1.5 நோய்தொற்றுக்குப் பின்னர் நெடுங் கோவிட் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு முந்தைய வேறெந்த வகையை விட அதிகமாக உள்ளது.

XBB.1.5 இன் பரவல் பற்றிய மாதிரிகள் டிசம்பர் முழுவதும் மிகச் சரியாக வெளியிட்ட ஒரு விஞ்ஞானி, வரவிருக்கும் அலையின் காலவரிசை இப்படி இருக்கலாம் என்பதைக் காட்டும் கீழே உள்ள காட்சிப்படுத்தலை உருவாக்கினார். ஜனவரி முடிவில், அமெரிக்கா எங்கிலும் மொத்த நோய்தொற்றுகளில் 75 சதவீதத்திற்கும் அதிகமானது XBB.1.5 ஆக இருக்கும் என்றும், அந்த தருணத்தில் நாடெங்கிலும் அதிகரிப்பு முழு வீச்சில் இருக்கும் என்றும் அவர்கள் மதிப்பிட்டனர்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

இதற்கும் மேலாக, கீழே உள்ள காட்சிப்படுத்தலில் காட்டப்பட்டுள்ளவாறு, அமெரிக்காவில் வளர்ந்த XBB.1.5 மாறுபாடு உலகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இது ஐரோப்பா முழுவதிலும், இந்தியா, ஆஸ்திரேலியா, கொலம்பியா, சீனா மற்றும் பிற நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது, உலகளவில் இது மேலாதிக்கம் செலுத்தும் என்று விஞ்ஞானிகள் கணிக்கின்றனர்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

கோவிட்-19 மறுதொற்றுகள் அத்துடன் புதிய நோய்தொற்றுக்கள் மீதான ஆபத்துகள் குறித்து விஞ்ஞானிகள் அறிந்துள்ளதன் அடிப்படையில் பார்த்தால், உலகளவில் ஏற்படக்கூடிய இந்த பரவல் சமூகரீதியில் அளப்பரிய பக்கவிளைவுகளைக் கொண்டிருக்கும். பெருந்திரளான வெகுஜனங்கள் நோய்வாய்ப்படலாம் அல்லது கோவிட்-19 இன் மறுதொற்று ஏற்படலாம், இதனால் மருத்துவமனை அனுமதிப்புகள் மற்றும் மரணங்கள் அதிகரிக்கும், ஒட்டுமொத்தமாக மக்களின் ஆரோக்கியம் பாதிப்படையலாம்.

இந்த நிலைமைகளின் கீழ், XBB.1.5 பற்றிய விபரங்களை வேண்டுமென்றே பொது மக்களிடம் இருந்து மறைத்து வைத்தமை CDC இன் அல்லது வேறெந்த உலக பொது சுகாதார அமைப்பின் வரலாற்றிலேயே மிகவும் குறிப்பிடத்தக்க மூடிமறைப்புகளில் ஒன்றாகும். டிசம்பர் அல்லது அக்டோபரில் CDC மூடிமறைப்புகளுக்கு எந்த அப்பாவித்தனமான விளக்கமும் இல்லை, விடுமுறை கால விற்பனை மற்றும் பயண காலங்களைத் தொந்தரவு செய்து விடக்கூடிய பொதுமக்களுக்கான எந்த எச்சரிக்கையையும் தடுக்கும் உத்தேசத்தில், அவை தெளிவாக வேண்டுமென்றே செய்யப்பட்டன.

ஒரு நூற்றாண்டில் மிக மோசமான பெருந்தொற்று காலமாக இருந்துள்ள இந்த மூன்றாண்டுகளில், ஒரு பொது சுகாதார அமைப்பாக CDC முற்றிலும் மதிப்பிழந்து நிற்கிறது. இந்தக் கோவிட்-19 பெருந்தொற்று முழுவதும், வோல் ஸ்ட்ரீட் மற்றும் பெருநிறுவன அமெரிக்காவின் தேவைகளுக்கு ஏற்ப, ட்ரம்ப் மற்றும் பைடென் நிர்வாகங்களினது அனைத்து பொய்களுக்கும் பொருத்தமாக, அது விஞ்ஞானத்தை வளைத்து, அதிகரித்தளவில் அரசியல்மயமாக்கி உள்ளது.

2022 இன் போது, CDC அதன் விஞ்ஞானத்திற்கு முரணான கொள்கைகளை ஆழப்படுத்தியது, நோய்தொற்று ஏற்பட்ட நோயாளிகளைப் பாதுகாப்பாக தனிமைப்படுத்துவதையும், முகக்கவசம் அணிவது மற்றும் ஏனைய முக்கிய தணிப்பு நடவடிக்கைகளையும் கைவிடச் செய்யும் வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டது, அதேவேளையில் 'இந்தப் பெருந்தொற்று முடிந்துவிட்டது' என்ற பைடெனின் பொய்களுக்குப் பொருத்தமாக புள்ளிவிபரங்களில் தில்லுமுல்லு செய்தது.

டிசம்பர் முழுவதும், CDC இயக்குனர் டாக்டர் ரோசெல் வாலென்ஸ்கி மற்றும் கோவிட் விடையிறுப்பு வெள்ளை மாளிகை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆஷிஷ் ஜா ஆகியோர் XBB.1.5 மாறுபாடு மற்றும் மிகவும் பொதுவாக இந்த பெருந்தொற்றின் தெளிவான அபாயங்கள் குறித்து வாய்திறக்காமல் இருந்தார்கள்.

டிசம்பர் 30 இல், வாலென்ஸ்கி அவருடைய ட்வீட் சேதியில், “#COVID19 பரவுவதை நம்மால் தடுக்க முடியாது” என்று குறிப்பிட்டு அவர் மவுனத்தைக் கலைத்தார். சீனாவில் இருந்து வரும் எல்லா பயணிகளும் அமெரிக்காவுக்கு வருவதற்கு இரண்டு நாட்களுக்குள் கோவிட்-19 பரிசோதனையில் நோய்தொற்று இல்லை என்ற பரிசோதனை முடிவு கொண்டிருக்க வேண்டும் என்ற CDC இன் புதிய கொள்கையை அவர் பாராட்டினார். அதே கொள்கை பாசாங்குத்தனமாக, 'கவலைக்குரிய புதிய மாறுபாடு எதுவும் நுழைவதைத் தடுக்க', சீனா மற்றும் ஏனைய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அந்த ஆணையம் அதிகளவில் மரபணு பரிசோதனை முறையை நடத்தும் என்றும் குறிப்பிடுகிறது.

XBB.1.5 பற்றிய CDC தரவை டாக்டர் ஃபீகல்-டிங் கசிய விட்டதற்கு அடுத்த நாள் வெளியிடப்பட்ட வாலென்ஸ்கியின் ட்வீட் சேதி, அதன் பாசாங்குத்தனம் மற்றும் சீனாவுக்கு எதிரான அதன் மறைமுக வெறுப்புக்காகக் கடுமையாக கண்டிக்கப்பட்டது. XBB.1.5 பற்றிய தரவு கசிய விடப்பட்டதற்கு ஒரு நாளைக்கு முன்னர் வெளியிடப்பட்ட அந்தப் புதிய CDC கொள்கையே கூட XBB.1.5 சீனாவில் உருவானதாக பழி சுமத்துவதற்கான ஒரு கொடூர தயாரிப்பு முயற்சியாக இருக்கலாம் என்றும் சிலர் ஊகிக்கின்றனர்.

'கோவிட்-19 பரவலை நம்மால் தடுக்க முடியாது' என்ற வாலென்ஸ்கியின் கூற்றும், வெள்ளமென எதிர்ப்பு கருத்துக்களைத் தூண்டியது, இது சர்வதேச அளவில் இப்போது நடைமுறையில் உள்ள 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கைக்கு' தொடர்ந்து எதிர்ப்பு இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

தற்போதைய நிலையையே நிலைநிறுத்துவதற்கும், இந்தப் பெருந்தொற்றைத் தடுக்க தொழிலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட இயக்கத்தின் வளர்ச்சியைத் தடுப்பதற்கும், அதிகாரங்கள், தவறான தகவல்களை ஊக்குவிக்கவும் மற்றும் அவர்களின் குற்றகரமான பெருந்தொற்று கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக மக்களிடையே அக்கறையற்ற உணர்வை விதைக்கவும் ஊடகங்கள் மற்றும் மற்றும் அரசில் உள்ள செல்வச்செழிப்பான உத்தியோகபூர்வ விஞ்ஞானிகளின் ஓர் அடுக்கை நம்பி உள்ளன. அமெரிக்காவில், இந்த வேலையை டாக்டர்கள் வாலென்ஸ்கி, ஜா, அந்தோனி ஃபாசி மற்றும் இன்னும் பலரும் முன்னணியில் இருந்து செய்கிறார்கள். ஜேர்மனியில், நுண்கிருமியியல் நிபுணர் டாக்டர் கிறிஸ்டியன் ட்ரோஸ்டன் டிசம்பர் மாதம் குறிப்பிடுகையில் இந்தப் பெருந்தொற்று 'முடிந்துவிட்டது' என்றார், இது இந்தப் புத்தாண்டில் அனைத்து தணிப்பு நடவடிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டு வருமாறு பல்வேறு கட்சிகளின் அரசியல்வாதிகளையும் அழைப்பு விடுக்க தூண்டியது. இதே ஒருங்கிணைக்கப்பட்ட பொய்களும் மோசடிகளும் சர்வதேச அளவில் கொண்டு செல்லப்படுகின்றன.

மேற்கின் இடைவிடாத பிரச்சாரம் சீனாவிற்குள்ளேயும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது, அங்கே நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) அதிகாரத்துவமும் ஓமிக்ரோன் 'மிதமானது' என்றும் பூஜ்ஜிய-கோவிட் கொள்கை அகற்றப்பட வேண்டும் என்றும் பெருகிய முறையில் உறுதியாக நம்பின. உலகளவில் “என்றென்றும் கோவிட்” கொள்கையால் சீனா சுற்றி வளைக்கப்பட்டதுடன், அதன் மீது இடைவிடாத பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் அழுத்தங்களும் கொடுக்கப்பட்டது, இவை பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை CCP நீக்குவதற்கு இட்டுச் சென்றதுடன், அந்நாடு முழுவதும் நோய்தொற்றுக்கள் மற்றும் மரணங்களின் ஒரு பேரலையைக் கட்டவிழ்த்து விட்டது.

உலக சோசலிச வலைத் தளத்தின் 2023 புத்தாண்டு அறிக்கையில், ஜோசப் கிஷோர் மற்றும் டேவிட் நோர்த் பின்வருமாறு எச்சரித்தனர்:

சீனாவில் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை அகற்றுவதும் மற்றும் 'என்றென்றும் கோவிட்' கொள்கையை ஏற்றுக்கொள்வதும், இந்தப் பெருந்தொற்றில் ஏற்படக்கூடிய ஒரு புதிய மற்றும் மிகவும் ஆபத்தான கட்டத்தைக் குறிக்கிறது. வெகுஜன நோய்தொற்றால் புதிய மாறுபாடுகள் உருவாகும் வாய்ப்பு அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். உலகின் முதலாளித்துவ ஆளும் உயரடுக்குகள் சமூகத்துடன் ரஷ்ய ரூளெட் சூதாட்டம் விளையாடுகின்றன, இது இன்னும் அதிகளவில் பரவக்கூடிய, நோயெதிர்ப்பு சக்தியையே தகர்க்கும், உயிராபத்தான ஒரு மாறுபாடு உலகளவில் இன்னும் கொடிய நோய்தொற்று அலையைக் கட்டவிழ்த்து விடும் அபாயத்தை அதிகரிக்கிறது.

இந்தக் கட்டத்தில், XBB.1.5 மாறுபாடு முந்தைய மாறுபாடுகளை விட மிகவும் உயிராபத்தாக தெரியவில்லை என்றாலும், காலம் மட்டுமே பதில் சொல்லும். அது நெடுங் கோவிட்டை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அதிகம் என்ற எச்சரிக்கைகள் அச்சுறுத்தலாக உள்ள அதேவேளையில், நூறு மில்லியன் கணக்கானவர்கள் உலகளவில் ஏற்கனவே இந்தத் துன்பத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தப் பெருந்தொற்றுக்கு முடிவு கட்ட போராடும் ஒரு பாரிய சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கத்தைக் கட்டமைப்பதன் மூலமாக, இந்தக் கொரோனா வைரஸின் இந்த அபாயகரமான வைரஸ் பரிணாம நிகழ்ச்சிப்போக்கைத் தடுத்தாக வேண்டும். இது உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க-நேட்டோ பினாமிப் போர், அணுஆயுதப் போர் அச்சுறுத்தல், ஆழமடைந்து வரும் சுற்றுச்சூழல் நெருக்கடி, மற்றும் இந்த உலக முதலாளித்துவம் உருவாக்கி உள்ள அனைத்து அளப்பரிய சமூக பிரச்சினைகளுக்கு எதிராகவும் நனவுபூர்வமான போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

2022 ஆம் ஆண்டு உலகளவில் வர்க்கப் போராட்டத்தின் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது, இது வரவிருக்கும் ஆண்டிலும் தொடரும். தொழிலாள வர்க்கத்தில், உலக சோசலிசப் புரட்சியின் மூலோபாயத்திற்காக போராடும் ஒரு புரட்சிகர தலைமையைக் கட்டியெழுப்புவதே மிக முக்கிய பணியாகும்.