மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
1993 நவம்பரில் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது, இடது எதிர்ப்பின் 70 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியதன் ஒரு பகுதியாக, உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) அனைத்துலக ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த் வழங்கிய விரிவுரைத் தொடரின் அடிப்படையில், பின்வரும் கட்டுரையின் முதல் பகுதி அமைந்துள்ளது. 1917 அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் போல்ஷிவிக்குகள் எதிர்கொண்ட புறநிலை நிலைமை மற்றும் போல்ஷிவிக் கட்சிக்குள் உள்ள வெவ்வேறு அரசியல் போக்குகள் ஆகியவற்றின் பின்னணியில், 1923 அக்டோபரில் ஸ்தாபிக்கப்பட்ட இடது எதிர்ப்பின் அரசியல் தோற்றத்தை இக்கட்டுரை விரிவாக மதிப்பாய்வு செய்கிறது. இரண்டாம் பகுதி அக்டோபர் 23, 2023 அன்று ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது.
நாம் ஏன் இடது எதிர்ப்பைக் கற்றுக்கொள்ள வேண்டும்?
70 ஆண்டுகளுக்கு முன்னர் லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியிலுள்ள பிற முக்கிய முன்னணி தலைவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட இடது எதிர்ப்பின் தோற்றத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட மூன்று விரிவுரைகளின் வரிசையில் இன்று மாலை நாம் முதல் உரையைத் தொடங்குகிறோம். ரஷ்யப் புரட்சியைக் குறித்து மேலும் அறிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களில் சிலர் இந்த விரிவுரையில் கலந்து கொண்டிருக்கலாம். இன்றிரவு இங்கு இருப்பதற்கு இது ஒரு சரியான காரணமாகும் . இதையும் அடுத்த இரண்டு விரிவுரைகளையும் நீங்கள் அறிவார்ந்ததாகக் காண்பீர்கள் என்று நம்புகிறேன். எவ்வாறெனினும், இடது எதிர்ப்பு ஸ்தாபிக்கப்பட்டமை வெறுமனே வரலாற்று நலன்களைக் காட்டிலும் மேலான ஒரு நிகழ்வாகும் என்று நான் கூற வேண்டும். சோவியத் ரஷ்யாவில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய அரசியல் போராட்டத்தின் விளைவாக, உங்களில் பெரும்பாலோர் கற்பனை செய்வதை விட மிகப் பெரிய அளவில், நாம் வாழும் உலகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இடது எதிர்ப்பு எழுப்பிய பிரச்சினைகளை புரிந்து கொள்ளாமல் தற்போதைய உலக அரசியல் நிலைமையை புரிந்து கொள்ள முடியாது.
இடது எதிர்ப்பின் சமகால முக்கியத்துவம் குறித்த இந்த மதிப்பீட்டு காரணத்தை வழங்க, இப்போது 'முன்னாள் சோவியத் ஒன்றியம்' என்று அழைக்கப்படும் பகுதியில் நடந்த நிகழ்வுகளை மட்டுமே நாம் சுட்டிக்காட்ட வேண்டும். 1987 ஆம் ஆண்டின் இலையுதிர்காலத்தில், அக்டோபர் புரட்சியின் 70 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் நான் நான்கு விரிவுரைகளை நிகழ்த்தினேன். கோர்பச்சேவின் கொள்கைகள் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கும் முதலாளித்துவத்தின் மீட்சிக்கும் வழிவகுக்கும் என்று வேர்க்கர்ஸ் லீக் இணைந்திருக்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு கொண்டிருந்த கருத்தை அந்த நேரத்தில் நான் விளக்கினேன்.
நான் இதைச் சுட்டிக் காட்ட வேண்டும், அந்த நேரத்தில், கோர்பச்சேவ் நமது காலத்தின் ஜாம்பவான்களில் ஒருவராகக் கருதப்பட்டார், சமூக, அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தத்தின் ஒரு அற்புதமான திட்டத்தின் சிற்பி என்று பாராட்டப்பட்டார். 'பெரெஸ்ட்ரோயிகா' (மறுசீரமைப்பு) மற்றும் 'கிளாஸ்னோஸ்ட்' (வெளிப்படைத்தன்மை) ஆகியவை கோர்பச்சேவ் உட்பட மிகச் சிலருக்கு மட்டுமே அவைகள் எதைக் குறிக்கின்றன என்பது சரியாகத் தெரிந்திருந்தாலும் கூட, அது சர்வதேச நாணயத்தைப் பெற்ற சொற்களாகும் (அவைகள் சோவியத் ஒன்றியத்திற்குள் மட்டுமல்ல, பரந்த சர்வதேச சமூகத்தில் அங்கீகாரத்தையும் புரிதலையும் அடைந்துள்ளன என்பதாகும்). கோர்பச்சேவின் புகழ் அப்போது முதலாளித்துவ வட்டாரங்களில் மட்டுமல்ல, குறிப்பாக - நடுத்தர வர்க்க தீவிர இடதுகளின் சூழலுக்குள்ளும் உச்சத்தில் இருந்தது.
சோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் மிகவும் சக்திவாய்ந்த பிரிவுகளை கோர்பச்சேவ் பிரதிநிதித்துவப்படுத்துவதாக வேர்க்கர்ஸ் லீக் மற்றும் அனைத்துலகக் குழு கூறின. அதிகாரத்துவத்தின் நலன்களைப் பாதுகாக்கும் அதேவேளையில், ஸ்ராலினிச ஆட்சிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்திற்குள் வளர்ந்து வரும் எதிர்ப்பை திசைதிருப்ப அவர் முயற்சிக்கிறார். அவரது சீர்திருத்தங்களின் பொருளாதார உள்ளடக்கம் அடிப்படையில் முதலாளித்துவ-சார்புடையதாக இருந்தது. எனவே, அக்டோபர் புரட்சியின் வேலைத்திட்டம், இலட்சியங்கள் மற்றும் அபிலாஷைகள் மீதான பல தசாப்தகால ஸ்ராலினிச காட்டிக்கொடுப்பின் உச்சக்கட்டத்தை அது பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
கடந்த ஆறு ஆண்டுகளில் நடந்தவை அனைத்தும் அந்த மதிப்பீட்டை உறுதிப்படுத்தியுள்ளன. கோர்பச்சேவ் டைம் இதழால் (Time Magazine) 'தசாப்தத்தின் மனிதர்' என்று தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர், விரைவில், அரசியல் அரங்கில் இருந்து தூக்கி எறியப்பட்டார். கோர்பச்சேவுக்குப் பதிலாக போரிஸ் எல்ட்சின் நியமிக்கப்பட்டார். அவரே ஒரு ஸ்ராலினிச அதிகாரத்துவவாதியாக இருந்தார், அவர் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சுமார் 30 ஆண்டுகள் கழித்தார், அவரது ஆதரவின் கீழ்தான் 1991 டிசம்பரில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.
சோவியத் ஒன்றியத்தின் சரிவு என்பது மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஆனால், உண்மையில் அது எவ்வளவு மோசமாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சோவியத் ஒன்றியத்தின் சமரசமற்ற எதிரிகள் என்று கூறப்படும் ஏகாதிபத்திய ஆட்சிகளால் இந்த முறிவு முன்கூட்டியே கணிக்கப்படவில்லை. இந்த வியத்தகு வீழ்ச்சிக்கு ஏதேனும் விளக்கம் அளிக்கப்பட்டால், அது பொதுவாக சோவியத் ஒன்றியத்தின் சரிவு ஒரு பரந்த அர்த்தத்தில் சோசலிசத்தின், குறிப்பாக மார்க்சிசத்தின் 'தோல்வியாக' பார்க்கப்படுகிறது என்ற கருத்தை மையமாகக் கொண்டிருந்தது.
ஆனால், இந்த அறிவிப்புகள் உண்மையான விளக்கத்தின் அளவிற்கு உயரவில்லை. நிரூபிக்கப்பட வேண்டியதை மட்டுமே அவர்கள் கருதுகிறார்கள். ஆனால் பல்கலைக்கழகங்களில் 'சோவியத்தியல்' என்று அழைக்கப்படும் அரசியல் பிரச்சாரத்தின் அடிப்படை கோட்பாடாக, பல தசாப்தங்களாக இருந்து வரும் அடிப்படை தவறான கருத்துக்கு இங்கே வருகிறோம். ஸ்ராலினிசத்தை மார்க்சிசத்துடன் முரட்டுத்தனமாக அடையாளப்படுத்துவதே 'சோவியத்தியல்' இன் தொடக்கப் புள்ளியாகும். இந்த அடித்தளத்தின் அடிப்படையில், ஏழரை தசாப்த காலப்பகுதியில் சோவியத் அரசாங்கங்கள் பின்பற்றிய கொள்கைகள், பொதுவாக தடையற்ற முழுமையை உருவாக்கியது போல் முன்வைக்கப்படுகின்றன. போல்ஷிவிசத்தின் வரலாறு லெனினில் தொடங்கி முதலாளித்துவ ஊடகங்களில் இன்றளவும் 'கம்யூனிச கடும்போக்காளர்கள்' என்று குறிப்பிடப்படுபவர்களுடன் முடிவடைகிறது. மிக நீண்ட காலத்திற்கு முன்பு [உயர்மட்ட சோவியத் அதிகாரி] யெகோர் லிகாசேவின் நினைவுக் குறிப்புகள் தலைப்பின் கீழ் வெளிவந்தன - சந்தேகத்திற்கு இடமின்றி அவரது அமெரிக்க வெளியீட்டாளர்களால் அவருக்கு பரிந்துரைக்கப்பட்டது – கடைசி போல்ஷிவிக் (த லாஸ்ட் போல்ஷிவிக் - The Last Bolshevik) உள்நாட்டு வருவாய் சேவையின் ஒரு மூத்த அதிகாரியைப் போலவே போல்ஷிவிசத்துடன் இந்த பழைய அதிகாரத்துவ நேரப் பணியாளர் கிட்டத்தட்ட ஒற்றுமையைக் கொண்டுள்ளார் என்பதை நம்புவதற்கு திரு. லிகாசேவின் புத்தகத்தைப் பார்க்க வேண்டும். முரண்பாடாக, பனிப்போர் 'சோவியத்தியல்' என்ற கோடு ஸ்ராலினிஸ்டுகளுடன் முற்றிலும் ஒத்துப்போகிறது, அவர்கள் மிக சமீபகாலம் வரை, லெனினிசத்தின் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொண்டனர் மற்றும் அவர்கள் மார்க்சிச மரபுவாதம் என்று கூறிக்கொண்டனர். உண்மையில், 1985 க்கு முன்னர், எல்ட்சினும் தன்னை சமரசம் செய்ய முடியாத மார்க்சிஸ்ட் என்று வர்ணித்திருப்பார். இக்கருத்தை ஏற்காத தீவிர அறிஞர்களின் கணிசமான படைப்புகள் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும், ஆனால் சோவியத் ஒன்றியத்தின் தன்மை குறித்த பொது விவாதத்திற்கு அடிப்படையாக அமைந்தது அவர்களின் படைப்புகள் அல்ல.
அரசியல் ஸ்தாபகத்தின் தீவிர கம்யூனிச எதிர்ப்புடன் முரண்படும் கருத்துக்கள் பெரும்பாலும் பொதுமக்களின் கவனத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளன, மேலும் சோவியத் ஒன்றியம் மற்றும் அதன் தலைமை பற்றிய சரியான மற்றும் விஞ்ஞானரீதியான மதிப்பீட்டை வெளிப்படுத்துவது மிகவும் கடினம்.
பிரசுரிக்கப்படாத கடிதம்
எங்கள் சொந்த அனுபவத்திலிருந்து ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன். ஜூலை 1990 இல், தி நியூயோர்க் டைம்ஸில் ஒரு கட்டுரைக்கு பதிலளிக்கும் விதமாக, நான் பின்வரும் கடிதத்தை எழுதினேன்:
சமீபத்தில், ஸ்டாலின் சகாப்தத்தின் உச்ச காலத்தில் டைம்ஸின் சோவியத் செய்தியாளரான வால்டர் டுராண்டியின் அறிக்கைகள் உங்கள் செய்தித்தாளில் இதுவரை வெளிவந்தவைகளில் மிக மோசமானவை என்று உங்கள் ஆசிரியர் குழு தாமதமாக கண்டனம் செய்தது.
அது உண்மையாக இருக்கலாம் (அதாவது, டுராண்டி என்ற மிக மோசமான நிருபரை அவர்கள் கொண்டிருந்தனர்), ஆனால் உங்கள் தற்போதைய நிருபர் பில் கெல்லரின் அறிக்கைகள் எந்தவொரு முன்னேற்றத்தைக் குறிக்கவில்லை என்று நியாயமாக வாதிடலாம்.
எடுத்துக்காட்டாக, கோர்பச்சேவ் 'மரபுவழி மார்க்சிஸ்டுகளை கட்சிக்குள் ஒரு சக்தியாக செயலிழக்கச் செய்த அறிவைக் கண்டு மகிழ்ச்சியடைய முடியும்...' என்று ஜூலை 13, 1990 அன்று டைம்ஸ் பத்திரிகையில் திரு. கெல்லர் எழுதுகிறார்.
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு குறித்து திரு. கெல்லருக்கு சரியாகத் தெரியவில்லை என்று தெரிகிறது. அதற்குள் இருந்த 'மரபுவழி மார்க்சிஸ்டுகள்' - அதாவது லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையிலான இடது எதிர்ப்பு — ஸ்ராலினிச எந்திரத்தால் 1927 டிசம்பரில் நடந்த பதினைந்தாவது கட்சி மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட பாரிய வெளியேற்றங்கள் மூலமாகவும் பின்னர் நாடுகடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதன் மூலமாகவும் 'செயலிழக்கச் செய்யப்பட்டனர்'. பின்னர், 1936-39 மாஸ்கோ இட்டுக்கட்டப்பட்ட விசாரணையும் மற்றும் இரத்தக்களரி சுத்திகரிப்பும் இணைந்து நடந்தன, 'மரபுவழி மார்க்சிஸ்டுகள்' திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டனர். சோவியத் ஒன்றியத்தின் இணை ஸ்தாபகரான லியோன் ட்ரொட்ஸ்கி 1940 இல் மெக்சிகோவில் ஒரு ஸ்ராலினிச முகவரால் படுகொலை செய்யப்பட்டார்.
திரு. கெல்லர், லிகாசேவ் பிரிவினரை 'மரபுவழி மார்க்சிஸ்டுகள்' என்றும், லிகாசேவ் தன்னை ஒரு 'தத்துவார்த்த மார்க்சிய-லெனினிஸ்ட்' என்றும் அடையாளப்படுத்தியது, மாஸ்கோ விசாரணைகளை சட்ட நிந்தனைக்கு அப்பாற்பட்டதாக மறைந்த டுராண்டி சித்தரித்ததைப் போலவே அரசியல் ரீதியாக கேலிக்கூத்தானது மற்றும் அறிவுஜீவித நேர்மையற்றதாகும். 1920 களின் பிற்பகுதியில் இருந்து, சோவியத் கொள்கையை உருவாக்குவதில் மார்க்சிசம் எந்த பங்கையும் வகிக்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியானது 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் அரசியல் கருவியாக இருந்து வந்தது.
கோர்பசேவ், லிகாசேவ் மற்றும் யெல்ட்சின் ஆகியோர் பல தசாப்தங்களாக சோவியத் அதிகாரத்துவத்திற்கு சேவை செய்துள்ளனர். அவர்களுக்கு இடையிலான முரண்பாடுகள் மார்க்சிச கோட்பாட்டின் நுணுக்கமான புள்ளிகள் பற்றி அல்ல, மாறாக ஸ்ராலினிச ஆட்சி நீண்ட காலத்திற்கு முன்பே லியோன் ட்ரொட்ஸ்கி முன்னறிவித்தபடி முதலாளித்துவத்தை மீட்பதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையில் அதிகாரத்துவத்தின் பல்வேறு அடுக்குகளின் சலுகைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றியதாக இருந்தது.
1930 களில், டைம்ஸ், டுராண்டியின் கடிதங்கள் மூலம், ஸ்ராலின் தனது மார்க்சிச எதிரிகளை அழிப்பதற்கு ஆதரவாக அமெரிக்க தாராளவாத கருத்தை அணிதிரட்ட உதவியது. இன்று, இடதில் இருந்து (from the Left) ஸ்ராலினிசத்தை எதிர்ப்பவர்களின் கருத்துக்களை அதன் பத்திகளில் இருந்து விலக்கிய அதே வேளையில், டைம்ஸானது மார்க்சிசத்தை வரலாற்று ரீதியாக அதன் மிக மோசமான எதிரியாக இருந்த ஒரு அதிகாரத்துவத்துடன் அடையாளப்படுத்துவதில் தொடர்கிறது. இது டைம்ஸின் வெளியீட்டாளர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு உதவக்கூடும். ஆனால், இது புறநிலை உண்மையுடன் எந்த தொடர்பும் கொண்டிருக்கவில்லை.
இந்தக் கடிதம் பிரசுரிக்கப்படவில்லை - நான் டைம்ஸின் ஆசிரியர்களை அவமதித்ததால் அல்ல, மாறாக அந்தக் கடிதம் முதலாளித்துவ வர்க்கத்தின் கருத்தியல் நலன்களுடன் சமரசம் செய்து கொள்ள முடியாத உண்மைப் பிரச்சினைகளை எழுப்பியதால்தான். 'லெனின் முதல் கோர்பச்சேவ் வரை, அல்லது குறைந்தபட்சம் செர்னெங்கோ வரை போல்ஷிவிசத்தின்' 'தடையற்ற' 'தொடர்ச்சியின் கோட்பாடு என்னவாகும், உண்மையில், ஸ்ராலின் மற்றும் அவர் வழிநடத்திய அதிகாரத்துவத்தால் அதிகாரத்தை ஒருங்கிணைப்பது புரட்சி மற்றும் உள்நாட்டுப் போரில் கிட்டத்தட்ட ஒவ்வொரு குறிப்பிடத்தக்க அரசியல் தலைவர்களின் கொலையால் மட்டுமல்லாமல், நூறாயிரக்கணக்கான எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் கலைஞர்களின் உடல்ரீதியாக கொன்று அழிப்பதிலும் நிறைவேற்றப்பட்டது, மேற்கூறியவர்களின் அறிவுஜீத மற்றும் கலாச்சார பணிகள் ஏதோவொரு வகையில் போல்ஷிவிக் ஆட்சியின் வீரமான ஆரம்ப ஆண்டுகளுடன் இணைக்கப்பட்டனவல்லவா?'
ஸ்ராலினிச ஆட்சியானது அக்டோபர் புரட்சியின் அவசியமான மற்றும் தவிர்க்கவியலாத விளைபொருளாக உருவாகவில்லை, மாறாக அதன் எதிர்விளைவாக உருவானது என்பது உண்மையானால், இந்த உண்மையானது கடந்த காலத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மட்டுமல்ல, நிகழ்காலத்திற்கும் மிகவும் ஆழமான தாக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும்.
கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகளின் வீழ்ச்சி மற்றும் சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்குப் பின்னர், முதலாளித்துவ வர்க்கத்திற்குள் ஒரு வெற்றிவாத மனநிலை நிலவியது. சோவியத் ஒன்றியத்தின் முடிவு, சோசலிசம் மற்றும் மார்க்சிசத்தின் முடிவைக் குறிக்கிறது என்று கூறப்பட்டது. வரலாற்றின் முடிவு (The End of History) என்ற புத்தகமானது நிலவிய மனநிலையைப் பிரதிபலித்தது: அதாவது மனிதகுலம் அதன் இறுதி இலக்கை அடைந்துவிட்டது என்று கூறப்பட்டது – அதாவது முதலாளித்துவத்தின் தடையற்ற மற்றும் கட்டுப்பாடற்ற வெற்றி என்று கூறப்பட்டது. 'புதிய உலக ஒழுங்கை' (“New World Order”) பிரகடனம் செய்வதன் மூலம் இதற்கு அரசியல் அர்த்தம் கொடுக்கப்பட்டது, அங்கு அமெரிக்கா அதன் விருப்பத்தை தீவிர சவால் இல்லாமல் உலகெங்கிலும் திணிக்கும்.
ஆனால், இந்தப் பைத்தியக்காரத்தனம் அவ்வளவு நாள் நீடிக்கவில்லை. இலாபவிகிதம் வீழ்ச்சியடையும் போக்கை ஒழித்து, உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய அரசுக்கும் இடையிலான பகைமையை அமைதியான முறையில் ஒழித்து, வர்க்கப் போராட்டத்தைத் தடைசெய்வதை விட, மார்க்சிசமும் சோசலிசமும் இறந்துவிட்டதாக அறிவிப்பது எழுத்தாள ஆசிரியர்கள், ஊடக பண்டிதர்கள் மற்றும் பல்கலைக்கழக சிந்தனைக் குழுக்களுக்கு எளிதானது. ஆளும் வர்க்கத்தின் பரப்புரையாளர்கள் மற்றும் கருத்தியலாளர்களின் ஒப்புதலுடன் அல்லது ஒப்புதல் இல்லாமல், உலக வரலாற்றின் விதிகள் மற்றும் முதலாளித்துவ உற்பத்தி முறை விதிகள் இரண்டும் கார்ல் மார்க்ஸால் பகுப்பாய்வு செய்யப்பட்டதைப் போலவே செயற்படுகின்றன.
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகியுள்ள நிலையில், உலக முதலாளித்துவம் 1930 களுக்குப் பின்னர் அதன் மிகப் பெரிய அமைப்புமுறை நெருக்கடியில் சிக்கியுள்ளது. அனைத்து முக்கிய முதலாளித்துவ நாடுகளின் பொருளாதாரங்களும் தேக்கமடைந்துள்ளன. முன்னணி ஏகாதிபத்திய அரசுகளுக்கு இடையிலான உறவுகள் இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய ஆண்டுகளில் இருந்து மிக மோசமான நிலையில் உள்ளன. உண்மையில், இந்த அரசுகளின் உள் ஒத்திசைவு ஒருபோதும் பலவீனமாக இருந்ததில்லை. பெல்ஜியம், இத்தாலி, பிரிட்டன், ஸ்பெயின் அல்லது கனடா ஆகியவை தசாப்தத்தின் இறுதிக்குள் அவற்றின் தற்போதைய தேசிய-அரசு வடிவத்தில் கூட இருக்குமா என்பது விவாதத்திற்குரியது. இந்த பட்டியலில் மற்றய நாடுகளும் சேர்க்கப்படலாம்.
கடுமையான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியின் கட்டமைப்பிற்குள், போருக்குப் பிந்தைய காலம் முழுவதிலும் அறியப்படாத தீவிரத்துடன் சமூகப் பிரச்சினைகள் முன்வைக்கப்படுகின்றன. முக்கிய ஐரோப்பிய நாடுகளில், வேலையற்றோரின் எண்ணிக்கை 20 மில்லியனை நெருங்குகிறது; இப்போது தினசரி அடிப்படையில் அறிவிக்கப்பட்டு வரும் பாரிய தொழில்துறை மூடல்களின் முழு தாக்கமும் உண்மையில் உணரப்படுவதற்கு முன்பே இது உள்ளது. பல தசாப்தங்களாக வன்முறையான சமூகப் புரட்சிக்கு பெரும் அமைதியான மாற்றீடாகப் போற்றப்படும் ஒட்டுமொத்த சமூக நலன்புரி-அரசு அமைப்புமுறையும் ஐரோப்பா முழுவதிலும் தகர்க்கப்படும் போக்கில் உள்ளது. மேலும், முதலாளித்துவ சமூகத்தின் நிலை குறித்த மிகக் கசப்பான வர்ணனையில், பாசிசம் மீண்டும் ஐரோப்பாவில் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் சக்தியாக உள்ளது.
அமெரிக்காவிற்குள், சமூக நிலைமைகளின் நிலையான சீரழிவு - அதிகரித்து வரும் வேலையின்மை, அழிவடையும் நகரங்கள், அதிகரித்து வரும் வறுமை - சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. முதலாளித்துவக் கட்சிகள் தங்களிடம் நம்பகமான தீர்வுகள் இருப்பதாகக் கூட காட்டிக் கொள்வதில்லை. அமெரிக்காவிலோ அல்லது ஐரோப்பாவிலோ தொழிலாள வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் தற்போதைய அமைப்புக்கள் தங்கள் பாரம்பரிய தேர்தல் தொகுதிகளின் அடிப்படை நலன்களைப் பாதுகாக்க கூட முயற்சிப்பதில்லை. உண்மையில், இந்த அமைப்புகள் - தொழிற்சங்கங்கள், சமூக ஜனநாயகக் கட்சிகள் - முதலாளித்துவ அரசு ஒழுங்கமைக்கப்பட்ட வெகுஜன எதிர்ப்பைத் தடுக்க அல்லது குறைந்தபட்சம் தடையை ஏற்படுத்த முயற்சிக்கும் முக்கிய அரசியல் பொறிமுறைகள் என்பது தெளிவாகி வருகிறது.
ஆயினும்கூட, வர்க்கப் போராட்டம் வரலாற்றின் உந்து சக்தியாக உள்ளது. இது மார்க்ஸால் கண்டுபிடிக்கப்பட்டதல்ல. வரலாற்று நிகழ்வுப்போக்கில் அதன் அடிப்படை பாத்திரத்தை மட்டுமே அவர் தெளிவாக்கினார். ஆசிரிய எழுத்தாளர்கள் மார்க்ஸுக்கு இரங்கல் குறிப்புகளை எழுதலாம், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தங்கள் ஆய்வுகளிலிருந்து வரலாற்று இயங்கியல் குறித்த தங்கள் நிலையான மறுப்புகளை வசதியான நிலையிலிருந்து கொண்டும் எழுதலாம். ஆனால் அது பிரெஞ்சு விமானத் தொழிலாளர்கள், அரசாங்கத்தை மீறி 1968க்குப் பிந்தைய மிகத் தீவிரமான அரசியல் நெருக்கடியை கடந்த வாரத்தில் முன்னெடுப்பதைத் தடுக்கவில்லை. பாரிய வேலையின்மையால் தோற்றுவிக்கப்பட்ட சமூக கோபத்தை உணர்ந்த பிரதம மந்திரி பலடூர், பிரான்ஸ் ஒரு தொழிலாள வர்க்கப் புரட்சியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது என்ற தனது அச்சம் குறித்து தனது மிக நெருக்கமான சகாக்களுடன் வெறித்தனமாக பேசி வருவதாக பிரெஞ்சு மற்றும் சர்வதேச பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. சோசலிசப் புரட்சிக்கான முக்கியமான அறிவுஜீவித மற்றும் தார்மீக உந்துதல் கோபத்திலிருந்து மட்டுமல்ல, தற்போதுள்ள சமூக அமைப்புமுறைக்கு எதிரான அவர்களின் போராட்டம் ஒரு சிறந்த மற்றும் நியாயமான சமூகத்திற்கு வழிவகுக்கும் என்ற வெகுஜனங்களின் நியாயமான நம்பிக்கையிலிருந்து வருகிறது என்பதால், இந்த தருணத்திலாவது திரு. பலடூரின் அச்சம் ஓரளவு மிகைப்படுத்தப்பட்டுள்ளது. முதலாளித்துவத்தால் தோற்றுவிக்கப்பட்ட சமூக நிலைமைகளால் தூண்டப்பட்ட அனைத்து சீற்றமும் வெறுப்பும் இருந்தபோதிலும் இந்த எதிர்பார்ப்புதான் தற்போது இல்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தொழிலாள வர்க்கத்திடம் இல்லாதது ஒரு வரலாற்று முன்னோக்கு ஆகும். சோவியத் ஒன்றியத்தின் சரிவு சோசலிசத்தின் சரிவாகவே பார்க்கப்படும் அளவிற்கு, தொழிலாள வர்க்கத்தால் அதன் தற்போதைய இக்கட்டான நிலையில் இருந்து ஒரு வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது உலக வரலாற்றில் அக்டோபர் புரட்சியின் இடத்திற்கு நம்மை மீண்டும் கொண்டு வருகிறது. இந்தப் புரட்சியானது, அதன் தலைவர்கள் நம்பியது போல, மனிதனின் சமூக வளர்ச்சியில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்ததா? அல்லது அது ஒரு துனபகரமான மற்றும் கற்பனாவாத நடவடிக்கையா, தவிர்க்கவியலாமல் ஸ்ராலினிசத்திற்கும் அதைத் தொடர்ந்து நடந்த அனைத்து பயங்கரங்களுக்கும் இட்டுச் சென்ற ஒரு அழிவுகரமான திட்டமா?
இக்கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்வது? சோவியத் ஒன்றியம் உண்மையில் இருந்ததை விட மிகவும் வித்தியாசமாக அபிவிருத்தியடைந்திருக்கலாம் என்று எதன் அடிப்படையில் வாதிட முடியும்? இத்தகைய மாற்றீடுகள் வரலாற்று மற்றும் அரசியல் யதார்த்தங்களுடன் தொடர்பில்லாத வெறும் ஊகப் பயிற்சிகளா? அதிர்ஷ்டவசமாக, இந்த கேள்விகளுக்கான பதில் வரலாற்றிலேயே கண்டுபிடிக்கப்பட வேண்டும். நாம் பல தசாப்தகால சோவியத் வரலாற்றைத் திரும்பிப் பார்த்து, 'ஐயோ, அது வித்தியாசமாக இருந்திருக்க வேண்டும்' என்று சொல்லவில்லை. மாறாக, ஸ்ராலினிசத்திற்கு ஒரு மாற்றீடு இருந்தது என்பதைக் காட்ட முடிகிறது. இந்த மாற்றீடு மார்க்சிசத்தின் அடிப்படையில் லியோன் ட்ரொட்ஸ்கியால் முன்வைக்கப்பட்டது. லெனினுக்கு அடுத்தபடியாக, அக்டோபர் புரட்சியின் தலைமையிலும் உள்நாட்டுப் போரின் போது சோவியத் அரசைப் பாதுகாப்பதிலும் மிகப் பெரிய பாத்திரத்தை ட்ரொட்ஸ்கி வகித்தார். போல்ஷிவிக் புரட்சியின் பெரும்பாலான முன்னணி தலைவர்களால் ஆதரிக்கப்பட்ட ஒரு வேலைத்திட்டத்தில் இந்த மாற்றீடு வெளிப்பட்டது. அனைத்திற்கும் மேலாக, இடது எதிர்ப்பின் வேலைத்திட்ட மரபு பற்றிய ஒரு புறநிலை ஆய்வு, அதிகாரத்துவத்தின் சர்வாதிகார ஆட்சி, தொழிலாள வர்க்கத்தால் தூக்கியெறியப்படாவிட்டால், சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கும் முதலாளித்துவத்தின் மீட்சிக்கும் வழிவகுக்கும் என்ற ட்ரொட்ஸ்கியின் வலியுறுத்தல் வரை, ஸ்ராலினிசம் குறித்த அதன் பகுப்பாய்வின் வியக்கத்தக்க முன்கணிப்பீட்டை எடுத்துக்காட்டுகிறது.
உலக வரலாற்று ஒரு நிகழ்வாக ரஷ்யப் புரட்சி
இன்று மாலை நாம் என்ன நிகழ்வை நினைவு கூர்கிறோம்? அக்டோபர் 8, 1923 அன்று, சோவியத் ஒன்றியத்தின் போர் ஆணையர் லெவ் டேவிடோவிச் ட்ரொட்ஸ்கி, ஒரு அரசியல் மூலோபாயவாதி, இராணுவத் தலைவர், அமைப்பாளர், நிர்வாகி, எழுத்தாளர் மற்றும் சொற்பொழிவாளர் என்ற முறையில் புரட்சிகர அரசாங்கத்தின் சமரசமற்ற எதிர்ப்பாளர்களால் கூட அங்கீகரிக்கப்பட்டவர், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவிற்கும் மத்திய கட்டுப்பாட்டு ஆணையத்திற்கும் ஒரு கடிதத்தை எழுதினார். கட்சியின் தலைமை பொருளாதாரக் கொள்கையையும் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் உள் வாழ்க்கையையும் கையாண்ட விதத்துடன் தனது முக்கிய வேறுபாடுகளை அவர் கோடிட்டுக் காட்டினார். [1]
இந்தக் கடிதம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வளர்ந்து வரும் அதிகாரத்துவம் பற்றிய அதன் விமர்சனங்கள் மற்றும் கட்சியின் வாழ்க்கையில் அதன் தாக்கம் ஆகியவை இடது எதிர்ப்பு அணியை நிறுவுவதற்கான அரசியல் உத்வேகத்தை அளித்தன. அதே நேரத்தில், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அதன் விமர்சனங்களுக்கு இலக்காக இருந்தவர்களிடமிருந்து ஒரு கொடூரமான எதிர்த்தாக்குதல்களைத் தூண்டியது. போல்ஷிவிக் கட்சியின் அரசியல் சீரழிவு அபாயம் பற்றிய ட்ரொட்ஸ்கியின் எச்சரிக்கை விரைவில் நிரூபிக்கப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில், இடது எதிர்ப்பு, அதிகரித்து வரும் கடினமான நிலைமைகளின் கீழ், புதிய சோவியத் அதிகாரத்துவத்தின் வளர்ந்து வரும் சமூக மற்றும் அரசியல் செல்வாக்கிற்கு எதிரான ஒரு போராட்டத்தை நடத்தியது, அரசு மற்றும் கட்சி மீது மூச்சுத் திணறும் அளவிற்கு கட்டுப்பாட்டைக் கொண்டிருந்த ஸ்ராலினின் சர்வாதிபத்திய சர்வாதிகாரத்தில் இத்தகைய பயங்கரமான வெளிப்பாட்டைக் காண முடிந்தது.
இடது எதிர்ப்பின் தோற்றம் மற்றும் அது எழுப்பிய பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்கு, ரஷ்யப் புரட்சி மற்றும் சோவியத் அரசின் முதல் ஆறு ஆண்டுகளைப் பற்றிய ஒரு ஆய்விலிருந்து தொடங்குவது அவசியமாகும். 1917-ல் இருந்து தொடங்குவோம். 1917 இல் ரஷ்யாவில் நடந்த நிகழ்வுகளால் ஏற்பட்ட அதிர்ச்சியூட்டும் அரசியல் மாற்றத்தை மனிதகுல வரலாற்றில் ஒரு வருடத்தில் நாம் கண்டதில்லை. பிப்ரவரி 1917 இறுதி வரை, ரஷ்யா ஒரு சர்வாதிகார முடியாட்சியால் ஆளப்பட்டது, அதன் ஆளும் வம்சம் 1613 ஆம் ஆண்டுவரை செல்கிறது. ஜாரிச சர்வாதிகார ஆட்சி ரஷ்யாவின் பின்தங்கிய அரசியல் மற்றும் சமூக உறவுகளை உள்ளடக்கியது, இது பண்டையகால அறியாமையில் வாழும் விவசாயிகள் மக்கள்தொகையில் சுமார் 90 சதவீதத்தை உள்ளடக்கிய ஒரு பரந்த தேசமாகும். 1861 ஆம் ஆண்டு வரை நிலப்பிரபுத்துவ அடிமை முறை ஒழிக்கப்படவில்லை, இந்தச் சீர்திருத்தம் இருந்தபோதிலும், பெரும்பான்மையான விவசாயிகள் தொடர்ந்து வறுமையில் வாழ்ந்து வந்தனர்.
ரஷ்யா, 1917 க்கு முன்னதாக, பெரும் ஐரோப்பிய சக்திகளில் மிகவும் பின்தங்கிய நாடாக இருந்தது. ஆனால் இன்னும் பல வழிகளில் அரை நிலப்பிரபுத்துவ நிலைமைகளில் மூழ்கியிருந்த இந்த சாம்ராஜ்யத்திற்குள், பிரிட்டிஷ், பிரெஞ்சு மற்றும் ஜேர்மன் மூலதனத்தால் நிதியளிக்கப்பட்ட ஒரு மிகவும் வளர்ந்த தொழில்துறையும் வளர்ந்தது, அதில் மிகவும் செறிவூட்டப்பட்ட தொழில்துறை தொழிலாள வர்க்கம் இருந்தது. மிகப் பெரிய தொழில்துறை நிறுவனங்களில் பெருந்திரளான தொழிலாளர்களின் செறிவு மிகவும் முன்னேறிய அமெரிக்காவை விட ரஷ்யாவில் அதிகமாக இருந்தது. 1914 ஆம் ஆண்டில், ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய நிறுவனங்கள் மொத்த தொழிலாளர்களில் 17.8 சதவீதத்தை கொண்டிருந்தன. ஆனால் ரஷ்யாவில், அத்தகைய வணிகங்கள் 41.1 சதவீதத்தை கொண்டிருந்தன. மிகவும் செறிவூட்டப்பட்ட இந்தப் பாட்டாளி வர்க்கம்தான் ஜாரிச மேலாதிக்க எதிர்ப்பு சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது மற்றும் மார்க்சிசத்தின் விரைவான வளர்ச்சிக்கான சமூக அடித்தளத்தை வழங்கியது. இவ்வாறாக, ஜாரிசத்தை அதன் அடித்தளத்தை உலுக்கிய, ஆனால் அதை தூக்கியெறியத் தவறிய 1905 புரட்சியில், முக்கிய பாத்திரத்தை முதலாளித்துவ வர்க்கம் அல்ல, மாறாக தொழிலாள வர்க்கம்தான் வகித்தது. தொழிலாள வர்க்கத்தின் தலைமைப் பொறுப்பில் சோசலிஸ்டுகள் நின்றனர், அவர்களில் மிகச் சிறந்தவர்களில் ஒருவர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சோவியத்தின் தலைவரான லியோன் ட்ரொட்ஸ்கி ஆவார்.
எதேச்சதிகார ஆட்சி 1905ல் புயல்களை எதிர்கொண்டது. ஆனால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, 1917 பெப்ரவரியில் வெடித்த வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் ஜார் மன்னரை விரைவாக பதவி துறக்கச் செய்ய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது மற்றும் உத்தியோகபூர்வ அதிகாரம் இடைக்கால அரசாங்கத்தின் கைகளுக்குச் சென்றது. இருப்பினும், 1905 இல் இருந்ததைப் போல, முதலாளித்துவ வர்க்கத்தால் ஜனநாயகப் புரட்சியின் மீது தனது தலைமையை உறுதிப்படுத்த முடியவில்லை. தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான பாத்திரம் மற்றும் நலன்கள் ரஷ்யா முழுவதும் வெகுஜன தொழிலாளர் கவுன்சில்கள் அல்லது சோவியத்துகள் தோன்றியதில் வெளிப்பட்டன. ஒரு குறுகிய காலத்திற்கு, மென்ஷிவிக்குகள் - பழமைவாத சமூக ஜனநாயகவாதிகள் - இந்த சோவியத்துகளில் ஆதிக்கம் செலுத்தினர். ஆனால் மென்ஷிவிக்குகள் முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்துடன் முறித்துக் கொள்ள மறுத்தனர். எனவே அவர்கள், வெறுக்கப்பட்ட ஏகாதிபத்திய உலகப் போரில் ரஷ்யாவின் தலையீட்டை முடிவுக்குக் கொண்டுவரவோ அல்லது கிராமப்புறங்களில் சமூக உறவுகளின் ஒரு புரட்சிகர ஜனநாயக மாற்றத்தை செயல்படுத்தவோ மாட்டார்கள். மென்ஷிவிக்குகள் அவர்களின் கொள்கைகளால் மதிப்பிழந்தனர். 1917 இலையுதிர்காலத்தில், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் கீழ் போல்ஷிவிக்குகள் முக்கிய தொழில்துறை மையங்களின் தொழிலாள வர்க்கத்திற்குள் மகத்தான ஆதரவை ஸ்தாபித்திருந்தனர். நிலபிரபுத்துவ முறையின் எச்சங்களை ஒழித்து அவர்களுக்கு நிலம் வழங்கத் தயாராக இருந்த ஒரே கட்சியாக போல்ஷிவிக்குகளை விவசாயிகளின் பெரும் பகுதியினர் காணத் தொடங்கினர். சோவியத்துகளில் போல்ஷிவிக்குகள் பெரும்பான்மை பெற்றனர், இந்த சோவியத்துகளின் ஆதரவுடன்தான் அவர்கள் 1917 அக்டோபரில் அதிகாரத்தைக் கைப்பற்றினர்.
அக்டோபர் 1917: ஆட்சிக் கவிழ்ப்பா அல்லது வெகுஜன எழுச்சியா?
அக்டோபர் புரட்சி என்பது வெகுஜன ஆதரவு இல்லாத ஒரு 'ஆட்சிக் கவிழ்ப்பு' திடீர்ப்புரட்சி மட்டுமே என்பது கம்யூனிச எதிர்ப்பு வரலாற்றாசிரியர்களிடையே நீண்டகாலமாக ஒரு நம்பிக்கைக் கட்டுரையாக இருந்து வருகிறது. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பழைய பனிப்போர் பிரச்சாரகர் ரிச்சர்ட் பைப்ஸ் பின்வருமாறு எழுதியுள்ளார்: 'லெனின், ட்ரொட்ஸ்கி மற்றும் அவர்களது கூட்டாளிகள் ஒரு பயனற்ற, ஆனால் ஜனநாயக அரசாங்கத்தை தூக்கியெறிந்து பலவந்தமாக அதிகாரத்தைக் கைப்பற்றினர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்கள் நிறுவிய அரசாங்கம் ஒரு சிறிய சிறுபான்மையினரால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் செயலிலிருந்து உருவானது.' [2]
இந்த பதிப்பு புறநிலை பகுப்பாய்வைத் எதிர்த்து நிற்க முடியவில்லை. மேலும் இது மிகவும் முக்கியமான அறிஞர்களால் பெரும்பாலும் அவமதிப்புடன் நிராகரிக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுனி பின்வருமாறு எழுதியுள்ளார்: 'போல்ஷிவிக்குகள் அதிகாரத்திற்கு வந்ததற்குக் காரணம், அவர்கள் உயர்ந்த சூழ்ச்சியாளர்களாகவோ அல்லது சிடுமூஞ்சித்தனமான சந்தர்ப்பவாதிகளாகவோ இருந்ததால் அல்ல, மாறாக ஏப்ரல் மாதம் லெனினால் வகுக்கப்பட்ட மற்றும் அடுத்தடுத்த மாதங்களில் நடந்த நிகழ்வுகளால் வடிவமைக்கப்பட்ட அவர்களின் கொள்கைகள், அவர்களை ஒரு உண்மையான வெகுஜன இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் அமர்த்தியது.' [3]
ஒரு பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் பின்வருமாறு எழுதியுள்ளார்: 'நிச்சயமாக, போல்ஷிவிக் கிளர்ச்சியும் அமைப்பும் வெகுஜனங்களை தீவிரமயமாக்குவதில் முக்கிய பங்கு வகித்தன. ஆனால் போல்ஷிவிக்குகளே வெகுஜன அதிருப்தியையோ புரட்சிகர உணர்வையோ உருவாக்கவில்லை. இது சிக்கலான பொருளாதார மற்றும் சமூக எழுச்சிகள் மற்றும் அரசியல் நிகழ்வுகளின் வெகுஜனங்களின் சொந்த அனுபவத்திலிருந்து வளர்ந்தது. போல்ஷிவிக்குகளின் பங்களிப்பு புரட்சியின் சமூக இயக்கவியல் பற்றிய தொழிலாளர்களின் புரிதலை வடிவமைப்பதும், அன்றாட வாழ்க்கையின் அவசர பிரச்சினைகள் பரந்த சமூக மற்றும் அரசியல் ஒழுங்கோடு எவ்வாறு தொடர்புடையவை என்பது குறித்த விழிப்புணர்வை வளர்ப்பதைக் கொண்டிருந்தது. போல்ஷிவிக்குகள் ஆதரவைப் பெற்றனர், ஏனெனில் அவர்களின் பகுப்பாய்வு மற்றும் முன்மொழியப்பட்ட தீர்வுகள் அர்த்தமுள்ளதாகத் தோன்றின... அக்டோபரில் போல்ஷிவிக்குகள் கெரென்ஸ்கியின் இடைக்கால அரசாங்கத்தை தூக்கியெறிந்தபோது, அது அரசியல் அமைப்புமுறைக்கு ஒரு கொடிய அடி என்பதை விட நோவில்லாச்சாவு நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட வெகுஜனங்களுக்குத் தோன்றியது'. [4]
ஆனால் போல்ஷிவிக் கருத்துக்கள் பிரபலமடைவதற்கு மிக முக்கியமான சான்று லெனினின் மிகவும் உறுதியான அரசியல் எதிரியான மார்டோவின் எழுத்துக்களிலிருந்து வருகிறது, அவர் போல்ஷிவிக்குகளால் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஒரு மாதத்திற்குப் பிறகு நவம்பர் 19, 1917 திகதியிட்ட ஒரு கடிதத்தில் இவ்வாறு எழுதினார்:
இதுதான் நிலைமை. இது துயரகரமானது. எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் எதிர்கொள்வது பாட்டாளி வர்க்கத்தின் வெற்றிகரமான எழுச்சி என்பதை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள், அதாவது கிட்டத்தட்ட முழு பாட்டாளி வர்க்கமும் லெனினின் பின்னால் உள்ளது மற்றும் ஆட்சிக் கவிழ்ப்பிலிருந்து சமூக விடுதலையை எதிர்பார்க்கிறது. இது அனைத்து பாட்டாளி வர்க்க விரோத சக்திகளுக்கும் சவால் விடுத்துள்ளது. இத்தகைய சூழ்நிலைகளில், குறைந்தபட்சம் எதிர்ப்பு பாத்திரத்திலாவது இருந்தாலும், பாட்டாளி வர்க்கத்தின் அணிகளில் இருக்காமல் இருப்பது கிட்டத்தட்ட தாங்க முடியாதது. [5]
மார்டோவ் குறைந்தபட்சம் ஒரு நேர்மையான மனிதராக இருந்தார். லெனினின் கொள்கைகளை அவர் எதிர்த்த போதிலும், போல்ஷிவிக்குகள் தலைமையிலான புரட்சி தொழிலாள வர்க்கத்தின் ஆதரவுடன் நடத்தப்பட்டது என்பதை அவர் ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது.
ரஷ்யப் புரட்சியின் கோட்பாடு
1917 ரஷ்யப் புரட்சிக்கு முன்னதாக அதன் அரசியல் மற்றும் சமூக இயக்கவியல் குறித்து ஒரு நீண்ட தத்துவார்த்த விவாதம் இருந்தது. ரஷ்யாவின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பின்தங்கிய நிலையைக் கருத்தில் கொண்டு வரவிருக்கும் புரட்சி ஒரு ஜனநாயகப் புரட்சியாக இருக்கும் என்று அனைத்து வகையான மார்க்சிஸ்டுகளிடையேயும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், இங்குதான் அந்த உடன்பாடு முடிவுக்கு வந்தது. புரட்சியின் ஜனநாயகப் பணிகளுக்கு இணங்க, ஜார் அரசரைத் தூக்கியெறிந்துவிட்டு ஒரு ஜனநாயக முதலாளித்துவ அரசாங்கத்தை நிறுவுவதன் மூலம் தொடரும் என்று மென்ஷெவிக்குகள் கூறினார்கள். புரட்சியின் அரசியல் பயனாளிகள் அதிகாரம் யாருடைய கைகளுக்குச் செல்கிறதோ அவர்கள் தாராளவாத முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதிகளாக இருப்பார்கள் என்றனர்.
லெனின் மற்றொரு கோட்பாட்டை முன்வைத்தார்: அதாவது 'பாட்டாளி வர்க்க மற்றும் விவசாயிகளின் ஜனநாயக சர்வாதிகாரம்' எனபதாகும். இந்தப் புரட்சியானது அடிப்படையில் ஜனநாயகத் தன்மை கொண்டதாக இருக்கும் என்றும் நிலப்பிரபுத்துவத்தின் அரசியல் மற்றும் சமூக மரபுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் அவர் கருதினார். ஆனால் புரட்சியின் தலைமை முதலாளித்துவ வர்க்கத்திடம் விடப்படும் அல்லது விட்டுவிடப்படலாம் என்பதை லெனின் மறுத்தார். மாறாக, தலைமையானது பாட்டாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் முன்னேறிய அடுக்குகளின் கைகளில் இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார்; இரண்டு சுரண்டப்பட்ட வர்க்கங்களின் இந்தக் கூட்டணியை அடிப்படையாகக் கொண்ட அரசு அதிகாரம் 'பாட்டாளி வர்க்க மற்றும் விவசாயிகளின் ஜனநாயக சர்வாதிகாரமாக' இருக்கும். இது மென்ஷிவிக்குகள் முன்வைத்த கோட்பாட்டிற்கும், இறுதியாக ட்ரொட்ஸ்கியின் கோட்பாடான நிரந்தரப் புரட்சிக்கும் இடையிலான ஒரு இடைநிலை நிலைப்பாடாக இருந்தது.
18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளின் பிற்பகுதியிலிருந்து பண்புரீதியாக வேறுபட்ட, முதலாளித்துவத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் தொழில்துறை பாட்டாளி வர்க்கத்தின் சமூக சக்தியின் நிலைப்பாட்டில் இருந்து கருத்தில் கொள்ளப்பட்ட 20 ஆம் நூற்றாண்டில், ரஷ்யாவில் ஜனநாயகப் புரட்சி வெறுமனே மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் வரலாற்று அனுபவங்களை மீண்டும் உருவாக்காது என்று ட்ரொட்ஸ்கி வாதிட்டார். பாட்டாளி வர்க்கமானது ஜனநாயகப் புரட்சியின் தலைமையை ஏற்கும் போது, அதன் நிலைப்பாட்டின் தர்க்கத்தால் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றவும், முதலாளித்துவ சொத்துடைமையின் அடித்தளங்களுக்கு எதிராக சோசலிச நடவடிக்கைகளைத் தொடங்கவும் நிர்பந்திக்கப்படும் என்று அவர் வலியுறுத்தினார். இவ்வாறாக, ட்ரொட்ஸ்கி, 1906-07 ஆம் ஆண்டிலேயே, ஜனநாயகப் புரட்சி ரஷ்யாவில் ஒரு சோசலிசப் புரட்சியின் வடிவத்தில் கட்டவிழ்ந்து, தொழிலாள வர்க்கத்தால் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் முடிவடையும் என்று முன்னறிவித்தார்.
1917 க்கு முந்தைய ரஷ்ய கன்னைவாதத்தின் மிகப்பெரும் பரபரப்பான சூழலில், ட்ரொட்ஸ்கி ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்தார், அது அவரை மென்ஷிவிக்குகள் மற்றும் போல்ஷிவிக்குகள் இரண்டிலிருந்தும் பிரித்தது. லெனின் ட்ரொட்ஸ்கி மீதான அவரது மிக மறைமுகமான பல விமர்சனங்களை இலக்காகக் கொண்டிருந்தார். அரசியல் அமைப்பு சார்ந்த விஷயங்களில் லெனினின் விமர்சனங்கள் நியாயமானவைகளாகும். போல்ஷிவிக்குகளையும் மென்ஷிவிக்குகளையும் சமரசம் செய்வதற்கான ட்ரொட்ஸ்கியின் முயற்சிகள் தவறாக வழிநடத்தப்பட்டன. ஆனால் ரஷ்யப் புரட்சியின் இயக்கவியல் பற்றிய ட்ரொட்ஸ்கியின் மதிப்பீடு நிரூபணமானது. பழைய கன்னைப் பூசல்களை தனது மதிப்பீட்டை மறைக்க அவர் அனுமதிக்கவில்லை என்பது லெனினின் அரசியல் புறநிலையின் அளவீடாகும். இந்த முக்கியமான பண்பில், போல்ஷிவிக் கட்சியின் தலைமைத்துவத்தில் அவருக்கு மிக நெருக்கமாக நின்ற பலரை விட லெனின் மிகப் பெரிய மனிதராக இருந்தார். இவ்வாறாக, 1917 ஏப்ரலில் ரஷ்யாவுக்குத் திரும்பிய லெனின், போல்ஷிவிக் கட்சியில் இருந்த தனது பழைய கூட்டாளிகளான சினோவியேவ், காமனேவ் மற்றும் அந்த விஷயத்தில், ஸ்ராலின் ஆகியோரை வியப்பில் ஆழ்த்தி, ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் மையக் கோட்பாடுகளைத் தழுவி, முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்தை தூக்கியெறிந்து ஒரு பாட்டாளி வர்க்க ஆட்சியை ஸ்தாபிக்கும் பணியை போல்ஷிவிக்குகளின் முன் வைத்தார்.
லெனினின் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி முதலாவது உலகப் போரின் தோற்றம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் குறித்த அவரது பகுப்பாய்வின் விளைவாகும், இது அவரது தனிச்சிறப்புவாய்ந்த துண்டுப்பிரசுரமான ஏகாதிபத்தியம்: முதலாளித்துவத்தின் மிகச் சமீபத்திய கட்டம் (Imperialism: The Latest Stage of Capitalism -1916) இவற்றில் அதன் முழுமையான வெளிப்பாட்டைக் கண்டது. லெனினைப் பொறுத்தவரை, உலகப் போரானது உலக வரலாற்றில் ஒரு புதிய கட்டத்தின் தொடக்கத்தைக் குறித்தது. இந்தப் போர் முழு உலக முதலாளித்துவ ஒழுங்கின் ஒரு வரலாற்று நெருக்கடியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அது ரஷ்யப் புரட்சியின் தன்மை மற்றும் பணிகள் பற்றிய புரிதலுக்கான தொடக்கப் புள்ளியாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
எனவே, 1917 பெப்ரவரியில் ரஷ்யாவில் புரட்சி வெடித்தபோது, அது லெனினுக்கு ரஷ்யாவின் முதலாளித்துவ ஜனநாயக மாற்றத்தின் தொடக்கத்தை குறிக்கவில்லை, மாறாக, உலக சோசலிசப் புரட்சியின் தொடக்கத்தைக் குறித்தது.
ரஷ்யப் புரட்சியின் முரண்பாடுகள்
லெனினோ அல்லது ட்ரொட்ஸ்கியோ ரஷ்யா, அதன் சொந்த அளவிலான பொருளாதார வளர்ச்சியின் கண்ணோட்டத்தில் மட்டுமே தீர்மானிக்கப்பட்டு, சோசலிசத்திற்கு முதிர்ச்சியடைந்துள்ளது என்று நம்பவில்லை. உண்மையில், அது ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் முதலாளித்துவ நாடுகளை விட மிகவும் பின்தங்கியிருந்தது. ரஷ்யாவில் ஒரு சோசலிசப் புரட்சி அவசியமாக இருந்தது, ஏனெனில் உலக நிலைமைகள் முற்போக்கான தேசிய வளர்ச்சிக்கு வேறு எந்த சாத்தியங்களையும் விட்டுச் செல்லவில்லை. ரஷ்யாவின் போதுமான பொருளாதார வளர்ச்சி இல்லை என்ற அடிப்படையில் போல்ஷிவிக்குகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் இருந்து 'விலகியிருந்தால்' 1917 இன் விளைவு ஒரு செழிப்பான முதலாளித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தாராளவாத ஜனநாயகத்தின் எழுச்சியாக இருந்திருக்காது. மாறாக, ஏகாதிபத்திய சகாப்தத்தில் பிற பின்தங்கிய நாடுகளின் தலைவிதியை ரஷ்யா அனுபவித்திருக்கும்: அதாவது, பின்தங்கிய நிலை மற்றும் அரை-காலனித்துவ தங்கியிருப்புநிலை. 1917 ஆகஸ்டில் ஜெனரல் கோர்னிலோவின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியால் மட்டுமல்லாமல், போல்ஷிவிக் அதிகாரத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து நடந்த உள்நாட்டுப் போரின் முழு போக்கிலும் இந்த மதிப்பீட்டின் துல்லியம் நிரூபிக்கப்பட்டது.
அப்படியானால் போல்ஷிவிக்குகளின் முன்னோக்கும் மூலோபாயமும் என்னவாக இருந்தது? உலக நிலைமைகள் அவர்களை அதிகாரத்தைக் கைப்பற்றி ஒரு பின்தங்கிய நாட்டில் ஒரு சோசலிசப் புரட்சியைத் தொடங்க நிர்பந்தித்தன. ஆனால் சோசலிசத்தை அடைவதற்குத் தேவையான பொருளாதார மற்றும் கலாச்சார வளர்ச்சி மட்டத்தை விட ரஷ்யா மிகக் குறைவாக இருந்ததால், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் உயிர்வாழ்வும் இறுதியில் சோசலிசத்தை அடைவதும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதைப் பொறுத்திருந்தது. அப்போதுதான் சோவியத் ரஷ்யா அதன் பொருளாதாரத்தின் சோசலிச மாற்றத்திற்குத் தேவையான பொருளாதார வளங்களை அணுகலாம்.
போல்ஷிவிக்குகளின் மூலோபாயம் சரியானதா?
போல்ஷிவிக் மூலோபாயமானது தொழிலாள வர்க்கத்தின் அரசியல் முதிர்ச்சியிலும், ஐரோப்பிய மற்றும் உலக முதலாளித்துவத்திற்குள் சமூக முரண்பாடுகளின் முன்னேறிய அபிவிருத்தியிலும் பெரும் நம்பிக்கையைக் கொண்டிருந்தது. இன்று ஒருவர் கேட்கலாம்: இது எந்த அளவுக்கு சரியானது? இக்கேள்விக்கு விடைகாண போல்ஷிவிக்குகளின் மூலோபாயத்தை அதன் சரியான வரலாற்றுப் பின்னணியில் மீளாய்வு செய்வது அவசியமாகும். போல்ஷிவிக் அதிகாரத்தைக் கைப்பற்றுவது தொடர்பான தனது அணுகுமுறையில் எந்த விதத்திலும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட ரோசா லக்சம்பேர்க், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் கொள்கைகளின் இந்த அம்சத்தை துல்லியமாக பாராட்டுவதில் தயக்கமின்றி இருந்தார். ஜேர்மனியில் அவரிருந்த சிறை அறையில் இருந்து அவர் இவ்வாறு எழுதினார்:
ரஷ்யாவில் புரட்சியின் தலைவிதியானது முழுமையாக சர்வதேச நிகழ்வுகளைச் சார்ந்திருந்தது. போல்ஷிவிக்குகள் தங்கள் கொள்கையை முற்றிலும் உலக பாட்டாளி வர்க்கப் புரட்சியை அடிப்படையாகக் கொண்டுள்ளனர் என்பது அவர்களின் அரசியல் தொலைநோக்குப் பார்வை மற்றும் கொள்கையின் உறுதித்தன்மை மற்றும் அவர்களின் கொள்கைகளின் தைரியமான நோக்கத்திற்கான தெளிவான சான்றாகும். [6]
உண்மையில், அக்டோபர் புரட்சியானது உலக வரலாற்றில் மிகப்பெரிய புரட்சிகர இயக்கத்தின் வெளிப்பாடு மற்றும் ஊக்கியாக இருந்தது. ஐரோப்பா முழுவதிலும் மற்றும் அமெரிக்காவிலும் கூட, முதலாளித்துவ ஆட்சிகள் உலகப் போரினால் கட்டவிழ்த்து விடப்பட்ட உணர்ச்சிகளுக்கு அசாதாரணமாக பாதிக்கப்படக்கூடியவைகளாக தங்களை உணர்ந்தன. அக்டோபர் புரட்சியின் ஒரு வருடத்திற்குள், ஜேர்மனியும் மத்திய ஐரோப்பாவின் பெரும்பகுதியும் புரட்சிகர எழுச்சியின் பிடியில் இருந்தன, போல்ஷிவிக் மூலோபாயம் நிரூபிக்கப்படுவது போல் தோன்றியது.
ஜேர்மனியில் புரட்சிகள், ஹங்கேரியில் புரட்சி, மத்திய ஐரோப்பா முழுவதிலும் நடந்த எழுச்சிகள் — இந்தப் புரட்சிகள் வெற்றிபெறவில்லை என்றால், அது போல்ஷிவிக் மூலோபாயத்தின் கற்பனாவாதத் தன்மையை அல்ல, மாறாக ரஷ்யாவுக்கு வெளியே தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தலைமையின் பலவீனத்தையே எடுத்துக்காட்டியது. ஐரோப்பாவில் போல்ஷிவிக்குகளுடன் அதன் அரசியல் பண்பு மற்றும் அதன் தலைமையின் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் ஒப்பிடக்கூடிய எந்தக் கட்சியும் அங்கு இருந்திருக்கவில்லை. 1914ல் ஏகாதிபத்தியப் போர் வெடித்தபோதே தொழிலாள வர்க்கத்தை காட்டிக்கொடுத்த ஐரோப்பிய சோசலிசக் கட்சிகளின் சந்தர்ப்பவாத சீரழிவில் இதற்கான காரணங்களைக் காணலாம்.
1918-19ல் ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின் தோல்வியும், லக்சம்பேர்க் மற்றும் லீப்நெக்ட் ஆகியோர்களின் படுகொலையும் ஜேர்மன் புரட்சியின் வளர்ச்சியில் பேரழிவுகரமான விளைவைக் கொண்டிருந்தன, அத்தோடு மேலும் சோவியத் ஒன்றியத்தின் எதிர்கால தலைவிதிக்கு ஆழமான முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தன. போல்ஷிவிக்குகள் ரஷ்யாவில் புரட்சி விரைவில் ஐரோப்பா முழுவதிலும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கங்களால் பின்பற்றப்படும் என்று நம்பினர், மேலும் அவர்கள் தங்கள் கொள்கைகளை இதை அடிப்படையாகக் கொண்டிருந்தனர்.
உள்நாட்டுப் போரும் போர்க் கம்யூனிசமும்
முதல் கணத்திலிருந்தே, அரசு தனது இருப்பிற்காகப் போராட வேண்டியதாயிற்று. ரஷ்யா இன்னும் ஈடுபட்டிருந்த முதலாவது உலகப் போரின் சுமையைப் மரபாகப் போல்ஷிவிக்குகள் பெற்றனர். அந்த போரை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஜேர்மன் உயர்மட்டத்துடனான பேச்சுவார்த்தைகளில் போல்ஷிவிக்குகள் பின்பற்றிய மூலோபாயம் அவர்களின் மூலோபாய தொலைநோக்குநிலையை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டியது. 1917-1918 குளிர்காலத்தில், ட்ரொட்ஸ்கி, பிரெஸ்ட் லிடோவ்ஸ்க்கில், உலக வரலாற்றில் இதற்கு முன் கண்டிராத ஒரு வகையான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். அவர் தன்னை ஜேர்மன் அரசாங்கத்திடமோ அல்லது ஜேர்மன் தலைமை ஜெனரலிடமோ பேசவில்லை, மாறாக ஜேர்மன் மற்றும் சர்வதேச பாட்டாளி வர்க்கத்தை நோக்கி உரையாற்றினார். பழைய ரஷ்ய அரசாங்கத்திற்கும் ஏனைய ஏகாதிபத்திய அரசாங்கங்களுக்கும் இடையிலான இரகசிய உடன்படிக்கைகளை வெளியிடுவது போன்ற போரின் பகிரங்க அம்பலப்படுத்தல்களானது, போரின் முற்றிலும் பிற்போக்குத்தனமான தன்மையை வெகுஜனங்களுக்கு எடுத்துக்காட்டும் என்றும், போர்முனையில் அபிவிருத்தியடைந்து வரும் புரட்சிகர உணர்வுகளை விரைவுபடுத்த உதவும் என்றும் அவர் நம்பினார். ட்ரொட்ஸ்கியின் வியூக கணக்கீடுகளானது, உண்மையில் வெகு தொலைவில் இருக்கவில்லை. போல்ஷிவிக்குகள் நடத்திய கிளர்ச்சியானது ஜேர்மன் ராணுவத்தை விரக்தியில் ஆழ்த்தியது. ஜேர்மனியில் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன, ஆனால் போல்ஷிவிக்குகள் எதிர்பார்த்த புரட்சி வெடிக்கவில்லை. அது சுமார் எட்டு அல்லது ஒன்பது மாதங்களுக்குப் பிறகு நடக்கவிருந்தது. இதற்கிடையில், சர்வதேச நிகழ்வுகளின் சிக்கலில் உள்ள சோவியத் குடியரசிற்கு சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஆதரவை பெறும் வரை, புரட்சிகர ஆட்சி நேரத்தை விலைக்கு வாங்குவதற்காக (பெறுவதற்காக) போல்ஷிவிக்குகள் ஒரு கடினமான சமாதானத்தில் கையெழுத்திட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆனால் 1918 மார்ச்சில் பிரெஸ்ட்-லிடோவ்ஸ்க்கில் சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் மூலம் போல்ஷிவிக்குகளின் பிரச்சினைகள் முடிவுக்கு வரவில்லை. போரை விட்டு வெளியேறும் முடிவு, ஜாரிச ரஷ்யாவுடன் அணிசேர்ந்திருந்த அனைத்து ஏகாதிபத்திய அரசாங்கங்களின் கோபத்தையும் தூண்டியது. இப்போது அமெரிக்காவுடன் இணைந்துள்ள பிரிட்டனும் பிரான்சும் போல்ஷிவிக்குகளின் கீழும் கூட ரஷ்ய அரசாங்கம் ஜார் அரசரின் பழைய கடமைகளை நிறைவேற்றும் என்றும் போருக்கு பீரங்கி தீவனங்களை தொடர்ந்து வழங்கும் என்றும் ஆணவத்துடன் எதிர்பார்த்தன. பிரெஸ்ட் லிடோவ்ஸ்க் ஒப்பந்தம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இந்த விரும்பத்தகாத ஆச்சரியத்திலிருந்து அவர்கள் மீண்டவுடன், நட்பு நாடுகள் போல்ஷிவிக்குகளை தூக்கியெறியும் நோக்கத்திற்காக முன்னாள் ஜாரிச அதிகாரிகளின் கூட்டத்திற்கு நேரடி இராணுவ மற்றும் நிதி ஆதரவை வழங்கின. இந்த ஆதரவு இல்லாமல், உள்நாட்டுப் போர் இதுபோன்ற துயரகரமான பரிமாணங்களை ஒருபோதும் எடுத்திருக்காது. இறுதியில் போல்ஷிவிக்குகள் சுமார் 5,000 மைல்கள் நீளமுள்ள போர்க்களத்தில் 14 வெவ்வேறு முனைகளில் உள்நாட்டுப் போரை நடத்திக் கொண்டிருந்தனர்.
சர்வதேச தொழிலாள வர்க்கத்தால் அதன் சொந்த முதலாளித்துவத்தை தூக்கியெறிய முடியவில்லை, ஆனால் சோவியத் ரஷ்யா மீதான அதன் அனுதாபம் - குறிப்பாக பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து தொழிலாளர்களுக்கு இது பொருந்தும் — வெண்படைகளின் பக்கத்தில் ஏகாதிபத்திய தலையீட்டின் தோல்வியில் தீர்க்கமான காரணியாக இருந்தது. இது அமெரிக்க தலையீட்டின் பலவீனத்திற்கும் காரணமாகும். ஜனாதிபதி வுட்ரோ வில்சன் போல்ஷிவிக்குகளை எதிர்த்துப் போரிட படைகளை அனுப்பினார். மாஸ்கோவுக்கு வடக்கே உள்ள ஆர்கஞ்செல் என்ற இடத்தில் அமெரிக்கா ஒரு ஆக்கிரமிப்புப் படையை தரையிறக்கியது. உண்மையில், அமெரிக்காவிலுள்ள டெட்ராய்ட் நகரின் மையப்பகுதியிலுள்ள கோபோ ஹாலில் இருந்து தெரு முழுவதும் 1918 இல் போல்ஷிவிக் அரசாங்கத்திற்கு எதிராக வில்சனால் தொடங்கப்பட்ட மோசமான 'போலார் கரடி' (“Polar Bear”) படையெடுப்பின் நினைவாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறிய கண்காட்சி உள்ளது. இது அமெரிக்க வரலாற்றின் அம்சங்களில் ஒன்றாகும், இதைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை, ஆனால் அமெரிக்காவானது 1918ல் லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் ஆட்சியை தூக்கியெறியும் முயற்சியில் அரசாங்கம் ஒரு முக்கிய பாத்திரத்தை வகித்தது. ஆனால் படைகள் எப்படியோ தொலைந்து போயின, மீட்கப்பட்டிருக்க வேண்டும், முழு சாகசமும் தொடங்கியது போலவே, அது பரிதாபகரமாக முடிந்தது.
போல்ஷிவிக்குகள் ஏகாதிபத்தியவாதிகளின் தலையீட்டிற்கு எதிராக விடாமுயற்சியுடன் போராட முடிந்தாலும், உள்நாட்டுப் போர் சோவியத் ரஷ்யாவை நாசமாக்கியது. மேலும், அது புரட்சிகரக் கொள்கையின் போக்கை ஆழமாக பாதித்தது. புரட்சிகர அரசாங்கத்தைக் பாதுகாக்க, போல்ஷிவிக்குகள் பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரத்தை மையப்படுத்தி ஒழுங்கிணைத்தனர். ஜூன் 1918 இல், தொழில்துறையின் ஒவ்வொரு முக்கிய கிளையையும் தேசியமயமாக்கும் முதல் ஆணை வெளியிடப்பட்டது. பகுதியளவு-சோசலிசத் தன்மை கொண்ட இத்தகைய பரந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது போல்ஷிவிக்குகளின் நோக்கமாக இருக்கவில்லை, அதற்காக பொருளாதாரம் தயாராகவில்லை, ஆனால் லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையின் கீழ் சுமார் ஐந்து மில்லியன் விவசாயிகளின் போராட்ட சக்தியாக கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருந்த செம்படைக்கு விநியோகம் செய்ய வேண்டியதன் அவசியத்தால் அவைகள் அவர்கள் மீது திணிக்கப்பட்டன. செம்படைக்கு ஆயுதங்களை தயாரிக்கவும், ஆடைகளை வழங்கவும் மட்டுமல்ல, சோவியத் அரசாங்கம் வீரர்களுக்கு உணவளிக்க வேண்டியிருந்தது. விவசாயிகளிடமிருந்து தானியங்களைக் கட்டாயமாகப் பறிமுதல் செய்வதன் மூலம் கணிசமான அளவிற்கு இது சாதிக்கப்பட்டது. இந்தக் கொள்கையானது நிச்சயமாக செல்வாக்குப் பெறவில்லை, ஆனால் போல்ஷிவிக்குகள் தூக்கியெறியப்பட்டால், நிலப்பிரபுக்கள் திரும்பி வருவார்கள் என்பதை விவசாயிகள் புரிந்து கொள்ளும் வரை இது நிலையானதாக இருந்தது. எனவே நிலப்பிரபுக்களின் கொடுங்கோன்மையிலிருந்து தங்களைப் பாதுகாக்கும் சக்தியாக போல்ஷிவிக்குகள் கருதப்படும் வரை விவசாயிகள் இந்தக் கொள்கையைப் பொறுத்துக் கொள்ளத் தயாராக இருந்தனர்.
1920 ஆண்டளவில், செம்படை கிட்டத்தட்ட அனைத்து எதிர்-புரட்சிகர சக்திகளையும் தோற்கடித்தது, ஆனால் சோவியத் ரஷ்யாவின் பொருளாதாரம் கிட்டத்தட்ட சரிவு நிலையில் இருந்தது. பேரழிவின் அளவு திகைக்க வைத்தது. உள்நாட்டுப் போரின் முடிவில், 1920-21 ஆம் ஆண்டில், சுமார் 20 மில்லியன் மக்கள் பட்டினியால் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 1917 மற்றும் 1920 க்கு இடையில், மாஸ்கோ அதன் மக்கள் தொகையில் 44.5 சதவீதத்தை இழந்தது. மிகப் பெரிய தொழில்துறை மையமான பெட்ரோகிராட் 57.5 சதவீதத்தை இழந்தது. இந்தப் புள்ளிவிவரங்கள் குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும், அவைகள் புரட்சிக்குப் பிந்தைய தொழிலாள வர்க்கத்தின் தலைவிதியையே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. பின்னர் போல்ஷிவிக் அரசாங்கத்தை எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் புரட்சிக்குப் பின்னர் ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் சமூக சிதைவிலிருந்து எழுந்தன. 1923-24 வாக்கில், ரஷ்யாவின் சமூக கட்டமைப்பில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. அக்டோபர் புரட்சியை ஆதரித்த புரட்சிகர பாட்டாளி வர்க்கமானது உலக ஏகாதிபத்தியத்தால் ரஷ்ய மக்கள் மீது திணிக்கப்பட்ட உள்நாட்டுப் போரால் சிதைந்து போயிருந்தது. இந்த கட்டமைப்பிற்குள்தான் 1923 இல் இடது எதிர்ப்பு அணி உருவாவதற்கு வழிவகுத்த நிகழ்வுகளின் தொடர் நிகழ்வைப் புரிந்து கொள்ளத் தொடங்க வேண்டும்.
தொடரும்...
[1] Leon Trotsky, October 8, 1923 Letter to the Central Committee and the Central Control Commission of the Russian Communist Party. URL: https://www.wsws.org/en/articles/2023/10/09/iwgy-o09.html.
[2] Richard Pipes, 'Why Russians Act like Russians,' Air Force Magazine(June 1970), 51-55.
[3] Ronald G. Suny, “Revising the old story: the 1917 revolution in light of new sources”, in: The Workers’ Revolution in Russia 1917: The View from Below, ed. by Daniel H. Kaiser, Cambridge University Press 1987, 19.
[4] Steve A. Smith, 'Petrograd in 1917,' in: The Workers' Revolution in Russia, 1917, 52.
[5] Vladimir Bartov, Dear Comrades. Menshevik Reports on the Bolshevik Revolution and the Civil War, Hoover Institution Press 1991, 52.
[6] Rosa Luxemburg, The Russian Revolution. URL: https://www.marxists.org/archive/luxemburg/1918/russian-revolution/ch01.htm.