முன்னோக்கு

பிரான்சின் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களும் சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சியும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஏழு மாதங்களுக்கு முன்பாக, பிரான்சின் “செல்வந்தர்களது ஜனாதிபதி”யான இமானுவல் மக்ரோனின் தொழிலாளர்-விரோதக் கொள்கைகளை எதிர்த்து நூறாயிரக்கணக்கான “மஞ்சள் சீருடை” போராட்டக்காரர்கள் சமூக ஊடகங்களின் ஊடாக ஒன்றுகூடினர். மக்ரோனின் பிற்போக்குத்தனமான எரிபொருள் வரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மஞ்சள் நிற மேலுடைகளை அணிந்தபடி அவர்கள் குறைந்த ஊதியங்களையும், சிக்கன நடவடிக்கைகளையும் மற்றும் போலிஸ்-அரசு இராணுவவாதத்தையும் கண்டனம் செய்தனர். தொழிலாளர்களின் மிகப் பெருவாரியான எண்ணிக்கையிலானோரின் அனுதாபத்தை வென்றெடுத்து மக்ரோனை ஒரு தனிமைப்பட்ட மற்றும் வசைக்கு இலக்காகிய மனிதராக அம்பலப்படுத்திய இந்தப் போராட்டங்கள் 1968 மே பொது வேலைநிறுத்தத்திற்குப் பிந்தைய காலத்தில் பிரான்சில் நடக்கின்ற மிக முக்கியமான அரசியல் எதிர்ப்புப் இயக்கமாக உருவெடுத்தன.

மஞ்சள் சீருடை ஆர்ப்பாட்டக்காரர்களின் ஒரு பகுதியினர்

இந்த ஆர்ப்பாட்டங்கள் தொழிலாள வர்க்கம் மீண்டும் அரசியல் அரங்கில் நுழைவதன் ஆரம்பத்தை குறித்து நிற்பதோடு, பிரான்சிலும் சர்வதேச அளவிலும் ஒரு திருப்புமுனையாக இருக்கின்றன.

திகைப்பூட்டும் சமூக சமத்துவமின்மை மட்டங்கள், முன்னெப்போதினும் மிகவும் ஆழமடையும் வறுமை மற்றும் துயரம், ஒரு சிறு உயரடுக்கின் செழிப்பு மற்றும் அரசு ஒடுக்குமுறை ஆகியவற்றின் மீதான கோபம் உலகெங்கிலும் தொழிலாளர்கள் மத்தியில்வெடித்தெழத் தொடங்குகிறது. “மஞ்சள் சீருடை”யாளர்களுடன் இணைந்தவகையில், பல தசாப்த கால உலகப் பாட்டாளி வர்க்கத்தின் மிகப்பெரும் எழுச்சி கட்டவிழ்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்க ஆசிரியர்களது பாரிய வேலைநிறுத்தங்கள், மெக்சிக்கோவின் மக்கில்லாடோரா தொழிலாளர்களது திடீர் வேலைநிறுத்தங்கள், மற்றும் ஐரோப்பாவெங்கிலும் ஐரோப்பிய ஒன்றிய ஊதிய உறைவுகளுக்கு எதிரான வேலைநிறுத்தங்கள் ஆகியவற்றின் வேளையில், இந்திய துணைக்கண்டத்தில் தோட்டத்துறைத் தொழிலாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களது வேலைநிறுத்தங்களும் அத்துடன் சூடான் மற்றும் அல்ஜீரியாவில் இராணுவ ஆட்சிகளைத் தூக்கிவீசுவதற்கான பாரிய ஆர்ப்பாட்டங்களும் நடந்தன. இந்தப் போராட்டங்கள் அனைத்துமே வங்கிகளின் கட்டளைகள் மீது ஒரு போர்க்குணமிக்க நிராகரிப்பை முன்நிறுத்தியதோடு, ஆழமான சமூக மாற்றத்தினை கோரி நிற்கின்றன.

”மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்கள் தொடங்கி ஏழு மாதங்கள் முடிந்து விட்ட நிலையில், உழைக்கும் மக்கள் முகம்கொடுக்கின்ற நிலைமை குறித்த வெளிப்படையான மற்றும் எதையும் விட்டுக்கொடுக்காத ஒரு மதிப்பீட்டின் அடிப்படையில், இதுவரையான போராட்டத்தில் இருந்தான படிப்பினைகளை உள்ளீர்த்துக்கொள்வது இன்றியமையாததாக உள்ளது.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க மிரட்டல்களும் சீனாவுடனான அமெரிக்காவின் வர்த்தகப் போரும் அதிகரித்துச் சென்று கொண்டிருப்பதன் மத்தியில், பிரான்சிலும் சரி சர்வதேச அளவிலும் சரி நிதியப் பிரபுத்துவமானது இந்தப் போராட்டங்களுக்கு எந்த விதத்திலும் அசைந்து கொடுக்க மறுத்து விட்டிருக்கிறது. “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியதற்குப் பிந்தைய காலத்தில், மக்ரோன், அரசு ஓய்வூதியங்களை நிர்ணயமில்லாத தொகை மதிப்புடைய “புள்ளிகள் மூலமான ஓய்வூதியங்களை” கொண்டு பதிலிடுவது, பொதுத் துறையில் வாழ்நாள் கால வேலைவாய்ப்பை ஒழிப்பது, மற்றும் சுகாதார மற்றும் கல்வித்துறை நிதியாதாரத்தை வெட்டுவது என இரண்டாம் உலகப் போரில் நாஜிசம் சோவியத்தால் தோற்கடிக்கப்பட்டதற்குப் பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட சமூக உரிமைகளில் எஞ்சியிருப்பவற்றின் மீது அடிப்படையான தாக்குதல்களை அறிவித்திருக்கிறார். முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதன் மூலமாக தொழிலாளர்கள் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது என்பது முன்னெப்போதினும் இப்போது மிகவும் தெளிவாய் இருக்கிறது.

மஞ்சள் சீருடை ஆர்ப்பாட்டக்காரர்கள் போலிஸ் அரசிடம் இருந்து இதற்குமுன் கண்டிராத தாக்குதலுக்கு முகம் கொடுத்து வந்திருக்கின்றனர். ஆயுத வாகனங்கள், தண்ணீர் பீரங்கிகள், ஸ்தம்பிக்கச் செய்யும் கையெறி குண்டுகள், ஈயக்குண்டுப்பைகள் மற்றும் தானியங்கி துப்பாக்கிகள் ஆகியவற்றுடன் பத்தாயிரக்கணக்கான போலிஸ் படைகள் 2,000க்கும் அதிகமான மக்களை காயப்படுத்தியிருக்கிறது, இவர்களில் டஜன்கணக்கானோர் போலிஸின் கையெறி குண்டுகளுக்கு கைகளையும் ஈயக்குண்டுப்பைகளுக்கு கண்களையும் பறிகொடுத்துள்ளனர். நாஜி ஆக்கிரமிப்புக்குப் பிந்தைய காலத்தில் பிரான்சின் பெருநகரங்களில் நடைபெற்ற மிகப்பெரும் கைது நடவடிக்கையில் டிசம்பர் 8 அன்று மட்டும் 7000க்கும் அதிகமாய் 9000 பேர் வரையான மக்கள் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டனர். மார்ச்சில் இது உச்சமடைந்து, சமூகப் போராட்டங்களில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு இராணுவத்திற்கு மக்ரோன் அங்கீகாரம் வழங்கினார், இரண்டாம் உலகப் போருக்கும் பாசிசத்தின் வீழ்ச்சிக்கும் உடனடிப் பிந்தைய காலத்தில் பிரான்சில் கடைசியாக நடைபெற்ற தொழிலாளர்களது கிளர்ச்சியான 1947 கிளர்ச்சிப் போராட்ட வேலைநிறுத்தங்களின் சமயத்திற்குப் பின்னர் முதன்முறையாக இப்போது இந்த அதிகாரம் இராணுவத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியுறும் இயக்கத்திற்கு எவ்வாறான புரட்சிகர முன்னோக்குகள் அவசியமாக உள்ளன? என்பதே தீர்மானகரமான கேள்வியாக உள்ளது. “மஞ்சள் சீருடை” இயக்கமானது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் மற்றும் அதன் பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியின் (Parti de l’égalité socialiste - PES) முன்னோக்குகளை ஊர்ஜிதம் செய்திருக்கிறது. ஸ்ராலினிச ஆட்சிகளின் மூலமாக 1989 இல் கிழக்கு ஐரோப்பா மற்றும் சீனாவில் முதலாளித்துவம் மீட்சி செய்யப்பட்டதும் 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதும் “வரலாற்றின் முடிவை”யோ ஒரு முதலாளித்துவ ஜனநாயக ஒழுங்கின் இறுதி வெற்றியையோ குறித்திருக்கவில்லை. வர்க்கப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு இந்த நிகழ்வுகளின் தாக்கங்களே போதுமானதாய் இருந்த காலகட்டம் முடிந்து விட்டது. 30 வருட காலமாக தொடர்ந்து அதிகரித்துச் செல்கின்ற ஏகாதிபத்தியப் போர் மற்றும் 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர் ஒரு தசாப்த கால பொருளாதார நெருக்கடி ஆகியவற்றின் பின்னர் தொழிலாள வர்க்கத்தின் நனவான புரட்சிகர செயல்பாடு என்னும் பூதம் மறுபடியும் நிதியப் பிரபுத்துவத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.

வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சி எடுக்கவிருக்கும் வடிவம் குறித்த ICFI இன் பகுப்பாய்வையும் “மஞ்சள் சீருடை” இயக்கம் சரியென நிரூபித்திருக்கிறது. தொழிற்சங்கங்கள், சமூக ஜனநாயக மற்றும் ஸ்ராலினிசக் கட்சிகள் மற்றும் ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து விட்டோடிய குட்டி-முதலாளித்துவ ஓடுகாலிகளின் பப்லோவாத பின்தோன்றல்களின் மத்தியில் உள்ள அவர்களது கூட்டாளிகள் ஆகியோருக்கு எதிரான ஒரு சர்வதேசக் கிளர்ச்சியாக இது அமைந்திருக்கிறது. மேற்குறிப்பிட்ட அரசியல் போக்குகளின் ஒரு மையமாகத் திகழும் பிரான்சிலேயே கூட, போர்க்குணமிக்க போராட்டமானது, அவற்றின் தந்திர உத்திகள் ஒன்றிலிருந்தோ, அல்லது அவற்றின் அதிருப்திக் கன்னைகள் ஏதேனும் ஒன்றில் இருந்தோ எழுந்திருக்கவில்லை, மாறாக முற்றிலும் அவற்றின் கட்டுப்பாட்டுக்கு வெளியிலிருந்தே எழுந்திருக்கிறது.

வர்க்கப் போராட்டத்தின் இந்த ஆரம்ப எழுச்சியானது தொழிலாளர்களை, “இடது” அரசியல் என்ற பேரில் கடந்து சென்ற போக்குகளில் நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கும் 1968 மாணவர் இயக்கத்திற்குப் பிந்தைய காலத்தில் வேர்கொண்ட நடுத்தர வர்க்கத்தின்வசதியான அடுக்குகளில் இருந்து பிரிக்கின்ற பெரும்பிளவை வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறது. பல வாரங்களுக்கு தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகளும், அரசிடம்-நிதியாதாரம் பெறும் கல்வியாளர்களும் நடுத்தர வர்க்க போலி-இடது ஊடகப் பண்டிதர்களும் இந்த ஆர்ப்பாட்டங்களைப் புறக்கணித்து சிற்சிறு பெண்ணியவாத #MeToo பேரணிகளில் தஞ்சமடைய விழைந்தனர் அல்லது வீட்டிலேயே முடங்கிக் கொண்டனர். பாலியல் வகை, இனம் மற்றும் வாழ்க்கைபாணி மீதான அவர்களின் கவனக்குவிப்பு வருவாய் ஏணியின் கீழேயிருக்ககூடிய 90 சதவீதம் பேர் மத்தியில் வெடித்திருந்த சமூக சமத்துவமின்மைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் எந்தப் பங்கும் வகிக்கவில்லை.

கீழிருந்தான ஒரு புரட்சிகர எழுச்சியை எண்ணி மிரண்டு போய், அவர்கள் “மஞ்சள் சீருடை”யாளர்களை எதிர்த்தனர். போராட்டங்களின் ஆரம்ப வாரங்களில் “மஞ்சள் சீருடை”யாளர்களுக்கு ஆதரவளிக்க அழைப்பு விடுத்த லாரிகள் மற்றும் துறைமுக வேலைநிறுத்தங்களை தொழிற்சங்கங்கள் முடிவுக்குக் கொண்டுவந்தன. “ஹிட்லரோ-ட்ரொட்ஸ்கிஸ்டுகள்” என்று இருபதாம் நூற்றாண்டில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் மீது பிரெஞ்சு ஸ்ராலினிஸ்டுகள் செய்த அசிங்கமான அவதூறுகளை எதிரொலிப்பதைப் போல, ஸ்ராலினிச தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பின் (CGT) தலைவரான பிலிப் மார்ட்டினேஸ் மீண்டும் மீண்டும் அவர்களை பாசிஸ்டுகள் என்று அவதூறு செய்தார், அவர்களது மஞ்சள் மேலுடைகளுக்குக் கீழே “மண்ணிறம்” (பாசிஸ்டுகளின் நிறம்-brown) ஒளிந்திருப்பதாக குறிப்பு காட்டினார். பப்லோவாத புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) போன்ற பல கட்சிகளும் அவரது கருத்துகளை எதிரொலித்தன. ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் (LFI) போன்ற குரோதத்தை குறைவாக வெளிப்படுத்திய கட்சிகளும் குறிப்பிடத்தக்க மாறுபட்ட பாத்திரம் எதனையும் ஆற்றவில்லை: 2017 ஜனாதிபதி தேர்தலில் 7 மில்லியன் வாக்குகளைப் பெற்றிருந்த போதிலும் LFI “மஞ்சள் சீருடை”யாளர்களுக்கு ஆதரவாய் ஒரேயொரு ஆர்ப்பாட்டத்தையும் கூட ஏற்பாடு செய்யவில்லை.

ஒரு சக்திவாய்ந்த போராட்டத்தை முன்நிறுத்த வேண்டுமாயின், தொழிலாளர்களும் இளைஞர்களும் தொழிற்சங்கங்கள் மற்றும் குட்டி முதலாளித்துவ போலி-இடது கட்சிகளில் இருந்து சுயாதீனமாக அணிதிரண்டாக வேண்டும் என்ற ஒரு அடிப்படையான புள்ளியை “மஞ்சள் சீருடை”யாளர்கள் எடுத்துக்காட்டியிருக்கின்றனர். எவ்வாறாயினும், முதல் சுயாதீனமான போராட்டங்களின் வெடிப்பானது, இந்த புதிய புரட்சிகர சகாப்தத்தில் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் முன்நிற்கின்ற அரசியல் பிரச்சினைகளை இன்னும் கூர்மையாக மேலுயர்த்தவே செய்திருக்கிறது. லியோன் ட்ரொட்ஸ்கி அவரது மகத்தான ரஷ்யப் புரட்சியின் வரலாறு என்ற நூலில் விளக்கினார்:

வெகுஜனங்கள் ஒரு புரட்சிக்குள் செல்லும்போது ஒரு நன்கு தயாரிக்கப்பட்ட சமூக மறுகட்டுமானத் திட்டத்துடன் செல்வதில்லை, மாறாக பழைய ஆட்சியினை அவர்கள் இனியும் சகித்துக் கொள்ள முடியாது என்ற ஒரு கூர்மையான உணர்வுடனேயே செல்கின்றனர். ஒரு வர்க்கத்தின் வழிநடத்தும் அடுக்குகள் மட்டுமே ஒரு அரசியல் வேலைத்திட்டத்தை கொண்டிருக்கின்றன, அதுவும் கூட இன்னும் நிகழ்வுகளால் சோதிக்கப்படுவதையும் வெகுஜனங்களால் ஏற்கப்படுவதையும் அவசியமாய் கொண்டிருக்கிறது. இவ்வாறாக புரட்சியின் அடிப்படையான அரசியல் நிகழ்ச்சிப்போக்கானது, சமூக நெருக்கடியில் இருந்து எழுகின்ற பிரச்சினைகளை ஒரு வர்க்கம் படிப்படியாக புரிந்துகொள்வதில், வெற்றிகரமான மதிப்பீட்டு முறையின் மூலமாக வெகுஜனங்கள் செயலூக்கத்துடன் நோக்குநிலை கொள்ளப்படுவதில் அடங்கியிருக்கிறது.

இந்த நிகழ்ச்சிப்போக்கின் ஆரம்ப கட்டங்களில்தான் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. ஸ்தாபகக் கட்சிகள் அல்லது தொழிற்சங்கங்களிடம் விண்ணப்பம் செய்வது அர்த்தமற்றது, ஏனென்றால் அவை எந்தப் போராட்டத்தையும் விலைபேசவும் முடித்து விடவுமே செய்யும் என்ற முடிவுக்கு நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களும் வறுமைப்பட்ட நடுத்தர வர்க்க மக்களும் வந்திருந்தனர். முன்பு வேறுபட்ட ஒவ்வொரு கட்சிகளுக்கும் வாக்களித்து வந்திருந்த பின்னர், அவர்கள் மக்ரோனுக்கு எதிரான புரட்சிக்கான அழைப்புகளின் பின்னால் ஒன்றுபட்டனர். ஆயினும் இந்த முதல் ஒன்றுதிரளலில், முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமலேயே தொடர்கின்றன. மக்ரோனை எவ்வாறு பதிலீடு செய்வது என்ற கேள்வியில் அங்கே உடன்பாடு இருக்கவில்லை. சில “மஞ்சள் சீருடையினர்” பிளவுபடுத்தக் கூடியது எனக்கூறி அரசியல் குறித்த எந்த விவாதத்தையும் மறுத்தனர், அல்லது சோசலிசத்தை, பிரான்சின் பெருவணிக சோசலிஸ்ட் கட்சியின் (PS) மதிப்பிழந்த குட்டி-முதலாளித்துவ சுற்றுவட்டத்தின் கொள்கை என்று கூறி நிராகரித்தனர். மக்ரோன் நிறைவேற்றித் தரக்கூடிய கோரிக்கைகளை சூத்திரப்படுத்துமாறு ஊடகங்களில் இருந்து இடைவிடாத அழைப்புகளுக்கு முகம்கொடுத்த நிலையில், இவர்கள், அதிகாரத்தை மக்களுக்கு மாற்ற அழைப்பு விடுத்து, மெலோன்சோன் ஆரம்பத்தில் ஆலோசனையளித்தவாறாக சுவிஸ் நாட்டின் மாதிரியிலான குடிமக்கள்-முன்முயற்சி கருத்துவாக்கெடுப்பு (référendum d'initiative citoyenne - RIC) போன்ற சுலோகங்களை முன்னெடுத்தனர்.

ஆயினும், பிரெஞ்சு நாடாளுமன்ற ஜனநாயகத்தை சீர்திருத்தும் முயற்சிகள் தோல்வியடைந்திருக்கின்றன. தேசிய சட்டமன்றம் RIC ஐ நிறைவேற்ற மறுக்கிறது, போர்க்குணமிக்க போராட்டமானது அரசு அதன் ஒடுக்குமுறையை அதிகப்படுத்துவதில் உறுதிகாணச் செய்திருக்கிறது. தொழிலாளர்கள் மத்தியில் தமக்கிருக்கும் பரந்த ஆதரவை அணிதிரட்டுவதே முன்னோக்கிய பாதை என்பதை பல “மஞ்சள் சீருடை”யாளர்களும் உணர்கின்றனர். ஆனால், தொழிலாளர்கள் “மஞ்சள் சீருடை”யாளர்கள் மீது எத்தனை அனுதாபம் காட்டுகின்ற போதிலும், மக்ரோன் ஆட்சி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலகின் நிதிச் சந்தைகளுக்கு எதிரான ஒரு புரட்சிகர மோதலாக இருக்கப்போகும் ஒன்றுக்கு அடிப்படையாக இருக்கமுடியும் என்று அவர்கள் RIC போன்ற சுலோகங்களை காண்பதில்லை.

பிரான்சில் சோசலிச சமத்துவக் கட்சி முன்வைக்கும் முன்னோக்குகளை நோக்கித் திரும்பியாக வேண்டும். அது ”மஞ்சள் சீருடை”யினரை சமரசமற்றுப் பாதுகாத்து வந்திருக்கிறது, அவர்களின் மீதான அரசின் ஒடுக்குமுறையையும்,ஊடகங்களும் போலி-இடதுகள் உள்ளிட்ட முக்கிய கட்சிகளும் அவர்கள் மீது செய்த அவதூறுகளையும் எதிர்த்து வந்திருக்கிறது. தொழிலாளர்கள், அரசியல் அதிகாரத்திற்கான போராட்டத்திற்குரிய ட்ரொட்ஸ்கிச முன்னோக்கின் அடித்தளத்தில், பிரான்சிலும் சர்வதேச அளவிலும் சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்புவதற்கும், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர முன்னணிப் படையாக ICFI ஐக் கட்டியெழுப்புவதற்கும் உள்ள அவசியத்தை அது வலியுறுத்தி வந்திருக்கிறது. தொழிலாள வர்க்கம் முகம்கொடுக்கும் மாற்று சீர்திருத்தமா அல்லது புரட்சியா என்பதல்ல, மாறாக புரட்சியா அல்லது எதிர்ப்புரட்சியா என்பதாகும் என்பதை அன்றாட நிகழ்வுகள் ஊர்ஜிதம் செய்கின்றன. பொருளாதாரத்தைக் கட்டுப்பாட்டில் எடுப்பதற்கும் நிதி பிரபுத்துவத்தை பறிமுதல் செய்வதற்கும் அரசு அதிகாரத்தைக் கையிலெடுப்பதற்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் முழுமையான தொழிற்துறை மற்றும் பொருளாதார சக்தியை அணிதிரட்டுவதே தொழிலாளர்களது வாழ்க்கைத் தரங்கள் மீதான தாக்குதல்களைத் தடுத்துநிறுத்துவதற்கு இருக்கின்ற ஒரே வழியாகும்.

நிதியப் பிரபுத்துவத்தின் சர்வாதிகாரத்தை நோக்கிய முனைப்பு

சிக்கன நடவடிக்கைகளும் இராணுவ-போலிஸ் ஒடுக்குமுறைக் கொள்கைகளும் உலக முதலாளித்துவத்தின் ஒரு புறநிலையான, வரலாற்று நெருக்கடியில் வேரூன்றியிருக்கின்றன. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பிந்தைய காலமானது, ஒவ்வொரு நாட்டிலும் ஒரு சிறு நிதிய பிரபுத்துவம் வெறுப்பூட்டும் விதத்தில் தன்னை வளப்படுத்திக் கொண்டதை மட்டும் காணவில்லை. பொருளாதார உலகமயமாக்கமானது, இருபதாம் நூற்றாண்டில் உலகப் போருக்கும் பாசிச சர்வாதிகாரத்திற்கும் மட்டுமல்லாது சோசலிசப் புரட்சிக்கும் கூட இட்டுச் சென்ற முதலாளித்துவத்தின் முரண்பாடுகளான உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலானதும், மற்றும் சமூகமயமாக்கப்பட்ட உற்பத்திக்கும் தனியார் இலாபத்திரட்சிக்கும் இடையிலானதை பரந்த அளவில் தீவிரப்படுத்தியிருக்கிறது.

சோவியத் ஒன்றியத்தால் முன்நிறுத்தப்பட்ட அரசியல்-இராணுவ தடைகளில் இருந்து விடுபட்ட நிலையில், நேட்டோ சக்திகள் ஈராக், பால்கன்கள், ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா, மாலி மற்றும் அவற்றைத் தாண்டி படையெடுத்து, ஆசியா மற்றும் ஆபிரிக்காவின் மூலோபாய, எண்ணெய் வளமிக்க பகுதிகளைச் சூறையாடின. மில்லியன் கணக்கான உயிர்களைப் பலி கொண்டிருக்கும் இந்த ஏகாதிபத்திய போர் முனைப்பானது சமூக சமத்துவமின்மை, பொருளாதார ஸ்திரமின்மை மற்றும் நிதி நெருக்கடிகளை தீவிரப்படுத்தியிருக்கும் ஊதியங்கள் மற்றும் சமூக நிலைமைகள் மீதான தாக்குதல்களுடன் கைகோர்த்து நடந்தேறியிருக்கிறது. வங்கிகளின் குற்றவியல்தனமான ஊகவணிகத்தால் உருவாக்கப்பட்ட 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவானது, ஒட்டுமொத்த உலக நிதி அமைப்புமுறையையும் கிட்டத்தட்ட நிலைகுலைந்து வீழச் செய்துள்ளது.

சிக்கன நடவடிக்கைகள் மூலமும் இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜேர்மனி சோவியத்தினால் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் ஐரோப்பியத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சமூக சலுகைகளில் எஞ்சியிருப்பவற்றை இலக்குவைத்தும் திரட்டப்பட்ட நிதியாதாரத்தைக் கொண்டு, பெரும் செல்வந்தர்களது பைகளுக்குள்ளாக டிரில்லியன் கணக்கான யூரோக்களை பாய்ச்சுவதன் மூலமாக ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் இதற்கு பதிலிறுப்பு செய்தன. சகலருக்குமான சுகாதாரப் பராமரிப்புத் திட்டம், இலவச பொதுக் கல்வி மற்றும் தன்னிஷ்டப்படியான வேலைநீக்கங்களில் இருந்து பாதுகாப்புகள் ஆகியவற்றின் மீதான பரந்த தாக்குதல்களை அவை தள்ளித்திணித்தன. கிரீஸ் மீது ஐரோப்பிய ஒன்றியம் நடத்திய தசாப்த கால சூறையாடலில் இது உச்சம் கண்டது, இது சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவம் மீட்சி செய்யப்பட்டதற்குப் பிந்தைய காலத்தில் ஐரோப்பாவின் மிக ஆழ்ந்த மந்தநிலைக்குள் அந்நாட்டை மூழ்கடித்தது. சமூகத் துன்பங்கள் மிகப் பரந்த அளவில் வளர்ந்து செல்வதன் மத்தியில், பிரான்சின் பில்லியனர்களின் செல்வம் 2008க்குப் பின்னர் மும்மடங்காகியிருக்கிறது, அதேவேளையில் மக்ரோன் பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய ஒன்றிய போர் எந்திரத்தைக் கட்டியெழுப்புவதில் நூறு பில்லியன் கணக்கான யூரோக்களைக் கொட்டுகிறார், அத்துடன் இன்னும் பெரும் போர்களுக்கு தயாரிப்பு செய்வதற்காக அனைவருக்குமான கட்டாய இராணுவ சேவை திட்டத்தை படிப்படியாக மீட்சி செய்கிறார்.

தொழிலாள வர்க்கத்தில் கோபம் மற்றும் போர்க்குணம் பெருகிச் செல்வதற்கு முகம் கொடுக்கும் நிலையில், இத்தகைய கொள்கைகளைத் தொடர்ந்து திணிப்பதற்கு எதேச்சாதிகார-பாசிச ஆட்சி வடிவங்களை நோக்கித் திரும்புவது அவசியமாயுள்ளது என்பதை ஆளும் வர்க்கத்தின் மூலோபாயவாதிகள் நன்கறிவர். 2013 இல் யூரோ நெருக்கடியின் சமயத்தில், ஜேபி மோர்கன் வங்கி, ஐரோப்பாவின் தெற்கு “சுற்றுவட்ட”த்தை மீள்கட்டமைப்பு செய்யும் பொருட்டு அழிக்க நம்பிக்கை கொண்டிருந்த முட்டுக்கட்டைகளை ஒரு குறிப்பில் விவாதித்தது. அது பின்வருமாறு எழுதியது:

அரசியல்சட்டங்கள், பாசிசம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் இடது-சாரி கட்சிகளால் ஈட்டப்பட்ட அரசியல் வலிமையைப் பிரதிபலிக்கின்ற விதத்தில், ஒரு வலுவான சோசலிசத் தாக்கத்தை காட்ட விழைகின்றன... சுற்றுவட்டத்தைச் சுற்றிய அரசியல் அமைப்புமுறைகள் பொதுவாக பின்வரும் அம்சங்களில் பலவற்றை வெளிப்படுத்துகின்றன: பிராந்தியங்கள் தொடர்பாக பலவீனமான மைய அரசுகள்; தொழிலாளர் உரிமைகளின் அரசியல்சட்ட பாதுகாப்பு; பொருளுதவி மூலமாக வாக்கு பெறும் முறையை (political clientelism) வளர்த்தெடுக்கும் கருத்தொருமிப்பு காட்டுகின்ற முறைகள்; மற்றும் உள்ளபடியான அரசியல் நிலையில் வரவேற்கத்தகாத மாற்றங்கள் செய்யப்படுகின்றபோது ஆட்சேபிப்பதற்கான உரிமை. இந்த அரசியல் மரபின் பலவீனங்கள் இந்நெருக்கடியின் மூலமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தைப் பொறுத்தவரை, இப்போதைய நெருக்கடியானது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தொழிலாள வர்க்கத்திற்கு செய்யப்பட்ட ஜனநாயக விட்டுக்கொடுப்புகளது முடிவைக் குறிக்கிறது. அந்த சமயத்தில், போர், பாசிச ஒடுக்குமுறை மற்றும் யூதப் படுகொலையில் பத்து மில்லியன் கணக்கானோர் இறந்ததில் ஐரோப்பிய முதலாளித்துவம் மதிப்பிழந்து போயிருந்தது. பிரான்சில் முதலாளித்துவம் காப்பாற்றப்படுவதை நியாயப்படுத்துவதற்கு, ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF), சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் தளபதி சார்ல்ஸ் டு கோலினை பின்பற்றி செயல்பட்ட முதலாளித்துவ வர்க்கத்தினர் ஆகியோர் தேசிய எதிர்ப்பு கவுன்சிலில் (Conseil national de la résistance - CNR) ஒன்றுபட்டு நின்று, “மிகப்பெரும் பொருளாதார மற்றும் நிதியப் பிரபுத்துவங்களை பொருளாதாரத்தில் அவற்றின் உத்தரவிடும் பாத்திரத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு” நடவடிக்கையெடுக்க வாக்குறுதியளித்தனர். அவர்கள் பல தொழிற்துறைகளை தேசியமயமாக்கினர், சமூக பாதுகாப்பு, சுகாதார மற்றும் ஓய்வூதிய முறைகளை உருவாக்கினர், அத்துடன் நாஜிக்களின் கீழ் வர்க்கப் போராட்டம் சட்டவிரோதமாக்கப்பட்ட நிலை இனியொரு போதும் திரும்பாது என்பதற்கான உறுதிப்பாடாக வேலைநிறுத்தம் செய்வதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதற்குமான உரிமையை பிரான்சின் அரசியல்சட்டத்தில் எழுதினர். இதேபோன்ற ஏற்பாடுகள் இத்தாலியிலும், அதன்பின் முதலாளித்துவ ஐரோப்பாவின் பெரும்பகுதியிலும் கூட ஏற்றுக்கொள்ளப்பட்டன.

எழுபத்தியைந்து ஆண்டுகளின் பின்னர், இந்த அரசியல் அமைப்புமுறையில் எஞ்சியிருக்கும் அனைத்தும் வீழ்ந்து கொண்டிருக்கிறது. 1968 பொது வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் பிரெஞ்சு “இடது” எனக் கூறி கடந்து வந்திருக்கக் கூடியதில் மேலாதிக்கம் செய்து வந்திருந்த, பிரான்சின் பெரு-வணிக சோசலிஸ்ட் கட்சி (PS) போன்ற ஐரோப்பாவின் சமூக-ஜனநாயகக் கட்சிகள், பல தசாப்த கால சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போரின் காரணத்தால் வர்க்கக் கோபம் பெருகிவருவதன் மத்தியில் சிதறிக் கொண்டிருக்கின்றன. வர்க்கப் போராட்டத்தில் ஒரு புதிய கட்டம் எழுந்திருக்கிறது. என்றென்றைக்கும் தாங்கிப்பிடிக்க வாக்குறுதியளித்திருந்த உரிமைகள் கிழித்தெறியப்படுகின்ற நிலையில், முதலாளித்துவ வர்க்கம் பாசிச ஆட்சிகளை மீண்டும் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறது.

ஐரோப்பாவெங்கிலும் இதே கொள்கைதான் பின்பற்றப்படுகிறது என்ற உண்மையானது, மக்ரோன் போன்ற தனிப்பட்ட அரசியல்வாதிகளின் தனிமனித பிடிவாதத்தில் அது வேரூன்றியிருக்கவில்லை, மாறாக புறநிலையான வர்க்க நலன்களில் வேரூன்றியிருக்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஜேர்மனியில், அத்தனை பிரதான முதலாளித்துவக் கட்சிகளும், சிக்கன நடவடிக்கைகள் போன்ற மக்கள்விரோதக் கொள்கைகளை நியாயப்படுத்துவது மற்றும் ஜேர்மன் வெளியுறவுக் கொள்கையை மீண்டும் இராணுவமயமாக்குவது ஆகிய நோக்கங்களுடன் ஹிட்லரின் குற்றங்களை அவை மூடிமறைத்து, ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி போன்ற அதி-வலது தீவிரவாத பேராசிரியர்களுக்கு மறைப்பையும் வழங்குகின்றன. அதேவேளையில், நவ-பாசிச ஜேர்மனிக்கான மாற்று (AfD) ஜேர்மன் நாடாளுமன்றத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மேலுயர்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஸ்பெயினில், 2017 கட்டலான் சுதந்திர கருத்துவாக்கெடுப்பின் மீதான மாட்ரிட்டின் அடக்குமுறைக்குப் பின்னர், இராணுவமும் போலிசும் Vox கட்சியை –இக்கட்சி ஒரு ஆட்சிக்கவிழ்ப்பையும் 1936-1939 ஸ்பானிய உள்நாட்டுப் போரையும் தொடக்கிய பாசிச இராணுவத்தைப் பாராட்டுகிறது- ஊக்குவித்து வருகின்றன. மார்க்சிசக் கட்சிகளை தடைசெய்வதற்கும் Vox கட்சி அழைப்பு விடுக்கிறது. இத்தாலியின் அதி-வலது அதிகாரம்படைத்தவரான, உள்துறை அமைச்சர் மத்தேயோ சல்வீனி, பாசிச சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியைப் புகழ்கிறார். ”மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்கள் மீது ஒடுக்குமுறையை நடத்திய வேளையில், மக்ரோன், பிரான்சின் நாஜி-ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சி சர்வாதிகாரியான, துரோககுற்றம் உறுதிசெய்யப்பட்டவரும் வெகுஜனப் படுகொலையாளருமான பிலிப் பெத்தானை ஒரு மாபெரும் சிப்பாய் என்று கூறிப் புகழ்ந்தார்.

ஐரோப்பிய மற்றும் உலக அரசியலில் நிகழும் இத்தகைய அடித்தளத்திலான மாற்றங்களில் இருந்து பெறக் கூடிய முடிவுகள், வரலாற்று முன்னோக்கின் வழியிலேயே வரையப்படக் கூடியதாகும். பிரெஞ்சு ஊடகங்களில் பெரும்பாலானவை கூறுவதைப் போல, இடதுகளும் சோசலிசமும் மரித்து விடவில்லை. மாறாக, முதலாளித்துவத்தின் கீழான ஒரு தேசியக் கட்டமைப்பின் கீழ் “பொருளாதார மற்றும் நிதியப் பிரபுத்துவங்களது” அதிகாரத்தைக் குறைக்க CNR அளித்த வாக்குறுதிகள் பொய்யாக நிரூபணமாகியிருப்பதுடன், பல தசாப்தங்களுக்கு உத்தியோகபூர்வ பிரெஞ்சு அரசியலுக்கான கட்டுருவை வழங்கிய CNR இன் ஸ்ராலினிச, சமூக ஜனநாயக மற்றும் கோலிச போக்குகள் அனைத்தும் திவாலடைந்திருக்கின்றன. இன்று, ஒரு உலகளாவிய நிதியப் பிரபுத்துவம் மீண்டும் எழுந்திருக்கிறது. அது தனது ஆபாச செல்வத்திற்குத் தீனி போடுவதற்காக தொழிலாள வர்க்கத்தினால் உருவாக்கப்பட்ட சமூக செல்வம் அத்தனையையும் விழுங்கிக் கொண்டிருப்பதுடன் மட்டுமல்லாது, இருபத்தியோராம் நூற்றாண்டில் எதேச்சாதிகார ஆட்சிகளைக் கட்டியெழுப்பும் பொருட்டு இருபதாம் நூற்றாண்டின் பாசிசக் குற்றவாளிகளுக்கு மறுவாழ்வும் அளித்துக் கொண்டிருக்கிறது.

உத்தியோகபூர்வ ஐரோப்பிய அரசியலின் இந்த சிதைவுக்கான வரலாற்று மாற்றாக எழுந்து நிற்கும் மாபெரும் உருவாக லியோன் ட்ரொட்ஸ்கி இருக்கிறார். அக்டோபர் புரட்சியில் லெனினின் இணைத்தலைவராக இருந்தவரும் ஸ்ராலினின் கீழ் சோவியத் அதிகாரத்துவம் தேசியவாதச் சீரழிவு கண்டதற்கு எதிராக நான்காம் அகிலத்தை ஸ்தாபித்தவருமான லியோன் ட்ரொட்ஸ்கி, சோவியத் ஒன்றியத்திற்குள்ளாக ஸ்ராலினிசத்தின் எதிர்ப்புரட்சிகரப் பாத்திரத்தைக் குறித்து சரியாக எச்சரித்ததுடன் மட்டும் நின்றுவிடவில்லை. ஸ்ராலினிசத்திற்கு எதிராய் உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்தை அவர் பாதுகாத்து போராடியதானது, 1940 ஆகஸ்ட் 21 அன்று ஒரு ஸ்ராலினிசப் படுகொலையாளரால் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதற்கு நெடுங்காலத்திற்குப் பின்னரும், தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு மார்க்சிச சர்வதேசிய முன்னோக்கினை இப்போதும் வழங்குகின்றது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தில் அப்போது செல்வாக்கான கட்சியாக இருந்த PCF உள்ளிட, ஐரோப்பாவில் சோசலிசப் புரட்சிக்கு முட்டுக்கட்டை போட்டுவந்த ஸ்ராலினிசக் கட்சிகள் அத்தனையையும் ட்ரொட்ஸ்கிச இயக்கம் மட்டுமே எதிர்த்து நின்றது. ஸ்ராலின், போருக்கு முன்பாக ட்ரொட்ஸ்கியின் படுகொலைக்கும், உயிர்வாழ்ந்து வந்த பழைய போல்ஷிவிக்குகள் மாஸ்கோ விசாரணை இட்டுக்கட்டல்களில் கொலை செய்யப்படுவதற்கும், மாபெரும் களையெடுப்புகளில் சோவியத் ஒன்றியத்தில் இருந்த மார்க்சிஸ்டுகள் அரசியல் படுகொலை செய்யப்படுவதற்கும் உத்தரவிட்டிருந்தார். போர் முடிந்த நிலையில், ஸ்ராலின், தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கையிலெடுக்காது என்பதில் PCF உள்ளிட்ட ஐரோப்பாவின் ஸ்ராலினிசக் கட்சிகளின் தலைவர்களுடன் உடன்பாடு கண்டார். எதிர்ப்புப் போராளிப்படைகள் மற்றும் தொழிற்சாலை கமிட்டிகள் உள்ளிட பாசிசத்திற்கு எதிரான கிளர்ச்சிகளது மத்தியில் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் எழுந்திருந்த தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் சுயாதீனமான அமைப்புகளை ஸ்ராலினிஸ்டுகள் சிதறடிப்பதை –ஸ்ராலினிசக் கட்சிகள் அவற்றை நிராயுதபாணியாக்கின கலைத்து விட்டன- ட்ரொட்ஸ்கிஸ்டுகள் எதிர்த்தனர். CNR இன் வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட பிரான்சின் 1946 அரசியலமைப்பு சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதையும் நான்காம் அகிலம் எதிர்த்தது, ஒரு முதலாளித்துவக் குடியரசானது தொழிலாளர்கள் அதன்மேல் வைக்க ஊக்குவிக்கப்படுகின்ற நம்பிக்கைகளுக்குத் துரோகம் செய்ய தவிர்க்கவியலாமல் தள்ளப்படும் என்று அது சரியானவிதத்தில் எச்சரித்தது.

இந்தோசீனா மற்றும் அல்ஜீரியாவிலான இரத்தக்களரியான பிரெஞ்சு காலனித்துவப் போர்களாலும், அதன்பின் 1968 மே—ஜூன் பொதுவேலை நிறுத்தத்தை PCF விலைபேசி அச்சமயத்தில் அது அதிகாரத்தைக் கையிலெடுக்க மறுத்ததிலும் நிரூபணம் பெற்ற இந்த வரலாற்று மதிப்பீடு, இன்று ஐரோப்பாவெங்கிலும் எதேச்சாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கி முதலாளித்துவ வர்க்கம் திரும்புவதன் மூலம் சரியென நிரூபணமாகியிருக்கிறது.

“மஞ்சள் சீருடை” இயக்கமானது ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து ஓடிய குட்டி-முதலாளித்துவ பப்லோவாத ஓடுகாலிகளுக்கு எதிராய் ICFI நடத்திய போராட்டத்தின் வரலாற்று முக்கியத்துவத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறது. பப்லோவாத NPA முன்னாள் 1968 மாணவர் இயக்கத்தினரால் தலைமை கொடுக்கப்படுகிறது, இவர்கள் 1953 இல் அக்காலத்தின் வெகுஜன ஸ்ராலினிச மற்றும் முதலாளித்துவ தேசியக் கட்சிகள் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் தலைமையாக நான்காம் அகிலத்தின் இடத்தில் பதிலிடத்தக்கவை என்றும் ஆகவே நான்காம் அகிலம் அக்கட்சிகளுக்குள் தன்னை கலைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறி நான்காம் அகிலத்தில் இருந்து உடைந்து சென்ற மிஷேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேல் ஆகியோரால் தலைமை கொடுக்கப்பட்ட குட்டி-முதலாளித்துவப் போக்கின் பின்னால் அணிதிரண்டவர்களாவர். பப்லோவாதிகள் இவ்வாறாக, ஸ்ராலினிஸ்டுகளின் உதவியுடன் உருவாக்கப்பட்டிருந்த மேற்கு ஐரோப்பாவிலான போருக்குப் பிந்தைய முதலாளித்துவ அமைவுக்கு தகவமைத்துக் கொண்டு விட்டிருந்தனர். NPA இன் மறைந்த தலைவரும் 1968 இல் மாணவர் தலைவராக இருந்தவருமான டானியல் பென்சாயிட் தனது ட்ரொட்ஸ்கிசம் என்ற புத்தகத்தில் ICFI உடனான பப்லோவாதிகளின் உடைவை பின்வருமாறு விளக்கினார்: “1940களின் முடிவுவாக்கில், நான்காம் அகிலம் என்ன நிலைமைகளில் உருவாக்கம் கண்டிருந்ததோ அந்த நிலைமைகள் கணிசமாக மாறியிருந்தன. அதன் வேலைத்திட்டம் மறுவரையறை செய்யப்பட வேண்டியதாயிருந்தது. பப்லோ இந்த புதுப்பிப்பை முன்னெடுக்கும் துணிச்சல் பெற்றிருந்தார்... 1950களில் ஏற்கனவே ஒருவர் எவ்வாறு பெண் விடுதலை, சுய-மேலாண்மை மற்றும் ஜனநாயக சோசலிசம் குறித்த பிரச்சினைகளை துணிந்த முகத்துடன் எழுப்ப முடிந்தது என்பதை பப்லோ புரிந்திருந்தார்.” அதாவது, ICFI இன் ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தை கலைத்து விட்டு, மேற்கு ஐரோப்பாவின் போருக்குப் பிந்தைய முதலாளித்துவ ஆட்சிக்குள் ஒன்றுகலந்து விட்டிருந்த வசதியான சமூக அடுக்குகள் மத்தியில் பிரபலமாக இருந்த கருத்தாக்கங்களைக் கொண்டு அதனை பதிலிடுவதற்கு பப்லோ ஆலோசனை அளித்தார்.

1968 முதலான அரை நூற்றாண்டு காலமாய் “இடது” எனக்கூறி கடந்து வந்திருக்கும் இந்த வகையான வாழ்க்கைபாணி மற்றும் அடையாள அரசியல் வகைக்கு எதிரான ஒரு கிளர்ச்சியிலேயே “மஞ்சள் சீருடை” போராட்டங்கள் எழுந்திருந்தன. PES ஆல் பாதுகாக்கப்படுகின்ற ட்ரொட்ஸ்கிசம் மற்றும் செவ்வியல் மார்க்சிசத்திற்கான நவீன மாற்றாகவும், கூடுதல் ஜனநாயகப்பட்டதாகவும் அதன் நடிப்புகள் மோசடியானவை என நிரூபிக்கப்பட்டுள்ளன. மாறாய், இந்த அரசியலை தங்களுக்கு அடித்தளமாகக் கொள்ளும் கட்சிகள், முதலாளித்துவம் மீண்டும் பாசிச ஆட்சியை நோக்கியும் உலகப் போரை நோக்கிய முனைப்பை நோக்கியும் திரும்புகின்ற நேரத்திலும், அதற்கு தங்களை தகவமைத்துக் கொள்கின்றன.

”மஞ்சள் சீருடை”களும் போலி-இடதுகளின் திவால்நிலையும்

NPA உம் மற்றும் சர்வதேச அளவில் அதைப்போன்றுள்ள கட்சிகளும் இடது-சாரிகளும் அல்ல “அதி இடது”களும் அல்ல, மாறாக வசதியான குட்டி முதலாளித்துவத் தட்டை அடிப்படையாகக் கொண்ட போலி-இடது, மார்க்சிச-விரோத கட்சிகளாகும், தொழிலாளர்களுக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு வர்க்கப் பிளவு பிரித்து நிற்கிறது என்ற ICFI இன் பகுப்பாய்வை “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களின் வரலாறு ஊர்ஜிதம் செய்திருக்கிறது. ஐரோப்பாவெங்கிலும் சர்வாதிகாரத்தை நோக்கியதொரு திருப்பம் நடந்துவருகின்ற வேளையிலும், இக்கட்சிகள், அரை நூற்றாண்டு காலத்தின் பின்னர் பிரான்சில் உண்டாகியிருக்கும் வர்க்கப் போராட்டத்தின் மாபெரும் எழுச்சிக்கு வெறுப்புணர்வைக் கொண்டும் எச்சரிக்கைத்தனத்தைக் கொண்டும் பதிலிறுத்திருக்கின்றன. ஆர்ப்பாட்டங்களது ஆரம்ப வாரங்களில், ஸ்ராலினிஸ்டுகளும் பப்லோவாதிகளும் “மஞ்சள் சீருடை”யாளர்கள் மீதான தங்களது குரோதத்தை மறைப்பதற்கு அலட்டிக் கொள்ளவில்லை, அவர்களை பெரு வணிகங்களது பாசிச முகவர்கள் எனக்கூறி கண்டனம் செய்தனர். ஸ்ராலினிச CGT மஞ்சள் சீருடையாளர்களை, “குடிமக்கள் மற்றும் தொழிலாளர்களது கோபங்களை, அதிவலதுகள் மற்றும் சாலைப் போக்குவரத்து நலன்களுக்காக சூழ்ச்சித்தனமாக கையாளுகின்றனர்” என்று அழைத்த வேளையில், NPA அவர்கள் மீது ஆவேசமாகத் தாக்கியது. அது எழுதியது:

CGT மற்றும் Solidarity தொழிற்சங்கங்களைப் போலவே, நாமும் நவம்பர் 17 சனிக்கிழமை அன்றான கோபத்தை அதிவலதினால் சுரண்டப்படுகின்ற எஜமானர்களின் தந்திரவேலைகளுடன் ஒன்றுகலக்கப் போவதில்லை – அது ஒரு தற்காலிகக் கூட்டாளியாக அல்ல, மாறாக ஒரு மரண எதிரியாகவே தொடர்ந்து இருக்கிறது. உண்மை தான், ஊதியங்களைத் தவிர்த்து எல்லாமே உயர்ந்து போய்க் கொண்டிருக்கிறது, கீழ் வர்க்கங்கள் எரிபொருள் மற்றும் பொதுவான விலையேற்றத்தினால் வெறுப்படைந்து களைத்துப் போயுள்ளனர் என்பதும் சரியே... ஆனால் நவம்பர் 17 சனிக்கிழமை விடயத்தில், அதி வலது கும்பல்களாகத் தென்படக் கூடிய, குடிமக்கள் திரள்வுகளாகச் சொல்லப்படுவனவற்றின் நடவடிக்கைகளுக்கு நாம் இதைக் கூற முடியாது – அங்கு நாம் தொழிலாளர் இயக்கத்தின் மரணகரமான எதிரிகளுடன் சேர்ந்து நின்றிருப்போம்.

NPA மற்றும் “இடது” தொழிற்சங்கங்களாக சொல்லப்படுவனவற்றின் அறிக்கைகள் நினைவில் நிறுத்தி வைப்பதற்கு தகுதிபடைத்தவையாகும். பாலினம், வாழ்க்கைப்பாணி மற்றும் இன அடையாளத்தை அடிப்படையாகக் கொண்ட பின்நவீனத்துவவாத அரசியலின் மீது கவனம்குவிக்கின்ற போலி-இடதுகளை உருவாக்கும் வசதிகொண்ட சமூக சக்திகளது வர்க்க உளவியலை அவை மிகத் தெளிவாக சித்திரப்படுத்திக் காட்டுகின்றன. “கீழ் வர்க்கங்களுக்கு” கூடுதல் சமூக சமத்துவத்திற்கான கோரிக்கைகளுக்கு முகம்கொடுத்த நிலையில் அவை, ”தொழிலாளர்களது இயக்க”த்தின் பேரில், அதாவது பிரான்சின் அரசு-மானிய உதவி பெறும் தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் வசதியான நடுத்தர வர்க்கத்தின் பேரில், அந்த “கீழ் வர்க்க”ங்களை, அதாவது தொழிலாளர்களை, பாசிஸ்டுகள் என்று கூறி கண்டனம் செய்கின்றன.

NPA இன் அறிக்கை ஒரு ஆதாரமற்ற அவதூறாய் இருந்தது. “மஞ்சள் சீருடை”யினர் சமூகரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் பல்தரப்பட்டவர்களாய் இருந்தனர், வறுமைப்பட்ட நடுத்தர வர்க்கம் மற்றும் சுயதொழில் செய்பவர்கள், சிறு வருவாய் அல்லது ஓய்வூதியங்களில் வாழ்ந்து வருவோர், அத்துடன் தொழிலாளர்கள் ஆகியோரும் இவர்களில் இடம்பெற்றிருந்தனர். நவ-பாசிஸ்டுகள் உள்ளிட பிரான்சின் பெரும் தேர்தல் கட்சிகள் அத்தனையின் வாக்காளர்களுமே இவர்களில் இடம்பெற்றிருக்கின்றனர். “மஞ்சள் சீருடை” தொழிலாளர்களுடன் பங்குபற்றும் நடுத்தர வர்க்க போராட்டக்காரர்களின் நியாயமான கோரிக்கைகளைப் புரிந்து கொள்கின்றனர், ஆகவே குறைந்தபட்ச ஊதியத்திலான சிறு அதிகரிப்புகள் போன்ற ஒரு சில ஊக்க அம்சங்களை தொழிலாளர்களுக்கு வழங்கி ஆர்ப்பாட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் மக்ரோனின் முயற்சிகளை அவர்கள் நிராகரித்திருக்கின்றனர்.

பிரான்சில் கணிசமான நவ-பாசிச வாக்குகள் தீவிரமான அபாயங்களுக்கு அறிகுறி காட்டுகிறது என்பதில் சந்தேகமில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த ஐரோப்பியத் தேர்தல்களில், பிரெஞ்சு வாக்காளர்களில் 23 சதவீதம் பேர் நவ-பாசிஸ்டுகளது பட்டியலை தெரிந்தெடுத்தனர், ஓரளவுக்கு “இடது” கட்சிகள் அனைத்துமே ஆளும் வர்க்கத்தின் கருவிகளாக சரியாக கண்டுகொள்ளப்பட்ட நிலைமைகளின் கீழ், மக்ரோனுக்கு எதிரான ஒரு எதிர்ப்பு வாக்காகவே பிரதானமாய் இது அமைந்திருந்தது. பிரான்சில், குறிப்பாக தொழிலாள வர்க்கத்தில், PCF மற்றும் அதன்பின் PS என, அதிகாரத்தில் அமர்ந்தவுடன் சிக்கன நடவடிக்கைகளைத் திணித்த, ஏகாதிபத்தியப் போர்களை நடத்திய, மற்றும் புலம்பெயர்-விரோத மற்றும் முஸ்லீம்-விரோத கொள்கைகளை ஊக்குவித்த கட்சிகளில் பல தசாப்தங்களாக நம்பிக்கை வைத்ததன் பின்னர் உண்டாகியிருக்கும் சக்திவாய்ந்த தேசியவாத அழுத்தங்கள் மற்றும் அரசியல் குழப்பங்களை இது பிரதிபலிக்கிறது.

பிரான்சில் ஒரு பாசிச ஆட்சியை அமர்த்துவதற்கான தயாரிப்புகள் மிகவும் முன்னேறிய கட்டத்தில் இருக்கின்றன. என்றபோதும், மக்ரோன் “மஞ்சள் சீருடை”யினருக்கு எதிராக ஒரு குருதிகொட்டும் ஒடுக்குமுறையை நடத்திக் கொண்டிருக்கும் வேளையில், பாரிய படுகொலையாளரான பிலிப் பெத்தானை புகழ்வது உட்பட, ஐரோப்பாவெங்கிலும் பாசிஸ்டுகளுக்கு உத்தியோகபூர்வ மறுவாழ்வு கொடுக்கப்படுவது என்பது, நவ-பாசிசத்தின் அங்கீகரிப்பு மிகப்பெருமளவில் மேலிருந்தே செலுத்தப்படுகிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஆர்ப்பாட்டங்களின் போதான பாசிச வன்முறை “மஞ்சள் சீருடையினரிடம்” இருந்து எழவில்லை, மாறாக நவ-பாசிஸ்டுகள் ஒரு வாக்கு அடித்தளத்தைக் கொண்டிருக்கும் பாதுகாப்புப் படையினர் மற்றும் போலிஸ் சங்கங்களின் அடுக்குகளில் இருந்தே வந்தது. இப்போதைக்கு, “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்கள் தெளிவாக்கி விட்டிருப்பதைப் போல, ஐரோப்பாவில் 1930களில் நடந்ததைப் போல, பாசிசத்திற்கு நடுத்தர வர்க்க பாரிய ஆதரவு என்று ஏதுமிருக்கவில்லை. வர்க்கப் போராட்டத்தின் இந்தக் கட்டத்தில் வறுமைப்பட்ட நடுத்தர வர்க்கமானது தொழிலாளர்களுடன் கூட்டுச் சேர்வதற்கே விழைந்திருக்கிறது.

தொழிலாள வர்க்கம், மக்களின் ஒடுக்கப்பட்ட அடுக்குகள் அத்தனையையும் தனக்குப் பின்னால் அணிதிரட்டி முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு போராட்டத்திற்கு தலைமை கொடுக்கும் தன் திறனை எடுத்துக்காட்டுவதே அதன் இன்றியமையாத பணியாக இருக்கிறது. அத்தகையதொரு மூலோபாயத்திற்கு தொழிலாள வர்க்கம் ஆயத்தமாயிருக்கும் நிலை வளர்ந்து வருவதையே ஐரோப்பாவிலும் மற்றும் உலகெங்கிலும் தொழிலாளர்களது போராட்டத்தின் மீளெழுச்சி சுட்டிக்காட்டுகிறது. ஆயினும் போராட்டத்தில் தொழிலாளர்களின் மிகப்பரந்த அடுக்குகளை அணிதிரட்டுவதற்கான போராட்டமானது, போலி-இடதுகளுடனான ஒரு நனவான அரசியல் முறிவைக் கோருகிறது. சோசலிசப் புரட்சியை எதிர்க்கின்ற, வர்க்கப் போராட்டத்தை மறுக்கின்ற, அத்துடன் தொழிலாளர்களை தேசியவாதத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் கீழ்ப்படியச் செய்கின்ற விதத்தில் பிரான்சிலுள்ள தொழிலாளர்களை அவர்களின் சர்வதேச வர்க்க சகோதர சகோதரிகளிடம் இருந்து துண்டிக்க முயற்சி செய்கின்ற ஜனரஞ்சகக் கட்சிகளுக்கு எதிராக இந்தப் போராட்டமானது நடத்தப்பட வேண்டும்.

மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் கட்சியில் உள்ள “இடது ஜனரஞ்சகவாதிகள்” என்று சொல்லப்படுபவர்களால் ஆற்றப்பட்ட பாத்திரம் இதுவே. இக்கட்சி, NPA இலிருந்து வேறுபட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் கல்வித்துறை போலி-இடதுகளது இன்னொரு கன்னைக்காக பேசுகின்ற வேளையில், பப்லோவாதிகளைப் போல மெலோன்சோன் “மஞ்சள் சீருடை”யாளர்கள் மீது அப்பட்டமாய் தாக்குதல் நடத்தவில்லை. 2017 ஜனாதிபதி தேர்தலில் 20 சதவீத வாக்குகளைப் பெற்ற LFI, மக்ரோனின் “முன்னணி போட்டியாளர்” ஆக சொல்லிக்கொள்வதை தொடர்ந்து பராமரித்து வர நம்பிக்கை கொண்டுள்ளது. ஆகவே தான், வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சியை NPA க்கு சளைக்காத அளவுக்கு எச்சரிக்கையுடன் அது நோக்கிய வேளையில், சற்று மாறுபட்டதொரு உத்தியைஎடுத்தது. “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்கள் “என்னுடைய குடிமக்கள் புரட்சி எனும் தத்துவத்தில் உருவாக்கப்பட்ட தத்துவார்த்த மாதிரிக்கு ஊர்ஜிதம்” வழங்கியிருப்பதால், தான் மிகவும் “உற்சாகமாக” இருப்பதாக மெலோன்சோன் தனது வலைப் பதிவில் கூறிக் கொண்டார்.

“மஞ்சள் சீருடையாளர்கள்” தாங்கள் “மக்களுக்காக” போராடிக் கொண்டிருப்பதாக, அதாவது சம்பளம் பெறும் தொழிலாளர்களுக்காக மட்டுமன்றி சிறு வணிகர்கள், விவசாயிகள் மற்றும் சுயதொழில் செய்வோர் என உழைக்கும் நடுத்தர வர்க்க மக்களுக்காகவும் போராடிக் கொண்டிருப்பதாக கூறியதை சுரண்டிக் கொள்ள மெலோன்சோன் முயன்றார். ஆனால் மக்களது “குடிமக்கள் புரட்சி”க்கு மெலோன்சோன் விடுத்த அழைப்பின் வர்க்க உள்ளடக்கம் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். பாலின மற்றும் இன அடிப்படையிலான அடையாள அரசியலை, குறிப்பாக பிரெஞ்சு தேசியவாதத்தை ஊக்குவித்து மெலோன்சோன், முதலாளித்துவ அடுக்குகள் மற்றும் மக்களின் செல்வச்செழிப்பான 10 சதவீதத்தினரில் குவிந்திருக்கும் வசதியான நடுத்தர வர்க்கத்திற்காகப் பேசினார்.

ICFI இன் முன்னாள் பிரெஞ்சுப் பிரிவான பியர் லம்பேர் இன் OCI (Organisation communiste internationaliste ), 1971 இல் ICFI இல் இருந்து உடைந்து, PCF மற்றும் முன்னாள் விச்சிவாத சமூக-ஜனநாயகவாதியான பிரான்சுவா மித்திரோனுக்கான ஒரு தேர்தல் வாகனமாக 1971 இல் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு முதலாளித்துவக் கட்சியான PS உடன் சேர்ந்து ”இடதுகளின் ஐக்கிய”த்தை (Union de la gauche) கட்டுவதை நோக்கி நோக்குநிலையமைத்துக் கொண்டதற்கு சற்று பின்னர், ஒரு மாணவராய் அதன் வழியாக அரசியலில் மெலோன்சோன் காலடி எடுத்துவைத்தார். இந்த தேசியவாத, கலைப்புவாத முன்னோக்கு, OCI அதன் உறுப்பினர்களை ஒரேநேரத்தில் PS இலும் செயல்பட அனுப்புவதற்கு வழிவகுத்தது, மெலன்சோன் 1976 இல் PS இல் இணைந்தார். OCI இன் ஒரு உறுப்பினரான லியோனல் ஜோஸ்பன் 1997-2002 காலத்தில் பிரான்சின் PS தலைமையிலான, சிக்கன நடவடிக்கை ஆதரவு பன்மை இடது அரசாங்கத்தின் பிரதமராக ஆகுமளவு சென்றார். பன்மை இடது (Plural Left) அரசாங்கத்தின் மீது மக்கள் வெறுப்படைந்தமையானது 2002 ஜனாதிபதித் தேர்தலில் ஜோஸ்பனின் வெளியேற்றத்திற்கு இட்டுச்சென்றதன் பின்னர், PS ஒரு தசாப்த காலத்திற்கு ஜனாதிபதி பதவியில் இருந்து தள்ளி நிறுத்தப்பட்டிருந்தவொரு காலத்தில், மெலன்சோன், 2009 இல், PCF உடனான கூட்டணியில் இடது முன்னனி (Front de gauche) என்ற தனது சொந்த இயக்கத்தை ஸ்தாபித்தார். அது 2016 இல் LFI ஆனது.

ஒரு தேசிய “குடிமக்கள் புரட்சி”க்கு மெலோன்சோன் இன்று விடும் அழைப்பு, LFI இன் கிரேக்கக் கூட்டாளியான அலெக்சிஸ் சிப்ராஸின் சிக்கன-நடவடிக்கை ஆதரவு சிரிசா (”தீவிர இடதுகளின் கூட்டணி”) அரசாங்கத்தின் “இடது ஜனரஞ்சகவாத” குருவும் பின்நவீனத்துவ பெண்ணியவாதியுமான சாந்தால் மூஃவ் (Chantal Mouffe) உடனான கலந்துரையாடல்களில் விரிவாக்கம் செய்யப்பட்டதாகும். அது, மார்க்சிசத்திற்கு கடுமையான எதிர்ப்பை காட்டுகிறது. இடது ஜனரஞ்சகவாதம் என்பது, மூஃவ் எழுதுகிறார், “தாராளவாத ஜனநாயக ஆட்சியுடன் ஒரு ‘புரட்சிகர’ முறிவு எதனையும் கோருவதில்லை”, அத்துடன் அவர் “அரசியலை மூலதனம்/உழைப்பு முரண்பாடாக சுருக்கி, சோசலிசப் புரட்சிக்கான வாகனமாக தொழிலாள வர்க்கத்தைக் காட்டி அதற்கு ஒரு இருப்பியல் சிறப்பிடத்தை வழங்குகின்றவர்களை” எதிர்க்கிறார். அதாவது, 1968 முன்னாள்- தீவிரப்பட்ட மாணவர்களது பரந்த தளத்திற்கு இணங்க, மூஃவ் மார்க்சிசத்தின் அடிப்படையான கருத்தாக்கங்களை எதிர்க்கிறார்.

இதுதவிர மெலன்சோன் தன்னுடைய வலைப்பதிவில், புரட்சிகரத் தத்துவமாக தான் சொல்லும் ஒன்று, அதிகாரத்துக்கான ஒரு போராட்டத்திற்கு அடிப்படையாக சேவை செய்ய முடியாது என்பதையும் துரிதமாய் சேர்த்துக் கொள்கிறார். அவர் பின்வருமாறு எழுதினார், “அனைத்து சந்தர்ப்பங்களிலும், அத்தகையதொரு இயக்கத்தின் அடிகளின் கீழ் ஆட்சி எவ்வாறு வீழும் என்று எனது வேலை பேசுவதில்லை. ஏனென்றால் என்னைப் பொறுத்தவரை முடிவு அமைதியானதாகவும் ஜனநாயகரீதியானதாகவும் இருக்க வேண்டும் என்பது கூடுதலான காரணம். அதாவது, அத்தனை சந்தர்ப்பங்களிலும் நாம் நிகழ்வுகளுக்கு ஒரு ஸ்தாபகரீதியான தீர்வைக் கண்டாக வேண்டும்.” “வரலாற்றின் இயக்கவியலில் பாட்டாளி வர்க்கம் மற்றும் சோசலிசப் புரட்சியை தவிர்க்கமுடியாத இணையாகக் கருதும் கருத்தாக்கத்தின் மையப்படுத்தல்” போன்று “மரபுவழி இடதுகள் மற்றும் அதி இடதுகளின் மரபுவழி வறட்டு சித்தாந்தங்களுக்கு” தனது எதிர்ப்பையும் அவர் வலியுறுத்தினார். இவ்வாறாக மெலன்சோனும், மூஃவ் போலவே, மார்க்சிசம் மற்றும் வர்க்கப் போராட்டத்தை நனவுடன் நிராகரிப்பதன் மீது தனக்கு அடித்தளம் அமைத்துக் கொண்டு, பிரெஞ்சு அரசுக்கான ஒரு தேசியவாத அடிப்படையை நோக்கி நோக்குநிலை அமைத்துக் கொள்கிறார்.

வர்க்கப் போராட்டத்தையும் சோசலிசத்தையும் “வறட்டு சித்தாந்தம்” எனக் கூறும் இந்த வெறுப்புநிரம்பிய தாக்குதல், போலி-இடதுகளின் திவால்நிலையை சித்திரப்படுத்திக் காட்டுகிறது. “மஞ்சள் சீருடை” கோரிக்கைகளுக்கு மிகப் பெருவாரியான மக்கள் ஆதரவு இருந்தது, மெலோன்சோன் 7 மில்லியன் வாக்குகள் பெற்றார், பிரான்சில் ஆசிரியர்கள் மற்றும் செவிலியர் மத்தியிலும் சர்வதேச அளவில் தொழிலாளர்களின் பரந்த அடுக்குகளின் மத்தியிலும் வேலைநிறுத்தங்கள் வெடித்துக் கொண்டிருந்தன. அப்படியிருந்தும், LFI யோ, அல்லது தொழிற்சங்கங்களோ அல்லது எந்த போலி-இடது கட்சியோ வளர்ந்து சென்ற இந்த எதிர்ப்பின் அடித்தளத்தில் மக்ரோனுக்கு எதிரான ஒரு புரட்சிகரப் போராட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு முனையவில்லை.

NPA தனது பாதையை மாற்றிக் கொண்டும், போலி-இடது கட்சிகள் இந்த குளிர்காலத்தில் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களுக்கு கூடுதலான தமது சக்திகளை அனுப்பின என்றபோதும், அவை ஒரு இயக்கத்தைக் கட்டியெழுப்ப முனைந்ததும் இல்லை அதேபோல் “மஞ்சள் சீருடையினர்” மத்தியில் ஆதரவை அணிதிரட்டுவதில் வெற்றியடையவும் இல்லை. அவை வெறுமனே இந்த ஆர்ப்பாட்டங்களை தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்காக முயற்சி செய்தன, அதனை “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டக்காரர்கள் மிகப்பெருவாரியாக நிராகரித்து விட்டனர். உண்மையான போராட்டத்திற்கு பொருத்தமற்றவையாகவும் குரோதமானவையாகவும் இந்தக் கட்சிகள் அம்பலப்பட்டு நிற்பது 2019 ஐரோப்பியத் தேர்தலில் LFI இன் திடீர் மற்றும் ஒரேயடியான வீழ்ச்சியின் கீழமைந்திருந்தது, இத்தேர்தலில் அது 2017 இல் அது பெற்ற வாக்குகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே பெற்றது. ஒரு ஒட்டுமொத்த வரலாற்றுக் காலகட்டத்தில், மூஃவ், மெலன்சோன் மற்றும் பிற பின்நவீனத்துவவாதிகளால் விற்பனை செய்யப்பட்ட மார்க்சிச-விரோத பிரச்சாரமானது ஒரு மார்க்சிச புரட்சிகர முன்னணிப் படை கட்டப்படுவதை தடுப்பதிலும் ஆளும் வர்க்கத்திடம் முன்முயற்சியை ஒப்படைப்பதிலும் மட்டுமே வெற்றி கண்டிருக்கிறது என்பது முன்னெப்போதினும் தெளிவுபட புலப்படுகிறது.

“மஞ்சள் சீருடை” இயக்கத்தில் இருந்து முன்நோக்கிசெல்லும் பாதை என்ன?

பல மாதங்களாக, உத்தியோகபூர்வ ஊடகங்கள் “மஞ்சள் சீருடை”யாளர்களின் விரக்தி மற்றும் வீழ்ச்சி நிகழவிருப்பதாகக் கணித்து வந்திருக்கின்றன. பத்தாயிரக்கணக்கானோர் இப்போதும் ஒவ்வொரு சனிக்கிழமையும் மஞ்சள் சீருடைகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்ற நிலையிலும், பிரான்சிலும் மற்றும் உலகெங்கிலும் தொழிலாளர்களின் பெருகிச்செல்லும் அடுக்குகள் வேலைநிறுத்தம் செய்துவருகின்ற நிலையிலும், தொழிலாள வர்க்கத்திலான இந்த எழுச்சி வெறும் தொடக்கம் மட்டுமேயாகும். உத்தியோகபூர்வ அரசியல் வாழ்க்கையினது மேற்பரப்பின் கீழே, மிகப் பெரிய மற்றும் மிக வெடிப்பான இயக்கங்கள் கொதித்துக் கொண்டிருக்கின்றன. பழைய அரசியல் ஸ்தாபகம் உருக்குலைவின் மிக முன்னேறிய நிலையில் இருக்கின்றதன் மத்தியிலும், போர் மற்றும் எதேச்சாதிகார ஆட்சி ஆகிய கூர்மையான அபாயங்களது மத்தியிலும் தொழிலாள வர்க்கத்தின் எழுந்து வரும் இந்த புரட்சிகர இயக்கத்தை எவ்வாறு நோக்குநிலையமைப்பது என்பதே இப்போதைய பிரச்சினையாகும்.

தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர முன்னோக்கையும் தலைமையையும் கொண்டுவரும் பொருட்டு பிரான்சில் PES ஐயும் உலகெங்குமான நாடுகளில் ICFI இன் பிரிவுகளையும் கட்டியெழுப்புவதே முன்னிருக்கும் பணியாகும். தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருந்தும் “இடது” என காட்டிக்கொள்ளும் கட்சிகளில் இருந்தும் சுயாதீனப்பட்டு போராட வேண்டும் என PES உம் மற்றும் ஒட்டுமொத்த ICFI உம் விடுத்த அழைப்புகள் சரியென்பதை “மஞ்சள் சீருடை” இயக்கமும் வர்க்கப் போராட்டத்தின் பரந்த சர்வதேச அளவிலான மீளெழுச்சியும் மிகச்சக்திவாய்ந்த விதத்தில் ஊர்ஜிதம் செய்திருக்கின்றன. இது ஒரு குறுங்குழுவாதக் கொள்கையோ அல்லது கற்பனாவாதக் கொள்கையோ அல்ல, மாறாக வர்க்கப் போராட்டத்தை முன்நடத்துவதற்கான ஒரேயொரு யதார்த்த அடிப்படையாகும். ஒப்பீட்டளவில் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் ஒரு சிறு அடுக்காக இருக்கும் ”மஞ்சள் சீருடையினர்”, சமூகப் போராட்டத்தின் மீது இந்த அமைப்புகள் கொண்டிருந்த மரணப் பிடியில் இருந்து முறித்துக் கொண்ட அந்த துல்லியமான காரணத்தினாலேயே அவர்களால் மக்ரோனுக்கு ஒரு தகர்க்கும் அடியைக் கொடுக்க முடிந்தது. கலகத் தடுப்பு போலிஸ் மற்றும் இராணுவப் பதவிகளில் இருந்து வந்த மிரட்டல்களை மீறினர், உத்தியோகபூர்வ ஊடகங்கள், முன்னணி அரசியல்வாதிகள், மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளிடம் இருந்து வந்த தாக்குதல்களை அவற்றுக்குத் தகுதியான உதாசீனத்தைக் கொண்டு நிராகரித்தனர்.

“மஞ்சள் சீருடை” இயக்கம் முகம்கொடுக்கும் மிக முக்கியமான முட்டுக்கட்டையாக இருந்து வருவது நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதிலான அமைப்புரீதியான சிக்கல்கள் அல்ல. மாறாக, தொழிலாளர்களது அதிகாரத்திற்கான ஒரு சர்வதேசப் போராட்டத்தின் அவசியம் ஒரு பரவலான மற்றும் கரு அளவில் மட்டுமே உணரப்படும் நிலைமைகளின் கீழ் — அதாவது தொழிலாள வர்க்கத்தின் முன்னணிப் படையின் அளவு சிறிதாக இருந்துவருகின்றதொரு சமயத்திலும், அது வெகுஜன அனுதாபத்தையும், பலவண்ணமான சமூக ஊடகங்கள் மற்றும் அவற்றைச் சுற்றி எழுகின்ற அண்டைஅருகாமை குடியிருப்பு குழுக்களின் அனுதாபத்தையும் அணிதிரட்ட முடிந்திருக்கிறது. ஆனால் செவ்வியல் மார்க்சிசம், அக்டோபர் புரட்சி மற்றும் ட்ரொட்ஸ்கிசத்தின் அடிப்படையில் ஒட்டுமொத்த வரலாற்று இயக்கத்தின் தொடர்ச்சியின் பாதையில் நிலைநிறுத்திப் பார்க்காமல் ஒரு புரட்சிகர முன்னோக்கைக் கண்டுபிடிப்பது சாத்தியமில்லாததாகும். ICFI போராடி வந்திருக்கும் அரசியல் மற்றும் வரலாற்று முன்னோக்குகளது பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதே முன்னேறிய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் முகம்கொடுக்கின்ற பணியாக உள்ளது.

வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சியின் ஆரம்ப கட்டங்களில், மக்கள் எதிர்ப்பானது, முந்தைய சகாப்தத்தில் ஜனரஞ்சக-ஜனநாயக வார்த்தைகளில் கூறப்பட்ட மற்றும் வர்க்கப் போராட்டத்தை நிராகரித்த வசதியான நடுத்தர-வர்க்கத்து அரசியல் “இடது” என்று பெயரில் கடந்து சென்றதான சமயத்தின் சுவடுகளை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. “மஞ்சள் சீருடை” இயக்கமானது, PES ஸ்தாபிக்கப்பட்டதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர்தான் தொடங்கியது, பப்லோவாதிகளின் காட்டிக்கொடுப்புகளுக்கும், 1971 இல் ICFI இல் இருந்து OCI முறித்துக் கொண்டதற்கும் பின்னரான சமயத்தில், பிரான்சில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலத்திற்கு ட்ரொட்ஸ்கிசக் கட்சி என்று பெயர் சொல்லிக் கொள்ளத் தகுதியான எதுவொன்றும் அங்கு இல்லாதிருந்தது. இன்னமும் தெளிவுபடுத்தப்பட வேண்டிய நிலையில் பல அரசியல் கேள்விகள் உள்ளன.

“மஞ்சள் சீருடையினர்” மத்தியில், அத்தனை கட்சிகளையும் நிராகரிக்கிற “அரசியல்சாயமில்லாத” போராட்டங்களுக்கான அழைப்புகள் ஒரு பரவலான செவிமடுப்பை பெற்று வந்திருக்கின்றன. இது ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்திற்கும் எதிரான தொழிலாளர்களது’ கோபத்துடன் ஒத்த அதிர்வைக் கொண்டதாகும். ஆயினும் போலி-இடது சக்திகள் இதனை விவாதத்தைத் தடுப்பதற்கும் சிக்கன நடவடிக்கைகளைத் திணித்திருக்கும் கட்சிகளில் இருந்தான ஒரு நனவான முறிவைத் தவிர்ப்பதற்குமாய் இதனை முன்தள்ளுகின்றன. இந்த உள்ளடக்கத்தில், RIC போன்ற சுலோகங்கள் –அரசியல் மற்றும் பொருளாதார முடிவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான நியாயமான கோரிக்கைகளின் ஒரு வெளிப்பாட்டை தொழிலாளர்கள் இதில் காண்கின்றனர்- வர்க்கப் போராட்டத்திற்கான ஒரு அடிப்படையாக சேவை செய்ய முடியாது. நிதியப் பிரபுத்துவத்தை சர்வதேச அளவில் பறிமுதல் செய்வதற்கான, உலகளாவிய உற்பத்தி நிகழ்ச்சிப்போக்குளின் மீது தொழிலாளர்களின் கட்டுப்பாட்டை ஸ்தாபிப்பதற்கான, மற்றும் தொழிலாளர்களது’ அதிகாரத்திற்கான ஒரு போராட்டத்தில் இருந்து பிரிந்து, இத்தகைய சுலோகங்கள் பிரெஞ்சு முதலாளித்துவ அரசிடம் இருந்து சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுவதற்கு நிகரானதாகவே இருக்கின்றன, அவ்வாறான சீர்திருத்தங்கள் கிடைக்கப் போவதில்லை. இந்த அடிப்படையில், பொது வேலைநிறுத்தங்கள் அல்லது புரட்சிக்கு “மஞ்சள் சீருடையினர்” விடுக்கின்ற உண்மையான அழைப்புகளும் கூட, சுதந்திரமான மக்கள் மன்றங்களை (assemblées populaires indépendantes) ஸ்தாபிக்கும் அவர்களது முயற்சிகளைப் போலவே, மக்ரோன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நிதிச் சந்தைகளுக்கு எதிரான ஒரு தீர்மானகரமான போராட்டத்திற்கு தொழிலாளர்களின் பாரிய எண்ணிக்கையை கவர முடிந்திருக்கவில்லை.

இன்றும் கூட, ஒரு ஆழமான முதலாளித்துவ நெருக்கடியின் மத்தியிலும், முதலாளித்துவ வர்க்கமானது தொழிலாளர்களைக் காட்டிலும் தனது வர்க்க இலக்குகளில் மிகப்பெரும் நனவுடன் செயலாற்றுகிறது. ஒருபக்கத்தில் அது, வர்க்கப் போராட்டம் என்பது வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசப்பட்டு விட்டது என்பதான கூற்றுகளை அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த மக்களின் ஒரு புரட்சிக்கு மெலோன்சோன் போன்ற ஏமாற்றுக்காரர்கள் விடுக்கின்ற வீராவேச அழைப்புகளை ஊக்குவிக்கிறது; இன்னொரு பக்கத்தில், வங்கிகள் மற்றும் அரசு எந்திரத்தின் உயரதிகாரிகள் அவர்கள் நடத்திக் கொண்டிருப்பது ஒரு வர்க்கப் போராட்டமென்பதை நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர், அவர்கள் அதனை ஈவிரக்கமற்ற வகையில் நடத்துவதற்கும் நோக்கம் கொண்டுள்ளனர்.

”மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்கள் வெடித்தபோது ஆளும் வர்க்கத்தை பீடித்த பீதியை Le Monde diplomatique ”பிரான்சில் வர்க்கப் போராட்டம்” என்ற தலைப்பில் பிப்ரவரியில் அது வெளியிட்ட ஒரு கட்டுரையில் விவரித்தது: “பயம். தேர்தலில் தோற்றுப் போவோம் என்பதாலல்ல, ‘சீர்திருத்தம்’ செய்ய தவறியதால் அல்ல, அல்லது பங்குச் சந்தை இழப்புகளை ஏற்பதால் அல்ல. மாறாக கிளர்ச்சி, கலகம் மற்றும் பறிக்கப்படுவது குறித்த பயம். அரை நூற்றாண்டு காலத்தில், பிரெஞ்சு உயரடுக்கினர் இத்தகையதொரு பயத்தைக் கண்டதில்லை.” தலைமை செயலதிகாரிகள் மத்தியிலான மனோநிலை “1936 அல்லது 1968 குறித்து நான் வாசித்ததில் இருந்ததைப் போல” இருப்பதாக கருத்துவாக்கெடுப்பு நிறுவனம் ஒன்றின் தலைவர் கூறியிருந்ததை அது மேற்கோள் காட்டியது, அவர் குறிப்பிட்ட அந்த இரண்டு ஆண்டுகளும் பிரெஞ்சு வரலாற்றில் மாபெரும் பொது வேலைநிறுத்தங்கள் நடைபெற்ற ஆண்டுகளாகும். பங்குச் சந்தைகளிலும் பெருநிறுவன இயக்குநர் அறைகளிலும் “மஞ்சள் சீருடையினர்” குறித்து நிலவிய கடிவாளமற்ற வெறுப்பு மற்றும் அச்சத்தை 1848 புரட்சி மற்றும் 1871 பாரிஸ் கம்யூன் ஆகியவற்றுக்கு எதிரான முதலாளித்துவ வர்க்கத்தின் கொலைபாதக கோபத்துடன் –அவற்றை அது இரத்தத்தில் மூழ்கடித்தது- ஒப்பிட்டு, அந்த மாத இதழ் இவ்வாறு சேர்த்துக் கூறி முழுமை செய்தது: “பயமுறுத்தப்பட்டிருப்பவர்கள், அவர்களை பயமுறுத்தியவர்களை அல்லது அவர்களது பயத்திற்கு சாட்சியாக இருந்து வந்திருப்பவர்களை ஒருபோதும் மன்னிப்பதில்லை.”

முதலாளித்துவ வர்க்கத்தின் கொடூரகுணத்தை குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. ஆனால் உயிர்வாழ்வதற்காக உழைக்கும் மக்களின் மிகப்பெரும்பான்மையினரிடம் இருந்து அதனை பிரித்துநிற்கின்ற சமூகப் பிளவை அது பிரதிபலிக்கிறது, இறுதிப்பகுப்பாய்வில் இதுவே ஆளும் வர்க்கத்தின் பலவீனமாகவும் உள்ளது. அரசு எந்திரத்தில் இருந்தும் ஊடகங்களிடம் இருந்தும் பெருக்கெடுக்கின்ற இரத்தத்தை உறையச் செய்யும் மிரட்டல்கள் விரக்தி நிலையின் விளைபொருளாகும், ஒரு ஆழமடைந்து செல்லும் அரசியல் நெருக்கடிக்கு முகம்கொடுக்கும் நிலையில் அதில் இருந்து வெளியேறுவதற்கு அவர்களுக்கு வேறு வழி இல்லை. இத்தகைய மோதல்கள், வர்க்க வார்த்தைகளில் விடவும் பிரதானமாக தேசியவாத மற்றும் ஜனரஞ்சகவாத வார்த்தைகளின் மூலமாக விவாதிக்கப்பட்ட காலகட்டம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. முதலாளித்துவ வர்க்கம் ஏற்கனவே செய்து கொண்டிருப்பதைப் போல, தொழிலாளர்களும் இனி அதிகமான விதத்தில், இந்த மோதலை வர்க்கப் பாதைகளின் வழியே காண்பார்கள், நடத்துவார்கள். புறநிலைமையானது, பிரான்சிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவில் துரிதமான மாற்றங்கள் வருவதற்கும், சக்திவாய்ந்த தொழிலாள வர்க்க அமைப்புகள் கட்டியெழுப்பப்படுவதற்குமான நிலைமைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

ஐரோப்பாவிலும் அதனைத் தாண்டியும் வாழ்க்கைத் தரங்களில் இடைவிடாது தேய்வு கண்டு செல்லும் நிலையும், அத்துடன் இராணுவ-போலிஸ் வன்முறையில் ஆளும் உயரடுக்கு இறங்குவதும் நூறு மில்லியன் கணக்கான தொழிலாளர்களை தீவிரமயப்படுத்திக் கொண்டிருக்கிறது. “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களை தூண்டிய அதிக சமூக சமத்துவத்திற்கான சர்வதேசக் கோரிக்கைகள், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் சோசலிசத்திற்கும் கம்யூனிசத்திற்கும் ஆதரவு அதிகரித்துச் செல்ல தூண்டுகின்றன. தொழிலாளர்கள் ஒவ்வொரு நாட்டிலும் ஒரேமாதிரியான பிரச்சினைகளுக்கே முகம்கொடுக்கின்றனர் என்ற ஒரு பரந்த உணர்வு நிலவுகிறது. சர்வதேச ஐக்கியம் குறித்த பொதுவான உணர்வுகளை, எதேச்சாதிகாரம், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போர் ஆகியவற்றுக்கு எதிரான சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டமாக மாற்றக்கூடிய அமைப்புகளைக் கட்ட வேண்டியதன் அவசியத்தை தொழிலாளர்கள் அதிகமான அளவில் உணரத் தலைப்படுவார்கள்.

PES முகம்கொடுக்கின்ற இன்றியமையாத பணியாக இருப்பது, தீர்மானகரமான புரட்சிகர மோதல் வெடிப்பதற்கு முன்னதாவே, சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் வரலாற்றிலான இன்றியமையாத அரசியல் படிப்பினைகளை உட்கிரகித்துக் கொள்வதன் அடிப்படையில், மிக முன்னேறிய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதன் பிரசன்னத்தை வலுப்படுத்துவதாகும். PES பிரான்சிலான தொழிலாளர்களின் போராட்டங்களை சர்வதேச அளவிலுள்ள அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளது போராட்டங்களுடன் ஐக்கியப்படுத்துவதற்குப் போராடக்கூடிய மற்றும் முதலாளித்துவம், போர் மற்றும் போலிஸ்-அரசு ஆட்சி அபாயம் ஆகியவற்றுக்கு எதிரான ஒரு தாக்குதலில் அவர்களுக்கு தலைமை கொடுக்கக்கூடிய, ஒரு புரட்சிகர முன்னணிப்படையை கட்டியெழுப்புவதற்கு முயல்கிறது. நிதியப் பிரபுத்துவம் பறிமுதல் செய்யப்படுவதற்கும், ஏகாதிபத்தியப் போர்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை முடிவுக்கு வருவதற்கும், ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்புக்குமான கோரிக்கைகளை அது முன்னெடுக்கிறது.

வர்க்கப் போராட்டமானது, சமகாலப் பொருளாதாரத்தின் நாடுகடந்த தன்மைக்கு ஏற்ப, பெருநிறுவன-நிதியுதவி கொண்ட தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து சுயாதீனமான விதத்திலும் மற்றும் அவற்றுக்கு ஏதிரான விதத்திலும் அமைகின்ற, பரந்த பணியிட மற்றும் அண்டைஅருகாமைப்பகுதி குழுக்களின் ஐரோப்பிய மற்றும் சர்வதேச வலைப்பின்னல்களைக் கட்டியெழுப்புவதை அவசியமாய் கோருகிறது. தொழிற்சங்கங்கள் மற்றும் ஸ்தாபகமயப்பட்ட அரசியல் கட்சிகளில் இருந்து சுயாதீனமாக, வர்க்கப் போராட்டத்திற்காக, நூறாயிரக்கணக்கான மக்கள் சமூக ஊடகங்களின் வழி ஒன்றுகூட முடியும் என்பதை பிரான்சில் “மஞ்சள் சீருடை”யாளர்கள் எடுத்துக் காட்டியிருக்கின்றனர். இது, தொழிலாள வர்க்கத்தில் மிகப் பரந்த மற்றும் சர்வதேச இயக்கத்திற்கு விரிவு செய்யப்படுவதற்கு தயாரிப்பு செய்யப்பட்டாக வேண்டும்.

முதலாளித்துவத்தை எதிர்க்கும் அத்துடன் சோசலிசத்தின் அவசியத்தை அங்கீகரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரையும், ICFI இன் ஆவணங்களைக் கற்றுக்கொள்ளவும்; அதிலோ அல்லது அதன் இளைஞர் அமைப்பான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பிலோ இணையுமாறு PES அழைப்பு விடுக்கிறது. தொழிலாள வர்க்கத்தில் எழுந்து வருகின்ற இயக்கத்திற்கு, அரசியல் சூழ்நிலையின் தன்மை, தொழிலாள வர்க்கத்திலான இயக்கம் மற்றும் அதன் இலக்குகள் ஆகியவை தொடர்பிலான மார்க்சிச நனவைக் கொண்டுவருவது; பணியிட குழுக்கள், இளைஞர் மற்றும் மாணவர் எதிர்ப்பு குழுக்களை கட்டியெழுப்புவதில் ஆலோசனையளிப்பது மற்றும் உதவிசெய்வது; வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியை ஐரோப்பிய மற்றும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்திலான ஒரு சோசலிச, சர்வதேசியவாத மற்றும் ஏகாதிபத்திய-எதிர்ப்பு இயக்கத்துடன் பிணைப்பதற்காகப் போராடுவது; அரசு அதிகாரத்தைக் கையிலெடுத்து பொருளாதார வாழ்க்கையை தனியார் இலாபத்திற்காய் அல்லாமல் சமூக தேவையின் அடிப்படையில் மறுஒழுங்கு செய்வது ஆகியவை அவர்களது கடமைகளாக இருக்கும். ஐரோப்பாவிற்குள்ளே இதன் அர்த்தம், ஐரோப்பிய ஒன்றியத்தை (EU),ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளால் (USSE) பதிலீடு செய்வதற்கான போராட்டமாகும்.

Loading